தனிமை
அலாரம் கீச்சிட எழுந்த தாரா, சிறிது நேரம் அணைத்து விட்டு உறங்கும் வழக்கம் மாறாமல் அப்படியே கிட்டையில் சாய்ந்த நேரம், " அடியேய் வேலைக்கு போணுமே நேரமாச்சு ஏதாச்சும் அக்கறை இருக்கா எப்போபாரு தூக்கம், அப்புறம் என்னால தான் லேட்டுனு வந்து நிப்ப. ஒழுங்கா எந்திக்க வழிய பாரு", வழக்கம் போல வாங்கும் வசவு தான், வாங்காமல் இருந்தாதான் அவளுக்கு ஆச்சர்யமாய் பொழுது விடியும்.
பரபரத்த காலை வேளையில், பேருக்கென்று இரண்டு இட்லியை விழுங்கி விட்டு சென்றவளை தொடர்ந்து சென்ற தாயின் வசவு, தந்தையின் பார்வையில் நின்று தணிந்தது...
காலை வேளை அன்று மட்டம் போட்ட வானத்தை நோக்கியபடியே, வழக்கமாய் செல்லும் பேருந்தின் இருக்கையை எட்டிப்பார்த்து, தனது விருப்ப இருக்கையை உறுதி செய்து, எப்போதும் உதிர்க்கும் புன்னகையை ஓட்டுனரிடம் உதிர்த்து விட்டு, கண்டக்டர் இருக்கையில் அமர்ந்து ஆசுவாசமாக மூச்சை இழுத்து விட்டபடி காலை நீட்டி மிக ஏதுவாய் உணர்ந்த கணம் வண்டி எடுக்க மிகச் சரியாக அமைந்தது…
சாளரத்தை முடிந்த வரை பின்னுக்கு தள்ளி, காலணியை கழட்டி விட்டு, வண்டி போகும் போக்கில் மேகம் தன்னோடு பயணிப்பதை இந்த வயதிலும் பிரம்மை பிடித்த போல் பார்ப்பது விட்டபாடில்லை என்று எண்ணி முடிக்கும் முன்னரே ஒரு துளி மழைநீர் அவள் மீது பட்டு, தன் வரவை அவள் மூலம் தெரிவிக்க, டிக்கெட்டை எடுத்து முடித்து திரும்புகையில், சாலையில் ஏதோ ஒரு நாய்க்குட்டி மீது வண்டி இடிக்க போகும் முன்னரே "ம்மா" என்று கண்களை இறுக மூடிக் கொண்டவள், ஒற்றைக்கண் விட்டு மெலிதாய் திறந்து பார்க்க, " அப்பாடா ஒன்னும் ஆகல" என நிம்மதி பெரு மூச்சு விட்டாள்...
வழி நெடுக்க ஏறிய மக்களின் அதற்கே உரிய பேருந்தின் வாசத்தினூடே, மெல்லிய 90களின் பாடல் ரீங்காரமிட்டு கொண்டிருக்க, மேகத்தின் மழைத்துளி யோடு வலசை செல்லும் பறவையை ரசித்த படியே பயணிக்கையில், வேண்டாத விருந்தாளியாய், மனம் அழைக்காமலேயே அந்த ஏகந்ததை விட்டு நிரப்பிய பழைய கசப்பான நினைவுகள் எட்டி பார்த்திட, அத்துணை கண நேரம் இருந்த மகிழ்வனைத்தும் நிமிடத்தில் மேனியை சிலிர்த்திட செய்தது. மழையை காட்டிலும் குளிர் அவளை பதம் பார்த்திட, அரை பாட்டில் தண்ணீரை குடித்து முடித்ததும் குளிருக்கு அடைக்கலம் தேடி, தாயின் மடியை தேடும் பறவைபோல அவள் முகம் உரசி அந்த மழை அவளை அரவணைத்து கொண்டது. கவிதைக்காரிக்கு அக்கணமே ஒரு கவிதை எட்டி பார்த்திட, கற்பனைக்கு உருவம் தீடிட்ட மனம் வார்த்தைகளை குத்தகைக்கு எடுத்தது,
*என் தேகம் தொட்டு முத்தமிட்டு செல்லும் உனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை- என்னவன் இதை பார்க்கவில்லை* என
மழைத்துளிக்கு கவிதையோடு மெய் காதலை தேடியலைந்த அம்மனத்தை உணர்த்திய ஒரு நிமிடம் வரைக்கும் அம்முகம் வரிகளின் காதலிலேயே நின்று முகம் நிரம்ப வெட்கம் பூசி நின்றது....வயக்காட்டின் பசபசப்பு கண்ணுக்கும் இதமளிக்க விழியும் சிரித்து களித்தது...
தனிமையின் தனக்கான பொழுதை ரசித்து,ரசித்து கடந்த தாராவிற்கு அடுத்த பேருந்து நிலையம் அவள் இறங்க வேண்டியது என நினைத்தப்போது, பயணத்தூரத்தின் மேல் கோவம் பொத்துக்கொண்டு வந்தது...
இன்னும் நீண்டிருக்கலாமே என எண்ணிக்கொண்டே திரும்பியவளை நோக்கி, வெள்ளந்திப் புன்னகை விடுத்து , முளைத்தும் , முளைக்காத பல் தெரிய சிரித்த சின்னஞ்சிறு மதலையை பார்த்ததுமே அதரங்கொள்ளா புன்னகையை படர விட்டப்படியே இறங்கச்சென்றாள் தாரா...மனம் ஏனோ லேசானதை உணர்ந்தப்படியே...