தனிமை சிறை - கற்பகம்
திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் தாயாரை தரிசனம் பண்ணிவிட்டு, கால்நடையாக தன் இல்லத்துக்கு வந்தாள் கதையின் நாயகி கனகசுந்தரி.
கனகசுந்தரி திருச்சி உறையூரில் உள்ள ஒரு அப்பார்மெண்ட்லுள்ள பிளாட்டில் தான் வசித்துவருகிறாள். வீட்டுக்கு வந்தவள் பூஜைகூடையை சாமியறையில் வைத்துவிட்டு, ஹாலில் உள்ள சோபாவில் சாய்வாக அமர்ந்தாள்.
வீட்டு வேலைக்காரப்பெண் காபி கொடுக்க, வாங்கி பருக தொடங்கினாள்.
அப்போது வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு இடி,மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது. கையில் காபியுடன் அந்த மழையை பால்கனியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்னமா மின்னல் வெட்டுது வெளியில் நிக்குறீங்க உள்ள வாங்க, நானு பஜ்ஜி போட்டு தரேன் சூடா சாப்பிடுங்க” என வேலைக்காரப்பெண் சொல்ல..
“வெங்காய பஜ்ஜி பண்ணு உங்க ஐயா வுக்கு ரொம்ப பிடிக்கும்” என சுந்தரி கூற,
“ஐயா வாராங்களா அதான் முகம் இன்னைக்கு இம்புட்டு தெளிவா இருக்கு போல, சரிமா நான் பண்ணுறேன்”என அவள் சமயலறையிக்கு சென்றாள்.
ஆடையை மாற்றுவதற்காக அறைக்கு சென்று பீரோலை திறந்து, காட்டன் சேலையை எடுக்க அப்போது சேலையுடன் ஒரு போட்டோ ஆல்பம் விழுந்தது.
அதை கையிலெடுத்துக்கொண்டு மெத்தையில் அமர்ந்து அதன் முன்பக்கத்தை பார்க்க, ‘இனிமையான நிகழ்வுகள்’ என பெயர் பெரிதாக பொறிக்கப்பட்டு இவளின் சிறிதுவயது போட்டோ ஒட்டப்பட்டிருந்து.
போட்டோ ஆல்பத்தை திறக்க, இவள் பிறந்தபோது இவள் தந்தை தூக்கி வைத்திருந்த போட்டோ தான் முதலில் இருந்தது.
அதைகாணும் போதே சுந்தரிக்கு கண்கள் கலங்கியது. அடுத்த போட்டோவை பார்க்க,அதில் குழந்தையாக இவள் தன் அம்மாவின் மடியில் அமர்ந்திருக்க, அம்மாவின் அருகில் இவளின் அக்காவும் அண்ணாவும் அமர்ந்தபடி எடுத்த புகைப்படம் இருந்தது. எவ்வளவு பசுமையான நினைவுகளை உள்ளடக்கியது குழந்தை பருவத்தில்...என எண்ணிக்கொண்டு மேலும் பார்க்க ஆரம்பித்தாள்.
அடுத்தடுத்த புகைப்படங்கள் இவள் அக்கா,அண்ணனுடன் இருந்த புகைப்படங்களாக இருந்தது. இவளுக்கு பத்து வயதாகும்போதே இவளின் அன்னை இறந்துவிட, இவளுக்கு அப்போதிலிருந்து எல்லாம் அக்கா தான்.
இவளின் அக்காவே இவளுக்கு அம்மாவாகி போனாள்.
‘இப்போது நினைத்தாலும் அம்மா என்றால் முதலில் கண்களுக்கு தெரிவது அக்காவின் முகம் தான். ஆனால் தனக்குதான் அம்மாவின் அன்பே நிலைக்காதே. அறியாதவயதில் அம்மாவின் இழப்பு பெரிதாக தெரியவில்லை, அதன்பிறகும் அக்கா தெரியவிடவில்லை. ஆனால்’ என நினைத்துக்கொண்டு அடுத்த பக்கத்தை திருப்ப, இவள் அக்காவின் நிச்சயதார்த்தம் போட்டோ.
இந்த போட்டோவில் தான் மனம் நிறைய சந்தோஷத்துடன் சிரித்தது, அதன்பின்பு தான் பெரிய பூகம்பமே என் வாழ்வில் தொடங்கியது.
