கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தனிமை இனிமையா... கி.கரோ

Latha S

Administrator
Staff member
தனிமை இனிமையா - கி.கரோ







"நான் வேலைக்கு போயிட்டு வரேன் ஶ்ரீ" என்று கூறிய கணவனின் குரலுக்கு




"சரி யாதவ் போயிட்டு வாங்க" என்று மலர்ந்த முகத்துடன் விடை கொடுத்தாள் நளின ஶ்ரீ.



கணவனை அனுப்பிவிட்டு சமையல் அறையை சுத்தம் செய்து விட்டு,தனக்கு பிடித்த படத்தை டிவியில் பார்த்தவாறு காலை உணவை சாப்பிட தொடங்கினாள்.



கிருஷ்ணன் - ராதா தம்பதியின் ஒரே செல்ல மகள் நளின ஶ்ரீ.



இவள் ஒரு பொறியியல் பட்டதாரி. கல்லூரி படிப்பை முடித்தவுடனே, நல்ல வரன் அமைந்துவிட திருமணம் செய்துவிட்டனர்.



ரவீந்திரன்- புவனா தம்பதியின் ஒரே மகன் தான் யாதவன். அவனும் பொறியியல் பட்டதாரி தான். தனியார் நிறுவனத்தில் நல்ல வருமானத்தில் வேலை.



திருமணம் முடிந்தவுடன் நாட்கள் சந்தோஷமாக நகர்ந்தது.



ஒரு நாள் வேலையில் இருந்து வந்த யாதவன் "என்னை இப்போ பெங்களூருக்கு மாற்றி இருக்காங்க. நீயும் நானும் அடுத்த வாரம் போகணும்" என்று கூற



"சரி யாதவ்" என்றவள்.



தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்தாள்.



பெங்களூருக்கு வந்து பத்து நாட்கள் ஆகிவிட்டது.



கணவன் வேலைக்கு சென்ற பிறகு, வீட்டில் இருக்கும் நேரத்தில் தனிமை துணையாக வந்து அமர்ந்தது.



ஒரு நாள் தொலைக்காட்சி பார்த்து கொண்டு இருக்கும் போது மனைவியிடம்,



"என்ன ஶ்ரீ ஒரு மாதிரி இருக்க" என்று கேட்க



"அப்படி எதுவும் இல்லையே நான் நல்லா தானே இருக்கேன்"



"இல்லை நீ பொய் சொல்ற உன்னுடைய முகத்தை பார்த்தாலே தெரியுது ஏதோ இருக்குனு என்ன சொல்லு" என்று விடாப்பிடியாக வினவ



"வீட்டில் தனியாக இருக்க ஒரு மாதிரி இருக்கு நான் வேலைக்கு போகவா" என்று தயக்கத்துடன் கூற



"வேலைக்கு எல்லாம் போக வேண்டாம்" என்று கண்டிப்பான குரலில் கூறியவன்.



அவள் முகம் வாடி போனதை உணர்ந்து, "இங்க பாரு ஶ்ரீ தனியா இருக்கிற மாதிரி நீ எதுக்கு பீல் பண்ற பக்கத்துல இருக்கிறவங்க கிட்ட பேசு, ஊரில் இருக்கும் நம்முடைய அம்மா,அப்பாக்கு கால் பண்ணி பேசு ஆனா வேலைக்கு மட்டும் இப்போ வேண்டாம்" என்றவன்.



அவள் கரத்தை பிடித்து அழுத்த அதில் 'என்னை புரிந்து கொள்ளேன்' என்ற வேண்டுதல் இருந்தது.



கணவனுக்கு தான் வேலைக்கு போவது பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து அமைதி காத்தாள்.



அவனுக்கு எங்கே புரியப்போகிறது பெற்றோரிடம் உரையாடுவதும், பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசுவதும், எல்லாம் இரண்டு மணி நேரம்தான்.



அதன்பின் இருக்கும் நேரத்தில் எவ்வளவு நேரம் தான் பார்த்த படத்தையே பார்ப்பது, கேட்ட பாடலையே கேட்பது, எவ்வளவு நேரம் தான் வெறும் சுவற்றையே வெறிப்பது...



தன்னுடைய தனிமையைப் போக்கிக் கொள்ள என்ன வழி என்பதை ஆராய்ந்தாள்.



சூடான காபியை பக்கத்தில் வைத்தவாறு கையில் ஒரு நோட்டு, பேனாவுடன் அமர்ந்தாள்.



தனிமையை உணரும் தருணங்களில் எல்லாம் என்ன செய்யலாம் என்பதை எழுதினாள்.



ஏதாவது ஒரு மொழியை கற்றுக்கொள்வது, புது விதமான உணவுகளை சமைப்பது, கை வேலை செய்வது, ஓவியம் வரைவது, செடி வளர்ப்பது என்று அடுத்து என்னென்ன செய்யலாம் என்பதை திட்டமிட்டாள்.



டைரி எழுதலாம் என்று கடைசியாக நினைத்தவள்.



டைரியில் என்னென்ன எழுதலாம் அன்றைக்கு நடப்பதை எல்லாம் ஏதாவது வித்தியாசமாக எழுதிப் பார்க்கலாம் என்று யோசித்தாள்.



