4. சதுரங்க வேட்டை
"இன்னும் நீ அந்த ப்ரீத்தியைக் கூட்டிக்கிட்டே சுத்துறதை விடலையா?" என்ற கேள்வியில் சட்டென்று ஒரு மாதிரி ஆயிற்று ஜெயந்திக்கு. உண்மையில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக உற்சாகமான மனநிலையில் இருந்தாள் ஜெயந்தி. பிரியமான நண்பர்களை சந்தித்தது, நான்கைந்து இடங்களுக்குச் சென்று விட்டு வந்தது, எல்லாம் அவளுக்கு ஒரு மகிழ்வைத் தந்திருந்தன. ராஜலட்சுமி கேட்ட கேள்வியில், மகிழ்வாய்த் திரிந்த சோப்புக்குமிழி பட்டென்று உடைந்தது போல ஆனது அவளுக்கு.
இது வழக்கமாக ராஜி பேசும் விதம் தான். சட் சட் என்று பேசினாலும் அவள் கூறுவதில் நேர்மையும் நியாயமும் இருக்கும். ஆனால் இன்று என்னவோ பிடிக்கவில்லை. "சும்மா வந்திருந்தா.. மீட் பண்ணினோம்.. அவ்வளவுதான்" என்றாள் ஜெயந்தி. இவர்கள் சந்தித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களைக் கல்லூரிக் குழுவில் பதிவிட்டிருந்தாள் ப்ரீத்தி. வாட்ஸ்அப் குழு ஆரம்பித்த காலம் முதல் அவள் அதில் இருக்கிறாளா இல்லையா என்பதே நிறைய பேருக்குத் தெரியாது. சமீபமாகத் தான் மற்றவர்களுக்கு பிறந்த நாள், மணநாள் வாழ்த்து தெரிவிப்பது, தன் குழந்தையின் புகைப்படங்களை, தன் பணியிடத்து சாதனைகளைப் பதிவிடுவது என்று குழுவில் பரபரப்பாக இயங்குகிறாள்.
அதனால் தானோ என்னவோ அவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. ராஜி கூட, வாவ்.. மிஸ் யு கேர்ள்ஸ எல்லாம் பதிவிட்டிருந்தாள்.
வேறு சில விஷயங்களைப் பேசிவிட்டு அதன் பின்னும் ஏதேதோ வளவளத்துக் கொண்டிருந்தாள். அவளிடம் பேசினேன், இவள் என்ன செய்கிறாள், அவள் என்ன சொன்னாள் என்றும் முகநூலில் தான் பின்தொடரும் தன் மற்ற வகுப்புத் தோழர்கள், சீனியர்கள் ஜூனியர்கள் இப்படிக் குறைந்தது பத்து பேரைப் பற்றியாவது இருவரும் பேசியிருப்பார்கள். ஜெயந்தி பெரும்பாலான உரையாடல்களில் வெறுமனே உம் கொட்டிக் கொண்டிருந்தாள்.
"அஸ்வின் வந்திருக்கானாம்ல.. அவன் எத்தனை நாள் இருப்பான்?" என்று ராஜி கேட்க, அதுவரை சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தவள், "இன்னும் ரெண்டு நாள் இருப்பான்னு நினைக்கிறேன்" என்றாள்.
"அவனை காலாகாலத்துல படிச்சு முடிக்கச் சொல்லு.. புள்ளக் குட்டியைப் படிக்க வேண்டிய வயசுல இன்னும் எத்தனை நாள்தான் படிச்சுட்டு இருப்பான்.." என்று ராஜி கேட்க,
"கரெக்ட் தான்.. சொல்லியாச்சு. கேட்க மாட்டேங்கிறானே.. இது தான் கடைசி கோர்ஸா இருக்கும்னு நினைக்கிறேன்.. பாப்போம்" என்று கூறி உரையாடலின் இறுதிப்பகுதியை நோக்கி ஜெயந்தி நகர, "சரி உனக்கும் ஒரு பெர்சனல் லைஃப் இருக்கு.. பாத்து நடந்துக்கோ.. சும்மா எல்லாருக்கும் உதவி பண்றேன்னு இழுத்துப்போட்டு சேர்ந்து முழிச்சிட்டு இருக்காதே" என்று எப்போதும் போல ஒரு அறிவுரையுடன் முடித்தாள் ராஜலட்சுமி.
