கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தனிமையிலே இனிமை....சசிகலா எதிராஜ்

Latha S

Administrator
Staff member
தனிமையில் இனிமை..



ஊரிலே பெரிய வீடு ஜமீன்தார் சதாசிவம் வள்ளியம்மை வீடு தான்.


இன்றோ பொலிவிழந்து கிடக்கிறது.

வெளியே திண்ணையில் குப்பையும் கூளமும் நிறைந்து கிடக்க உள்ளே பட்டாசாலையின் ஓரத்தில் கயிற்றுக் கட்டிலில் இவ்வீட்டின் அச்சாணியாக இருந்த வள்ளியம்மை கூனிக் குறுகி அனாதையாகத் தனிமையில் படுத்திருந்தார்.



மகிழ்ச்சியும் சிரிப்பு சத்தமும், ஆட்களின் ஆரவாரமும், கேட்டுக் கொண்டே இருந்த வீட்டில் சத்தமின்றி கிடந்தது. எப்பவும் வீட்டில் வள்ளியம்மையின் கணீர்க்குரலில் அன்பும் பாசமும் அதட்டலும் நிறைந்தே இருக்கும். வாக்கப்பட்டு வந்த நாளிலிருந்து இவ்வீட்டின் படித் தாண்டாமல் வீட்டில் இருப்பவரை அரவணைத்துச் சென்றவரோ இன்று தனிமைச் சிறையில் குடி கொண்டுள்ளார்.



பெரிய இரும்பு கதவுகள், மதில் சுவர்களும்,மரங்களடர்ந்த முகப்பில் பெரிய வாசலில் நான்கு வாகனம், இரண்டுசக்கர வாகனம் இரண்டு நிற்க, பெரிய திண்ணையின் இரு பக்கமும் வெளியிலிருந்து வருவோர் அமர நீண்ட இருக்கை , நாற்காலிகளும், வீட்டின் அலங்கார மரக்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால் இருபக்கமும் பெரிய பட்டாசாலைகளும், மாடிக்குப் போகிற படிகள் பர்மா தேக்கால் செய்தும்,

சாப்பாட்டு அறையில் இருபது பேர் அமர்ந்து உண்ணக் கூடிய மேசை,நாற்காலிகள், பெரிய அடுப்பாங்கரையில் நூறு பேருக்குச் சேர்த்துச் சமைக்குமளவுக்குப் பண்ட பாத்திரங்கள் நிரம்பி வழிந்தன.



வீட்டிற்கு வருவோர்க்கு அந்தந்த நேரத்திற்குரிய காபித்தண்ணி, நீர்மோரும் கொடுக்க இரண்டு ஆட்கள் அங்கே வேலை செய்கிறார்கள்.



அவ்வளவு பெரிய வீட்டின் ஜமீன்தார் சதாசிவமும் மனைவி வள்ளியம்மையும் ஊரே மெச்சும் தம்பதிகள். அவர்களுக்கு இரண்டு மகன்கள் பரணியும், முரளியும் ,சதாசிவத்தின் கூடப் பிறந்த தங்கைகள், ராணி தன் கணவர் மாதவன், மகன் ராஜனும், கமலினி தன் கணவர் கமலன், மகள் ரதிமந்தரி, சேர்ந்து கூட்டுக் குடும்பமாகவே வாழ்ந்தனர்.



எப்பவும் கூச்சலும் சிரிப்பும் கும்மாளமும் நிறைந்த மகிழ்வான கூட்டில் சூத்திரதாரி வள்ளியம்மை தான். மகன் வேறு நாத்தனார் வேறின்றி மகள்களாகப் பாவித்து தன் கூடவே வைத்துக் கொண்டார். குடும்பம் பிரியாமல் இருக்க தன்னால் ஆன எல்லாமே மற்றவர்கள் மனம் கோணாமல் நடத்துவார்.



வள்ளியம்மையை யாரும் பெயர் சொல்லி அழைக்காமல், அம்மா, அண்ணி,அக்காட்சி, பண்ணைகாரட்சி, பெரு வீட்டுகாரம்மா, பலர் கூப்பிட்டாலும் முகத்தில் புன்னகையோடு அவர்களோடு பேசுவார்.



ஊருக்கே பாதி நிலங்களைக் கொடுத்து விவசாயம் செய்ய வழிவகைச் செய்த சதாசிவமும், யார் வந்து கேட்டாலும் இல்லையென்று சொல்லாமல் கைநிறைய அள்ளிக் கொடுக்கும் வள்ளியம்மையை ஊரிலூர் பாராட்டி இவர்களைப் போல வாழ வேண்டும் தன் மக்களுக்கு அறிவுரை சொல்வார்கள்.



