10
கண் பேசும் வார்த்தைகள்
புரியாதது ஏனோ?
உனை எண்ணி ஏங்கும்
வலியும் சுகம் தானோ?
கண் பேசும் வார்த்தைகள்
புரியாதது ஏனோ?
உனை எண்ணி ஏங்கும்
வலியும் சுகம் தானோ?
தன்னைத் துளைக்கும்
மதிவதனன் பார்வையைக்
கவனிக்காமல்,தன்
நண்பனை முறைத்துக்
கொண்டு நின்றாள் மதுரா.
“என்ன வசந்த் இது?இப்ப
வந்து இப்படி சொல்றே?நீ
ஒழுங்கா செக் பண்ணலையா?
எத்தனை தடவை சொன்னேன்
வசந்த்?”
“செக் பண்ணினேன் மது.
போலீஸ் வர்றதுக்குள்ள
வேலையை முடிக்கணுமே...
அந்த அவசரத்தில பார்த்தது...
மனசுல ஒரு சின்ன
உறுத்தல்.எதுவும் இருக்காது.
இருந்தாலும்...நம்ம
திருப்திக்காக ஒரு தடவை
பார்க்கலாம்.அப்ப தான்
நிம்மதியா இருக்க
முடியும்”
“சரி வா”மதுராவும்,வசந்தனும்
மின்னல் வேகம் கொண்டு
படிகளில் விரைந்தனர்.
வசந்தன் எழுப்பிய ஐயத்தின்
அதிர்ச்சியில் இருந்து மீளாமல்
நின்றிருந்த மதிவதனன்,
சுதாரித்து மெல்ல மேலேறிச்
சென்றான்.
வசந்தனை முறைத்துக்
கொண்டே கட்டில் அடியில்
மறைத்திருந்த டிராவல்
பேக்கை எடுத்து மெத்தை
மீது வைத்துத் திறந்தாள்
மதுரா.
வசந்தன் எடுக்க எடுக்கப்
பணம் மட்டுமே இருந்தது.
“தப்பிச்சுட்டோம்.ஆறேழு
லட்சம் தேறும்னு நினைக்கிறேன்.
இந்தப் பணத்தை என்ன
செய்யறது மது?எதுக்கு
எடுத்துட்டு வர சொன்னே?
இந்தப் பணம் நம்ம கிட்ட
இருக்கிறது நல்லதில்லை
மது.நமக்கு எதுக்கு அவன்
பணம்?”
“ஆமாம்.அவன் உழைச்சு
சம்பாதிச்ச பணம் பாரு.ஏன்
வசந்த் என்னைக் கோபப்
படுத்தறே?இந்தப் பணம்
அவனோடதில்லை.இந்தப்
பணத்தை உரியவங்க கிட்ட
சேர்க்கவும் முடியாது.நாம
இந்தப் பணத்தை கஷ்டப்
படற,தேவை இருக்கிற
முதியோர் இல்லத்துல
கொடுத்துடலாம்”
“நல்ல விஷயம் தான்.ஆனா...
சரி,நான் பாஸ் கிட்ட
சொல்றேன்.இவ்வளவு பணம்
இங்க இருக்க வேண்டாம் மது.
நான் எடுத்துட்டுப் போறேன்”
அவசரமாகப் பணத்தை
அள்ளி பையினுள் திணித்தான்
வசந்தன்.
“வேண்டாம் வசந்த்.இவ்வளவு
பணத்தை ஹோட்டல் ரூம்ல
வைக்கிறது நல்லதில்லை”
“நீங்க ஹோட்டல்லயா தங்கி
இருக்கீங்க வசந்த்”என்று
இடையிட்டான் மதிவதனன்.
“ஆமாம் மதி”
“மதி...நீ எதுக்கு மேல வந்தே?
கால் வலிக்கப் போகுது”என
அவனருகில் ஓடினாள் மதுரா.
“எனக்கு வலிக்கலை மது.நீ
டென்சன் ஆகாதே”என்றவன்
வசந்தனிடம் திரும்பினான்.
