கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துளி எண்ணெய் 19 2

Akhilanda bharati

Moderator
Staff member
19 2 சென்னையில் ஒரு மழைக்காலம்


ஏர்போர்ட் துவங்கி வேளச்சேரி வரும் வரை ஒவ்வொரு முக்கிய ஏரியாவிலும் 'இங்கேயா தம்பி இறங்கணும்?' என்று கேட்டும் ரிப்போர்டர் ரித்தீஷ் அசைந்து கொடுப்பதாக இல்லை.

"இன்னும் போகணும் சார்.. உங்களுக்கு எதுவும் தொந்தரவு இருக்கா அக்கா" என்று விதம் விதமாக மறுத்துப் பேசித் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தான். பேச்சுக் கொடுத்து செய்தி சேகரிக்கும் முயற்சிகளையும் விடவில்லை. கடைசியாக அஸ்வினின் அப்பார்ட்மெண்ட் இருந்த வளாகத்துக்குள் டாக்ஸி நுழைகையில்,

"இதுக்கு மேல நாங்க எங்கயும் போக முடியாது தம்பி" என்று அஸ்வின் கூற, "நானும் இங்கே தான் இறங்கனும்.. ரொம்ப தேங்க்ஸ்" என்றபடி இறங்கிக் கொண்டான். அப்படியே எதிரில் இருந்து சிறிய காம்ப்ளக்ஸுக்குள்ள நுழைந்து அதன் வெளிப்புறத்தில் இருந்த காபி ஷாப்பின் நாற்காலிகளில் ஒன்றில் போய் வசதியாக அமர்ந்து கொண்டான்.

காரை நிறுத்திவிட்டு இறங்கிய
அஸ்வின் அவன் எங்கே போகிறான் என்று பார்வையை ஓட்ட, சட்டமாக அமர்ந்து அப்பார்ட்மெண்ட் வாசலைப் பார்க்குமாறு அவன் வசதியாக அமர்ந்திருந்தது தெரிந்தது.

'இன்னொரு தடவை குடும்பத்துல கும்மி அடிக்காமப் போக மாட்டான்' என்று நினைத்து தலையில் அடித்தவன் டாக்ஸியை கட் செய்தான். அதன் பின்பு தான் உரைத்தது, ஐயையோ அஸ்வினியிடம் சொல்லவில்லையே என்று. 'வரப் போகிறேன், உடம்புக்கு எப்படி இருக்கிறது?' என்று காலையிலேயே அழைத்துப் பேசி விட்டான். ஆனால் ப்ரீத்தியும் நம் வீட்டுக்குத் தான் வருகிறாள் என்பதைச் சொல்லவில்லை. லிஃப்ட்டை நோக்கி நடந்தபடி அஸ்வினிக்கு அழைத்து,

"அஸ்வினி, சொல்ல மறந்துட்டேன்.. என் பிரண்ட்.." என்று சொல்லிவிட்டு, "என் கிளாஸ்மேட் பிரீத்தி இருக்காளோ.. அவளும் அவசர வேலையா டெல்லிக்கு வந்திருந்தா.. இப்ப என் கூட நம்ம வீட்டுக்கு வர்றா" என்றான். அதற்குள் லிஃப்ட் வந்துவிடவே இருவரும் ஏறிப் பயணித்தார்கள்.

இது என்ன வாசலுக்கு வந்தபின் சொல்கிறான் என்று ப்ரீத்தி ஒரு விதமாகப் பார்த்தாலும், அவளுக்கு தற்போதைய தமிழகத்தில் நிறைய நடைமுறைகள் புரியவில்லை. அதனால் ஒரு தோள்குலுக்கலுடன் அதை விட்டுவிட்டாள். இன்னும் உடல்நிலை முழுவதுமாக தேறியிராத அஸ்வினி மெல்ல எழுந்து ஃப்ரிட்ஜில் பால் இருக்கிறதா, எந்த அறையை ப்ரீத்திக்குக் கொடுக்கலாம் என்று பார்த்துக் கொண்டிருக்க,

"என்னவாம்?" என்று வந்தார் ஈஸ்வரி. "அவரோட கிளாஸ்மேட் ப்ரீத்தி வராங்களாம்" என்று அஸ்வினி கூறியது தான் தாமதம், ஈஸ்வரி எண்ணெயில் போட்ட கடுகாக வெடிக்க ஆரம்பித்தார்.

