கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தனிமையிலே இனிமை....விஸ்வதேவி

Latha S

Administrator
Staff member
விஸ்வதேவியின்

தனிமையிலே இனிமை



சங்கரியின் பொழுதுபோக்கே, மாலையானதும் இந்த பார்க்கிற்கு வந்து வேடிக்கை பார்ப்பது தான்… அதுவும் தன் கணவன் மறைவிற்கு பின்பு, இன்னமும் தனக்குள்ளே ஒடுங்கிக் கொண்டாள்.



சுற்றிலும் பார்வையை சுழற்ற… அந்த அப்பார்ட்மெண்டில் உள்ள குழந்தைகள் எல்லோரும் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்க, அதை ரசித்துக் கொண்டிருந்தாள்.



இங்கு விளையாடும் குழந்தைகளை, எப்படி தள்ளி நின்று ரசிக்கிறாளோ, அதேப் போல தான் அவளது பேரன்,பேத்தியையும் தள்ளி நின்று தான் ரசிக்க முடியும். எல்லாம் "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" கதை தான் என நினைத்தவள் பெருமூச்சுடன் எழுந்தாள்.



அவளுக்கு பின்புறமாக, ஒரு இளம் ஜோடி பேசிக் கொண்டிருப்பது, அவள் காதில் விழுந்தது.



" ஹேய், ராம்… நீ சொல்வது உண்மை தானா… அந்தப் பெண் குதிக்க…"



"யெஸ் டியர்… எனக்கு டிரான்ஸ்பார் கன்ஃபார்ம்… நெக்ஸ்ட் வீக்கே வந்து ஜாயின் பண்ண சொல்லியிருக்காங்க…

சோ… வர்ற சன்டே, நாம பெங்களூர் போறோம்…"



"ஹை, நீயும், நானும் அன்பே… "என பாடத் தொடங்கினாள் அந்த நவீன கால யுவதி.



அவர்கள் இருவரையும் திரும்ப பார்த்து விட்டு ஒரு இரக்க புன்னகையை சிந்தினாள் சங்கவி. இன்னொரு சங்கவி உருவாகிறாள் என மனதிற்குள் நினைத்துக் கொண்டு தனது அப்பார்ட்மென்ட் நோக்கி எட்டு எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள். அவளது மனமோ, பின்னோக்கி சென்றது.



சங்கவியும், எல்லா பெண்களைப் போல, திருமணம் முடிந்து பல்வேறு கனவுகளுடன், சற்று பயத்துடனும் தனது தாய் வீட்டிலிருந்து கணவன் வீட்டிற்கு, வந்தாள்.



சங்கவியின் குடும்பம், சற்று பெரிய குடும்பம்… அவள் கூடப் பிறந்தவர்கள் இரண்டு அக்கா, ஒரு தம்பி…



சிறு வயதில் இருந்தே, அவள் ஆசைப்பட்டது எதுவும் கிடைக்காது. அவசியமாக இருந்தால் மட்டுமே வாங்கி தருவார்கள்.



மூத்த சகோதரிகளுக்கு கிடைக்கும் சலுகைகள் கூட இவளுக்கு கிடையாது. தம்பி என்றால், கடைக்குட்டி என்று எல்லோருக்குமே செல்லம்… அதனால் அப்போதிலிருந்தே திருமணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கையை கனவு காண ஆரம்பித்தாள். தனது கணவரின் அன்பு முழுவதும் தனக்கே கிடைக்க வேண்டும். கூட்டுக்குடும்பமாக உள்ள வீட்டிற்கு மட்டும் போகவே கூடாது என்று முடிவெடுத்தாள்.



ஆனால், கடவுள் பெரிய குடும்பத்தின் மருமகளாக்க முடிவெடுத்தது.



அவளைப் பெண் பார்க்க வந்த சிவாவை முதலில் அவள், பார்க்கவே இல்லை. அவரது குடும்பத்தை பார்த்தே வேண்டாம் என்றாள்.



ஆனால் வீட்டில் உள்ளவர்கள் அவள் பேச்சை எங்கே கேட்டார்கள்…



உனக்கு என்ன பிரச்சினை… மாப்பிள்ளை நல்ல குணமானவர், நல்ல வசதியான வீடு... மாப்பிள்ளை சென்னையில் வேற வேலையில் இருக்கிறார். நீயும் சீக்கிரம் சென்னைக்குப் போயிடலாம் என்றுக் கூற…



சென்னைக்கு போயிடலாம் என்ற வார்த்தை, அவளுக்கு ஏற்புடையதாக இருக்க, குழப்பத்துடனே தலையாட்டினாள்.



கல்யாணத்திற்கு பிறகு, சிவா லீவு எடுத்திருந்த, ஒருமாத காலமும் இருவருக்கும் இறக்கை கட்டி பறந்தது.



முகமெல்லாம் ஜொலிக்க சங்கரி பவனி வந்தாள்.