காலை வேளையில் காபியில் ஆரம்பிக்கும் விடியல் ,கணவனுக்குப் பிடித்த கருப்பட்டிக் காபி, பிள்ளைகளுக்குப் பால், ஹார்லிக்ஸ், சத்து மாவுக் கஞ்சி, நாத்தனார்களுக்குப் பால் காபி, அவர்களுடைய கணவர்களைத் தன் தம்பியாகக் கொண்டாடி அவர்களுக்குப் பிடித்த தேநீரும் தொடங்கும் ஒவ்வொரு நாளும் வள்ளியம்மைக்கு.



காலையிலே கணவனைச் சந்திக்க வருவோர்க்குக் காபி,பலகாரம் கொடுத்து அனுப்புவதும், விட்டிலுள்ளவர்களுக்குப் பிடித்த காலை, மதியம், இரவும், மற்றவர்களுக்குப் பிடித்ததைச் செய்வதே தான் வாங்கி வந்த வாழ்நாள் வரம் எண்ணியவர். தன் மகள்களாகப் பார்த்த நாத்தனார்களும் கூடச் செய்தாலும் பெரிதாக அவர்களை எந்த வேலையும் செய்ய விடமாட்டார்.



வீட்டில் சந்தோஷம் நிரம்பிய காலகட்டத்தில் படிப்பிற்காக வெளியே சென்று தங்கும் சூழ்நிலையில் பரணியும், முரளியும் வெளியே செல்ல, நாத்தனார் மகள் மகனும் தன் கூடவே வைத்திருந்து அங்கிருந்து சிறிது தூரமுள்ள பள்ளிக்கு வாகனத்தில் அனுப்பினார் வள்ளியம்மை.



மகன்கள் இருவரும் படித்தும் வெளிநாட்டு வேலை கிடைக்கவும் அங்கே செல்வதாகக் கூறி சென்றுவிடச் சதாசிவம் மகன்கள் பிரிவால் மனம் தளர்ந்து நோயின் பிடியில் விழ வள்ளியம்மையோ மகன்களிடம் வரச் சொல்லிக் கெஞ்ச, மகன்களோ வெளிநாட்டு மோகத்தில் அந்தப் பட்டிக்காட்டில் எங்களால் இருக்க முடியாது ''முகத்தில் அடித்தமாதிரி பதில் சொல்லிவிட்டனர்.



தனக்குப் பின் தன் இடத்திலிருந்து வீட்டையும் நிலபுலன்களையும் பார்த்துக் கொள்வார்கள் எண்ணியது ஏமாற்றமாகப் போனது இருவருக்கும்.



நாத்தனார் பிள்ளைகளாவது துணைக்கு இருக்கிறார்கள் எண்ணியபடி நாட்களைக் கடத்தலாம் எண்ணி வாழ்ந்த வள்ளியம்மைக்குப் பெரிய இடியாகக் கணவன் மறைந்ததும் மகன்கள் ஈமச்சடங்கு வராமல் போனதும் மனம் நொந்துவிட்டார்.



அதைவிட அண்ணன் இறந்ததும் ராணியும் கமலினியும் சொத்துகளைப் பிரித்துத் தரச் சொல்லிக் கேட்க, அதிர்ந்த வள்ளியம்மை அவர்களின் முகம் நோக்கினார்.



அவர்களோ இத்தனை நாட்கள் உங்களுக்குக் கீழே இருந்துவிட்டோம், இனியாவது நாங்கள் சுதந்திரமாக எங்கள் குடும்பமாக இருக்க விரும்புகிறோம்,பிள்ளைகளை வெளியூரில் படித்து வெளிநாட்டுக்கு அனுப்பவேண்டும்.எங்கள் பிள்ளைகள் இங்கே இருக்கனுமா..



உங்கள் பையன்கள் மட்டும் வெளிநாட்டில் இருக்கும் போது எங்கள் பிள்ளைகளும் அங்கே இருந்தால் தான் எங்களுக்குப் பெருமை சொல்லி இருவரும் தத்தம் குடும்பத்தோடு வெளியூர் சென்று விட்டனர்.



இவ்வளவு வருடமாக அன்பும் பாசப் பிணைப்புகளும் பொய்மூலாம் பூசிய வேசமாக மாறியதை எண்ணித் திகைத்தார் வள்ளியம்மை.



மகன்களிடம் கூட கெஞ்சாத பெண்மணி தன் நாத்தனார்களிடம் கெஞ்சினார்.



