கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துளி எண்ணெய் 7

Akhilanda bharati

Moderator
Staff member
7.நல்லதொரு குடும்பம்


அஸ்வின் அமர்ந்திருந்த இடத்திலிருந்து ஜெயந்தி அந்த மூன்று பேரிடம் பேசுவது தெள்ளத் தெளிவாகக் கேட்டது. "அப்புறம் பெரியப்பா..", "நீங்க சொன்னா சரியாத் தான் இருக்கும் பெரியப்பா" என்று சொல்லிக்கொண்டிருந்தாள். 'நல்லா பேசப் படிச்சுக்கிட்டா மாதாஜி' என்று ஒரு புன்னகையுடன் நினைத்தவன், 'அவளுக்கு என்ன பேச சொல்லியா தரணும்?' என்றும் கூடவே நினைத்துக்கொண்டான்.

பெரும் பிரச்சனைகளை மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறவனுக்கு மற்றவர்கள் விஷயத்தைக் கேட்க மனம் வருமா என்ன.. வருகிறதே.. சுவாரஸ்யமாகத் தானிருக்கிறது. குழப்பத்துடன் இருந்தவன் கொஞ்சமாகப் புன்னகைத்தான். முந்தைய தினம் முழுவதும் ஒரு மாதிரி வீட்டிலேயே கழிந்துவிட்டது. அஸ்வினி மலை இறங்கிவிட்டாள் என்று சொல்ல முடியாது. மலையில் இருந்து கீழே இறங்கும் பாதையை நோக்கி திருப்பி வைத்து விட்டு வந்திருக்கிறான். முடிந்த அளவு சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும், இல்லையென்றால் மீண்டும் மலையுச்சியை நோக்கித் திரும்பிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தவன் மணியைப் பார்த்தான்.

முந்தைய நாளில் அந்த செய்தியைப் பார்த்த தாக்கம் இன்று காலை வெகுவாகக் குறைந்திருந்தது. காலம் தான் சிறந்த மருந்து என்பது எத்தனை உண்மை. இன்று காலை உணவை முடித்துக் கொண்டு, 'ஒரு ரெண்டு மணி நேரத்துல வந்துருவேன்' என்று கூறிவிட்டு ஜெயந்தியின் வீட்டிற்கு வந்திருந்தான் அஸ்வின்.

பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த சாயுடனும் சிந்துவுடனும் இவன் ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொண்டிருக்கும்போது தான் இந்த மீசையும் அவருடன் வந்த இன்னொரு ரெண்டு பேரும் உள்ளே நுழைந்தார்கள். தியாகராஜனின் க்ளையன்ட்களாக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர் அந்த வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி அணிந்தவராக இருக்க வேண்டும். அவர் முகத்தில் தான் அத்தனை கலவரம், அத்தனை வலி. கண்டக்டர் போல ஒரு பையை கையில் இடுக்கியபடி இருந்தார். அவரது இதுவரையிலான சம்பாத்தியத்தில் கணிசமான பங்கு அதுவாகத்தான் இருக்கவேண்டும். அதை தியாகராஜனிடம் கொட்டிக் கொடுத்து விட்டுப் போய்விட்டால் அவர் தன்னை பிரச்சனையிலிருந்து மீண்டு விடுவார் என்று நம்பி வந்திருக்க வேண்டும். அந்த மீசையைக்காரரைப் பார்த்தால் அவர்தான் பொறுப்பேற்றுக் கொண்டு வந்த நபராகவும், அந்த இன்னொரு நபர் 'சும்மா' துணைக்கு வந்தவர் போலவும் தோன்றியது.