இவள் அக்காவின் சம்மதம் கேட்டபிறகே இந்த திருமணத்திற்கு ஏற்பாடு இவளின் அப்பா ஏற்பாடு செய்திருந்தார். ஆனால் கல்யாணத்தன்று தன் காதலனுடன் கனக சுந்தரியின் அக்கா சென்றுவிட, இவளின் குடும்பமே திருமணத்திற்கு வந்த விருந்தினர் எல்லோர் முண்ணிலையில் அசிங்கப்பட்டு தலைகுனிந்து நின்றார்கள்.
மூத்த பெண் செய்த தப்புக்கு கனக சுந்தரியின் மீது அவள் அப்பா கோவத்தைக்காட்டி,பதினேழு வயதான கனக சுந்தரியை அவள் அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளைக்கு விருப்பமே இல்லாமல் திருமணம் செய்துவைத்தார். கல்லூரி படிப்பை மேலும் தொடரவிடாமல் கணவன் வீட்டில் தடைவிதிக்க, மனதளவில் நொந்து போனாள்.
பழைய நினைவுகளிருந்த கனக சுந்தரிக்கு போன் வர, அதில் சிந்தனை களைந்தவள் தன் போனை எடுத்தாள்.
போன் திரையில் “தன்னுயிரே” என்று தெரிய, இதுவரை இருந்த இறுக்கநிலை முற்றிலும் போய் புன்னகை அரும்பிய விதமாக போனை அட்டெண்ட் செய்தாள்.
“ம்ம்ம் சொல்லுங்க, வீட்டுக்கு வர இவ்வளவு நேரமா?” என அன்பாக கேக்க,
“இதோ வரேன் சுந்தரி, கொஞ்சம் வேலை அதான் சீக்கிரம் வரேன். நீ ரெடியா இரு டின்னர்க்கு உனக்கு பிடிச்ச கண்ணப்பா ஹோட்டலுக்கு போகலாம்” என கூறிவிட்டு இவள் கணவன் போனை வைக்க, அவளின் மனதோ இப்பவே தன்னவனை பார்க்க ஏங்கியது.
ஆறு மாதம் காலமாக வேலை விஷயமாக வெளிநாட்டுக்கு இவளின் கணவன் சென்றுவிட்டதால், அவனை காணாமல் பட்ட தவிப்பு, வேதனை வார்த்தையால் சொல்ல முடியாமல் திணறினாள்.
அவன் சந்தோஷ குரலைக்கேட்டு, இவளும் சந்தோஷமாக தயாராக குளியலறை புகுந்தாள். குளித்துமுடித்து ஈர தலையுடன் கண்ணாடி முன்னாடி அமர்ந்து, தன்னையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அப்போது, “அம்மா” என அழைத்துக்கொண்டு வேலை செய்யும் பெண் வர, என்னவென்று கண்களால் கனகசுந்தரி கேக்க,…
“ஏன் மா வெளில மழை வெளுத்து வாங்குது, நீங்க இந்நேரத்தில் தலைக்கு தண்ணீர் ஊத்தி இருக்கீங்க?” என கேட்டுக்கொண்டே அவள் அறையை சுத்தம் செய்ய, “ அது அவரு வெளில போனும் கிளம்பி இருன்னு சொன்னாரு அதான் குளிச்சுட்டு வந்தேன். நீ இராத்திரிக்கு சாப்பாடு ஏதும் பண்ணவேணாம், சூட்ட பஜ்ஜியையும் உன் வீட்டுக்கு எடுத்துப்போ. மழை பெய்யுது சீக்கிரம் கிளம்பு” என தன் தலையை துவட்டிக்கொண்டே கனக சுந்தரி சொல்ல, அவள் அமைதியாக இருந்தாள்.
சத்தம் ஏதும் வராமல் கனகசுந்தரி திரும்பி பார்க்க, வேலை செய்யும் பெண் இவள் மெத்தையில் வைத்துச்சென்ற இவளின் போட்டோ ஆல்பத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.
“நீங்க கல்யாண புதுசுல ரொம்ப அழகா இருக்கீங்க”
அவள் பதிலில் சிரித்த சுந்தரி, “ஏன் இப்ப அழகா இல்லையா ?” என கேலியாக வினவ, “இப்பையும் அப்டியே தான் இருக்கீங்க அம்மா”.