ஜெயந்தியும் ராஜிக்கு சில அறிவுரைகளைக் கூறவேண்டும் என்று நினைத்திருந்தாள். அவையெல்லாம் சட்டென்று மறந்து போயிற்று ஜெயந்திக்கு. எப்போதும் போல் இப்போதும் குற்றம் சாட்டுகிறாளே, அப்படி என்ன நான் தவறாக செய்து விட்டேன் என்று நினைத்தவள், "ஒன்னும் கஷ்டம் இல்லை.. இதெல்லாம் என் ஹஸ்பண்டுக்கு ரொட்டீன் ஒர்க்ஸ் தான்.. இப்போ அவ ப்ராப்ளம் எல்லாம் சால்வ் ஆயிடுச்சு.. அந்தப் பையனுக்கு வேற மேரேஜ் நடந்து குழந்தை கூட பிறந்தாச்சு" என்று சொல்லிவிட்டு அதற்கும் ராஜி ஏதேனும் கூறும் முன் போனை கட் செய்தாள் ஜெயந்தி.
எப்போதும் ராஜியைப் பார்ப்பதும் அவளது ஃபோன்கால்களை அட்டென்ட் செய்வதும் ஜெயந்திக்கு மகிழ்ச்சி தரக்கூடிய விஷயங்கள். கலகலப்பாகப் பேசுவாள், நிமிஷத்திற்கு நிமிஷம் ஒரு நகைச்சுவையைச் சொல்வாள். அவளுடன் இருந்தால் கொண்டாட்டம் நிச்சயம். பாதிப்பேர் அவள் இருக்கும் இடத்தில்தான் நிற்பார்கள். அப்படி ஒரு முகராசியும் வாய்த் துடுக்கும் ராஜிக்கு உண்டு. எப்படி எப்படி இருந்த இவுங்க இப்படி இப்படி ஆயிட்டாங்க என்பது போல் ராஜி ஒருவரைப் பற்றிக் கூறுகையில், "உலகமகா ஆட்டக்காரி நீ.. நீயே இப்ப வாலை சுருட்டி உட்கார்ந்திருக்கியே.. அது ஒன்றே போதாதா.. மாற்றம் ஒன்றே மாறாததுன்னு சொல்றதுக்கு" என்பாள் ஜெயந்தி.
"நானாவது வாலை சுருட்டுறதாவது.. அந்த மாதிரி நடிச்சுட்டு இருக்கேன். அப்பத்தானே குடும்ப வண்டியை ஓட்ட முடியும்.. உங்க கிட்ட பேசுற மாதிரி என் புருஷன் கிட்டயும் பேசினேன்னா தொடப்பக்கட்டை பிஞ்சிடும்" என்று கூறுவாள் ராஜி.
