கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தானா வந்த சந்தனமே...அத்தியாயம்-8

Nilasubramanian

Moderator
Staff member
அத்தியாயம்-8

சற்று நிதானித்து, கண்ணை கசக்கிப்பார்த்தாள்.
பார்த்தீபன் தான் அமர்ந்திருந்தான்.இரவின் கருமையில் விடிவிளக்கின் சிறிய வெளிச்சத்தில்,ஒரு கற்சிலை போல அமர்ந்திருந்தான்.

'இந்த நடுசாமத்துல தூங்காமா,இந்த பீம் பாய் என்ன பண்ணுறான்.??'
கொஞ்சம் நெருங்கி சென்று பார்த்தாள்.

இவள் வந்தது கூட தெரியாமல், ஒரு மோன நிலையில், எதிரே பார்த்துக்கொண்டிருந்தான்.

'அப்படி என்னத்தை பார்க்குறான்.'
இவளும் அவன் பார்க்கும் திசையை பார்த்தாள்.

அங்கே அவன் அப்பா போட்டோ,பெரிய அளவில் ஹாலில் இருந்த புகைப்படம் தான் இருந்தது.

'என்ன,இவன் அப்பா படத்தை என்னமோ புதுசா பார்க்குற மாதிரி பார்க்குறான்.இதுவரை இவன் இந்த படத்தை பார்த்ததே இல்லியா??'

இவள் யோசித்துக்கொண்டிருக்கையில், இவள் நிற்பதை உணர்ந்தவன்,இவள் புறம் திரும்பினான்.

'ஏன் பார்க்குறேன்னு அடிச்சுப்புடுவானோ??'

ஒரு நிமிடம் ஜெர்க் ஆகி முழித்தாள்.
இவளை பார்த்ததும் வேகமாய் எழுந்து, கண்களை துடைத்து கொண்டு, ஹாலின் வலது புறம் இருந்த அறைக்குள் சென்று மறைந்தான்.

'அழுதானோ??கண்ணு லேசா கலங்கி இருந்த மாதிரி தான் இருந்துச்சு.இந்த வெளிச்சத்துல சரியாய் தெரியலை.
எதுக்கு அழுதுருப்பான்??ஏன்டா தகப்பா என்னை பெத்த,இது நியாயமாடானா??இருக்கலாம்,இருக்கலாம்.இந்த பூசணியை பார்த்தா, யாருக்கா இருந்தாலும் கடுப்பாகும் தான்.
இது தான் இவன் அறையா??நான் இது ஏதோ, ஆபீஸ் ரூம்ன்னு நெனச்சேன்.'

அவ்வறை வெளியே இருந்து பார்க்கும் போது, அந்த வித அமைப்போடு தான் இருக்கும்.வீட்டினுள் ஒரு கதவும், வெளியே இருந்து நேரடியாய், வீட்டிற்குள் வராமல் அந்த அறைக்கு வருவதற்கு ஒரு கதவும் இருக்கும்.

'முன்ன ஆபீஸ் ரூம் அஹ் இருந்துருக்கும் போல.
இந்த பீம் பாய் பத்தி இன்னும் தெரிஞ்சுக்கணுமே, யாரை பிடிக்கலாம்??.
யார் கிட்ட கேட்டாலும், சந்தேகம் வாராமை கேட்கனும்.

பதிலும் ஒழுங்கா வரனும். அதுக்கு யார் சரியான ஆள்.?? ஆர்திக்கு தெரிஞ்ச வரை சொல்லிட்டா,
இதுக்கு மேல கேட்டா, அவளுக்கு சந்தேகம் வந்துடும்,பூசணிக்கு தெரியாம விசாரிக்கனும்.

வெள்ளை காக்காயை நம்பி கேட்க முடியாது.அம்மா கிட்ட, இல்ல ஆர்த்தி கிட்ட உளருச்சுன்னா, அம்புட்டு தான்.

ஹ்ம்ம்…ஓ…சூப்பர்..பங்கஜம் மாமி.
அவங்க தான் சரியான ஆளு. அன்னைக்கு இவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசுனாங்க.

