கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துணையாக நான் வருவேன்-13

Akila vaikundam

Moderator
Staff member
13.


ஆனால் வேதா அவளது முடிவில் தெளிவாக இருந்தாள்... பெற்றோர்கள் வந்ததுமே இங்கிருந்து கிளம்பி விட வேண்டும் பிடிக்காத இடத்தில் இருந்து கொண்டு எத்தனை நாள் போலியாக வாழ முடியும்…திருமண பந்தம் முறித்துவிடக் கூடாதென்று நான் மட்டும் போராடி என்னவாகப் போகிறது…


மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று பயந்துகொண்டு இங்கே ஒரு அடிமை வாழ்க்கை வாழ்வதற்கு யார் என்ன சொன்னால் என்ன என்று மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் என்னுடைய நலனுக்காக தாய் வீட்டிற்குச் சென்று அங்கு வாழ்வதுதான் இப்போதைக்கு சரியான முடிவு என்று தீர்க்கமான முடிவை எடுத்திருந்தாள்.



பெற்றோர்கள் வந்ததும் இங்கிருக்கும் நிலைமையை எடுத்துக்கூறி அவர்களுக்குப் புரிய வைத்து விட்டு கிளம்பி விடலாம்...எப்படியும் ராதிகாவை தனியறைக்கு மாற்றும் வரை அவளைப் பார்க்க முடியாது குழந்தையை மருத்துவர்களின் கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள்



லக்ஷ்மி அக்கா இருந்தாலாவது பரவாயில்லை அவரிடம் ஏதாவது பேசிக் கொண்டிருக்கலாம் ஆனால் அவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்து விட்டான் மாறன்.


உங்கள் வீட்டிற்கு சென்று பிள்ளைகள் மட்டும் கணவரை பார்த்து விட்டு மெதுவாக வந்தால் போதும் நாங்கள் இருவரும் இருக்கிறோம் இன்னும் சற்று நேரத்தில் வீட்டில் இருப்பவர்களும் வந்துவிட்டால் உங்களுக்கு இங்கே இருக்க வேண்டிய அவசியம் இருக்காது என்று கூறிவிட்டார்.


அவருக்கும் தாயும் சேயும் நலம் என்று உறுதியாக தெரிந்ததும் அவரின் வீட்டு நியாபகம் வந்து விட்டது. மாறன் கூறவும் சரி என்று சந்தோஷமாக தலையசைத்துவிட்டு சென்றுவிட்டார்.


சற்று நேரம் வரை அங்கிருந்து பார்த்த வேதா பிறகு மெல்ல அங்கிருந்து நகர்ந்து தனிமையான இடத்திற்கு சென்று பெற்றோர்களின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்…





மாறனும் அவளைப் பற்றி கண்டுகொள்ளாமல் அங்கிருந்த ஒரு சேரில் அமர்ந்து அவனது போனை நோண்ட ஆரம்பித்துவிட்டான்.



ராதிகாவின் பெற்றோர்கள் கவலையுடன் ஒருவரின் ஒருவர் முகத்தை பார்த்துக்கொண்டு ஐசியூ வாசலிலேயே அமர்ந்து விட்டார்கள்.


இப்படியாக நேரம் நகர்ந்து கொண்டிருக்க...



நேரம் மதியத்தை கடக்கவும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே வந்து சேர்ந்தார்கள்... ரத்தினத்திற்கு மகனைப் பார்க்க பயம் முடிந்த அளவு மகனின் கண்ணில் சிக்காத வாறு மறைந்து கொண்டார் .


வேதாவின் தாய்க்கு நேரடியாக மாறனை சந்திக்க பயம் எங்கே தங்களது மகளை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறி விடுவானோ என்று .


அதே பயம் மாறனுக்கு இருந்தது அவனுக்கு வேதாவை தற்பொழுது அவர்களுடன் அனுப்ப மனமில்லை தந்தையிடம் வேறு உளறி வைத்து விட்டான்.



அவர் வேதாவின் பெற்றோர்களிடம் ஏதாவது சொல்லி இருந்தால் அவர்களும் கோபப்பட்டு மகளை அழைத்துச் சென்று விடுவார்களோ என்று.


அதனால் அவர்களை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தான் இங்கிருந்தால் எப்படி இருந்தாலும் பேச வேண்டியது வரும் என்று பயந்தவன் வீட்டுக்கு செல்வதற்காக வேகமாக கீழே இறங்க அங்கே ஒரு மூலையில் யார் வந்ததும் தெரியாமல் அமைதியாக வேதா அமர்ந்து இருப்பதை கண்டதும் மனம் கேளாமல் வேதாவின் அருகில் வந்தான்.



