தனிமை சிறுகதை (ஞா.கலையரசி)
ஏதோ ஒரு நாய்க்குட்டி தெருவில் லொள் லொள் என்று இடைவிடாமல் குலைத்துக் கொண்டேயிருக்கிறது. ஏற்கெனவே படுத்தால் சீக்கிரம் தூக்கம் வராது; இன்றைக்கு இந்த இம்சை வேறு! எத்தனை மணிக்குத் தூங்கப் போகிறேனோ தெரியவில்லை.
கோரோனா ஏற்படுத்திய தனிமை என்னைப் பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கிறது.. வேலையில் இருந்த காலத்தில், சரியாகத் தூங்கக் கூட முடியாமல், காலில் சக்கரத்தைக் கட்டி ஓடிக் கொண்டிருந்தேன். பணி ஓய்வு பெற்று, கணவருடன் நிம்மதியாகக் காலம் கழிக்கலாம் என்று நினைத்தபோது, திடுதிப்பென்று ஒரு நாள் கணவர் மாரடைப்பால் இறந்து போனார்.
ஏற்கெனவே சில முறை உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டபோது, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இறந்துவிடுவார் என்று நினைத்த போது கூட, அதிசயமாய் உயிர் பிழைத்து வந்தவர், உடம்புக்கு எந்தப் பிரச்சினையும் இல்லாமல், காலையில் எழுந்து, காபி குடித்துவிட்டுப் பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்தவர், திடீரென மயங்கிச் சாவார் என்று யாராவது எதிர்பார்ப்பார்களா? ஒவ்வொருவருக்கும், எந்த வழியில் சாவு வரும் என்பது புரியாத புதிர் தான்.
அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே, எனக்கு ஆறு மாத காலம் ஆனது. அதற்குப் பிறகு, வெளிநாட்டில் வசிக்கும் மகன், அவன் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கு உதவியாகக் கனடா அழைத்துச் சென்றான். . எனக்கும் பேரக் குழந்தையுடன், பொழுது நன்றாகப் போயிற்று.
இடையில் திருச்சியில் உறவினர் விசேஷங்களுக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக இந்தியா வந்தேன். சில வேலைகளை முடித்துக் கொண்டு, மீண்டும் கனடா செல்ல டிக்கெட் புக் பண்ணி வைத்திருந்தேன் .
ஆனால் கொரோனா வந்து, வாழ்க்கையையே தலைகீழாகப் புரட்டி போட்டுவிட்டது. விமான சேவை முழுதும் ரத்து செய்யப்பட்டுவிட்டதால் வெளிநாட்டுக்குச் செல்ல வாய்ப்பில்லை. மகன் குடும்பமும், இந்தியா வர முடியாது என்ற நிலைமை.
இடையில் எனக்குக் கொரோனா வந்து இறந்துவிட்டால், மகனுக்கு உடம்பைக் கூட கொடுக்க மாட்டார்கள்; அனாதை பிணமாகத் தான் போக வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓர் ஓரத்தில் உறுத்திக் கொண்டேயிருந்தது. என்ன வாழ்க்கை இது? வயது அறுபதுக்கு மேல் ஆகிவிட்டதால், கொரோனா வராமலிருக்க வீட்டுக்குள்ளேயே பாதுகாப்பாக இருங்கள் என்று மகன் தினமும் போனில் சொல்கிறான்.
உடம்பு பாதுகாப்பாகத் தான் இருக்கிறது. ஆனால் மனது? என்னென்னவோ பழைய நினைவுகள், கடந்து வந்த பாதைகள், மனதை முழுவதுமாக ஆக்கிரமிக்கின்றன. ஆன்மீகத்தில் நாட்டமுள்ள எனக்குக் கோவிலுக்குப் போய் வந்தால் கூட, மனம் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். அதற்கும் ஆப்பு வைத்து விட்டதே, இந்த வைரஸ் கிருமி!