“எங்க வீட்டில வந்து
தங்கிக்கங்க வசந்த்”
“வேண்டாம் மதி.நான்
இன்னும் ஒரு வாரம்
இருப்பேன்.அவ்வளவு
நாள் உங்க வீட்டில
தங்கறது...நல்லா
இருக்காது”
“அதெல்லாம் நல்லாவே
இருக்கும்.ஒழுங்கா போய்
ஹோட்டல் ரூம்மைக் காலி
பண்ணிட்டு வாங்க”
வசந்தன் மதுராவைப் பார்க்க,
அவள் சரியெனத் தலை
அசைத்ததும்,மதிவதனன்
வீட்டில் தங்க சம்மதித்தான்
வசந்தன்.
கார் நின்ற சத்தத்தில்,
“வசந்த்,அம்மா வந்துட்டாங்கன்னு
நினைக்கிறேன்”என முகத்தை
இயல்பாக்கிக் கொண்டாள்
மதுரா.
“சீக்கிரம் ஹாலுக்குப் போ
வசந்த்.நான் மதியைக்
கூப்பிட்டு வர்றேன்”மதுரா
சொன்ன மறுநொடி,டிராவல்
பேக்கோடு சென்று ஹாலில்
அமர்ந்திருந்தான் வசந்தன்.
கதவு திறந்திருப்பது கண்டு,
“மதூ...வந்துட்டியா தங்கம்”எனக்
கேட்டவாறே வீட்டினுள் சென்ற
ராதா,வசந்தனைக் கண்டு
வரவேற்பாய்ப் புன்னகைத்தார்.
வசந்தன் எழுந்து நிற்க,
“வாப்பா வசந்த்.நல்லா
இருக்கியா?வீட்டில எல்லாரும்
நல்லா இருக்காங்களா?எப்ப
சென்னையில இருந்து
வந்தே?”என்று நலம்
விசாரித்தார் ராதா.
“எல்லாரும் நல்லா இருக்கோம்
ஆன்ட்டி.இப்ப தான் கொஞ்ச
நேரம் முன்னாடி வந்தேன்.
மதுவைப் பார்த்து ரொம்ப
நாள் ஆச்சே,பார்த்துட்டுப்
போகலாம்னு வந்தேன்
ஆன்ட்டி”
“மது எங்கப்பா?காபி
எதுவும் போடறாளா”
“இல்லை ஆன்ட்டி.மதி
எதோ பைல் கேட்டாருன்னு
எடுக்கப் போனா ஆன்ட்டி.
இதோ வந்துட்டாங்க”
“வந்துட்டீங்களாம்மா?எங்க
போயிட்டீங்கம்மா”
அறியாதவள் போல் கேட்டு,
மதிவதனன் உடன் படிகளில்
இறங்கி வந்தாள் மதுரா.
“வாங்க தம்பி”
ரோட்டில் நிற்பது இவர்கள்
வந்த கார் தானா?வசந்தன்
மதியிடமும் நன்கு பழகி
விட்டான்.வசந்தன் இங்கு
வருவதை நான் தடுக்கவே
முடியாது.
“மது கிட்ட ஒரு முக்கியமான
வேலை கொடுத்திருந்தேன்
ஆன்ட்டி.அந்தப் பைலைப்
பார்த்து முடிச்சுட்டாளான்னு
கேட்டுப் போக வந்தேன்
ஆன்ட்டி”
“சரிங்க தம்பி.உட்காருங்க,
நான் காபி போடறேன்”
“இல்லை ஆன்ட்டி.எங்களுக்குக்
கொஞ்சம் வேலையிருக்கு.
அப்புறம் வர்றோம்”
“ஆமாம் ஆன்ட்டி.நாங்க
உடனே போகணும்”
மதிவதனனும்,வசந்தனும்
விடை பெற்றுச் செல்ல,
கண்டிப்புடன் மகளைப்
பார்த்தார் ராதா.
“வசந்தன் எதுக்கு
வந்திருக்கான் மது”
“அவன் சொந்தக்காரங்க
யாருக்கோ கல்யாணம்மா.
அதுக்கு வந்திருக்கான்மா”
இவள் உண்மை சொல்கிறாளா
இல்லை பொய் சொல்கிறாளா
என்றே என்னால் கண்டு
பிடிக்க முடிவதில்லை.
“மதி தம்பி என்ன வேலை
கொடுத்தார் மது”
“அதெல்லாம் உங்களுக்குப்
புரியாதும்மா.எனக்குப் போர்
அடிக்குதுன்னு சொன்னேன்.