ஜெயந்தியுடன் அவர்கள் ஒரு அறையில் அமர்ந்து பேச, அவள் காட்டிய இருக்கையில் அமர்ந்து அவர்களுக்காக காத்திருந்தான். அஸ்வினுக்கு அவர்கள் பேசப் பேச தான் யூகித்ததெல்லாம் சரி என்றுதான் தோன்றியது. 'கலக்குற அஸ்வின் வரவர ரொம்ப அறிவாளி ஆயிட்டே' என்று தன்னைத் தானே பாராட்டிக் கொண்டான். 'பின்ன ஊரு ஊரா சுத்துறே.. எத்தனை ஆளுங்களைப் பார்க்கிறே.. இது கூட தெரியாம இருக்குமா?' என்று அவன் மனசாட்சி எதிர்கேள்வி கேட்டது. 'சரி சரீ!' என்று அதை அடக்கியவன் ஜெயந்தியின் பேச்சில் கவனத்தைக் குவித்தான். முதலில் அவள் பேசியதெல்லாம் ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு. தியாகராஜனிடம் வருபவர்களுக்கு அவள் இப்போது ஒரு ஆலோசகரைப் போல. ஜெயந்தியை முதலில் பார்த்து அவர்கள் பிரச்சினை என்ன, ஏற்கனவே ஏதும் வழக்கு போட்டிருக்கிறார்கள் அது தொடர்பான ஆவணங்கள் வைத்திருக்கிறார்களா என்று பார்ப்பதும் தேவையானவற்றைப் பிரித்து ஒரு பைலில் அடிக்கி எளிதாக புரிந்து கொள்ளும் விதமாக ஒரு குறிப்பும் எழுதி அதன் பின் தியாகராஜனிடம் அனுப்புவதும் ஜெயந்தியின் வேலையாகி போயிருந்தது கிட்டத்தட்ட பெருநிறுவன முதலாளி ஒருவருக்கு பிஏ போல.

'இதுக்கா அப்படி விழுந்து விழுந்து படிச்சே மாதாஜி?! ஒண்ணா ரெண்டா எத்தனை மெடல் வாங்கியிருக்க நீ?' என்று நினைத்தான். 'சரி.. தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.. உலகத்திலேயே பெரியதாக நினைத்துப் படித்த இன்ஜினியரிங் படிப்பை அதன் பின் வாங்கிய டிகிரிகள் எல்லாம் தூக்கி சாப்பிட்டு விடவில்லையா.. ராஜி சொல்வாள், "அஸ்வின்னு தமிழ்ல சொன்னா நாலெழுத்து.. இங்கிலீஷ்ல சொன்னா அஞ்சு எழுத்து.. ஆனால் நீ படிச்சு வாங்கியிருக்கிற டிகிரில இருக்குறதை எல்லாம் சேத்தா மொத்தம் 30 எழுத்து வரும்டா.. இங்கிலீஷ் எழுத்தோட மொத்த எண்ணிக்கையையும் தாண்டிட்டே பாரு" என்பாள். சரிதான் என்று ஒத்துக் கொள்வான் அஸ்வின்.

அவனே அவன் படித்த டிகிரிக்களில் ஒன்றிரண்டை அவ்வப்போது மறந்து விடுவான். ஃபைலில் அடுக்கியிருக்கும் சான்றிதழ்களைப் பார்த்துத் தான் தெரிந்து கொள்ள வேண்டும். தன் நினைவுகளிலிருந்து மீண்டு மீண்டும் ஜெயந்தியின் அலுவல் அறை பக்கம் கவனத்தை கொண்டு வந்தவனுக்கு இப்போது கொஞ்சம் கோபம் வந்தது. அந்த மீசை வைத்த பெருசு, "உங்க அப்பா அம்மா நல்லா இருக்காங்களா தாயி? அண்ணன் என்ன பண்றான் தாயி?" என்க, ஜெயந்தி, "எனக்கு அண்ணன் கிடையாது.. தம்பி தான்.." என்றாள்.

