20
உன் நேசம் கண்டேனே!
உயிர் உருகி நின்றேனே!
காதலே கடவுளென்று
உன் அன்பில் அறிந்தேனே!
உன் நேசம் கண்டேனே!
உயிர் உருகி நின்றேனே!
காதலே கடவுளென்று
உன் அன்பில் அறிந்தேனே!
மதிவதனன் புன்முறுவல்
கண்டு,அவன் கன்னத்தைச்
செல்லமாகக் கிள்ளி
விட்டுச் சிரித்தாள் மதுரா.
“லூசுப் பையா,என்கிட்ட
எதுவுமே கேட்காம,
உன் இஷ்டத்துக்கு ஏதேதோ
கற்பனை பண்ணிட்டு,
முடிவெடுத்துட்டு...உன்னை
என்ன பண்றது?”
“ம்ம்...உன் கதை
முடிஞ்சுதுன்னு நீ ரெஜீஸ்
கிட்ட சொன்னது,நீயும்,
வசந்த்தும் துப்பாக்கி
வைச்சிருந்தது,நீங்க
அவனை அப்படி இழுத்தது...
நான் வேற எப்படி
யோசிப்பேன் மது?”
“புரியுது மதி”
“முக்கியமா சின்னத்
தப்புக்கே உனக்குப் பயங்கரமா
கோபம் வரும்.அந்த ரெஜீஸ்
பண்ண வேலைக்கு...உன்னோட
கோபம் அவனை
அழிச்சுடுச்சுன்னு...”
“முடிவுப் பண்ணிட்டே”
“எதாவது தப்பு
நடந்துடுமோன்னுதான்
நான் கார்ல இருந்து
இறங்கி ஓடி வந்தேன் மது.
ஆனா என்னால எதுவும்
பேச முடியலை.நடந்தது
நடந்துடுச்சு.நீங்க உடனே
அங்கிருந்து கிளம்பறது
தான் உங்களுக்கு நல்லதுன்னு,
நான் பேசாமக் காருக்குத்
திரும்பிப் போயிட்டேன்”
“நாங்க துப்பாக்கி
வைச்சிருக்கிறது எங்க
பாதுகாப்புக்கு மதி.போலீஸ்
ரெஜீஸ்ஸை அரெஸ்ட்
பண்ண வர்றதைதான்,நான்
அப்படி அவன் கதை முடியப்
போகுதுன்னு சொன்னேன் மதி”
மது என்ன சொல்கிறாள்?
போலீஸ் அங்கு வருமென்று
மதுவிற்கு எப்படித் தெரியும்?
“ரெஜீஸ்,அவன் பிரெண்ட்ஸ்
உயிரைக் காப்பாத்தத் தான்,
நாங்க அவங்களை வெளியில
இழுத்துட்டு வந்தோம் மதி”
“காப்பாத்தவா?”என இழுத்த
மதிவதனன் முகத்தில் பதற்றம்
தொற்றிக் கொண்டது.
“மதூ..மதூ...பேப்பர்ல தீ
விபத்துன்னு போட்டிருந்துச்சே...
எதுவுமே மிஞ்சலை,பயங்கரமான
விபத்துன்னு சொல்லி
இருந்தாங்க.எப்படி மது தீ
பிடிச்சுது?நீங்க எப்படித்
தப்பிச்சீங்க?உனக்கு எதுவும்
காயம் ஆகலையே?என் மது
உயிருக்குப் போராடிட்டு
இருக்கறப்ப...நான்
சொகுசா கார்ல உ...”
“உடனே முகம் வாடிடுமே”
என்று செல்லமாக அவன்
தலையில் முட்டினாள் மதுரா.
“விளையாடாதே மது”
“கொஞ்சம் தண்ணி குடி.
அப்புறம் பேசலாம்”அங்கிருந்த
ஜக்கை எடுத்து மதிவதனனிடம்
கொடுத்தாள் மதுரா.
“தேங்க்ஸ் மது”
தண்ணீரைக் குடித்து
விட்டுச் சில நிமிடங்கள்
அமைதியாக இருந்த
மதிவதனன் சட்டென்று
நிமிர்ந்து மதுராவின்
முகத்தைப் பார்த்தான்.
