12
உன் காதல் விழிகள்
கனல் வீசுவது ஏனோ?
என் காதல் கனவுகள்
கருகத்தான் வேண்டுமோ?
உன் காதல் விழிகள்
கனல் வீசுவது ஏனோ?
என் காதல் கனவுகள்
கருகத்தான் வேண்டுமோ?
எதற்கும் அதிராத மதுரா,
மயூரி மற்றும்
முகிலனின் குரல்
கேட்டதில்,பதற்றத்துடன்
ஓடிச் சென்று சாவி எடுத்து
வந்து அவசர அவசரமாகக்
கதவைத் திறந்தாள்.
“முதல்ல உள்ள வா”
மயூரியின் கை பிடித்து
மதுரா உள்ளிழுக்க,
முகிலன் அக்காவைத்
தொடர்ந்து உள்ளே
சென்றான்.
“உங்க விளையாட்டுக்கு
இது தான் நேரமா?நீங்க
ரெண்டு பேரும் வரவர
ஓவரா போயிட்டு இருக்கீங்க”
மயூரியும்,முகிலனும்
மௌனமாக அங்கிருந்த
சோபாவில் அமர்ந்தனர்.
அவர்கள் பார்வை நேராக
மதுரா டீப்பாயில்
வைத்திருந்த துப்பாக்கியில்
பதிந்து அதிர்ச்சி கொண்டது.
“பயப் படாதீங்க.இதூ..
என் பாதுகாப்புக்கு
வைச்சிருக்கேன்”
அது சரி.இவள் அடித்தாலே
ஒருவனால் எந்திரிக்க
முடியாது.இதில் துப்பாக்கி
வேறு வைத்திருக்கிறாளா?
“இந்த நேரத்துல எதுக்கு
வந்தீங்க?நாம எவ்வளவு
மோசமான காலத்துல
வாழ்ந்துட்டு இருக்கோம்னு
உங்களுக்குத் தெரியாதா?
உங்க விளையாட்டை
வீட்டோட வைச்சுக்கங்க.
நாம ஒவ்வொரு நொடியும்,
ஒவ்வொரு அடியையும்
முன்னெச்சரிக்கையோட
பார்த்து எடுத்து வைக்க
வேண்டிய சமூகத்தில
இருக்கோம்.எப்ப எந்த
மாதிரி ஆபத்து வரும்னே
சொல்ல முடியாது”
மதுராவின் கடுமையான
குரலில்,மயூரியும்,
முகிலனும் ஒருவரை
ஒருவர் பரிதாபமாகப்
பார்த்துக் கொண்டனர்.
நன்றாக மாட்டிக் கொண்டோம்.
இரவு முழுவதும் இவளிடம்
வாங்க வேண்டியது தான்.
இந்தப் பால் வடியற
முகத்தைப் பார்த்து...
இவளால எப்படி இந்தக்
குரல்ல பேச முடியுது?நீ
பாவம் மயூ.அண்ணா!
நீ ரொம்பப் பாவம்.
இருவரின் முகத்தைப்
பார்த்த மதுரா,தன்
குரலைத் தணித்துக்
கொண்டாள்.
நான் இது போல்
இவர்களிடம் கடுமையாகப்
பேசக் கூடாது.மதியிடம்
சொன்னால்,அவன்
பொறுமையாகப் பேசிப்
புரிய வைத்து விடுவான்.
அது தான் சரி.நான்
சொல்லும் எதையும்
இவர்கள் காதில்
வாங்க மாட்டார்கள்.
“என்ன விஷயம் மயூ,
மதி நல்லா இருக்கான்
தானே?போன் பண்றதை
விட்டுட்டு...எதுக்கு இப்படி
சுவர் ஏறி குதிச்சு...
யாராவது பார்த்திருந்தா...
என்னாகிறது?”
என்ன சுருதி மாறி
விட்டது?சாருவைப் போல்
ஒரு மணி நேரம் கழித்து
தான் நிறுத்துவாள்
என்று நினைத்தேனே!
