கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தானா வந்த சந்தனமே...அத்தியாயம்-10

Nilasubramanian

Moderator
Staff member

அத்தியாயம்-10

பேருந்தின் ஹாரன் ஒலியில் சுயநினைவுக்கு வந்த கீர்த்தி.அதில் ஏறி அமர்ந்தாள்.

'அவ்வளவு வேகமாய் சென்றானே, ஒழுங்காய் சென்றானா, தெரியவில்லையே..வழியில் ஏதும் ஆபத்து நேராமல் ஒழுங்காய் போக வேண்டும் ஆண்டவா..'

ஆண்டவனிடம் அவசரமாய் ஒரு வேண்டுதல் வைத்தாள்.


நினைவுகளின் பிடியில் இருந்தாலும்,வழக்கமாய் இறங்கும் நிறுத்தத்தில் இறங்கி, வீட்டிற்கு சென்றாள்.

'ஏன் இவ்ளோ கோவம்..??எப்படி இவர் கூட போய் இறங்க முடியும்??யார் பார்த்தாலும் பிரச்சனை ஆயிடும்.அத்தை,ஆர்த்தி யார் பார்த்தாலும் அப்பாக்கு விஷயம் போயிடும்.. அப்புறம் இங்க இருந்து என்னை கூட்டிட்டு போயிடுவாங்க.அதுக்கப்புறம், எப்படி இவரை பார்ப்பேன்??'

இந்த இடத்தில் அதிர்ந்து நின்றாள்.
'எப்படி இவரை பார்ப்பேன்னா நெனச்சேன்??.ஏன் பார்க்கனும்??அப்போ எனக்கு இவர் மேல இருக்கது, வெறும் இரக்கம் இல்லியா??அதுக்கும் மேலேயா??இவர் கோபம் ஏன், என்னை பாதிக்குது.
வெறும் இரக்கம் மட்டுமுன்னா, இந்நேரம் எனக்கு கோவம் தானே வந்துருக்கனும்.

நாமா இரக்கப்பட்டா, இவர் ஓவர் அட்வாண்டேஜ் எடுத்துக்குரார்னு.. ஆனா கோவம் வரலியே வருத்தம் தான் வருது.அப்போ இதுக்கு பேர் என்ன??'
அவள் சிந்தனையை கலைப்பது போல அவள் அறை கதவு தட்டபட்டது.

'யார் இந்த நேரத்துல, நந்தி மாறி..'

போய் கதவை திறந்தாள்.அங்கே ஆர்த்தி..
"நந்தி…"

" என்ன நந்தியா??சொல்லுவடி சொல்லுவா..போனா போகுது,தங்கச்சி ஆச்சே, பசியோட வந்துருப்பா. சாப்பிட கொடுக்கலாம்னு வந்தேன் பாரு..ஏன் சொல்ல மாட்ட..??"

"சரி, சரி கொடுத்துட்டு கிளம்பு.."

"வர ,வர உனக்கு கொழுப்பு கூடிப் போச்சுடி.."

"ஆமா..பூசணி வீட்டு சாப்பாடு சாப்புடுறேன்ல, அப்போ அதுக்கு இருக்கதுல ,கொஞ்சமாச்சும் எனக்கு வரும்ல.."

"ஏண்டி, எப்போ பாரு அவங்களையே வம்புக்கு இழுக்குற??"

"பொழுது போகல.."

"அதான் தெரியுதே..ஆமா..இன்னிக்கு என்னமோ முக்கியமான கிளாஸ் இருக்கு,அது, இதுன்னு, பில்ட் அப் கொடுத்துட்டு போன.. அம்புட்டு படிப்பாளியா நீ??"

"ஆமா.."

"இது எப்போல இருந்து..??"

"இன்னிக்கு காலையில இருந்து தான்.."