“ரெஜீஸ் வீட்டில ஏற்பட்ட
அந்தத் தீ விபத்து...விபத்தில்லை.
சரியா?”
“200% சரியான பதில் மிஸ்டர்
மதிவதனன்”
“போர்டிகோவில நின்ன
ரெஜீஸ் கார்ல டிரக்ஸ்ஸை
வைச்சு,நீங்க தான் காரை
வெளியில கொண்டு போய்
நிறுத்தி இருக்கீங்க”
“ஆமாம் மதி.ரெஜீஸ்சும்,
அவன் பிரெண்ட்ஸ்சும்
தோட்டத்தில உட்கார்ந்து
டிரிங்க்ஸ் பண்ற மாதிரி
செட்டப் பண்ணோம்.
பார்க்கிறவங்களுக்கு நல்லா
குடிச்சுட்டு போதையில
மயங்கிக் கிடக்கிற மாதிரி
தெரியும்.அப்புறம் காரை
வெளியில கொண்டு
போனோம்.கார் இருந்தா
தானே ரெஜீஸ்ஸை மாட்டி
விட முடியும்”
“நான் வந்து பார்த்தப்ப
வீடு அமைதியா இருந்துச்சு.
நெருப்புப் பிடிக்கலை.நீங்க
ரெஜீஸ்ஸை வெளியில
தள்ளிட்டு விபத்தை
உருவாக்கி இருக்கணும்”
“உண்மை தான் மதி.
நியாயமா நான் அவனை
தீயிலயே வெந்து சாகட்டும்னு
விட்டிருக்கணும்”அவள்
கண்களில் கனன்ற கோபத்
தீயைக் கண்டு அவள்
தோள்களில் கை வைத்து,
அவளை அமைதிப் படுத்த
முயன்றான் மதிவதனன்.
“வேண்டாம் மது.கோபப் படாதே”
“நான் தேடிப் போன
சிடியோட,அந்த ரூம்ல
எத்தனை பொண்ணுகளோட
போட்டோஸ்,வீடியோஸ் எல்லாம்
இருந்துச்சு தெரியுமா மதி?ஒரு
பொண்ணுக்குப் பதினேழு,
பதினெட்டு வயசு தான்
இருக்கும்.அவளை...”
என்ன மனிதன் இவன்?
சிறுமிகளைக் கூட இவன்
விட்டு வைக்கவில்லையா?
இவனைக் கொன்றாலும்
பிழையில்லை.மது
இவனைக் காப்பாற்றி
இருக்கவே வேண்டாம்.
“அங்க நிறைய கம்ப்யூட்டர்,
லேப்டாப்,சிடி,கேமரா ஏகப்பட்டது
இருந்துது.அதை எல்லாத்தையும்
அழிக்க வேண்டி,எதுவுமே
மிஞ்சக் கூடாதுன்னு தீ
விபத்தை உருவாக்கினோம் மதி”
“தப்பில்லை மது.அதெல்லாம்
யார் பார்வைக்கும் போகாம
இருக்கட்டும்”
“ரெஜீஸ்,அவன் பிரெண்ட்ஸ்ஸோட
மொபைல் எல்லாத்தையும்
எடுத்துத் தீயில போட்டோம்.
இப்ப ஒரு போட்டோ,வீடியோ
கூட இல்லை மதி.எல்லாமே
தீயில அழிஞ்சுடுச்சு”
“கம்ப்யூட்டர்கள்,
லேப்டாப்கள் உள்ளிட்ட
அனைத்துப் பொருட்களும்...”
பத்திரிக்கைச் செய்தியை
நினைவு கொண்டு,
மதுராவின் முகத்தைப்
பார்த்த மதிவதனன்
பார்வையில் பாராட்டுதல்
இருந்தது.
“என் மதுவை நினைச்சா
எனக்கு ரொம்பப்
பெருமையாயிருக்கு.நீ
பலப் பெண்களோட
வாழ்க்கையை,நிம்மதியை
அவங்களுக்குத் திருப்பிக்
கொடுத்திருக்கே மது.
