கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துளி எண்ணெய் 2

Akhilanda bharati

Moderator
Staff member
2. சொல்ல மறந்த கதை

கட்டிலுக்குக் கீழே பாய் விரித்து அதில் குழந்தைகள் இருவரும் படுத்திருக்க, அஸ்வின் அவர்களைப் பார்த்து நிறைவாய்ப் புன்னகைத்தபடி அவர்கள் அருகில் ஒருக்களித்து சாய்ந்தான். இருவரும் படுக்கையை நனைக்கிறார்கள் என்பதால் கீழேதான் படுக்கப் பழக்கியிருந்தாள் அவன் மனைவி அஸ்வினி.

தூங்கும் முன் செல்போனை அணைத்து வைக்கப் போனவனுக்கு ஸ்கிரீன்சேவராக இருந்த புகைப்படம் கண்ணில் தென்பட்டது. விமானத்திலிருந்து இறங்கி ஜெயந்தியின் குடும்பத்தையும் ப்ரீத்தியையும் பார்த்துவிட்டு ஹோட்டலை விட்டு வெளியே வருகையில், "பிள்ளைகளுக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கி இருக்கியாடா?" என்று கேட்டாள்.

"ஐயையோ! இல்லையே!" என்று அஸ்வின் நாக்கைக் கடிக்க, "நீ எல்லாம் என்னைக்குத் திருந்தி என்னைக்கு உருப்படப் போறே" என்று கடிந்த ஜெயந்தி, ஹோட்டலுக்குப் பக்கவாட்டில் இருந்த ஒரு சிறிய சூப்பர் மார்க்கெட்டுக்கு அவனை இழுத்துக்கொண்டு போனாள்.

"டெல்லியில இருந்து வர்றவன் பொண்டாட்டிக்கு ஸ்பெஷலா ஒரு டிரஸ், குழந்தைகளுக்கு ஏதாவது டாய்ஸ் அப்படி வாங்கிட்டு வரணும்னு தோண வேண்டாம்?" கூடைக்குள் சிறிதும் பெரிதுமாய் நான்கைந்து விளையாட்டுப் பொருட்களை எடுத்துப் போட்டாள், ஒரு அரை கிலோ பாதாம் மற்றும் அழகாக பேக் செய்யப்பட்டிருந்த வறுத்த முந்திரி ஒரு பாக்கெட்டையும் எடுத்து கூடையில் போட்டவள் பில் போடும் இடத்திற்கு வந்தாள். அங்கும் பரபரவென வண்ண வண்ணப் பொருட்கள் எதையோ எடுத்து கூடைக்குள் போட்டாள்.

"மாதாஜி! என்ன இது? இவ்வளவு?!" என்று அஸ்வின் பதற,

"ஒன்னும் பயப்படாதே.. மொத்தமே ஆயிரம் ரூபாய்க்குள்ள தான் வாங்கி இருக்கேன்.. உன் சொத்து எதுவும் குறைஞ்சுடாது" என்றவள் அங்கு நின்று கொண்டிருந்த வைதேகிக்கும், சின்ட்ரெல்லாவுக்கும் ஆளுக்கு ஒரு பபிள் டப்பாவைக் கொடுத்தாள்.

சின்ட்ரெல்லா, "வீட்ல போய் நான் தான் பபிள் விடுவேன்.. டேய் சாய்! நீ கேக்கக் கூடாது" என்று முதலிலேயே அண்ணனுக்குக் கண்டிஷன் போட்டாள்.

"அம்மா! ஷால் ஐ ட்ரை ஒன்ஸ்?" என்று குரலில் சந்தோஷம் தொனிக்க அம்மாவைக் கேட்டாள் வைதேகி. "டூ இட் ஒன்லி ஒன்ஸ்.. அப்புறமா ரூமுக்குப் போய் நிறைய பபிள் விடலாம்.. இங்கே மத்தவங்களுக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கும்" என்றாள் பிரீத்தி.

