கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துணையாக நான் வருவேன்-10

Akila vaikundam

Moderator
Staff member
10


கண்விழித்த வேதாவிற்கு மாறன் முறைப்பதற்கான காரணம் புரியவேயில்லை…நெற்றிசுருக்கி அவனையே பார்த்தாள்.


அதைக் கண்டு எரிச்சலுற்றவன் வாசலில் நின்றபடியே முதல்ல வெளியே வர்றியா...அது என் ரூம் நியாபகம் இருக்கட்டும்….


எதுவும் பேசாமல் வேதா வெளியே வர உள்ளே சென்றவன் படுக்கையில் இருந்த பெட்ஷீட் படுக்கை உறை தலையணை என அனைத்தையும் எடுத்து அறையின் மூலையில் வீசியவன் வேலைசெய்யும் பணியாளரை கத்தி அழைத்தான்.


பதறியபடி வந்த பணியாளரிடம்... எல்லாத்தையுமே இப்பவே ரீமுவ் பண்ணிட்டு புதுசா போடுங்க...ஐஞ்சி நிமிஷம் தான் டைம் என்று கூறியபடி குளியலறைக்குள் புகுந்தான்.


எதுவுமே புரியாத வேதா தோள்களைக் குலுக்கியபடி மற்றொரு பணியாளர் கொண்டு வந்திருந்த காபியை பொறுமையாக குடிக்க ஆரம்பித்தாள்.


அவன் வெளிவரும் வரை அறை வாசலிலேயே காத்திருக்க குளியலறையிலிருந்து வெளியே வந்தவன் அவளைக் கண்டதும் மேலும் கோபம் கண்டு கழுத்தில் போட்டிருந்த துண்டை எடுத்து அவளின் மீது வீசி எறிந்தான்.


கோபத்தில் அந்த துண்டை அவனின் மீது வீசி எறிந்தவள் இப்போ எதுக்காக முழிச்ச நேரத்திலிருந்து இப்படி எரிஞ்சி விழுந்துகிட்டு இருக்கீங்க நான் அப்படி என்ன பண்ணினேன்….


ம்ம்... நல்லா நம்ப வைச்சி கழுத்தறுத்துட்டீங்கல்ல….


யாரு நம்ப வைச்சி கழுத்துத்தது…


பின்ன யாரு நீயும் உன் குடும்பமும் தான்..


என்ன உளறீங்க...நாங்க என்ன செஞ்சோம்….


ம்ம்...என்ன செய்யல...நேத்தெல்லாம் வீட்டுக்கு போறேன்னு டிராமா...அப்புறமா உன் அம்மா வந்ததும் கிளம்பறேன்னு பாட்டு….இப்போ என்னனா அவங்களும் வீட்டுக்கு வரல...நீயும் போகல….



என்ன அம்மாவும், அப்பாவும் இன்னும் வரலையா…?டைம் என்னாச்சி என்று நேரம் பார்த்து அதிர்ச்சி அடைந்தவள் ஐய்யய்யோ என்னனு தெரியலையே மணி எட்டாச்சி இன்னும் வரலனா... என்று பதறினாள்.


ஏய்... என்று பற்களை கடித்தவன் என்னை கோபப்படுத்தாத...ஒடிப்போயிடு..
இல்லனா எதையாவது எடுத்து அடிச்சிடப்போறேன்.


ஓஹோ….என் அம்மாவும் அப்பாவும் வரலனு நான் பயப்படறது உங்களுக்கு கோபம் வருதா….
அப்போ நல்லா கோபப்படுங்க…அதுக்கு முன்னாடி ரெயில்வே ஸ்டேஷன் போய் என்னாச்சினு பாருங்க என்றவள் யோசனையாக வீட்டை சுற்றி பார்த்தவள்.


ஆமா ஏன் வீட்ல யாருமே இல்லை...என்று மாறனை பார்த்து கேட்டாள்.


ம்ம்... உன்னை என் தலையில கட்டினதால குடும்பத்தோட கொண்டாட போயிட்டாங்க…


கொண்டாட போயிட்டாங்களா...எங்க?

நடிக்காத... இன்னைக்கு காலைல அம்மா வந்து சொல்லிட்டு தான போனாங்க... ஆனாலும் இவ்ளோ தத்ரூபமா மறந்த மாதிரி யாராலயும் நடிக்க முடியாது…என்று மாறன் கூறவும் தான் வேதா யோசித்து பார்க்க ஆரம்பித்தாள்.



அப்படின்னா அத்தை வந்து திருப்பதி போறேன்னு சொல்லிட்டு இந்துவை கூட்டிட்டு போனது கனவில்லையா…எப்படி என் அம்மா போனாங்க…. அவங்களுக்கு வேண்டுதல் இருந்தா முதல்ல என்கிட்ட சொல்லி இருப்பாங்களே எனக்கு தெரியாம என்ன வேண்டுதல் என்று குழம்பியவள் யோசனையாக மாறனைப் பார்க்க .



மாறன் கோபத்தில் அவனின் படுக்கையில் சாய்ந்து இருந்தான்.


அதன் பிறகு வேதா மீண்டும் கண்களை மூடி அதிகாலையில் மாமியார் தன்னிடம் என்ன கூறினார் என ஒன்றன் பின் ஒன்றாக யோசிக்கத் தொடங்கினாள்.


அதன்பிறகுதான் சட்டென்று ஞாபகம் வந்தவளாக ஐய்யோ தாத்தா என்று கத்தியபடி பாட்டியின் அறையை நோக்கி ஓடினாள்.


அவள் கத்திய சத்தத்தில் மாறன் திடுக்கிட்டு பயந்து எழுந்தவன் சத்தம் வேதாவினுடையது என்று புரிந்ததும் தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் படுக்கையில் சாய்ந்தான்.


இங்கு ராதிகா லட்சுமி அக்காவுடன் அவளின் வீடு செல்லவும் தாயும் தந்தையும் அவசரமாக எங்கோ கிளம்பி கொண்டு இருந்தார்கள்.


மகளைப் பார்த்ததும் சற்று ஆச்சரியமாக அவளைப் பார்த்தவர்கள்…. பின்பு பாசமாக அவளை அணைத்து உச்சி முகர்ந்து பின் பரஸ்பரம் விசாரித்துக் கொண்டனர்….பிறகு என்ன ராதிகா தீடிர்னு இங்க வந்துருக்க…. எதாவது பிரச்சனையா…?



ஏன்மா….உங்களை பாக்கனும்னு தோணினா உடனே வரக்கூடாதா…?ஏதாவது பிரச்சனைனா தான் வரனுமா…?