தினமும் நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் கவிதை போல் எழுதினாள்.



இப்படியே மாதங்கள் உருண்டு ஓடியது.



ஒருமுறை யாதவன் ஏதோ ஒரு பைலை தேடும் போதுதான், அவள் எழுதிய டைரி அவன் கண்களில் பட்டது .



அதை திறந்து படிக்க ஆரம்பித்தான்.



'சில நேரங்களில் வரமாகவும்,சில நேரங்களில் சாபமாகவும் மாறும் மந்திரம் ஏனோ என் தனிமையே'



'கடிகார முட்களின் ஒலியை கேட்பதும்



வண்ண சுவற்றை உற்று நோக்குவதும்



யாருமில்லா வீட்டில் உலா வருவதும்



அடுக்கிய பொருட்களை திரும்பவும் அடுக்கி வைப்பதும்



மனம் சரியில்லாத போது மடி சாய ஏங்குவதும்



சிரித்துப் பேச பக்கத்தில் எவரும் இல்லாத இருக்கையை காணும் போதும்



அழுகையில் கரையும் போதும் எந்த கரமும் கண்ணீரைத் துடைக்க வராமல் போகும் போதும்



கோபத்தை பொம்மையிடம் வெளிப்படுத்தும் போதும்



என் தனிமை கசக்கிறதே'



அந்த டைரியை மூடி வைத்தவனின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியது.



"யாதவ்" என்ற குரலில் திரும்பியவன்.



மனைவியை அணைத்துக்கொண்டு "சாரி ஶ்ரீ சாரி" என்று பல முறை மன்னிப்பை வேண்டினான்.



"என்ன ஆச்சு எதுக்கு இப்போ சாரி சொல்றீங்க "என்று புரியாமல் அவன் முகத்தை பார்க்கும் போதுதான் அந்த டைரியை பார்த்தாள்.



"நீங்க இந்த டைரியை" என்று இழுக்க



"எல்லாத்தையும் படித்து விட்டேன்.நீ வீட்டில் சந்தோஷமாக இருப்பேன்னு நான் நினைத்து கொண்டு இருந்தேன் ஆனா இவ்வளவு தனிமையை உணர்வாய்னு நான் எதிர்பார்க்கவில்லை. இதுக்கு தான் என்கிட்ட வேலைக்கு போக சொல்லி கேட்டாயா நான் ஒரு முட்டாள்" என்று தன்னையே நொந்து கொள்ள



" நீ எதுக்கு கேட்டேன்னு புரிந்து கொள்ளாமல் பாட்டு கேளு, போன் பேசுனு ஈசியா சொல்லிட்டு போயிட்டேன் சாரி ஶ்ரீ" என்று மீண்டும் மன்னிப்பை கேட்க



"போதும் யாதவ் விடுங்க" என்று சமாதானம் செய்ய முயன்றாள்.



அவள் கூறியது எதுவும் அவன் காதுகளில் எட்டவில்லை.



" நீ எழுதியதை படிக்கும்போது, எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா"



" உங்களை கஷ்டப்படுத்த நான் இதை எழுதல" எங்கே தன்னை தவறாகப் புரிந்துகொள்வானோ என்ற அச்சம் அவளுக்கு வந்தது.



"இல்ல நான் அப்படி சொல்ல வரல, உன்னுடைய விருப்பத்தை கேட்காமல் இருந்துட்டேன். சரி விடு போனது போகட்டும் இனிமேல் நீயும் என் கூட வேலைக்கு வா"



"நிஜமாகவா" என்று ஆச்சரியமாக கேட்க



"நிஜமா தான்"



"தேங்க்ஸ் யாதவ்"



" நமக்குள்ள தேங்க்ஸ் எல்லாம் வேண்டாம். இனிமேல் உன்னுடைய விருப்பங்களை எல்லாத்தையும் என்கிட்ட தயங்காமல் சொல்லு நான் கண்டிப்பா நிறைவேற்ற முயற்சி செய்வேன் "



அவள் முகம் மகிழ்ச்சியில் மின்னியது.



"அப்புறம் ஒரு சின்ன ரிக்வெஸ்ட்"



" என்ன "



"இனி டைரி எழுதும்போது, சோகமாக மட்டும் எழுதாதே" என்று கிண்டல் செய்தான்.



"யாதவ்" என்று முறைக்க



அவள் முறைப்பில், அவன் சிரிக்க அவளும் சிரிப்பில் இணைந்து கொண்டாள்.



மனைவியின் தனிமையை, இனிமையாக மாற்றும் கணவன் கிடைப்பது வரமே.



அந்த வரம் அனைவரின் வாழ்விலும் கிடைக்கட்டும்..



நன்றி..
 

Nithya Mariappan

Moderator
Staff member
😊 😊 குடும்பத்தலைவிகளின் தனிமையை அவர்களுக்குப் பிடித்தவற்றை செய்யவைத்து அர்த்தமுள்ளதாக்கும் கணவன் என்ற வரம் அனைவருக்கும் கிடைத்தால் நலமே... அருமையான கதை,... வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top