கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துளி எண்ணெய் 8

Akhilanda bharati

Moderator
Staff member
8. சுழல்

"திருந்தவே மாட்டியாடி நீ? எத்தனை தடவை சொல்லி இருக்கேன் உனக்கு?"

"நீ எப்பவுமே என்னைத் தானே திட்டுவே? உன்னை மாதிரி ஆட்கள் தாண்டி ஆணாதிக்கத்துக்கு துணை போறது.. இப்படி உன்னை மாதிரி நாலு பேர் இருந்தாப் போதும்.. பொம்பளைங்க யாரும் முன்னேறவே முடியாது. இனிமே இது சம்பந்தமா பேசுறதா இருந்தா என் கூட பேசவே பேசாதே"

"ஓ! இப்படி எல்லாம் சொல்லி ஹர்ட்டிங்கா பேசினா நான் ஃபோனை கட் பண்ணிடுவேன்.. நீ நெனச்ச மாதிரியே நடந்துக்கணும்.. அதானே உனக்கு ஆசை. இதெல்லாம் எங்கிட்ட நடக்காது. நான் சொல்றது கரெக்ட்னு உனக்கே தெரியும். பிடிவாதம் பிடிக்காமல் சொல்றத முழுசா கேளு"

"மிஞ்சி மிஞ்சிப் போனா நீ என்ன சொல்லுவ? அட்ஜஸ்ட் பண்ணிப் போ.. பொறுத்துப்போ.. குடும்பம் முக்கியம், குழந்தைகள் இருக்கு. வேற என்ன? வச்சுடறேன்"

"நானா கட் பண்ணாம நீ கட் பண்ண மாட்டேன்னு எனக்குத் தெரியும்.. உன் புருஷனை என்ன வேணா பண்ணிக்கோ.. அடி. மிதி. ஏன் டைவர்ஸ் கூட பண்ணு. தயவு செஞ்சு இந்த ஸ்டேட்டஸ் வைக்கிற வேலைய மட்டும் நிறுத்து. நம்ம குடும்ப விவகாரம் ஊருக்கே தெரியணும்னு அவசியமில்லை. புரியுதா? இல்ல ஸ்டேட்டஸ் வச்சு தான் ஆகணும்னு நினைச்சேன்னா, வச்சுட்டு உனக்கு மட்டும் விசிபிளா இருக்கிற மாதிரி செட்டிங்ஸ் மாத்து.. உன்னைப் பார்த்து ஊரே பரிதாபப் படணும்னு நினைக்காதே.. இப்பல்லாம் யாரும் புருஷன் பொண்டாட்டி சண்டையைப் பாத்து பரிதாபப்படுறதில்லை.. நம்ம ஃப்ரெண்ட்ஸே கூட இப்ப என்ன பேசிக்குவாங்க தெரியுமா? அஸ்வினியா? அவ அந்தக் காலத்துலேயே திமிரு புடிச்சவ தானே.. எப்படிப் புருஷன் கூட அட்ஜஸ்ட் பண்ணிப் போவா.. பாவம் அவரு.. இப்படித்தான் பேசுவாங்க"

"ஒ! அப்ப நீயும் மனசுல அதைத்தான் நினைச்சுகிட்டு இருக்க.. இல்லையா உனக்கும் அஸ்வினின்னா திமிரு புடிச்சவ.. அப்படித்தானே? அப்புறம் ஏன் திமிரு புடிச்சவ கூட பேசி உன் டைமை வேஸ்ட் பண்ணிட்டு இருக்க? வை ஃபோனை!"