ரெஜீஸ்கிட்ட ஏமாந்தவங்க,
அவன் போட்டோவை பேப்பர்ல
பார்த்திருப்பாங்க.தீ
விபத்தைப் பத்தியும்
படிச்சிருப்பாங்க.இனி
அவங்க வாழ்க்கையை
பயமில்லாம வாழ்வாங்க”
“நாங்க தேடின சிடி
கிடைச்சதும்,தினு
போலீஸ்சுக்கு இன்பார்ம்
பண்ணினான் மதி.போலீஸ்
வர்ற வரைக்கும் அங்கயே
இருந்து,ரெஜீஸ் தப்பிச்சுப்
போகாம பார்த்துக்கிட்டு,
ரெஜீஸ்ஸை அரெஸ்ட் பண்ண
வந்த போலீஸ் ஆபிசர்
கிட்ட சொல்லி,ரெஜீஸ்
போட்டோவும்,முக்கியமா
தீ விபத்தைப் பத்தின
செய்தியும் பத்திரிக்கையில
வர்ற மாதிரி செஞ்சதும்
தினு தான் மதி”
“ஐடியா உன்னோடது தானே மது”
“ம்.எங்க பாஸ் சூழ்நிலைக்குத்
தகுந்தபடி நடந்துக்கங்கன்னு
சொல்லி இருக்கார்.
இருந்தாலும் அவர்கிட்ட
கேட்டுட்டுத்தான்
எல்லாமே செஞ்சோம் மதி”
“போலீஸ் வர்ற வரைக்கும்
ரெஜீஸ்சுக்கு மயக்கம் தெளியலையா”
“இல்லை மதி.போலீஸ் தான்
அவன் போதையை அதாவது
மயக்கத்தைத் தெளிய
வைச்சிருக்காங்க.மயக்கம்
தெளிஞ்சதும் போலீஸ்ஸைப்
பார்த்தது முதல் ஷாக்.வீடு
எரிஞ்சது அடுத்த ஷாக்.கார்ல
ட்ரக்ஸ் இருந்தது அடுத்த
ஷாக்.போலீஸ் அரெஸ்ட் ப
ண்ணது கடைசி ஷாக்”
“நீ கொடுத்த அதிர்ச்சியில
இருந்தே அவன் வெளி
வந்திருக்க மாட்டான் மது.
தொடர் அதிர்ச்சியில
அவனால எதையும்
யோசிக்கவே முடிஞ்சிருக்காது”
“ஆமாம் மதி.அசையாம
நின்னவன்,நான் எந்தத்
தப்பும் பண்ணலைன்னு
கத்தி இருக்கான்.பிரயோசனம்
இல்லை.போலீஸ்
விசாரணையிலயும் ட்ரக்ஸ்
என் கார்ல எப்படி
வந்துச்சுன்னே தெரியலைன்னு
அப்பாவி மாதிரி நடிச்சுட்டு
இருக்கான்.அவன் பிரெண்ட்ஸ்சும்
உண்மையை ஒத்துக்கலை”
“உங்களுக்கு உதவி பண்ண
போலீஸ் ஆபிசருக்கு முழு
உண்மையும் தெரியுமா மது”
“தெரியும் மதி.ஒரு ஆதாரம் கூட
இல்லாம எல்லாத்தையும்
அழிச்சுட்டீங்களேன்னு வருத்தப்
பட்டார்”
“ரெஜீஸ் மாதிரி ஒருத்தன்
தண்டனையில இருந்து தப்பக்
கூடாது மது”
“ரெஜீஸ்சுக்கு தண்டனை
கிடைக்கிறதை விட,
பாதிக்கப்பட்டப் பெண்களோட
வாழ்க்கையில எந்த சிக்கலும்
வந்துடக் கூடாதுன்னு நான்
நினைச்சேன் மதி”
எத்தனை பெண்களை ஏமாற்றி
இருக்கிறான்!அவன் செய்த
பாவத்தின் சுவடே இல்லாமல்
செய்து நானே அவனைத்
தண்டனையில் இருந்து
தப்பிக்கச் செய்து விட்டேனே!
“வருத்தப் படாதே மது.
ரெஜீஸ்சுக்கு ட்ரக்ஸ் கேஸ்ல
தண்டனை கிடைக்கும் இல்லே?
அதை நினைச்சு சந்தோஷப் பட
வேண்டியது தான்.முக்கியமா
,இனி அவனால எந்தப்
பொண்ணையும் ஏமாத்த
முடியாது.எந்தப் பொண்ணோட
வாழ்க்கையும் பாழாகாது.
