கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துணையாக நான் வருவேன்-2

Akila vaikundam

Moderator
Staff member
2


எல்லாம் முடிந்து மாப்பிள்ளை வீட்டினர் அவர்களின் வீட்டிற்குச் சென்ற பிறகும் கூட வேதவள்ளியால் இயல்புநிலைக்கு வர முடியவில்லை .



மனதில் ஏதோ ஒரு அழுத்தம் தனது தாயும் தந்தையும் பணத்திற்காக தனது வாழ்க்கையை அடகு வைக்கிறார்களோ என்று கூட தோன்றியது .



ஆனால் அவர்களிடம் நேரடியாக இதைப்பற்றி கேட்க முடியவில்லை வாழப்போகும் தன்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமல் அவர்களாக தன்னிச்சையாக முடிவெடுத்து விட்டார்கள்.



இந்த காலத்தில் பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்வது என்பதே அரிது அதுவும் வேதவள்ளியை போல் இருப்பது அரிதிலும் அரிது.



தனது குடும்பத்திற்காக எல்லாவற்றையும் மனதிற்குள்ளே வைத்துக்கொண்டு வெளியில் எதையும் காட்டாமல் வலம் வர ஆரம்பித்தாள்.



அவர்கள் குறிப்பிட்ட தேதியில் நிச்சயம் வைத்துக்கொள்ளலாம் என்று நாள் பார்த்துக்கொண்டிருக்க மாப்பிள்ளை வீட்டிலிருந்து தகவல் மட்டும் வந்தது நேரடியாக திருமணத்திற்கு முதல் நாளே நிச்சயத்தை வைத்துக்கொள்ளலாம் இப்பொழுது நிச்சயம் வேண்டாம் எங்களால் அலைய முடியவில்லை திருமண வேலைகள் தலைக்குமேல் இருக்கிறது என்று கூறிவிட்டனர் .



வேதவள்ளியிடம் வெற்றிமாறனின் புகைப்படத்தை காட்டியிருக்கிறார்கள் தான் ஆனாலும் அது மிகப்பழைய புகைப்படம் சமீபத்திய புகைப்படம் எதுவும் அவர்கள் கைவசம் இல்லை என்று கூறிவிட்டனர் .



எல்லோர் கையிலும் ஆண்ட்ராய்டு போன் சுலபமாக விளையாடும் பொழுது மாப்பிள்ளையிடம் அதுபோல் ஃபோன் இல்லாமலா இருக்கும்...அதில் ஒரு புகைப்படம் கூடவா எடுத்திருக்க மாட்டான்…



யாரோ ஒருவரின் திருமணம் சமயத்தில் எடுத்த புகைப்படத்தை ஆல்பத்திலிருந்து போட்டோ எடுத்து அனுப்பி இருக்கிறார்கள் நிஜமாகவே இப்படி ஒரு மாப்பிள்ளை இருக்கிறாரா இல்லை இவர்கள் தன்னை வைத்து ஏதும் விளையாட்டு விளையாடுகிறார்களா…?.



மாப்பிள்ளை வீட்டினரிடம் தன்னால்தான் வாயைத் திறந்து கேட்க முடியவில்லை ஆனால் தாயும் தந்தையும் மாப்பிள்ளை வீட்டினரிடம் இதுபோல் கேள்வியைக் கேட்கலாம் எது அவர்களை தடுக்கிறது கேள்வி கேட்டால் அவர்களின் மகளை வேண்டாம் என்று கூறிவிட்டு சென்று விடுவார்களாம் அந்த பயம் அவர்களுக்கு.



சென்றால் சென்றுவிட்டு போகட்டும் இந்த மாப்பிள்ளையை விட்டால் வேறு மாப்பிள்ளையே உலகத்தில் இல்லையா என்ன சென்னையில் சொந்தமாக வீடு நன்றாக போகக் கூடிய ஒரு தொழில் மற்றும் கார் இருக்கிறது அவ்வளவுதானே மகளின் சந்தோஷத்தை விட இதுவெல்லாம் பெற்றோருக்கு பெரிதாக தெரிந்து விட்டதா என்று மனதிற்குள்ளேயே வைத்து மருக தொடங்கியிருந்தாள் வேதவள்ளி.