''போகாதீர்கள் மா'' இவ்வளவு நாட்கள் அண்ணா இருந்தார்கள், அண்ணா இறந்தும் போனால் ஊரே என்னைப் பலி சொல்லும், வேண்டாம் சொத்து எல்லாமே நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் வீட்டைவிட்டுச் செல்லாதீர்கள்,'' கெஞ்சினார்.



ராணியோ சொத்து வேண்டும், இத்தனை நாட்கள் நீங்கள் இந்த வீட்டில் மகாராணி மாதிரி அதிகாரம் பண்ணிக் கொண்டிருந்தீர்கள்,நாங்கள் நீங்கள் சொல்வதைக் கேட்கும் வேலைக்காரர்களாக வைத்திருந்தீர்கள்'',



''எங்கள் வீட்டுக்காரர்களும் உங்களுக்கு அடிமை போல அண்ணன் பின்னால் போகச் செல்வதும், வேலைக்காரனாக வேலை வாங்கவது தானே நடந்தது. இனியாவது அவர்கள் எங்கள் குடும்பத் தலைவர்களாவது இருக்கட்டும். சொத்தைப் பிரித்து எங்கள் பங்கைக் கொடுத்துவிடுங்கள் ராணி கொஞ்சம் வேகமாகப் பேசினாள்.



தன் மகள்களாக எண்ணி வளர்த்துச் சீர்செய்து தன்னோடு வைத்து அவர்களுக்கு பிள்ளைப்பேறு பார்த்து அவர்கள் குழந்தைகளை தன் குழந்தைகளாக வளர்த்து வந்தவர்க்கு ராணியும், கமலினியும் பேசுவதைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது.



இன்றைய காலகட்டத்தில் அன்பும் பாசமும் விலைப் பொருளாகிப் போனதை எண்ணி வருந்திய வள்ளிம்மை இருக்கும் எல்லாச் சொத்துகளையும் அவர்களுக்கே கொடுத்துவிட்டார். அவர்களோ சரிக்குச் சரியாக நகைகளும் வேண்டும், வள்ளியம்மையின் நகைகளையும் சேர்த்து வாங்கிக் கொண்டனர். பணமும் நகையுமே இன்றைய பேராசைக்கு வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாக எண்ணி கூட்டிலிருந்து பிரிந்து சென்றனர்.



தன் கணவனோடு வாழ்ந்த வீட்டை விட்டு வள்ளியம்மை எங்கும் செல்லாமல் தனிமைச் சிறையில் தனக்கு தானே பூட்டுப் போட்டுக் கொண்டார்.



தனிமையில் படுத்திருந்த வள்ளியம்மையின் மனமோ எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தது. இறக்கும் முன் இவ்வீட்டில் திரும்பவும் ஆட்கள் நடமாட்டமும் சிரிப்பு சத்தமும் கேட்க வேண்டும் எண்ணி பலவாறு யோசித்தார்.



அவர் மனதில் இவ்வீட்டை பிள்ளைகளால் உறவுகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்காக ஓர் காப்பகம் அமைக்க ஏற்பாடு செய்யலாம் எண்ணி அதற்குரியதை தன் நம்பிக்கையான ஆட்களை வரவழைத்துப் பேசினார்.



தன்னை மாதிரி தனித்து கடைசி நிமிடங்களைக் கடக்கும் முதியோர்கள் வசதியின்மையால் அனாதையாகத் தவித்துக் கிடப்பதை விட இவ்வளவு பெரிய வீட்டில் தங்கள் வாழ்க்கையின் விட்டுப் போன சந்தோஷங்களை அனுபவிக்கட்டும் நினைத்தார்.



விட்டுப்போன உறவுகளும் தொப்புள்கொடி உறவையும் விட்டு தனிமையில் வாழ்ந்தவர், இன்றும் காப்பகத்தின் இருப்பவர்களுக்கு ராணியாகவே அன்பாலும் பாசத்தாலும் அரவணைத்தார்.



தன் தனிமையை மட்டுமல்லாமல் தன்னைப் போலத் தனிமைத் துயரில் தவிப்பவர்களின் தவிப்பைத் தீர்த்த வள்ளியம்மையை ஊரேக் கொண்டாடியது.







சசிகலா எத்திராஜ்..😊

கரூர்.




















 
சிறப்பான முடிவு மேம். கூட்டு குடும்பம் சிதற முக்கிய காரணம் தலைமை இல்லையே என்பது தான் என்பதை உடைத்து சொல்லி இருக்கீங்க. சூப்பர் மேம்
 
Top