அவங்க, இங்க ரொம்ப வருசமா வேலை பார்க்குறதா சொன்னாங்கல்ல, அவங்க கிட்ட கேட்டா எல்லாம் தகவலும் கிடைக்கும்.
அவங்களுக்கு சந்தேகம் வராத மாதிரி எப்படி கேட்குறது.??'

பல கேள்விகளுடன் தண்ணிரை நிரப்பிக்கொண்டு, அவள் அறைக்கு வந்து சேர்ந்தாள்.

மறுநாள் காலை காபி முடித்ததும்,அறைக்கு வந்தவள், அனைவரும் சாப்பிட்டு செல்லும் வரை கீழே வராமல் பொறுமை காத்தாள்.

முதலில் ஆரவ்,ஆர்த்தி வெளியே கிளம்பியதும்,சில நிமிட இடைவெளியில் அகிலாண்டமும் சாப்பிட்டு விட்டு கடைக்கு கிளம்பினார்.

அவர் கிளம்பும் சமயம் கீழே வந்தவளிடம்,
"இன்னிக்கு ஏன் இவ்ளோ லேட். சீக்கிரம் சாப்பிடு"
என்றார்.

"கொஞ்சம் நோட்ஸ் எடுத்தேன் அத்தை. இதோ சாப்புடுறேன்"
என்று கூறிவிட்டு சாப்பிட அமர்ந்தாள்.

அவள் சாப்பிட ஆரம்பிக்கும் போது, அகிலாண்டம் கிளம்பி வெளியே சென்றார்.
அதன் பின், வேகமாக சாப்பிட்டு விட்டு, சமையல் அறைக்குள் சென்று தட்டை போட்டுவிட்டு,

"உங்களை நான் எப்படி கூப்பிடட்டும்??"

"மாமினே கூப்பிடுமா.. எல்லோரும் அப்படி தான் கூப்பிடுவாங்க.."

"ஓ..சரி மாமி..உங்க வீடு எங்க இருக்கு மாமி??"

"இங்க தான் டி மா..ரெண்டு தெரு தள்ளி"

"உங்களுக்கு எத்தனை குழந்தைங்க மாமி.??."

"ரெண்டு பெண் குழந்தைகள் டி மா"

"ரெண்டு பேரும் ஸ்கூல் போய் இருக்காங்களா??என்ன படிக்குறாங்க..??"

"ஸ்கூல் அஹ்..??ஏண்டி மா குழந்தே, அவா ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகி, அவா பிள்ளைங்களே ஸ்கூல் போறதுகள்."

"ஓ..அப்படியா மாமி,உங்களை பார்த்தா ரொம்ப இளமையா இருக்கீங்க.பேரன் பேத்தி இருக்க மாதிரியே தெரியலை."

மாமியின் முகத்தில் வெட்க சிவப்பு.

'பின்னுறடி கீர்த்து,மாமி தலையில ஐஸ் பார்ரே வச்சாச்சு.இனி மாமி உருகி வழிஞ்சு உண்மையை கொட்டனும்..'

"பெரிய பொண்ணு கேரளால இருக்கா.. அங்க மாப்பிள்ளைக்கு அரசாங்க உத்தியோகம்.அவளுக்கு ஒரு பொண்ணு,ஒரு பையன்.ரெண்டும் ஸ்கூல் போறதுகள்.

சின்னவ ஹைட்ரேபாத்ல இருக்கா,அவ ஆம்படையான் பிசினஸ் பண்ணுறார்.அவளுக்கு ரெண்டு பையனுங்க.ஒன்னு ஸ்கூல் போறது.இன்னொனுக்கு இப்போ தான் ரெண்டு வயசு ஆகுது.

நான் இங்க தனியா தான் இருக்கேன்.
இங்கேயே தங்கிக்க சொல்லி தான் அகிலாமா சொல்லறா.. எனக்கு தான் என் அம்படையானோட வாழ்ந்த வீட்டை விட்டு வர மனசில்ல..

அதோட, இங்க அசைவம் சமைப்பா சில நாள்,அதுக்குன்னு ஒரு ஆள் போட்டுருக்கா. அன்னைக்கு நான் வர மாட்டேன்.
வாசனை ஒவ்வாது."

மாமி மடை திறந்த வெள்ளம் போல கொட்ட ஆரம்பித்தார்.