"அஸ்வினி.. அந்த வயசுல உக்காந்து உன் கையப் புடிச்சுகிட்டு தலையை தடவி பொறுமையா அட்வைஸ் பண்ணி இருக்கேன்.. இப்ப அதுக்கு சந்தர்ப்பமும் இல்லை சூழ்நிலையும் இல்லை.. பொதுவா உலகத்துல மத்தவங்க எப்படி பேசுவாங்க அப்படிங்கறதை சொன்னேன்.. மனசளவுல நீ ரொம்ப நல்லவன்னு எனக்குத் தெரியாதா? அழகான லைஃப்.. அதைக் கெடுத்துக்காதே.. குழந்தைகளோட லைஃபுக்கும் அது நல்லது இல்ல.. இதோ நான் உன்னோட ஸ்டேட்டஸ் பார்த்த உடனே 'என்னடா இது'ன்னு நினைச்சேன்.. இலக்கியா எனக்கு போன் பண்ணிட்டா நான்தான் அட்டென்ட் பண்ணாம தள்ளிப் போட்டுக்கிட்டே இருக்கேன்"

"உன் கிட்ட பேசுறதுக்கு இலக்கியா கிட்டயாவது பேசலாம்.. எனக்கு சப்போர்ட்டிவா இருப்பா"

"பேசேன்.. அவகிட்ட பேசினா இன்னிக்கு உன்னை டைவர்ஸ் பேப்பர்ஸ் பைல் பண்ண வச்சுட்டு தான் சும்மா இருப்பா.. தானும் வாழ மாட்டா.. மத்தவங்களையும் வாழ விட மாட்டா.. அதெல்லாம் ஒரு சைக்கோ"

"என்னையும் அடக்கி அடக்கி வச்சு நான் தான் சைக்கோ ஆகப் போறேன்" சற்று முன்பு தான் நின்றிருந்த கண்ணீர் மீண்டும் வந்தது அஸ்வினிக்கு. ஒரு மணி நேரப் பிரயாணம் தானே கிளம்பிப் போய்விடலாமா என்று நினைத்தாள் அவளது உயிர் தோழி ஆனந்தி. அஸ்வினுக்கு ஒரு ஜெயந்தி என்றால் அஸ்வினிக்கு ஆனந்தி.

அஸ்வினி, ஆனந்தி, இலக்கியா மூன்று பேரும் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் இருந்தவர்கள்.‌ தன் சொந்தக் கதைகளைக் கடைபரப்புவதில் அஸ்வினிக்கு நிகர் அவளே. எதையும் மனதிற்குள் வைத்துக் கொள்ள மாட்டாள். எதுவானாலும் உடனே நான்கு பேரிடம் சொல்லி விட வேண்டும். தான் நினைத்தது உடனே நடக்க வேண்டும் இல்லையென்றால் அப்பாவை, உறவினர்களை, ஆசிரியரை எல்லாரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வைப்பாள். அவள் சொல்லும் தீர்ப்புக்கு தோழிகள் அனைவரும் தலையாட்டினால் அப்படியே குளிர்ந்து போய்விடுவாள்.

நினைத்ததை சாதித்தே ஆக வேண்டும் என்ற குணம் அவள் அம்மாவிடம் இருந்து வந்தது. அந்த குணம் மாற வேண்டும் என்று தான் அவள் அப்பா சென்னையிலேயே வீடு இருந்தாலும் கல்லூரி விடுதியில் இருக்கட்டும், நான்கு பேருடன் பழகட்டும் என்று ஹாஸ்டலில் சேர்த்து விட்டார். அம்மா திட்டியது, அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை வந்தது, தனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தது எல்லாவற்றையும் பார்ப்பவர்கள் எல்லாரிடமும் சொல்வாள் அஸ்வினி. 'க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட மட்டும் ஷேர் பண்ணு' என்று ஆனந்தி சொல்வதைப் பெரிதாக எடுத்ததே இல்லை. இலக்கியாவுக்கு இயல்பிலேயே நல்ல குணம் கிடையாது. மற்றவர்களின் சோகத்தில் சந்தோஷப்படுபவள். யாரும் ஒற்றுமையாக இருந்தால் சண்டை மூட்டிவிடுவாள். நன்றாகப் படிப்பவர்களைப் போய் அதையும் இதையும் சொல்லி மனதைக் கலைத்துவிட்டு அவர்களை வேற ஏதாவது யோசிக்கச் செய்துவிட்டு சைக்கிள் கேப்பில் தான் நிறைய படித்து அதிக மார்க் வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கும் கோணல் புத்திக்காரி.