அய்யோ அந்த அர்த்தத்தில கேக்கல ராதிகா...தீடிர்னு ஃபோன் கூட பண்ணாம வந்திருக்க அதும் தனியா... நீ வரேன்னு சொல்லி இருந்தா நான் எங்களோட ப்ரோக்ராம் கேன்சல் பண்ணிருப்போம்….சரி இப்பவும் ஒன்னும் பிரச்சனையில்லை என்றவரிடம் ராதிகா


அம்மா ஒன்னும் பிரச்சினை இல்லை எனக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு டெலிவரிக்கு அது மட்டும் இல்ல லக்ஷ்மி அக்கா என்னோட துணைக்கு இருக்காங்க அதனால நீங்க போட்டிருந்த ப்ரோகிராமை கேன்சல் செய்ய வேணாம் போய்ட்டு வாங்க... நான் மேனேஜ் பண்ணிப்பேன் என்றாள்.


மனம் இல்லாத ராதிகாவின் தாயார் மகளைப் பார்த்து ஆமா எப்படி இந்த மாதிரி நேரத்துல உன் வீட்டு ஆளுக உன்னை இங்க வர ஒத்துக்கிட்டாங்க அதுமட்டுமில்லாம நீ எப்படி இங்க வந்த…?


நீ வரேன்னு சொல்லி இருந்தா அட்லீஸ்ட் காராவது அனுப்பி இருப்பேனே என்று அங்கலாய்த்தார்.


அதற்கு ராதிகா அத்தானுக்கு கல்யாணம் முடிஞ்சா திருப்பதி போறதா வேண்டி இருந்திருக்காங்க நேரம் காலம் இன்னைக்கு கூடி வந்ததால எல்லாருமே விடிய காலையில கிளம்பி போய்ட்டாங்க.


உன் மாப்பிள்ளை தான் என்னை கூட்டிட்டு வந்து விட்டாரு உள்ள வந்தா நேரம் ஆயிடும்னு
நான் தான் அப்படியே கிளம்பி போக சொல்லிவிட்டேன் அதனால நீங்க தேவையில்லாம அங்கலாப்பு படவேண்டாம்.


சரிமா நீங்க கிளம்புங்க நைட்டெல்லாம் சரியா தூக்கல நான் என் ரூம்ல போய் தூங்குகிறேன் என்று கூறிய ராதிகா லட்சுமி பார்த்து அக்கா என்ரூமிலேயே உங்களுக்கு ஒரு பெட் போட சொல்றேன் நீங்களும் நைட்ல இருந்து தூங்கலல்ல... என்னோட கொஞ்ச நேரம் நீங்களும் தூங்குங்க...அப்புறமா என்னோட டயட் சாட்டை எடுத்து இங்க சமைக்கிறவங்க கிட்ட கொடுத்துடுங்க...என்று உள்ளே சென்றவளை ராதிகாவின் தாயார் அழைத்தார்.



என்னம்மா சொல்லுங்க என்று கூறியவளை சற்று தள்ளி அழைத்துச் சென்ற பின் என்ன இது வீட்டு வேலைக்கார பெண்ணை உன் ரூம்ல தங்க சொல்லற அவளை கீழ கிச்சன் பக்கத்துல வேலைக்காரங்க தங்கற அறைல போய் படுத்துக் சொல்லு நான் எங்கயும் போகல உன்னோடே இருக்கேன் என்றவரைப் பார்த்து முறைத்த ராதிகா.



அம்மா ப்ளீஸ் இப்படி எல்லாம் பேசி என்னை கோபப்படுத்தாதீங்க நீங்க பேசினது லட்சுமி அக்காவுக்கு தெரிஞ்சா அவங்க ரொம்பவே கஷ்டப்படுவாங்க.


அவங்க எனக்காக அவங்களோட ரெண்டு குழந்தைகளையும் விட்டுட்டு இங்க வந்து இருக்காங்க தெரியுமா... என்னதான் சம்பளத்திற்காக வேலை செய்றவங்களா இருந்தாலும் நாங்க கூப்பிட்ட உடனே எல்லாத்தையும் விட்டுட்டு என்ன பார்த்துக்க வந்து இருக்காங்க இல்ல அப்போ நானும் அவங்களை பாத்துக்கனும் இல்லையா…



அது மட்டும் கிடையாதும்மா எங்க வீட்ல யாருமே வேலை செய்றவங்களை வித்தியாசமா நடத்த மாட்டாங்க…பிளீஸ் மா... இது போலெல்லாம் அந்த அக்கா முன்னாடி ஏதும் பேசி வைச்சிடாதீங்க….



என்னதான் நமக்கு கீழே இருந்தாலும் அவங்களும் மனுஷங்கதான் அவங்க மனசை காயப்படுத்திட்டு நாம சந்தோஷமா இருக்க முடியாது ஒரு ரெண்டு நாள் தான் அதுக்கப்புறம் உங்க வீட்டில நானே இருக்கப் போறதில்ல அப்புறம் எப்படி எங்க வீட்டு வேலைக்காரங்க தங்க போறாங்க சொல்லுங்க என்று கூறியபடி அவளின் அறைக்குள் சென்றுவிட்டாள்.


அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த தாயார்...ஏற்கனவே நல்லாபேசுவ….இப்போ சொல்லியா தரனும் என்னவோ போ...என்றவர் கணவரை அழைத்துக் கொண்டு வெளியே சென்றார்.


இங்கு ரயில்நிலையத்தில் வேதாவின் தாய் தந்தையை அழைத்துக் கொண்டார் ரத்தினம். பிறகு மகன் வரவில்லையா என்று கேட்டார்…


ஏற்கனவே அக்காவோட கல்யாணத்துக்கு நிறைய லீவு போட்டதால இனியும் லீவு போட்டா எக்ஸாம் எழுத முடியாதுன்னு வரல சம்பந்தி என்றவர்கள் .


என் பெரிய பொண்ணு எப்படி இருக்கா இந்து பிரச்சனை ஒன்னும் பண்ணலையே இங்க வந்ததுக்கு அப்புறமும் அழுதுகிட்டே இருந்தாளா என்று மூத்த மகளையும் இளைய மகளையும் பற்றி விசாரித்தார் வேதாவின் தாய்.


உடனே ரத்தினம் ரெண்டு பொண்ணுங்களாலையும் எந்தப் பிரச்சினையும் இல்ல... பிரச்சினை என் பையன்னால தான் என்று உளறினார்.
புரியாமல் விழித்த அவர்களிடம்... சமாளிக்கும் விதமாக இங்கே நின்னு பேசிகிட்டு இருந்தா நமக்காக எல்லாருமே காக்க வேண்டியிருக்கும்... முதல்ல நாம இங்கிருந்து கிளம்பலாம் என்றார்.