ஆனால், லீவு முடிந்து திங்கட்கிழமையில் இருந்து வேலைக்கு செல்ல வேண்டும், என்று சிவா மட்டும் சென்னைக்கு புறப்பட...இவள் மனதில் முதல் சுணக்கம் ஏற்பட்டது.



கண்கள் கலங்க," என்ன சிவா என்னை கூட்டிட்டு போக மாட்டீங்களா?" என…



முதல் முறையாக சிவா அதிர்ந்தான்.



"என்னம்மா, சொல்லுற… கல்யாணத்திற்கு முன்பே மாமாவிடம், சொன்னேனே… நான் சென்னையில் மேன்சனில் தங்கியிருக்கிறேன். இப்போதைக்கு சென்னைக்கு கூட்டிட்டு போக முடியாது… இன்னும் ஒரு தங்கைக்கு திருமணம் செய்யணும்… அதுவரைக்கும் செலவுகளை சுருக்கி தான் செய்யணும்… இரண்டு வருடமாவது ஆகும் என்று சொன்னேனடா…

அதுக்கென்ன மாப்பிள்ளை. பரவாயில்லை என்றாரே…"



ஓ என்றவள், அதற்கு பிறகு ஒரு வார்த்தையும் பேசவில்லை…



"இங்க இருக்கிற சென்னை தானடா… ஃப்ரை டே நைட் இங்க வந்திடுவேன். அப்பறம் திங்கட்கிழமை காலையில் தான் போவேன்." என எவ்வளவோ சமாதானங்கள் செய்ய‌…



அவளோ, ஒரு வார்த்தையும் பேசவில்லை. மௌனம் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்தாள்.



அந்த தடவை சிவா, பன்ரூட்டிலிருந்து சென்னைக்கு செல்லும் போது, மனமே இல்லாமல் தான் சென்றான்.



சங்கரியைப் பற்றிய யோசனையே மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.



தன் வீட்டில் இன்னும் பொருந்தவில்லை, என்பதை உணர்ந்தான். தன் அம்மாவிடம் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுபவள், தன் அண்ணி, மற்றும் தங்கைகளிடம் அதுவும் கிடையாது. அவளிடம் பேச வேண்டும் என்று முடிவெடுத்தான்.



அதற்கு அவளும் ஒத்துழைக்க வேண்டும் அல்லவா…



சிவா ஃபோன் பண்ணும் போதெல்லாம் அவாய்ட் பண்ணுவது, அல்லது பேசாமலேயே அமைதியாக இருப்பது, என்று அவள் இருக்க …



அதற்கு மேல் சிவாவால் ஒன்றும் செய்ய முடியாமல், அடுத்த வாரமே வந்து அவளை சமாதானப்படுத்த முயன்றான்.



வந்தவுடனே வீட்டில் அவரது தாய் அவள் மீது ஒரு புகார் பட்டியலே வைத்திருந்தார்.



"டேய் சிவா, உன் பொண்டாட்டி யாரிடமும் ஒழுங்காக பேசுவதில்லை. வேலை செய்துவிட்டு, அவளது அறையிலேயே இருக்கிறா… உங்க அண்ணி கூட போய் ரெண்டு, மூணு தடவை வெளில போகலாம் என்று கூப்பிட்டதிற்கு வரவில்லை என்று சொல்லிவிட்டாடா... உன் தங்கச்சி சின்னப் பொண்ணு தானே, அவக் கூட பேசுவதில்லை" என்றுக் கூற…



விடுமா… அவளும் சின்னப் பொண்ணு தானே, கொஞ்சம் நாள் விட்டுப் பிடிப்போம், என்று சமாதானப்படுத்தி விட்டு தனது அறைக்கு சென்றான்.



அவன் வந்ததை பார்த்து விட்டு ஒன்றும் கூறாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள் சங்கரி.



"அதற்குப் பிறகு அவனது எந்த சமாதானமும் எடுபடவில்லை. உனக்கு இங்க இருக்க கஷ்டமா இருந்தா, நான் வேலைக்கு போகும் போது, நீ உங்க அம்மா வீட்டுல வேண்டுமென்றால் போய் இருக்கிறாயா?"



"வேகமாக நான் எங்கேயும் போக மாட்டேன் "என்று அவள் மறுக்க...



அவள் ஏதோ மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்று உணர்ந்த சிவா, "சீக்கிரம் வீடு பார்த்து உன்னை அழைச்சிட்டு போறேன் "என்றான்.



அதற்கு பிறகு தான் அவளது மௌன விரதத்தை கை விட்டாள். அதற்காக வீட்டில் உள்ளவர்களிடம் நன்றாக பழகினாள் என்று சொல்ல முடியாது. அவள் கல்யாணம் ஆனதிலிருந்தே யாரிடமும் ஒட்டவில்லை.



சிவா சொன்னது போலவே சென்னைக்கு அழைத்து செல்ல, அவர்களுடைய வாழ்க்கை ஆனந்தமாக சென்றது.