ராஜியினுடையது மிகவும் கட்டுக்கோப்பான குடும்பம். சுத்துப்பட்டு பதினெட்டு பட்டி கிராமங்கள்ல.. என்று கூறுவது போல் அவளது மாவட்டத்தில் பல ஊர்களில் அவளது சொந்தக்காரர்கள் தான். "வடக்கம்பட்டில தும்மல் போட்டா தெக்கம்பட்டியில சத்தம் கேக்கும்" என்பாள் ராஜி. "அது எப்படி?" என்று இவர்கள் கேட்டால்,
"ராஜி தும்மல் போட்டா அப்படின்னு எங்க வீட்டுக் கெழவி சொல்லும்.. அதை அப்படியே பக்கத்துவீட்டு பெரியம்மா நாலு பேர்ட்ட உளறும்.. அப்படியே காது மாத்தி மாத்திப் போய் நடுவுல ரெண்டு குளம், ஒரு மந்தை, ஒரு மலையைத் தாண்டி போய் காலை சாப்பாட்டுக்குள்ள சுற்று வட்டாரம் மொத்தமும் போயிரும்.. நியூஸு ஒரு ரவுண்ட் அடிச்சு அடுத்த தும்மலை நான் போடுறதுக்குள்ள, 'என்ன ராஜி? தும்மினியாம்ல அப்படின்னு இந்தப் பக்கத்து வீட்டுக்காரி என்கிட்டேயே கேப்பா.." என்று ராஜி கூறுவது அப்படியே கண்முன் அந்தக் காட்சியை நிகழ்த்திக் காட்டியது போல் இருக்கும்.
"நீ வேணா பட்டிமன்றத்துல பேசேன்.. எல்லாரும் ஜாலியா ரசிப்பாங்க" என்று கூறினால்,
*அவ்வளவுதான் நான்.. கழுத்தைத் திருகி நாய்க்கு போட்ருவார் எங்க தாத்தா.." என்பாள். யார்தான் அவர்கள் வீட்டில் கொடுமைக்காரர் என்பதை அனுமானிக்க முடியாது. ஒவ்வொரு நாளும் ஒருவரை வில்லன் ரோலில் காட்டுவாள். பின் அடுத்த நாளே அவர்களை நல்லவர்கள் ஆக்கிவிட்டு, எங்கள் மீசைக்கார மூலவீட்டு சித்தப்பா என்ன செய்தது தெரியுமா என்று ஆரம்பிப்பாள். நடுநடுவே மாடு காணாமல் போன கதை, கோழிக்கு இவள் பிரசவம் பார்த்த கதை என்று அவள் கூறும் கதைகள் பட்டியலிலிட முடியாதவை. அப்படிப்பட்ட ஊரில் இருந்து ஒரு பெண் பிள்ளை இன்ஜினியரிங் படிப்பது, அதுவும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பது பேரதிசயம் தான்.
"ராஜி உங்க ஊருக்கு எங்களை ஒருநாள் கூட்டிட்டுப் போயேன்.. நீ சொல்ற சிரட்டை மூஞ்சி, டப்பா காதன், எலி மண்டையன் எல்லாத்தையும் பாக்கணும் போல இருக்குது" என்று கேட்பார்கள். இறுதி ஆண்டில் நெருங்கிய நட்புகள் பலரின் வீட்டுக்கும் எல்லாருமே சுழற்சி முறையில் சென்றுகொண்டிருந்தார்கள். ராஜி வீட்டுக் கதவுகள் மட்டும் இவர்களுக்காக திறக்கவில்லை.
"போச்சு போங்க! உங்களை மட்டும் அங்கே கூட்டிட்டுப் போனேன்.. ஒண்ணு நான் மவுனவிரதம் இருக்கணும்.. இல்ல அதோட எனக்கு சமாதியாகி இருக்கணும்.. ரெண்டுக்கும் வாய்ப்பு இல்லை.. நீங்க எல்லாம் ஒண்ணு செய்ங்க.. என் கல்யாணத்துக்கே வாங்க.. அப்பதான் நல்லா இருக்கும்" என்றாள் ராஜி.