“மயூ”
“நாங்க...உன்னை
நேர்ல பார்த்து நியாயம்
கேட்க வந்தோம் மது”
மதுரா குரலில் கனிவு
வந்ததும்,மயூரியின்
வழக்கமான பேச்சு
ஆரம்பமானது.
“நியாயமா”
“என் அண்ணனை நீயே
அடிச்சியா இல்லை ஆள்
வைச்சு அடிச்சியா மது?
அடிச்சு அவன் காலை
உடைச்சுட்டு,நல்லா
இருக்கானான்னு
கேட்கிறயா?”
“..........”
“உன் கிட்ட லவ்வை
சொல்லப் போறேன்னு
ஹீரோ மாதிரி
கிளம்பினவன்,பரிதாபமா
ஒத்தைக் கால்ல வந்து
நிற்கறான்.பாவம்!
பைக்கில இருந்து
விழுந்துட்டதா காது
குத்தறான் எங்களுக்கு.
இந்த மயூவுக்கு”
“மதி என் கிட்ட எதுவும்
பேசலை மயூ”
“பேசறதுக்கு முன்னாடியே
அடிச்சுட்டயா?நீ இந்த
மயூரியை மறந்து
பெரியத் தப்புப்
பண்ணிட்டே மது”
“மயூ,போதும் போதும்.
அண்ணனுக்குத் தெரிஞ்சா
நம்மளை வீடு
கடத்திடுவான்.நாம
எங்க போறது”மயூரிக்கு
மட்டும் கேட்கும்படி
முணுமுணுத்தான்
முகிலன்.
“இந்த அக்கா இருக்கும்
போது உனக்கு என்னடா
கவலை”
“போதும்கா நீ சீன்
போட்டது.நாம வீட்டில
இல்லைன்னு அம்மாவுக்குத்
தெரிஞ்சா அவ்வளவு
தான்.சீக்கிரம்
கிளம்புவோம்”
“நல்லவேளை தம்பி
ஞாபகப் படுத்தினே.
சாருவோட காளி
அவதாரத்தை இந்தச்
சின்ன இதயம் தாங்காது”
அவர்கள் இருவரும்
முணுமுணுவென்று
பேசினாலும்,மதுராவிற்கு
நன்றாகவே கேட்டது.
அவள் இதழ்களில்
சிரிப்பும் வந்தது.
“மது,நாங்க இதை
உன் கிட்ட கொடுக்கத்தான்
வந்தோம்”என்று ஒரு
வழியாக தாங்கள் வந்த
காரணத்தைக் கூறினாள்
மயூரி.
மதிவதனன் காரில்
இருந்து எடுத்த கிப்ட்
பார்சலையும்,
பொக்கேவையும்
டீப்பாய் மீது வைத்தான்
முகிலன்.
“அண்ணன் ரொம்ப
நாளா உன் கிட்டப் பேசத்
தயங்கிட்டு இருந்தான்.
இன்னைக்கு
சொல்லிடுவேன்னு
சொன்னான்.ஏன்
சொல்ல முடியாமப்
போச்சுன்னு தெரியலை.
அவன் காத்திருப்பு
இன்னைக்கே முடியட்டும்னு
நானே எடுத்துட்டு
வந்துட்டேன் மது”
கடவுளே!நான்
நினைத்தது போலவே,
மதி என்னிடம் காதல்
சொல்லத்தான் என்னை
அழைத்திருக்கிறான்.
“ரொம்ப பிகு பண்ணாம,
ஓகே சொல்லிடு.ஒரு
மாசம் இல்லை ரெண்டு
மாசத்தில உங்க
கல்யாணம் நடக்கணும்.
அதுக்கு மேல
போச்சுன்னா...நான்
நம்ம நட்பை
மறந்துடுவேன்.அப்புறம்
நீ என்னைக் குறை
சொல்லக் கூடாது.
வர்ட்டா”
“மயூக்கா.நீ ரொம்பப்
பேசறே.அண்ணன்
கண்டிப்பா உன்
பல்லைத் தட்டிடுவான்
பாரு”முகிலன் மீண்டும்
முணுமுணுக்க,
தம்பியின் கையைப்
பிடித்து இழுத்துக்
கொண்டு வெளியேறினாள்
மயூரி.
