கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தானா வந்த சந்தனமே...அத்தியாயம்-13

Nilasubramanian

Moderator
Staff member
அத்தியாயம்-13

நாட்கள் அதன் போக்கில், விரைந்து சென்றது.கீர்த்தி,இங்கு வந்து மூன்று மாதம் கடந்திருந்தது.இரவில், பார்த்தியுடன் பேசி,மதிய வேளை வகுப்பில் தூங்கி வழிந்து, பாதி நாள் தப்பித்து,சில நாள் மாட்டி முழித்து,சமாளித்துக் கொண்டிருந்தாள்.

அவர்கள் காதலும்,நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமுமாக, வளர்ந்து வந்தது.யாரும் அறியாமல்.
முன்பிருந்தது போல, பார்த்தி, யோசித்து, அளந்து பேசுவதில்லை.இவளுக்கு நிகராக, குறும்போடு, பதில் கொடுக்க ஆரம்பித்திருந்தான்.அவளிடம் மட்டும்.

அதற்காக, கோபமும் வராமலில்லை.எதற்கு அவனுக்கு கோபம் வரும் என்று அறிந்து,அதை பெரும்பாலும் தவிர்த்து விடுவாள்.
அதை மீறி வரும் கோபத்திற்கு,அதை குறைக்கும் வழியும் கண்டிருந்தாள்.

இப்பொழுதெல்லாம், மாலை வகுப்பு முடிந்து, உடனேயே கீர்த்தி திரும்புவதில்லை.பார்த்தியுடன்,அவன் நண்பன் மாதுவின் மெக்கானிக் ஷெட்டில் அமர்ந்து, அரட்டை அடித்துவிட்டு,பின்பு தான் கிளம்பினார்கள்.

முதலில் இதை கவனித்தது ஆர்த்தி தான். காரணம் கேட்டதற்கு,ப்ராக்டிகள்,நோட்ஸ் எடுக்கிறேன் என்று, எதோ ஒரு காரணம் சொல்லி தப்பித்துக்கொண்டாள்.

ஆர்திக்கு இவள் மேல் சந்தேகம் வரவில்லை.மாதா, மாதம், அவளின் செக்அப்புக்கு, எந்த காரணமும் கூறாமல்,ஒழுங்காய் சென்று வந்தாள்.

அன்று, மொட்டை மாடியில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.
பார்த்தியின் தோள் சாய்ந்து கொண்டு,கீர்த்தி,

"இன்னும் மூணு மாசம் தான். அப்புறம் நான் கிளம்பிடுவேன்."
கீர்த்தியின் குரலில் டன்,டன்னாய் வருத்தம்.

"ஹ்ம்ம்…"
என்றான் ஒரு பெருமூச்சோடு.

அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்துவிட்டு,
"என்ன ஹ்ம்ம்.??.உங்களுக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லியா..??"

அவளுக்கு பதில் கூறவில்லை அவன்.அவள் கைகளை எடுத்து,தன் உதடு அருகே கொண்டு சென்று இதழ் ஒற்றினான்.

அந்த முத்தத்தில், அவ்வளவு அழுத்தம்.அது சொல்லியது,அவன் வருத்தத்தை.

"எங்க அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்..என்னை எங்கேயும் தனியா அனுப்ப மாட்டாரு.கோயிலுக்கு கூட,அரூ, இல்ல அம்மா,இப்படி யார் கூடவாவது தான் விடுவார்."

"உனக்கு ஒரு மொபைல் வாங்கி தரேன்.அது வச்சுக்கோ.எப்போ பேசனுமுன்னு தோணுதோ, அப்போ பேசு.நானும் பேசுறேன்."

"போன்னா..??ஆத்தி.. அப்பாக்கு தெரிஞ்சுது, தோலை உரிச்சு தொங்க விட்டுடுவார்."

"உங்க அப்பா, உன்னை அடிப்பாரா..??"

"அடிபாராவா..??பெல்ட்டை கலட்டுனாருனா..ரத்த காயம் பார்க்காம விட மாட்டார்.அரூ கூட, ஒன்னு,ரெண்டு தடவை தான் வாங்கி இருக்கா. நான், கணக்கே இல்லாம வாங்கி இருக்கேன்.

பெரிய பொண்ணு ஆனத்துக்கு அப்புறம் தான், சொந்தக்காரங்க சொல்லி,வயசுக்கு வந்த பிள்ளையை அடிக்க கூடாதுனு,விட்டுருகார்.