நாட்கள் றெக்கை கட்டிக்கொண்டு பறக்க திருமண நாளும் வந்துவிட்டது இதுவரை வெற்றி மாறனிடம் இருந்து வேத வள்ளிக்கு ஒரு ஃபோன் ஃகால் கிடையாது ஒரு மெசேஜ் கிடையாது அதற்கு இவளுடைய தனிப்பட்ட எண்ணை அவனிடம் கொடுத்துவிட்டதாக அவனின் தாயார் கூறினார்கள்.



அவனின் தனிப்பட்ட என்னை இவளுக்கும் கொடுக்க பல மெசேஜ்கள் அனுப்பி இருக்கிறாள்.



ஒரு முறையாவது அவனிடம் பேசி விடலாம் என்று அழைக்கும் போதெல்லாம் நம்பர் பிஸி என்றே வருகிறது பிறகுதான் தெரிந்தது அவளின் நம்பரை பிளாக் செய்து இருப்பானோ என்ற சந்தேகம்…



இருந்தாலும் மனம் கேட்காமல் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அவனுக்கு அழைத்துப் பார்க்கிறாள் அவனின் குரலாவது எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாமே என்று எந்த பிரயோஜனமும் இல்லை.



அவன் ஒருமுறை கூட அவளின் அழைப்பை ஏற்கவேயில்லை. தந்தையிடம் பேசுவதாக கூறுகிறார்... சகோதரியிடம் பேசியதாக கூறுகிறாள்...பாளையங்கோட்டையில் இருக்கும் தம்பியை கூட அழைத்து படிப்பு எப்படி செல்கிறது என்று கேட்டிருக்கிறான் ஆனால் வேதாவிடம் மட்டும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை அப்படியென்றால் வேதவள்ளியை பிடிக்கவில்லையோ…


பிடிக்காத திருமணத்தை ஏன் செய்து கொள்ள வேண்டும் எதற்காக விருப்பமில்லாத என்னை அவனின் மனைவியாக ஏற்க துணிந்தான் ஏதாவது பின்புலம் இருக்குமா என்னை திருமணம் செய்வதால் அவனுக்கு என்ன லாபம் வந்துவிடப் போகிறது தனது தந்தை அதிகப்படியாக ஒரு பத்து பவுன் நகை போட்டு திருமணம் செய்து கொடுத்தாலே அதிகம்... எதற்காக இந்த திருமணம் …
அவன் கண்டிப்பாக வாய் திறக்க போவதில்லை….


நானும் இதை தாயாரிடம் இதுபற்றி ஜாடையாக விசாரித்தால் அவரும் வீட்டின் பொருளாதார நிலைமையைக் கூறி விட்டு இவளுக்கு பின் ஒரு தம்பி இருக்கிறான் தங்கை இருக்கிறாள் நீ முதலில் திருமணம் செய்து கொண்டு போனால் தானே அவர்களுக்கு ஏதாவது செய்ய முடியும் என்று ஒரு பாடு புலம்பித் தீர்த்து விடுகிறார் .



தாயின் புலம்பலுக்கு பயந்து இவள் வாயே திறப்பதில்லை தந்தையிடம் எப்பொழுதுமே அவளுக்கு சற்று பயம் அதிகம் சிறுவயதிலிருந்தே .


அதனால் அவரின் முன் நின்று பேசுவதற்கே தயங்குவாள்.



தங்கையிடம் கூறலாம் என்று பார்த்தால் அவள் சிறு பெண் அவளுக்கு அவ்வளவு விவரம் பத்தாது என்று நினைத்துக்கொண்டாள் .



தம்பி பாளையங்கோட்டையில் இருக்கிறான்...போனில் அழைத்து பேசும் விஷயம் கிடையாது...அப்படியே கூறினாலும் தம்பி எந்ந அளவிற்கு அவளை புரிந்து கொள்வான் என தெரியவில்லை.



இப்பொழுது வேதாவின் மனக்குமுறலை யாரிடம் தான் கூறமுடியும் விதி விட்ட வழி என்று நினைத்தவள் திருமணத்திற்கு மனதளவில் தயாராக தொடங்கினாள்.