கந்த சஷ்டி, விநாயகர் அகவல், திருப்புகழ் என ஒவ்வொன்றாக எடுத்து மனப்பாடம் பண்ணுகிறேன். முதுமையில் மூளைக்கு ஏதாவது வேலை கொடுத்துக் கொண்டிருக்க வேண்டுமே! இல்லையேல், டிமென்சியா எனப்படும் மறதி நோய் வந்துவிடுமென்று பயமுறுத்துகிறார்கள். கல்லூரி நாட்களில் இருந்தது போல், கதைகளில் ஈடுபாடு இருந்தாலாவது, நாவல்களை எடுத்து வாசிக்கலாம். அதிலும் இப்போது மனம் ஒன்ற மறுக்கின்றது..
இந்தத் தனிமையில் நேரத்தைப் போக்குவது என்பது, எனக்கு மிகப் பெரிய பிரச்சினையாக இருக்கின்றது. கணவரோ, மகனோ இருந்தால், சமையலாவது வகை வகையாய்ச் செய்து போடலாம். எனக்கு மட்டும் சமைக்க வேண்டும் என்றாலே, வெறுப்பாயிருக்கிறது.
காலையில் சுட்ட இட்டிலியையோ, தோசையையோ வைத்துச் சமாளித்துக் கொள்கிறேன். அடிக்கடி வெளியில் சென்று, காய்கறி, பழங்களும் வாங்க முடியாமல், இந்தக் கொரோனா பயம் தடுக்கின்றது.
வேலைக்காரியை நிறுத்திவிட்டு, வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் நானே செய்கின்றேன். வாசலில் வரும் உதிரி மல்லிகை பூக்களை, வாங்கிக் கொட்டிக் கொண்டு, தொடுத்து மாலை கட்டி, சாமி படங்களுக்குப் போடுகிறேன்.
கூட வேலை செய்த பழைய தோழிகளுக்குப் போன் செய்து பேசுகிறேன். திரும்பத் திரும்ப என்ன பேசுவது? பேசுவதற்கு புதுச் செய்திகள் ஏதுமில்லை.
பிள்ளைகள் ஏன் வெளிநாடு போக வேண்டும்? நம் கூடவே இங்கிருந்தால் நமக்கு இந்தத் தனிமை இருக்காதல்லவா? என்ற யோசனை வருகின்றது. “இந்தியாவிற்கே குடும்பத்துடன் வந்துவிடு,” என்று மகன் போன் செய்யும் போது சொல்ல எண்ணுகிறேன்.
ஆனால் அடுத்த கணம், அது அவர்களுடைய விருப்பத்தையும், எதிர்காலத்தையும் பொறுத்தது; நம்முடைய வசதிக்காக, அவர்கள் எதிர்காலத்தைப் பாழாக்கக் கூடாது எனறு யோசனை வருகின்றது.
ஒரு வேளை என் எண்ணத்தை வெளிப்படுத்தினால், மகன் வருவதற்கு விரும்பலாம்; ஆனால் மருமகள் விரும்ப வேண்டுமே? நம்முடைய விருப்பத்தை அவர்கள் மீது திணிப்பது தவறு என்று மனதைத் தேற்றிக் கொள்கிறேன்.
கணவர் கொடுத்து வைத்தவர்! கண் மூடிக் கண் திறப்பதற்குள் இறந்துவிட்டார்! பாத்ரூம் செல்வதற்குக் கூட முடியாமல், படுக்கையில் கிடந்து, அடுத்தவரின் உதவியை எதிர்பார்க்கும் அவலநிலை, அவருக்கு இல்லை. எனக்கு அப்படிப்பட்ட சாவு வர வேண்டுமே! ஆனால் நாம் விரும்புவது போலவா, மரணம் வருகின்றது?
படுத்தால், பார்ப்பதற்கு யாருமில்லாத என் போன்றவர்களுக்கு, உடனே சாக்காடு வந்தால் நல்லது தான். ஆனால் என் மரணம் எப்படி வருமோ?
எல்லாக் கடமைகளையும் முடித்தாயிற்று. இனி மேல் நான் யாருக்காக இருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. பத்து நாட்களுக்கு ஒருமுறை, வாரத்திற்கொருமுறை என்று வந்த இந்த எண்ணம், இப்போது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, வரத் துவங்கியுள்ளது.