"ராஜி கல்யாணத்துக்குப் போறோம்.. இந்த எல்லா கேரக்டரையும் பார்த்து பேட்டி எடுக்கிறோம்.. அதை வச்சு ஒரு டாக்குமெண்டரி எடுக்கிறோம்" என்பான் அஸ்வின். ஆனால் விதி செய்த சதியால் ஜெயந்தியைத் தவிர யாராலும் ராஜியின் திருமணத்திற்குச் செல்ல முடியவில்லை. அவளும் ஏதோ பத்து வருடத்திற்கு முன் பக்கத்து வீட்டில் குடியிருந்தவர்கள் போன்ற ஒரு அந்நியமான தோற்றத்தில் ஒரு கிஃப்ட் டப்பாவைத் தூக்கிக்கொண்டு போல் வரிசையில் நின்று ராஜியின் கையில் கொடுத்துவிட்டுத் திரும்பிவிட்டாள். புகைப்படம் கூட எடுத்தார்களா என்று தெரியவில்லை. பந்தியில் சரியான கூட்டம், அடித்துப்பிடித்து சாப்பிடும் நிலை. திருமணத்துக்கு தன் கணவருடன் சென்றிருந்த ஜெயந்தி, அந்த ஊரிலேயே ஒரு சிறிய ஹோட்டலில் காலையில் சுட்ட இட்லியையும் வடையையும் சாப்பிட்டு வர வேண்டியதாயிற்று.
கல்லூரியில் இவர்களது எதிரி கோஷ்டி மட்டும் அந்தக் காட்சிகளை எல்லாம் பார்த்திருக்கும் என்றால் இவர்களைக் கழுவிக் கழுவி ஊற்றியிருப்பார்கள். 'என்னா பில்டப்பு.. என்னா பில்டப்பு! இதுங்க நாலும் சேர்ந்து காலேஜையே கலாய்ச்சுக்கிட்டு அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்துச்சுங்க.. இப்ப பாரு மூலைக்கு ஒண்ணா பிரிஞ்சு போயிடுச்சுங்க.. க்ளோஸ் ஃப்ரெண்டு கல்யாணத்துல சாப்பிடக் கூட இல்லாம வந்துட்டா' என்று கூறியிருப்பார்கள்.
ஃபோர் ஸ்டார் நண்பர்கள் அந்தக் கண்டிப்பு மிகுந்த கல்லூரியில் பல புரட்சிகளைச் செய்தார்கள். அதனால் முதலில் கல்லூரியே நால்வரையும் தலையில் வைக்காத குறையாகக் கொண்டாடியது. பின் எல்லாரும் சேர்ந்து அவர்களைத் திட்டவும் செய்தனர். இதற்கு பாதிக் காரணம் விதி என்றால் மீதி காரணம் இப்போது காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கும் ராஜ்குமார். அவன் செய்துவிட்டுப் போனதற்கு ஜெயந்தியும் அஸ்வினும் ராஜியும் தான் பெரிய அளவில் தண்டனை அனுபவித்தார்கள்.
ராஜியும் ஜெயந்தியும் பெண்கள் மத்தியில் பிரபலம். மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் மொத்தம் பத்தே பத்து பெண்கள்தான். ஆனால் மொத்த முதல் வருடத்திற்குமான ஹாஸ்டலில் 100 பேருக்கும் மேல் இருந்தார்கள். மற்ற பிரிவுகள் எல்லாரும் சேர்த்து முதல் வருடத்தில் ஒன்றாகத்தான் வகுப்புக்கு போவார்கள் வருவார்கள். அமைதியான குணத்தாலும் ஓடிப்போய் உதவும் பழக்கத்தாலும் பல நண்பர்களை ஜெயந்தி சம்பாதித்துக் கொண்டாள் என்றால், கலகலவென்று பேசி நிறைய பேரை சிரிக்க வைக்கும் திறமையால் ராஜி மாணவிகள் மத்தியில் பிரபலமாக இருந்தாள். அதே கலகலப்பு குணத்தால் அஸ்வின், ராஜ்குமார் இரண்டு பேரும் ஆண்கள் மத்தியில் பிரபலமாக ஆனார்கள்.