“நில்லுங்க,தனியா
எங்க போறீங்க?நானும்
வர்றேன்”
“என்ன மது,நாங்க
என்ன சின்னக்
குழந்தைகளா?பக்கத்துத்
தெரு தானே?நாங்களே
போயிடுவோம்”
“நீ தெரிஞ்சுப் பேசறயா,
தெரியாமப் பேசறயா
மயூ?இன்னொரு தடவை
இந்தத் தப்பைப்
பண்ணாதீங்க.புரிஞ்சுதா?
இந்த நேரத்தில வெளியில
வர்றது,சுவர் ஏறி
குதிக்கிறது இதெல்லாம்
வேண்டாம்”
“சரிசரி.என்
அண்ணனோட காதல்
சரித்திரத்தில இடம்
பிடிக்கணும்கிற ஆசையில
வந்துட்டேன் தாயே!
மன்னிச்சுடு.சாரு கிட்டப்
போட்டுக் கொடுத்துடாதே”
“நீ எப்படி மது
தனியா திரும்பி
வருவே”முகிலன் வினவ.
“நான் வந்துடுவேன்
முகிலா”என்று
துப்பாக்கியைக்
காட்டினாள் மதுரா.
“அப்ப சரி.போகலாம் மது”
கதவைப் பூட்டி விட்டு,
மயூரி மற்றும் முகிலனோடு
சென்ற மதுரா,அவர்கள்
வீட்டிற்குள் செல்வதைப்
பார்த்து விட்டு வீடு
திரும்பினாள்.
கிப்ட் பார்சலையும்,
பொக்கேவையும் எடுத்துக்
கொண்டு தன் அறைக்குச்
சென்ற மதுராவிற்கு,
மதிவதனன் ஏன்
அன்று காலையில்
அழைத்தான் என்பது
புரிந்தது.
என்னிடம் காதல்
சொல்ல வந்தவனின்
மனதை நான் உடைத்து
நொறுக்கி இருக்கிறேன்.
ரெஜீஸ்ஸை நான்
காதலிப்பதாக நினைத்து
என் மதி நரகத்தில்
உழன்றிருப்பானே!
என் மதிக்கு நான்
எத்தகைய வலியைக்
கொடுத்திருக்கிறேன்?
நான் நேசிக்கும்
இதயத்தில் நானே
வேல் பாய்ச்சி
இருக்கிறேன்.என்னை
மன்னித்து விடு மதி.
என்னை மன்னித்து விடு.
ரோஜாப் பூக்களை
மென்மையாக வருடி
முத்தமிட்டாள் மதுரா.
அவள் கண்ணீர்த்
துளிகள் சிதறி,
பனித்துளிகளாய்
ரோஜாவிற்கு அழகு
சேர்த்தது.
கண்ணீர் சுவை அறியா
என் கண்கள்
இன்று வெந்நீர்
வார்க்கின்றது!
காதலனே!
உன் மன்னிப்பைக்
கேட்கின்றது!
சாரதா இல்லம்.
உறங்கும் மதிவதனனைப்
பார்த்தபடி அருகில்
நின்றிருந்தனர்
சாரதாவும்,குணாளனும்.
“நம்ம கிட்ட காரா
இல்லை?எதுக்கு இவன்
பைக்கில போறான்?
இனிமேல் மதி பைக்கைத்
தொடக் கூடாதுன்னு
கண்டிப்பா சொல்லிடு
சாரு”
“சரிங்க”
“நல்லா ரெஸ்ட்
எடுக்கட்டும்.வேலை
எல்லாம் நான்
பார்த்துக்கிறேன்.மதி
ஆபிஸ்சுக்கு வர
வேண்டாம்.நீ இவன்
பக்கத்திலயே இருந்து
பார்த்துக்கோ சாரு”
“சரிங்க,நான்
பார்த்துக்கறேன்.நீங்க
கவலைப் படாதீங்க”
“அந்தப் பையன்
வசந்தன் எப்படிப் பழக்கம்”
“மது கூடக் காலேஜ்ல
படிச்சிருக்கான்.ஒண்ணா
வேலை பார்த்திருக்காங்க.