ம்ம்….என்றவர்களுக்கு குழப்பம் தீரவில்லை... அவர்களின் முகத்தை பார்த்தே அவர்களின் மனதில் இருப்பதை அறிந்து கொண்ட ரத்தினம் வேதாவின் பெற்றோர்களைப் பார்த்து



உங்களுக்கு இவ்ளோ குழப்பம் வேண்டாம் சம்மந்தி நம்ம பிள்ளைகளுக்கு கல்யாணம் முடிஞ்சா கோயிலுக்கு வர்றதா வேண்டி இருக்காங்க அவ்வளவுதான்.


நைட் நாங்க சொன்னதும் என்னவோ ஏதோன்னு நினைச்சு குழம்பி இருப்பீங்க…. ஆனாலும் இதை பத்தி வேதாகிட்டயும்,மாறன் கிட்டயும் சொல்ல வேணாம்னு சொன்னதும் உடனே கேட்டு கேட்டுகிட்டிங்க பாருங்க அதுக்கு என்னோட மனப்பூர்வமான நன்றி என்று கையெடுத்துக் கும்பிட்டார்.


பதறிய வேதாவின் பெற்றோர்கள் ஐயோ பிள்ளைங்க நல்லதுக்காக தான வேண்டி இருக்கீங்க... அதுக்கு எதுக்காக கும்பிட்டுகிட்டு முதல்ல கையை கீழே இறக்குங்க…


பிள்ளைகளை மறு வீட்டுக்கு கூப்பிட வந்தா அந்த திருப்பதி ஆண்டவன் அவர் வீட்டுக்கு வர சொல்லி எங்களை அழைக்கிறாரு.


அவரை பார்த்துட்டு அதுக்கப்புறமா பிள்ளைகளை பாத்துக்கலாம் அதில என்ன தப்பு என்று சந்தோஷமாக கூறியவர்களை அழைத்துக்கொண்டு வெளியே வந்த ரத்தினம் அருகில் இருந்த ஒரு விடுதியில் அறை எடுத்து தங்க வைத்தார்.


பிறகு அவர்களிடம் இன்னும் ஒரு மணி நேரத்துல எங்க வீட்டிலிருந்து எல்லாரும் கிளம்பி வந்திடுவாங்க அதுக்குள்ள நீங்க கொஞ்சம் பிரஷ் ஆயிட்டீங்கனா எல்லாரும் சேர்ந்து திருப்பதி கிளம்பிடலாம் என்று கூறினார்.



அவர் கேட்டுக்கொண்டபடி சற்று நேரத்தில் வேதாவின் பெற்றோர்கள் குளித்துமுடித்து பிரஷ்ஷாக வெளியே வரவும் அவர்களை அழைத்துக்கொண்டு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சந்திப்பதாக சொன்ன இடத்திற்கு சென்றார் ரத்தினம்.


ராதிகாவை விட்டு விட்டு வந்த செழியன் வேதாவின் பெற்றோரை அழைத்துக் கொண்டு சென்ற ரத்தினம்…



பாட்டி, இந்து, கனகா மற்றும் செல்வியின் குடும்பத்தினரை ஒரு இன்னோவா காரில் அழைத்துக் கொண்டு வந்த டிரைவர் மூவரும் ஒரே இடத்தில் வந்து சந்தித்தார்கள்.


அதன்பிறகு செல்வியின் குடும்பம் காரை விட்டு இறங்கிக் கொள்ள அந்த இடத்தில் வேதாவின் பெற்றோர்களும் ரத்தினமும் ஏறிக்கொண்டனர்.



ஒரு வண்டி மீதமாக அதை டிரைவரை எடுத்துப் போக சொல்லி சாவியை அவரின் கையில் திணித்து எடுத்துக்கொள்ளும்படி பணிந்து விட்டு செழியன் காரை ஓட்ட ரத்தினம் அருகில் இருக்க பின்சீட்டில் வேதாவின் பெற்றோர்கள் இருவரும் அமர்ந்திருக்க அதற்குப் பின்புறம் இருந்த இருக்கையில் பாட்டி ,இந்து, கனகா அமர்ந்து இருந்தனர்.


இந்து நல்ல உறக்கத்தில் இருந்தாள்….என்ன நடக்கிறது என்று தெரியாத அளவிற்கு ஒரு உறக்கம்.

இவர்கள் அணைவரையும் சுமந்த படி இன்னோவா கார் திருப்பதியை நோக்கி விரைய ஆரம்பித்தது. ரவி,செல்வி, தர்ஷினி அமர்ந்திருந்த சிறிய ரக கார் செழியனின் வாகனத்தை பின்தொடர்ந்தது.


இடையில் ஒருமுறை மட்டும் ஒரு உணவகத்தின் முன்பு வாகனத்தை நிறுத்தி அனைவரும் சாப்பிட்டனர்.
அப்பொழுதுதான் இந்துமதி நன்றாக கண் விழித்து பார்த்தாள்.


எங்கே இருக்கிறோம் என்று எதுவுமே புரியவில்லை ஆனால் தாய் தந்தை உடன் பயணிப்பதை கண்டதும் அவளின் மனது நிம்மதி ஆயிற்று. பெற்றோர்களை கண்டதும் தற்காலிகமாக அவளின் அக்காவை மறந்தாள்.


பெற்றோர்கள் அவளை நீண்ட நாட்களுக்கு பிறகு எங்கோ அழைத்துச் செல்கிறார்கள்…. அது தான் அவளுக்கு இப்பொழுது முக்கியமாகப் பட்டது.


அக்கா எப்படியும் வீட்டில் பத்திரமாக தான் இருப்பாள் என்று அவளுக்கு அவளாகவே மனதை சமாதானப்படுத்திக் கொண்டு அந்த பிரயாணத்தை குதூகலத்துடன் அனுபவிக்க தொடங்கினாள்.


ஆனால் தர்ஷினி அவளுடன் வரும்படி இந்துவிடம் கெஞ்ச வேறு வழியில்லாமல் செல்வியின் காருக்கு மாறி அமர்ந்தாள் இந்துமதி. அதன்பிறகு என்ன... கிட்டத்தட்ட சம வயதுடைய இரு சிறுமிகளும் எதையும் மனதில் வைக்காதபடி அவர்களின் கதைகளை பேசிக் கொண்டு வந்தனர் முன்புறம் அமர்ந்திருந்த செல்வியும் ரகுவும் அவ்வப்போது ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தத்துடன் சிரித்துக் கொண்டனர்.சிறுமிகளின் பேச்சை ரசித்த படி ரகு வாகனத்தை ஓட்டினார்.