"இந்த பத்து ரூபாய் பபிள் டப்பாவால எவ்வளவு சந்தோஷம் பாரேன் இந்தக் குழந்தை முகத்துல?" என்ற ஜெயந்தி, "அஸ்வின், அதுக்குத் தான் டா சொல்றேன்.. அப்பாவைப் பாக்குற சந்தோஷம் ஒரு ஸ்பூன் சர்க்கரை தூக்கலா இருக்கணும்னா இப்படி குட்டிக் குட்டியா கிஃப்ட் வாங்கிட்டு போகணும்.. இதெல்லாம் உனக்கு எங்கே தோணப் போகுது?" என்று அதற்கான பணத்தை ஜெயந்தி செலுத்தப் போக, இப்போது தியாகராஜன் தலையிட்டார்.

"ஜெய்யூ.. போதும். நீ கொடுக்காதே.. அவன் கொடுப்பான்" என்று அவர் தீர்ப்பு சொன்னது போல் சொல்ல, மனமே இல்லாமல் அஸ்வின் பில்லுக்கான பணத்தை கட்டிவிட்டு வந்தான்.

"என்ன குரு? ஏதோ நான் யாருக்குமே எதுவும் வாங்கித் தராத மாதிரி சொல்லிட்டீங்க.. நான் சாக்லேட் வாங்கிட்டு வந்தேன் தெரியுமா?" என்றவாறு சாய் பிரகாஷைப் பார்க்க,

"எது அந்த இரண்டு ரூபா மஞ்ச் சாக்லேட்.. அது யாரோ சில்லறை இல்லன்னு கொடுத்தது தானே? நீங்களா வாங்கலைல்ல? பாருங்கம்மா! அந்த நாலு சாக்லேட் தந்ததை இன்னும் நாலு வருஷத்துக்கு சொல்லிக் காட்டுவார்.."

"சரி சரி விடு!" என்ற ஜெயந்தி, அந்த பணம் செலுத்திய ரசீதை மேஜையில் விரித்து வைத்து அஸ்வினின் மொபைலை வாங்கி ஃபோட்டோ எடுத்தாள்.

"சாய் இதை மாமா செல்லுல ஸ்கிரீன் சேவரா வச்சுவிடு.. அப்பதான் அப்பப்ப பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கிக் கொடுக்கணும்னு மரமண்டைக்கு உரைக்கும்" என்றாள்.

பிரகாஷ் கடகடவென்று அதை ஸ்கிரீன் சேவராக வைத்துவிட்டு, "பாருங்கம்மா! மாமா கேலரியில் ரொம்ப கொஞ்சமா தான் ஃபோட்டோ வச்சிருக்காங்க.. அதுவும் ஆன்ட்டி ஃபோட்டோ, குட்டீஸ் ஃபோட்டோ மட்டும் தான். டெல்லில எடுத்தது எதுவும் இல்லை.. நம்ப யார் ஃபோட்டோவும் இல்லை" என்றான்.

"அதெல்லாம் பார்க்கக் கூடாது டா.. சொன்ன வேலையை மட்டும் செய்" என்று சொல்லி அந்த மொபைலை மீண்டும் வாங்கி அஸ்வினிடம் தந்தாள் ஜெயந்தி. கூடவே, "ஏண்டா இந்த ஃபோன்ல லாக் வைக்கிற பழக்கம் எல்லாம் இல்லையா?" என்று அஸ்வினைக் கேட்க,

"சேச்சே! அந்தப் பழக்கமே கிடையாது.. என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் மா!" என்றான் அஸ்வின்.

"இருந்துட்டுப் போவுது.. ஆனால் சில விஷயங்கள்ல பிரைவசி வேணும்.. பெர்சனல் ஸ்பேஸ்னு ஒண்ணு ஒவ்வொருத்தருக்கும் இருக்கணும்.. முதல் வேலையாக ஒரு ஸ்க்ரீன் லாக்கைப் போடு!" என்று கூறிவிட்டு காருக்கு நடந்தாள் ஜெயந்தி.