மது சென்னையில இருந்து
இங்க வந்ததும்,அப்பப்ப
வந்து பார்த்துட்டுப்
போயிருக்கான்.அப்படியே
நம்ம மதிக்கும்
பழக்கமாயிட்டான்.நல்ல
பையன் தாங்க”
“சரி வா.முழிச்சுக்கப்
போறான்.இங்க நின்னு
பேச வேண்டாம்”மகன்
தூங்கட்டும் என்று
சத்தமின்றி வெளியேறினர்
சாரதாவும்,குணாளனும்.
மதிவதனன் உறக்கம்
தொடர்ந்தது.இரவும்
நகர்ந்தது.
ஆழ்ந்த உறக்கத்தில்
இருந்த மதிவதனன்
முகத்தில் தெரிந்த
சிரிப்பு,அவன் கனவு
காண்பதைச் சொல்லியது.
மாளிகை வீட்டினுள்,
சிறுமி ஒருத்தி வருவதும்,
அவளோடு மயூரியும்,
முகிலனும் விளையாடக்
காண்கிறான் மதிவதனன்.
அதன் பின் அச்சிறுமி
பள்ளிச் சீருடையில்
வருகிறாள்.தம்பி,
தங்கையோடு
அச்சிறுமியையும்,தான்
பள்ளிக்கு அழைத்துச்
செல்வதைக் காண்கிறான்
மதிவதனன்.
அதைத் தொடர்ந்து
ஒரு அழகான யுவதி,
மதிவதனன் முன்
தோன்றுகிறாள்.
மதிவதனன் ரோஜாக்களை
நீட்ட,அவளோ துப்பாக்கியை
நீட்டுகிறாள்!
மதிவதனன் அதிர்ச்சியுடன்
பார்க்க,அவனைத் தாண்டிச்
சென்று மூவர் நெற்றியில்
பாய்கிறது துப்பாக்கி
குண்டு!
“மதூ..!!!!!!!!!”
மதிவதனன் அலற,
அவனைப் பார்த்து மயக்கும்
புன்னகை ஒன்றைச்
சிந்தி விட்டு,மூவரின்
சடலங்களையும் ஒன்றன்
பின் ஒன்றாக இழுத்துச்
செல்கிறாள் மதுரா.
“மதூ..வேண்டாம்...மதூ...
கொலை...போலீஸ்..ஜெயில்...
வேண்டாம்...மதூ...”
தொடர்பில்லாமல்
உளறியபடி படுக்கையில்
புரண்டான் மதிவதனன்.
மதுராவைத் தடுப்பதாக
நினைத்துக் கொண்டு,
அவள் கையைப் பிடிப்பதாக
எண்ணி,அருகிருந்த நைட்
லாம்ப்பைப் பிடித்து,
“வேண்டாம் மதூ...
வேண்டாம்”என்று இழுக்க,
அவன் வேகத்தில் நைட்
லாம்ப் தரையில் விழுந்து
சப்தமெழுப்பி மதிவதனனின்
கனவைக் கலைத்தது.
வியர்வையில் நனைந்து
எழுந்து அமர்ந்திருந்த
மதிவதனனை,அதன்
பின் உறக்கம்
நெருங்கவே இல்லை!
செங்குருதி பாயும்
பாதைதனை இவன்
நெஞ்சம் ஏற்குமா?
இவன் கண்ட காதல்
கனவு கலைந்தே
போகுமா?
தித்திக்கும்



ஹாய் பிரெண்ட்ஸ்,
அத்தியாயம் -12 பதிந்து
விட்டேன்.உங்கள் கருத்துக்களை
எதிர்பார்த்து ஆவலுடன்
காத்திருப்பேன்.
நன்றி


அன்புடன்,
நித்திலா