ஏன் வேதா இங்க தனியா
இருக்க ... கோவிலுக்கு போய்ட்டு எல்லாரும் வந்தாச்சி...இப்போ எல்லாருமே மேல தான் இருக்காங்க ராதிகாவை கூட ரூமுக்கு ஷிப்ட் பண்ணியாச்சு…


ஒஒஒ….


என்ன ஒஒஒ...மேலே போ தனியாலாம் நீ இருக்க வேணாம்...இரு செழியனுக்கு ஃபோன் பண்ணறேன் அவன் வந்து உன்னை கூட்டிட்டு போவான்.


இல்ல வேணாம்...எனக்கு இப்போ யாரையும் பார்க்க தோணல...ஆமா நீங்க எங்க போறீங்க…


நான் வீட்டுக்கு போறேன்….



ஓ….என்னையும் கூட்டிட்டு போறீங்களா ப்ளீஸ்.


நீ என்னோட வர்றீயா…? என்று ஆச்சர்யமாக கேட்டவன் புருவச்சுளிப்புடனே உன்னோட அம்மா அப்பா தங்கச்சி எல்லாருமே இங்கு இருக்கும் போது அங்கு வீட்டுக்கு வந்து என்ன பண்ண போற….?


என் திங்க்ஸ் எல்லாம் அப்படி அப்படியே கிடக்குது எல்லாம் பாத்து எடுத்து வைக்கனும்...அம்மா வீட்டுக்கு வர்றதுக்குள்ள என் டிரஸ்ஸை பேக் பண்ணனும்...அப்போ தான அவங்க வீட்டுக்கு வந்ததும் உடனே நான் கிளம்ப முடியும் என்று கூறவும் எதுவுமே பேசாத மாறன் சரி வா என்று கூறியபடி வெளியே சென்றான்.



அவனில் ஒட்டுமொத்த நம்பிக்கையும் தவிடுபொடியானது ஆம் இனி யார் தடுத்தாலும் வேதா இங்கு இருக்கப்போவதில்லை அவளின் முடிவில் தெளிவாக இருக்கிறாள்.


இங்கிருந்து தன்னை விட்டுச் செல்லப் போகிறாள்... அதுவும் நிரந்தரமாக.


திருமணமாகி இன்று தான் ஒருவாரம் ஆகியுள்ளது...அதற்குள் பிரிந்து செல்கிறேன் என்கிறாள்….ஒரு வாரத்திற்கு முன்பு என்றால் அவனே வழியனுப்பி வைத்திருப்பான் ஆனால் இப்பொழுது அதுவும் ராதிகா பட்ட கஷ்டங்களை கண்கூடாகப் பார்த்த பிறகு ஒரு பெண்ணை காயப்படுத்துவதற்கும்...வலியை கொடுப்பதற்கும் அவனுக்கு தோன்றவில்லை அந்த அளவு ராதிகாவின் பிரசவம் அவனை மாற்றியிருந்தது.


அவனுக்கு புரியவில்லை எல்லா கோட்டையும் முதலில் போட்டது அவன் என்று...இப்பொழுது அந்த கோட்டின் மீது வேதா உறுதியாக நிற்கிறாள்.அவன் வெளிபடையாக செல்லாதே என்றால் செல்லப்போவதில்லை.ஆனால் ஏனோ மாறனுக்கு அவளிடம் கூற மனம் வரவில்லை.


மணமான பொழுது கடந்த காலத்தை நினைத்து கொண்டு அவளை தவிர்க்க நினைத்து அப்படிக் கூறி விட்டேன் ஆனால் கடந்த நான்கு நாட்களாக அவளிடம் நான் பழகும் முறை அவளுக்கு தெரியும் அதில் இருந்த எனதன்பை கொஞ்சம் கூடவா உணர்ந்து கொள்ளவில்லை.


என்னுடைய மனதில் அவள் இருக்கிறாள் என்பதை தெரிந்து கொண்டே பிடிவாதமாக செல்கிறேன் என்பவளை நான் எதற்காக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற ஈகோ தான் அவனின் மனதில் வந்திருந்தது.


ஆனால் மாறனின் மனதில் இருக்கும் விஷயங்கள் எதையுமே அறிந்து கொள்ளாத வேதா மிகவும் அமைதியாக காணப்பட்டாள்.


அவன் முன் செல்லவும்மே பின்னோடு வந்து கார் பார்க்கிங்கில் ஒரு ஓரமாக நின்று கொண்டிருக்க காரை வேகமாக எடுத்து வந்த மாறன்
ஹாரன் அடிக்க பொறுமையாக அவனுக்கு மறுபுறம் இருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டாள்.