அதுகப்புறமும் ரெண்டு தடவை அடிக்க வந்தார்,அம்மா வந்து தடுத்துட்டாங்க.பேபி மா புண்ணியத்துல.தோல் தப்பிச்சுது."

அவள் விளையாட்டாய் சொன்னாள். இவனுக்கு வருத்தமாக இருந்தது.அவன் அகிலாண்டத்தின்,ஏச்சு, பேச்சுக்கு ஆளாகி இருக்கிறான்.தந்தையிடம் சிறு வயதில், காரணம் தெரியாமல் அடி கூட வாங்கி இருக்கிறான்.

ஆனால் பெல்ட்டால் அடி வாங்குவது என்றால், அவனால் நினைக்க கூட முடியவில்லை.

அவனின் அமைதி பார்த்து,
"என்ன தீபு யோசனை.."
என்றாள்.

இப்பொழுதெல்லாம்,நேரத்துக்கு தகுந்த படி, அவனை அழைத்தாள்,குறும்பாய் அழைகையில் பீம் பாய்,சாதாரணமாய் அழைக்கையில் தீபு,தீபன்.,அன்பு கூடும் போது மாமா.

அவனும் அப்படி தான்,கீர்த்தி என்று அழைக்க மாட்டான்.
எல்லா நேரமும் பொம்மு.கோபமாய் இருக்கையில் திவ்யா.

"சரி, இங்க இருக்கையில மொபைல் வச்சுக்கோ,சைலென்ட்ல போட்டு வச்சுக்கோ.எனக்கு, உன் கூட நினைச்ச நேரம் பேச முடியலை.எப்போ சாயங்காலம் வரும்,நைட் மொட்டை மாடி வருவன்னு, காத்திருந்து,காத்திருந்து, பேச முடியல டா.

நீ இங்கிருந்து கிளம்பும் போது,என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்."

அவள் ஒன்றும் கூறாமல், யோசனையில் நேரம் கடத்தினாள்.

"என்ன டா..??"

"இல்ல..இங்க அரூ.. எப்போ வேணா என் ரூம்க்கு வருவா..அவ பார்த்துட்டா.??"

முகம் வாட,
"சரி,இப்போ மாதிரியே பேசிக்கலாம்.விடு."
என்றான்.

அவன் முக வாட்டம் பொறுக்காமல்,
"சரி,நீங்க வாங்கி கொடுங்க..நான் அவளுக்கு தெரியாமல் வச்சுக்குறேன்."

முகம் மலர,
"நிஜமாவா..??"

"ஹ்ம்ம்.."
என்று புன்னகையுடன் தலையாட்டினாள்.

"இவ்வளோ நேரம் பயந்த,இப்போ சரி சொல்லுற..??"

"அரூ கல்யாணத்துக்கு முன்ன, அவளும் வெள்ளை காக்காயும் பேச திட்டம் போட்டு கொடுத்தவளே நான் தான்.இப்போ அதை யோசிச்சேன்.சமாளிச்சுடலாம்னு தோணுச்சு."

அவனை பார்த்து, அழகாய் கண் சிமிட்டி சிரித்தாள்.

அந்த புன்னகையில் மயங்கி,அவள் கண்களுக்கு, தன் முத்தத்தை பரிசாக அளித்தான்.

"எதுக்கு உங்க அப்பா,அடிப்பாரு??. நீ குறும்பு பண்ணுறத்துக்கா..??"

"அதுக்கும் தான், பெரும்பாலும் அடி வாங்குறது,ஸ்கூல்ல ரேங்க் கார்டு கொடுக்குற அன்னைக்கு தான். டீச்சர் ரேங்க் கார்டு எடுக்கும் போதே,பீதி ஸ்டார்ட் ஆகிடும். மனசுக்கு
உள்ள டண்டணக்கா மியூசிக் எல்லாம் கேட்கும்.

இன்னிக்கு ஒரு ரணக்கலம் இருக்குன்னு தெரிஞ்சே,வீட்டுக்கு போவேன்.

அரூ, முதல் ஆளா ரேங்க் கார்டு எடுத்துட்டு போய், அப்பா கிட்ட நீட்டிடுவா.அவ, முதல் அஞ்சு ரேங்குள்ள வந்துருப்பா.

