தலைப்பு : தனிமை தந்த பாடம்
தீபா வேலு
தீபா வேலு
அன்று காலை ரகுநாத் பரபரப்பாக அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்தான். அப்பொழுது அவனுக்கு தேவையான காலை சமையல் அனைத்தையும் அவனுடைய மனைவி கமலா முடித்துவிட்டு டேபிளில் கொண்டு வந்து வைத்தாள்.
ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் அவன் மிகுந்த அக்கறை கொண்டு தன்னுடைய மனைவிக்கும் குழந்தைக்கும் என்ன வேண்டும் என்பதில் சரியாகக் கணித்து நேரத்திற்கு தகுந்த வாங்கி கொடுப்பான். அவனின்றி அந்த வீட்டில் ஒரு அணுவும் அசையாது என்று தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான். அப்படித்தான் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருந்தது.
தன்னுடைய மகனுக்கு எப்பொழுது பள்ளிக்கு பணம் கட்ட வேண்டும் வீட்டிற்கு எப்பொழுது கரன்ட் பில் கட்ட வேண்டும் என சகலமும் அவனுக்கு மட்டும்தான் தெரியும். அவளுடைய மனைவி அந்த வீட்டில் ஒரு பொம்மை போல தான். அவளிடம் கேட்டால் யோசனை செய்து அவள் பதில் சொல்வதற்குள் ரகுநாத் சொல்லி விடுவான்.
அதனால்தானோ என்னவோ அவளுடைய மூளை மழுங்கி போய்விட்டது. அவளும் ஒன்றும் படிப்பறிவில்லாத பெண் எல்லாம் கிடையாது திருமணத்திற்கு முன்பு ஐடி துறையில் ஒரு வேலையில் இருந்தாள். திருமணம் ஆன பின்பு குழந்தை என்று ஆனவுடன் வேலையை விட்டு விட்டு வீட்டில் இருந்தாள்.
பின்பு அந்த சூழ்நிலைக்கே அவள் பழகிக்கொண்டாள். கணவனின் இடையறாத கவனிப்பு அவளுக்கு தேவையாய் இருந்தது. அதனால் அவளுடைய வேலையை விட்டு விட்டு தன்னுடைய கணவனுக்கு பணி செய்வதே ஒன்றையே தன்னுடைய வேலையாக மாற்றி கொண்டு வீட்டிலேயே இருந்து விட்டாள்.
ரகுநாத்க்கும் கமலாவிற்கும் திருமணமாகி 15 ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. இருவரும் அன்னியோன்யமாக இருப்பர். சண்டை சச்சரவு கருத்து வேறுபாடு என்றெல்லாம் அவர்கள் வீட்டில் கிடையவே கிடையாது. ரகுநாத் என்ன சொன்னாலும் அதற்கு மறுபேச்சு கிடையாது. அதுதான் அவர்களின் வீட்டில் நடக்கும். தனக்கு என்ன பிடிக்கும் என்பதை எல்லாம் கமலா எப்பொழுதோ மறந்து போய்விட்டாள். தன்னுடைய கணவனுக்கு இஞ்சி டீ பிடிக்கும் அது மட்டும் தான் அவர்கள் வீட்டில் போட வேண்டும். வேறு எதையும் அவள் போடவும் நினைக்க மாட்டாள். போடுவதற்கும் ரகுநாதன் அனுமதிக்க மாட்டான்
அன்று வழக்கம் போல ரகுநாத் ஆபீஸ்க்கு பரபரப்பாக கிளம்பி போனான் போய் விட்டு மாலை வரும் பொழுது தன்னுடைய மனைவிக்கு பிடிக்குமே என்று ஜாதிமல்லி போகும் மகனுக்கு பிடிக்கும் என்று குளோப் ஜாமுன் வாங்கி வந்தான்.