தியாகராஜன் கொஞ்சம் பின் தங்கி அஸ்வினின் தோளில் கை போட்டு, "ஜெய்யூ சொல்றது கரெக்டு தான் டா.. கொஞ்சம் பர்சனல் லைஃபுக்கும் ஃபேமிலிக்கும் அதிக டைம் ஒதுக்கு.. போன மாதிரியே திரும்பி வராம அடுத்து ஏதாவது நல்லபடியா முன்னேறப் பாரு.. அஸ்வினியை தனியா கூட்டிட்டுப் போய்ப் பேசு.. பேசுறது ஒத்து வரலையா.. கால்ல விழு.. அதுக்கும் ஒத்து வரலையா கட்டிப்பிடிச்சு கிஸ் அடிச்சுடு" என்றார் தியாகராஜன்.

"குரு! என்ன நீங்க.. இவ்வளவு நாள் சண்டை போட்டுட்டு இப்பப் போய் கட்டிப் புடிச்சா நல்லா இருக்குமா?" என்று அஸ்வின் கேட்க,

"டேய் டேய்! நான் எத்தனை பாயிண்ட் சொன்னேன்.. அதுல கடைசியாக கட்டிப் பிடிக்கிறதை மட்டும் பிடிச்சுக்கிட்ட.. நீ நிறைய இடத்துக்குப் போய் இருக்க.. நிறைய மனுஷங்களைப் பார்த்திருக்க.. யூ நோ பெட்டர் தேன் மீ.. பொண்டாட்டி சொல்ற பேச்ச கேளு. நல்லாவே இருப்பே.. விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போனதில்லை. தெரியுமா?" என்றார் தியாகராஜன். பேச்சுவாக்கில் அவரது பார்வை ஒரு நொடிக்கும் குறைவான நேரம் ஜெயந்தியைத் தொட்டு மீண்டது.

அவரது தொப்பையில் குத்திய அஸ்வின், "தெரியுது தெரியுது.. விட்டுக் கொடுக்குறதும் மாதாஜி சொல்றதை அப்படியே கேக்குறதும் நல்ல பலனைத் தந்திருக்கு.. தொந்தியும் தொப்பையுமா குடியும் குடித்தனமுமா சந்தோஷமா இருக்கீங்கன்னு தெரியுது.. டிரை பண்ணிப் பார்க்கிறேன்!" என்று கூறி விட்டு விடை பெற்றிருந்தான்.

அவர்கள் அனைவரும் கூறியபடியே அந்த சின்னச் சின்ன பொருட்களால் அஸ்வினின் குழந்தைகள் மகிழ்ந்து தான் போயிருந்தார்கள். அப்பாவைப் பார்த்த சந்தோஷம் 50% என்றால் புதிய விளையாட்டு பொருட்கள் கிடைத்த மகிழ்ச்சி இன்னொரு 50%. பரிசுப் பொருட்களிடம் குழந்தைகள் காட்டிய பாசத்தைப் பார்த்தனுக்குக் கொஞ்சமே கொஞ்சம் பொறாமையாக இருந்தது. இருந்தாலும் சிறு குழந்தைகள் தானே, எப்போதாவது வந்து போகிற அப்பாவுக்கு இவ்வளவு வரவேற்பு பெரிதுதான் என்று நினைத்து திருப்திப்பட்டுக் கொண்டான்.

பாதாம் முந்திரியைக் கண்டவுடன் மாமியாரின் முகமும், 'பரவாயில்லை இதையாவது உருப்படியா வாங்கிட்டு வந்தியே' என்பதுபோன்ற பாவனையைக் காட்டியது. அஸ்வினியின் முகத்தில் பெரிதாக மகிழ்ச்சி இல்லை. வெறுப்பையும் அவள் வெளிப்படையாகக் காட்டவில்லை என்பது ஆறுதலான விஷயம். அனைத்தையும் நினைத்து பெருமூச்சு விட்டுக் கொண்டான். அப்படியே ஸ்கிரீன் சேவரில் இருந்த பில்லின் பொருட்களை ஒவ்வொன்றாக பார்வையிட ஆரம்பித்தான்.