இதுவே நமக்கு போதும்”
“போதாது மதி.அந்த பிராடு
வாழ்நாள் முழுக்க ஜெயில்லயே
இருக்கணும்.அவனை...”
“கோபப் படாதே மது.அவனுக்கு
நிச்சயம் தண்டனை கிடைக்கும்.
அவன் வெளியில வர மாட்டான்.
நீ அமைதியாயிரு”மதுராவைத்
தன் தோளில் சாய்த்துக் கொண்டு
அமைதி காத்தான் மதிவதனன்.
வெகு சீக்கிரமாகவே தன்னை
நிதானப் படுத்திக் கொண்டு
நிமிர்ந்து அமர்ந்தாள் மதுரா.
“நான் கிளம்பறேன் மதி.அம்மா
என்னைத் தேட ஆரம்பிச்சிருப்பாங்க.
நான் வீட்டுக்குப் போறேன்.நீ
உன் அம்மாகிட்ட முதல் பேசு.
பாவம் அவங்க”
“சரிடா.நான் அம்மாகிட்ட
உடனே பேசறேன்”
“நான் கிளம்பட்டுமா”
“ம்”
“என்ன “ம்”?பை மதுன்னு
சிரிச்சுட்டு சொல்லணும்”
“பை பை,டாட்டா மது குட்டி”
அவன் கன்னத்தில் தட்டிக்
கொடுத்து விட்டுச்
சிரிப்புடன் விடை பெற்றுச்
சென்றாள் மதுரா.
மதுரா சொன்னதை எல்லாம்
நினைத்தபடியே அமர்ந்திருந்தான்
மதிவதனன்.
மதுவும்,வசந்த்தும் காரில்
அத்தனை இயல்பாகப்
பேசிய போதே,எந்தக்
குற்றமும் நடக்கவில்லை
என்று நான் புரிந்து
கொண்டிருக்க வேண்டும்.
தடயங்களை அழித்து
விட்டு வரத்தான் அத்தனை
நேரம் எடுத்திருக்கிறார்கள்
என்று நினைத்தேனே.
சிடியைத் தேடவும்,தீ
விபத்தை உருவாக்கவுமே
நேரமாகி இருக்கிறது.
தினுவிடம் என்ன செய்ய
வேண்டுமென்றும் விளக்கி
விட்டு வந்திருப்பார்கள்.
நான் ஏன் தான் அப்படியெல்லாம்
நினைத்தேனோ?மயக்கத்திற்கும்,
இறந்ததற்கும் கூட உனக்கு
வித்தியாசம் தெரியாதா
மதி?நான் பக்கத்தில் போய்ப்
பார்த்திருக்க வேண்டும்.
உண்மை அப்போதே
தெரிந்திருக்கும்.
அம்மா...அம்மாவிடம்
சென்று பேசாமல்...பாவம்
அவர்கள்!
தாயின் நினைவு வந்தவுடன்
அறையை விட்டு
வெளியேறினான் மதிவதனன்.
ஹாலில் சாரதா மட்டும்
அமர்ந்திருக்க,அவர்
காலடியில் சென்று
அமர்ந்தான் மதிவதனன்.
“என்னை மன்னிச்சுடுங்கம்மா.
என்னால...நீங்க ரொம்ப
வேதனைப் பட்டிருப்பீங்க...
எனக்குத் தெரியும்.
எனக்கும்...உங்ககிட்ட
சொன்னப்ப...ரொம்பக்
கஷ்டமா இருந்துச்சும்மா.
அப்படி ஒரு முடிவை...நான்
தாங்க முடியாத வலியோட
தான் எடுத்தேன்மா.என்னால
உங்களை விட்டு...எங்கயும்
போக முடியாதும்மா...
எனக்கு...எனக்கு வேற
வழி தெரியாம தான்...
நான் அப்படி ஒரு முடிவுக்கு
வந்தேன்மா.நான் தப்புத்
தப்பா யோசிச்சு...முடிவுப்
பண்ணி...உங்களைக் காயப்
படுத்திட்டேன்”
“போகட்டும் விடுப்பா.
இப்ப என்ன முடிவு
பண்ணி இருக்கே ராஜா”
“நான் உங்களை விட்டு
எங்கயும் போக மாட்டேன்மா.