"இங்க நீங்க ரொம்ப வருசமா வேலை பார்க்குறிங்கன்னு அத்தை சொன்னாங்களே.."

"ஆமாண்டி மா,அகிலாமாவோட மாமியார் காலத்துல இருந்து பார்க்குறேன்."

"ஓ…அவங்க பேர் என்ன மாமி..??"

"அவா பேர் பர்வதம்.அப்படி ஒரு கம்பிரம்.அவாளை பார்த்தாலே ஒரு பயம் வரும். சின்ன வயசுல, கணவனை இழந்துட்டு,பத்து வயசு பையனோட, தொழிலையும் பார்த்து,சொத்தையும் காப்பாத்தி,ஏகாம்பரம் ஐயாவையும் பொறுப்பான பிள்ளையா வளர்க்குறதுன்னா சும்மாவா.

அப்படியே பெண் சிங்கம் மாதிரி,அப்படி ஒரு தோரணை,குரல்,நடை உடைன்னு.."

மாமி அந்த காலத்துக்கே போய் வர்ணித்தார்.

'அது சரி, லேடி ஹிட்லர் போல'

"அவா பிள்ளையும், அம்மா சொல் படி தான் கேட்பார்.கல்யாண விஷயத்துல மட்டும் ,தன் விருப்பப்படி பவித்ரா அம்மாவை கல்யாணம் பண்ணிக்குவேணு ,பிடிவாதம் பிடிச்சு சம்மதம் வாங்கி கட்டிண்டார்.அவாளும் நல்ல குணவதி.

என்ன?? இவா அளவு வசதி இல்லை.அவா அப்பா நெசவு செய்துட்டு,கொஞ்சம் நிலத்துல விவசாயம் பார்த்துட்டு இருந்தார்.பவித்ராம்மா ஒரே பொண்ணு.இங்க ஏகாம்பரம் ஐயாவும் ஒரே பையன்.அந்தஸ்த்து வேத்துமை இல்லாட்டி, பர்வதம் அம்மாவே முழு மனசோட ஏத்துன்றுபா.

இவர் பிடிவாதத்துக்கு சம்மதிச்சுட்டு, அந்த துவேசத்தை, மாட்டு பொண்ணு மேல காட்ட ஆரம்பிச்சுட்டா."

"பவித்ரா அம்மாவுக்கு கல்யாணம் ஆகையிலே பதினெட்டு வயசு, காலேஜ் முத வருஷம் படிச்சுண்டு இருந்தா.. அவா அப்பா கிட்ட, புடவை மொத்தமா கடைக்கு வாங்க போனப்போ ,இரண்டு பேருக்கும் பழக்கம் ஆகி காதலிச்சுட்டா.. இவா அந்தஸ்த்து பார்த்து தயங்க,அவா பெரிய இடம்னு தயங்க, ஒரு வழியா ஏகாம்பரம் ஐயா பிடிவாதத்துல கல்யாணம் முடிஞ்சுது."

"அருமையான பொண்ணு.பேருக்கு தகுந்த மாதிரி பவித்ரமான பொண்ணு.அதிர்ந்து கூட பேசாது.
கல்யாணம் ஆகி கொஞ்சம் நாளுலேயே, ரெண்டு தடவை உண்டாகி, கரு கலைஞ்சு போச்சு.ரொம்ப ஒல்லியா இருக்கும் கல்யாணத்தப்போவே.

அப்புறம் ரெண்டு வருஷம் கழிச்சு ஒருக்கா உண்டாகி, அதுவும் தங்கலை.
ரொம்ப மனசொடைஞ்சு போச்சு.
அம்புட்டு கோயில், குளம் வேண்டுதல்.

டாக்டர் எல்லாம், இனி இப்படி ஆனா உயிருக்கே ஆபத்துன்னு சொல்லிட்டா..
அன்னையிலிருந்து, பர்வதம்மா கொடுமை முழு மூச்சா ஆரம்பிச்சுடுச்சு.அதுவரை, அப்போ,அப்போ படுத்துனவங்க, அப்புறம் தேள் கொடுக்கு மாறி கொட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

ஏகாம்பரம் ஐயா இல்லாதபோ தான் நெறய நடக்கும். அவர் இருக்கும் போது, நேரடியா பேச மாட்டாங்க.அவரும், பொழுதன்னைக்கும் இருந்து மனைவியை காப்பாத்த முடியுமா.இப்படியே பத்து வருஷம் ஓடிடுச்சு.