எந்தப் பொருள் வாங்கி வந்தாலும் ரசீதை வைத்துக்கொண்டு அதை சரி பார்ப்பதும் மனம் கம்ப்யூட்டர் பில்லைக் கூட தன்போக்கில் கணக்கிட்டு சரி பார்த்துக் கொள்வதும் அவனுக்கு சிறுவயதுப் பழக்கம். 'கம்ப்யூட்டருக்கே கரெக்ஷன் போடறவன் வந்துட்டாண்டா' என்பான் ராஜ்குமார். நண்பர்களாக சேர்ந்து ஹோட்டலுக்குப் போகும்போது கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி ஏதாவது ஐட்டத்தை அதிகமாக பில்லில் போட்டிருக்கிறார்களா, தொகை சரியாக வருகிறதா என்று சரிபார்ப்பான் நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து கலாய்த்தாலும் கூட ஓரிருமுறை ஹோட்டல் காரர்கள் விட்டிருக்கும் தவறைக் கண்டுபிடித்து கேட்டிருக்கிறான்.

இன்று வாங்கியதில் கடைசியாக சேர்க்கப்பட்டிருந்த பத்து ரூபாய் பபிள் டப்பாதான் 'ஸ்டார் ஆப் த டே' என்று சொல்லவேண்டும். ஆயிரம் ரூபாய்ப் பொருளில் வராத சந்தோஷத்தை அந்த பத்து ரூபாய் டப்பா கொடுத்திருந்தது. காரும், ஏபிசிடி அடுக்கும் பலகையும் ஒரு மூலைக்குப் போயிருக்க, வண்ண வண்ண சோப் குமிழிகளே வீட்டை நிறைத்தன. குழந்தைகள் நேரத்தையும் களவாடின. அஸ்வினியும் இப்படித்தானே சின்ன சின்ன பொருளுக்கும் மகிழ்ச்சியடைகிறவளாக இருந்தாள். அவளுக்கு பிடித்தமான லேவண்டர் நிற சுடிதாருக்கு இவன் பொருத்தமான ஒரு ஹேர் பேண்டை வாங்கிக்கொண்டு போய்க் கொடுத்த போது எப்படி மகிழ்ந்தாள்..

திருமணத்துக்கு முன் இருவரும் கைகளைக் கோர்த்துக் கொண்டு சென்னை வீதிகளில் சுற்றித் திரிந்த போது எவ்வளவு பொருத்தமான ஜோடி என்று குறைந்தது நான்கு பேராவது திரும்பிப் பார்க்காமல் போக மாட்டார்கள். பெயரில் தொடங்கி ஜாதகம் வரை எத்தனையோ விஷயங்கள் இருவருக்குள்ளும் பொருந்தித் தான் இருந்தன. மனங்கள் மட்டும்தான் பொருந்தவில்லை. முதலில் அவையும் இணைந்திருப்பதாகத் தான் அஸ்வினுக்குத் தோன்றியது. ஆனால் அது ஒரு தோற்ற மயக்கம் என்பதைப் பின்னாளில் தெரிந்து கொண்டான்.

"என்னதான்டா பிரச்சனை உங்களுக்கு? அஸ்வின்- அஸ்வினி இப்படி ஒரு மேட்ச் கிடைக்குமா யாருக்காவது.. இதுக்குத் தானா ரெண்டு வருஷம் காத்திருந்து நூறு பொண்ணைப் பாத்து திரும்பியும் இவளையே கட்டிக்கிட்ட.. ஏதாவது செஞ்சு சரிபண்ண பாரு" என்று இவர்களது இன்னொரு தோழியான ராஜலட்சுமி நேரடியாகவே கூறுவாள்.

அவள் மட்டுமல்ல, பலரும் கேட்டுக் கேட்டு விட்டுவிட்ட கேள்விதான் அது. என்னதான் பிரச்சனை நமக்கு என்று யோசிப்பான் அஸ்வின். அவனின் பள்ளியிலும், கல்லூரியிலும், உறவுகளின் மத்தியிலும் அஸ்வினைப் பிடிக்காதவர்கள் மிகக் குறைவே. சிலர் அடிக்கடி அவனைக் கிண்டல் செய்வார்கள், அதுவும் எப்படி அவனைச் சுற்றி ஒரு கூட்டம் எப்போதும் நிற்கிறது, எப்படி அவனால் மட்டும் சிரித்துக் கொண்டே இருக்க முடிகிறது என்ற வந்த பொறாமையினால் தான்.

அந்த ஓரிருவரும் கூட அஸ்வினின் குடும்ப நிலையைத் தான் சுட்டிக்காட்டி சிரிக்க முடியும். வேறு குறைகள் அவனிடத்தில் இல்லை. "போங்கடா டேய்! எனக்கு அப்பா இல்லாததும் பணத்துக்குக் கஷ்டப்படுற குடும்பத்தில் பிறந்ததும் என்னோட தப்பா? என்னோட தப்பு ஏதாவது இருந்தா சொல்லுங்க.. அதுக்காக திட்டுங்க, அடிங்க, சிரிங்க கேட்டுக்குறேன்.. மத்தபடி என்னோட கண்ட்ரோல்லையே இல்லாத விஷயத்துக்குப் போட்டு ஏன்டா நீங்க பேசிப் பேசி டென்ஷனாகி உடம்பை கெடுத்துக்குறீங்க" என்று அவர்களையும் அசால்டாகக் கடப்பவன் அஸ்வின். அவன் மனைவியுடன் இணக்கமாக வாழவில்லை என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். Water takes the shape of the container என்பார்களே, அப்படி ஆளுக்கேற்ற வகையில் மாறும் தண்ணீர் போன்றது அஸ்வினின் குணம்.

நான்கு பிள்ளைகள், அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட்டார்.. அம்மா என்னென்னவோ வேலைகள் செய்து பிள்ளைகளை வளர்த்தார். அஸ்வின் இரண்டாவது மகன். அவனது அப்பா விட்டு விட்டுப்போன மெக்கானிக் ஷாப்பை அவனது அண்ணன் பார்த்துக்கொள்ள, அதில் தான் குடும்ப வண்டி ஓடியது. விடுமுறை நாட்களில் முழுவதுமாகவும், பள்ளி நாட்களில் காலை மாலை இருவேளைகளும் அஸ்வினும் கடையில் வேலை செய்வான். பத்தாம் வகுப்புப் படிக்கும் போதே ஒரு டூ வீலரைப் பிரித்துப் போட்டு மறுபடியும் இணைக்கத் தெரியும் அவனுக்கு. டிப்ளமோ படித்து விட்டு இன்ஜினியரிங் சேர்ந்தவன் என்பதால் கல்லூரி நேரத்திலும் பகுதி நேர வேலை செய்து வந்தான். இவனின் தேவைக்கு அண்ணன் அனுப்புவதும், அண்ணனின் தேவைக்கு அஸ்வின் பணம் அனுப்புவதும் என்று ரொம்பவே பாசமான, கட்டுக்கோப்பான குடும்பம்.

பள்ளிநாட்களில் சினிமாவுக்குப் போனேன், அரட்டையடிக்கப் போனேன், பாட்டி வீட்டில் போய் தங்கினேன் இப்படியெல்லாம் சொல்வதற்கு எந்த நினைவுகளும் அஸ்வினுக்குக் கிடையாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் உழைப்பு, படிப்பு. அதனூடே கலகலப்பு. அவன் அம்மா இன்றும் வற்றல் வடகம் போடுவது, பொடிகள் திரிப்பது, முறுக்குச் சுற்றப் போவது என்று சமையல் துறையில் தனக்குத் தெரிந்த எல்லா விதங்களிலும் பொருள் ஈட்டுபவர். அஸ்வினின் தங்கைகள் இருவருக்கும் இப்படி கட்டும் செட்டுமான வாழ்வினால் நல்லபடியாக திருமணம் செய்து கொடுத்தார்கள். அவனது இருபத்தி ஏழாவது வயதில் அண்ணனுக்கும் உறவில் பெண் அமைந்து விட்டது.

அதே 27 வயதில் அஸ்வினுக்கு அம்மா பெண் பார்க்க ஆரம்பிக்க, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்றான் அஸ்வின். "மெது மெதுவா பார்க்க ஆரம்பிப்போம்.. அமைஞ்சா முடிப்போம்" என்று அம்மா நினைத்திருக்க, வந்து சேர்ந்த முதல் வரனே அஸ்வினியுடையது.