ஒருவழியாக எதிர்பார்த்த திருமண நாள் வந்தே விட்டது இவளை தேவதை போல் அலங்கரித்து அந்த ஊரிலேயே பெரியதென கூறப்படும் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.



செலவு அனைத்துமே மாறனின் குடும்பத்தார் தான் எங்கே வேதாவின் தந்தையிடம் அவ்வளவு பணம் இருக்கிறது.



பத்து பவுன் போடுகிறேன் என்று கூறிவிட்டு அதிலே இரண்டு பவுன் கம்மியாக இருக்கிறது என்று தலையை சொரிந்து கொண்டு நின்றார் மாறனின் தாயாரின் முன்பு…



எதற்காக அப்படி அவர்களின் முன்பு தந்தை சென்று நிற்க வேண்டும் நகை என்ன கம்மி விலைக்கா விற்கிறது இன்றைய தேதியில் எட்டுபவுன் புதிதாக எடுக்க வேண்டும் என்றால் முழுதாக நாலு லட்ச ரூபாய் வேண்டும் சும்மா எல்லாம் இல்லை.



ஆனால் தந்தையோ மகளுக்கு ஒன்றுமே செய்யாது போலல்லவா அவர்களின் முன்பு தலைகுனிந்து நிற்கிறார். என்னால் இவ்வளவுதான் போட முடியும் இஷ்டம் இருந்தால் எங்கள் பெண்ணை உங்கள் மகனுக்கு திருமணம் செய்யுங்கள் இல்லையென்றால் வேண்டாம் என்று முகத்தில் அடித்தபடி பேசுவதை விட்டுவிட்டு இது என்ன என்ற கோபம் தான் வந்தது வேதவள்ளிக்கு.



மாப்பிள்ளையின் தாய் கனகா பெருந்தன்மையாக பரவாயில்லை உங்கள் மகன் படிப்பை முடித்து வேலைக்குச் செல்லும் பொழுது இரண்டு பவுனுக்கு நான்கு பவுனாக சேர்த்து வேதவள்ளிக்கு போட்டு விடுங்கள் என்று சிரித்தபடி கூறி விட்டுச் செல்ல மேலும் ஆத்திரம் உண்டாயிற்று வேதவள்ளிக்கு.




என்னது‌.. தம்பி சம்பாதிக்கும் பொழுது பாக்கி வைத்த நகையை இரட்டிப்பாக செய்யவேண்டுமா எந்த ஊரில் நடக்கிறது இந்த அநியாயம் என்று தாயிடம் தான் கடிந்து கொண்டாள்.



தாயோ மணப்பெண் போல கொஞ்சம்
அமைதியாக இரு தயவுசெய்து கத்தி பேசாதே மாப்பிள்ளை வீட்டார் கேட்டால் பெரிய பிரச்சினையாகிவிடும் அதன் பிறகு அவர்கள் ஏதாவது விபரீதமான முடிவை எடுத்து விட்டால் பாதிப்பு நமக்கு தான் என்று வேதாவின் தாய் அவளின் வாயைத் தான் அடைத்தாரே ஒழிய கனகாவிடம் சென்று எதுவுமே கேட்கவில்லை.


வேதா என்ன அந்த அளவுக்கு இறங்கிப் போயா கிடக்கிறாள் இந்த மாப்பிள்ளையை விட்டு விட்டால் வேறு மாப்பிள்ளையே கிடைக்காதா…. ஏன் தாயும் தந்தையும் பயந்துகொண்டு எல்லாவற்றுக்கும் இறங்கி போகிறார்கள் என்று தான் நினைத்தாளே தவிர அவளுக்கு தெரியவில்லை அவர்களின் பிரச்சனை.



அவர்கள் மாறனைப் பற்றி நன்கு விசாரித்து விட்டார்கள் மாறனிடம் இரண்டு மூன்று முறை பேசியும் இருக்கிறார்கள் அவனின் பேச்சிலே அவ்வளவு பக்குவம் தெரிந்தது.