கிட்டத்தட்ட பத்துமணி போலவே திருப்பதியை நெருங்கி விட்டனர் ஆனால் கனகா நேராக கோவிலுக்குச் செல்ல வேண்டாம் என்று கூறியவர் அடி வாசலில் இருந்த ஒரு ஹோட்டலில் அறை எடுக்கும்படி கூறினார் அனைவருக்குமே அவர் மனதில் இருந்த திட்டம் புரிந்ததால் எதுவும் பேசவில்லை.



வேதாவின் பெற்றோர்களுக்கு என்ன நடக்கிறது என்று எதுவும் புரியவில்லை ஆனால் சம்பந்தி வீட்டினர் கூட இருக்கும் பொழுது அவர்களிடம் என்ன...ஏது...என்று கேள்வி கேட்காமல் இருப்பதே சாலச் சிறந்தது என நினைத்து வாய் திறக்கவில்லை.



அவர்கள் இப்பொழுதுதான் முதல் முறை திருப்பதி வருகிறார்கள் அதனால் அந்த கோவிலின் வழிபாடு பற்றியும் எப்படி செல்வது என்பது பற்றியெல்லாம் தெரியாது அதனால் நடப்பவற்றை எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர்.



ஆனால் செழியனின் மனதில்தான் சிறு நெருடல் கிட்டத்தட்ட நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியை மாமியாரின் வீட்டு வாசலில் இறக்கிவிட்டு வந்திருக்கிறான் தாய் எடுக்கும் முடிவுகளை பார்த்தால் ஒரு வாரம் இல்லாமல் திருப்பதியை விட்டு செல்ல மாட்டார் போல.


ஒரு வாரம் எப்படி மனைவியைக் காணாமல் இருப்பது அவளின் குடும்பத்தார் அவளை நன்றாகப் பார்த்துக் கொள்வார்களா…? என்றெல்லாம் கவலைப்பட தொடங்கியிருந்தான்.



அதற்குள்ளாகவே ரகு அறை எடுத்துவிட்டு இவர்களையும் அழைக்க எதையும் காதில் வாங்காத செழியன் காரிலேயே உட்கார்ந்தபடி இதையெல்லாம் யோசித்து கொண்டிருந்தான்.



ரத்தினம் தான் செழியனை தட்டி எழுப்பினார்…


டேய் மாப்பிளை கூப்பிடறாரு... வண்டியை எடு என்று கூறினார் சரி என்பது போல் தலை அசைக்க மகனின் எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட கனகா பின் அமர்ந்தபடியே செழியா நீ எதைப் பத்தியும் கவலைப் படாம ஹோட்டலுக்குள்ள வண்டிய விடு என்று கூறினார் .


தாய் கூறவும் யோசிக்காமல் வண்டியை உள்ளே விட்டு பார்க் செய்தவனால் சுறுசுறுப்பாக அடுத்த கட்ட வேலையை செய்ய முடியவில்லை.


ஹோட்டல் பணியாளர்கள் வந்து லக்கேஜ்களை எடுத்து செல்லும் வரையுமே அங்கேயே நின்று கொண்டிருக்க ரத்தினம் அனைவரையும் அழைத்துக்கொண்டு முன் செல்ல ஆரம்பித்தார்.


மகன் தனியே நிற்பதைக் கண்ட கனகா நேரடியாக செழியனின் அருகில் வந்து அவனின் தோளில் கை வைத்து என்னடா உனக்கு யோசனை அங்கங்க அப்படி அப்படியே சிலை மாதிரி நிக்கிறியே என்று கேட்டார்.


தாய் நேரடியாக கேட்கவும் எதையும் மனதில் வைத்துக் கொண்டு சமாளிக்க தெரியாத செழியன் வெளிப்படையாக அம்மா நீங்க ஏதோ ஒரு வாரம் பத்து நாள் மாதிரி புரோகிராம் போடறீங்கன்னு புரியுது ஆனா அவ்வளவு நாள் ராதிகா எப்படி தனியா இருப்பா…?


அவங்க அம்மா அப்பாவை பற்றி நமக்கு ரொம்ப நல்லாவே தெரியும் மகளை விட பணத்துக்கு தான் அதிகப்படியான முக்கியத்துவம் கொடுப்பாங்க இப்போ இருக்கிற நிலைமையில ராதிகாவை அங்க தனியா விட்டுட்டு நாம இங்க இருக்கிறது சரியில்லையோனு என் மனசுக்கு படுத்துமா….



நீங்க வேணா எல்லாருமே இங்கு இருக்க நான் மட்டும் வேணும்னா சென்னை போகட்டுமா என்று கேட்டான்.



உடனே கனகா டேய் செழியா நல்லதோ கெட்டதோ ஏழுமலையானோட பாதத்துக்கு வந்தாச்சு இனி அவரைப் பார்க்காம போறது சரி கிடையாது….



ஒரு வாரம் இல்ல ஒரு மாசமே நாம இங்க இருந்தாலும் அங்க ராதிகாவுக்கு எந்த குறையும் வராது...அவளை சுற்றி ஆளுக இருக்காங்க.



லட்சுமி கிட்ட தெளிவா சொல்லி விட்டிருக்கேன்….அது மட்டுமில்லாம ராதிகா கிட்டயும் சொல்லி இருக்கேன்.



நாங்க கோவிலுக்கு உள்ளே போயிட்டா எங்களை காண்டக்ட் பண்றது ரொம்ப கஷ்டம் அதனால எந்த உதவியா இருந்தாலும் எப்போனாலும் மாறனுக்கு கூப்பிடுனு….



நீ கடவுளை நம்புறீயோ இல்லையோ ராதிகாவோட அம்மா அப்பாவை கூட நம்பாம போ….ஆனா நம்ம மாறனை நம்பித்தான் ஆகணும் .




மாறனை பத்தி உனக்கே நல்லா தெரியும் அவனுக்கு அவனை பத்தி மட்டும் தான் அக்கறை கிடையாது.ஆனா மத்த எல்லார் மேலயும் அளவுக்கு அதிகமான அக்கறையும் பாசமும் உண்டு .


அதனாலே நீ கண்டத நினைச்சு குழப்பிக்காம கடவுள் மேல பாரத்தைப் போட்டுட்டு பொறக்கப் போற குழந்தைக்காகவும் ராதிகாவுக்காகவும் மனப்பூர்வமா அந்த ஆண்டவன் கிட்ட வேண்டிக்கோ….கூடவே



நம்மளோட குடும்பம் இதே மாதிரி எப்பவும் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கனும், உன் அண்ணனோட குடும்பம் முழுமை அடையனும்னு கடவுள் கிட்ட கேளு… மீதி எல்லாத்தையும் அந்த கடவுள் பாத்துக்குவார் என்று ஆறுதல் கூற அதன்பிறகே செழியனின் மனது சமாதானம் ஆகியது.