நான்...நானா ஏதேதோ
யோசிச்சு..சாரிம்மா...”
“வேண்டாம் ராஜா.நீ
சங்கடப் படாதே.நீ உன்
முடிவை மாத்திக்கிட்டயே..
அம்மாவுக்கு இது போதும்பா”
மகனின் தலையை வருடிக்
கொடுத்து விட்டு எழுந்து
சென்றார் சாரதா.
இரவு வந்திருந்தது.
தான் அன்று எடுத்த
மதிவதனனின் புகைப்படங்களை
அக்காவிடம் காட்டிக்
கொண்டிருந்தான் பவித்திரன்.
“யார் கிட்டயும் சொல்லாம
திடீர்னு எங்கக்கா போனே”
“மதி கிட்ட ஒரு முக்கியமான
விஷயம் சொல்ல மறந்துட்டேன்
பவி.அதை தான் சொல்லிட்டு
வரலாம்னு போனேன்”
“நீ எங்கே எங்கேன்னு
கேட்டு அம்மா என்னை ஒரு
வழிப் பண்ணிட்டாங்க
மதுக்கா”
“எவ்வளவு வருஷமா
சமாளிக்கிறே இன்னைக்கும்
எதாவது கதை விட
வேண்டியது தானே?”
“எல்லா பொய்யும்
சொல்லி முடிச்சாச்சுகா.
இனி புதுசா தான்
யோசிக்கணும்”
“உன் அக்காவுக்காக
இது கூட செய்ய மாட்டியா”
“நான் விட்ட ரீல்லால தான்
நீ அம்மாகிட்ட இருந்து
தப்பிச்சிருக்கே மதுக்கா.
என்னால தான் அம்மா
மது எங்கே போனே,ஏன்
இவ்வளவு நேரம்னு எந்தக்
கேள்வியும் கேட்கலை”
“சரிடா சரிடா.என் தம்பி
தங்கக் கம்பி”
“உன் புகுந்த வீட்டுக்குப்
போயிட்டா என்னக்கா
பண்ணுவே?மாமாகிட்ட
சொல்லிட்டயா?மாமாவுக்கு
உண்மை தெரியுமா?”
“இல்லை பவி.நான் இன்னும்
சொல்லலை...”
“சீக்கிரம் சொல்லிடுக்கா.
மாமா உனக்கு சப்போர்ட்
பண்ணுவாருன்னு தான்
எனக்குத் தோணுது”
“ம்”
“அம்மாவை எப்படி
சமாதானம் பண்ணுவேக்கா”
“அதை மதி பார்த்துக்குவார்
பவி.இனி நான் பொய் சொல்ல
வேண்டிய நிலைமை
ஏற்படாதுன்னு நினைக்கிறேன்”
“பதினோரு மணியாச்சு.
இன்னும் பேசி முடியலையா”
தாயாரின் குரலில் இருவரும்
சுதாரித்தனர்.
“பால் வைச்சிருக்கேன்.
குடிச்சுட்டுத் தூங்கு”
என்று மகனை அனுப்பி
விட்டு மதுரா அருகில்
அமர்ந்தார் ராதா.
“அம்மா இன்னைக்கு ரொம்ப
சந்தோஷமா இருக்கேன் மது.
இனிமேல் உன்னைப் பத்தின
கவலை இல்லாம நிம்மதியா
இருப்பேன்.நீ உன் ஹேண்ட்
பேக்கையும்,மொபைல்லையும்
தொட விடாதனால எனக்குத்
தெரியாம உன் வேலையை
ஆரம்பிச்சுட்டியோன்னு நான்
தப்பா நினைச்சுட்டேன் மது.
அம்மாவை மன்னிச்சுடு.
நீ போன்ல பேசிட்டே இருந்தது
வேற என்னைக் குழப்பிடுச்சு.
சாரி தங்கம்”
“என் செல்ல ராது”தாயின்
தாடையைப் பிடித்துக்
கொஞ்சினாள் மதுரா.
“நீ அம்மாவுக்குப் பண்ணிக்
கொடுத்த சத்தியத்தை
எப்பவும் மீறக் கூடாது மது”
என நினைவுறுத்தினார் ராதா.