எதுவுமே பேசாமல் கைகளை தலைக்கு முட்டுக் கொடுத்தபடி அமர்ந்திருக்க வாகனத்தை எடுக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் மாறன்.


சற்று நேரம் கழித்து என்ன என்று அவனைப் பார்க்க சீட்பெல்ட் போட்டுக்கோ என்று கூற சற்றென்று அவன் கூறியது அவளுக்கு விளங்கவில்லை மீண்டும் நெற்றியை சுருக்கியபடி அவனை பார்க்க அவனே இருக்கையிலிருந்து சற்று சாய்ந்து அவளுக்கு சீட் பெல்ட்டினை போட்டுவிட அப்பொழுது அவனின் கை விரல்கள் அவளின் அங்கங்கள் மீது தொட்டும் தொடாமலும் பட்டது.


ஏனோ அந்த ஸ்பரிசம் அவளின் உடலுக்குள் ரசாயன மாற்றத்தை ஏற்படுத்து இருக்கையில் ஒடுங்கி அமர்ந்தாள்.


அவனுக்கும் அதே போல் ஒரு நிலைமைதான்... அவனின் மனதிற்குள் ஏதோ ஒரு புது உணர்வு அது மீண்டும் வேண்டும் என அவனிடம் கேட்டது…
தன்னை முழுதாக கட்டுப்படுத்திக் கொண்டவன் அவளை சாதாரண மனநிலமைக்கு கொண்டு வரவும்...அவனின் மனதை இயல்புக்கு கொண்டு வருவதற்க்காகவும் அவளிடம் பேச்சி கொடுக்க ஆரம்பித்தான்.


ஊருக்கு போனதும் என்ன பிளான் வெச்சிருக்க வேதா என்று கேட்டவன் பதில் வராமல் அவளின் பக்கம் பார்க்க வழக்கம்போல அவளுக்கான தூங்கும் வியாதி வந்துவிட்டது.

அதே யோசனையை தான் அவளும் நினைத்தாள் ஊருக்குச் சென்ற பிறகு என்ன செய்யப் போகிறோம் என்று உடனே அவளுக்கு தூக்கம் வர ஆரம்பித்துவிட்டது மெல்ல விழிகளை மூடவும் ஆரம்பித்துவிட்டாள்.


இவன் கேள்வி புரிகிறது ஆனால் பதில் கூற மனம் வர வில்லை. அது தான் வேண்டாம் போ என்று தன்னை விரட்டி விடுகிறானே நான் இனி என்ன செய்தால் என்ன…?எதற்காக அவனிடம் கூற வேண்டும் என்ன என்ற மனநிலை அவளுக்க அதனால் விழிகளை மூடியபடியே இருக்க .


அவளிடத்திலிருந்து பதில் வராததைக் கண்டவனுக்கு அதை ஏற்றுக்கொள்ள மனம் ஏற்கவில்லை எப்படியேனும் அவள் வாயிலிருந்து பதிலை வாங்க வேண்டும் அவள் வாயாலேயே நான் செல்லவில்லை என்று கூறும்படி செய்ய வேண்டும் என்று நினைத்தவன் வாகனத்தை ஒரு கையால் ஓட்டியபடி மெதுவாக அவளின் வலக் கையின் மீது அவனின் இடக்கையை வைத்து அழுத்தினான்.



விழிகள் மூட ஆரம்பித்தவள்... அவன் கைகளின் அழுத்தத்தை உணர்ந்து சட்டென்று கண் திறந்து கோபமாக இது என்ன புது பழக்கம் கைய விடுங்க என்று அவளின் கைகளை அவனிடத்திலிருந்து இழுத்தாள்.



கையை கெட்டியாக பிடித்தவன் நான் கேட்டதுக்கு நீ பதில் சொல்லலையே பதில் சொல்லு கையை விட்டிடறேன் என்றான்.


முதல்ல கைய விட்டுட்டு ரோட்டை பாத்து வண்டி ஒட்டுங்க….


அது எனக்கு தெரியும்...முதல்ல பதில் சொல்லு…


என்ன பதில் சொல்லணும் சொல்லுங்க என்ன சொல்லணும் என்று கேட்டவளின் கண்கள் தானாக கலங்க ஆரம்பித்தது.


அவளின் கண்கள் கலங்குவதை கண்டவனின் கைகள் தானாக அவளின் கைகளை விடுவித்து.


அவன் அறியாவண்ணம் திரும்பி கண்களை துடைத்துக் கொண்டு மீண்டும் கண்கள் மூட ஆயத்தமானாள்.


ப்ளீஸ் வேதா இப்படி பேசிக் கிட்டிருக்கும்போது இப்படி நீ தூங்குற மாதிரி நடிச்சா என்ன அர்த்தம் …


நான் தூங்குற மாதிரி நடிக்கலங்க...எனக்கு நீஜமாவே தூக்கம் வருது….