"அந்த வெளிநாட்டுக் கடங்காரி தானே? அவளுக்கு என்னவாம்? இவரு அவளைக் கூட்டிகிட்டு வருவாராம், நீ ஆரத்தி எடுக்கணுமாமா? செத்துப் பொழச்சி வந்திருக்கா என் பொண்ணு.. அதைப் பாக்க வர்றதுக்கு அஞ்சாறு நாள் ஆக்கியிருக்காரு.. இப்ப என்னத்துக்கு அந்த மினுக்கியைக் கூட்டிட்டு வரார்?" என்று படபடவென்று பொரிந்தார்

"அம்மா கொஞ்சம் புரிஞ்சுக்கோம்மா.. எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை அவர் மேல.. நான் விஷம் சாப்பிட்டதே அவருக்கு இன்னும் தெரியாது.. நான்தான் ஏதோ மூளை கெட்டுப் போய் எலிமருந்து சாப்பிட்டேன்.. நீயும் ஏதாவது கற்பனை பண்ணிக்காதே.. அப்படி எல்லாம் அவர் என்னை விட்டுட்டுப் போக மாட்டார்" என்று அஸ்வினி மெதுவாக எடுத்துக் கூற முயல,

"போயிடுவானா? எப்படிப் போவான்னு நானும் பார்க்கிறேன்.. அவனைக் கொன்னுட்டு ஜெயிலுக்கு போவேன்.. வரட்டும்.. அவளையும் நாலு கேள்வி கேட்கிறேன்.. ஏன்டி இதுக்குத் தான் வெளிநாட்டிலிருந்து கிளம்பி வந்தியா.. உனக்கு அங்க ஆம்பளைங்களே கிடைக்கலையான்னு" என்று வாய்க்கு வந்ததைப் பேசினார். கிருத்திக் வந்து,

"யாராவது கெஸ்ட் வராங்களாமா நம்ம வீட்டுக்கு? அவங்க கூட என்னை மாதிரி பாய்ஸ், இல்ல பாப்பாவ மாதிரி கேர்ள்ஸ் யாராவது கூட வராங்களா?" என்று கேட்டான். தனியாக இருக்கும் குழந்தை எப்படி யாரையேனும் ஆசையுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது என்று நினைத்தவுடன் அஸ்வினிக்குக் கண்கலங்கி விட்டது.

சரியாக அழைப்பு மணி அடித்தது. "தயவு செஞ்சு எதுவும் பேசிடாதம்மா" என்று கூறிவிட்டு அவளே ஈஸ்வரிக்கு முன்பாகச் சென்று கதவைத் திறந்தாள்.

"அப்பா!" என்று கிருத்திக் ஆசையுடன் அஸ்வினை அணைத்துக்கொள்ள, "வாங்க" என்றாள் அஸ்வினி ப்ரீத்தியைப் பார்த்து. "ஹாய்! உடம்பு சரியில்லையாமே? ஹவ் டு யு பீல் நவ்? நாங்க வேற வந்து உங்களைக் கஷ்டப்படுத்துறோம்" என்று ப்ரீத்தி கூறினாள்.

"அச்சிக் குட்டி! ரொம்ப வயிறு வலிக்குதா செல்லம்? கண்ணெல்லாம் கலங்கி இருக்கு? நீ ஏன் நடந்து வந்தே? நம்ம கிருத்திக் டால் பாயா வளர்ந்துட்டானே, அவனே கதவைத் திறந்து விட்டுடுவானே! என்னடா? என்றபடி அஸ்வின் மகனைத் தூக்கிக் கொண்டு மகளைத் தேடினான். இதில், 'நாங்க வந்து சிரமப்படுத்தி விட்டோம்' என்ற வார்த்தையை மட்டும் கேட்டுவிட்டு உள்ளே அமர்ந்திருந்த ஈஸ்வரி அதற்கு மேல் தன்னை அடக்கிக் கொள்ளாமல்,

"நாங்கன்னா யாரு? புதுசா ஜோடி போட்டுக்கிட்டு வந்து நாங்களாம்ல, நாங்க? என்று விறுவிறுவென்று வெளியே வந்து கேட்டார்.

ப்ரீத்திக்குப் புரியவில்லை. அஸ்வினுக்கு நன்றாக புரிந்தது. அதற்கு முன்பாக அஸ்வினியே, "இந்த ரூம்ல போய் ஃப்ரெஷ்அப் பண்ணிட்டு வாங்க அக்கா.. காபி கொடுக்கிறேன்" என்றாள். சமையலறைக்குச் செல்லும் முன்பாக அம்மாவை உள்ளே அனுப்பி, கதவை அடைத்து வெளியே வரக்கூடாது என்று சொல்லிவிட்டுத் தான் போனாள்.

தன் வருகை அங்கே ஓரிருவருக்குப் பிடிக்கவில்லை, ஹுசைன் எப்போது வருவான், சீக்கிரம் கிளம்பி விடலாம், ஒன்று ஜெயந்தியின் வீட்டுக்குப் போக வேண்டும், இல்லையென்றால் வேறு ஏதோ ஒரு ஹோட்டலுக்கு.. என்று நினைத்த ப்ரீத்தி, போனை எடுத்து, "காரிடர்ல இருந்து சில கால்ஸ் பேசிட்டு வரேன் அஸ்வின்..டோன்ட் மிஸ்டேக் மீ!" என்று வெளியே போனாள்.