“ம்ஹூம்.மீற மாட்டேன்மா”
“செல்லை ஆராய்ச்சி
பண்ணாம நேரமே
தூங்கிப் பழகு மது”
“சரிம்மா”மகளுக்குப்
போர்த்தி விட்டு விட்டு
விளக்கை அணைத்து
விட்டுச் சென்றார் ராதா.
படுத்திருந்த மதுராவின்
விழிகளில் கொஞ்சமும்
உறக்கமில்லை.அவள் மனது
மதிவதனனை நினைத்து
நினைத்து உருகியது.
எனக்காக எப்படி
யோசித்திருக்கிறான்!
எழுந்து சென்று வாட்ரோபில்
மறைத்து வைத்திருந்த
மதிவதனனின் சட்டையை
எடுத்து வந்து தன் மார்போடு
அணைத்துக் கொண்டு
படுத்தாள் மதுரா.
அச்சட்டையில் ரத்தம்
இருந்ததற்கான அடையாளமே
இல்லை.அவ்வப்போது
மதுராவால் கண்ணீர்க்கறை
மட்டும் ஏற்படும்!
என்னால் எத்தனை வேதனை
உனக்கு?என்னால் நீ உதிரம்
சிந்தியதையே என்னால்
தாங்கிக் கொள்ள முடியவில்லை.
இது போதாதென்று,என்னால்
மூன்று நாட்களாக நிம்மதியின்றி,
என் வாழ்க்கை என்னாகுமோ
என்று பயந்து பயந்து,என்னைக்
காக்கும் வழி தேடித்
துடித்திருக்கிறாய்!உன் மென்
மனது என்னால் எத்தனை
அல்லலுக்கு உள்ளாகி விட்டது?
என்னை மன்னித்து
விடு மதி.நான் எனக்கே
தெரியாமல் உனக்குத்
துன்பமிழைத்து விட்டேன்.
இனி ஒரு போதும் இவ்வாறு
நடக்காது.உன்னுடைய
அழகான சிரிப்பு வாடாமல்
பார்த்துக் கொள்வேன்.
உனக்கு எந்தத் துன்பமும்
ஏற்படாமல் பார்த்துக்
கொள்வேன்.உன்னைப்
போல இல்லை உன்னை
விட அதிகமாக உன்னை
நேசிப்பேன்.
கைபேசி ஒலியெழுப்ப,
மதியென்ற பெயரைப்
பார்த்த மதுரா அவசரமாகத்
தன் கண்ணீரைத் துடைத்தாள்.
“என் மதிக்குத் தூக்கம்
வரலையா”என்றாள்
கைபேசியைக் காதில் வைத்து.
“ம்ஹூம்.ஏன்டா உன்
குரல் ஒரு மாதிரி இருக்கு”
“அதூ...படுத்துட்டே
பேசறனால மதி.என்ன
விஷயம்,ஏன் என் பட்டு
தூங்காம இருக்கு”
“நீ முக்கியமான ஒரு
விஷயத்தை சொல்லலை
மது.யோசிச்சு யோசிச்சு
தூக்கம் வரலை”
“........”
“நீ யாருக்காக ஆபத்தைத்
தேடிப் போனேன்னு நான்
தெரிஞ்சுக்கலாமா மது”
“இந்தக் கேள்விக்கான
பதிலை, நேர்ல பார்க்கும்
போது சொல்றேன் மதி.ப்ளீஸ்...
போன்ல வேண்டாமே”
“ஓகேடா.குட்நைட் மது”
கைபேசியை வைத்து விட்டு,
மதிவதனனை நினைத்தபடியே
விழித்திருந்தாள் மதுரா.
என் பாதையில் பூக்கள்
தூவத் துடிக்கும் மதி
எவ்வாறு எனக்குத்
துணை நிற்பான்?
முட்களோடு நான்
பயணிப்பதை மதி
நிச்சயம் விரும்ப மாட்டான்!
அதே நேரத்தில்,என்
ஆசையையும் என் மதியால்
அவ்வளவு சுலபமாக
மறுக்க முடியாது.
தன் கனவுகள் உயிர்
பெறுமா என யோசித்த
மதுரா,தான் இன்னும்
மதிவதனனிடம்
சொல்லாத உண்மையை
நாளை சொல்லி
விடுவதெனத் தீர்மானித்தாள்.
தித்திக்கும்