எப்படி ஒரு மனிஷனுக்கு நினைச்சதும் தூக்கம் வரும்...அதும் நீ கண்ண மூடினா வந்திடுது….



எனக்கு அளவுக்கு அதிகமா கஷ்டம் வந்தாலும் கவலை வந்தாலும் நான் தூங்க ஆரம்பிச்சுடுவேன் சின்ன வயசுல இருந்தே எனக்கு இந்த பழக்கம் இருக்கு. என்னை யாராவது ஏதாவது சொன்னா கூட நான் அம்மா கிட்ட போய் சொல்ல மாட்டேன் ...நானும் அவங்களை என்று கேட்க மாட்டேன் பேசாம தூங்கிடுவேன்... அப்படியே பழகிடுச்சி…



ம்ம்… ஆனா கடந்த நாலு நாளா நீ தூங்கினதை நான் பாக்கலையே….? இப்ப என்ன புதுசா…? என்று கேள்வி எழுப்பினான்.


ஏற்கனவே கோபம், மன அழுத்தம், பயம் என்று பல வித உணர்ச்சிக் குவியலாக இருந்த வேதா காருக்குள் இருக்கிறோம் என்பதையும் மறந்து கத்தத் தொடங்கினாள்.



ஏன் நாலு நாளா தூக்கம் வரலேன்னா நான் என் வீட்டுக்கு போறதை பத்தி யோசிக்கல…. இப்போ போக போறேன் நாளைக்கு என்னங்கறது நினைக்கும்போது எனக்கு தூக்கம் தான் வருது‌….


ஷ்ஷ்….கத்தாத என்று வேகமாக கார் கதவின் கண்ணாடிகளை தூக்கி விட்டான்.


அப்படித்தான் கத்துவேன் என்ன பண்ணுவீங்க…? சொல்லுங்க ….?
என்ன பண்ணுவீங்க…? இங்கேயே இறக்கி விட்டுடு போயிடுவீங்களா…? பிரச்சினையில்லை ..!.கல்யாணம்ங்ற பேர்ல தாலி கட்டி முடிச்ச அடுத்த நிமிஷமே தனியா மண்டபத்தில விட்டுட்டு சாப்பிட போனவங்க தான…


அதுக்கப்புறமா ஏர்போர்ட்ல விட்டுட்டு போனீங்க... அன்னைக்கு உங்க தம்பி மட்டும் என்னோட இல்லன்னா என் நிலைமை என்ன ஆயிருக்கும் சொல்லுங்க…?


அதோட விட்டிங்களா...
உங்க வீட்டுக்குள்ளேயே என்னை ஏதோ மாதிரி நடத்தினீங்க….
இதையெல்லாம் தாங்கிகிட்டு நான் இருந்திருக்கேன்…


ஏதோ கேட்டீங்களே…? என்னதது...என்று யோசித்தவள் நியாபகம் வந்தவளாக ஹான்... நாலு நாளா நான் தூங்கினது நீங்க பார்க்கல இல்லையா முதல்ல நான் தூங்கவே இல்லை அது தெரியுமா உங்களுக்கு…?


ராத்திரி பகலா கொட்ட கொட்ட முழிச்சிக்கிட்டு அந்த வீட்டுக்குள்ள சுத்திட்டு இருந்தேன் அது உங்களுக்கு தெரியுமா உங்க ஒருத்தரோட சுயநலத்தால என் ஒட்டுமொத்தமாக குடும்பமே அழிஞ்சு போக போகுது.


நாளைக்கு நான் ஊருக்கு போனதுக்கு அப்புறமா அந்த ஊர்ல இருக்கிறவங்க என்னை எப்படி கேவலமா பார்ப்பாங்கன்னு தெரியுமா…?


கல்யாணமான ஒரு வாரத்திலேயே புருஷன் வேணாம்னு துரத்திட்டான் அப்படி இவ என்ன பண்ணியிருப்பானு பேசிப்பாங்க….


அது இல்லாம என் முகத்துக்கு நேரா வந்து எங்கிட்ட கேப்பாங்க உன்கிட்ட என்ன குறை ஏன் உன் புருஷன் உன்னை துரத்தி விட்டுட்டானு…


அதோட விடுவாங்களா வாழா வெட்டினு கேலி பேசுவாங்க…


இதனால படிச்சிட்டு இருக்கற என் தங்கச்சியோட வாழ்க்கை பாதிக்கும் நாளைக்கு அவளுக்கு ஒரு கல்யாணம் பண்ணலாம்னா அன்னைக்கும் என் வாழ்க்கைதான் முன்னாடி நிற்கும்.


உங்களை நான் தலை முழுகினாலும் அவளை பாதிக்கும்… அவ அக்கா மாதிரியே இவளும் புருஷனோட வாழ மாட்டானு சொல்லுவாங்க…



சரி ஊர் வாய்க்கு பயந்து
இன்னொருத்தனை நான் கல்யாணம் பண்ணிகிட்டாலும் அதும் அவளை பாதிக்கும்….


அவ அக்கா மாதிரியே தங்கச்சியும் புருஷன் வேணாம்னு சொல்லிட்டு இரண்டாவது ஒருத்தனை கட்டிக்குவானு… உங்க சுயநலத்தால இன்னும் எனக்கு எவ்வளவோ பிரச்சனை இருக்கு….இதெல்லாம் யோசிச்சா தலையே வெடிச்சிடும் அதுக்காக தான் இப்போ நான் தூங்க போறேன் போதுமா என்று மனதில் இருப்பதை அனைத்தையும் படபட என கூறி முடிக்கவும் எதுவுமே பேசாமல் மௌனம் காத்தவன் அவளைப் பார்த்து.


இப்போ நீ எதுக்காக உன் வீட்டுக்கு போற..
யாருமே உன்னை போக சொல்லலியே நான் கூட உன்னை போக வேணாம்னு தானே சொல்றேன் அது உனக்கு புரியலையா…? ஜாடை மாடையா சொன்னதால உனக்கு புரியல போல.
இப்போ முகத்தை பார்த்தே சொல்றேன் நீ இருந்து போக வேண்டாம் இங்கேயே இருந்துக்கோ.


இங்கிருந்துக்கோன்னா என்ன அர்த்தம் உங்களோட மனைவியா இருக்கணுமா இல்லை இந்த வீட்டு வேலைக்காரியா இருக்கனுமா அதை தெளிவா சொல்லிட்டீங்கன்னா நான் அதுக்கேத்த மாதிரி மாறிப்பேன்.


நீங்க இருன்னா இருக்கணும் போன்னா...போகணும் நான் ஒன்னும் நீங்க வளர்த்தற நாய்க்குட்டி கிடையாது போன்னா போறதுக்கும் வான்னா வர்றதுக்கும் எனக்கு சுய மரியாதை இருக்கு….


எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் உங்களுக்கு என்னை சுத்தமா பிடிக்காது என்னை தவிர வேற யார வேணாலும் கல்யாணம் பண்ணிக்குவேன்னு கல்யாணத்துக்கு முன்னாடி உங்க அம்மா கிட்ட சொல்லி இருக்கீங்க.


இல்லன்னு சொல்லுங்க நான் வந்த கொஞ்ச நேரத்திலேயே உங்க வீட்ல வேலை செய்யறவங்க பேசினதை கேட்டுட்டேன்…


இந்தப் பொண்ணுக்கு என்ன குறை இந்த பொண்ணையா நம்ம மாறன் அய்யா கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு மண்டபத்துல அப்படி சண்டை போட்டாருனு பேசியதை என் காதால கேட்டேன்…. உங்களுக்கு என்ன பிடிக்காது….என்னை பிடிக்காதவங்களை எனக்கும் பிடிக்காது என்று கூறிய படி அழ ஆரம்பித்தாள்.


மாறனுக்கு தெளிவாக புரிந்துவிட்டது திருமணத்திற்கு முதல் நாள் இரவு தாயிடம் மண்டபத்தில் சண்டையிட்டதை தாய் பாட்டியிடம் கூறியிருப்பார் .


பாட்டி அதை வேறு யாரேனும் உறவு பெண்களிடம் கூறியிருப்பார் அதை வேலைக்காரர்கள் அரைகுறையாகக் கேட்டுவிட்டு பேசியிருக்கிறார்கள்.

அதை இவளும் கேட்டிருக்கிறாள் அதனால் தான் முதல்நாளே கிளம்புகிறேன் என்று கூறியிருக்கிறாள்.