"ஆள் பெருசா இருப்பான் இல்ல.. அதான் அண்ணன்னு நினைச்சுட்டேன்" என்றார் மீசை. ஜெயந்தியின் தம்பி மிகச் சிறியவன். பார்ப்பதற்கு சோப்ளாங்கி போல் தான் இருப்பான். அதனால் பெரிசு சும்மா கதை விடுகிறது என்று நினைத்தான் அஸ்வின்." உன் காதுகுத்துக்கு நான் வந்து இருக்கேன் தாயி" என்றார் பெருசு அடுத்தபடியாக. இதெல்லாம் நான் உன் ஜாதிக்காரன் என்று சொல்லும் வழிமுறைகள் என்று ஜெயந்தி அடிக்கடி சொல்லி இருக்கிறாள்.

நான் ஜாதி பார்ப்பதில்லை எனக்கு அதெல்லாம் பிடிக்காது என்று சொல்லும் ஒருவனும், 'நம்ம சாதியாம் நம்ம ஆளுகளாம் போன்ற வார்த்தைகள் வந்துவிட்டால் அவங்க முகத்துல ஒரு கனிவும் இலேசான பாசமும் ஒரு நிமிஷத்துக்கு வரும் அஸ்வின்.. நல்லா கவனி' என்பாள். இப்படித்தான் நான் உன் சாதிக்காரன் என்று சொல்ல பெருசு முயன்று கொண்டிருந்தது. எப்போதும் இப்படியான பேச்சுக்களில் ஜெயந்தி பேச்சை‌ மாற்றிவிடுவாள், சட்டென்று வேறு விஷயத்திற்குத் தாவிடுவாள். ஆனால் இன்று ஆமாம் ஆமாம் என்று ஆமோதித்தாள்.

கொஞ்ச நேரத்தில் அவர் ஏதோ பெருமையாக சொல்ல வர, "அதானே நம்ம ஆளுகன்னா சும்மாவா?" என்றாள் ஜெயந்தியும்.

"நம்ம ஆளுகளுக்குன்னா நீயும் உன் மாப்பிள்ளையும் கைக்குப் பிடித்தம் இல்லாம, கேஸை முடிச்சுக் குடுப்பீங்கன்னு சொல்லி பங்காளியைக் கூட்டிட்டு வந்திருக்கேன்.. பார்த்து முடிச்சு விடுங்க" என்றார் மீசை. "அதுக்கு என்ன? செஞ்சுடுவோம்..!" என்றாள் ஜெயந்தி. அவள் ஏதோ கொள்ளைக்கூட்டத் தலைவி போலவும், பெருசு யாரையோ போட்டுத்தள்ள சொல்லி வந்திருக்கும் பார்ட்டி போலவும் தோன்றியது அஸ்வினுக்கு. நன்றாக நகர்ந்து அந்த அறையைப் பார்க்கும் விதமாக அமர்ந்துகொண்டான்.

"பொண்ணைக் கடத்திட்டுப் போயிட்டான், கொடுமைப்படுத்தினான் அடிச்சான், கட்டி வச்சான் இப்படின்னு வெயிட்டா போடுங்க.. ஆயுசுக்கும் அந்தப் பையன் வெளியே வரக்கூடாது.. என்ன ஒரு நெஞ்சழுத்தம், நம்ம பொண்ணை இழுத்துட்டுப் போயிருக்கான்" என்றார் பெரியவர்.

"அண்ணே! இவ்வளவு செய்யணுமா? புள்ளைக்கு அஞ்சாம் மாசம்" என்று அந்த கண்டக்டர் பைக்காரர் கேட்க, "சும்மா இரு.. அப்படி தான் செய்யணும்.. எனக்குத் தெரியாதா.. நீ சொல்லு பாப்பா" என்றார் ஜெயந்தியை பார்த்து. அவளும் ஆமாம் ஆமாம் என்று ஆமோதித்தாள்.