அஸ்வினுக்கு அனைவருடனும் சட்டென்று ஒட்டிக் கொள்ளும் சுபாவம். யாரையும் புண்படுத்தாது நல்ல உறவு வைத்திருப்பவன். ராஜ்குமார் வெளித்தோற்றத்திற்கு எல்லாருடனும் கலகலப்பாகப் பழகுபவன் போல் தோன்றினாலும் அவனுடைய குத்தல் பேச்சு பலருக்கும் பிடிக்காது. ஆட்களை அளவிடுவது போலிருக்கும் அவனுடைய பேச்சு. யாராவது ஒருவன் நல்ல சட்டையைப் போட்டுக்கொண்டு பெருமையுடன் வந்தால், புது சட்டையா நல்லா இருக்கு என்று இருபது பேர் கூறியிருப்பார்கள். இருபத்தி ஒன்றாவது ஆளாக ராஜ்குமார் வந்து, 'இதெல்லாம் என்ன கலர்னு இதைப் போய் வாங்கியிருக்க.. இது என்னடா 1947ல இந்திய சுதந்திரம் வாங்கினதைக் கொண்டாடுவதற்காக உங்க தாத்தா வாங்கின சட்டையா?' என்று ஒரே வார்த்தையில் அவன் மனதை உடைத்துப் போட்டு விடுவான்.
வசதியில்லாத மாணவர்களை அவர்களது வறுமையை சுட்டிக்காட்டி மனதைப் புண்படுத்த வைப்பதிலும் ராஜ்குமாரைப் போல் யாரும் இருக்க முடியாது. 'இந்த ஓட்டை சைக்கிளை ஒருநாள் நான் பேரிச்சம்பழத்துக்குப் போட்டு சாப்பிடப் போறேன் பாரு' என்பான் அஸ்வினைப் பார்த்து. மற்றவர்கள் என்றால் சண்டையிட்டு இருப்பார்கள். நட்பை முறித்துக் கொண்டிருப்பார்கள்.. ஆனால், "அப்படியே ஒரு புது சைக்கிள் வாங்கித் தந்துட்டு இதைப் பேரீச்சம்பழத்துக்குப் போட்டேன்னா ரொம்ப சந்தோஷமா இருக்கும்" என்று சிரித்துக்கொண்டே அஸ்வின் கூறியதில் எப்படியோ ராஜ்குமாருக்கு அவனைப் பிடித்து விட்டது.
அத்தனை பேரின் கவனமும் தன் மேல் இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஆசிரியர்களிடம் வலியப் போய் பேசுவான், வகுப்புத் தலைவன் என்று இன்னொருவன் இருந்தாலும் இவன்தான் தன் தோள்களில் எல்லா வேலைகளையும் தாங்குவது போல் சீன் போடுவான். அந்த சீனை பல மாணவர்களும் ஆசிரியர்களும் நம்பி விடுவது தான் வேடிக்கை. இத்தனை வருடங்கள் கழித்தும் அவனைப் பற்றிய பேச்சு வருகையில், "எப்படிடா அவனைப் போய் ஃப்ரெண்டா வச்சிருந்தோம்.. அவ்வளவு ஏமாளியா நாம?"என்று யாரையும் திட்டாத, எதற்கும் எரிச்சலடையாத ஜெயந்தியே அஸ்வினிடம் கூறுவாள்.
"விடு மாதாஜி.. நாம ஃப்ரண்டா இருந்த காலத்துல எவ்வளவு என்ஜாய் பண்ணினோம்.. நாம நேர்மையாத் தான் இருந்தோம்.. அவனும் நமக்காக எவ்வளவோ செஞ்சுருக்கான். எத்தனையோ சந்தோஷமான நேரங்களை ஷேர் பண்ணிருக்கோம்.. ஏதோ கெட்ட நேரம் இப்படி ஆகிப் போச்சு. அவன் இப்படித்தான், அவன்கூட வெச்சுக்காதீங்க நிறைய ஃப்ரெண்ட்ஸ் சொல்லி இருக்காங்க.. அது எல்லாத்தையும் மீறி அவன் கிட்ட ஒரு அட்ராக்ஷன்.. உண்டா இல்லையா? நமக்குமே அது ஒரு அனுபவ பாடம் தான்.. அடுத்து யாரையும் நம்பி ஏமாற மாட்டோம் இல்லையா?" என்பான்.