"அப்பா அப்பா! இங்கே பாருங்கப்பா நிறைய ரெயினாம்.. ரிவர் மாதிரி தண்ணி போகுது" என்று கிருத்திக் டிவியைக் காட்டினான். ஊசி போட்டாங்களா, "க்ளூக்கோஸ் போட்டாங்களா" என்று அஸ்வின் மனைவியை ஆராய, "நல்ல வேளை வீட்டுக்கு வந்து சேர்ந்தீங்க" என்று அஸ்வினி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

"ஐயோ இந்த பக்கிங்க எல்லாம் எங்க இருக்குதோ தெரியலையே? ஜெயந்தி நம்பர் இருக்கா உன்கிட்ட? ஃபோனைப் போடு! இங்க தான் வரேன்னு சொல்லுச்சுங்களே!" என்று அஸ்வின் பரபரக்க,

"முதல்லேயே சொல்ல மாட்டீங்களா" எத்தனை பேர் வருகிறார்கள், உணவுக்கு எல்லாம் தயாராக இருக்கிறதா தெரியவில்லையே.. டிவியில் மழை வெள்ளம் போல் காட்டுகிறார்கள் என்று அவளுக்கு இல்லத்தரசியாக ஏகப்பட்ட கவலைகள். ஆனால் அஸ்வின் தவறாக புரிந்து கொண்டான். "அச்சச்சோ சாரி அச்சிக் குட்டி.. கிளம்பப் போகும்போதுதான் ராஜி சொன்னா.. டேய், நீயே எத்தனை நாள் தான் மாதாஜி வீட்ல வந்து ஓசி சாப்பாடு சாப்பிடுவ.. அதனால நாங்க எல்லாரும் இன்னைக்கு உங்க வீட்ல வந்து டேரா போடப் போறோம்னு சொன்னா.. பலிச்சிடும் போலவே.. இவ்வளவு மழை பெய்யுது.. ஃபீனிக்ஸ் மால்ல இருந்து இங்க வந்துடலாம்.. அதுக்கப்புறம் எப்ப வெளியே போக முடியுமோ தெரியலை" என்றான். "சரி நான் என்ன இருக்குன்னு பாக்குறேன்.. இல்லன்னா கடை அடைக்கிறதுக்கு முன்னாடி போய் வாங்கணும்"

அதற்குள், "எதுவும் திங்க்ஸ் வாங்கணுமா சொல்லு.. அபார்ட்மெண்ட் கீழே இருக்கிறோம்" என்று ஜெயந்தியே ஃபோனில் கேட்டுவிட்டாள். "தெய்வமே! கீழே இருக்கிற கடையிலிருந்து பிரட், நூடுல்ஸ், ரவை, சேமியா, வெங்காயம் தக்காளி.. என்னன்ன வாங்க முடியுமோ வாங்கிக்கோ.. சென்னையில் ஒரு மழைக்காலம் வந்தா நாம் எதெல்லாம் ஸ்டாக் பண்ணுவோம்னு என்னைவிட உனக்கு நல்லாத் தெரியுமே!"

"தெரியும் தெரியும்" என்ற ஜெயந்தி தியாகராஜனுக்கு அழைத்து, "என்னங்க ரொம்ப மழையா இருக்கே! எங்கேயும் மாட்டிக்கிட்டீங்களா? நாங்க அஸ்வின் அபார்ட்மெண்டுக்கு வந்துட்டோம்" என்று கேட்க, "நம்ம வீட்டு சைடு போக முடியாது.. ஃபுல்லா தண்ணி.. நானும் பேசாம அங்கேயே வந்துடுறேன். என் கூட அந்த புது அசிஸ்டன்ட் பையன், அவனும் வர்றான்" என்றார் தியாகராஜன். ஜெயந்தி ராஜியுடனும் குழந்தைகளுடனும் மேலே ஏறிப் போக ஹூசைன் ஏர்போர்ட்டுக்கு வந்திருந்தார்.

தியாகராஜனும் அசிஸ்டன்டும் வருகிறார்கள் என்று ஜெயந்தி வந்தவள் சொல்ல, "அப்ப எல்லாரும் இங்கே தான் இருப்பீங்களா? நான் நினைச்சதை நடத்திடலாம்" என்று வில்லத்தனமாக சொடக்கு போட்டான் அஸ்வின். "என்னடா சொல்ற பக்கி?" என்று ராஜி கேட்க, அஸ்வினி முன்னாள் வைத்து இப்படி எல்லாம் சொல்லாதே என்று சொல்வதற்காக அவளை நிமிண்டினாள் ஜெயந்தி. "எல்லாம் எனக்குத் தெரியும்.. சும்மா இரு!" என்று ரகசியமாகச் சொன்ன ராஜி, "என்ன பெரிய திட்டம் போடுறே?" என்றாள் அஸ்வினிடம்.