கருணைக் கொலையை நம் நாட்டில் அனுமதித்தால் நல்லது என அடிக்கடி நினைக்கின்றேன். என் வேலையை நானே பார்த்துக் கொல்ள முடியாச் சூழ்நிலையில், அடுத்தவருக்குப் பாரமாக இருக்க விரும்பாத போது, கருணை கொலைக்கு, அரசு அனுமதி கொடுக்கலாம் தானே?
வெறும் காய்கறிக்கூழ் போலப் படுக்கையில் கிடப்பதால், யாருக்கு என்ன நன்மை? அடுத்தவருக்குத் தான் எவ்வளவு கஷ்டம்? தூக்கி எடுத்துச் சுத்தம் பண்ணுவது, எளிதான காரியமா என்ன? சுத்தம் செய்பவர்கள் முகம் சுளித்து, எப்போது இவர் இறப்பார் என்று எதிர்பார்க்க ஆரம்பிப்பது, இயற்கை தானே?
சரி இப்போது நான் இறந்துவிட்டால் என்ன நடக்கும்? மகன் வெளிநாட்டில் இருக்கிறான். கொரோனா சமயமாதலால், சாவுக்குக் கூட வர முடியாது. என் சொந்தக்காரர்கள், என்னை அடக்கம் செய்வார்கள். என் முகத்தைக் கூடக் கடைசியாகப் பார்க்க முடியவில்லையே என மகனுக்குக் காலமெல்லாம் உறுத்திக் கொண்டிருக்கும். ஆனாலும் எனக்கு இந்தத் தனிமைத் துயரிலிருந்து, விடுதலை கிடைத்துவிடும் அல்லவா?
இந்தக் கொரோனா எப்போது முடியும் என்று தெரியவில்லை. எத்தனை மாதங்கள் தாம், நான் இந்தத் தனிமைத் துயரில் கிடந்து தவிப்பது?
சில நாட்களோ, மாதங்களோ மகன் அழுவான்; பிறகு காலம் என் நினைவுகளை மறக்கச் செய்துவிடும். மறதி மனிதனுக்கு எவ்வளவு வசதி? அது மட்டுமில்லாமல் இருந்திருந்தால், வாழ்நாள் முழுக்கத் துயரம் தான்.
அலைபேசியில் மகன் அழைக்கிறான். “அம்மா என்ன பண்ணுறீங்க?”
“சும்மா தான் ஒட்கார்ந்திருக்கேன்பா”.
“ஏதாவது புத்தகம் எடுத்து வாசிங்கம்மா. பொழுது போறதே தெரியாது”.
“எனக்கு எதையும் வாசிக்கப் புடிக்கலே”.
“சரி ஏதாவது பாட்டு கேளுங்க; ஒங்களுக்குப் பழைய சினிமாப் பாட்டு புடிக்குமே!”.
“வேணாம்; இப்ப கேட்கிற மூடு இல்ல”.
“பழைய சினிமாப் படம் பார்க்க ஆசைப்படுவீங்களே!”.
“எல்லாத்தையும் பார்த்தாச்சி; திரும்பத் திரும்ப போட்டதையே தான், போடறான்”.
“ஏன் எல்லாத்துக்கும் இப்பிடி அலுத்துக்கிட்டுப் பதில் சொல்றீங்க? ஒடம்பு சரியில்லையா?”
“ஒடம்பு நல்லாத் தான்பா இருக்கு; மனது தான் சரியில்லை”.
“ஏன்மா என்னாச்சி?”
“இனிமேலும் நான் யாருக்காக இருக்கணும்னு, அடிக்கடி தோணுது”.
“அப்பிடியெல்லாம் நெனைக்காதீங்க. எனக்காக நீங்க இருக்கணும். கொரோனா முடிஞ்சவுடனே, ஒங்களுக்கு விமான டிக்கெட் எடுத்து அனுப்பறேன். இங்க வந்துடுங்க”.
“நம்ம ஊரு, கோவில் எல்லாத்தையும் விட்டுட்டு, அங்க வந்தாலுமே எனக்கு மனசு ஒட்டமாட்டேங்குது. மேலும் அந்தக் குளிரை, என் ஒடம்பு தாங்க மாட்டேங்குது; எலும்பெல்லாம் பயங்கரமா வலிக்குது”..