உடனே அவர் பைல்லை
எல்லாம் என் தலையில
கட்டிட்டார்”
“ஏன் ஒரு மாதிரி நடக்கறார்”
“பைக்கில இருந்து
விழுந்துட்டாரும்மா.
கால்ல அடி பட்டுடுச்சு”
“அத்தனை காரை வைச்சுட்டு
எதுக்குப் பைக்கில போறாரு?
எப்ப ஆச்சு?அதான் பத்து நாளா
இந்தப் பக்கமே வரலையா?
சாரு ஏன் எதுவும்
சொல்லலை?”
“இல்லைம்மா.இப்ப தான்...
கொஞ்ச நேரம் முன்னாடி
விழுந்து,அடி பட்டுடுச்சுன்னு
சொன்னாரும்மா.மதிக்கு
வேலை அதிகம்மா.அதான்
வரலை”
“ம்.காலையில கூடப் போன்
பண்ணி இருந்தார் மது.
போனை சைலண்ட்ல
போட்டிருந்தியா?ஏன்
எடுக்கலை?போனதும்
போன் பண்ணுன்னு
சொன்னேன்,பண்ணலை.
நான் பண்ணாலும் எடுக்கலை,
மதி தம்பி பண்ணாலும்
எடுக்கலை.முக்கியமான
விஷயம் இல்லாம லேண்ட்
லைனுக்குக் கூப்பிட்டிருக்க
மாட்டார் மது”
“மதி எனக்கு வேலை வாங்கிக்
கொடுக்கிறதா சொல்லி
இருந்தாரும்மா.வேலை
சம்மந்தமா பேசக்
கூப்பிட்டிருப்பார்”
“என்னது!!வேலைக்குப்
போறயா?உனக்கு உடம்பு
குணமாகி முழுசா ரெண்டு
மாசம் கூட ஆகலை மது.
இன்னும் நீ ரெஸ்ட்
எடுக்கணும்.நீ எங்கயும்
போகக் கூடாது.நீ
வேலைக்குப் போகணும்கிற
அவசியமும் இல்லை”
“அம்மா,ப்ளீஸ்..எனக்கு
டயர்டா இருக்கு.நான்
அப்புறம் உங்களுக்குப்
பதில் சொல்றேன்”
“சரி போ.தலை துவட்டிட்டுப்
படு.சளி பிடிச்சுக்கப்
போகுது”
தப்பித்தோம் பிழைத்தோம்
என்று தன் அறைக்குள் சென்று
கதவைச் சாத்திக் கொண்டாள்
மதுரா.
சாரதா இல்லம்.
அவ்வில்லத்தின் செல்வச்
செழிப்பு,அவ்வீட்டின்
ஹாலைப் பார்த்தாலே
தெரிந்து விடும்.
“SKM MOTORS”உரிமையாளரான
குணாளனின் இல்லத்தில்,
எப்போதும் மகிழ்ச்சி ஆரவாரம்
கேட்டுக் கொண்டே இருக்கும்.
மதி எங்கு சென்றான் என்று
தெரியவில்லையே.போனையும்
எடுக்கவில்லை.இது போல்
இது வரை நடந்ததில்லை.
மதி பொறுப்பானவன் ஆயிற்றே!
ஹாலில் நடந்தபடியே
வாசலைப் பார்த்துக்
கொண்டிருந்தார் சாரதா.
“மயூ,அம்மாவைக் கவனிச்சியா”
“கவனிச்சுட்டுத் தான்
இருக்கேன் முகி.தன்னோட
அருந்தவப் புதல்வன்
காலையில இருந்து
கண்ணுலயே படலையேன்னு
பிரஷரை ஏத்திட்டு இருக்காங்க”
“அண்ணன் எங்க போயிருப்பான்
மயூ”
“என்னோட ஏழாவது அறிவு
என்ன சொல்லுதுன்னா..அவன்
மது கிட்ட லவ்வை சொல்லப்
போயிருப்பான்.அவ
அண்ணன் எலும்பை உடைச்சு
ஹாஸ்பிடல்ல அட்மிட்
பண்ணி இருப்பா”
“சேச்சே!மதுவுக்கும் அண்ணனைப்
பிடிக்கும் மயூ”
“அப்படியா?அவ தான் நம்ம
அண்ணியா?”