“உனக்கு கண்ணு சரியில்ல, இப்ப எனக்கு நாற்பத்தி ரெண்டு வயசாகுது. இன்னும் அப்டியே இருக்கேன்னு சொல்லுற”
“ம்ம் ஆனால் உன் வாழ்க்கை இப்டி போச்சே அம்மா, இந்த வாழ்க்கைக்கு நீ கல்யாணம் பண்ணாம இருந்துருக்கலாம்” என அந்த பெண் சொல்ல, கனக சுந்தரி சிரித்துக்கொண்டே கண்ணாடி முன் அமர்ந்து, தலையை துவட்டினாள்.
“சரி மா நான் வாரேன்” என அவள் செல்லும்வரை, சிரித்த முகத்துடன் இருந்தவள் அவள்சென்றதும் கதவை அடைத்துவிட்டு அந்த போட்டோ ஆல்பத்தில் இவளும் இவளின் கணவனும் ஒன்றாக நின்ற போட்டோவை நெஞ்சோடு இறுக்கி கட்டிக்கொண்டாள்.
அவசரத்தில் நடந்த திருமணம் என்றாலும், கணவன்-மனைவியாகிய பிறகு எவ்வளவு காதல் எங்களிடத்தில். இப்படியொரு கணவன் தனக்கு வாழ்க்கை துணையாக கிடைத்ததையெண்ணி பெருமைப்பட்ட நானே கெடுக்கும் நிலை வந்ததே.
யார்மீது குற்றம்சொல்ல, திருமணமாகி நான்கு வருடங்கள் கடந்தும் பிள்ளை இல்லாமல் போனது எங்கள் தவறா, மருத்துவரிடம் சென்று பரிசோதித்த பிறகு, பிள்ளை பெறவே எனக்கு தகுதியில்லை தெரிந்தது என் குற்றமா…?
இல்லை எல்லாம் கடவுள் குற்றம், எல்லாம் எனக்கு கொடுத்துவிட்டு பிள்ளைவரம் மட்டும் கொடுக்க மறந்துவிட்டான். ஆனால் அந்த பிள்ளை வரத்திற்காக என் வாழ்க்கையே பாழாகி போனது.
என்னிடம் குறை இருந்தும் என் கணவர் என்னிடம் காட்டிய அன்பும், காதலும்அதன்பிறகும் சிறிதுக்கூட குறையவில்லை. வீட்டு பெரியவர்கள் என்னை காயப்படுத்தி பேசினாலும் இவர் முன்னின்று என்னை பாதுகாத்தார்.
குழந்தை தத்துஎடுக்கலாம் என்ற எண்ணத்திலும் என் மாமியார் தீ வைத்து கொழுத்திவிட்டார்.
“உனக்கு வக்கு இல்லையினா வேறொரு பொண்ணை என் மகனுக்கு திருமணம் செய்துவைக்க வேண்டும்,இல்லாட்டி நான் விஷம் குடித்து இறந்துவிடுவேன்” என்று மிரட்ட, என் கணவன் பேச்சை மீறியும் அவருக்கு அவரின் அத்தை மகளையே இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தேன்.
என் செயலை பிடிக்காமல் என்னை திட்டிய என் அப்பா அதே துக்கத்தில் இறக்க, எனக்கு ஒரு கை இழந்ததுபோல் ஆகிற்று.
இரண்டாம் திருமணத்திற்கு பிறகு, நானும் என் கணவனின் இரண்டாம் மனைவியும் ஒன்றாக எங்கள் புகுந்த வீட்டில் வசித்து வந்தோம். எப்போதும் போல் என்னிடம் அன்பாக இருந்த என் கணவன், அந்த பெண் கருவுற்றது தெரிந்ததும் சிறிது சிறிதாக என்னை மறக்க ஆரம்பித்தார்.
நான் ஆரம்பித்திலே எதிர்பார்த்த ஒன்று என்பதால், பொறுபடுத்தாமல் இருந்தேன். நான் அந்த வீட்டில் இருக்கிறேன் என்பதைக்கூட வீட்டிலுள்ள எல்லாரும் மறந்தனர்.