ஆம், ராஜ்குமார் கற்றுக்கொடுத்த பாடத்துக்கு அவர்கள் கொடுத்த டியூஷன் ஃபீஸ் மிக அதிகம். வகுப்பில் முக்கால்வாசிப் பேர் படித்து முடித்தவுடன் ஏதாவது வேலைக்குப் போயே ஆக வேண்டும் என்ற நினைப்பில் இருந்தவர்கள் தான். மீதமுள்ள கால்வாசி பேர் மேற்படிப்பு படிப்பேன் அல்லது திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிக் கொண்டு இருந்தவர்கள். அந்த வருடம் குறைந்த நிறுவனங்களே கேம்பஸ் இன்டர்வியூவுக்கு வந்திருந்தனர். ஒரு நிறுவனத்திலிருந்து கேம்பஸ் இன்டர்வியூ வந்துவிட்டுப் போனவர்களிடம் ராஜ்குமார் மட்டும் அடிக்கடி பேசி வந்தான்.
"அவங்க கிட்ட 150 ஓபனிங்ஸ் இருக்குதாம்.. எப்படியும் அதுல 70 பேரையாவது நம்ம காலேஜ்ல இருந்து செலக்ட் பண்ணனும்னு சொல்றாங்க.. அங்கே இப்ப ஏதோ பணத்தேவை போல.. நாம எல்லாம் காசு போட்டு புரட்டி லம்ப்பா ஒரு டெபாசிட் மாதிரி கொடுத்துட்டா அந்த ஆர்டர் நமக்குத் தான்" என்று அடித்துப் பேசினான். ஏதேதோ மெயில்கள், அப்படி வேலை வாங்கியவர்களின் அனுபவங்கள் எல்லாவற்றையும் காட்டினான்.
ஐம்பது பேருக்கு மேல் ஆளுக்கு பத்தாயிரம் கொடுத்தார்கள். அஸ்வினின் குடும்பச் சூழலுக்கு அதெல்லாம் மிக மிக அதிகம். எப்படியோ கடனை உடனை வாங்கிக் கொடுத்தான். பணத்தேவைகள் இருக்கும் ஒரு நிறுவனத்தால் எப்படி இத்தனை பேருக்கு வேலை கொடுக்க முடியும், சம்பளம் கொடுக்க முடியும் என்றெல்லாம் அந்த வயதில் யோசிக்கவில்லை. கல்லூரி நிர்வாகத்திடம் ஒரு வார்த்தை கேட்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை. ராஜ்குமாரின் பேச்சு சாதுர்யம் அப்படி. கடைசியாக அவனே மொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு ஏதோ வெளிநாட்டிற்குப் பறந்து விட்டான்.
"எப்படியும் மார்க் ஷீட், டிகிரி வாங்குறதுக்கு இங்கதானே வரணும்.. தூக்கிடுவோம்" என்று 'வெற்றிக் கொடி கட்டு' பட ஸ்டைலில் அனைவரும் காத்திருக்க, அதற்கும் ஏதோ செய்து காலேஜ் அலுவலகத்தில் க்ளார்க்கை கரெக்ட் செய்து அவன் நேரில் வராமல் வேறு யாரையோ விட்டு வாங்கிக்கொண்டான். கல்லூரி நிர்வாகத்திடம் அவனைப்பற்றி புகார் கூறிய போது எங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நாங்கள் அப்படி யாரிடமும் வாக்குக் கொடுக்கவில்லை என்று கையை விரித்து விட்டார்கள்.