“சந்தேகமே இல்லாம”
“எனக்கென்னவோ
சந்தேகமாவே இருக்கு
முகி.சாரு மனசுல யாரு?
உடனே தெரிஞ்சுக்குவோம்”
“சாரு செல்லம்,இங்க
வாங்கம்மா”என்றழைத்து,
சாரதாவின் கை பிடித்து
சோபாவில் அமர வைத்த
மயூரி,பாவமாக முகத்தை
வைத்துக் கொண்டாள்.
“என்ன மயூ?என்ன நாடகம்
ஆரம்பிக்கப் போறே?”
“இல்லைம்மா.முக்கியமான
விஷயம் பேசணும்மா.
அதும்மா...நீங்க அந்த மது
வானரத்தை தான்
மருமகளா ஏத்துக்கப்
போறீங்களாம்மா”
“வானரங்களை மேய்க்க ஒரு
வானரத்தால தானே முடியும்”
“அம்மா!!நாங்க நல்ல,ரொம்ப
நல்ல பசங்க”
“நீங்க?மதுவாவது சின்ன
வயசுல குறும்பு பண்ணா.
இப்பப் பொறுப்பான
பொண்ணாயிட்டா.நீங்க
ரெண்டு பேரும் இன்னும்
சேஷ்டைப் பண்ணிட்டு
இருக்கீங்க.என்னால சமாளிக்க
முடியலை.உங்கப்பா ஓவர்
செல்லம்.மதி அதுக்கு மேல.
அவன் உங்களை ஒரு
வார்த்தை சொல்ல
விடறதில்லை.மது வந்தா
தான் நீங்க ஒழுங்காவீங்க”
“நோ சாரு நோ.மதுவை
உங்க மனசுல இருந்து
டெலிட் பண்ணிடுங்க.
நாங்க இனிமேல் சமர்த்தா,
எந்த வம்பும் பண்ணாம
இருக்கோம்.ப்ளீஸ்மா.மது
வேண்டாம்மா.என் பிரெண்ட்
சுஜி தான் எனக்கு
அண்ணியா வரணும்மா”
“ஏன் செல்லம்?இன்னைக்கு
உங்களுக்குப் பொழுது
போக்க, நான் தான்
கிடைச்சனா?மது
வேண்டாம்னு சொல்றவ,
எதுக்காக எப்பப் பார்த்தாலும்
அவ வீட்டுக்குப் போறே?
எதுக்கு ரெண்டு பேரும்
சேர்ந்து ஊரைச் சுத்திட்டு
இருக்கீங்க?”
“அது வேறம்மா.மது
பிரெண்டா இருந்துட்டுப்
போகட்டும்.அண்ணியா
வேண்டாம்.நாங்களும் பாவம்,
அண்ணனும் பாவம்.நீங்க
தான் எல்லாத்தை விடவும்
பாவம்மா.சுஜி அப்பாவிம்மா.
அவ தான் உங்களுக்கு,
அண்ணனுக்கு,நம்ம
வீட்டுக்கும் பொருத்தமா
இருப்பா.என் பேச்சைக்
கேளுங்கம்மா.சுஜி
தான் என்னோட அண்ணி,
உங்களோட செல்ல மருமகளா
இருக்கணும்”
“இந்த வீட்டோட மருமக
யாருன்னு உன் அண்ணன்
தான் முடிவு பண்ணணும்
மயூ.நீயோ நானோ இல்லை”
தங்கை மற்றும் தாயின்
பேச்சைக் கேட்டபடி,
ஹாலினுள் கால் வைத்த
மதிவதனன் முகத்தில்
எவ்வுணர்வும் இல்லை.
காலடிச் சத்தத்தில் திரும்பிய
மயூரி,தன் அண்ணனோடு,
வசந்தனும் நிற்கக் கண்டாள்.
மயூரியின் முகம் பூவாய்
மலர,காதல் பிரதிபலித்த
அவள் விழிகளைக் கண்ட
வசந்தன் விழிகளில் காதல்
கொஞ்சமும் இல்லை.
தித்திக்கும்



ஹாய் பிரெண்ட்ஸ்,
பத்தாம் அத்தியாயம்
பதிந்து விட்டேன்.
உங்கள் கருத்துக்களை
எதிர்பார்த்து ஆவலுடன்
காத்திருப்பேன்.
நன்றி


அன்புடன்,
நித்திலா