கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தானா வந்த சந்தனமே...அத்தியாயம்-11

Nilasubramanian

Moderator
Staff member
அத்தியாயம்-11

படுக்கையில் புரண்ட கீர்த்திக்கு உறக்கம் வரவில்லை.சற்று நேரத்திற்கு முன் நடந்தது ஞாபகம் வந்தது.

'எப்படி ஒரு ஆண்மகன், நெஞ்சில் சாய்ந்து அழுதேன்,சிறிது கூட தயக்கம் இல்லாமல்??.'

அவனை சந்தித்திலிருந்து, சற்று முன்பு நடந்தது வரை ஞாபகம் வந்தது.பார்த்த நொடியிலிருந்து, புதியவன் போல தோன்றாதது ஆச்சர்யத்தை கொடுத்தது.

அவன் குடித்து விட்டு வந்ததை பார்த்து அதிர்ச்சி வந்தாலும்,அவனுக்கு உணவு கொண்டு போய் கொடுத்தது.அவனை பற்றி அறிந்து கொள்ள துடித்தது.
பெண்கள் கல்லூரியில் படித்த இவள், புதிதாக ஒரு ஆண்மகனிடம் பேசும் கூச்சம் இல்லாமல் பேசியது,அவன் கோபத்தை கண்டு வருந்தியது,அவனுக்கு கிடைக்காத அன்பை நினைத்து கோபம் கொண்டது என்று ,அவள் சுய அலசலில் ஏதோ விடை கிடைப்பது போல இருந்தது.
புதிதாக அவனோடு பேசி பழகுவது போல இல்லை,ஏதோ ஜென்ம ஜென்மமாக தொடரும் பந்தம் போல இருந்தது.

சற்று முன் கூட அவன் எந்த வார்த்தையும் கூறி ஆறுதல் கூறவில்லை.ஒரு அணைப்பு,அதிலேயே முழு ஆறுதலும் அளித்துவிட்டான்.

சேர வேண்டிய இடத்துக்கு வந்து சேர்ந்ததை போல மன அமைதியையும்,ஆறுதலையும் கொடுத்து விட்டான்.

சற்று நேரத்தில் இவளே தெளிந்து,பதறி அவன் அணைப்பில் இருந்து விலகும் போது, எதுவுமே நடக்காதது போல,ஒரு புன்முறுவலுடன்,

"பனியா இருக்கு..போய் தூங்கு.."
என்று கூறிவிட்டு, வந்த வழியே திரும்பி சென்று விட்டான்.

திரும்பி வந்து படுத்தவளுக்கு தான் உறக்கம் வரவில்லை.

முக சிவப்போடு தலையணையை கட்டிக்கொண்டு படுத்தாள்.

தூக்கம் வரும் போல தெரியவில்லை.எழுந்து அமர்ந்தாள்.ஆர்தியின் மொபைல் மேஜையில் இருந்தது.

இரவு, அம்மா பேசவேண்டும் என்று சொன்னார்கள் என்று, மொபைல் கொண்டுவந்தாள்.

இவள் பேசிய பின், அவள் எடுத்து செல்ல மறந்து விட்டாள்.
அதில் ஏதாவது பாட்டு கேட்கலாம் என்று எடுத்தாள்.

வரிசையாக பாடல்கள் இருந்தது.எதை கேட்பது என்று பார்த்துக்கொண்டே வந்தவள் கை பட்டு, ஒரு பாடல் தானாக ஒலிக்க ஆரம்பித்தது.

"கண்ணனை நினைக்காத நாள் இல்லையே!!
காதலில் துடிக்காத நாள் இல்லையே!!
உண்ணும் போதும்,உறங்கும் போதும்!!
எண்ணம் முழுதும் கண்ணன் தானே..!!"

அவள் மூளையில் மின்னல் வெட்டியது, அவளுக்குள் இவ்வளவு நாள் இருந்த கேள்விக்கு விடை கிடைத்தது.அது அவளுக்கு இனம் புரியாத, பூரிப்பை கொடுத்தது.

'என் எண்ணம் முழுதும் பீம் பாய் தான், அப்போ, நான் அவனை லவ் பண்ணுறேனா..??'
கிடைத்த விடை, முகத்தில் புன்னகையை விதைத்து.

மறுநாள் எப்பொழுது பொழுது விடியும்,அவனை எப்பொழுது பார்ப்போம் என்று இருந்தது.
முதல் நாள் இருந்த வருத்தம்,கோவம் அனைத்தும் மாறி, முகத்தில் ஒரு ஒளியுடன் மறுநாள் எழுந்து கீழே வந்தாள்.

"உடம்பு சரி இல்லைன்னு ஆர்த்தி சொன்னா.. இப்போ பரவால்லியா..??"

அகிலாண்டம் தான் கேட்டார்.அவரை பார்த்ததும், நேற்று மாமி சொன்னது எல்லாம் ஞாபகம் வந்தது.
மாற துடித்த முகத்தையும், மனதையும் இழுத்து பிடித்து,

"பரவால்ல அத்தை.."

"சரி சாப்பிடு.."

"ஹ்ம்ம்.."

பார்த்தியின் அறை பக்கம்,இவள் பார்வை சென்று,சென்று வந்தது.

'கிளம்பி இருப்பானோ??உள்ள தான் இருக்கானா??தெரியலையே..'

ஒரு குழப்பத்தோடு சாப்பிட்டு விட்டு மாடிக்கு சென்றாள்.

'அவனை எப்படி பார்க்குறது??'

அதற்கு விடை காண முடியாமல்,மதிய வகுப்புக்கு கிளம்பி சென்றாள். வகுப்பு எப்பொழுது முடியும் என்று ஆவலோடு காத்திருந்து,முடிந்ததும் பேருந்து நிறுத்தத்திற்கு அவசரமாய் வந்தாள்.

'என்ன இன்னும் காணும்..??'

'நீ அவசர குடுக்கையாட்டம் முன்ன வந்தா, அவனும் வந்துருவானா??எப்போவும் வர்ற நேரத்துக்கு தான் வருவான்.'

இன்னொரு மனம் பதில் சொன்னது.
டென்சனில் நகத்தை கடித்து துப்பினாள்.

"இது என்ன பழக்கம்??,நகம் கடிக்கிறது..கையை எடு.."

பார்த்தியின் குரல் அருகில் கேட்டு,முகம் மலர திரும்பினாள்.அவன் அருகில் பைக் இல்லை.நடந்து வந்திருந்தான்.முகம் கூம்ப,

"நடந்து வந்திங்களா??"

அவள் கேள்வியில், முகத்தில் தோன்றிய புன்னகையை மறைத்து,

"ஆமா.."

"உங்க பைக் எங்க??"

"ஒரு சின்ன ரிப்பேர்..மெக்கானிக் ஷெட்ல விட்டுருக்கேன்.."

பியூஸ் போன பல்பாய் முகம் மாற.,

"ஓ…"

அவள் முகமாற்றத்தை பார்த்து,

"சின்ன ரிப்பேர் தான்.. போய் வாங்கிட்டு போயிடலாம், வா.."

"எங்க இருக்கு..??"

"பக்கம் தான்.."

அவன் வந்த வழியே கூட்டி சென்றான்.

ஐந்து நிமிட நடையில், ஒரு மெக்கானிக் ஷெட் வந்தது.இவன் உள்ளே நுழைந்ததும்,எதிரே வந்த ஒரு பையன்,

"யாருண்ணா இவங்க..??"

அவனுக்கு பதில் கூறாமல்,முகத்தில் மென்னகை படர நின்றான்.

"ஓ..அண்ணியாண்ணா.. ஓகே ஓகே.."

"போடா வாலு.."

"அண்ணா,வெட்கமெல்லாம் படுற....இப்போ தான் ரொம்ப அழகா இருக்க போ.."