ஜாதகம் மிகப் பிரமாதமாகப் பொருந்தியிருக்கிறது, மாப்பிள்ளையை ரொம்பவும் பிடித்துவிட்டது என்று அஸ்வினியின் அப்பா அடிக்கடி தொடர்பில் வந்தார். உடனே ஏற்றுக் கொள்ள முடியாதபடி இருந்தது அவர்களது செல்வ நிலை. அதாவது இருப்பதாக அவர்கள் காட்டிக்கொண்ட செல்வ நிலை. அஸ்வினியின் நிபந்தனைகள் பிறகு பார்க்கலாம் என்று அம்மாவையும் சொல்ல வைத்தன. தஞ்சாவூரில் ஓரளவு நல்ல வேலையும் சொந்த வீடும், மக்களுமாக இருந்த அஸ்வினை சென்னைக்கு வந்து குடியேறியே ஆகவேண்டும் என்றாள் அஸ்வினி.

"என்னால சிட்டியை விட்டுட்டு கிராமத்துக்கு எல்லாம் வந்து கஷ்டப்பட முடியாது" என்றாள். 'அடிப்பாவி எங்க ஊர் கிராமமா உனக்கு? நீ பெரிய லண்டன் ரிட்டர்ன்.. நீ எனக்கு வேண்டாம் போடி' என்று மனதால் ஒதுக்கி விட்டான். அதன் பின் அவளுக்கும் சில பல மாப்பிள்ளைகளைப் பார்த்து, இவனுக்கும் இருபதுக்கும் மேற்பட்ட சம்பந்தங்கள் வந்து அமையாமல் போய், கடைசியாக 29வது வயதில் இவன் சென்னையில் ஒரு கோர்ஸ் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் வந்தார் அஸ்வினியின் அப்பா. இந்த முறை ரொம்பவும் தளர்ந்திருந்தார்.

"உடம்புக்கு அடிக்கடி முடியாம போயிடுது தம்பி!" என்றார் சிரிப்புடன். அவர் ஒரு சின்ன வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி வந்ததாக முன்பு கூறியது அவனுக்கு நினைவுக்கு வந்தது. "நாங்களும் நிறைய மாப்பிள்ளை பார்த்தோம் தம்பி! ஒண்ணும் அமையலை.. பழைய கண்டிஷன் எல்லாம் அஸ்வினி தூக்கிப் போட்டுட்டா.. பாருங்க, எத்தனை வரன் வந்தாலும் உங்களைத் தாண்டி, உங்க ரெண்டு பேரோட பெயர் பொருத்தத்தைத் தாண்டி எனக்கு வேற எதுவும் யோசிக்கவே தோணலை.. கொஞ்சம் கன்சிடர் பண்ணிப் பாருங்களேன்" என்று அவர் கேட்டபோது, அந்தச் சூழலில் அஸ்வினுக்கு மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை.

அந்த ஓராண்டு சென்னை வாசத்தில் அவனுக்கும் கொஞ்சமே கொஞ்சம் சென்னையைப் பிடிக்க ஆரம்பித்திருந்தது. தனக்கு தன் ஊரை விட நல்ல வேலைவாய்ப்புகள் இருக்கிறது என்று தோன்ற ஆரம்பித்தது. பழைய நினைவுகளுடன் சேர்ந்து தூக்கமும் வர, மெலிதான ஒரு கொட்டாவியுடன் அஸ்வினியைப் பெண் பார்க்கப் போன நாளையும் ஒரு புன்னகையுடன் நினைவுக்குக் கொண்டு வந்தான் அஸ்வின்.

"எவளை நெனச்சு சிரிச்சுக்கிட்டு இருக்கீங்க?" என்று உரக்க ஒலித்தது அறைக்குள் வந்த அஸ்வினியின் குரல்.




கடவுள் அமைத்து வைத்த மேடை
இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னார் என்று
எழுதி வைத்தானே தேவன் அன்று
 
Last edited:
Top