"ஒரு மார்க்கமா தாண்டி இருக்க..
ஆமா..நம்ம வீட்டுல சமையல் செய்யுற மாமிக்கு, உன் மேல என்ன அம்புட்டு பாசம்??குழந்தை, ரெண்டு நாளா சரியாய் சாப்பிடலைன்னு சொல்லி, இந்த பலகாரத்தை என் கிட்ட கொடுத்து, கொடுக்க சொல்லுறாங்க..இவ்ளோ மாசமா இங்க இருக்கேன் ,என் மேல கூட இம்புட்டு அன்பு காட்டுனதில்லை.."

அவள் கேள்வியில் ஒரு நிமிடம் திகைத்து,

"அப்போ..நீ எடுத்துட்டு வரல எனக்கு..அவங்களா கொடுத்து விட்டுருக்காங்க.. இதுல, தங்கச்சி,பாசம் அப்டி,இப்டின்னு சொல்லி கதை அளக்குர..நீ ரெம்ப மாறிட்ட,உனக்கு கொஞ்சம் கூட என் மேல அக்கறை இல்ல.."

அவளை மேலே யோசிக்க விடாமல், கீர்த்தி பொரிந்து தள்ளி..விஷயத்தை திசை திருப்பினாள்.

"ஏய்,அப்படியெல்லாம் இல்லடி..நான் போய் உன்னை பார்த்துக்காம இருப்பனா??"

கடைசியில் இவளை சமாதானப்படுத்தி விட்டு, ஆர்த்தி செல்லும் படி ஆனது.

'இனிமே கவனமா இருக்கனும்..முகம் மாற்றத்தை கூட இந்த அரூ கண்டுபிடிச்சுடுவா..'

இரவு உணவுக்கு கீழே வந்தவள்..அனைவரிடமும் சகஜமாய் பேசிக்கொண்டு சாப்பிட்டாள். அடிக்கடி பார்த்தியின் அறை பக்கம் பார்வை சென்றது.

'இவன் எப்போ வருவான் தெரியலையே..'

அனைவரும் படுக்க சென்ற பின்னும் ஹாலில் அமர்ந்திருந்தவளை பார்த்து விட்டு அகிலாண்டம்,

"கீர்த்தி…தூங்க போகலியா..??"

"இதோ போறேன் அத்தை…"

'ச்செய்…இம்சை..ஒரு விஷயம் கூட சுதந்திரமா செய்ய முடியல, இதுனால…'

அவரை வருத்தெடுத்து கொண்டே, அறைக்கு சென்றாள்.. நொடி முள் மெதுவாக கடந்து, நேரத்தை விழுங்கியது.

'வந்துருப்பானா..??போய் பார்ப்போமா..??'

யோசனையின் முடிவில், அறையை மெதுவாய் திறந்து, தலையை வெளியே நீட்டி பார்த்தாள்.

அரவம் எல்லாம் அடங்கி, நிசப்தமாக இருந்தது.சிறிது தைரியம் வர பெற்றவளாய், வெளியே வந்து மாடியில் இருந்து கீழே பார்த்தாள்.
அவன் அறையின் உள்ளே வெளிச்சம் தெரிந்தது.

என்னவென்று சொல்லமுடியாத உணர்வு ஆட்கொள்ள..கீழே இறங்கி சென்றாள்.
அவன் அறை கதவில் கை வைத்தாள். நேற்றை போல இன்றும் திறந்து கொண்டது.

உள்ளே நுழைந்து, அவனை தேடினாள். குளியல் அறையில் இருந்தான் போல..தண்ணீர் விழும் சத்தம் கேட்டது.
அவன் வருவதற்காக சுவற்றில் சாய்ந்து நின்று காத்திருந்தாள்.

வெளியே வந்தவன், ஒரு நிமிடம் இவளை பார்த்து நின்றான்..அவன் கண்களில் தெரிந்த உணர்வு என்ன என்று, இவள் படிக்கும் முன்பே, உணர்வுகள் துடைக்க பட்ட பாவத்தோடு துவாலையை அங்கிருந்த கொடியில் காயப்போட்டான்.பின், அவள் அங்கு இல்லாதது போல், தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்.

"க்கும்.. க்கும்…"

இரு முறை தொண்டையை செருமி, அவன் கவனத்தை திருப்ப முயன்றாள்.
அவன் திரும்பவில்லை.

'கண்டுக்குதா பாரு..பக்கி..இதுக்கு தான் நாம கெத்தை மெயின்டைன் பண்ணனும்.நாமளா தேடி வந்தா, இப்படி தான் சீன் போடுவானுங்க..சரி வேற வழி இல்லை.. கூப்புட்டுடுவோம்.'

"உங்களை தான்.."

அதற்கும் திரும்பவில்லை அவன்..

'எருமை,எருமை திரும்புதா பாரு.. என் பொறுமையெல்லாம் சோதிக்குது..'

"சின்ன அத்தான்.."

இப்பொழுது திரும்பிய அவன்,
"என்ன கூப்பிட்ட..??"

"சின்ன அத்தான்னு.."

"அப்படி கூப்பிடாத.."

"ஏன்??.."

"கூப்பிடதன்னா.. கூப்பிடாத.."

'அப்படி தாண்டா கூப்பிடுவேன்..'
என்ற வீம்பு வர..

'இப்போ வீம்பு பெருசா..பேச வந்த விஷயம் முக்கியமா..ஒழுங்கா அவன் சொல்லுறதை கேளு..'

"சரி கூப்பிடலை.. அத்தானுக்கு தம்பி நீங்க, அதான் அப்படி கூப்பிட்டேன்.. வேற எப்படி கூப்பிடுறது..??"

சிறிது தயங்கி விட்டு,
தாழ்ந்த குரலில்,சுவற்றை பார்த்து கொண்டு,

"மாமான்னு கூப்பிடு.."

"ஹாஹ்ன்…"

ஒரு நிமிடம் முழித்து, பின் அவன் முகத்தை பார்த்தாள். அவன் முகம் சிவந்திருந்ததோ..??உற்று நோக்குவதற்குள், முக சிவப்பு மாறி, அவளை நேர் பார்வை பார்த்தான்.

"சரி மாமா,உங்களுக்கு அப்படி தான் பிடிக்குமுன்னா, அப்படியே கூப்பிடுறேன் மாமா,சரியா மாமா..இப்போ பேசலாமா மாமா..??"

அடிக்கொரு மாமா போட்டு பேசினாள்.
'இவள் நம்மை கிண்டல் செய்கிறாளோ..??'
அவள் முகத்தை கூர்ந்து பார்த்தான்..பார்த்தி..

அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு, கண்கள் படபடவென அடிக்க நின்றாள்.

"என்ன பேசணும்..??"

"இந்திய பொருளாதார வளர்ச்சி பத்தி.."
மெல்ல முணுமுணுத்தாள்.

"என்ன??.."

"இன்னிக்கு ஏன் இவ்ளோ கோவம் உங்களுக்கு?? அவ்ளோ வேகமா பைக் எடுத்துட்டு போனீங்க..??"

"ஏன்னு உனக்கே தெரியும்.."

"என்ன தெரியும்..??யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்கன்னு யோசிச்சீங்களா??"

கவனமாய் அகிலாண்டத்தின் பெயரை எடுக்காமல் பேசினாள்.

"பார்த்தா என்ன??"

'என்னவா..??இவன் புரிந்து பேசுகிறானா இல்லை புரியாமல் பேசுகிறானா??இதற்கு மேல் என்ன சொல்வது..'

"சரி..நான் செஞ்சது தப்பு தான், சாரி.."

"எனக்கு உன் சாரி தேவையில்லை.."

"வேற என்ன தான் தேவை..??"

ஒரு நிமிடம் அவனிடம் பதிலில்லை, அவள் கண்களை உற்று நோக்கினான்.. பின்,

"அது உனக்கு தான் தெரியனும்.."

'என்ன தெரியனுமாம்..??'

"சரி,இனி உங்க பைக்லயே வரேன்..போதுமா??ஆனா ,தெரு முனைல என்னை இறக்கி விட்டுடனும்..வீடு வரை வேண்டாம்."

"அவ்ளோ கஷ்டப்பட்டு எல்லாம் நீ வர வேண்டாம்.."

'நான் கஷ்டமுன்னு சொன்னனா??ஏன் இப்படி படுத்துறான்..'

"அப்படியெல்லாம் இல்ல.."

வேறு என்ன விளக்கம் கொடுப்பது என்று தெரியாமல் நின்றாள்.
அதற்கு மேல் அவளிடம் அவன் பேசவில்லை.படுப்பதற்கு ஆயத்தமானன்.இதற்கு மேல் இங்கு நின்றால், நன்றாக இராது என்று நினைத்து கதவு வரை சென்றவள், கதவை திறந்துவிட்டு, அவனை திரும்பி பார்த்தாள்,அவன் இவள் புறம் திரும்பவில்லை.

கோபமாய் வெளியேறியவள் கண்கள் கலங்கி இருந்தது.

அவள் அறைக்குள் வந்த பின்,
'பெரிய இவன், இவன்.. இதுக்கு மேல நான் என்ன பண்ணுறது??.. போடா..பக்கி..எருமை..'

மனதுக்குள் அவனுக்கு அர்ச்சனை செய்து விட்டு,ஒரு மூச்சு அழுது தீர்த்து விட்டு உறங்கியவள் ,காலையில் எழும் போது, வயிற்றுவலியுடன் எழுந்தாள்.

'ஆண்டவா..இது வேற..'
படுக்கையை விட்டு எழாமல், படுக்கையிலேயே சுருண்டு கொண்டு கிடந்தாள்.

காலையிலிருந்து அவள் அறை திறக்காததால்,அவள் அறை கதவை தட்டி அழைத்தாள் ஆர்த்தி.
மெதுவாக எழுந்து வந்து, கதவு திறந்தாள்.

அவள் முகம் பார்த்து பதறி,
"என்னாச்சுடி..கண்ணெல்லாம் சிவந்து,முகம் வீங்கி கிடக்கு..அழுதியா??"

என்று கேட்டு விட்டு, அவள் நெற்றியில், கழுத்தில் கை வைத்து பார்த்தாள் ஆர்த்தி.

"உடம்பு சுடுது டி. காய்ச்சல் போல..வா ஹாஸ்பிடல் போலாம்.."

"ச்சு…அதெல்லாம் இல்லை.."

"அப்புறம்..??"

"வயிறு வலிக்குது.."

"ஓ..அதான் அழுதியா..சரி, இன்னிக்கு கிளாஸ் போக வேண்டாம்..தூங்கி ரெஸ்ட் எடு..மாமியை சாப்பாடு கொண்டு வர சொல்லுறேன்."

"ஹ்ம்ம்…"

"நல்லா தூங்குடி..உன்னை விட்டு போக மனசில்ல..இன்னிக்கு அவசியம் கடைக்கு போயே ஆகனும்.. அத்தையும், ஏதோ ஒரு சொந்தக்காரங்க காதுகுத்து விழானு, போய்ட்டாங்க..உன்னை மட்டும் விட்டு போக கஷ்டமா இருக்கு..மாமி இருக்காங்க.. எதுனாலும் கேளு..சரியா..??"

"ஹ்ம்ம்.."

ஒரு சுரத்தே இல்லாமல் பதில் சொன்னாள்.
அரை மனதாய் கிளம்பி சென்றாள் ஆர்த்தி..

அவள் சென்ற கொஞ்ச நேரத்தில், மாமி வந்தார்.கையில் உணவு தட்டுடன்,

"ஏண்டி குழந்தே, இப்போ எப்படி இருக்கு..??"

அவரை கண்டதும்,உதட்டில் ஒரு புன்னகையை ஒட்ட வைத்து கொண்டாள்.

"பரவால்ல மாமி.."

"இந்தா, இதை சாப்பிடு.."

"வேணாம் மாமி..இப்போ என்ன சாப்பிட்டாலும் வாந்தி வந்துடும்.."

"அதுக்காக சாப்பிடாம இருக்க கூடாதுடி குழந்தே..இந்த களியை சாப்பிடு..இடுப்புக்கு நல்லது, இந்த மாதிரி நேரத்துல.."

அதை பார்க்கும் போதே உமட்டியது.மாமி ஏதாவது நினைத்து கொள்வர் என்று, கஷ்டப்பட்டு முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டாள்.

அவளாக சாப்பிட போவதில்லை என்று உணர்ந்து, மாமியே இவளுக்கு ஊட்டி விட்டார்.
மறுக்க முடியாமல் சாப்பிட்டாள்.

"நல்லா சாப்பிடனும்டி குழந்தே..அதுவும் இந்த மாதிரி நேரத்துல..அப்போ தான்..நாளைக்கு தேவையான நேரத்துல, சக்தி கிடைக்கும்.
பவித்ரா அம்மாவும் உன்னை மாதிரி தான்.. இந்த மாதிரி நேரத்துல துடிச்சு போயிடுவா.."

மாமியே அவர்களை பற்றி ஆரம்பித்ததும், ஒரு ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தாள்.

"உன்னை மாதிரி துறுதுறுன்னு, ஒரு இடத்துல இருக்க மாட்டா, ஏதாவது வேலை பார்த்துட்டே இருப்பா.. அகிலாமா வந்ததும், தன் அறைக்குள்ளேயே அடைஞ்சுட்டா.."

"அவா கண் எதிரே வந்தாலே,இவாளுக்கு பிடிக்காது.அது தெரிஞ்சு, அவாளே ஒதுங்கிட்டா.. இப்போ பார்த்தி ஒதுங்குன மாதிரி.. இப்போ பார்த்தி இருக்குற அறையில தான் பவித்ரமாவும் இருந்தா..

முன்ன அங்க அலுவல் வேலையெல்லாம் பார்த்தா.. அப்புறம்..அவாளுக்கு ஒதுக்கி கொடுத்துட்டா.. அவாளுக்கு அப்புறம், பார்த்தி அங்கயே தங்கிட்டான்.. தங்கமான புள்ளையாண்டான்."

'ஓ..நாம நெனச்சது போல அது ஆபீஸ் ரூம் தான் போல..'

"அதென்னமோ அகிலாமாவுக்கு, அவனை கண்டாலே ஆகலை..
இங்க வந்த கொஞ்ச நாளுலேயே ,அகிலாமா உண்டாகிட்டா, அது போதாதா..பர்வதம் அம்மா கையில இருந்த அதிகாரம், இவா கைக்கு மாறிடுச்சு..

பிரசவத்துக்கு கூட அம்மா வீட்டுக்கு போகலை,இங்க தான் இருந்தா.. அங்க வசதி பத்தாதுன்னுட்டா.. பர்வதம் அம்மாக்கு இதுல ரெம்ப சந்தோசம்,மருமக தனக்கு முக்கியத்துவம் கொடுக்குறானுட்டு..

இவாளை இங்க ரெண்டாம் தாரமா குடுத்துட்டாங்கங்குற கோவத்துல தான், இவா போகலைன்னு, பர்வதம்மாவுக்கு புரியலை.

ரெண்டு பிரசவத்துக்கு இங்க தான் வச்சு பார்த்தா.. மூத்தவன் பிறந்து அஞ்சு வருஷம் கழிச்சு ,சின்னவன் பிறந்தான்.
இங்க அப்போலாம், திருவிழா மாதிரி கோலாகலமா இருக்கும்."

"எந்த விழாவுக்கும் பவித்ரமாவை கூப்பிட மாட்டாங்க..அந்த அறையே கதின்னு கிட்டப்பா..நேக்கே பாவமா இருக்கும்..ஏகாம்பரம் ஐயா, அவா கூட பேசிட்டா, அகிலாமா ருத்ர தாண்டவமே ஆடிடுவா..நீயா தேடிண்ட வினை தானே இதுன்னு, ஏகாம்பரம் ஐயாவும், பவித்ரமாவை கோவமாய் பார்த்துட்டு போய்டுவார்."

"ரெண்டாவது பிரசவம் முடிஞ்சு மூணு,நாலு மாசத்துல அகிலமாவுக்கு மஞ்சகாமலை வந்துடுச்சு..ரெம்ப சிரமபட்டா.குழந்தைக்கு பால் கொடுக்க கூடாதுனு, டாக்டர் சொல்லிட்டார்.

அகிலாம்மா அம்மா வந்து, இப்போவாவது வாடின்னு, அழுது ,கெஞ்சி, அவாளை கூட்டிண்டு போனா.. ஆறேழு, மாசம் கழிச்சு தான் திரும்பி வந்தா.. ரெண்டு குழந்தையையும், பவித்ராமாவும் பர்வதம்மாவும், தான் பார்த்துண்டா..

அகிலம்மா இங்க வந்தப்போ, பவித்ரமா நாலுமாசம்.."

'அது சரி..சைக்கிள் கேப்ல ஆட்டோவே ஓட்டி இருக்காரு..அரூ மாமனார்…
தீயா வேலை செஞ்சுருக்கார்..'

"ஏற்கனவே மூணு தடவை கலைஞ்சதால..அஞ்சு மாசம் முடியுற வரை, யாருக்கிட்டையுமே சொல்லல பவித்ராமா..அகிலாமா பத்தின பயமும் சேர்ந்துகிச்சு..

அவா ஒதுங்கி அறைக்குள்ளேயே இருந்துட்டாதாலை, விஷயம் தெரிய நாள் ஆயிடுச்சு..ஆரவ் தம்பி, முதல் பிறந்த நாள் விழா அப்போ, அறைக்குள்ள மயங்கி விழுந்து கிடந்த பவித்ராமாவை பார்த்து,விழாக்கு வந்துருந்த டாக்டர் சோதிச்சு, உண்மையை சொன்னார்.

அப்புறம், வீட்டுல பயங்கர பூகம்பமே வந்துச்சு..
பர்வதம்மாக்கு ஒரு பக்கம் சந்தோசம்,ஒரு பக்கம் மருமகளை நினைச்சு பயம்.

அகிலாமாவை சமாதான படுத்த, பவித்ராம்மாவை அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சாங்க..
ஏகாம்பரம் ஐயா, அடிக்கடி போய் பார்த்துட்டு வந்தார்..அவரை இவங்களால தடுக்க முடியலை.

அப்புறம் என்ன, குழந்தை பிறந்துச்சு..ஏற்கனவே பூஞ்சை உடம்பு, மூணு கரு வேற தங்காமா போய் இன்னும் மோசமான நிலையில.. இந்த குழந்தை பிறந்து, கொஞ்ச நாளுல, ரொம்ப மோசம் ஆயிடுச்சு..

ஐயாவும் ,ஏகப்பட்ட மருத்துவம் பார்த்தாரு,ஒன்னும் பிரியோஜன படல.. காப்பாத்த முடியலை..

அப்போவே ஐயாவுக்கு, பார்த்தி தம்பியை பிடிக்காம போயிடுச்சு..மனைவி இழப்புக்கு, இந்த புள்ளையாண்டான் தான் காரணமுன்னு..

குழந்தையை வாங்காம கூட வந்துட்டார்..
பர்வதம்மா தான், நம்ம குடும்ப வாரிசு, இங்க தான் வளரணுமுன்னு, இங்க தூக்கிட்டு வந்தாங்க..அப்புறம், அவங்க பொறுப்புல தான் வளர்த்தாங்க..அவங்க போனதுக்கு அப்புறம், ஹாஸ்டல்ல விட்டு வளர்த்தாங்க..

அப்போ பிடிச்சு, பார்த்தியை கண்டாலே அகிலாமாவுக்கு ஆகாது..
இப்போ வரைக்கும்..
அந்த பிள்ளையும், இவா வம்புக்கு வராம ஒதுங்கி தான் போகுது..என்னமோ..இவாளுக்கு ஆகலை..

இங்க தங்குறதுக்கு மட்டும் தான் வரும்..விசேஷ நாளுல கூட, நானே கட்டாய படுத்தி, ஏதாவது பட்சணம் கொண்டு போய், தம்பி அறையில கொடுத்துட்டு வருவேன்.."

சொல்லி முடித்து விட்டு, தட்டை எடுத்துக்கொண்டு சென்றார்..மாமி..
அன்புக்காக ஏங்கும் ஒரு குழந்தை, இவள் கண் முன் தோன்றியது..அனைவர் மேலும் கோவம் வந்தது..தப்பை இவர்கள் செய்துவிட்டு, ஒன்றும் தெரியாத குழந்தையை தண்டித்திருக்கிறார்கள்.

யார் முகத்தையும் காண பிடிக்காமல், அறைக்குள்ளேயே இருந்தாள்.
மதியமும், மாமி உணவு கொண்டுவந்து கொடுத்தார்..
மாலையில் ஆர்த்தி வந்து பார்த்துவிட்டு சென்றாள்.

யாரிடமும் பேசும் மனநிலையில் இல்லை கீர்த்தி..கேட்ட கேள்விக்கு, பதில் சொல்லிவிட்டு, அமைதியாய் இருந்தாள்.
உடம்பு சரி இல்லாததால், அப்படி இருக்கிறாள் என்று ,ஆர்த்தியும் ஒன்றும் கேட்க வில்லை..

இரவு உணவை தவிர்த்து விட்டு..பழங்கள் சாப்பிடுவதாய் கூறி விட்டு, அறைக்குள் இருந்து கொண்டாள் கீர்த்தி..அனைவரும் உறங்கியதும், மொட்டை மாடிக்கு சென்று, சுவற்றில் சாய்ந்து, கால் நீட்டி அமர்ந்து கொண்டு, நிலவை வெறித்துக்கொண்டிருந்தாள்.

யாரோ வரும் அரவம் கேட்டு, திரும்பி பார்த்தாள்.மொட்டை மாடிக்கு வீட்டிற்குள் இருந்து, ஒரு படிக்கட்டு வழி என்றால், வீட்டிற்கு வெளியில் இருந்து ஒரு வழி உண்டு. அந்த வழி, வழியாக பார்த்தி வந்தான்.

அவனை பார்த்ததும் எழ போனவளை,
"உக்காரு..உக்காரு.."

அவன் முகத்தை இமைக்காமல் பார்த்தாள், கீர்த்தி.நேற்று இருந்த கோவம்,வருத்தம் எதுவும் அவன் மீது இல்லை.
அவள் அருகில் அமர்ந்தான் அவன்.

அவள் ஏதும் பேசாமல் இருப்பதை பார்த்து,
"என் மேல கோவமா..??நேத்து, ஏதோ ஒரு கோவம்..அதான் அப்படி நடந்துகிட்டேன்.இன்னிக்கு, உன்னை பஸ் ஸ்டாப்ல காணும்.அதான், மாமி கிட்ட கேட்டேன்.."

சிறிது தயக்கத்துக்கு பின்,
"இப்போ வலி பரவால்லியா??"

ஒன்றும் கூறாமல் தலை அசைத்தாள்.

"எதுவும் பேச மாட்டியா..??"

அதற்கும் தலை அசைத்தவள், கைகளால் முகத்தை மூடி கொண்டு, அழ ஆரம்பித்து விட்டாள்.

"பொம்மு,ஏன்டா அழுகை??இங்க பாரு.."

அவள் கைகளை விலகி, முகம் பார்க்க முயன்றான்.

கையை விலக்கியவள், அவன் மார்பில் முகம் புதைத்து, அழுகையை தொடர்ந்தாள்.என்ன காரணம் என்று தெரியாமல்,அவன் கடந்த காலத்தை நினைத்து,அவன் முதல் நாள் கோவத்தை நினைத்து,இப்படி பல காரணத்தையும் சேர்த்து, அழுகையில் கரைத்தாள்.

சில நொடி தயக்கத்தின் பின், பார்த்திபனும் அவளை அணைத்துக்கொண்டான்.

….தொடரும்…
 
Top