அதன் பிறகும் சற்று நேரம் கழித்து மனம் கேளாமல் தனிமையில் சென்று ராதிகாவிற்கு அழைத்துப் பேசி அவளது சௌரியங்கள் அனைத்தையும் விசாரிப்பவன் அடுத்தகட்டமாக அவனின் அண்ணனுக்கு அழைத்தான்.



அண்ணா அம்மா இங்க நிறைய கோவிலுக்கு போகணும்னு வேண்டுதல் வெச்சிருக்காங்க போல எல்லா கோவிலுக்கும் போயிட்டு தான் ஊருக்கு வருவோம்னு நினைக்கிறேன் அது வரைக்கும் ராதிகாவுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டா நீ தான் செய்யனும்…



உன்னை நம்பி தான் அண்ணா நான்
இங்க வந்து இருக்கேன் என்றான்.




கலங்கிய தம்பிக்கு கவலைபடாதே தம்பி நான் இருக்கும் போது ஏன் தேவையில்லாத பயம் வருது உனக்கு என்று புத்தி கூறிய மாறன் பிறகு செழியனிடம்... நீயும் அங்க இருந்து கிளம்ப கொஞ்சம் முயற்சி எடு ….


இப்போ கோவிலுக்கு போயிட்டீங்கன்னா நேரா சாமி கும்பிட்டுட்டு உடனே வீடு வந்து சேருங்க ராதிகாவுக்கு குழந்தை பிறந்தவுடன் மறுபடியும் எல்லாரும் சேர்ந்து மீதி கோயில் பார்த்துக்கலாம்னு சொல்லி அம்மாவை அங்கிருந்து கிளப்பு என்று கூறினான்.


அண்ணனின் திட்டத்தை புரிந்து கொண்டு செழியன் சட்டென்று உஷார் ஆனான்.


அண்ணன் மிகத் தெளிவாக இருக்கிறான்...என்னை வைத்தே காய் நகர்த்தவும் பார்க்கிறார் இதற்கு தான் ஒத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்த செழியன் .



அண்ணனிடம் சரி அண்ணா முடிஞ்ச அளவு முயற்சி பண்றேன் என்று கூறினான். பிறகு தயங்கியபடி அண்ணிய கொஞ்சம் பார்த்துக்கோ அவங்ககிட்ட சிடுசிடு விழாத... உன்னோட கோபத்தை அவங்ககிட்ட காண்பிக்காத அவங்க தாங்க மாட்டாங்க என்று கூறியவன் அண்ணன் பதில் சொல்ல ஆரம்பிக்கும் முன்னே பட்டென்று காலை கட் செய்துவிட்டு மொபைலை பாக்கெட்டில் திணித்தான்.



எப்படியோ கடைசியாக சொன்ன விஷயத்திற்கு மாறனிடம் இருந்து எந்த ஒரு நல்ல விதமான பதிலும் கிடைக்க... நல்ல வசைவு மட்டுமே கிடைத்திருக்கும் இருந்தாலும் அவன் மனதில் இருந்தவற்றை கூறிய திருப்தி இருந்ததால் சந்தோஷமாக தாய் சொல்லுவதற்க்கெல்லாம் தலையசைக்க ஆரம்பித்தான்.




இங்கு மாறனுக்கு கோபம் தாளவில்லை இதோ இங்க இருக்கிற திருப்பதிக்கு போய்ட்டு வரோம்னு கிளம்பினாங்க…



ஒழுங்கா ஆன்லைனில் புக் செய்தா ஒரு நாளில் திரும்பிவிடலாம் மூன்றிலிருந்து நான்கு மணி நேர பயணம் மட்டுமே திருப்பதிக்கு ஆனால் இவர்கள் அடிக்கும் கூத்து ….


தம்பி வேற ஒரு வாரத்துக்கு மேல ஆகும்னு பயமுறுத்தறான்... அதுவரைக்கும் இந்த வேதாவை எப்படி சகிச்சிக்கறது….


எல்லாம் இந்த அப்பாவால வந்தது ராத்திரி நான் அப்பாகிட்ட பேசி இருக்கவே கூடாது சத்தம் இல்லாம நானே எல்லா வேலையையும் முடிச்சு இருக்கணும் அவர் கிட்ட சொன்னதாலதான் ஏதோ பிளான் பண்ணி கடவுள் மேல பழியை போட்டுட்டு கோவிலுக்கு கிளம்பிட்டாங்க .



கடவுளே ப்ளீஸ் ஏதாவது பண்ணி அவங்களை சீக்கிரமா இங்க வர வச்சிடு... அதுவரைக்கும் இந்த வேதாகிட்ட ஏதும் கடுமையா நடந்துக்காத மாதிரியும் எனக்கு புத்தி குடு…. என்று மானசீகமாக வேண்டியவன் வேதாவை முறைத்தபடியே அன்றைய நாள் முழுவதும் வலம் வர ஆரம்பித்தான்.



இங்கு ஹோட்டலில் அறை எடுத்த குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே நன்கு உறங்கி ரெஸ்ட் எடுக்க சாயங்காலம் ஆன பிறகுதான் மெதுவாக திட்டம் போட ஆரம்பித்தார்கள்.




திருப்பதி மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒவ்வொன்றாக சென்று தரிசிப்பது அதன் பிறகு கடைசியாக திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசித்து விட்டு நேராக வீட்டிற்கு செல்வது என…


ஆனால் இவர்களின் காலதாமதத்திற்கு ஏதோ ஒரு பெரிய காரணம் இருக்கிறது என்று உடனடியாக புரிந்து கொண்ட வேதாவின் தாய் நேரடியாகவே கனகாவிடம் கேட்டார் .



திருப்பதிக்கு காலையிலேயே வந்தாச்சுங்க கோவில் இங்கிருந்து பக்கத்துல தான் இருக்காம்... பக்கத்து ரூம்ல இருக்கற தமிழ்காரங்க கிட்ட விசாரிச்சேன்….



நாம வந்த கார்ல போனா முக்கால் மணி நேரம் கூட ஆகாதாம் கோவிலுக்கு போக... அதும் இப்போ கூட்டம் கூட இல்லையாம்…


நாம பொது தரிசனத்துக்கு போனாலே சாயங்காலத்துக்குள்ள சாமியை பாத்துட்டு கீழ வந்திடலாம்னு சொல்றாங்க .