அஸ்வினுக்குக் கடுப்பாக வந்தது. இவர்கள் சொல்வதைப் பார்த்தால் கண்டக்டர் பை வைத்திருப்பவரின் மகள் வேற்று சாதிக்காரப் பையனுடன் ஓடிப்போயிருக்க வேண்டும். ரொம்ப நாட்கள் குடும்பம் நடத்தியிருக்கவும் வேண்டும். இப்போது எப்படியோ பிரித்துக் கொண்டு வந்து பஞ்சாயத்துக்கு வந்திருக்கிறார்கள்.

"வயித்துல புள்ளை இருந்தா என்ன.. அதையும் கலைச்சா விஷயம் முடிஞ்சு போச்சு.. இப்படிப்பட்ட பிள்ளைகளை கட்டிக்கிடதுக்கும் நம்ம ஆளுங்கள்ல பசங்க இருக்காங்க" என்றார் பெருமையுடன்.

அதிர்ச்சியாக இருந்தது அஸ்வினுக்கு. 'அடப்பாவிகளா இப்படி ஆளுங்க இருக்காங்களா இந்தக் காலத்துலயும்..? இதுக்கு மாதாஜி என்ன சொல்லப் போகுது?' என்று ஆர்வமுடன் பார்த்தான். "அப்படியா ரொம்பவே பெரிய விஷயம்.. பெருந்தன்மையான மனசு" என்றாள் ஜெயந்தி. அவள் குரலில் இருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. "அப்ப எங்க வீட்டு வேலைக்காரம்மாவோட பொண்ணு கைக்குழந்தையோட விதவை ஆயிடுச்சு.. அவங்களும் நம்ம சாதிக்காரங்க தான்.. நீங்க சொல்ற பசங்க யாருக்காவது அந்தப் பொண்ணை பார்ப்போமா?" என்று கேட்டாள்.

'என்ன? வீட்டுவேலை செய்றவங்களா?' என்பதுபோன்ற பாவனையுடன் மீசை அமைதியாக இருந்தார். இப்ப எதுக்கு இந்தப் பேச்சு என்பது போல் அந்தக் கண்டக்டர் பைக்காரர் மீசையைச் சுரண்டினார்.

"பொய் சொல்லி கேஸ் எல்லாம் உண்மையிலேயே எழுதணுமா பங்காளி.. இல்ல ஸ்டேஷன் மூலமாக பேசி அத்து விட்டாக் கூட போதும்" என்று அவர் கூற, மீசை மறுத்தார்.

அவர்களுக்கு சாதகமாக பேசுவதுபோல ஆரம்பித்து, பின் காலை வாரி விட்டாள்.‌ அவள் பேச்சிலிருந்து கண்டக்டர் பைக் காரருக்கு, மீசை சுயலாபத்திற்காக தன்னை இழுத்து வந்திருக்கிறது; தன் குடும்பத்தின் மேல் அக்கறை இல்லை என்று புரிந்தது. அவருக்குக் கொஞ்சம் நஞ்சம் மகள் மேல் இருந்த பாசத்தையும் மீட்டெடுத்தாள் ஜெயந்தி.

பின்பு அதையும் இதையும் பேசி, பணம் இருப்பவர்கள் வசதி படைத்தவர்களுக்கு மட்டும் தான் இந்த 'அட்ஜஸ்ட் பண்ணி கல்யாணம் பண்ணும் ஆஃபரை' மீசை கொடுக்கிறார் என்பதைத் தெள்ளத் தெளிவாக நிரூபித்தாள். அந்தக் கோணத்திலேயே பேச்சை நகர்த்திச் சென்று மீசையை அவள் கார்னர் செய்துவிட, 'வீட்ல ஒருதடவை பேசிட்டு கேஸ் போட்டுக்கிடுவோம்' என்று கண்டக்டர் பைக் காரர் கிளம்பிச் சென்றார்.