அவளுக்கு குழந்தையும் பிறந்தது, எனக்கே குழந்தை பிறந்ததென மிகுந்த சந்தோசம்கொண்டு அவளுக்கு வேண்டிய பணிவிடைகள் எல்லாம் செய்தேன். இரவுமுழுக்க நான் உறங்காமல் கூட குழந்தையை கவனித்துக்கொண்டேன்.
இந்த நிலையில் அவள் என் கணவனுடன் சண்டையிட்டு அவளின் அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டாள். என்ன பிரச்சனை என்று புரியாமல் என் கணவனை கேக்க, “ நீ இருக்கும்வரை இந்த வீட்டிற்கு வர மாட்டேன் என்று கூறி சென்றுவிட்டாள்” என கூறி, என்னிடம் கெஞ்சி என்னை தனிக்குடித்தனம் வைத்தார்.
பெரிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து, கூட்டு குடும்பத்தில் வாக்கப்பட்டவளை தனியாக ஒற்றை ஆளாக வாடகை வீட்டில் இருக்க வைத்தனர்.
இதனையறிந்து என் அண்ணன் சண்டைக்கு வர, என் கணவனுக்காக அண்ணனை பகைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டேன்.
தினமும் வந்து பார்த்துச்சென்ற கணவன், வாரத்திருக்கு ஒரு நாள் என வந்து சென்றார். இந்நிலையில் அவர் வேலை விஷயமாக சென்னைக்கு செல்ல,அவரின் குடும்பமும் சென்றது.
இப்போது போனில் மட்டுமே நலவிசாரணை நடக்கும், தனிமை தனிமை என இந்த தனிமையே என்னை முற்றிலும் கொன்றது. “ஏன் இந்த வாழ்வு” என்று இரண்டுமுறை தற்கொலைக்கு முயற்சி செய்ய அருகிலுள்ளவர்கள் என்னை காப்பாற்றி விட்டனர்.
என் தற்கொலை முயற்சிக்கு பிறகு, என் கணவன் அடிக்கடி என்னை காண வந்தார். அந்த குழந்தையை என் கண்ணில் கூட காட்ட மறுத்துவிட்டனர். எனக்கு பிறக்கவில்லை என்றாலும் அவள் எனக்கும் குழந்தை தான், என் பெண் தான். அவளுக்கு நான் வாங்கிய ஆடையை இதுவரை கொடுத்ததில்லை, என் பார்வை,மூச்சு காற்று கூட என் பொண்ணுக்கு கேடு என்று என் மாமியார் சொல்லும்போது அவளை பார்க்க வேண்டும் என்ற என் நினைப்பை கைவிட்டேன்.
இதே வாழ்க்கையை ஏற்று ஏதோ விதிக்கு என்று வாழ தொடங்கி 15 வருடங்கள் ஆகியது. இப்போதுகூட பள்ளி விடுமுறைக்கு தன் குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலாக்கு என புறப்பட்டு சென்றவர்கள் அங்கையே ஆறு மாதமாக தங்கிவிட்டனர்.
வாழ்க்கை என்ற சூழலில் ஒருவருக்காக இன்னொருவரை எதிர்த்து பேச, அதுவே என்னை தனிமை படுத்திவிட்டது. என்ன வாழ்க்கை குழந்தை ஒன்று பிறக்காததால் எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா, மலடி என்ற பெயருடன் எல்லாம் இடத்திலும் என்னை தள்ளிவைத்து இழிவுபடுத்தி என்ன கிடைக்க போய்கிறது இவர்களுக்கு…
கணவனுக்கு வாரிசு வேண்டும் என்று தானே என் தாலியையும் படுக்கையும் இன்னொருவளுடன் பங்கீட்டு கொண்டேன். எந்த பெண்ணும் எடுக்காத முடிவை நான் எடுத்து என் பிறந்த வீட்டு ஏச்சு பேச்சுகளுக்கு ஆளாகி, இன்று என்னோட உரிமையில் இன்னொருவள் வாழ்ந்துக்கொண்டிருக்க, நானோ இந்த நாலு அறைக்குள் முடங்கி கணப்பொழுது வேதனையை அனுபவிக்குறேன்.
இன்னும் இந்த நிலை வேண்டாம் என்று மனதிலே எண்ணிக்கொண்டு மெத்தையில் படுத்தவளின் நெஞ்சில் சிறுவலி ஏற்பட, அவ்வாறே கண்ணயர்ந்தவளின் உயிர் மூச்சு நின்றது.