அது மட்டுமில்லாம டிக்கெட் எடுத்தா இன்னும் சீக்கிரமா போய் பார்த்துட்டு வந்திடலாமாம்... இவ்ளோ சுலபமா தரிசனம் இருக்கும்போது எதற்காக இவ்வளவு லேட் பண்றீங்க ஏதாவது பிரச்சினையா சம்மந்தி…? எதுவா இருந்தாலும் மறைக்காம சொல்லுங்க…?


என்னவோ தெரியல நேத்து என் மகளுக்கு திருமணம் ஆனதுக்கப்புறம் என் மனசுல ஒரு நிம்மதியே இல்லை... மனசெல்லாம் திக்கு திக்குன்னு இருக்கு ஏதோ பெரிய தப்பு பண்ணிட்டது போலவே என் மனசு என்கிட்ட சொல்லுது …



யார்கிட்ட சொல்றது எப்படி உங்கள கேக்குறதுன்னு….முழிச்சிட்டு இருந்தேன் ஆனா இங்க நடக்கறதை எல்லாம் பார்க்கும் போது அது உண்மையோனு தோணுது சொல்லுங்க சம்பந்தி…?எதுவா இருந்தாலும் வெளிப்படையா சொல்லுங்க என்று கேட்க தயங்கிய கனகா உண்மையை கூறத் தொடங்கினார்.



மாறனுக்கு திருமணத்தில துளிகூட விருப்பம் கிடையாது எங்களோட கட்டாயத்திற்காக மட்டுமே அவன் வேதாவை திருமணம் செய்திருக்கிறான் அது மட்டும் இல்லாம நீங்க வந்த உடனேயே வேதாவை உங்களோட அனுப்புறதா திட்டம் போட்டிருந்தான் அதை தடுப்பதற்காக தான் உங்களையும் நாங்க திருப்பதி கூட்டிட்டு வர்றதா ஆயிடுச்சு.



தயவு செஞ்சு எங்களை மன்னிச்சிடுங்க….உங்க பொண்ணுக்கு நாங்க எந்த கெடுதலும் பண்ணல...எல்லாம் அவங்க ரெண்டு பேரோட நலனுக்காக தான் இதெல்லாம்.



இந்த திருமணம் உடைஞ்சு போயிடக்கூடாதுனு தான் நாங்க எல்லாருமே போராடிட்டு இருக்கோம் எங்களுக்கு நீங்களும் ஒத்துழைப்பு கொடுங்க...


என் பையன் ரொம்ப நல்லவன் விருப்பமில்லாத திருமணமா இருந்தாக்கூட அவனுக்கு வேதாவை ரொம்ப பிடிச்சிருக்கு…. வாய்தான் சொல்லுது...அவளை பிடிக்கல அவளை என்னால சகிச்சுக்க முடியாதுன்னு...ஆனா மனசால அதை அவன் சொல்லல….



மனசு முழுக்க வேதாவை அவன் நேசிக்கிறான் எனக்கு அது ரொம்ப நல்லாவே தெரியுது... அவன் மனசு சொல்றதை வாயாலயும் சொல்ல வைக்கணும்னு தான் இந்த முயற்சி தயவு செஞ்சு எங்களை வித்தியாசமா நினைக்காதீங்க சம்பந்தி என்றார் கனகா .



உடனே கண்கலங்கிய வேதாவின் தாய் என்ன…? என் பொண்ண பிடிக்காம தான் மாப்பிள்ளை திருமணம் செஞ்சுகிட்டாரா... கடவுளே பிடிக்காத ஒருத்தருடையா என் மகளை வலுக்கட்டாயமா நேத்து நான் அனுப்பி வைச்சேன்…



பாவம் என் பொண்ணு மனசளவுல எவ்ளோ கஷ்டத்தை அனுபவிச்சாளோ….நல்லவேளை உடனே என் சின்ன மகளையாவது அவளோட துணைக்கு அனுப்பி வெச்சேன் இல்லன்னா என் மகள் ரொம்பவே கஷ்டப்பட்டு இருப்பா...நான் என்ன மாதிரியான அம்மா... என்று கதற ஆரம்பித்தார்….

அவரின் அழுகையை சமாதானப்படுத்தும் பொருட்டு கனகா அவரின் அருகில் வந்து சம்மந்தி நீங்க இந்த அளவுக்கு கவலைப்படனும்னு அவசியமே கிடையாது .


மாறன் ரொம்ப ரொம்ப நல்லவன் அவன் பொறுப்பில ஒரு விஷயத்தை கொடுத்துட்டா அது ரொம்ப பத்திரமா பாத்துப்பான்.


அதான் சோதனையா வேதாவை விட்டுட்டு வந்திருக்கோம்…. இந்த ஒரு வாரத்தில் வேதா கிட்ட இருக்கற ஏதாவது ஒரு நல்ல விஷயம் மாறனோட பார்வைக்கு படலாம்….அது அவனை அவ பக்கம் திரும்ப வைக்கலாம்….



அந்த ஒரு விஷயம் போதும் அதுக்கப்புறம் மாறன் சந்தோஷமா அவளோட குடும்பம் நடத்துவான்…



ஒருவேளை இந்த ஒரு வாரத்தில் எங்இ கணிப்பு தவறாச்சின்னா கண்டிப்பா சொல்றேன் உங்க பொண்ணை நீங்க எப்படி அனுப்புனீங்களோ அதே மாதிரி எந்த ஒரு களங்கமும் இல்லாமல் திருப்பி அனுப்பி வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு…. அதுமட்டுமில்ல அவளுக்கு மறுபடியும் ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சி தர்றதும் என் பொறுப்பு…



ஆனா அப்படி எதுவுமே நடக்காது இது அந்த ஏழுமலையான் மேல சத்தியம் என்று உறுதியாகக் கூற மகளுக்கு அமைந்த வாழ்க்கை நல் வாழ்க்கையாக தொடர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள ஆரம்பித்தார் அந்த ஏழைத் தாய் .



அதன்பிறகு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கோவிலுக்கு என்று பட்டியலிடப்பட அது கிட்டத்தட்ட பத்து நாட்கள் வரை ஆவது போல் இருக்க எதுவுமே பேசாமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே மிக சந்தோஷமாக ஒவ்வொரு திருத்தலங்களாக செல்ல ஆரம்பித்தார்கள்….


முதல் நாள் முழுவதும் வேதாவை திட்டிக்கொண்டே இருந்தவனுக்கு அதன் பிறகு திட்டுவதற்கான காரணம் எதுவுமே சிக்கவில்லை.


சிக்கவில்லை என்பதைவிட வேதா அவன் கண்ணில் படுவதே கிடையாது தாத்தாவின் அறையிலேயே தங்கி கொண்டு அவரை மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டாள்.