அவனை விசாரித்தவர்கள் எல்லாருமே
அவனை மிகவும் புகழ்ந்தார்கள் மாறனை போன்ற ஒருவனை திருமணம் செய்ய வேண்டுமென்றால் உங்கள் வீட்டுப் பெண் மிகவும் கொடுத்து வைத்திருக்க வேண்டும் அதனால் இந்த சம்மந்தத்தை விட்டு விடாதீர்கள் என்று தான் அறிவுறுத்தினார்கள் தவிர யாருமே அவனை பற்றி ஒரு இடத்தில் கூட தவறாக கூறவில்லை.



இதைவிட ஒரு பெண்ணைப் பெற்ற பெற்றோருக்கு வேறு என்ன வேண்டும் தனது பெண்ணுக்கு ஒரு நல்ல ஆண்மகன் கணவனாக வரப்போகிறார் பக்குவ பட்டவன் நல்ல உழைப்பாளி தனது மகளை கண்ணுக்குள் வைத்து தாங்க போகிறான் அதுமட்டுமல்ல ஒரு வீட்டில் அமையும் மூத்த மருமகன் மட்டும் சரியாக இருந்துவிட்டால் அந்த வீட்டின் நிலைமையை தலைகீழாக மாறும்.



தங்களது மகனுக்கு ஒரு நல்ல வேலை வாய்ப்பை பெற்றுத் தர முடியும் இளைய மகளுக்கு சிறந்த வரனை கொண்டு வந்து சேர்க்க முடியும் இது எல்லாமே தனது மூத்த மகளுக்கு வரப்போகும் மாப்பிள்ளை சரியாக அமைந்தால் நடக்கும் என உறுதியாக நம்பினார்கள்.




அதனால்தான் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் என்ன கூறினாலும் சரி என்று தலையை மட்டுமே ஆட்டுகிறார்கள் எதிர்த்து ஒரு கேள்விகூட கேட்கவில்லை பேசும் மகளின் வாயையும் அடைகின்றனர்.



சரி எப்படி இருந்தாலும் மாப்பிள்ளை என்பவன் மண்டபத்திற்கு வருவான் அல்லவா..
அவனிடம் பேசிக்கொள்ளலாம் என விட்டு விட்டாள்.



நாளை திருமணம் இன்று நிச்சயத்திற்கு செய்யவேண்டிய வேலைகள் எல்லாவற்றையும் முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறார்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும்.




நிச்சயத்திற்கு முன்பாக மணப்பெண்ணிற்கு நலுங்கு வைக்கும் வைபவம் முடிந்ததும் அவளுக்கு புடவை மாற்றுவதற்காக சக பெண்கள் அவளின் அறைக்கு அழைத்துச் செல்லவும் மாப்பிள்ளையை நலுங்கு வைக்க மாறனை அழைத்து வந்தனர்.



அப்பொழுதுதான் முதல் முறையாக மாறனை அவளின் அறையில் இருந்து எட்டிப் பார்த்தாள்.



அப்பப்பா என்ன ஒரு கம்பீரம் எவ்வளவு அழகு அவன் நடந்து வரும் தோரணையிலேயே அவள் விழுந்து விட்டாள்.




வெள்ளை வேட்டி சட்டை கட்டிக்கொண்டு அவன் நடந்து வரும் அழகை கண்டதும் அப்படியே வாயை பிளந்தபடி அமர்ந்து விட்டாள்.




வசீகரிக்கும் கண்கள் ஆறு அடியை தொட்டுவிடும் உயரம் அதற்கேற்ற உடல் வாகு சரியாக உடற்பயிற்சி செய்வதால் கட்டுக்கோப்பாக வைத்திருந்தான்.
நிகோடின் படியாத உதடுகள்...சிவந்த மேனி... அழகிய சிகையலங்காரம்... காலில் அணிந்திருந்த காலணி முதல் கையில் கட்டியிருந்த வாட்ச் வரை எல்லாமே பிரபல கம்பெனிகளின் தயாரிப்பாக இருந்தது.



அதுவே சொல்லாமல் சொல்லிவிட்டது அவனின் வசதி வாய்ப்பை இவ்வளவு வசதி இருப்பவன் தமிழ்நாட்டின் தலைநகரில் குடியிருப்பவன் ஏன் தென்மாவட்டத்தில் மேப்பில் கூட இல்லாத தன்னுடைய ஊரில் வந்து தன்னை திருமணம் செய்து கொள்ள முன் வருகிறான்.