அப்பாடா என்று ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள் ஜெயந்தி. சிரிப்பாக வந்தது அஸ்வினுக்கு. அவர்கள் வெளியே போனவுடன் ஓடிப்போய் ஜெயந்திக்கு கைகொடுத்தான். "சூப்பர் மாதாஜி! கலக்கிட்ட! ஆனா என்ன.. நீ இப்படியே பேசிக்கிட்டா இருந்த.. உங்க வீட்டுக்காரருக்கு கேஸே இருக்காது.. நீயே எல்லாத்தையும் கலைச்சு விட்டுருவே" என்றான்.

"அந்த வேலையைத் தான் அஸ்வின் அவளுக்குக் குடுத்துருக்கேன்.. இப்படி கேஸுகளை கலைச்சு விட்டா ரொம்ப சந்தோஷம்" என்றபடியே அங்கு வந்து அமர்ந்தார் தியாகராஜன்.

"குருஜி என்ன குருஜி இப்படி சொல்லிட்டீங்க?" இன்று அஸ்வின் கேட்க,

"அதெல்லாம் அப்படித்தான் பா.. அப்புறம் உன்னோட விஷயத்துக்கு என் தரப்பிலிருந்து சாரி சாரி சாரி.. என்கிட்ட ஜூனியரா சேரணும்னு ஆசைப்பட்டு ஒரு பையன் பின்னாடியே சுத்திச் சுத்தி வந்தான்.. அவன் தான் என் புகழைப் பறப்புறேன்னு இப்படி கேனத்தனமா நியூஸ் கொடுத்திருக்கான்.. என்னை இம்ப்ரஸ் பண்றதா நினைச்சு கிட்டு ப்ரீத்தியை நாங்க மீட் பண்ற இடத்துக்கு ஒரு ரிப்போர்ட்டரைக் கூட்டிட்டு வந்துட்டான்.‌ அந்தப் பரதேசிக்கு சினி ஃபீல்டு அதுஇதுன்னு வேற கண்டென்ட் கிடைக்கலையோ என்னமோ.. ஏதேச்சையா வந்த நீ செலிபிரிட்டி ஆயிட்டே.. நான் வேணா அஸ்வினி கிட்ட சாரி கேட்டுட்டு விஷயத்தை விளக்குறேன்" என்றார் தியாகராஜன்.

"சே சே அதெல்லாம் வேண்டாம் நான் அவளை கட்டிப்பிடிச்சு கரெக்ட் பண்ணிட்டேன்" என்றான் அஸ்வின் வெட்கத்துடன்.

"டேய் டேய் வழியாதே.. தாங்க முடியல" என்று ஜெயந்தி சொல்ல,

"ஹிஹி! ஒரு ரொமான்டிக் பெர்சனாலிட்டியை இன்ஸல்ட் பண்ணாதே மாதாஜி" என்றான் அஸ்வின்.

"மூணாவது பிள்ளைக்கு அடி போட்டியா டா" என்று தியாகராஜன் கேட்க, "ம்ஹும்.. சும்மா டச்சிங் டச்சிங் மட்டும்தான்" இன்னும் வெட்கம் குறையவில்லை அஸ்வினுக்கு.

"ஒரு விஷயத்தை அப்போதைக்கு சமாளிச்சு தள்ளிப் போடுறதை விட்டுட்டு விளக்கி அவளுக்குப் புரிய வை டா.. இல்லைன்னா இப்படி ஒரு பெரிய பிரச்சனை வந்துச்சு, நீ கட்டிபிடிச்சு டைவர்ட் பண்ணி சமாதானப்படுத்தினேன்னு அடுத்த வாரமே வேற சண்டைல சொல்லிக்கிட்டு நிப்பா.. உங்க ரெண்டு பேரோட இதுதானே பிரச்சனை" என்றாள் ஜெயந்தி.

"அதுவும் சரிதான்.. இருந்தாலும்.." என்று யோசித்தவன், "மாதாஜி, நீயும் குருஜியும் சேர்ந்து ஒரு ஆசிரமம் ஆரம்பிச்சிருங்களேன்.. எங்க மாமியார் கிழவியைக் கொண்டு வந்து அதுல சேத்துட்டு நான் நிம்மதியா இருப்பேன்" என்றான்.