செவிலிய பெண்ணிற்கு இதனால் நல்ல ஓய்வு கிடைத்தது... அதன் பலனாக வேதாவிற்கு ஒரு சிறந்த தோழியாகவும் மாறிப் போனார் அந்த செவிலியர்.


மாறனுக்கு முதல் இரண்டு நாட்களுக்கு வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் இல்லாததால் எந்த ஒரு வித்தியாசமும் தெரியவில்லை.


ஆனால் மூன்றாம் நாளில் இருந்து குடும்ப உறுப்பினர்கள் இல்லாதது அவனுக்கு மிகப்பெரிய வெறுமையாக இருந்தது.


அவன் எத்தனையோ முறை தனியாக வேலை விஷயமாக வெளியூர் மற்றும் வெளி நாடுகளுக்கு சென்றிருக்கிறான்.


ஆனால் அப்பொழுதெல்லாம் அவனுக்கு இந்த வெறுமை தெரிந்ததில்லை காரணம் அவன் வீட்டில் தங்கவில்லை ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு ஹோட்டல் ரூமில் தங்கி இருப்பான் அதனால் நாம் தனியாகத்தான் இருக்கிறோம் என்ற எண்ணம் அவன் மனதில் எழுவதால் வெறுமை தோன்றாது.


ஆனால் இங்கே வீட்டில் இருந்த வரை ஒருநாள்கூட குடும்ப உறுப்பினர்களைப் பிரிந்து இருந்ததே கிடையாது வீட்டில் இருந்தாலே அவனைச் சுற்றிலும் எப்போதும் அனைவரும் இருந்துகொண்டே இருக்கவேண்டும் அப்படி என்றால் மட்டும் தான் மாறனுக்கு வீட்டில் இருக்க பிடிக்கும் முதல் முறையாக அனைவருமே இப்படி அவனைத் தனிமையில் விட்டுவிட்டு சென்றதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை….


முதல் இரண்டு நாட்கள் வார்த்தைகளாலும் செயல்களாலும் பார்வையாலும் வேதாவை வறுத்து எடுத்தவன் மூன்றாம் நாளில் தொடக்கத்திலிருந்து அவளாவது தன்னுடன் இந்த வீட்டில் இருக்கிறாளே என்று மனதை ஆறுதல் படுத்திக் கொண்டான்.

வேதாவும் மாறனின் தாத்தாவை மிக நன்றாகவே பார்த்துக்கொண்டாள் முதல் நாள் முழுவதும் தூங்கியவளை கண்டவன் இரண்டாம் நாள் முதல் தூக்கத்தை மறந்து துருதுருவென வேலை செய்யும் வேதாவை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.


எப்படி முடிகிறது இவளால் தூங்க ஆரம்பித்தால் தூங்கிக் கொண்டே இருக்கிறாள்…. விட்டு வேலை செய்ய ஆரம்பித்து விட்டால் பம்பரம் போல சுற்றிக் கொண்டே இருக்கிறாள்.


எப்படி நிமிடத்தில் கிடைத்த இடத்தில் சட்டென்று ஒன்று கொள்ள முடிகிறது என்று தான் யோசித்துக் கொண்டிருந்தான் அப்பொழுதுதான் அவர்களின் ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் இருந்த மேனேஜர் அவனைத் தேடி வந்தார்.


என்ன என்று விசாரித்த மாறனுக்கு அவர் கூறிய விஷயம் சற்று அதிர்ச்சியை கொடுத்தது...அவர்களது ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவரும் சேர்ந்து வேதாவிற்கும் மாறனுக்கும் சிறிய அளவில் திருமண வரவேற்பு போல் ஒன்றை காம்ப்ளக்ஸின் மொட்டை மாடியில் ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதில் மறுக்காமல் இருவருமே கலந்து கொள்ள வேண்டும் என்றும் பணிந்தார்.



மாறனின் திருமணத்தை காணும் சந்தர்ப்பம் எங்களுக்கு கிடைக்கவில்லை இதுபோல் என்றால் கண்டிப்பாக மணமக்கள் வருவார்கள் அப்பொழுது நாங்கள் மாறனின் மனைவியை கண்குளிர பார்த்துக்கொள்ளலாம் என்று அங்கு வேலை செய்பவர்கள் அனைவருமே விரும்புவதாகவும் கூறினார்...



அவர் கூறும் தோரணையை வைத்தே மிக எளிதாக கண்டு கொண்டான் மாறன் இதில் தாயின் பங்கு நிறையவே இருக்கிறது என்று.



மறைமுகமாக தொழிலாளர்களை தூண்டி விட்டிருக்கிறார் ‌...மாறன் எப்பொழுதுமே வேலை செய்பவர்களிடம் வித்தியாசம் காட்டியது கிடையாது.


அவள் மட்டுமல்ல குடும்பமும் அப்படித்தான் வீட்டில் வேலை செய்பவர்களை கூட தங்களின் குடும்ப உறுப்பினர்களை போலத் தான் நடத்துவார்கள் அவர்களின் வீட்டு விசேஷங்களுக்கு பாரபட்சமின்றி அனைவருமே கலந்துகொள்வார்கள்.



பணி செய்யும் இடத்திலும் அப்படித்தான் ஒருவர் வீட்டின் குழந்தைக்கு பிறந்தநாள் என்று தெரிந்தாலும் கூட வீட்டில் இருக்கும் யாராவது ஒருவர் நேரில் சென்று அந்த குழந்தைக்கு அன்பாக ஏதாவது கொடுத்துவிட்டு தான் வருவார்கள் அதுபோல் ஆண்டாண்டு காலமாகப் பழகி விட்டு



இப்பொழுது அவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றால் பணியாளர்களை அவமானப்படுத்துவது போல் ஆகி விடுமே என்ன செய்வது என்று யோசித்தான்.


மேனேஜர். மிகவும் கெஞ்சி கேட்கவும் வேறு வழியில்லாமல் தலையை ஆட்டி வைத்தான்...பிறகு எப்பொழுது என்று கேட்க நாளை காலை என்றார்.


காலையிலனா காம்ப்ளக்ஸ் எப்படி ஓபன் பண்றது என்று கேட்க சார் காம்ப்ளக்ஸ் எல்லாமே பத்து மணிக்கு மேல தான் ஓபன் செய்வோம் .


ஆனா நாம எட்டு மணியிலிருந்து பத்து மணிக்குள்ள தான் அந்த பங்க்ஷன் வச்சிருக்கோம்…. அதுக்குள்ள முடிச்சிடலாம்…



அதுக்கப்புறம் நீங்க வீட்டுக்கு வந்து விடலாம் என்றவர் மாறன் மறுத்து விடுவானோ என்று பயந்தபடியே கேட்க அவரின் முகத்தைப் பார்த்தவன் டென்ஷன் இல்லாம எல்லா ஏற்பாட்டையும் செய்யுங்க நான் காலையில எட்டு மணிக்கு முன்னாடி அங்கு இருப்பேன் என்று கூறி அவரை அனுப்பி வைத்தான்.