பரவாயில்லை இந்த நிமிடம் வரை யாரிடமும் சொல்லாமல் மனதிலேயே வைத்திருக்கிறாள் அதை இந்த நிமிடம் வரை என்னிடம் கேட்டுக் கொள்ளக் கூட இல்லை தனது தாயிடம் கூட அதைக் காட்டிக் கொள்ளாமல் தாத்தாவை நன்கு கவனித்திருக்கிறாள் நல்ல பெண் தான் என்று தோன்றியது மாறனுக்கு... வேலைக்காரர்கள் மீது கோபமெல்லாம் வரவில்லை அவன் கூறியதை தானே பேசியிருக்கிறார்கள் மறுத்துக் கூற ஒன்றுமே இல்லையே அதனால் எதுவும் கூறாமல் காரை ஓரமாக நிறுத்தியவன் அவளைப் பார்த்து இப்போ நீ இங்கிருந்து போகாம இருக்கணும்னா நான் என்ன செய்யணும் அதை சொல்லு…


கல்யாணத்துக்கு முன்னாடி உன் குணம் தெரியல அதனால வேணாம்னு சொன்னேன்...இப்போ நீ தாத்தாவை கவனிச்சுக்கிட்டது ராதிகாவுக்காக கலங்கியது இதையெல்லாம் பார்க்கும்போது உன்னை மாதிரி ஒரு பெண்ணை இழக்க என் மனசு இடம் குடுக்கல.


உண்மையிலேயே நீ என்னை விட்டு போனா இது எனக்கு மற்றொரு இழப்பு‌ கொஞ்சநாள் கஷ்டமா இருக்கும் அதுக்கு அப்புறம் பழகிடும்னு நினைக்கறேன்…ஆனாலும் ஒரு வாய்ப்பு தாயேன் வேதா…
என்ன செஞ்சா நீ என்னோட இருப்ப…



இல்லங்க நீங்க எதும் செய்ய வேணாம்...நானும் எதும் கேட்டுக்க வேணாம் நமக்குள்ள ஓத்துவராது...நீங்க சொன்னது தான் சரி...நாம பிரிஞ்சிடலாம்... கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும் அதுக்கு அப்புறம் எதார்த்தம் புரிஞ்சு வாழ்க்கையோட ஓட்டத்துல நாமளும் ஓட ஆரம்பித்துவிடுவோம் நீங்க முதல்ல எடுத்த முடிவை நான் மனப்பூர்வமாக ஏத்துக்கிறேன்…. உங்கள மாதிரி என்னால நெனச்சு நெனச்சு மனசை மாத்திக்க முடியாது என் முடிவுல நான் தெளிவா இருக்கேன் வண்டிய எடுங்க நான் வீட்டுக்கு போய் பேக் பண்ணனும் என்று கூறும் அவளையே பார்த்தவன் .



உன்னோட முடிவுல நீ பிடிவாதமா இருந்தா உன்ன அனுப்ப கூடாது அப்படிங்கிற முடிவுல நானும் பிடிவாதமா இருப்பேன் என்று கூறிய மாறனிடம்


ஆல் தி பெஸ்ட் என்று கூறியவள் கண்களை முடி இருக்கையில் சாய்ந்தாள்.


அவளின் மீது இருந்த கோபத்தை வாகனத்தின் மீது காட்டினான் மாறன் வாகனம் தறிகெட்டு ஓடியது.


ஆனால் எதைப்பற்றியும் கண்டுகொள்ளாத வேதா அவனை திரும்பி கூட பார்க்கவில்லை.


கோபமாக வீட்டில் வந்து வண்டியை நிறுத்தியவன் அவனது அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.


வேதா பொறுமையாக அவளின் உடமைகளை எல்லாம் எடுத்து அடுக்க தொடங்கியிருந்தாள் .


சிறிது நேரத்திற்குப் பிறகு மருத்துவமனையில் ராதிகாவிற்கு ஒருவர் மட்டும்தான் துணை இருக்க வேண்டும் என்று கூறியதால் செல்வியை அங்கே தங்க வைத்தனர் செழியனும் உதவிக்கு அங்கேயே தங்கி விட்டான். மீதம் இருந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீடு வந்து சேர…


வேதாவின் தாய்க்கும் தந்தைக்கும் அடிமனதில் அப்படியொரு பயம் எங்கே மகளை தங்களுடன் அனுப்பி விடுவானோ என்று அவர்களுக்கு இப்பொழுது இந்த வீட்டில் ஆடம்பரமோ பிரம்மாண்டமோ எதுவுமே கவனத்தில் இல்லை தனது மகளின் திருமண பந்தம் முடிந்து விடக்கூடாது அது மட்டும் தான் இருந்தது.


கனகா பாட்டி எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் மாறன் என்ன குண்டை தூக்கிப்போடுவானோ என்று பயந்தபடி காத்திருந்தனர்.


மாறன் அவனது அறையில் பெட்டி அடுக்கிக் கொண்டிருக்க மற்றொரு அறையில் வேதா அவளது உடைமைகளை அடுக்கி கொண்டிருக்கிறாள் என்ன நடக்கிறது என்று யாருக்கும் புரியவில்லை.


இந்து எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தர்ஷினியுடன் விளையாட கிளம்பி விட்டாள்.


சற்று நேரத்திற்கெல்லாம் வேதா அவளது பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியே வர அதிர்ச்சியில் அனைவருமே எழுந்து நின்றார்கள் பின்புறமாகவே மாறனும் அவனது பெட்டியை தூக்கிக்கொண்டு வெளியே வர ஆச்சரியத்தில் மாறனையும் வேதாவையும் மாறி மாறிப் பார்த்தனர்.


வேதா குரல் கம்ம எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தபடி தாயின் அருகில் வந்து அம்மா அது வந்து என்று கூற தொடங்கும் முன்னே மாறன் சத்தமாக பிளைட் டைம் ஆயிட்டு இருக்கு இன்னும் எவ்வளவு நேரம் லேட் பண்ணுவ என்று சத்தமாக கேட்க அத்தனை பேருமே ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியில் இருவரையும் பார்த்தனர்.


மாறன் அனைவரிடத்திலும் பொதுவாக கடைக்கு முக்கியமான சில திங்ஸ் எல்லாமே ஆர்டர் போட வேண்டியிருக்கு குஜராத் டெல்லினு ரெண்டு மூணு ஊருக்கு போறேன் சோ எதுக்கு தனியா போகணும் அதான் வேதாவையும் கூட கூட்டிட்டு போகலாம்னு முடிவு பண்ணிட்டேன் அப்படியே ஒரு ஹனிமூன் ட்ரிப் மாதிரி ஆச்சு பிசினஸ் விஷயமும் முடிஞ்சது என்று இயல்பாக கூறியவன் பிளைட் டைம் ஆச்சு சீக்கிரம் வா என்று வேதாவின் கைகளை பிடித்து தரதரவென இழுத்துச் செல்ல ஆரம்பித்தான்.


அனைவருமே அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சுடன் சந்தோஷத்தில் அமர்ந்தனர்.


வெளியில் வந்த வேதா அவனது கையிலிருந்த அவளது கையை உதறிக்கொண்டவள் இது என்ன புது ட்ராமா…. நான் தான் வரும் போதே தெளிவா சொன்னேல்ல உங்களுக்கும் எனக்கும் ஒத்து வராதுனு ... இப்போ என்ன ஹனிமூன் அது இதுன்னு என்னமோ பேசிட்டு இருக்கீங்க முதல்ல ஒழுங்கா எல்லார்கிட்டயும் வந்து அது மாதிரி எல்லாம் ஒன்னும் இல்லனு சொல்லுங்க…


முடியாது வேதா உன்கிட்ட ஏற்கனவே சொன்னது மாதிரி நீ இங்கிருந்து போக பிடிவாதமாக இருந்தா உன்னை இங்கிருந்து அனுப்பாம இருக்க நானும் பிடிவாதமும் இருப்பேன் இனிமே நீ விரும்பினாலும் விரும்பலனாலும் நீ என்னோட மனைவியா கடைசிவரை இந்த வீட்ல வாழ்ந்து தான் ஆகணும்... நாம் முடிவு பண்ணியாச்சு இனி அந்த கடவுளே நினைச்சா கூட நீ இந்த வீட்டை விட்டு போக முடியாது உன்னை மாதிரி ஒருத்திய இழக்க நான் விரும்பல.


சரி இந்த வீட்டிலேயே இருந்து தொலையறேன் அதுக்கு எதுக்காக இப்போ உங்க பின்னாடி நான் டெல்லி வரணும்…


அதான் சொன்னேனே ஹனிமூன் ட்ரிப்னு….


மண்ணாங்கட்டி….நான் வரல... எனக்கு புடிக்கல…


உனக்குப் பிடிச்சிருக்கா பிடிக்கலையானு என்று கேட்கல நாம இப்போ ஹனிமூனுக்கு போறோம் அவ்வளவுதான் .


அதான் சொல்றேன்ல எனக்கு அந்த வார்த்தையை கேட்கவே புடிக்கல அதுவும் உங்க கூட டெல்லி வரைக்கும் என்னால தனியாலாம் வர முடியாது... துணைக்கு யாரையாவது கூப்பிடுங்க…


ஹனிமூனுக்கு துணைக்கு ஆள் கூப்பிட ஒரே ஆள் நீயா தான் இருப்ப உனக்கு நான் தான் துணை எனக்கு நீ தான் துணை ஒழுங்கா கார்ல ஏறு இல்லனா குண்டு கட்டா தூக்கிட்டு போயிடுவேன்…
என்று அவளின் பக்கமாக வர.


சடுதியில் பயந்தவள்...
அதெல்லாம் ஒன்னும் வேணாம்...நானே வரேன்...ஆனா உங்களோட எப்படி என்னால தனியா...அதும் ஹனிமூன்...என்று இழுக்க..