கணவன் மீது திகட்டத், திகட்ட அன்பு செலுத்தினாள். ஆனால் கணவனின் தாய் மற்றும் உறவினர்களிடம் அந்த அன்பை பகிர்ந்து கொள்ள அவளால் முடியவில்லை.



சிவாவும் முடிந்த அளவுக்கு சொல்லி பார்த்தான், அதற்குப் பிறகு அவன் மட்டுமே ஊருக்குச் சென்று வந்தான்.



இப்படியே சென்ற அவர்களது வாழ்க்கையில் மழலைச் செல்வம் வந்தது.



சரி குழந்தை வந்ததிற்கு பிறகாவது மாறுவாள் என்று பார்த்தால் அதற்கு பிறகும் அவள் யாரையும் அருகில் ஒட்ட விடவில்லை. தான் தன் கணவர் குழந்தை என்று ஒரு குறுகிய வட்டத்தில் இருந்து விட்டாள்.



குழந்தை வயிற்றில் இருக்கும் போது அவ்வளவு கஷ்டப்பட்ட போதும் தன் தாய் வீட்டிற்கும் செல்லவில்லை. சென்றாலும் ஓரிரு நாட்களில் திரும்பி விடுவாள். மாமியார் வீட்டிற்கோ, கணவனோடு சென்று கணவனோடே வந்துவிடுவாள்.



அவளோட அம்மாவும், மாமியாரும் வந்து பிரசவத்திற்கு இருந்தனர்.



பேரக் குழந்தைகளை வந்து அவ்வப்போது பார்த்துக் கொண்டனர். நாளாக நாளாக அவர்களின் வருகையும் குறைந்து கொண்டே வந்தது‌



அதற்குப் பிறகு அந்த நாகரீக தனிமை வாழ்க்கை வாழ ஆரம்பித்து விட்டார்கள்.



பிறந்ததிலிருந்து அவளது மனதில் உள்ள ஏக்கங்களை பகிர்ந்து கொள்ளாமல் அடக்கி, அடக்கி.ஒரு கட்டத்தில் எதையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல், நினைப்பதையே நடத்தி சாதித்து இன்று தனிமரமாக நிற்கிறாள் சங்கரி.



பசங்க இருவரும் படித்து முடித்துவிட்டு, திருமணம் ஆகி டெல்லியில் ஒருவரும். பெங்களூரில் ஒருவரும், குடும்பத்துடன் வசிக்கிறார்கள்.



கணவர் இருக்கும் வரை, லீவு விட்டால்… பேரக் குழந்தைகளை அழைத்துக் கொண்டு இங்கு வருவார்கள். வீடே திருவிழாவாக இருந்தது. ஆனால் கணவர் இறந்ததற்குப் பிறகு இரண்டு மகன்களும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைக்கவும் இல்லை. இங்கு வருவதும் குறைத்துக் கொண்டே வந்தது.



அப்போதுதான் சங்கவிக்கு தான் செய்த தவறே புரிந்தது. அவள், கணவன் மற்றும் குழந்தைகளோடு தனித்து வாழ்ந்து விட்டு, அவர்களையும் அவ்வாறே, பழகிவிட்டதன் பலன், இன்று அவளையே அவர்கள் குடும்பத்திற்குள் சேர்த்துக் கொள்ள அவர்களுக்கு மனமில்லை.



தம் தாய் வீட்டிலும், மாமியார் வீட்டிலும் தன் கணவரின் மறைவிற்குப் பின்பு வந்து இருக்க கூப்பிட்டாலும், அவள் கணவரோடு வாழ்ந்த வீட்டை விட்டு செல்ல அவளுக்கு மனம் இல்லாமல் இங்கு தனியாகவே இருக்கிறாள். ஆனால் ஒன்று அவள் செய்த தவறை உணர்ந்து விட்டாள்.



" தனிமை என்றும் இனிமை இல்லை" என்பதை இந்த தள்ளாத வயதில் தான் உணர்ந்தாள்.



தன் பேரக் குழந்தைகளாவது அவர்கள் பெற்றோரை தனியே விடக்கூடாது என்று அவ்வபோது வீடியோ காலில் பேசும்போதும், இல்லை எப்போதாவது அதிசயமாக விடுமுறையில் வரும்போதும் கூட்டுக்குடும்ப நன்மையைப் பற்றி சிறு சிறு கதைகளாக கூறிய அவர்கள் மனதில் விதையை விதைத்தாள் சங்கவி.

இன்னொரு சங்கவி உருவாகக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாள்.



பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த சங்கவி மெதுவாக நடந்து அவளது அப்பார்ட்மெண்டில் நுழைந்தாள்.



அப்போது மெல்லிய சத்தத்தில் எதிர்வீட்டில் அந்த பாடல் ஒலித்தது.



"தனிமையிலே இனிமை காண முடியுமா"

அந்த பாடலை கேட்டவுடன் சங்கரியின் முகத்தில் விரக்தி புன்னகை மலர்ந்தது.



************”***********
 
Top