கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தன்னந்தனிமையிலே...சுஜாதா நடராஜன்

Latha S

Administrator
Staff member
தன்னதனிமையிலே…...





புலரும் காலை பொழுதை


முழுமதியும் பிரிந்து போவதில்லையே…



என்ற மெல்லிசை மணியடிக்க உறக்கம் கலைந்து எழுந்தார் சதாசிவம். கைப்பேசியை எடுத்து ஒலிக்கும் மணியை நிறுத்தியவர்… தன்னருகே புரண்டு படுத்த இல்லாளை பார்த்தார். உதட்டில் இளநகை அரும்ப… அவர் கன்னம் வருடி.. "தேவிம்மா எழுந்திரிம்மா.. டைமாகுது. " என்றார்.



"இன்னிக்கு நான் வரல.. நீங்க போயிட்டு வாங்க. " என்று முணுமுணுத்த தேவி தன் உறக்கத்தை தொடர்ந்தார். அவரோ.. " உன்னை எப்படி எழுப்பனும்னு எனக்கு தெரியுமே. " என்று கூறிவிட்டு குளியலறை சென்று முகம் கழுவி வந்தார். அடுக்கலை சென்று காபி போட்டவர்.. அதை இரண்டு டம்ளர்களுக்கு மாற்றி எடுத்துவந்தார்.



அதில் ஒரு டம்ளரை உறங்கும் இல்லாளின் மூக்கில் நுகரும் படி வைக்க.. அந்த வாசம் தந்த உற்சாகத்தில் மெல்ல கண்திறந்தார் தேவி. "தினமும் காலையில் கசாயம் மாதிரி காபி போட்டு எழுப்பறதையே வேலையா வெச்சிருக்கீங்க. இன்னிக்காவது உங்களை துரத்திவிட்டுட்டு நல்ல காபி போட்டுக்குடிக்கலானு இருந்தேன். " என்று அலுத்துக்கொண்டே முகம் கழுவி வந்தார் தேவி. இருவரும் ஒருவரை ஒருவர் ரசித்தபடியே காபியை பருகி முடித்தனர்.



பின் சதாசிவம் ஒரு மஃப்புளரை எடுத்து தேவியின் தலையில் கட்டிவிட்டு…ஒரு சிறிய கம்பளியை எடுத்து தன் தோள்மீது போட்டுக்கொண்டார். இருவரும் ஒருவர் கரத்தில் மற்றோருவர் கரம் கோர்த்தபடியே வீட்டைவிட்டு வெளியே வந்தனர். அவர்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வளாகத்தில் உள்ள பூங்காவை நோக்கி நடக்கத்தொடங்கனர்.



அவர்கள் பூங்காவை அடைந்த போது.. ஆதவன் தன் ஒளிச்சுடரை புவி மகளை நோக்கி மெல்ல படரவிட ஆரம்பித்திருந்தான். அவர்கள் தான் எப்போதும் அந்த பூங்காவிற்குள் நுழையும் முதல் ஜோடிகளாக இருப்பர். பூங்காவை ஒரு வளம் வந்துவிட்டு அங்கிருந்த சிமின்ட் பெஞ்சில் இருவரும் அமர்ந்தனர். அப்போது நிறைந்த வயிருடன் கர்ப்பிணி பெண் ஒருத்தி கைகளில் டைரியுடன் அங்கே வந்தாள்.



"குட் மார்னிங் " என்றாள் இருவரையும் பார்த்து.



"குட் மார்னிங் நிதி.. எப்படி இருக்க. நேத்து நீ வாக்கிங் வரலனதும் உடம்புக்கு ஏதும் ஆகிட்டுச்சோனு பயந்துட்டேன். " என்று படபடத்த தேவி அவள் அருகே சென்று நின்றார்.



"உடம்புக்கு ஒன்னுமில்லை ஆன்ட்டி. மனசு தான் சரியா இல்லை. நேத்து எல்லையில் பதற்றம்னு நியூஸ் வந்ததா.. அதுதான் லிட்டில் டென்ஷன். "



"அப்படியா ? உன் வீட்டுக்காரர் பேசினாரா நிதிம்மா ? " என்று அக்கறையான குரலில் கேட்டார் சதாசிவம்.



"நேத்து நைட்டு தான் போன் வந்தது அங்கிள். இப்போ எல்லாமே இயல்பா இருக்காம். பயப்படாம இருக்க சொன்னார். " என்றாள் நிம்மதியான புன்னகையுடன்.



"கவலைப்படாதே நிதிம்மா… உன் குழந்தை பிறக்கும் போது உன் கணவர் உன் பக்கத்துல தான் இருப்பார். " என்று அவளுக்கு தைரியம் தந்தார் தேவி.



அவளும் புன்னகையில் தன் நன்றியை உதிர்த்துவிட்டு பூங்காவை வளம் வரத்தொடங்கினாள். அப்போது அவள் கையில் இருந்த டைரியில் இருந்து ஒரு காகிதம் கீழே விழுந்தது.. அதை எடுத்த சதாசிவம் வாசித்து பார்த்தார்.



"நொடிகள் எல்லாம் யுகங்களாக கழிய.. கிழக்கில் தோன்றிய சூரியன் மேற்கில் மறைய.. இருள் சூழ்ந்து இரவும் வந்துவிட்டது.. ஆனால் உன் நினைவால் வாடும் என் மனதிற்கு ஏற்ற சேதி இன்னும் வரவில்லை. மனமெல்லாம் படபடக்க.. தொலைகாட்சி பெட்டியையே வெறித்துக்கொண்டு இருக்கிறேன். கைப்பேசியை நொடிக்கொரு முறை இயக்கி பார்க்கிறேன். ஏன் உன் அழைப்பு வரவில்லை என்று. கருவில் இருக்கும் நம் சிசு கூட… இன்று என்னை தொல்லை செய்யவில்லை. உன் குரல் கேட்கவே அவனும் காத்திருக்கிறான். விரைந்து அழைத்துவிடு அன்பே. " என்ற வார்த்தைகள் அதில் எழுதப்பட்டிருந்தது.



"என்னங்க இது ? "



"நிதியோட தனிமையின் தவிப்பு. " என்றார் சதாசிவம்.



"அப்படியா ? சரி.. நிதி திரும்பி இந்தபக்கம் வரும்போது கொடுத்திடலாம். " என்ற தேவி யாரையோ எதிர்பார்ப்பது போல பூங்காவின் முகப்பையே பார்த்த வண்ணம் இருந்தார்.



"யாரை எதிர் பார்த்துகிட்டு இருக்க தேவிம்மா. "



"நம்ம சீனுவைதான். நேத்து லேசா ஜுரம் அடிக்குதுனு சொன்னான். அதுதான் எப்படி இருக்கானோனு யோசனையா இருக்கு. " என்றவர் முகத்தில் புன்னகை அரும்ப.. "அதோ வந்துட்டான். " என்றார்.



"ஹாய் , கியூட்டி பை கபுல்ஸ். குட் மார்னிங். " என்றான் வந்தவன்.



"சீனு.. உடம்பு பரவாயில்லையாப்பா. " என்று அக்கறையுடன் வினவினார் தேவி.



"ம்.. இப்போ ஓகே தான் தேவி ஆன்ட்டி. நீங்க சொன்ன கசாயத்தை டிரைப்பண்ணினேன். அதுதான் புல்எனர்ஜியோட காலை வாக்கிங் வந்துட்டேன். "



"இவ சொன்ன கசாயத்தை குடிச்சா.. உனக்கு குணமாச்சி ? என்ன ஒரு அதிசயம் ? " என்றார் சதாசிவம் கேலியான குரலில்.



"எஸ்.. ஓல்டு மேன். ஆன்ட்டிக்கிட்ட.. நல்ல நல்ல ஹோம் ரெமிடி எல்லாம் இருக்கு. கூடிய சீக்கிரம்.. ஆன்ட்டியோட ரெமிடீஸை எல்லாம் என் யூடியூப் சேனலில் போட்டு.. ஆன்ட்டியை பேமஸ் ஆக்கறேன். அதுக்கு அப்புறம் நீங்களே.. அவங்க அப்பாய்ன்மென்ட் கேட்டு அழைவீங்க. " என்றவன் புன்னகையுடன் கூறிவிட்டு நகர்ந்தான்.



"ம்ஹூம்.. அப்பா அம்மாவை விட்டுட்டு இங்க தனியா கஷ்டப்படறான். காய்ச்சல்னா கூட கவனிக்க ஆள் இல்லை. இயந்திரம் மாதிரி எழுந்து குளிச்சி தயாராகி ஆபீஸ் போய் சாப்பிட்டும் சாப்பிடாம வெறுமையோட வாழ்றான். " என்று அவனை நிலையை நினைத்து சேர்வாக கூறினார் தேவி.



"எல்லாம் காலம் செய்யும் கோலம் தேவி. வேலைங்கற பேரால குடும்பத்தை விட்டு தனிமையில் வாடனும்னு இருக்கு. " என்றவர் எதேர்சையாக திரும்ப… அவர் எதிரே இருந்த சிறுவர் விளையாட்டு பூங்காவில் தெரிந்த முகம் கண்டு பிரகாசித்தார்.



"தேவிம்மா… அகிலன் குழந்தையோட வந்திருக்கான். வா போய் பேசிட்டு வரலாம். " என்றுபடியே தேவியை கைப்பிடியாக பிடித்து அழைத்துச்சென்றார் சதாசிவம்.



"அகிலன்.. எப்படிப்பா இருக்க ? ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து. " என்று கேட்டபடியே தன்னை நெருக்கும் சதாசிவத்தை புன்னகையுடன் எதிர்க்கொண்டான் அகிலன்.



"நல்லா இருக்கேன் அங்கிள். பாப்பாவுக்கு பனி ஒத்துக்கல. அவளை தனியா வீட்டுல விட்டுட்டு நான் மட்டும் இங்க வாக்கிங் வர தோனல. அதுதான் இத்தனை நாளா வரல. இன்னிக்கு கொஞ்சம் வெயில் வந்த மாதிரி இருந்துது. சரி கொஞ்சம் நேரம் இருந்துட்டு வரலானு தோனிச்சு. பாப்பாவும் சீக்கிரமா எழுந்துட்டாளா.. அதுதான் வந்துட்டோம். " என்றான் அகிலன் புன்னகை மாறாமல்.



அவனுடன் சில நிமிடங்கள் பேசிவிட்டு.. மீண்டும் வந்து சிமின்ட் பெஞ்சில் அமர்ந்தனர் இருவரும். "துணை வேண்டிய நேரத்தில்.. இப்படி துணையை இழந்துட்டு தனியா நிக்கறானே.. " என்றார் தேவி வேதனையான குரலில்.



"என்ன தேவி…. காலையிலையே இரண்டு பேரும் ஜோடி போட்டுக்கிட்டு வந்துட்டீங்க போல. " என்றபடியே வந்தார் மரகதம்.



"ம்.. ஆமாம். இந்த மனுசன் தினமும் கசாயம் மாதிரி காபியை தந்து கூட்டிக்கிட்டு வந்துடறாரு. உனக்கு தான் அந்த மாதிரி தொல்லை இல்லையே. நிம்மதியா இருக்க. " என்ற தேவியின் குரலில் கேலியில்லை.. அதற்கு மாறாக வருத்தமே மேலோங்கி இருந்தது.



"ஆமாம் ஆமாம்… ஒரு தொல்லையும் இல்லை. அந்த மனுசன் இருந்த வரை… இதை ஏன் செய்யல.. அது ஏன் அப்படி இருக்கு.. சாப்பாட்டு நல்லா இல்ல.. இப்படி நொய் நொய்னு ஏதாவது சொல்லிக்கிட்டே தான் இருப்பாரு. இப்போ தொல்லை இல்லாம நிம்மதியா இருக்கேன். " என்ற மரகதத்தின் குரல் லேசாக கமறியது.. அப்போது அவரின் ஆறு வயது பேரன்… "பாட்டி வாங்க விளையாடப்போகலாம். " என்று கைப்பிடித்து இழுத்துச்சென்றான். அவரும் தேவியிடம் புன்னகையுடன் தலையசைத்து விடைப்பெற்றார்.



மரகதத்தின் தனிமையை எண்ணி தேவியின் கண்கள் பணித்து.. இருதுளி நீர் எட்டிப்பார்த்தது.



"சரி வா கிளம்பலாம். " என்று சதாசிவம் அழைக்க அவரோடு இல்லம் நோக்கி நடக்கத்தொடங்கினார் தேவி. இருவரும் பூங்காவின் முகப்பை அடைந்த சமயம்… ஒரு பெண் இவர்களை கடந்து உள்ளே போனாள். அவள் யாருடனும் இதுவரை பேசியது இல்லை. அவளுக்கு சொந்தம் பந்தம் ஏதும் இல்லை… அனாதை ஆசிரமத்தில் வளர்ந்தவள் என்று பக்கத்து வீட்டினர் சொல்லி கேட்டிருக்கின்றனர் இருவரும்.



"ஏங்க.. பேசக்கூட யாரும் இல்லைங்கற நினைப்பு அந்த பொண்ணுக்கு இருக்கும்னு நினைக்கறேன். அதுதான் இப்படி முகமெல்லாம் வெளிரிப்போய் இருக்கு. நாம நாளைக்கு இந்த பெண்ணுகிட்ட பேசனும். பேசினா… அவ கொஞ்சம் நல்லபடியா இருப்பானு தோனுது. " என்றார் தேவி.



"பேசுவோம் தேவி. நாளைக்கே பேசுவோம். " என்ற சதாசிவம் தேவியின் கரத்தை பற்றியபடியே இல்லம் நோக்கி நடந்தார்.



எட்டு மணி அடிக்க… கைப்பேசியையே வெறித்தபடி அமர்ந்திருந்தனர் இருவரும். எட்டு பத்துக்கு கைப்பேசி அலற.. உற்சாகத்துடன் எடுத்து பேசினர் இருவரும்.



பேசியது வேறு யாரும் இல்லை இவர்களின் மகனும் அவன் குடும்பமும் தான். பத்து நிமிட உரையாடலுக்கு பிறகு அழைப்பு துண்டிக்கப்பட்டது. ஒரு நெடிய மூச்சை இழுத்துவிட்டபடியே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். சிறுவயதில் இருந்து கைக்குள்ள வைத்து வளர்க்கப்பட்ட மகன் இப்போது… கண்ணுக்கு எட்டாத்தொலைவில் குடும்பத்துடன் இருக்க… வாரம் ஒரு முறை அழைக்கும் அவன் அழைப்புக்காக… வாரமெல்லாம் காத்திருக்கின்றனர் இருவரும்.





எழுத்து

சுஜாதா நடராஜன்.
 
Top