"ப்ரீத்தி நமக்கெல்லாம் பெரிய ட்ரீட் வைக்கணும்னு கேட்டேன்.. இப்ப மழை பெய்யுதா.. குறைஞ்சது நாலு நாளைக்கு எங்கேயும் வெளியே போக முடியாது.. அதனால நான் என்ன பண்றேன்.. பிரெஷ்கட்ஸ் யாராவது சிக்கன், மட்டன் டோர் டெலிவரி பண்றாங்களான்னு கேக்குறேன்.. நீங்க எல்லாரும் சேர்ந்து சமைச்சு கிராண்டா ஒரு சாப்பாடு போடுங்க பார்ப்போம்" என்றான் அஸ்வின்.

இதையெல்லாம் அரைகுறையாக காதில் வாங்கிய ஈஸ்வரிக்கு அங்கு இருப்பே கொள்ளவில்லை. 'எல்லாரும் கும்பலா வந்திருக்காங்க என்னவா இருக்கும்' என்று வெளியே எழுந்து வர முயன்றார். அம்மா எங்கே என்று சரியாக ஜெயந்தி அஸ்வினியிடம் கேட்க, "அம்மாவுக்குத் தலைவலி.. மாத்திரை போட்டுட்டுத் தூங்குறாங்க" என்று கூறிவிட்டாள் அஸ்வினி. 'என் பொண்டாட்டிக்கு எம்புட்டு சாமர்த்தியம்?' என்பதாக மூக்கின் மேல் விரலை வைத்தான் அஸ்வின்.

"அவ ட்ரீட் கொடுக்கிறது இருக்கட்டும்.. நீ புது டீல் எல்லாம் சைன் பண்ணி இருக்கியாமே.. அதுக்கு எப்ப கொடுக்கப் போற?" என்றாள் ராஜி.

இன்னும் அஸ்வினியிடம் அந்த விஷயத்தைச் சொல்லியிருக்கவில்லை. சிலபல பரிசுகளுடன் ரகசியமாகச் சொல்லலாம் என்றிருக்க, தேங்காய் உடைப்பது போல் இப்படி சட்டென்று சொன்னதால் திருவென்று விழித்தான் அஸ்வின். இது என்ன என்று யோசித்த அஸ்வினிக்கு கண்ணீர் வரப் பார்க்க, கிச்சனுக்குள் போக முயன்றாள்.

"அச்சோ! அச்சிக் குட்டி! இங்கே கேளுடி!" என்றவன், "அன்னைக்கு மால்ல ஞாபகம் இருக்கா.. ஒரு பாரின் காரை நான் சின்ன அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிக் குடுத்து அது ஓகே ஆயிடுச்சே.." என்று ஆரம்பித்து நடந்தவற்றையெல்லாம் கூறி, "எல்லாம் உன்னோட அதிர்ஷ்டம் தான்" என்று கூறி இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்க்காமல் அஸ்வினி தோளில் கையைப் போட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தான்.

"அடேய் அபிஷ்ட்டு.. நடு வீட்டுக்குள்ள வச்சு என்னடா இது?" என்று ராஜி கூற, "ராஜி, நம்ம வீட்ல எல்லாரும் ரிமோட் வொர்க் பண்ணலைன்னா என்ன பண்ணுவோம்.. டப்புன்னு ஒரு தட்டு தட்டுவோம் அப்புறம் ஒர்க் ஆயிடும் அதே மாதிரி ஓடாத கார்ல எண்ணை கிண்ணை போட்டிருப்பான் அஸ்வின். வண்டி ஓடியிருக்கும்.. குருவி உக்கார பனம்பழம் விழுந்த கதையா அதை வச்சி இவனுக்கு பெரிய ஆஃபர் கிடைச்சிருக்கு.. பந்தா பண்ணிட்டு இருக்கான்" என்றாள் ஜெயந்தி.

அதற்கு மேல் உள்ளே அமர்ந்திருக்க முடியாது ஈஸ்வரி வெளியே வந்து, "என்ன என்னல்லாமோ சொல்றீங்க.. எங்க குடும்பத்துக்குத் தெரியாதது உங்களுக்கு எப்படித் தெரியும்? அவனுக்கு பொண்டாட்டி இவளா, இல்லை நீங்களா?" என்று எல்லாரையும் பார்த்து கத்தினார். அப்போதுதான் உள்ளே வந்திருந்த ப்ரீத்தி அதிர்ச்சியாகி நின்றாள்.