ஒரே புள்ள,வாரிசில்லாம போகுது.ரெண்டாம் கல்யாணம் பண்ணிக்கோன்னு, பர்வதம்மா மகனை படுத்த ஆரம்பிச்சுட்டாங்க.அவர் ஒத்துக்கவே இல்ல.அப்புறம் மருமகளை படுத்தி,உருட்டி, மிரட்டி,நீ அவனை சம்மதிக்க வச்சா ,நீயும் இங்க இருக்கலாம்.இல்ல, உன் அப்பா வீட்டுக்கு அனுப்பிச்சுடுவேணு மிரட்டி,
பவித்ரா அம்மாவே, பட்டினி எல்லாம் இருந்து, ஐயாவை சம்மதிக்க வைக்கும் படி செஞ்சுட்டாங்க.

எந்த பொண்ணுக்கும், இந்த நிலை வர கூடாது."

மாமி கலங்கிய கண்ணை துடைத்து கொண்டு, மூக்கு சிந்திக்கொண்டார்.
கீர்த்தியின் மனம் கூட கனத்துப்போனது.

"அப்புறம் என்ன?? பர்வதம் அம்மா சொந்த அண்ணன் மக தான் இந்த அகிலாமா.தம்பி,தங்கச்சின்னு இவங்க கூட பிறந்தது ஏழு பேரு. இவங்க தான் மூத்தவங்க.

இவங்க ஜாதகத்துல தார தோஷம்னு வேற ஜோசியர் சொல்லிட்டார்.இரண்டாம் தாரமா போனா தான் நல்லதுன்னு.

இவங்க குடும்பமும் வாழ்ந்து கெட்ட குடும்பம்.பர்வதம்மா அப்பா காலத்துல ஓகோன்னு இருந்தாங்க..அப்புறம் பெரிய குடும்பம்னு பேரு மட்டும் தான் ,அதுனால இவங்க கேட்டதும் ,அவங்க பொண்ணு கொடுத்துட்டாங்க."

ஒரு நீண்ட பெருமூச்சை விட்டு கொண்டார் மாமி.

"அகிலாமாவுக்கு, இதுல துளி கூட விருப்பமில்லை போல..சின்ன வயசுல கிளி மாதிரி அம்புட்டு அழகா இருப்பாங்க.."

'பச்சை கலருல.. மூக்கு சிவப்பா வளைஞ்சா??'

நல்ல வேளை கீர்த்தியின் மைண்ட் வாய்ஸ் மாமிக்கு கேட்கவில்லை.

"அப்படி இருக்கவங்களை ரெண்டாம் தாரமா கல்யாணம் பண்ணிக்க சொன்னா, கஷ்டமா தான் இருக்கும்..என்ன பண்ண, விதி.கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்துட்டாங்க…"

பேசிக்கொண்டே இருந்த மாமி,
"ஏண்டிமா..நோக்கு கிளாஸ்க்கு நேரமாச்சே..இன்னும் மதியம் சமையல் வேற முடிக்கலை.. நீ சாப்பிட்டு போகணுமே.. சத்த நாழி பொறுடி மா..சமைச்சுடுறேன்.."

'ச்சே..நல்ல நேரத்துல இன்ட்ரவல் விட்டுடாங்களே..இதுக்கு மேல வற்புறுத்தி கேட்டா சந்தேகம் வரும். நாளைக்கு கேட்டுக்குவோம்..'

"பொறுமையா செய்ங்க மாமி,நான் கிளப்பிட்டு வரேன்.."

என்று கூறி விட்டு மாடிக்கு சென்றாள்.

இப்படியே ஒரு வாரம் கடந்திருந்தது.அதன் பின் மாமியை தனிமையில் சந்திக்க முடியவில்லை.
அகிலாண்டம் பெரும்பாலும் வீட்டில் இருந்தார்.இவள் கிளாஸ் போகும் நேரம் தான் அவரும் கடைக்கு சென்றார்.