ஹனிமூன் தான் அதும் என்னோட தனியாத்தான்….நீ இப்படி புலம்பவே வேணாம் டெல்லி குளுர்ல எல்லாம் தானா நடக்கும்...நீயோ நானோ இதுக்குனு எதும் நல்ல நேரம்லாம் பாக்க வேண்டியது இருக்காது...அங்க போனா உனக்கே புரியும் என்றவன் காரில் ஏறி இயக்கவும் அவளும் பயந்தபடியே ஏறி அமர்ந்தாள்.


மனமெங்கும் திக் திக் திக் தான்…கூடவே கடும் குழப்பம் வேறு... திருமணமான முதல் நாள் அவளுக்கு ஏற்பட்ட அதே குழப்பம் தான் மீண்டும் தலைதூக்கியிருந்தது.


இவ்வளவு பெரிய வசதியில் இருப்பவன் தன்னை ஏன் திருமணம் செய்து கொண்டான்.


இந்த வீட்டில் இருப்பவர்கள் தேடி வந்து ஏன் என்னை மணமுடித்து வைத்தார்கள்.


காலை ராதிகாவின் வீட்டை பார்க்கும் வரை அவளுக்கு இந்த நினைப்பு வரவில்லை...அவளின் வீட்டையும் அங்கிருந்த ஆடம்பரத்தையும் கண்டவுடனே தானாக அந்தக் குழப்பம் வர ஆரம்பித்து விட்டது.


இப்பொழுது திடுதிப்பென்று இவளை குடும்பத்தினருடன் பேசவிடாமல் டெல்லி இழுத்துச் செல்லவும் அவளுக்கு உறுதியாயிற்று.


அவன் இடத்திலும் அவனது குடும்பத்திலும் ஏதோ ஒரு ரகசியம் ஒளிந்து கிடக்கிறது அது என்ன என்று அறிந்து கொள்ள வேண்டும்.


முதலில் வேண்டாம் என்றான் இப்பொழுது என்னை மாதிரியான ஒரு பெண்ணை விட மனம் இல்லை என்கிறான்.


என்னை வைத்து என்ன காரியம் சாதிக்கப் போகிறான் என்னுடைய இரக்க குணமும் மற்றவர்களுக்கு சேவை செய்யும் மனமும் எந்த விதத்தில் இவனுக்கு உபயோகப்படும் என்றெல்லாம் அவளுக்கு பலவிதமான குழப்பங்கள் வர ஆரம்பித்திருந்தது.


கண்டிப்பாக மனதில் இருக்கும் குழப்பங்கள் அனைத்திற்கும் விடை கொடுத்தால் ஒழிய இவனுடன் மனமொத்து வாழ முடியும் இல்லை என்றால் கண்டிப்பாக இவன் தூரதேசம் அழைத்துச் சென்று குளுமையான பகுதியில் அவளை அடைத்து வைத்து அவனது ஆசைக்கு இணங்க வைக்க விரும்பினால் கூட அவளின் உடல் வேண்டுமானால் இசைந்து கொடுக்குமே ஒழிய அவளின் மனம் கண்டிப்பாக அவனிடத்தில் செல்லாது எப்படியாவது டெல்லி சென்ற உடன் அவன் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தவள் அதன் பிறகு எதைப் பற்றியும் யோசிக்காமல் உறங்க ஆரம்பித்தாள் .


அவள் கண்களை மூடி உறங்கவுமே மாறனுக்கு புரிந்துவிட்டது இவள் மீண்டும் ஏதோ ஒரு மிகப் பெரிய குழப்பத்திற்கு வந்து விட்டாள்.


மருத்துவமனையில் இருந்து திரும்பி வரும் பொழுது அவளுடைய எதிர்காலத்தைப் பற்றிய குழப்பம் என்று காரணம் கூறினாள் இப்பொழுது அவளுடைய எதிர்காலமே என்னுடைய வீட்டில் என்றாகிவிட்டது அதன் பிறகு என்ன குழப்பம் கவலை ஒருவேளை என்னுடன் இருப்பதற்கு தான் கவலைப்படுகிறாளோ…


எதுவாக இருந்தாலும் சரி நீ காலம் முழுவதும் இப்படியே வேண்டுமானாலும் உறங்கிக் கொண்டு இரு ஆனால் என்னை விட்டுச் செல்ல மட்டும் அனுமதிக்க மாட்டேன் என்று குரூரமாக நினைக்கத் தொடங்கி இருந்தான் அவனுக்குள் இருந்த மனிதன் செத்து மிருகம் உயிர்த்தெழ ஆரம்பித்திருந்தது.

தொடரும்..
 
Top