"ஒன்ணுக்கு மூணு பேர்.. ஐயோ ஐயோ! என் மக என்ன செய்வா? அவ வாழ்க்கையே போச்சு" என்று தலையில் அடித்து அழுதார் ஈஸ்வரி. அந்த சிறிய வீட்டை சுற்றிப் பார்க்க ஆரம்பித்திருந்த குழந்தைகள் எட்டிப் பார்த்தனர். சாய்பிரகாஷுக்கும் சின்ட்ரெல்லாவுக்கும் கொஞ்சம் விவரம் தெரியும். வைதேகிக்கு இது ரொம்பவும் புதிது.

அம்மா கண்ணைக் காட்டியவுடன் மற்றவர்களைக் கூட்டிக் கொண்டு வெளியில் சென்று விட்டான் சாய். "அஸ்வின்! நீ பசங்களைப் போய் என்னன்னு பாரு.. நாங்க இவங்களை டீல் பண்ணிக்கிறோம்" என்றாள் ராஜி. தன் வாழ்வின் மோசமான நாள் வந்துவிட்டது என்று பயந்து நின்றான் அஸ்வின் ஆணி அடித்தாற்போல். அவனை ஒரு உலுக்கு உலுக்கிய ஜெயந்தி, "என் வீட்டுக்காரரும் இங்க தான் வராரு.. எல்லாரும் இங்கே தங்க முடியாது.. இந்த அப்பார்ட்மெண்ட்லேயே வேற வீடு காலியா இருக்குன்னு சொன்னியே.. அதோட சாவி ஒண்ணு ரெண்டு நாளைக்கு கிடைக்குமான்னு பாரு.. நாங்க விசாரிச்ச வரைக்கும் நாளைக்கு சாயங்காலம் வரைக்கும் மழை இருக்கு" என்றாள்.

"இதுக்குத்தான் மாதாஜி வேணும்கிறது.. எப்படி எப்பவோ நான் சொன்னதை வச்சுக்கிட்டு நச்சுன்னு பாயிண்ட் புடிச்சா பாத்தியா?" என்று அஸ்வின் தன்னை உடனேயே மீட்டுக் கொண்டான். 'வாயை மூடு கிளம்பு' என்று சைகை செய்தாள் ராஜி.

அஸ்வின் போனவுடன், "பாத்தியா பாத்தியா? எனக்கு முன்னாடியே என் மாப்பிள்ளையை மிரட்டுறீங்க? ஏதோ ஆஸ்பத்திரியில் இருக்கும்போது உதவி பண்ணிட்டோம் அப்படிங்கறதுக்காக அவ்வளவு உரிமை எடுத்துக்குவியா நீ?" என்று ஜெயந்தியிடம் நியாயம் கேட்டார்.

ஜெயந்தி, "அதில்லம்மா.." என்று ஏதோ சமாதானமாக சொல்ல வந்தாள்.

ராஜி, "நீ வாழ்க்கையில் பேசினதெல்லாம் போதும் ஜெயந்தி.. எல்லாத்தையும் சமாளிச்சு, சமாதானம் செஞ்சு.. யூ மஸ்ட் பீ டயர்ட்.. இன்னிக்கி என்னோட டர்ன்" என்றாள்.

"அம்மா! தப்போ ரைட்டோ ஜெயந்தி ஒரு வார்த்தை இன்னைக்கு சொன்னா கேட்டீங்களா.. ஒரு சொட்டு எண்ணை ஊத்துனா எப்படிப்பட்ட வண்டியானாலுலும் ஓடிடும்.. அதான் ஃபேமிலி லைப்.. அப்பப்ப எண்ணை போடணும். இப்ப வீட்டுல கதவுல சத்தம் கேட்குது அப்படின்னா அதை கவனிக்கிற யாரா இருந்தாலும் ஒரு எண்ணை பாட்டில் எடுத்து ஒரு சொட்டு உள்ளே போடுறீங்க இல்லையா? நான் தான் செய்யணும், நீ தான் செய்யணும்னே சொல்றதில்லையே.. அது மாதிரி எப்ப வேணா யார் வேணா இறங்கி வரலாம்.. அஸ்வின் பல வருஷமா இந்த குடும்ப வண்டியை ஓட்டுறதுக்கு எண்ணை ஊத்தியிருக்கான்.. உங்க பொண்ணு இப்பதான் அந்த ஆங்கிள்ல திங்க் பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.. நீங்க இதுவரை என்ன செஞ்சிருக்கீங்க?" என்று நேரடியாக முகத்தைப் பார்த்துக் கேட்டாள்.