"நடக்கிற கதையா பேசுடா.. நீ வேணா சன்யாசம் வாங்கினாலும் வாங்குவ.. உங்க மாமியார் உன்னை விட்டுட்டுத் தனியாப் போகாது" என்றார் தியாகராஜன் சலிப்பாக. அவன் பேசுவதை எல்லாம் ரசிப்பவர் தான், இருந்தாலும் ஒரு பிரச்சனை என்று வரும்போதும் விளையாடிக் கொண்டே இருந்தால் யாருக்குத்தான் கடுப்பாகாது.

"என்னங்க நீங்க.. அவன் கட்டிப்புடிச்சு கரெக்ட் பண்ணி பெரிய பிரச்சனையை முடிச்சிருக்கான்.. இப்படி சொல்றீங்களே" என்று ஜெயந்தியும் எழுந்து வந்து தியாகராஜனின் தோளில் கை வைத்தபடி நின்றாள்.

"உங்க ரெண்டு பேரையும் மாதிரி வருமா.. நான் ஏதோ கத்துக்குட்டி.. குருஜி! மாதாஜியை டீ காபி கொண்டு வரச் சொல்லிட்டு எனக்கு சில சீக்ரெட் டிப்ஸ் சொல்லிக் கொடுங்க" என்றான்.

"டேய் டேய்! அடங்குடா!" என்று அவன் தலையில் ஒரு அடி போட்டாள் ஜெயந்தி. "சரி என்ன சொல்லி வச்சிருக்கே.. இப்ப எப்பிடி.. முழுசா சமாதானமாயிடுச்சா..?" என்று அவள் மீண்டும் கேட்கவும்,

"இதெல்லாம் வெளியே சொல்லலாமா கூடாதா.. இருக்கட்டும்.. போனாப் போகுது.. சொல்றேன் கேளு.. நேத்தைக்கு நான் நல்லா தூங்கிட்டு இருந்தேனா, காலையில சீக்கிரமே எழுந்துட்டு என் பையன் ஃபோன் பார்த்துட்டு இருந்திருக்கான்.. அதுல இந்த வீடியோ வந்திருக்கு.. எங்க மாமியாரோட மொபைல் தான்.. அவங்க இந்த மாதிரி நியூஸை எல்லாம் தானே பார்க்குறாங்க, அப்ப கிசுகிசு மேட்டர்தானே காட்டும்.. இது அப்பா தானேன்னு அவன் கேக்க, அதை எங்க அத்தை பாத்துட்டு எந்த ஊர்லயாவது இப்படி எல்லாம் நடக்குமான்னு அழ, அதைப் பார்த்துட்டு அஸ்வினி சத்தம் போட, ஏதோ கனவு தான்னு நினைச்சேன் முதல்ல.. அப்புறம் பதறிப்போய் முழிச்சா ஒரு பெரிய டிராமா.. அப்புறம் எங்க அத்தையைக் கட்டாயப்படுத்தி பிள்ளைகளோட வெளியில் அனுப்பிட்டு அஸ்வினியைப் பார்க்கிறேன்.. தரையில் உட்கார்ந்து ஓன்னு அழுதுகிட்டு இருக்கா.. அப்புறம் நானும் அவ பக்கத்துல உட்கார்ந்து சமாதானப்படுத்தி, இதெல்லாம் பொய் மா.. நான் ஜெயந்தி ஃபேமிலியைத் தான் பார்க்கப்போனேன், இந்த ப்ரீத்திகிட்ட காலேஜ்ல நான் பேசுனது கூட கிடையாது.. எந்த ஊர்ல இருக்கா என்ன எதுவுமே எனக்குத் தெரியாது அப்படின்னு சொன்னேன்.. நல்ல வேளையா நேத்து சாய் எனக்கு நாம எல்லாம் எடுத்துக்கிட்டு போட்டோவை அனுப்பி வச்சிருந்தான். அதையும் அவளுக்குக் காமிச்சேன்.. 20 நிமிஷத்துக்கு மேல பழைய கதைகள் எல்லாம் பேசிப் பேசி சண்டை போட்டா.. கடைசியா, நீங்க என்கூடவே இருந்தா இதெல்லாம் நடக்குமா.. இப்படி ஒருத்தனாவது பேசுவானா.. நீங்க விட்டுட்டு விட்டுட்டுப் போறதால எனக்கும் தான் கெட்ட பேர் இங்க.. தெரியுமா அப்படின்னு கடைசியா சொன்னா.. எனக்கும் ஒரே ஃபீலிங் ஆயிடுச்சு"

"அப்புறம் என்னடா கோர்ஸாவது ஒண்ணாவதுன்னு பாதியில விட்டுட்டு அப்படியே சரண்டர் ஆயிட வேண்டியது தானே.. உனக்கு இங்க பிசினஸ் இருக்கு.. வேலை வேணாலும் வாங்கிக்கலாம்" என்று ஜெயந்தி பரபரப்பாக,

"முழுசா கேளு கதையை.. நான் ஒரு மணி நேரமா பேசி கொஞ்சி சமாதானப்படுத்தி வச்சிருக்கேன், என் அத்தை வந்து திரும்பி சண்டை மூட்டி விடப் பார்க்குது.. அவளை விடாமல் கிச்சனும் வரைக்கும் துரத்திட்டுப் போய், என்ன என்ன சொன்னாரு உன் வீட்டுக்காரர், யார் அந்தப் பொண்ணு அப்படின்னு மறுபடி மறுபடி கேக்குது.. எனக்கு கடுப்பாகிப் போச்சு.. என்ன நான் சொன்னேன் என்ன செஞ்சேன்னு தெரியணுமா? ஐ லவ் யூ ன்னு சொன்னேன், அப்புறம் கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்தேன்.. உங்களுக்கு வேணும்னா திருப்பி அதெல்லாம் செஞ்சு காமிக்கவா? அப்படின்னு கேட்டேன்.. கருமம் கருமம் இப்படி ஒரு விவஸ்தை இல்லாத பையனா பார்த்து அந்த விவஸ்தை கெட்ட மனுஷன் என் பொண்ண கட்டி வச்சுட்டாரேன்னு எப்பவும் போல என் மாமனார் ஃபோட்டோவைப் பாத்து திட்டினாங்க.. அதுக்கப்புறம் வீடு அமைதியா இருக்கு.. புயலுக்குப் பின்னே அமைதியா, புயலுக்கு முன்னே அமைதியான்னு தெரியல" என்றான் அஸ்வின்.

அஸ்வின் கூறிய விதத்தில் ஜெயந்தி விழுந்து விழுந்து சிரிக்க, தியாகராஜனும் சிரித்தார். "இந்த வரைக்கும் நீங்க தெளிவா பேசி இருக்கீங்களே டா.. அதுவே பெரிய முன்னேற்றம்.. எல்லாம் சரியாயிடும் நீயும் தான் கொஞ்சம் இறங்கி வாயேன்.. எப்பவும் நீங்க கெஸ்ட் மாதிரிதானே வந்துட்டுப் போற.. ரெண்டு பிள்ளைகளைத் தனியா வளக்குறது, கூடவே பிசினஸை பார்க்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? அடுத்து சின்னவளையும் ஸ்கூலுக்கு அனுப்பணும்.. அஸ்வினியே எல்லாம் செய்யணும்னா கஷ்டமா இல்லையா?"

"முடிஞ்ச அளவு சீக்கிரமே வந்துடணும்னு தான் பாக்குறேன்" என்றான் அஸ்வின்.

***

""மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்""
 
Last edited:
Top