கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தானா வந்த சந்தனமே...அத்தியாயம்-16

Nilasubramanian

Moderator
Staff member
அத்தியாயம்-16

மலைக்கோட்டையை அடையும் வரை, இருவரும் பேசிக்கொள்ளவில்லை.அங்கே இறங்கி சாமிக்கு பூ,பழம் வாங்கினார்கள்.

கீர்த்திக்கு, மல்லிகை பூ வாங்கிக் கொடுத்தான்.
ஆசையுடன் அதை வாங்கி, தலையில் சூடிக்கொண்டாள்.

பின்பு மலையேறி,அங்கிருக்கும் விநாயகரை தரிசித்து விட்டு,கீழே இறங்கி தாயுமான சுவாமிகளையும் தரிசித்து விட்டு,அங்கு உள்ள பிரகாரத்தில் அமர்ந்தார்கள்.

அதுவரை இருவரிடமும் மௌனம் மட்டுமே.
அங்கு அமர்ந்த பின்பு,

"ஏன் மாமா உம்முன்னு இருக்க..??நான் என்ன பண்ணேன்??இன்னிக்கு என் பிறந்த நாள்.நீங்க இப்படி இருந்தா, எனக்கு கஷ்டமா இருக்காதா??"

அவள் பேச்சில் சிறிது தெளிந்தவன்.

"சரி,எங்க போலாம்??,சொல்லு.."

"எனக்கு, இங்க என்ன இடம் தெரியும்??நீங்களே சொல்லுங்க.."

"இங்க தானே காலேஜ் படிச்ச??எங்கேயும் போனதில்லையா??"

"க்கும்.. எங்க அப்பா விட்டுட்டாலும், வீடு விட்டா காலேஜ்,காலேஜ் விட்டா வீடு.அம்புட்டு தான் நமக்கு தெரிஞ்ச இடம்."

"சரி,இங்கயிருந்து முக்கொம்பு,கல்லணை போய்ட்டு. அங்கிருந்து கிளம்பி போய், ஹோட்டல்ல பார்சல் வாங்கிட்டு,மாதுவோட மெக்கானிக் ஷெட் போய்ட்டு, அங்க சாப்பிட்டு,அப்புறம் மதியம், ஒரு புது படத்துக்கு போய்ட்டு, சாயங்காலம் வழக்கம் போல வீட்டுக்கு…சரியா??"

புன்னகையுடன்,
"சரி மாமா.."

அங்கிருந்து கிளம்பி,கல்லணை போனார்கள்.அந்த காலத்தில், கரிகால சோழனால் கட்டப்பட்ட ஆணை.இன்றும் பேரோடும்,புகழொடும் நிலைத்து நிற்கிறது.என்ஜினீயர்கள் யாரும் இல்லாத காலத்தில் கட்டப்பட்டது.

அதற்கு பிறகு என்ஜினீயர்கள் வைத்து கட்டிய அணைகள் பல இப்போது இல்லை.

அங்கு பெரும்பாலும், காதலர்கள் தான் அமர்ந்திருந்தார்கள்.இவர்களும், நிழலாக இருந்த இடத்தில், ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள்.

"என் புடவை எப்படி இருக்குன்னு, சொல்லவே இல்லையே மாமா..?"

"அதான் காலையில ஒருத்தன், பாட்டாவே பாடிட்டானே,அப்புறம் என்ன??"

அவன் கன்னத்தை கிள்ளி இழுத்து,

"பீம் பாய்க்கு பொறாமையை பாரு.யார் சொன்னா என்ன??நீங்க சொல்லுறது, எனக்கு முக்கியம் இல்லியா??நீங்களும், அவங்களும் ஒண்ணா??நீங்க தான் மாமா, எனக்கு முக்கியம்.."

அவன் முகத்தில், புன்னகை எட்டிப்பார்த்தது.
இப்பொழுது எழுந்து, புடவை கடை மாடல் போல,புடவையை விரித்து பிடித்து, ஒரு சுத்து சுத்திக்காட்டினாள்.

"நல்லா இருக்கா??"
புருவம் தூக்கி கேட்டாள்.

"என் பொம்முக்கு என்ன??அவ தேவதை மாதிரி அழகா இருக்கா. எல்லா டிரஸ்சும், அவளுக்கு அழகா இருக்கும்.."

"ஹச்…இவ்ளோ ஐஸ் ஆகாது, மாமா.."

அவள் பாவனையில் சிரித்து விட்டு,
"நிஜமாடா ஜாங்கிரி.."

"ஹப்பா சிரிச்சுட்டீங்களா..??சூப்பர்.இப்போ எவ்ளோ நல்லா இருக்கு..சும்மா உர்ருன்னு இருந்துகிட்டு."

அவள் கைகளை பிடித்து அழுத்தம் கொடுத்து,
"நீ ,எனக்கு மட்டும் தான் பொம்மு.யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்."

"நான் உங்களுக்கே, உங்களுக்கு தான் மாமா.அப்படியே சாப்பிடலாம்..
ஹார்லிக்ஸ் அஹ் மாறி விட நான் ரெடி,
என்னை அப்படியே சாப்பிடலாம் நீங்க ரெடியா??"
கண்சிமிட்டி பாடினாள்.

அவள் பாடலில் சிரித்து,
"எப்போ பாரு சாப்பாடு.."

"பின்ன, அது முக்கியம் இல்லியா??
சாப்பாடு,அதானே எல்லாம்…"

நகை கடை, விளம்பரம் ஸ்டைலில் பேசிக்காட்டினாள்.

இப்பொழுது சத்தமாக சிரித்தான்,பார்த்தி.

"நேத்து நைட், எவ்ளோ சர்ப்ரைஸ்ஸா வந்து,கேக் கட் பண்ணி,எனக்கு எவ்ளோ ஹாப்பி தெரியுமா மாமா..??"

"உங்க வீட்டுலயும், இப்டி தானே கொண்டாடுவீங்க??.."

"இப்படியா..??பன்னெண்டு மணிக்கு, இப்படி எழுந்து,கொண்டாடுனா. ஹிட்லர் ருத்திர மூர்த்தி ஆகிடுவார்.அதோட, கேக் கட் பண்ணுறதெல்லாம் பிடிக்காத, அக்மார்க் தமிழன் அவர்.

காலையில எழுந்து குளிச்சு,புது டிரஸ் போட்டு,அம்மா,இல்ல அரூ கூட கோயிலுக்கு போய்ட்டு, காலையில அம்மா செய்யுற ஸ்வீட்,மதியம் வடை, பாயாசத்தொட சாப்பாடு.அவ்ளோ தான். அப்பாக்கு, என் பிறந்த நாளே தெரியாது.

அம்மாவோட ஸ்வீட் பார்த்து.ஓ..பிறந்த நாளா??, அப்டிங்குற லுக் கொடுப்பார்.அம்மா,அவரையும் கூப்பிட்டு,சேர்ந்து நின்னுப்பாங்க.அவங்க கால்ல விழுந்து, ஆசிர்வாதம் வாங்கிக்குவேன்.

அம்மா பணம் ஏதாவது தருவாங்க..அதுல சாக்லேட் வாங்கி, பிரென்ட்ஸ்க்கு கொடுப்பேன்.அம்புட்டு தான், என் பிறந்த நாள்."

இப்படி குடும்பத்துடன் கொண்டாடுவதும், சுவாரஸ்யமாய் இருந்தது பார்த்திக்கு.

பாட்டி இருந்த வரை அவன் பிறந்த நாளும் இப்படி தான்,பாட்டியின் ஆசிர்வாதத்தோடு,புது துணியுடன்,மாமியின் ஸ்வீட்டும் சேர்ந்து,முடியும்.பாட்டிக்கு பிறகு, யாருக்கும் ஞாபகம் கூட வந்ததில்லை.

கீர்த்தி பாட்டுக்கு, வாய் ஓயாமல் வளவளத்து கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரம் அங்கே இருந்து விட்டு, முக்கொம்பு போனார்கள்.அங்கு கொஞ்ச நேரம் செலவழித்து விட்டு,திருச்சி திரும்பி,ஹோட்டலில் உணவு வாங்கிக்கொண்டு, மாதுவின் மெக்கானிக் ஷெட் வந்தார்கள்.

மாது இவர்களை பார்த்துவிட்டு,
"பிறந்த நாள் வாழ்த்துக்கள் மா.."
மகிழ்வோடு வாழ்த்தினான்.

"தேங்க்ஸ் ண்ணா.."

தன் பைக்குள் இருந்த கேக் பாக்ஸ் எடுத்து,அவனுக்கும், அங்கு உள்ளவர்களுக்கும் கொடுத்தாள்.

இரவு, பார்த்தி கொண்டு வந்த கேக்கை,ஸ்லைஸ் போட்டு வைத்திருந்தாள்.


அங்கிருந்த அனைவர்க்கும், உணவு கொடுத்து விட்டு,மாது, பார்த்தி,கீர்த்தி மூவரும்,உள் அறையில் அமர்ந்து சாப்பிட்டார்கள்.

"பரவால்ல, கேக்கெல்லாம் மிச்சம் வச்சுருக்க,உப்பு,உரைப்பு பார்த்தே தீர்ந்து இருக்கும்னு நெனச்சேன்.."

பார்த்தியின் கிண்டலில்,முகம் சுளித்து,
"பாருங்கண்ணா.."
என்று சிணுங்கினாள்.

"ஏன்டா,என் தங்கச்சியை கிண்டல் பண்ணுற..?? உப்பு,உரைப்பு சரி இல்ல போல,நீ வாங்கி கொடுத்த கேக்ல,அதான் பிள்ளைக்கு சாப்பிட முடியல.."

"அண்ணா,நீங்களுமா..??"

இருவரும் சிரித்தார்கள்.

"நீங்க எப்போவும், எனக்கு தான் சப்போர்ட் பண்ணனும்.நான் உங்க பாச மலர்."

"இப்போ அதானே பண்ணேன்."

"நல்லா பண்ணிங்க போங்க.வச்சு செய்யுறீங்க.."
கலகலப்போடு, உணவு வேலை முடிந்தது.

அதன் பின், அங்கிருந்து கிளம்பி, சினிமாவிற்கு சென்றார்கள்.

படம் நன்றாக இருந்தது.

படம் முடித்து வெளியே வருகையில் கீர்த்தி,உம்மென்று இருந்தாள்.

"ஏன்டா பொம்மு, படம் பிடிக்கலியா??"

"நல்ல தான் இருந்துச்சு மாமா.ஆனா, அந்த ஹீரோ காதலிச்ச பொண்ணை, வில்லன் கல்யாணம் பண்ணதும், கஷ்டமா போச்சு."

"அப்போ தானே ஹீரோயின், ஹீரோவை கல்யாணம் பண்ண முடியும்.அந்த பொண்ணை கல்யாணம் பண்ணா, ஹீரோயின் என்ன பண்ணுவா..??"
பார்த்தி சிரிப்போடு சொன்னான்.

"ச்சு.. என்னமோ போங்க..எனக்கெல்லாம் இப்படி ஆச்சு,உயிரோடவே இருக்க மாட்டேன்.."

"ஏய்,…."

அவளை அடிக்க கை ஓங்கியவன்.நிதானத்திற்கு வந்து,சுற்றிலும் பார்த்துவிட்டு,
"லூஸா நீ.. பிறந்த நாளும் அதுவுமா என்ன பேசுற..??"

அவன் கை ஓங்கியதில் அதிர்ந்து,அவன் கேள்வியில் திகைத்தவள்,
"இல்ல..மாமா..சும்மா.."

"என்ன சும்மா..??எதுல விளையாடுறதுன்னு இல்ல.."

அவன் கோபம் அடங்க மறுத்தது.
சில நொடிகள் எடுத்து, நிதானத்திற்கு வந்தவன்,பைக்கை கிளப்பி,
"ஏறு.."
என்றான்.

அமைதியாய் அவன் பின்னல் ஏறி அமர்ந்தாள்.

'ஏண்டி,கீர்த்தி?? வரும் போதும்,கோவத்தோட வந்தான்.போகும் போதும், அப்படியே கூட்டிட்டு போற..வாய் வச்சுட்டு சும்மா இருக்க மாட்டியா..??'

தெரு முனையில் அவளை இறக்கி விட்டான்.

"சாரி மாமா..இனி இப்டி பேச மாட்டேன்.."
அவன் பதில் ஏதும் சொல்லவில்லை.

"நைட், மொட்டை மாடி வருவீங்கள்ல??"
பதில் கூறாமல் பைக்கை கிளப்ப போனான்.

"நீங்க வர்ற வரை, அங்க தான் இருப்பேன்..விடிஞ்சாலும் சரி.."
அவள் பதிலில், ஒரு நொடி அவள் முகம் பார்த்தவன்.வேகமாய் அங்கிருந்து சென்றான்.

'பீம் பாய்க்கு ஆ..னா…ஊ..னா.. கோவம் மூக்குக்கு மேல வருது.இவனை சமாளிக்கவே,ரெண்டு வேளை, ஜாஸ்தி சாப்பிடணும் போல..'
நினைவுகளுடனே, வீட்டிற்குள் நுழைந்தாள்.

அகிலாண்டம் ஹாலில் அமர்ந்திருந்தார்.அவரை கவனிக்காமல்,மாடியேற சென்றாள்.

"கீர்த்தி .."
நின்றவள் ,அகிலாண்டதை பார்த்து,

'ஸ்பீட் பிரேக்..எதுக்கு கூப்பிடுது..??'

"அத்தை.."

"இன்னிக்கு, உனக்கு பிறந்த நாளாமே.. வாழ்த்துக்கள்."

"தேங்க்ஸ் அத்தை.."

அவர் பின் இருந்த ஆர்த்தி,அவர் காலில் விழுமாறு சைகை செய்தாள்.

'இது வேறயா..??பூசணி கால்ல வேற விழனுமா..??வேற வழி இல்லை..விழ வேண்டியது தான்..'

அவர் காலில் விழுந்தாள். மகிழ்ந்து போன அகிலாண்டம்.

"நல்லா இரு…நல்ல புருஷன் கிடைக்கட்டும்.."
அவர் வாழ்த்தில், முகத்தில் தோன்றிய புன்னகையுடன் எழுந்தாள்.

"ஆர்த்தி.."

அவள் குரலுக்கு காத்திருந்தது போல,ஒரு தட்டில் , வெந்தய நிற பட்டுப்புடவை,அதன் மேல் கொஞ்சம் பூ, கண்ணாடி வளையல்.குங்கும சிமிழில் குங்குமம் வைத்து, கொண்டு வந்தாள்.

"நீயே உன் கையால, உன் தங்கச்சிக்கு கொடு.."

மகிழ்வோடு,குங்குமத்தை எடுத்து அவளுக்கு வைத்துவிட்டு,அவளிடம் தட்டை நீட்டினாள்.

அதை வாங்கிக்கொண்டு,மாடிக்கு சென்றாள் கீர்த்தி.

இரவு உணவுக்கு பின், இவள் அறைக்கு வந்தாள் ஆர்த்தி.

"என்னடி, அதிசயமா இருக்கு..??இளவரசியார் இங்கு தரிசனம் கொடுத்துருக்கிங்க.."

"சும்மா..தான் டி.. பேசி ரெம்ப நாள் ஆச்சு..அதான்.."

"ஹ்ம்ம்..பேசு..பேசு..பூசணி கிட்ட பெர்மிஸ்ஸன் வாங்கிட்டியா..??"

"ஏண்டி,எப்போ பாரு அவங்களையே வம்புக்கு இழுக்குற.. அவங்க எவ்ளோ நல்லவங்க பாரு.. உனக்கு பிறந்த நாள்ன்னு சொன்னதும்.பட்டுப்புடவை எல்லாம் கொடுக்குறாங்க.."

"ஆடி தள்ளுபடிக்கு, விக்காத புடவையா இருக்கும்..அதை, பெரிய மனசு பண்ணி தந்துருப்பாங்க.."

"ச்சு.. ஏண்டி இப்டி பேசுற.??."

"பின்ன, இவங்க பெரிய ராஜபரம்பரை.நீங்க புடவை கொடுத்ததும்,நாங்க சேவகி மாதிரி.நன்றி மகாராணின்னு, புளங்காயுதம் அடையனுமா..??"

"போடி…உன்ன மாத்த முடியாது.."

"நீ ஒரு ஆணியும்……போய் படு…"

"போடி எருமை.."
கூறிவிட்டு, ஆர்த்தி அவள் அறைக்கு போய் விட்டாள்.

'வந்துட்டா..பூசணிக்கு கொடி பிடிச்சிட்டு.. அது எவ்ளோ பெரிய வில்லின்னு, எனக்கு தானே தெரியும்..'

பார்த்தியை சந்திக்கும் நேரம் வந்ததும்,மொட்டை மாடிக்கு சென்றாள்.

அவளை அதிக நேரம் காக்க வைக்காமல், பார்த்தி வந்தான்.

இன்னும் உம்மென்று தான் இருந்தான்.

அவன் இவள் அருகில் அமர்ந்ததும்,

"கண்ணேன்னு சொல்ல வேண்டாம்!!
கிளியேன்னு கிள்ள வேண்டாம்!!
கண்ணாலே, கொஞ்சம் பாரு போதும்.
நீ வாழும் வீட்டுக்குள்ள,
நீ போடும் கோட்டுக்குள்ள,
நீங்காம இந்த பொண்ணு வாழும்!!
உன்னையே நானே, உசுரால் தானே,
நெனச்சேன் மாமா,
நெசந்தான் ஆமா..!!
நான் வாங்கும் மூச்சு காத்து, உன்னால தான் உன்னால தான்..!!
ஓயாமல் உள்ளம் சொல்லும், உன் பேரை தான்
உன் பேரை தான்..!!
சொந்தம்… பந்தம்.. நீ…!!
மாசங்கள் போனாலும்,
வருஷங்கள் ஆனாலும்,
பாசங்கள் போகாது மாமா..!!"
அவன் தோள் சாய்ந்து பாடினாள்.


"ஏதாவது சொல்ல வேண்டியது..அப்புறம், பாடி சமாதானபடுத்த வேண்டியது."

"வேற என்ன பண்ண.??.என் மாமனுக்கு, பொசுக்கு பொசுக்குன்னு மூக்குக்கு மேல கோவம் வருது.."

அவன் மூக்கை பிடித்து ஆட்டி சொன்னாள்.

"என்னை நினைச்சு பார்த்திருந்தா, அப்படி பேசி இருப்பியா..??"

"உன்னை காணாமல் நான் ஏது??
உன்னை எண்ணாத நாள் ஏது..??"
அடுத்த பாட்டு.

"பாடியே சமாளி.."

"சரி ,இனி அப்படி பேச மாட்டேன்.போதுமா..??"

"ஹ்ம்ம்.."

"கொஞ்சம் சிரிங்களேன்".

இப்பொழுது, அவன் முகத்தில் சிறிது புன்னகை எட்டி பார்த்தது.

கொஞ்ச நேரம், சாதாரணமாய் பேசி கொண்டிருந்தார்கள்.

"அடுத்த வாரம் கோகுலாஷ்டமி..
அரூ மாசமா இருக்காதாலை, பெருசா செய்யுறாங்களாம்.நிறைய பேரை கூப்பிட்டு.
நீங்க வருவிங்களா..??"

"நான் வந்தா, அவங்க ஏதாவது பிரச்சனை பண்ணுவாங்க..அவமானப்படுத்துவாங்க.
அப்புறம், எல்லார் முன்னயும், ராசபாசம் ஆகிடும்.
அவங்களுக்கு ஒண்ணுமில்லை.எனக்கு தான் கஷ்டமாயிடும்..எல்லோர் முன்னயும்.."

அவள் ஒரு நிமிடம் பேசவில்லை.

"நீங்க வாங்க..அவங்க வர மாட்டாங்க.."

"அவங்க வீட்டு ஃபங்சன்,அவங்க எப்படி வராம இருப்பாங்க..??"

"அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்..நீங்க வாங்க.."

"ஹ்ம்ம்..பார்ப்போம்.."

"கட்டாயம் வரிங்க.."

"சரி, வரேன் உனக்காக..அவங்க என்ன சொன்னாலும் கோவப்படல.."

"அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்க..அங்க இருந்தா தானே சொல்லுவாங்க.."

"எங்க போவாங்க..??"

"போக வேண்டிய இடத்துக்கு.."

அவளை கேள்வியாக பார்த்தவன்.அதன் பின் ஏதும் கேட்கவில்லை.

ஒரு வாரம் சென்றிருந்தது.
காலையில் இருந்தே, கிருஷ்ணா ஜெயந்திக்கு, வீடு விழா கோலம் பூண்டிருந்தது.

ஆட்கள் வருவதும், போவதுமாக இருந்தார்கள்.
பூஜை அறை அலங்காரம்,பலகாரம் செய்வதற்கு ஆட்கள் என்று, நிறைய பேர் இருந்தார்கள்.

கீர்த்தி,சரியான நேரத்துக்கு காத்திருந்தாள்.

மாலையில் விசேஷம்.

அகிலாண்டம், ஹாலில் அமர்ந்திருந்தார்.அவர் கட்டளையில், பணிகள் நடந்து கொண்டிருந்தது.

அரூ, இன்று கடைக்கு போகாமல், வீட்டில் இருந்தாள்.

ஆரவ் மட்டும் சென்றிருந்தான்.மாலையில், விரைவில் வர சொல்லி, அகிலாண்டம் கூறி அனுப்பி இருந்தார்.

"மாமி, ஒரு காபி கொடுங்க.."
சமையலறை நோக்கி குரல் கொடுத்தார்.

"இதோ வரேன் மா.."
மாமி பதில் கூறிவிட்டு, காபி கலந்தார்.

கீர்த்தி எதிர்ப்பார்த்த சந்தர்ப்பம் வந்து விட்டது.

மாமி கலந்து முடித்து, எடுத்துக்கொண்டு ஹால்க்கு வர திரும்பையில்,

"மாமி,இங்க என்ன பண்ணுறீங்க..??அங்க, கண்ணன் பாதம் போட, உங்களை தேடுறாங்க.. சீக்கிரம் போங்க.."

"ஏண்டி மா.அங்க அதுக்குன்னு, தனியா ஆள் வந்திருந்தாளே..??"

"தெரியல மாமி..உங்க அளவு, நல்லா வரைய தெரியல போல, அவங்களுக்கு.."

"சத்த இருடி மா..இந்த காபியை அகிலாமா கிட்ட கொடுத்துட்டு போறேன்."

"நீங்க கொடுங்க மாமி..நான் கொடுத்துக்குறேன்.."

"சரிடி குழந்தே, இந்தா.."

கொடுத்துவிட்டு, மாமி சமையல் அறையை விட்டு சென்றார்.

அவர் சென்றதும், வேகமாய், தன் கையில் மறைத்து வைத்திருந்ததை எடுத்து பிரித்து, அந்த காபியில் கலந்தாள். நன்றாக ஸ்பூன் போட்டு கலக்கினாள்.

"என்னடி பண்ணுற..??"

பின்னிருந்து கேட்ட ஆர்த்தியின் குரலில், தூக்கி வாரி போட்டு திரும்பினாள்.

"ஒ….ஒண்ணுமில்லையே.."

"அங்க அத்தை, காபி கேட்டு இவ்ளோ நேரமாச்சு.எங்கன்னு பாருன்னு, என்னை அனுப்புனாங்க.இங்க மாமியை காணும்.நீ எதை கலக்குற..??"

"அது… மாமியை, அலங்காரம் பண்ணுறவங்க கூப்பிட்டாங்க..அதான், காபியை என் கிட்ட கொடுத்து, கொடுக்க சொன்னாங்க.அதுக்குள்ள நீ வந்துட்ட.."

"சரி, காபி கொடுக்காம, எதை கலக்குற..??"

"இல்ல..சக்கரை கரைஞ்சுதா தெரில..அதான் கலந்தேன்."

"அத்தைக்கு தான் சுகர் இருக்கே..அவங்க சர்க்கரை போட்டுக்க மாட்டாங்களே.."

'அதுக்கு சுகர் மட்டுமா இருக்கு..கொழுப்பும் ஜாஸ்தியா இருக்கு..வெள்ளை யானை..'
மெல்ல முணுமுணுத்தாள்.

"என்னடி சொல்லுற..??"

"மாமி, சுகர் போட்டுருப்பாங்கன்னு நினைச்சு கலக்குனேன்.இல்ல போல..சும்மா வளவளன்னு பேசாம, காபி எடுத்துட்டு போ.நீ வந்து அரைமணி நேரம் ஆச்சு..இப்போ லேட் ஆகலியா??உனக்கு.."

"அச்சோ..ஆமாண்டி.அத்தை கோச்சுக்குவாங்க.. கொடு,கொடு.."

அவசரமாய் அவளிடம் வாங்கி கொண்டு, அகிலாண்டத்திடம் சென்றாள் ஆர்த்தி.
அவள் பின்னே சென்று, அவர் காபி குடிப்பதை உறுதி படுத்திக் கொண்டு,அங்கிருந்து சென்றாள் கீர்த்தி.

….தொடரும்…







 

Sundarji

Active member
மாட்டிக்கிட்டா... மாமியாருக்கு மாத்திரை...
 
Top