"நான் நான்.." என்று ஈஸ்வரி இழுக்க,

"உங்களை இப்பதான் முதல்ல பார்க்கிறேன்.. இருந்தாலும் ஒரு கெஸ்ல சொல்றேன். நீங்க என்ன டைப் தெரியுமா? யாராவது எண்ணெய் ஊத்த வந்தாலும் அதைப் பிடுங்கித் தூர போட்டுடுவீங்க.. ஜெயந்தி கிட்ட இருந்து நான் கத்துக்கிட்ட ஒரு விஷயத்தை சொல்கிறேன். இதெல்லாம் ஒரு விதமான சைக்காலஜி. ப்ரொஜக்ஷன்னு (Projection) சொல்லுவாங்க. தன் மேல உள்ள குற்றத்தை மத்தவங்க மேல போட்டு தப்பிச்சுக்கிறது. உங்களுக்குத் தெரியும், குருவிக் கூடு மாதிரி இருக்க வேண்டிய இந்தக் குடும்பம், இப்படி திசைக்கு ஒண்ணா இருக்கிறதுக்கு நீங்க தான் காரணம்.. நான் உட்பட வர்றவங்க போறவங்க எல்லாத்தையும் ப்ளேம் பண்ணிட்டு இருக்கீங்க" என்றாள் ராஜி.

"டீ! சும்மா இரு" என்று ஜெயந்தி கூற,

"நீ சும்மா இருன்னு சொன்னேன்.. உங்களோட பாஸ்ட் பத்தி அஸ்வின் சொல்லிருக்கான். உடனே முறைக்க வேண்டாம்.. தப்பா எதுவும் சொல்லலை. அவ்வளவு மைல்டா தான் சொல்லுவான். உங்களுக்காக பரிதாபம் கூட படுவான்.. நீங்க பெரிய செலவாளி, உங்க குடும்ப வண்டி ஒழுங்கா ஓடணும்ங்கிறதுக்காக பொறுப்பா இருக்குற ஏழை வீட்டுப் பையனை உங்களுக்குக் கல்யாணம் பண்ணி, பொறுப்புகளை அவர் கையில கொடுத்தாங்க. அதுல இருந்து உங்களுக்கு ஒரு இன்செக்யூரிட்டி. உங்களை மாதிரியே பிள்ளைகளை வளர்த்தீங்க.. ஒரு கட்டத்துல ஒரு பொண்ணு அதைப் புரிஞ்சுகிட்டு உங்கள விட்டு பிரிஞ்சிட்டாங்க. அதுவும் உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். இப்ப, கூட இருந்துக்கிட்டே இந்தப் பொண்ணு வாழ்க்கையில குழி பறிக்கப் பாக்குறீங்களா?" என்க,

"அக்கா.." என்றாள் அஸ்வினி.

"எல்லாரும் சும்மா இருக்கணும்னு சொன்னேன்.. எடுப்பார் கைப் பிள்ளையா சொந்த புத்தி இல்லாம இருந்துகிட்டு இப்ப பேசவர்றியா நீ? பேசி முடிச்ச அப்புறம் என்னை அடிக்கக் கூட செஞ்சுக்கோ. ஆனா என் பேச்சுல இருக்கிற நியாயம் புரியணும். ஜெயந்தியைப் பாருங்க.. நாங்க எல்லாரும் ஏன் அவளைக் கொண்டாடுகிறோம்னு அவளுக்கே தெரியாது.. ஆனா அத்தனை பேருக்காகவும் அட்ஜஸ்ட் பண்ணுவா. ஒரு இடத்தில் சந்தோஷம் மட்டுமே இருக்கணும்கிறதுக்காக என்ன வேணா செய்வா. அவ கஷ்டப்பட்டப்ப என்னால கூட இருக்க முடியலையேன்னு என்மேலேயே அவ்வளவு வெறுப்பு எனக்கு.. அவளை விடுங்க.. என்னை எடுத்துக்கோங்க, என் வாழ்க்கையில செஞ்சா செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிச்சேன்.. நான் எவனையோ லவ் பண்ணி ஏமாந்ததா ரூமர் வந்துச்சு. அந்த வதந்தி காதுல விழாத மனுஷனைப் பார்த்து எனக்கு கட்டி வச்சாங்க.. எங்கே அந்த விஷயம் அவர் காதுல என்னிக்காவது விழுந்திருமோன்னு நான் பயந்து பயந்து சாகுறேன்.. அவ்வளவு டெரர் நானு.. ராஜின்னா காலேஜ்ல, ஊர்ல எல்லாரும் என் வாய்க்கு பயப்படுவாங்க.. இப்ப மச்சான்கிற பேச்சுக்கு மறுபேச்சு பேசமாட்டேன் நான் தெரியுமா? கேட்டுப் பாருங்க" என்க,

ஜெயந்தி வாயை மூடி வெளியே தெரியாமல் சிரித்தாள். "ப்ரீத்தியோட கதை தெரியுமா உங்களுக்கு? அரைகுறையாத் தெரிஞ்சு வெச்சிட்டு அதுலயும் குற்றம் தான் கண்டுபிடிச்சு இருப்பீங்க.. அவ எவ்வளவு பெரிய போராளி. அடுத்து புது வாழ்க்கையில காலடி எடுத்து வைக்கப் போறா. இப்பவாவது நல்லா இருன்னு அவளை வாழ்த்த வேண்டாம், ஏதாவது பேசி அவ கான்ஃபிடன்ஸை உடைக்காம இருங்க.. அது போதும்.. இவ்வளவு நேரம் டயலாக் பேசியிருக்கேனே அஸ்வினி? ஒரு ஜூஸ் கீஸ் கொடுக்க மாட்டியா?" என்று ராஜி கேட்க, அஸ்வினி எழுந்து உள்ளே போனாள்

அவள் நடையில் தன்னைப் போல் ஒரு தெளிவு வந்திருந்தது. "ஈஸ்வரி அம்மா! பக்கம் பக்கமா டயலாக் பேசினதனால நீங்க மாறிடுவீங்கன்னு நானும் நினைக்கல.. மாறின மாதிரி நடிக்கவாவது செய்யுங்க.. இல்லையா, நீங்க வெளியில போற நேரம் நானே உங்களை ஆள் வச்சுக் கடத்தி ஏதாவது முதியோர் இல்லத்துல போய் சேர்த்துடுவேன், மனநலம் சரியில்லாதவங்கன்னு சொல்லிடுவேன். எனக்காக, என் நண்பன் என்கிற போர்வையிலே எங்களை ஏமாத்தின ராஜ்குமாரை தேடி தெருத்தெருவா அலைஞ்சிருக்கான் அஸ்வின். உங்களுக்காக இன்னும் எல்லாமே பண்ணி இருக்கான். ஏதோ பெருசா சந்தேகப் பட்டீங்களாமே? பாஸ்புக், இன்சூரன்ஸ் பேப்பர் எல்லாமே அஸ்வினியைத் தான் நாமினியா போட்டுருக்கான். இந்த வீட்டு வாடகைலயிருந்து, வேலைக்காரி சம்பளத்தில் இருந்து, பலசரக்கு வரை அவன் தான் பார்த்துக்கிறான். பெத்த அம்மாவுக்குக் கூட அஞ்சு பைசா கொடுக்கிறது இல்லை.. அவன் காசுல சாப்பிட்டுட்டு எப்படி அவனையே பேச முடியுது உங்களால?" அப்படியே ஈஸ்வரியின் அருகில் போய் அவருக்கு மட்டும் கேட்குமாறு, "அப்படியே உங்க மருமகன் மன்மதக் குஞ்சை கட்டிக்கிடணும்னு நெனைச்சா காலேஜ் அப்பவே ரெண்டு தட்டு தட்டி கட்றா தாலியன்னு சொன்னா கட்டிருப்பான்" என்க அதிர்ந்து விழித்தார் ஈஸ்வரி. அவள் முடித்த போது அஸ்வினி மாதுளை ஜூஸுடன் வந்திருந்தாள். பழத்தைச் சாறெடுத்து அந்த சக்கைகளை தூரப் போடும் பொழுது தன் மனதில் உள்ள அழுக்குகளை எல்லாம் அப்படியே எரிந்திருந்தாள்.

"தேங்க்ஸ்!" என்று அதை மடமடவென்று வாங்கி அருந்திய ராஜி அமர்ந்த நேரம், "அம்மா! அப்பா காலிங்!" என்று ஃபோனைக் கொண்டு வந்து தந்தான் பிருத்வி. 'படார்' என்று அட்டென்ஷனில் நின்றாள் ராஜி. "மச்சான்! ஆமாங்க மச்சான்! மழை தாங்க மச்சான்! ஃப்ரெண்ட் வீட்டுல பத்திரமா இருக்கோம்ங்க மச்சான்.. ரங்கநாதன் ஸ்ட்ரீட் தான் போக முடியலங்க மச்சான். நாளைக்கு ஜெயந்தி கூட போறதா இருந்தேன். மழை வந்துருச்சு"

இந்த திடீர் அவதார மாற்றத்தில் அஸ்வினி உட்பட எல்லாரும் சிரித்தனர். ஈஸ்வரிக்கும் கூட தன்னை மீறி உதடுகள் லேசான புன்னகையில் விரிந்தன. அவள் கடைசியாகப் பேசிய வாசகத்தில், "என்ன ரங்கநாதன் ஸ்ட்ரீட்டா? மறுபடியுமா?" என்று ஜெயந்தி மட்டும் தலையில் கையை வைத்துக்கொண்டு அமர, புரிந்தவர்கள் எல்லாரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