ஆடிட்டிங் நேரம் என்று, கடை கணக்குகளை வீட்டில் இருந்தபடியே பார்த்துக்கொண்டார்.

'இந்த பூசணி, இப்போதைக்கு கிளம்பாது போலவே.என்ன பண்ணலாம்??'

என்று வகுப்பில் அமர்ந்து கொண்டு, நகத்தை கடித்துக்கொண்டு, தீவிர யோசனையில் இருந்தாள்.

"மிஸ்.திவ்ய கீர்த்தி…எக்ஸ்கியூஸ் மீ…"

என்று அவள் வகுப்பாசிரியர் பலமுறை அழைத்த பின், நிகழ்காலத்திற்கு வந்தாள்.

"எங்க இருக்கீங்க…?"

'இங்க தான், உன் கண்ணு முன்னால தான்..'

"உங்க சிந்தனை எல்லாம் எங்க இருக்கு…??"

'அதை பத்தி எல்லாம் உன் கிட்ட சொல்ல முடியுமா.??.'

"ஆர் யூ இன்ரெஸ்டேட் இன் திஸ் கிளாஸ்..??எனக்கு அப்படி தெரியலை.. உங்க இன்டர்ஸ்ட் எங்கோ இருக்கு..உங்களுக்கு விருப்பம் இல்லைனா..யூ மே கோ…"

அவளிடம் கூறி விட்டு, அவர் வகுப்பெடுக்க ஆரம்பித்தார்.

'என்ன அநியாயமா இருக்கு??..கேஸு இம்புட்டு செலவு பண்ணி சேத்து விட்டுருக்கு..இவர் வெளிய போக சொல்லுறார்..இதுக்காக வெளிய போய் யோசிக்க முடியுமா??இங்க கட்டுன பணத்துக்கு இங்க தான் யோசிப்பேன்..தூக்கம் வந்தா கூட தூங்குவேன்..கேஸு பணத்தை வீணாக்க விட மாட்டேன்..

என் சிந்தனை என் உரிமை..யோசிக்க வேற இடம் வேணும்,அதுக்கு தனியா பீசு கட்டு கேஸுன்னு சொன்னா, கேஸு என்னை கிளோஸ் பண்ணிடும்.'

ஒரு முறைப்புடன், மறுபடியும் வகுப்பில் அமர்ந்து, கவனிப்பது போல் பாசாங்கு செய்து விட்டு, வகுப்பு முடிந்ததும் வழக்கம் போல பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாள்.

அதே நேரத்திற்கு பார்த்தியும், இவளை கிராஸ் செய்து பைக்கில் சென்றான்.

'இவன் தினமும், இந்த பக்கம் ,இந்த நேரத்துக்கு எங்க போறான்.??இவனால இன்னிக்கு திட்டு வேற.கடிவாளம் கட்டுன குதிரை மாதிரி இவனை சுத்தியே என் சிந்தனை எல்லாம் ஓடுது.இவன் என்னடானா என்னை கண்டுக்க கூட மாட்டேங்குறான்.'

அன்று வீட்டிற்கு திரும்பியதும், சோர்வாய் அறைக்குள் அடைந்தவள், காபி,சிற்றுண்டி சாப்பிட கூட வெளியே வரவில்லை.
மாமி இரு முறை இன்டெர்க்கோம்மில் அழைத்து விட்டார்.

"பசியில்லை.."
என்று கூறிவிட்டு, இரவு உணவுக்கு தான் சென்றாள்.

அதற்கு முன் ஆர்த்தி வந்து,
"என்னாச்சு??"
என்று விசாரித்து விட்டு சென்றாள்.

இரவு உணவுக்கு தாமதமாக செல்லும் போது, அனைவரும் உண்டு விட்டு ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள்.கடை சம்பந்தமாய்..

இல்லை ,இல்லை பூசணி பேசுவதை கேட்டு கொண்டிருந்தார்கள்.இது பழகிய ஒன்று என்பதால்,அவர்களை கண்டு கொள்ளாமல் உணவுண்ண சென்றாள்.