ஆனால் கமலாவிற்கு மல்லிகை பூ தான் பிடிக்கும் தன்னுடைய கணவனுக்காக ஜாதி மல்லி பூவை பிடிக்கும் என்று ஒரு நாள் சொல்லப் போக தினமும் அதுவே அவனுடைய விருப்பமாக இப்பொழுது மாறிவிட்டது
அவர்களின் மகன் அஸ்வினுக்கும் ஸ்வீட் பிடிக்காமல் போய் வெகு நாளாகிவிட்டது. இருந்தாலும் தந்தை வாங்கி வருவதை எப்படி வேண்டாம் என்று சொல்வது என்று குலோப் ஜாமுன் தொடர்ந்து சாப்பிட ஆரம்பித்து விட்டான்.
இப்படித்தான் அவர்கள் வீட்டில் ஒவ்வொன்றும் ரகுநாதன் விருப்பம் மட்டுமே தங்களுடைய விருப்பமாக அந்தக் குடும்பத்தினருக்கு மாறிப்போனது. ஆனால் அவன் அவர்களுக்கு எந்த ஒரு குறையும் வைக்க மாட்டான்.
நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது அவர்களின் திருமண வாழ்க்கை. ஆனால் திடீரென்று ஒரு சோகம் நிகழும் என்று யாருமே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்
ஆம் திடீரென்று ரகுநாத் திற்கு ஹார்ட் அட்டாக் வரவே அந்த குடும்பமே கலங்கிப் போனது 42 வயதில் அவரை முடக்கிப் போட்டு விட்டது அந்த ஹார்ட் அட்டாக். அதிகமாக அட்டாக் வந்தால் மூளைக்கு போகும் ரத்தம் நரம்பு பாதிப்பு ஏற்பட்டு ரகுநாத் ஆல் இருக்கும் இடத்தை விட்டு நகர முடியாத அளவிற்கு பக்கவாதம் வந்து விட்டது. படுத்த படுக்கையாகி போனான் ரகுநாத்
குடும்ப செலவிற்கு என்ன செய்வது என்றே தெரியாமல் திணறி போனாள் கமலா. அதன் பின்புதான் அவளும் வேலைக்கு செல்லலாமா? இல்லை வேறு என்ன செய்வது? என்ற குழப்பத்தில் இருந்தவளுக்கு அவளின் தோழி தான் வழிகாட்டினாள்.
ஒரு சின்ன கம்பெனியில் வேலை வாங்கிக் கொடுத்தாள். ரகுநாத் வேறு வழியில்லாமல் மனைவி வேலைக்கு செல்வதற்கு சம்மதம் தெரிவித்தான். ரகுநாத்தின் தாய் அவர்களுடன் வந்து தங்கி ரகுநாத்தையும் கவனித்துக்கொண்டு வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டார்.
முடங்கிக் கிடந்த கமலா வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். தினமும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தாள். வேலைக்கு செல்ல ஆரம்பித்த பின்புதான் கமலா தன்னுடைய விருப்பங்கள் ஒன்றையும் தனக்கு பிடித்தார் போல் செய்து கொள்ள பழகினாள்.
தினமும் மல்லிகை பூ வாங்கி சாமி படங்களுக்கு வைப்பது இஞ்சி இல்லாமல் டீ போட்டு குடிப்பது. தன் மகனுக்கு பிடித்த காரமான தின்பண்டங்களை வாங்கி கொடுப்பது என்று தனக்குப் பிடித்தது போல் மாற்றிக் கொண்டனர் கமலாவும் அஸ்வினும்.
ரகுநாத் ஒவ்வொரு விஷயத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான். இவர்களா மாறிப்போனார்கள்? இல்லை நாம் தான் மாற்றி விட்டோமா? என்று யோசிக்க ஆரம்பித்தான்.
தனிமையில் இருக்கும்போதுதான் தான் எவ்வளவு தூரம் இவர்களை ஆளுமை செய்து இருக்கிறோம் என்ற உண்மை அவனுக்குப் புரிந்தது.
தினமும் பிசியோதெரபி டாக்டர் வந்து பயிற்சி கொடுக்கவே கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய தனிமையில் இருந்து மீண்டு வந்தான் ரகுநாத். அதன் பின்பு அவர்களின் வீட்டில் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது