தனிமை
அழகான காலை பொழுது, ஆதவன் செங்கதிர்கள் பூமியை மெல்ல முத்தமிட. கதிரவனின் காதலில் மொட்டவிழ்ந்த மலர்கள் அந்த வீட்டினை அலங்கரிக்க. வீட்டிற்குள் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது.
"ஏம்மா இப்படி பண்ற. எத்தனை முறை சொல்லுறது. காலையில இந்த பாட்டை போட்டு கொடுமை பண்ணாதீங்க", என்று மலரின் மகன் ஆதர்ஷ் அந்தப் பாடலை நிறுத்திவிட்டு தனக்கு பிடித்த புது பாடலை ஒலிக்கவிட்டான். பி.பி.ஏ, இரண்டாம் ஆண்டு படிக்கும் வீட்டின் செல்ல மகன்.
"அம்மா நான் குளிக்க போறேன். எனக்கு லஞ்ச் ரெடி பண்ணு. டைம் ஆகுது", என்று சொல்லிக்கொண்டே குளிக்கச் செல்லும் மதுமிதா. பி.ஏ, ஆங்கிலம், முதலாம் ஆண்டு கல்லூரி செல்லும் கடைக்குட்டி.
"வேலைக்கு கிளம்பனும். எனக்கு டிபன் எடுத்து வை. இன்னும் என்ன பண்ற", என்று கடிந்து கொண்டு வரும் கணவர் முத்து.
வீட்டின் குடும்பத் தலைவி மலர், சமையலறையில் பம்பரமாக சுழன்று கொண்டிருந்தார். தனது கணவர், மகன், மகள் மூவருக்கும் மதிய உணவை தயார் செய்து எடுத்து வைத்து விட்டு, காலை உணவை அனைவருக்கும் டைனிங் டேபிளில் ஒருபுறம் எடுத்து வைத்துக் கொண்டிருக்க. இதற்குள் தண்ணி கேன் கொடுக்கும் பையனின் குரல் வெளியிலிருந்து கேட்டது. அவசரமாக சென்று அதை உள்ளே வைக்கச் சொல்லிவிட்டு அதற்கு பணம் கொடுத்து அனுப்பினார்.
"என்னங்க ஈபி பில் கட்டணம். நேத்தே சொன்னேனே. இன்னைக்கு கடைசி தேதி", என்று கூற.
"அதற்கு எல்லாம் எனக்கு நேரம் இல்ல. வீட்ல நீ வெட்டியா தான இருக்க. போய் கட்டிட்டு வா!", என்றார்.
"அம்மா இன்னைக்கு காலேஜ் ஃபீஸ் காட்டியே ஆகணும்னு நேத்தே சொல்லிட்டு போனேன்", என ஆதர்ஷ் கேட்க.
மலர் தனது கணவரின் முகத்தைப் பார்த்தார்.
"என்னப் பார்த்தா நா மட்டும் என்ன ஏடிஎம் மெஷினா? வெளியே கடன் கேட்டு இருக்கேன். இரண்டு ஒரு நாள் போகட்டும். காலேஜ்ல ஏதாவது சொல்லி சமாளி", என்று கூறியவர், தனியார் கம்பெனில அக்கௌன்டண்டுக்கு என்ன அம்பதாயிரமா சம்பளம் தராங்க. ஏதோ குடுக்கறத வச்சி காலத்த ஓட்ட வேண்டி இருக்கு.
"இதற்குள் மதுமிதாவின் குரல். அம்மா, என்னோட ப்ளூ கலர் சால்வ் வந்து எடுத்து கொடு", என்று குரல் கொடுக்க.
"இதோ வரேம்மா", என சொல்லிக்கொண்டே அதை தேடி எடுத்துக் கொடுத்துவிட்டு வந்தார். "முத்து சாப்பிட்டுக் கொண்டிருக்க. என்னங்க. ஒரு விஷயம் உங்க கிட்ட கேக்கணும்", என்று மெதுவாக தனது மனதில் இருந்த ஆசைக்கு அடிபோட வார்த்தைகளை தேடினார்.
என்ன ஃபீஸ் தானே. அதான் கட்டலாம்னு சொல்லிட்டேனே.
அது இல்லங்க. அது வந்து...
ஹவுஸ் ஓனர் வந்தாரா? வாடகை தான. சரி பண்ணிக்கலாம்.
அது இல்லங்க.
"இன்னும் வேற என்ன சொல்லித்தொல. நேரம் ஆகுது", என்று கூற.
"பிரபல இதழில் இருந்து கதை எழுத ஒரு போட்டி அறிவிப்பு கொடுத்து இருக்காங்க. அதுல கலந்துக்கனும்னு ஆசை", என்று தயங்கித் தயங்கி கூற.
"பிள்ளைங்க ரெண்டும் காலேஜ் போகுது. உனக்கு கழுத வயசாகுது. இதுக்கு மேல நீ கதைய எழுதி சம்பாதிச்சி தான் நான் குடும்பம் நடத்தப் போறேனா?. போய் இருக்கிற வேலையை பாரு. சும்மா கடுப்பக் கெளப்பாத", என்று கூறினார்.
மலர் எதுவும் பேசாமல் மௌனமாக நிற்க.
"என்னோட லஞ்ச் பாக்ஸ் எடுத்து வைம்மா. தண்ணீர் பாட்டில் எங்கம்மா", என்று கூறிக்கொண்டே மதுமிதா வர.
"நீ சாப்பிடு. நான் எடுத்து வைக்கிறேன்" என்று கூறிக் கொண்டே தனது பிள்ளைகளின் தேவைகளை எடுத்து வைத்துவிட்டு அவர்களுக்கும் காலை உணவை பரிமாறிக் கொண்டிருக்க.
"இதற்குள் சாக்கடை அடைப்பு, பைப்ல தண்ணி வரலனு ஹவுஸ் ஓனர்கிட்ட கூறி இருக்க. அவர் ஆள் அனுப்பி வைத்திருந்தார். நீங்க சாப்பிடுங்க", என்று கூறிவிட்டு அவர்களை கவனிக்கச் சென்றனர்.
"அம்மா காலேஜுக்கு டைம் ஆகுது. கிளம்பறேன்", என்றான் ஆதர்ஷ்.
"டேய்! நில்லுடா", என்று கூறிவிட்டு கல்லூரிக்கு பணம் கட்ட கொண்டு வந்து கொடுத்தார்.
"அப்பா இல்லைன்னு சொன்னாங்க", என்று கேட்க.
"அதெல்லாம் நான் பாத்துக்குறேன். இந்தா நீ கிளம்பு", என்று அவனது கையில் பணத்தைக் கொடுத்து அனுப்பி வைத்தார்.
மதுமிதா அவசரமாக பையை எடுத்துக்கொண்டு அவள் ஒரு பக்கம் கிளம்பினாள்.
"சாக்கடை அடைப்பை சரி செய்து விட்டு கிளம்ப ஹவுஸ் ஓனரிடம் மலர் கால் பண்ணி விஷயத்தை கூறி விட்டு, துணி துவைக்க, பாத்திரம் கழுவ" என்று மற்ற வேலைகளை முடித்து அவர் சாப்பிட அமரும் போது மணி பதினொன்றைத் தொட்டிருந்தது.
"மலருக்கு ஏனோ அனைவரும் இருந்தும் தான் தனிமையாக இருப்பதைப் போன்ற உணர்வு தான் மனதிற்குள் இழையோடியிருந்தது. சாப்ட்டியானு அன்பா கேட்க கூட யாரும் இல்லை. வேலை செய்யற ஒரு மிஷினாக தான் நம்மள பாக்கறாங்க. எனக்கும் உணர்வுகள் இருக்குனு ஏன் இவங்க யோசிக்கல. அவள் மேல் யாரும் அக்கறை காட்டவில்லையே", என்ற ஏக்கம் மேலோங்கி இருந்தது. தான் தனிமையாக இருப்பதைப் போன்ற உணர்வு அவளுக்குள் எப்போதும் இருந்தது. இந்த தனிமை எனும் நோயை நீக்க அவள் எடுத்த முடிவுதான் எழுத்து எனும் மருந்து. "மலர் போட்டிக் கதைக்கு எழுதுவது", என்று முடிவெடுத்து எழுதத் தொடங்கியிருந்தார். அவள் கூறுவதைக் காது கொடுத்துக் கேட்கக் கூட யாரும் தயாராக இல்லை என்பது அவளுக்குள் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியது.
"அன்று மாலை முத்து மிகவும் சோர்வோடு வந்தார். இன்னும் எத்தனை நாட்கள் இந்த கஷ்டமோ?", என வருந்தியபடி ஓய்வெடுக்கச் சென்றார். "பிள்ளைகள் இருவரும் மாலை வந்தால் செல்போன், படிப்பு, நண்பர்கள்", என நேரத்தை கடத்தி விட்டு உறங்கச் சென்று விடுவார்கள். இப்படியே நடுத்தரமான வாழ்க்கையோடு நாட்கள் நகர.
ஒருநாள் ஒரு நாள் அதிகாலை பம்பரமாகச் சுழலும் மலர், ஆறுமணி ஆகியும் எழ முடியாமல் படுத்து இருந்தார்.
"அம்மா சமைக்கலையா? நேரம் ஆகுது" என்று பிள்ளைகள் குரல்.
"என்னடி. நேரமாவுது இன்னும் படுத்து இருக்க. எப்படி வேலைக்கு போறது", என்று முத்துவின் குரல்.
மலரால் அசையக்கூட முடியாத அளவு கடுமையான காய்ச்சல், தலைவலி. கண்களைத் திறக்க முடியாமல் படுத்து இருக்க. மணி ஏழைத் தொட்டிருந்தது.
"அப்பொழுது தான் முத்து வந்து மலரைத் தொட்டுப் பார்க்க. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஊசி போட்டு மாத்திரைகளை வாங்கி வந்து வீட்டில் விட்டார்.
"பிள்ளைகள் காலை உணவு, மதிய உணவு என்ன செய்வது" என்று தெரியவில்லை. "சமையல் கட்டிற்குள் வந்து இதுவரை வந்து சின்ன வேலைகளை கூட மலரோடு யாரும் பகிர்ந்து கொண்டதில்லை. அன்று எல்லாமே இவர்களுக்குப் புதிதாகத் தோன்றியது. மூன்று வேலையும் ஹோட்டலில் வாங்கியும் சாப்பிட முடியாத குடும்ப சூழ்நிலை. அன்று அனைவருமே விடுமுறை எடுத்துவிட்டு யார் எந்த வேலையை செய்வது", என்று சண்டையிட்டனர். "மளிகை பொருட்கள் சிலது இல்லை", என்று மகனை வாங்கி வரச் சொல்ல.
"ஆதர்ஷ் பணம் எடுப்பதற்காக பீரோவை திறந்தான். அப்போதுதான் அங்கு இருக்கும் தனது அம்மாவின் டைரியைப் பார்த்தான். அதை திறந்து பார்க்க டைரியின் முதல் பக்கத்திலேயே 'தனிமையின் வலி' அதன்கீழ் மலர்", என்று எழுதப்பட்டிருந்தது. உள்ளே திறந்து பார்க்க. ஒவ்வொரு வரிகளும் தாயின் கண்ணீரால் எழுதப்பட்டிருந்தது. முதல் வரியிலேயே "அனைவரும் இருந்தும் தனிமை எனும் வலியால் தவிக்கும் சிறைப்பறவை" என்ற வரிகள் அவனுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. ஒவ்வொரு வரிகளையும் படிக்கப் படிக்க கண்ணீர் தானாக வந்தது. அப்போது அங்கு வந்த முத்துவும், மதுமிதாவும் என்னவென்று கேட்க. அந்த டைரியைக் காட்டினான்.
அப்போது தான் இவர்கள் தாங்கள் செய்த உணர்ந்தார்கள். அம்மாவின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் எவ்வளவு சுயநலமாக இருந்துட்டோம். ஒரு நாள் கூட அம்மாவோட பக்கத்துல உட்கார்ந்து அன்பா பேசல. அவங்கள சாப்ட்டியானு கேட்டதில்ல. அவங்களுக்கு பிடிச்ச விஷயங்களை பகிர்ந்துக்கல. அது இவ்வளவு வலி கொடுக்கும்னு நினைக்கவே இல்ல என்பதை மூவரும் உணர்ந்தார்கள்.
"அப்பொழுது வெளியில் போஸ்ட்மேன் வர. தபாலை முத்து வாங்கிக்கொண்டு வந்து பிரித்துப் பார்க்க. மலர் போட்டிக்கு எழுதிய தனது நாவலான "மென் தீயாய் ஒரு காதல்" முதல் பரிசு வாங்கியதற்கான பாராட்டுச் சான்றிதழ் வந்திருந்தது. அவரின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய. மனமோ கூனிக் குறுகியது. அன்னைக்கு அவ எழுதறேனு சொன்னப்போ நான் அப்படி கேவலமா பேசிட்டேன். மலருக்குள் இத்தனை திறமைகள் ஒளிஞ்சிருக்கா?", என்று ஆச்சரியத்தில் அப்படியே நிற்க.
ஆதர்ஷீம், மதுமிதாவும் வாங்கிப் பார்த்தனர். மகிழ்ச்சியுடன் மூவரும் மலரிடம் சென்று நிற்க.
"மலர் அவர்கள் கண்களில் தெரிந்த மகிழ்ச்சியைப் பார்த்து என்ன இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்க", என்று கேட்க.
"அந்த பாராட்டுச் சான்றிதழைக் காட்ட. மலரின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தனக்கு கிடைத்த முதல் வெற்றி", என்று விழிகளில் ஆனந்தக் கண்ணீர் வழிய.
"தனிமைய ஒரு துன்பமா நினைக்காம அதையும் உன்னோட வெற்றியா மாத்திட்டியே. உன்னோட தனிமைய உணர முடியாத ஒரு உயிரற்ற ஜடமா உன்கூட வாழ்ந்திருக்கிறேனே. என்ன மன்னிச்சிடு மலர். உனக்குள்ள இருக்க தனிமைய நாங்க புரிஞ்சுகிட்டோம். இனிமேல் சத்தியமா நாங்க உனக்கு அந்த வலிய கொடுக்க மாட்டோம். ஆனா அந்த தனிமை தான் உன்னோட திறமையை இப்போ எங்களுக்கு காட்டிக்கொடுத்து இருக்கு. எழுத்துல பெரிய அளவில வளர நாங்க உறுதுணையாய் இருப்போம்", என்றவர் மலர் எழுதிய அந்த டைரியை அவள் கையில் வைக்க.
மலர் அவர்களைப் பார்த்து, உங்களோட அன்புக்கு ஏங்கினேன். அது கிடைக்காம அழுதேன். அந்த துன்பத்தைப் போக்க தான் எழுதத் தொடங்கினேன். ஆனால் அந்த தனிமை தான் இன்னைக்கு எனக்கு மிகப்பெரிய வாழ்க்கைப் பாதையை அமைச்சிக் கொடுத்திருக்கு. நானும் ஒரு எழுத்தாளரா உருவாக காரணமா இருக்கு. துன்பத்தையே இன்பமாக மாற்றும் மந்திரம் நம்ம கையில தான் இருக்கு என்றாள்.
இனி மலரின் வாழ்வில் தனிமைக்கு இடமில்லை.
தனிமை என்பது தனியாக வாழ்வது மட்டுமல்ல. நம்முடைய உணர்வுகளை நம் சுற்றங்கள் புரிந்து கொள்ளாமல் உறவுகளுடனே இருந்தும் நாம் தனித்து விடப்படுவதும் தனிமையே. தனிமையை தகரத்தெறிந்து இன்பமெனும் சிகரம் தொடு.
வாணி அரவிந்த்