வேதாவிற்கு பதில் தெரியாத கேள்வி இது எது எப்படி இருந்தால் என்ன இப்படி ஒரு அழகன் தனக்கு கணவனாக வருகிறான் என்று அந்த ஒரு நினைவே சந்தோஷத்தை கொடுக்கிறது.



வேதாவின் தோழிகள் எல்லோருமே திருமணம் செய்து கணவனுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அவ்வப்போது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து இவளை கடி ஏத்துவார்கள்.



இனி இவளும் மாறனுடன் தினமும் அழகாக புகைப்படம் எடுத்து ஸ்டேட்டஸ் வைக்கப்போகிறாள்...நினைக்கும் பொழுதே இனித்தது…


அதன் பிறகு எங்கே அவனை போய் கேள்வி கேட்பது இப்பொழுது தான் தெரிந்தது அவளின் தாய் தந்தை ஏன் இந்த மாப்பிள்ளைகள் எப்படியாவது மகளுக்கு திருமணம் செய்ய வேண்டுமென்று முனைப்புடன் செயல்பட்டார்கள் என்று .


இந்த அளவிற்கு கம்பீரமான ஆண்மகனைப் பார்த்த பின் யாருக்குதான் விட மனசு வரும்... தனது தந்தையின் தேர்வு சோடை போகவில்லை.


இவனுக்காகவாவது தந்தை கண்டிப்பாக பாக்கி வைத்த நகைகளை தரவேண்டும்...என்று மாறனை பார்த்த அடுத்த நிமிடத்திலேயே பிறந்த வீட்டிற்கு எதிராக மாறினாள்.


எப்போதடா தனக்கு அலங்காரம் செய்து முடிப்பார்கள் அவனின் அருகில் சென்று தன்னை அமர வைப்பார்கள் என்று ஆவலாகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.



அவனுக்கும் நலுங்க வைத்தவுடனே ஆடை மாற்றி அழைத்துச் சென்றுவிட்டார்கள் பிறகு இருவரையும் எதிரெதிரே அமர வைத்து அவர்களின் குடும்ப வழக்கப்படி நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது.


வேதாவோ மாறனின் முகத்தை மட்டும் தான் பார்க்கிறாள் தன்னையும் அவன் இது போல் சுவாரசியமாக பார்க்கிறானா என்று …


ம்ச்...இல்லை அவனிடத்திலிருந்து எந்த ஒரு எதிர்வினையும் இல்லை.


இவள் மட்டும் தான் அவனை சுவாரசியமாக பார்க்கிறாள் அவன் கடமையே என்று அமர்ந்திருப்பது போல் தான் தெரிந்தது.

இலக்ன பத்திரிகை வாசித்து முடிந்ததுமே பெண்ணையும் மாப்பிள்ளையையும் அருகருகே அமர வைத்து மறுபடியும் நலங்கு வைக்க இவள்தான் கனவுலகில் மிதந்தபடி அவனை ரசித்துக் கொண்டிருக்கிறாள்.


அவன் முகத்தில் அப்படி ஒரு இறுக்கம் இவளை திரும்பி கூட பார்க்கவில்லை மனம் சற்று சோர்வு அடைந்தாலும் அதற்காகவெல்லாம் கவலை கொள்ளவில்லை வேதா... வெற்றிமாறனின் மனைவியாகப் போகிறாள் அதன்பிறகு அவன் தன்னை மட்டும் தானே ரசித்தாகவேண்டும் என்று மனதை தேற்றிக் கொண்டாள்.


அந்த நிகழ்விற்கு வந்த சக தோழிகள் கிண்டல் செய்கின்றனர்…
பார்வையை எங்களின் பக்கமும் கொஞ்சம் திருப்பு வேதா இப்படி மாப்பிள்ளையை பார்வையாலேயே சாப்பிடாதே என்று.