பணத்தை இழந்தது இத்தனை பேர் என்றால் ராஜலட்சுமிக்கு வேறு விதமான பிரச்சனைகள். கடைசி சில மாதங்களில் ராஜியும் ராஜ்குமாரும் அடிக்கடி தனியே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் ஜெயந்தியும், அஸ்வினும் இண்டஸ்ட்ரியல் விசிட் என்று வேறொரு நிறுவனத்திற்கு சென்றுவிட, பெரும்பாலானவர்கள் அவர்கள் பேசியதைத் தவறாக நினைக்கவில்லை. ஆனால் ஒரு சிலர் இரண்டு பேரும் காதலிப்பதாக வதந்தியை கிளப்பி விட்டனர். அதைக் கேள்விப்பட்ட ராஜ்குமார் அவர்களிடம் மறுத்து எதுவும் கூறவில்லை. ராஜிக்கு இப்படி பேசப்பட்ட விஷயமே தெரியாது. நிஜத்தில் அவர்கள் இருவரும் தனியாக பேசிய சந்தர்ப்பங்களில் எல்லாம், 'நீயும் அந்த பத்தாயிரம் கொடு.. எப்படியும் வேலை வாங்கிடுவோம்' என்று ராஜ்குமார் கூறுவதும், 'வாய்ப்பே இல்லை எனக்கு இப்பவே சொந்தத்துல மாப்பிள்ளை ரெடி' என்று ராஜி பதில் கூறியதும் தான் நடந்தது.
ஆனால் பணத்தை இழந்த பல பேர் ராஜ்குமாரைத் தொடர்பு கொள்ள முடியாததால் ராஜியைத் தேடி அவளது ஊருக்கே சென்று விட்டனர். அவளது பாம்புக் காது உறவினர்கள் மத்தியில், "நீயும் அவனும் தானே லவ் பண்ணினீங்க.. உனக்குத் தெரியாம இருக்குமா?" என்று அவர்கள் உளறிவிட, அதை உண்மை என்று நம்பிய உறவினர்களால் பிரச்சனை பெரிதாகி, அப்போது பேசப்பட்ட ராஜியின் திருமணம் நின்று போனது.
அதன்பின் இரண்டு வருடங்களுக்கும் மேலாக வேறு மாப்பிள்ளை எதுவும் அமையவில்லை. இந்தக் கதை எதுவும் தெரியாத வெளிநாட்டு வரனைத் தான் கடைசியில் காதும் காதும் வைத்த மாதிரி முடித்தார்கள். "பண்ணாத லவ்வுக்கு ஹவுஸ் அரெஸ்ட் என்ன? திட்டு என்ன? அடி என்ன? ஒண்ணுமே பண்ணாம இடி வாங்கினது நான்தான்.. கடைசி பண்ணாத தப்புக்காக துபாய்ல உட்கார்ந்து பத்தாவது மாடியில கம்பி எண்ணிக்கிட்டு இருக்கேன்.. அதுவும் கம்பியாவது இருக்கா.. வெறும் கண்ணாடி ஜன்னல்" என்று சிரிப்பாள் ராஜி.
இப்போது ராஜ்குமார் எங்கிருக்கிறான், என்று இவர்களுக்குத் தெரியும். முகநூலில் மாடல் போன்ற ஒரு பெண்ணுடன் புகைப்படங்களை எல்லாம் போடுகிறான். காலப் போக்கில் அவனை தொடர்பு கொள்ள முயல்வதை அப்படியே விட்டுவிட்டார்கள். அதற்குமேல் பல ஆயிரங்களை எல்லாரும் பார்த்து விட்டார்கள் ஆனாலும் அந்த பத்தாயிரத்தை யாராலும் மறக்க முடியவில்லை; மன்னிக்கவும் முடியவில்லை.
கண் போன போக்கிலே கால் போகலாமா?
கால் போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன்
போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?

Last edited: