கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தன்னல தனிமை - நர்மதா சுப்ரமணியம்

தலைப்பு - தன்னல தனிமை

எழுதியவர் - நர்மதா சுப்ரமணியம்


மனதின் வலி கண்களில் பிரதிபலிக்க, கண்களில் நீர் குளமாய்ச் சூழ்ந்திருக்க, குற்றவுணர்வுடன் பெங்களூரிலிருந்து சென்னைக்கு அந்தப் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தாள் சுகமதி.


பேருந்து முன்னோக்கி சென்று கொண்டிருக்க இவளின் நினைவுகள் பின்னோக்கி பயணித்தது.


ஹைத்ராபாத்தில் இரு வருடங்களாய் வேலை பார்த்திருந்தவள் சென்னைக்குப் பணியிட மாற்றம் பெற்று இரு மாதங்களாகியிருந்த நாட்களது.


"அடியே மதி! எடுத்த பொருளை எடுத்த இடத்தில வைனு எத்தனை நாள் சொல்றேன் கேட்கிறியா நீ? குளிச்சிட்டுத் துண்டை அப்படியே கட்டில்ல போட்டுடுறது. மேக்கப் செய்றேன்னு எல்லாத்தையும் டிரஸ்ஸிங் டேபிள்ல பரப்பிவிட்டுட்டு நீ பாட்டுக்கு கிளம்பி போயிடுற! நீ ஆபிஸ் போன பிறகு நான் தானே எல்லாத்தையும் சுத்தம் பண்ணனும். காலைல சீக்கிரமா எழுந்திரிச்சு அம்மாக்கு கூட மாட உதவி செய்யலாம்னு என்னிக்காவது நினைச்சிருக்கியா நீ! நல்லா இழுத்து போர்த்திட்டு தூங்க வேண்டியது. நீயெல்லாம் என்னத்த தனியா இருந்து சமைச்சு சாப்பிட்டு வேலை பார்த்தியோ" சுகமதியை பொறிந்து தள்ளி கொண்டே வீட்டு வேலையைச் செய்து கொண்டிருந்தார் சுகமதியின் தாய் லட்சுமி.


ஹைத்ராபாத்திலிருந்து வந்த நாளிலிருந்து அவளது அன்னையிடம் அவள் கேட்டுக் கொண்டிருக்கும் வசைமொழி இது. அங்கு இருக்கும் போது எப்போதடா சென்னைக்குச் சொல்வோம் எனக் காத்திருந்தவளுக்கு இப்பொழுதெல்லாம் ஏனடா சென்னைக்கு மாறுதலாகி வந்தோம் என மனம் பொரும ஆரம்பித்திருந்தது அவரின் இந்த இடைவிடா வசை மொழியில்.


இவ்வசையைச் சற்று நேரம் அமைதியாய் கேட்டிருந்தவளின் பொறுமை காற்றில் பறக்க, "ம்ப்ச் என்னம்மா வேணும் உனக்கு? இத இங்க வைக்காத அத அங்க வைக்காதனு நை நைனுட்டு! ஹைத்ராபாத்லலாம் கேள்வி கேட்க ஆளில்லாம நான் பாட்டுக்கு விருப்பப்பட்ட நேரம் சமைச்சு சாப்பிட்டு தூங்கிட்டுனு இருந்தேன். இங்க வந்ததுலருந்து நைட் லேட்டா தூங்காத, காலைல லேட்டா எழுந்திருக்காதனு ஆயிரத்தெட்டு கண்டிஷன் போட்டுக் கொடுமை படுத்துறமா நீ"


இரு மாதங்களாய் மனதில் அடக்கி வைத்திருந்ததை எல்லாம் கோபமாய்க் கொப்பளித்திருந்தாள் சுகமதி.


என் பொண்ணா இப்படிப் பேசினது? ஹைதராபாத் போகும் முன் தான் ஏது கூறினாலும் அமைதியாய் கேட்டு அடங்கிப் போயிருந்த பெண்ணா இப்படிப் பேசியது எனக் கண்களில் வேதனை படிய ஆச்சரியமாய்ப் பார்த்திருந்தார் லட்சுமி.


"அம்மாவை எதிர்த்து பேசுவியா நீ? அம்மாக்கு என்ன வயசாகுது? அவளோட உடம்பு முன்ன மாதிரி ஒத்துழைக்கிறது இல்ல! இன்னமும் அவளே எல்லாத்தையும் பார்க்க வேண்டியிருக்கேன்ற அலுப்புல அவ பேசினா... நீ இப்படித் தான் எதிர்த்துப் பேசுவியா சுகா" கண்டிப்பான குரலில் கேட்டிருந்தார் அவளின் தந்தை சீதாராமன்.


இது வரை தன்னிடம் கோப முகம் காட்டிராத தந்தை கண்டிப்பாய் அதட்டி கேட்கவும் மனம் கலங்கி கண்ணீர் வர, அதற்கு மேல் அங்கு நின்று பேச பொறுமை இல்லாத சுகமதி அவசர அவசரமாக அலுவலகத்திற்குக் கிளம்பி சென்று விட்டாள். இருவரிடமும் ஒரு வார்த்தை பேசவில்லை. காலை உணவையும் உண்ணவில்லை.


"ஹைத்ராபாத்ல நான் உண்டு என் வேலை உண்டுனு எனக்கு எப்ப என்ன செய்யனும்னு தோணுதோ அதை அப்ப அந்த டைம்ல செஞ்சிட்டு தனியா எவ்ளோ சந்தோஷமா இருந்தேன். நானே சமைச்சு தானே சாப்பிட்டுட்டு இருந்தேன். அங்கயும் காலைல கிளம்புற நேரத்துல எல்லாத்தையும் அப்படி அப்படியே தூக்கி போடுவேன் தான். ஈவ்னிங் வந்த பிறகு நான் ரிலாக்ஸ் ஆகிட்டு நானே எல்லா வேலையும் செய்வேன் தானே. எல்லாத்துக்கும் குத்தம் குறை சொல்லிட்டு இருந்தா எவ்ளோ நாள் தான் பொறுமையா கேட்டுட்டு இருக்க முடியும்! ஒழுங்கா ஹைத்ராபாத்லயே இருந்திருக்கலாம். அப்பா அம்மா கூட இருக்கலாம்னு சென்னை டிரான்ஸ்ஃபர் கேட்டு வந்தது தப்பா போச்சு"


அலுவலத்திற்குப் பேருந்தில் சென்று கொண்டிருந்த சுகமதியின் மனம் இவ்வாறாய் பொறுமி கொண்டிருந்தது.


அலுவலகத்தை அடைந்தவளிற்கு அவளின் ஹெச் ஆரிடம் இருந்து அழைப்பு வந்தது. பெங்களூரில் ப்ராஜக்ட் இருப்பதாய் கூறி அங்குப் பணியிட மாற்றம் செய்து கொள்ளச் சம்மதமாவெனக் கேட்டு அழைத்திருந்தார் அவர்.


சம்மதமில்லையெனச் சட்டெனக் கூற எழுந்த நாவை அடக்கி, சற்று யோசித்து விட்டு மாலை கூறுவதாய் உரைத்து வைத்தாள் சுகமதி. காலையில் வீட்டில் நடந்த அந்தச் சிறு கலவரம், அவ்வீட்டை விட்டுத் தனிமையில் சிறிது காலம் வாழ்ந்தால் என்ன என்கின்ற எண்ணத்தை அவளுக்குள் தோற்றுவித்திருந்தது.


முதன் முதலாய் ஹைத்ராபாத் சென்ற போது தாய் தந்தையரை எவ்வாறு பிரிந்து வாழ்வேனெனக் கதறி அழுது, இந்தப் பரந்த உலகில் எவ்வாறு தான் தனியாய் வாழ்வோமெனப் பயந்து நடுக்கி தான் அந்த ஊருக்கு சென்றால் அவள். ஆனால் அங்கு அவளுக்குக் கிடைத்த சுதந்திர உணர்வும், தனிமை கொடுத்த இனிமையும், பல அனுபவங்களும் அவளுக்குப் புத்துணர்வை அளிக்க அங்கிருந்து மீண்டுமாய் வீட்டை அடைய மனமில்லாது இருந்தாள் சுகமதி. தோழமைகள் என எவரையும் தனதருகில் வைத்து கொள்ளவில்லை அவள். தானுண்டு தனது வேலை உண்டு என அவள் பிரியப்பட்ட நேரத்தில் சமைத்து சாப்பிடுவது, அலுவல் வேலை செய்வது, ஷாப்பிங் செல்வது, இரவு நெடுநேரம் மடிகணிணியில் படம் பார்ப்பது, கைபேசியில் கதை படிப்பது எனத் தாய் தந்தையரின் பிரிவு சில நேரம் துக்கமாய்த் தோன்றினாலும், எதற்கும் எவ்விஷயத்தைச் செய்வதற்கும் பெற்றோரிடம் அனுமதி கேட்க வேண்டிய நிலையில்லா அந்தத் தனிமை அவளுக்கு வெகுவாய்ப் பிடித்திருந்தது. மீண்டும் அந்தத் தனிமை அளித்த கட்டற்ற சுதந்திரம் வேண்டுமென அவளது மனது உந்த, பெங்களூருக்குச் செல்வதற்கு ஹெச் ஆரிடம் ஒப்புதல் அளித்து விட்டாள்.


மாலை வேளையில் வீட்டை அடைந்த சுகமதியிடம், "ஏன்டி மதியமாவது சாப்பிட்டியா இல்லையா?" எனக் கேட்டுக் கொண்டே அவளது அறைக்கு வந்து நின்றார் லட்சுமி.


"சாப்பிட்டேன்மா" எனக் கூறிக் கொண்டே தாயிடம் வந்தவள் மீண்டுமாய் தான் பெங்களூருக்கு பணியிட மாற்றமாகி செல்வதாய் உரைத்தாள்.


"என்னது திரும்ப வேற ஊருக்கு போறியா? அதெல்லாம் ஒத்துக்க முடியாது?" மறுப்பைத் தெரித்தவர் தனது கணவனை அழைத்து உரைத்தார்.


"ஏன்மா போறேன்னு சொல்ற? அம்மாக்கு ஒத்தாசையா கூட மாட வேலை பாருனு நான் காலைல சொன்னது உனக்கு வீட்டை விட்டு போற அளவுக்கு முடிவு எடுக்க வச்சிடுச்சா" எனக் கேட்டு சுகமதியின் பார்வையை ஊடுருவ, அவள் தலையைக் குனிந்து கொள்ள,


"என்னிக்குமே தன்னோட சுகத்தை மட்டுமே மனசுல நினைச்சு எடுக்கும் எந்த முடிவும் வாழ்க்கைல உயர்வை தராதுமா" என்றவர் அவளிடம் வேறேதும் கூறாது சென்று விட்டார்.


சடாரென ஓட்டுனர் அழுத்திய அந்தத் திடீர் ப்ரேக்கில் தன்னிலை பெற்று, தான் எங்கிருக்கிறோமெனப் பார்த்தாள் சுகமதி.


இருக்கும் இடத்தைப் பார்த்துச் சென்னை சென்றடைய இன்னும் ஒரு மணி நேரம் இருப்பதாய் கணக்கிட்டவள் தந்தை அழைத்திருக்கிறாரா எனத் தனது அலைபேசியை எடுத்து பார்த்தாள்.


அதில் முன் முகப்பில் இருந்த தனது தாய் தந்தையரின் புகைப்படத்தைப் பார்த்தவள், "சாரிமா அன்னிக்கு நான் உங்களை விட்டு பெங்களூரு போகலாம்னு முடிவெடுத்திருக்கக் கூடாது! இரண்டு மாசம் கூட இருந்தும் உங்க உடல்நிலையைக் கவனிக்காம இருந்துட்டேனே! அப்ப நீ என்னைத் தினமும் திட்டுறது மட்டும் தான்மா என் மனசுல இருந்துச்சு! என் சந்தோஷம் என் ஆசைனு சுயநலமா யோசிச்சுட்டேனேமா!" கண்களில் நீர் நிரம்பி அவளது கைபேசி அந்நீரினுள் மங்கலாய்க் காட்சியளித்தது.


அவள் பெங்களூர் சென்ற ஒரு மாதத்தில் ஒரு நாள் அவளது தந்தை கைபேசியில் அழைத்து அவளது தாயிற்குக் கண் பார்வை தெரியவில்லை எனக் கூற பெரும் அதிர்வுக்குள்ளானாள் சுகமதி.


அவருக்கு மூளை நரம்புகளில் ஏற்கனவே இருந்த சிறு பாதிப்புக் கண்களைத் தாக்கியிருந்ததாய் மருத்துவர் கூறினார். இவள் சென்னையில் இருந்த போதே அவளது அன்னைக்கு இந்த நரம்பு பாதிப்பு இருத்ததாய் அவளது தந்தை கூற பெரும் குற்றயுணர்வு ஆட்கொண்டது அவளை.


அதன்பிறகு அவளது தாயின் உடல்நலம் குறித்து மருத்தவர் கையெழுத்திட்டு அளித்த சான்றிதழை அலுவலக ஹெச் ஆரிடம் காண்பித்து மீண்டுமாய் அவள் சென்னையில் ப்ராஜக்ட் தேடி அலைந்து கிடைக்காத சூழல், தாயின் நிலை, அவர்களுக்கு ஒற்றைக் குழந்தையான அவள் அவர்களைக் கவனித்துக் கொள்ள இயலாத நிலை, ப்ராஜக்ட் தேடலின் அழுத்தம் என அனைத்துமாய் சேர்த்து அவளை மனதளவில் வெகுவாய் சோர்ந்து போகச் செய்தது. எந்தத் தனிமை இனிமை என எண்ணி வந்தாளோ அதுவே அவளுக்கு வெறுமை அளிப்பதாய் மாறி மன இறுக்கத்தை அதிகரித்தது.


அவ்வப்போது வாரயிறுதி நாட்களில் வீட்டிற்கு வந்து தாயை கவனித்துக் கொள்வாள். தற்போது அவளின் தந்தை அழைத்துத் தாய் மயங்கி விழுந்ததாய் கூறிய செய்தியில் தான் இந்தப் பயணத்தை உடனே ஏற்பாடு செய்து சென்று கொண்டிருக்கிறாள்.


இதுவரை என்றுமே மயங்கி சரிந்திராத அன்னை மயங்கி விழுந்த செய்தி ஏனோ அவளின் இறுக்கமான மனத்தில் தாய் தன்னை விட்டு போய்விடுவாரோ என்ற எதிர்மறை எண்ணத்தைத் தோற்றுவிக்க, "அம்மா என்னை விட்டு போய்டாதமா" என்ற வேண்டுதலுடன் அதன் பின் எந்த அழைப்பும் ஏற்காத தனது தந்தையின் அழைப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டே அந்தப் பயணத்தை மேற்கொண்டாள்.


சென்னையை அடைந்த சுகமதி அவளது தாய் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மருத்துவமனையைச் சென்றடைந்தாள்.


ரத்த அழுத்தம் காரணமாகவே அவர் மயங்கியதாய் கூற, இத்தனை நேரமாய் மனதில் தேக்கி வந்திருந்த தாயின் நிலை எண்ணிய வேதனையைக் கதறலாய் வெளியிட்டுப் படுக்கையில் இருந்த தாயை அணைத்திருந்தாள். மகள் வெகுவாய் பயந்து போயிருப்பதை உணர்ந்த அந்த அன்னையும், "ஒன்னுமில்லடா லேசா மயக்கம் வந்துட்டு! அவ்ளோ தான்" எனக் கூறி மகளைத் தேற்ற, அவளின் தந்தையும் அவளின் தலை கோத, "இனி என்ன நடந்தாலும் உன்ன விட்டு போக மாட்டான்மா! என் கல்யாணத்துக்குக் கூட உங்களை என் பக்கத்துல வச்சி பாத்துக்கிறதுக்கு ஒத்துக்கிற மாப்பிள்ளையைத் தான் பாரக்கனும் சொல்லிட்டேன்" எனக் கூறி கண்ணீர் உகுக்க, தாய் தந்தையர் இருவரும் இணைந்து சிரித்திருந்தனர்.


தமது கடமையிலிருந்து தப்பிக்கச் சுயநலத்திற்காக நமக்கு நாமே எடுத்துக் கொள்ளும் தனிமை என்பது என்றுமே நிம்மதியளிக்காது என்பதனை உணர்ந்து கொண்டாள் சுகமதி.



-- நர்மதா சுப்ரமணியம்
Romba romba azhaagana unarvugal sis..
 
Top