ஏன் வேதாவின் தங்கையே கூட அவளை கேலி செய்கிறாள் அக்கா தயவு செஞ்சு மாமாவை மட்டும் பார்த்துட்டு இருக்காத எல்லாருமே உன்னை தான் கிண்டல் செய்யறாங்க மாமா மாதிரி நீயும் போட்டோக்கு நல்லா போஸ் கொடு….பாரு எல்லா போட்டோவையும் நீ மாமாவை மட்டும்தான் பாத்துக்கிட்டு இருக்க…
கல்யாணம் ஆனதுக்கப்புறம் இந்த போட்டோவை பார்த்து மாமாவே உன்னை கேலி செய்யப் போகிறார் என.


அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை யார் என்ன நினைத்தால் என்ன எனது வருங்கால கணவரை நான் காண்கிறேன் இவர்களுக்கெல்லாம் பொறாமை என்று மீண்டும் அவளின் வேலையை செவ்வனே செய்கிறாள்.


அப்படியாக அன்றைய இரவு கழிய மறுநாள் விடியற்காலை அவனின் கையால் பொன்தாலி வாங்க அவளின் சங்கு கழுத்து காத்துக் கொண்டிருக்கிறது .


ஆனால் இங்கே மாறன் அவனின் தாயிடம் உறுதியாகக் கூறிக் கொண்டிருக்கிறான்.

அம்மா ப்ளீஸ் இப்போ கூட ஒண்ணும் கெட்டுப் போகல... எனக்கு இந்த பொண்ணை பிடிக்கல எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம் தேவையில்லாமல் கட்டாயப்படுத்தி என்னோட வாழ்க்கையில விளையாடிகிட்டு இருக்கிறீங்க இந்த பொண்ண தவிர நீங்க வேற எந்த பொண்ணை காமிச்சாலும் நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்... தயவு செஞ்சு இந்த பொண்ணு மட்டும் வேண்டாம் என்று மன்றாடிக் கொண்டிருந்தான்.




விளையாடாத மாறா கல்யாணம் ஒன்னும் சாதாரண விஷயம் கிடையாது மண்டபம் வரை வந்ததுக்கப்புறம் திருமணத்தை நிறுத்தினா அந்த பொண்ணோட வாழ்க்கை என்னாகும்... யோசிச்சி தான் பேசுறியா…?


அம்மா நான் ஆரம்பத்திலிருந்தே உங்ககிட்ட இதைத்தான் சொல்லிட்டு இருக்கேன் எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்னு நீங்கதான் பிடிவாதமா பெண்ணை பார்க்க வந்தீங்க அதுமட்டுமில்ல அப்பப்போ அவ தம்பியோட பேசு ,தங்கச்சியோட பேசனு உங்களோட போனை என் கையில் கொடுத்து பேச வைச்சீங்க எல்லாமே உங்க இஷ்டத்துக்கு பண்ணிட்டு கடைசியில் பழியை தூக்கி என் மேல போடாதீங்க .


என்னால அவ பக்கத்துல நிக்க கூட பிடிக்கல ஆனா நீங்க அவளை கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்த சொல்றீங்க எந்த வகையில் நியாயம்…



இதுல வீட்ல இருக்கிற எல்லார்கிட்டயும் என்னை பத்தி என்ன சொல்லி வச்சிருக்கீங்க... அவ போட்டோவைப் பார்த்ததும் உடனே நான் கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னேன்னு இப்போ தான் செழியன் வந்து என்கிட்ட கேட்டுட்டு போறான்…. போட்டோவை பார்த்தே மயங்கினியே அண்ணா நேர்ல அண்ணி எப்படி இருக்காங்கன்னு... அவனுக்கு நான் என்ன பதில் சொல்லட்டும் ஏம்மா இப்படி எல்லாம் பண்ணி வச்சிருக்கீங்க..


பின்ன என்ன என்ன பண்ண சொல்ற மாறா உன் அக்காவுக்கு கல்யாணம் ஆகி பதினைந்து வயசுல பொண்ணு இருக்கா இன்னும் ரெண்டு மூணு வருஷத்துல அவளுக்கு வரன் பார்த்து கல்யாணம் பண்ணி வைப்போம்



அப்பவும் நீ கல்யாணம் பண்ணாம இப்படி சுத்திட்டு இருக்க போறியா சொல்லு உன் தம்பி கல்யாணம் பண்ணி அவனுக்கு ஒரு குழந்தை பிறக்கப் போகுது இன்னும் எத்தனை நாள் இப்படி ஒன்டிகட்டையா தனியா சுத்திக்கிட்டு இருக்க போறே...