அவள், சாப்பிட்டு விட்டு மாடிக்கு செல்ல நினைக்கையில் அகிலாண்டம்,

"கீர்த்தி இங்க வாம்மா.."

'எதுக்கு கூப்பிடுது.. இம்சை..'

"கிளாஸ் பிடிச்சிருக்கா??"

'சுத்தமா பிடிக்கலை..இதை சொன்னா.. விட்டுறவா போறீங்க..'

"ஹ்ம்ம்..பிடிச்சிருக்கு அத்தை.."

"போக, வர சிரமம் இல்லாம இருக்கா.."

'ஒரு பிளைட் ஏற்பாடு பண்ணுங்க..பஸ் ஒரே கூட்டம்..'

"ஒன்னும் பிரச்சனை இல்லை அத்தை.."

"சரி மா..இங்க வசதி குறைவுனாலும் சொல்லு,சரி பண்ணிடலாம்."

'உங்களை தவிர எல்லாமே நல்லா தான் இருக்கு..'

"ஏன் சோர்வா இருக்க..??"

"அவளுக்கு தலைவலியாம் அத்தை.."

ஆர்தியிடம் இருந்து பதில் வந்தது.

"ஓ..கம்ப்யூட்டரே பார்க்குறது அப்படி இருக்கும்..நாளைக்கு ஒரு நாள் விடுப்பு போட்டு, தூங்கி ஓய்வு எடு."

கீர்த்தியின் முகம் சட்டென்று மலர்ந்தது.

'சூப்பர் ஐடியா..நாளைக்கு லீவு போட்டுட்டு..இவங்க எல்லாம் போனதும், மாமியை பிடிச்சா.. மீதி விஷயம் வாங்கிடலாம்.'

"சரி அத்தை.."

இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில், வீட்டின் கதவு படாரென்று திறக்கப்பட்டது.
கண்கள் சிவக்க,தலை முடி கலைந்து, சட்டை எல்லாம் கசக்கி..பார்த்திபன் நின்று கொண்டிருந்தான்.

இல்லை,இல்லை, நிற்க முடியாமல் கதவில் சாய்ந்து, முட்டுக்கொடுத்து கொண்டிருந்தான்.

'ஏன் இப்படி இருக்கான்??'

கீர்த்தி யோசிக்கையில்,
அகிலாண்டம் கண்கள் சிவக்க,

"குடிகாரன்,குடிகாரன்..தறுதலை..இதை என் தலையில கட்டிட்டு, அந்த மனுஷன் போய் சேர்ந்துட்டார்.இவன் உயிரை வாங்குறான்.. ச்செய்.."

'என்ன??????குடிச்சுருக்கானா??அந்த பழக்கம் வேற இருக்கா இவனுக்கு…'

கீர்திக்கு குடிப்பவர்களை பார்த்தால்,மகா அலர்ஜி..அவர்கள் இருக்கும் திசை பக்கமே போக மாட்டாள்.. சாலையில் போகையில், எதிரில் வந்தால் கூட, வேறு சாலையில் புகுந்து, சுற்றி சென்று விடுவாள்.எவ்ளோ தூரம் சுற்றி போக வேண்டி இருந்தாலும், பரவாயில்லை என்று.

கண்ணில் அசூயையுடன் அவனை பார்த்தாள்.

"எல்லோரும் போய் தூங்குங்க..இவனை பார்த்தா.. நம்ம ரத்த அழுத்தம் தான் ஏறும்.."

அகிலாண்டம் உத்தரவிட்டு விட்டு, தன் அறைக்கு முதல் ஆளாய் சென்றுவிட்டார்.
அவனையே பார்த்து கொண்டிருந்த கீர்த்தியை, ஜாடையில் அழைத்த ஆர்த்தி.

மாடிக்கு செல்லுமாறு, கண் ஜாடை காட்டி விட்டு, ஆரவுடன் சென்று விட்டாள்.
அவனை திரும்பி, திரும்பி பார்த்துக்கொண்டு, இவளும் மாடிக்கு சென்றாள்.

இவள் தன் அறைக்குள் நுழையும் வரை, அவன், கதவுக்கு அருகிலேயே நின்று கொண்டிருந்தான்.


….தொடரும்…
 
Top