"போடா..போய் வேலையை பாரு.."

"அதானே பார்க்குறேன்.அண்ணிக்கு ஒரு ஸ்பெசல் டீ வாங்கிட்டு வரேன்.."

என்று கூறிவிட்டு, அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

இருவரும் பேசயில்,பார்த்தியின் முகத்தில் தோன்றிய மாற்றத்தை கவனித்து கொண்டே இருந்தாள் கீர்த்தி.

அவன் முக சிவப்பு,புன்னகை,வெட்கம் எல்லாம் பார்த்து,இவள் முகத்திலும் புன்னகை தோன்றியது.

அவளை உள்ளே அழைத்து சென்று, ஒரு நாற்காலி எடுத்து போட்டு அமர சொன்னான்.

"கொஞ்ச நேரம் இரு, வரேன்.."
என்று இவளிடம் உரைத்து விட்டு, உள்ளே சென்றான்.

அவன் சென்றதும்,சுற்றி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.அப்பொழுது வெளியே இருந்து உள்ளே வந்த ஒருவன்,

"ஏதாவது வண்டி ரிப்பேர்ரா..??பார்க்கனுமா..??"

வேகமாய் எழுந்து,

"இல்ல..நான்..உள்ள.."
என்ன சொல்லுவது என்று தெரியாமல் திணறி,உள்ளே பார்த்தாள். அங்கிருந்து வெளியே வந்த பார்த்தி,

"மாது, நான் தான் கூட்டிட்டு வந்தேன்…அவ பேர் கீர்த்தி.."

இவளுக்கு ஆச்சர்யம்,

'இவனுக்கு என் பெயர் எப்படி தெரியும்??.'

"ஓ..உன்னோட பொம்மு வா..??"

அவள் ஆச்சர்யம் அதிகம் ஆனது.
அவனிடம் ஏதும் சொல்லாதே, என்று பார்த்தி ஜாடை காட்டி கொண்டிருந்தான்.

இவள் அதை கவனித்து விட்டாள்.
"என்ன சொல்ல வேண்டாங்குறிங்க..??"

"நான் அப்படி ஒன்னும் சொல்லலியே."

"பொய் சொல்லாதீங்க.."

அவள் கவனத்தை திசை திருப்பும் பொருட்டு,

"கீர்த்தி மா.என் பேர் மாதவன்.பிரெண்ட்ஸ் எல்லாம் மாதுனு கூப்பிடுவாங்க.நானும் இவனும், பிளஸ் டூ வரை ஒண்ணா தான் படிச்சோம்.
இவன் என்னை அறிமுக படுத்துவான்னு பார்த்தேன்.இவன் செய்யுற மாதிரி தெரியலை. அதான், நானே அறிமுகம் ஆயிட்டேன்."

"ஓ…நான் கீர்த்தி..என்னை உங்களுக்கு முன்னவே தெரியுமா..??"

"ஹ்ம்ம்..தெரியுமே..இவன் அண்ணிக்கு தங்கச்சி தானே.."

"ஆமா..ஆனா, நீங்க யாரும் கல்யாணத்துக்கு வரலியே..எப்படி தெரியும்.."

"அது..அது.."
அவன் முழிப்பதை பார்த்து,

"வண்டி ரெடி ஆயிடுச்சு கிளம்புவோமா..??நேரமாச்சு.."

"ஆமா..நேரமாச்சு..கிளம்புவோம்.. அப்போ, இன்னொரு நாள் வரேன்ணா.. கிளம்புறேன்."

"சரி மா.."

தப்பித்தோம், பிழைத்தோம் என்று விடை கொடுத்து அனுப்பினான்.

அவன் பின்னல் அமர்ந்து ,அவன் தோளை பிடித்துக்கொண்டு வந்தாள். மனம் உற்சாகமாய் இருந்தாலும்,ஒரு பயம், மனதின் ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது.

அவர்கள் வீட்டின் தெரு முனை வந்ததும்,வண்டியை நிறுத்தினான்.