நான், கடைசி அஞ்சு ரேங்குள்ள வந்துருப்பேன்.
ரேங்க் கார்டு கொடுத்ததையும் மறைக்க முடியாது.
அப்புறம் என்ன.??ஸ்டார்ட் மியூசிக் தான்..

கொஞ்சம் பெரிய கிளாஸ் போனதும்,அரூ கிட்ட கெஞ்சி,அம்மா கிட்ட சைன் வாங்க போனா, மீனு மா,பெரிய சினி ஆக்டர் ஆட்டோகிராப் மாதிரி, போட மாட்டேன்னு அடம் பண்ணும்.

அப்பா கிட்ட வாங்குன்னு துரத்தும்.
சினிமா ஸ்டார் கிட்ட கூட ஆட்டோகிராப் வாங்கலாம்,மீனு மா கிட்ட ..ஹப்பா…பெரிய போராட்டம் தான்..

அப்புறம் வழக்கம் போல,அப்பா கிட்ட அடி வாங்கிட்டு, கையெழுத்து வாங்கிட்டு போவேன்."

ஒரு சிரிப்போடு, தன் சரித்திரத்தை சொல்லி கொண்டிருந்தாள் கீர்த்தி.

"அப்பான்னா,அவ்ளோ பயமா..??"

"ச்சேச்சே…"
என்று வேகமாய் மறுத்து விட்டு,பின் கண்களை சுருக்கி,கட்டை விரல்,மற்றும் ஆட்காட்டி விரல் இரண்டையும், சிறிது சுருக்கி காண்பித்து,உதடு சுழித்து,

"லைட்டா.." என்றாள்.

அவள் பாவனையில் வாய் விட்டு சிரித்தான்.

"அவ்ளோ பயம் இருக்கவ,என்னை மட்டும் எப்படி காதலிச்ச…??"

"யாரின் மனம் யாருக்கென்று, இறைவன் வகுத்தான்,!!
இரு மனம் சேர்வதிங்கு, தேவன் சொல்லி தான்.!!
பூஜைக்கிது ஏற்றதென்று, மலரை படைத்தான்!!
தலைவனும் மாலை என்று சூடிக்கொள்ளத்தான்..!!"

தன் கைகளை மாலையாக்கி, அவன் தோளில் போட்டு பாடினாள்.

அவள் பதிலை, பாடலாய் பாடியவளை கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்,பார்த்தி.
அவனை பார்த்து கண் சிமிட்டினாள்.

"என்ன மாமா..??லுக் எல்லாம் படு ரொமான்டிக்கா இருக்கு…"

புருவம் உயர்த்தி கேட்டாள்.

"இவ்ளோ நாள்,என் வாழ்க்கையில வராம, எங்க இருந்தன்னு பார்க்குறேன்."

"ஹிட்லர் வீட்டுல தான்.."

"ஹிட்லர் அஹ்..??"

"எங்க அப்பா..திரு.கேசவன் தான்.."

"வாலு.. யாரையும் விடுறதில்லை…"
விளையாட்டாய் அவள் மூக்கை பிடித்து ஆட்டினான்.

கொஞ்ச நேரம் இருவருக்கும் இடையில், மௌனம் வந்து அமர்ந்தது.

மகிழ்ச்சியாய் பேசிக்கொண்டிருந்தாலும்,பார்த்தியின் மனதில் அவ்வப்போது,ஒரு சந்தேகம் உதித்து கொண்டே இருந்தது.

தங்கள் திருமணம், சுலபமாய் நடக்கும் என்று தோன்றவில்லை.

மனதில் ஒரு உறுத்தல்,ஊவா முள்ளாய் உறுத்தி கொண்டே இருந்தது.

அவன் உள் மனது, அவனுக்கு எதையோ உணர்த்திக்கொண்டே இருந்தது.மனம் பாரமேர அமைதியாய் இருந்தான்.

அவன் தோள்களில் சாய்ந்திருந்த கீர்த்தி,அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து,அவன் யோசனையை கலைக்கும் பொருட்டு,அவன் மீசையை பிடித்து இழுத்து,

"என்ன மாமா யோசனை…??"

அதில் நினைவு கலைந்தவன்.

"பொம்மு,நான் ஏதாவது உன்கிட்ட கோவப்பட்டா, தப்பு செஞ்சா,உனக்கு பிடிக்காத மாதிரி நடந்துகிட்டா,என் கூட இருந்து, என்ன தண்டனை வேணா கொடு. என்னை விட்டு போயிடாத.."

"ஏன்,மாமா இப்படி எல்லாம் பேசுற..??"

"என்னமோ,தோணிட்டே இருக்கு.."

"அப்படியெல்லாம் ஒன்னும் ஆகாது, மாமா..நம்ம கல்யாணத்துல என்ன பிரச்சனை வரப்போகுது??முன்ன பின்ன தெரியாதவரா நீங்க..??என் அக்கா வீட்டுக்காரரோட, தம்பி.அவருக்கு பொண்ணு கொடுக்கையில,அவர் தம்பிக்கு கொடுக்க மாட்டாங்களா..??சும்மா மனசை போட்டு குழப்பிக்காதிங்க."

அவனுக்கு நம்பிக்கை இல்லை. முன்ன, பின்ன தெரியாதவனாய் இருந்திருந்தால் கூட ,பிரச்சனை இந்த அளவு இருக்காது என்று தோன்றியது.

"ஹ்ம்ம்…ஒருவேளை நம்ம கல்யாணத்துல பிரச்சனை வந்து,நான் உங்க அப்பா கிட்ட, நம்ம காதல் விஷயத்தை பேசி சம்மதம் கேட்டா, நீ என் பக்கம் இருப்பியா..??"

"ஆத்தி.. நான் காதலிக்கிறேன்னு, எங்க அப்பா கிட்ட சொல்லணுமா..??அம்புட்டு தான் என் சோலி. அப்படி ஏதாவது ஆச்சு.

அப்பா, இவர் யாருனே தெரியாது.எங்கயோ பார்த்துருக்கேன்.இவர் தான் அத்தானோட தம்பியானு ??கேட்டுருவேன்.இல்லை ஹிட்லர் வீடு கட்டி அடிச்சுப்புடுவார்."

அவள் சொன்ன மறுநிமிடம், தோள்களில் சாய்ந்து இருந்த அவளை உதறி விட்டு, விரைந்து, அங்கிருந்து கீழே இறங்கி சென்றான்.அவளை திரும்பியும் பாராமல்.

ஒரு நிமிடம் அவன் உதறியதில், தடுமாறி நின்றவள்.என்ன நடந்தது என்று புரியாமல் விழித்தாள்.புரிந்த பிறகு,
தன் தலையில் கொட்டிக்கொண்டு,

'அறிவே இல்லடி கீர்த்தி உனக்கு.இப்படியா விளையாடுவ,??அவரு சென்சிட்டிவ்ன்னு தெரிஞ்சும்..அவர் கோவத்தை கிளறுறதே வேலையா போச்சு, உனக்கு..இனி சாமியை மலையேத்தனும்.. ரொம்ப குஷ்டம் தான் உன் நிலைமை.."

அவள் தெளிந்து, கீழே எட்டி பார்பதற்குள், அவன் சென்றிருந்தான்.

'மின்னல் மாதிரி சரக்குன்னு காணாம போய்ட்டான்..வாம்மா மின்னல்ன்னு கூப்பிட்டா வந்துருவானோ..??ஆண்டவா..கொஞ்சம் ஒழுங்கா பேசி இருக்க கூடாதா நான்.??.நீ கொஞ்சம் கூட சரி இல்லை.இப்படியா படைப்ப என்னை,மேன்னுபாக்சரிங் டிபெக்ட்டோட..'
புலம்பி விட்டு கீழே சென்று தன் அறையில் படுத்தாள்.

அந்த வீட்டில் இரண்டு ஜீவன்கள்,உறக்கம் இல்லாமல் கழித்தது, அந்த இரவை, வெவ்வேறு அறைகளில்.

மறுநாள் மதியம் எப்பொழுது வரும் என காத்திருந்து,அவனை காண சென்றாள், மாதவனின் மெக்கானிக் ஷெட்டிற்கு.
மதிய வகுப்பை புறக்கணித்து.

ஷெட்டிற்குள் நுழைகையில், ஒரு பைக்கை ரிப்பேர் பார்த்து கொண்டிருந்த மாதவன், இவள் வருவதை பார்த்து,வேகமாய் இவள் அருகே வந்து,

"உனக்கும், பார்த்திக்கும் ஏதும் சண்டையா மா.??வந்ததுல இருந்து,எதுவும் சாப்பிடாம,சரியா பேசக்கூட இல்லாம, உம்முன்னு உட்காந்துருக்கான்."

சிறிது தயங்கி,
"சண்டை எல்லாம் இல்லண்ணா. சும்மா விளையாட்டுக்கு பேசுனேன், கோச்சுக்கிட்டார்."

"புரியுது மா.அவன் கொஞ்சம் சென்சிட்டிவ்.உனக்கு தெரியாதது இல்ல.சட்டுன்னு கோவம் வந்துடும்.அவன் மேல பாசம் வைக்க யாருமில்லாம வளர்ந்துட்டான்.

உன்னை தான் எல்லாமுமா நினைக்குறான்.கொஞ்சம் பக்குவமா நடந்துக்கம்மா.."

என்ன கூறுவது என்று தெரியாமல் தலையாட்டினாள்.

"உங்க அக்கா கல்யாணத்துல, உன்னை பார்த்ததுல இருந்து,தினமும் உன் பேச்சு தான். என் பொம்முவுக்கு ,என்னை பிடிக்குமா?என்னை ஏத்துக்குவாளா..? அப்பிடி, இப்பிடின்னு உன்னை பத்தி பேசாம, பொழுதே போகாது அவனுக்கு."

அவன் கூறியதில் ஆச்சர்யம் அடைந்து,
"எங்க அக்கா கல்யாணத்துக்கு தான் அவர் வரலியே..எப்போ என்னை பார்த்தாரு..??"

"உங்க அக்கா கல்யாணத்துக்கு, நானும் அவனும் தான் வந்தோம்.கல்யாணத்துக்கு வந்த ஒருத்தர், என் ரெகுலர் கஸ்டமர்.அவரு வர்ற வழியில, கார் மக்கர் பண்ணிடுச்சாம்.எப்படியோ லிப்ட் கேட்டு வந்துட்டார்.எனக்கு போன் பண்ணி, காரை சரி பண்ணி, மண்டபத்தில விட சொன்னார்.

அது மாதிரி விட வரும் போது, பிளக்ஸ் பார்த்து தான், அது பார்த்தி அண்ணா கல்யாணமுன்னே தெரியும்.
அப்போ அவன் மனநிலை எப்படி இருந்திருக்கும்.??

அவன் உள்ள வரலைன்னு வெளியே, காருக்குள்ள இருந்துகிட்டான். நான் உள்ள கார் ஓனர் அஹ் பார்த்து பேசிட்டு வரும் போது, அவன் முகத்துல அப்படி ஒரு சந்தோசம்.போகையில் இருந்த நிலை என்ன?? இப்போ வரும் போது இப்படி இருக்கானேன்னு கேட்டதுக்கு அப்புறம் தான் சொல்லுறான், அங்க உன்னை பார்த்தானாம்."

அவன் கூறியதை கேட்கையில், அவளுக்கு ஆச்சர்யம் கூடிக்கொண்டே போனது.

"அதுல இருந்து, உன்னை பத்தி பேசாம அவன் நாள் போனதில்லை."

முதல் தடவை ,அவள் இந்த ஷெட்டிற்கு வரும்போது, மாதவன் ஏதோ சொல்ல வந்ததும்,பார்த்தி அதை தடுத்து, வேறு பேச்சு மாற்றி ,அவளை அழைத்து சென்றதும் ஞாபகம் வந்தது.

உள்ளே பொங்கிய மகிழ்வோடு,
"அவரு எங்கண்ணா..??"

"உள்ள இருக்க அறையிலே இருக்கான் மா..அவனை பார்த்துக்கோம்மா.."

"நீங்க இதை சொல்லணுமாண்ணா. அவர் என் பொறுப்பு.விடுங்க கவலையை.."

அவனிடம் கூறிக்கொண்டே,அவ்வறை நோக்கி விரைந்தாள்.

எப்படியோ, இருவரும் சந்தோசமாய் இருந்தால் சரி என்று எண்ணி,விட்ட தன் பணியை தொடர சென்றான் மாதவன்.

அந்த அறையில் உள்ள கயிற்று கட்டிலில்,விட்டத்தை வெறித்து நோக்கிய வண்ணம்,படுத்திருந்தான் பார்த்தீபன்.
வாழ்கையையே வெறுத்த தோற்றம்.

உள்ளே நுழைந்த கீர்த்தி,அவன் நிலை பார்த்து,
தொண்டையை செருமி,

"தனிமையிலே ,இனிமை காண முடியுமா..??
நள்ளிரவினிலே, சூரியனும் தெரியுமா..??"
என்று பாடினாள்.

அவள் குரலில் ,அவள் புறம் பார்வையை மட்டும் திருப்பியவன்,மறுபடியும் விட்டத்தை வெறிக்க ஆரம்பித்தான்.

'கீர்த்தி உன் நிலைமை ரொம்ப குஷ்டம்…சமாளி'

"இங்க என்ன பண்ணுறீங்க.??எழுந்திரிங்க..எனக்கு மொபைல் வாங்கி தர்றேன்னிங்கல்ல..மறந்துருவேணு நினைச்சீங்களா..??கோச்சுக்குற மாதிரி சீன் போட்டா, செலவு வைக்க மாட்டேன்னு நினைச்சீங்களா??வாங்க,வாங்க…"

ஒன்றுமே நடக்காதது போல,
அவன் கை பிடித்து இழுத்து எழுப்பினாள்.

அவள் இழுப்புக்கு, அவன் இம்மி கூட அசையவில்லை.இருந்தாலும் அவள் விடவில்லை.

"உன்னை விட மாட்டேன்,
காதல் வரம் கேட்டேன், தந்திடு கண்ணா…!!
சின்னஞ்சிறு மாது, கண்ணில் விடும் தூது…!!
வந்திடு கண்ணா!!"

அவனை பார்த்து கண் சிமிட்டி பாடினாள்.
இப்பொழுது,
அவளுக்கு சற்று இறங்கி,அவனே எழுந்து உட்கார்ந்தான்.

'ஹப்பா.. மலையை அசைச்சாச்சு.. கீழ இறக்கனுமே..ஆண்டவா..ஹெல்ப் மீ..'

"என் அக்கா கல்யாணத்துக்கு வந்து,என் பெர்மிஸ்ஸின் இல்லாம, என்னை சைட் அடிச்சுருக்கீங்க. இதுக்கெல்லாம் தண்டனை தர வேண்டாம்."

புருவம் உயர்த்தி கேட்டு விட்டு,அவன் அருகில் கயிற்று கட்டிலில் அமர்ந்தாள்.

"சொல்லுங்க..சொல்லுங்க..பாம்பேல நீங்க என்ன பண்ணிட்டு இருந்திங்க…??"

கேட்டு விட்டு அதற்கு எக்கோ வேறு கொடுத்தாள்.

இப்பொழுது பார்த்தி முகத்தில், சிறு புன்னகை எட்டி பார்த்தது.அதை கஷ்டப்பட்டு மறைக்க முயன்றான்.

"ஏய்..சிரிச்சுட்டீங்க.நீங்க அவுட்..நான் தான் ஜெயிச்சேன்..ஒழுங்கா ஒத்துக்கோங்க.. இல்லை, மாது அண்ணாவை கூப்பிடுவேன்."

"என்னடி வேணும் இப்போ உனக்கு…??"

"உன் புன்னகை என்ன விலை..??
என் இதயம் சொன்ன விலை!!…"

அவள் ரகளை தாங்காமல் சிரித்து விட்டான்.

"ஹப்பா.. சிரிச்சுட்டீங்களா…??சரி, வாங்க வாங்க. மொபைல் வாங்க போவோம்.உங்களுக்கு பெரிய செலவா வைக்குறேன், காஸ்ட்லி மொபைல் வாங்கி…"

"உனக்கு வாங்கி தராம, யாருக்கு தர போறேன்.வா.."
என்று அழைத்து சென்றான்.

அவனை மலை இறக்கிய சந்தோஷத்தில் அவளும், அவன் பின்னே சென்றாள். நேற்று பேசிய பேச்சிற்கு, அவனும் விளக்கம் கேட்கவில்லை. இவளும் விளக்கம் கொடுக்கவில்லை.

ஒரு வேளை இதில் ஏதாவது ஒன்று நடந்திருந்தால்,பிற்காலத்தில் வரும் பிரச்னையை, இருவரும் சுலபமாக சமாளித்திருக்கலாம்.விதி யாரை விட்டது.
விதி வழியே வாழ்கை.

….தொடரும்…



 

Padma

Active member
கீர்த்தி பண்ற அலும்புக்கு அவ அப்பாகிட்ட அடி வாங்காம இருந்தா தான் ஆச்சர்ய படனும் 😂 😂 😂
சனிபகவான் அப்பப்ப அவ நாக்குல நர்த்தனம் ஆடுவாரோ :unsure::unsure:
 
Top