தியாகராஜனை அழைத்து வந்தான் அஸ்வின். காற்றில் சூழ்ந்திருந்த போர் மேகங்கள் விலகி விட்டது மற்றவர்கள் முகத்தை பார்த்தவுடன் அவனுக்குத் தெரிந்தது. "பாத்தியா மாதாஜி! நமக்கு இன்னொரு வீடு ரெடியாயிடுச்சு.. குரு வந்தாச்சு.. ஹுசைன் இதோ பக்கத்துல வந்துட்டாராம்.. கூடவே ரெண்டு வேண்டாத விருந்தாளிகளும் இருக்காங்க.. அந்த பிஹைண்ட் டோர்ஸ் ரிப்போட்டர் இருக்கானே ரித்தீஷ்? அவனும் இங்கே மழையில மாட்டிக்கிட்டான். இந்த குரு வேற அந்த முந்திரிக்கொட்டை அசிஸ்டன்ட் கூட்டிட்டு வந்திருக்கார். இங்கே வந்து தங்கவா, தங்கிட்டு காலையில போகவா ப்ளீஸ்ன்னு கேக்கிறானுங்க.. எவ்வளவு சேட்டை இருக்கணும் அவனுங்களுக்கு? முதல் சீன்ல ஆஜராயிட்டு, இப்ப திருப்பியும் கடைசி சீன்ல வந்து இம்சை கொடுக்கிறாங்க" என்றான்.

இதையும் ஜெயந்தியிடம்தானே முதலில் போய் சொல்லுகிறான் என்று ஈஸ்வரிக்கும் அஸ்வினிக்கும் மனதின் ஓரத்தில் தோன்றத்தான் செய்தது. அதுவரை அமைதியாக இருந்த ப்ரீத்தி, "ஒருவேளை அந்த நியூஸ் போட்டதுனால அவங்களை அறியாமலே இவங்க ரெண்டு பேரும் நம்ம லைஃப்க்கு ஆயில் போட்டு இருக்காங்களோ? என்றாள்.

இவர்கள் இவ்வளவு நேரம் பேசிய எண்ணெய்த் தத்துவம் பற்றித் தெரியாததால், "என்ன ஆயில்?" என்று ஆண்கள் விழிக்க, "ஆமா இவனுங்க ஆயில் போட்டுட்டாலும்..
அவனுங்க மேல ஒரு டின் மண்ணெண்ணெயை ஊத்திக் கொளுத்துங்க.. இந்த வெள்ளத்திலேயே சாம்பலைக் கரைச்சிடலாம்" என்றாள் ராஜி.

"ஏதோ மொக்கை காமெடி சொல்றியா ராஜி? புரியிற மாதிரி சொல்லேன்" என்று அஸ்வின் கேட்க, மீண்டும் சிரித்தார்கள். அஸ்வினி எதுவும் பேசாமல் அஸ்வின் அருகில் போய் கைகளைக் கோர்த்துக்கொண்டு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

"ஓய் அஸ்வினி! என்ன ரொமான்ஸா? எத்தனை வருஷத்துப் பஞ்சாயத்தைப் பேசித் தீத்து வச்சிருக்கேன்.. பசி எடுக்குது. இப்ப போய் லவ் பண்ணிக்கிட்டு நிக்கிற. வா போய் சமைக்கிற வேலையைப் பார்ப்போம். இவங்களுக்கும் ஆளுக்கு ஒரு வேலையைக் கொடு. அப்புறம் ரெண்டு நாளைக்கு உங்க ரெண்டு பேத்துக்கும் டச்சிங் டச்சிங் கிடையாது. அஸ்வின் அந்தப் புது அப்பார்ட்மெண்ட்க்கு போயிடுவான். நீ என்கூட தான் படுக்கணும். அதுதான் உனக்கு தண்டனை" என்று அஸ்வினியைக் கைப்பிடித்து இழுத்தாள் ராஜி.

"ரொம்ப ஓவரா போற டி நீ?" என்று ஜெயந்தி கூற, "இன்னைக்கு நான் வச்சது தான் சட்டம்" என்றாள் ராஜி. வான் மேகங்கள் இன்னும் கொட்டித் தீர்த்தபடி இருக்க, போர் மேகங்கள் முழுவதுமாக விலகி நின்றன.



"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை"

(ஒரு குட்டி எபிலாக் விரைவில்..)
 
Super akka:) எண்ணெய்ய கொட்டாம துளி துளியா ooththunalum, நல்லா எரியுது கார்த்திகை விளக்கு :) எங்கள் மனதில் இந்த கதையும் கதா பாத்திரங்களும்:) as always asaththittinga:) நட்பு and நட்பு only:) super:)
 

Kothaisuresh

Well-known member
சூப்பர் மா வாழ்க்கை என்னும் சக்கரமும் ஸ்மூத்தா ஓட இந்த மாதிரி துளி எண்ணெய் அப்பப்போ அவசியம் தான். 👌👌👌👌
 
Top