அதன்பிறகு வேதாவை அழைத்து வரச் சொல்லி ஒரு பணியாளரிடம் கூறினான்.


அவரும் வேதாவிடம் அதை கூற அவளும் யோசனையுடன் மாறனை தேடி வந்தாள்.



மாறனின் அறை வாசலில் வந்து நின்று தயங்கியபடி எதுக்காக என்னை வர சொன்னிங்க என்று கேட்டாள்.


ம்ம்….முதல்ல உள்ள வா என்று தலையசைத்து உள்ளே அழைத்தான்.



இல்ல பரவால்ல நான் இங்கேயே நிக்கறேன் என்ன விஷயம்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்….


பரவால்ல உள்ள வா இப்படி உட்காரு என்று அவளை வலுக்கட்டாயமாக உள்ளே வர வைத்து அமர வைத்தான்.பிறகு சற்று தயங்கிய படியே எங்க கடையில வேலை பாக்குறவங்க எல்லாரும் சேர்ந்து நமக்கு ஏதோ சின்னதா பார்ட்டி மாதிரி அரேஞ்ச் பண்ணி இருக்காங்க போல... மறுக்காம கலந்துக்கனும்னு ரொம்ப கெஞ்சி கேட்டு கிட்டாங்க நானும் வரேன்னு வாக்குக் கொடுத்துட்டேன் உனக்கு இதுல சம்மதம் தானே…
வருவல்ல என்று அவளின் முகத்தை பார்த்து கேட்டான் .



சற்று தயங்கிய வேதா கோயிலுக்கு போனா எல்லாரும் வீட்டுக்கு வந்துட்டாங்கன்னா நான் என் வீட்டுக்கு கிளம்பி போயிட்ட போறேன் அப்படி இருக்கும் போது எதற்காக இந்த மாதிரி எல்லாம் ஒத்துக்கிட்டிங்க என்றாள்.


ப்ளீஸ் வேதா முடியாதுன்னு மட்டும் சொல்லிடாத…. தப்பு தான் உன்னோட பர்மிஷன் இல்லாம அவங்க கிட்ட ஒத்துக்கிட்டது என்னோட தப்புதான் ஆனா கொஞ்சம் அவங்க சைடு இருந்து யோசிச்சு பாரேன் ப்ளீஸ்….



அவங்க எல்லாருமே ரொம்ப அடிமட்ட மக்கள் நம்மள மட்டுமே நம்பி இருக்காங்க அவங்களோட சந்தோஷம் நம்பிக்கை எல்லாமே நாம தான் இப்போ அவங்க ஏற்பாடு செஞ்சு இருக்கிற அந்த பார்ட்டிக்கு போறதால எதுவும் கெட்டுப் போய்டப் போறதில்லை.



நாம போறதால அவங்க ரொம்ப சந்தோஷ படுவாங்க….அதோட பிரதிபலனா முன்ன விட நல்லா வேலை செய்வாங்க... இதனால எங்களுக்கும் டபுளா லாபம் கிடைக்கும் அவங்களுக்கும் சந்தோஷம் எங்களுக்கு லாபம் கிடைக்கும் என்றவனிடம் முகத்தில் அடித்தது போல் வேதா



உங்களோட பிசினஸ் இலாபத்துக்காக என் மனச காயப்படுத்தறீங்களே இது சரியா யோசிச்சு பாருங்க …


உங்களுக்கு என்னை பிடிக்காது…. விருப்பமே இல்லாம என்னை கட்டாயத்துக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கனு நல்லா தெரிஞ்சதுக்கு அப்புறம் ஒவ்வொரு நிமிஷமும் இந்த வீட்டில முள் மேல் நிக்கறது போல நின்னுகிட்டு இருக்கேன்.



கல்யாணத்தப்போ உங்க பக்கத்துல நின்னதை நினைக்கும் போது எனக்கே என் மேல வெறுப்பா இருக்கு அதே மாதிரியான ஒரு சம்பவத்தை மறுபடியும் செய்யணும்னு சொல்றிங்களே இது உங்களுக்கு சரியா இருக்கா …?



எப்படி இருந்தாலும் இன்னும் ரெண்டு மூணு நாலுல என்னை அனுப்பி வைக்கப் போறீங்க அதுக்கு அப்புறமா உங்க வொர்க்கர்ஸ் கிட்ட என்ன சொல்லுவீங்க….



ரெண்டு நாளைக்கு முன்னாடி தானே இவங்களுக்கு நாம பார்ட்டி வெச்சோம் அந்த சந்தோஷம் மனசு விட்டுப் போறதுக்குள்ள பிரிஞ்சு போயிட்டாங்களேனு வருத்தப்பட மாட்டாங்களா அப்போ அவங்க மனசு சோர்வாகி அவங்க வேலை பாதிக்காதா...அதனால உங்க லாபம் குறையாதா சொல்லுங்க….



வேதா நீ ரொம்ப கற்பனை பண்ற இப்போ நான் அவங்களுக்கு என்ன சொல்லணும்….



சாரிங்க இதையெல்லாம் என் மனைவி விரும்பமாட்டா….அவ உங்கள மாதிரி வொர்க்கர்ஸ் கூட சரி சமமா வந்து நிற்கிறதை விரும்பலனு சொல்லிடுங்க…. அப்போ தான் நான் இங்கிருந்து போன கூட முதலாளி நல்லவரு தான் அவருக்கு அமைஞ்ச பொண்ணுதான் சரியில்லனு….
உங்கள பத்தி யாரும் தப்பா பேச மாட்டாங்க…. நான் வரலங்க பீளீஸ் என்று கூறியபடி அங்கிருந்து சென்றாள்.



அவள் அங்கிருந்து செல்லவுமே மாறனுக்கு முகத்தில் அடித்தது போல் இருந்தது எந்த மாதிரியான பெண் இவள்.



அவள் சென்ற பிறகும் கூட என்னைப் பற்றி யாருமே தவறாக நினைக்க கூடாது என்று நினைக்கிறாள் இந்தப் பெண்ணையா இரண்டு நாட்களாகப் வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று அவனின் மீது அவனுக்கே கோபம் வந்தது செல்லும் அவளையே வாஞ்சையுடன் பார்த்தவன் முதல் முறையாக அவன் மனம் மட்டும் அல்லாது அவனும் எழுந்து அவளின் பின்னே சென்றான்.


தொடரும்....
 
Top