எங்களுக்கு மட்டும் ஆசை இருக்காதா உனக்கும் கல்யாணம் ஆகனும் உன் குழந்தைகளையும் எங்க கையால தூக்கி கொஞ்சனும்னு அதனாலதான் நாங்களே இதுபோல ஒரு விசயத்தை சொல்லி பொண்ணு பார்த்தாச்சு.


நீ என்ன பண்ணுவேன்னு தெரியாது நாளைக்கு காலைல அவளோட கழுத்தில் தாலி கட்டுகிற அப்படி இல்லனா கண்டிப்பா நானும் உன்னோட அப்பாவும் நிச்சயம் உயிரோடு இருக்க மாட்டோன் உனக்கு நாங்க முக்கியமா இல்லன்னா உன்னோட பிடிவாதம் முக்கியமானு நீயே முடிவு பண்ணிக்கோ காலைல வரைக்கும் உனக்கு நேரம் இருக்கு...நல்லா யோசி...உன்னோட கல்யாணமா...எங்களோட காரியமா…
நாங்க உனக்கு அட்சதை போட்டு ஆசிர்வாதம் பண்ணபோறோமா...இல்லனா நீ எங்களுக்கு வாய்க்கரிசி போட்டு வழியனுப்ப போறியானு முடிவு பண்ணிக்கோ...எதுனாலும் எனக்கு சம்மதம் என்று கனகா சென்றுவிட்டார்.


தாயின் மிரட்டலை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது...பிடிவாதகாரர்...ஏதாவது விபரீதமான முடிவை எடுத்தாலும் எடுத்துவிடுவார்...என்று பலவாறாக யோசித்தவன் திருமணம் முடிந்ததுமே வேதாவிற்கு அவனின் மனதினை அவளுக்கு புரியவைத்து விட்டு விவாகாரத்து கொடுத்து அனுப்பிவிடலாம்…. அவளின் எதிர்காலத்திற்காக சிறிய அளவில் பணத்தையும் கொடுத்து எதிர்கேள்வி கேட்காதவாறு பார்த்து கொள்ளலாம் என முடிவெடுத்தவன் காலையில் நடக்கும் அவனின் திருமணத்தை எதிர்கொள்ள காத்திருந்தான்.



இது ஏதும் அறியாத வேதா மறுநாள் காலை தோழிகள் வந்து அலங்கரிக்கும் முன்னே அவளுக்கு அவளே மணப்பெண்களுக்கான ஒப்பனையை போட ஆரம்பித்து விட்டாள் கண்டவுடன் காதலில் விழுந்த அவளின் வெற்றிமாறனின் கைகளைப் பிடிப்பதற்காக….ஆவலுடன் காத்திருக்க ஆரம்பித்தாள்.


திருமணம் முடிந்ததுமே பலவாறாக அவனுடன் புகைப்படம் எடுக்க வேண்டும்... தங்களுடைய படுக்கையறையில் அவர்களின் புகைப்படத்தை பெரியதாக மாட்ட வேண்டும். மாதம் ஒரு முறையாவது கணவருடன் தாய் வீடு வந்து செல்ல வேண்டும்...தங்கையின் மேற்படிப்பை சென்னையில் தொடர சொல்ல வேண்டும்...கணவன் அதற்கு உதவிடவேண்டும் இப்படி பல கனவுகள்…


இதோ கல்யாண சம்பிரதாயங்கள் ஆரம்பித்தாகி விட்டது...ஏன் இந்த அய்யர் இவ்வளவு மந்திரங்களை சொல்லி நேரத்தை விரயம் செய்கிறார்…
இங்கு ஒருத்தி காத்திருப்பது தெரியாமல் என்று குருக்களை திட்டி தீர்த்தாள்.



இதோ மாப்பிள்ளையை அழைத்து வந்தாகிவிட்டது...நேற்றை விட இன்று அதிக அழகாக தெரிந்தான்...பட்டு வேட்டி சட்டையில் அவனின் கம்பீரம்,நிமிர்ந்த நடை ,நேர்கொண்ட பார்வை எல்லாமுமே அவளை சொக்க வைத்தது…


அவர் பெண்ணை அழைத்து வாருங்கள் என்று கூறும் முன்னே வேதவள்ளி மணவறையை நோக்கி செல்ல ஆரம்பிக்க உடனிருந்த தோழிகள் கேலி செய்தபடி அவளை அழைத்துச்சென்றனர்.