"இறங்கு.."

மனதில் ஆச்சர்யத்துடன்,ஒரு நிம்மதி வந்தது.இறங்கி அவன் முகம் பார்த்து,

"தேங்க்ஸ்.."

என்று விட்டு, அவன் முக மாற்றத்தில்,

"இல்ல,இல்ல வாபஸ்.."

மீண்டும் அவன் முகத்தில் மென்னகை.

"ஓகே..கிளம்பவா..??"

"ஹ்ம்ம்.."

அதன் பிறகும கிளம்பாமல் இருந்தவனை பார்த்து,இவளும் தயங்கி,

"என்ன??"
அவளை நிமிர்ந்து பார்த்து,

"நைட் மாடிக்கு வர்றியா..??"

"எதுக்கு..??"

அவளை பார்த்து கண்ணடித்து விட்டு,
"இந்தியா பொருளாதார வளர்ச்சி பத்தி பேச.."
சிரிக்காமல் கூறினான்.

அவனை முறைக்க முயன்று,பின் சிரித்து விட்டாள்.

"ஹ்ம்ம்..வரேன்..பேசுவோம்..இந்தியா வளருர வரை பேசுவோம்."

"சரி கிளம்புறேன்.."

போறவனை 'எங்கு செல்கிறாய்' என்று கேட்க கூடாது என்று நினைத்து,

"வீட்டுக்கு வரலியா..??"

"இல்ல..இங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்குற கம்ப்யூட்டர் சென்டர்ல ஒர்க் பண்ணுறேன்.நைட் ஒன்பது வரை வேலை நேரம்.முடிச்சுட்டு தான் வருவேன்."

"ஓ…"

"சரி நேரமாச்சு,நீ போ..நைட் பேசலாம்.."

சரி என்று தலை ஆட்டி விட்டு, வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
வீட்டிற்கு வந்ததிலிருந்து இருப்பு கொள்ளாமல்,மாடி, கீழே என்று சுற்றி கொண்டிருந்தாள்.

மாமி கூட கவனித்து விட்டு,
"என்னடி குழந்தே,ஏதும் சந்தோசமான சேதியா..??முகம் பளிச்சுன்னு இருக்கு.."

'அப்படியா வெளிப்படையாக தெரிகிறது, என் சந்தோசம்.'

"அதெல்லாம் இல்ல மாமி,ரொம்ப நாள் பார்க்காத என் தோழியை இன்னிக்கு பார்த்தேன் அதான்.."

காதல் வந்தால்,கள்ள தனமும் வந்துவிடும் போல..

"அப்டியாடி குழந்தே..சந்தோசம்..எப்போவும் சிரிச்சுட்டே இரு.நேத்து உன் முகத்தை பார்த்து மனசே ஆறலை."

மாமி கூறிவிட்டு, தன் வேலையை பார்க்க சென்றார்.
மாமி கூறியதை கேட்டு ,நெஞ்சம் விம்மியது.

'இப்படி பட்ட மனிதர்கள் இருப்பதால் தான், இன்னும் நாட்டில் மழை பெய்கிறது.'

புதிதாய் வந்த தன் முக வாட்டத்தை பொறுக்க முடியாமல்,தன் சந்தோசத்தில் இன்பம் காணும் இவரை நினைத்தால் பெருமையாக இருந்தது.

இரவு உணவு முடித்து விட்டு அறைக்கு சென்றவள் பின்னே வந்த ஆர்த்தி,

"நாளைக்கு ஹாஸ்பிடல் போனும் டி. ஸ்கேன் எடுக்கணுமுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க. அதுனாலே, நாளைக்கு கிளாஸ் முடிச்சுட்டு அங்கேயே வெயிட் பண்ணு, நான் கடையில இருந்து நேர அங்க வந்துடுறேன்.
ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் போய்ட்டு வந்துடலாம்."

'என்ன ஹாஸ்ப்பிடல் போனுமா..??அப்போ பீம் பாய்யை பார்க்க முடியாதா..??அவர் கூட பைக்ல வர முடியாதா..??'

"என்னடி, நான் பேசிட்டே இருக்கேன்.நீ கனா கண்டுட்டு இருக்க.."

"ஹாஸ்பிடல் போனுமா..??ஏன், அந்த வெள்ளை காக்காய் என்ன பண்ணுது??"

"ஏய்..ஒழுங்கா பேசு..முன்ன மாறி பேசிட்டு இருக்காதா..அவர் உன் அத்தான்.."

"சரி,அந்த மாண்புமிகு சொத்தான்..என்ன பண்ணுறார்..??பொண்டாட்டிய ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகாம.."

"முகூர்த்த சீசன் டைம் டி, கடையில கூட்டம் அதிகம் இருக்கும்.கடையை விட்டு வர முடியாது டி.."

"பொண்டாட்டிய விட கடை முக்கியமா.??."

"ச்சு.. அவரு, வராரு வரல, அதை விடு. இப்போ நீ வருவியா மாட்டியா..??"

பதில் சொல்லாமல் தயங்கி நின்றவளை பார்த்து,

"சரி, நீ வர வேண்டாம்.நானே போய்கிறேன்."

அவள் பதிலில் மனதில் குற்ற உணர்வு எழ,

"ஏய்,கோச்சுக்காத டி. வரேன்.."

அவள் முகத்தை பார்த்து விட்டு,

"இப்போ எல்லாம் நீ சரி இல்ல..ஒரு நாள் ஒழுங்கா பேசுற,ஒரு நாள் உம்முன்னு இருக்க..உனக்கு என்னாச்சுனே தெரியலை.."

"அதெல்லாம் இல்ல.நல்லா தான் இருக்கேன்."

"நல்லா இருந்தா சரி.நாளைக்கு கடையில இருந்து கார்ல வந்துடுறேன்.நீ சென்டர் வெளிய நில்லு.சரியா..??"

"சரி,சரி..நாங்க மட்டும் ,தினம் கூட்டதுல இடி பட்டு பஸ்ல வருவோம்.இவங்களுக்கு தேவைனா கார்ல வந்து பிக் அப் பண்ணுவாங்க."

"நான் என்னடி பண்ணுவேன்??அத்தையை கேட்காம ஏதும் செய்ய முடியாது தெரியாதா..??"

"சரி, சரி புலம்பாமா போ..அந்த வெள்ளை காக்காய்,சாரி, சாரி சொத்தான், உன்னை காணுமுன்னு, உருண்டு, புரண்டு அழ போறார்.போ."

அவளை முறைத்து விட்டு,

"உன்னை எல்லாம் திருத்தவே முடியாது.."

"முதல்ல நீங்க திருந்துங்க டி.. அப்புறம் நாட்டை திருத்தலாம்.."

'இவளோட உப்ஸ்.. முடியல'
என்று தலை அசைத்து விட்டு சென்றாள் ஆர்த்தி.

'இந்த அரூ கிட்ட ஜாக்கிரதை,ஜாக்கிரதைன்னு யோசிச்சே, தலைவலி வந்துடும் போல.
இனிமே பி கேர்புல் கீர்த்தி.'

இரவு வழக்கம் போல் ,வீட்டின் அரவம் அடங்கியதும்,மொட்டை மாடிக்கு மெதுவாய் சென்றாள்.
அவளை அதிக நேரம் காத்திருக்க வைக்காமல், பார்த்திபனும் வந்தான்.

"ரொம்ப நேரமா..வெயிட் பண்ணுறியா ??"

"இல்ல.. இப்போ தான் வந்தேன்.."

சற்று தயங்கி, தன் கையில் இருந்த பார்ஸலை அவளிடம் நீட்டினான்.

"என்ன இது??"

கேட்டு கொண்டே பிரித்து பார்த்தாள். அது ஒரு ஸ்வீட் பாக்ஸ்.உள்ளே ஜாங்கிரி இருந்தது.
கண்கள் மகிழ்ச்சியில் விரிய,

"எனக்கு ஜாங்கிரி பிடிக்கும்ன்னு யார் சொன்னா..??"

கேட்டு விட்டு, பதிலை எதிர் பாராமல் சாப்பிட ஆரம்பித்தாள்.

மூன்று ஜாங்கிரி உள்ளே சென்ற பின் தான், இருக்கும் இடம் ஞாபகம் வந்தது.

நிமிர்ந்து, அசடு வழிய ,அவன் முகத்தை பார்த்துவிட்டு,

"உங்களுக்கு வேணுமா??"

அது வரை, அவள் முகத்தை புன்னகையோடு பார்த்திருந்தவன். வாய் விட்டு சிரித்தான்.

சிரிக்கும் அவனை மகிழ்ச்சி பொங்க பார்திருந்தாள் அவள்.

"நல்ல வேளை, இப்போவாவது கேட்டியே.. நான் கூட , முழுசா சாப்பிட்டு தான், நிமிருவேணு நினைச்சேன்."

"சும்மா கிண்டல் பண்ணாதீங்க."

என்று சிணுங்கினாள்.
அவள் சிணுங்களில், இவன் சில்லு ,சில்லாக சிதறுவது அறியாமல்.

"சாப்பாட்டுல, அண்ணன் என்ன டா தம்பி என்ன டா கொள்கை தான் நம்ம கொள்கை.அங்காளி,பங்காளி யாரு வந்தாலும் வெட்டு, குத்து ஆயிடும்.அரூ கூட, என் சாப்பாட்டுல கை வைக்க மாட்டா.. வீர தழும்பெல்லாம் வாங்கி இருக்கா, அந்த பயம்."

"வீரத்தழும்பா??"

"ஆமா..என் கிட்ட எத்தனை தடவை கடி வாங்கி இருக்கா.. தெரியுமா..??"

அவளை விட்டு இரண்டடி தள்ளி அமர்ந்து கொண்டான்.

அதை பார்த்து,
"உங்களை கடிக்க மாட்டேன்..பயப்படாதீங்க..உங்களுக்கு ஜாங்கிரி வேணுமா??"

அவளை பார்த்து கை எடுத்து கும்பிட்டு, தலை அசைத்து, வேண்டாம் என்றான்.

'அது..அந்த பயம்..'
என்னும் பார்வையை கொடுத்து விட்டு, ஜாங்கிரியை கடிக்க ஆரம்பித்தாள்.

சாப்பிட்டு கொண்டே, லொட லொடவென இவளை பற்றி,இவள் குடும்பத்தை பற்றி, பக்கத்து வீட்டு பப்பி வரை, சொல்லி முடித்தாள்.

அனைத்தையும் ஒரு மௌன புன்னகையுடம், கேட்டு ரசித்தான் பார்த்தி.
காது ஜிமிக்கி ஆட, அதற்கு ஏற்ப அவள் கண்கள் நர்த்தனமாட, வாய் ஓயாமல் பேசும் அவளை, கண்களில் நிரப்பி கொண்டான்.

பேசி, பேசி வாய் ஓய்ந்து, பின் சிறிது தயக்கத்தோடு, அவன் கோபப்படுவனோ என்று பயந்து,

"உங்களை பத்தி ஒன்னும் சொல்லலியே.."

"என்ன சொல்லணும்..??"

"நீங்க என்ன பண்ணுறீங்க?? எங்க ஒர்க் பண்ணுறீங்க..??"

பயத்தில் எச்சில் விழுங்கிக் கொண்டு கேட்டாள்.

….தொடரும்..
 

Padma

Active member
அம்மாடியோ பொம்முக்கு பீம்பாய் கிட்ட பயமா 🙄🙄🙄
நம்பற மாதிரி இல்லையே இவ தான அவனை வச்சு செய்ற கேரக்டரா இருக்கா 😜😜
 
Top