“சமைக்கிறது தான் ஒங்களுக்குப் புடிக்குமே;. வித விதமாச் சமைச்சிச் சாப்பிடுங்க”.
“சாப்பிடறதுக்கு யாராவது இருந்தாத் தான் சமைக்கப் புடிக்குது; எனக்கு மட்டும்னா ஒடம்பு வளைய மாட்டேங்குது”.
அதற்கு மேல் என்ன பேசுவது எனத் தெரியாமல், “சரிம்மா நாளைக்குப் பேசறேன். பத்திரமா இருங்க” என்று அழைப்பைத் துண்டித்து விட்டான்.
மணி இரவு பதினொன்றை நெருங்குகிறது. போய்ப் படுத்தாலும் தூக்கம் வருவதற்கு, இரவு இரண்டு மணிக்கு மேல் ஆகும். நிம்மதியாகத் தூங்க முடிந்தாலாவது, இந்த நேரத்தைப் போக்கலாம்
மல்லாக்கப் படுத்தபடி மேல் சுவரை நோக்குகிறேன். திடீரென்று வா வா என்று சத்தம் கேட்கிறது. யார் கூப்பிடுகிறார், இந்த நேரத்தில்? பார்வையைக் கூர்மையாக்குகிறேன்.
மேலே சுழலும் மின்விசிறி தான், கையைக் காட்டி என்னிடம் வா வா என்று சைகை செய்கின்றது. ஒரு புடைவையை எடுத்து வா என்கிறது.
எழுந்து விளைக்கைப் போட்டுவிட்டு மின்விசிறியை நிறுத்துகிறேன். ஒரு புடைவையை எடுத்துக் கொண்டு, கட்டிலில் ஏறி வா வா வென அழைக்கும் விசிறிக்கு, அருகில் செல்கின்றேன்.
வாசலில் நாய்க்குட்டியின் திடீர் அலறல் சப்தம். என் சிந்தனையைக் கலைக்கின்றது. “ஏனிப்படி உயிர் போவது போல் கத்துகிறது?” என்று சபித்துக் கொண்டே, கட்டிலை விட்டு இறங்கி, வாசற்கதவைத் திறக்கின்றேன்.
இரும்பு கேட்டுக்கிடையில் நாய்க்குட்டி மாட்டிக்கொண்டு, வெளியில் வர முடியாமல் அலறுகின்றது. ஓடிப்போய் கேட்டிலிருந்து அதனைப் பத்திரமாக விடுவித்து, என் கையில் தூக்கியதும், குழந்தை போல் என் நெஞ்சில் புதைந்து கொள்கின்றது.
பாவம்! பால் மணம் மாறாப் பச்சிளம் குட்டி! தாயில்லாமல், இது மட்டும் இங்கு எப்படி வந்தது எனத் தெரியாமல், சுற்றுமுற்றும் பார்க்கின்றேன்.
தாயைக் காணவில்லை. வெகுநேரமாகக் கத்தியதால் தொண்டை வறண்டு போயிருக்கும். வயிறு ஒட்டிக் கிடக்கின்றது.
உள்ளெ சென்று, ஒரு பழைய துண்டை எடுத்து, குட்டியை அதில் சுற்றி சுவரோரம் படுக்க வைக்கிறேன். அவசரமாக அடுப்பைப் பற்ற வைத்துப் பால் காய்ச்சுகிறேன்.
பேரனுக்குப் பயன்படுத்திவிட்டு, விட்டுப்போன பழைய பால் பாட்டிலில் பாலை ஊற்றிக் குட்டிக்குக் குடிக்கக் கொடுக்கிறேன்.
என் கையை ஆதரவாய்ப் பற்றி, நெஞ்சில் சாய்ந்து கொண்டு பாலை மெதுவாகச் சப்புகின்றது நாய்க்குட்டி.
நாளையிலிருந்து பால் பாக்கெட் ஒன்று கூடுதலா வாங்கணும்; பிஸ்கட் வாங்கணும்; பால் சாதம் வைச்சிக் குழைவாப் பிசைஞ்சு கொடுக்கணும் என்று அடுக்கடுக்காய் யோசனை விரிகின்றது.
எனக்காக ஓர் உயிர்! என்னை நம்பி ஓர் உயிர்!