ஒரு வழியாக மாறனின் அருகில் வேதாவை அமர வைத்தனர்.


வேதாவிற்கு ஒரே படபடப்பு...முதல்முறை அன்னிய ஆடவன் பக்கத்தில் அமருகிறாள்... அதுவும் அவளுக்கு மிகவும் பிடித்தவனின் அருகில்…அவனுக்கும் தன்னைப்போலவே ஏதாவது வித்யாசமான உணர்வு தோண்றுமோ என சைடு கண்களால் அவனைக்கான கடமையே கண்ணாக அய்யர் சொல்படி மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தான்.



இப்பொழுது மணமேடையில் அவர்களை சுற்றிலும் ஏராளமான உறவினர்கள்... மாறனின் திருமணத்தை அருகில் இருந்து காணவேண்டும் என குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அவர்களை சுற்றி நிற்க…


ஆஆ...என ஒரு பெண்ணின் குரல் சிறு கத்தலாக மாறனின் காதில் கேட்க சட்டென மத்திரத்தை நிறுத்திவிட்டு பின்புறம் திரும்பிப் பார்த்தான்.


அங்கே செழியனின் மனைவிி ராதிகா
எட்டு மாத கருவை அவளது வயிற்றில் தாங்கியபடி அந்தக் கூட்டத்தோடு நிற்க அந்த இடத்திலும் கம்பீரமாக அவனின் குரல் ஒலித்தது.


ராதிகா எதற்காக இந்த கூட்டத்தில் நீ நின்னுகிட்டு இருக்க போய் முன்னாடி இருக்கிற சேரில் போய் உட்காரு என்றான்.


மாமா உங்க கல்யாணத்த பக்கத்திலிருந்து பார்க்கணும்னு ரொம்ப ஆசை...அதான் இங்க நிக்கறேன்...



இருக்கலாம் ரோஷிணி ஆனா உன்னோட ஆரோக்கியம் எனக்கு ரொம்ப முக்கியம் என்ன செழியா பார்த்துகிட்டு இருக்க போ...அவளை அழைச்சிட்டு போய் முன்னாடி உக்கார வச்சுட்டு நீயும் அவ பக்கத்துல உட்காரு என்று கட்டளையிட அண்ணனின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாத தம்பி அவனின் மனைவியை அழைத்துக் கொண்டு கீழே வந்து மணவறைக்கு எதிர் புறமாக இருந்த சேரில் அமர்ந்தான்.


அருகில் அமர்ந்திருந்த வேதவள்ளிக்கு மாறனை இன்னும் பிடித்துவிட்டது தம்பியின் மனைவியையே இந்தளவு அக்கறையாக பார்த்துக் கொள்பவன் தன்னை எந்த அளவு பார்த்துக்கொள்வான்.


அது மட்டுமின்றி திருமணமாகி ஒரு குழந்தைக்குத் தந்தையாகப் போகும் பொழுது கூட அவரின் தம்பி அண்ணன் பேச்சிக்கு இந்த அளவு கட்டுப்படுகிறார் என்றால் அந்த வீட்டில் மாறனின் பேச்சிக்கு எவ்வளவு மரியாதை எனவும் புரிந்தது...


அவனைத் திருமணம் செய்யும் போது தனக்கும் இதே அளவு மரியாதை கிடைக்கும் என்பதை நினைக்கும்போதே சந்தோஷமடைந்தாள்.

ஒருவழியாக கடைசியில் ஐயர் தாலி எடுத்து கொடுக்க மனமேயில்லாமல் கட்டாயத்திற்காக மட்டும் மாறன் அவளின் கழுத்தில் பொன் தாலியை அணிவிக்க பலவித கனவுகளுடன்,ஆசைகளுடனும் தலைகுனிந்து அதை வாங்கிக் கொண்டாள் வேதவள்ளி.

தொடரும்....
 
Last edited:
Top