அஸ்வினியின் அப்பாவுக்கு இதயத்தில் கோளாறு இருந்ததால் முதுகலை படிக்கும் போதே அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். நல்ல வரன்கள் வந்த போது அந்த விவரங்களை அஸ்வினி ஹாஸ்டலில் வைத்து விலாவாரியாகச் சொல்ல, ஒவ்வொன்றிலும் ஆயிரம் குற்றம் குறை சொல்லி அஸ்வினியே அந்த வரனை மறுப்பது போல் செய்ததும் இலக்கியா தான். முதலில் அஸ்வின் ஜாதகம் வந்த போதும், கிராமத்துப் பையன் அம்மாஞ்சி மாதிரி இருக்கான் என்றெல்லாம் சொல்லி அஸ்வினியைக் கலைத்து விட்டதில் அவளுக்குப் பெரும் பங்கு உண்டு. பல வரன்கள் தட்டிப் போனபின் அஸ்வினியின் தெளிவில்லாத குணத்திற்கு இவன் பொருத்தமாக இருப்பான், அஸ்வினைத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று அவள் தந்தை பிடிவாதமாக நின்ற போது வேறு வழியின்றி அஸ்வினி சம்மதித்தாள். இருந்தாலும் இலக்கியா அவள் மனதில் விதைத்த சில எண்ணங்கள் அப்படியே இருந்தன.

முன்பு வாய் மூலமாக சொந்த விஷயங்களை வெளியே சொல்லி தன் நிம்மதியை சிக்கலாக்கிக் கொண்ட அஸ்வினி, இப்போது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்தும், ஃபேஸ்புக்கில் பதிவுகளிட்டும் தன் கதையை டமாரம் அடிக்கிறாள். அதற்குத்தான் ஆனந்தி சலிக்காமல் திட்டுகிறாள். அவள் ஸ்டேட்டஸில் வைக்கும் வாசகத்தையோ, பாடலையோ வைத்து அவள் வீட்டில் என்ன நடந்திருக்கும் என்று கதை கட்டிப் பேசுவது அவளுடன் படித்த சிலருக்கு விருப்பமான பொழுதுபோக்கு.

இந்த முறை அஸ்வின் டெல்லியில் இருந்து வருகிறேன் என்ற போது அஸ்வினி அதை முதலில் நம்பவில்லை. 'இதோ.. டிக்கெட் வேணா அனுப்புறேன்' என்று அவன் அனுப்பி வைக்க, அதைப் போய் ஸ்டேட்டஸ் வைத்திருந்தாள். அப்போதே தோழிகளுக்கு ஒரு குறுகுறுப்பு. என்ன நடக்கப் போகிறது என்று. அவன் வந்து சேர்ந்த அன்று 'பனி விழும் இரவு.. நனைந்தது நிலவு' என்ற பாட்டை வைத்திருந்தாள். அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்துப் போட்டு 'செம ரொமான்ஸ் போல' என்று பிரைவேட் குரூப்பில் பேசிக் கொண்டார்கள். அப்படிப் பேசுவதையும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து குழுவில் இல்லாதவரிடம் பகிர்ந்து கொள்ளும் களவாணித்தனம் ஒரு சிலரிடம் இருந்தது.

இது போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் தான் பெரிய விரிசலுக்கு காரணமாக இருந்தது அஸ்வின் அஸ்வினி வாழ்வில். தனக்கு இவன் பொருத்தம் இல்லையோ என்று அஸ்வினியின் மனதில் ஒரு எண்ணம். அவனுடைய உழைப்பு, நேர்மை, ஏழ்மை நிலையில் இருந்து குடும்பத்தை முன்னேற்றியது எதுவும் கஷ்டம் தெரியாமல் வளர்ந்த அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. 'உனக்குப் பொறுப்பு காணாது, அந்தப் பையன் பொறுப்பானவன்' என்று சொல்லிச் சொல்லி திருமணம் செய்து வைத்தார் அவளது அப்பா.

முடிந்த அளவு சிக்கனம், குறைவான பொருட்களுடன் நிறைவான வாழ்வு என்று வளர்ந்த அஸ்வினால், வாரம் ஒரு முறை ஹோட்டலில் போய் சாப்பிட வேண்டும், மாதம் ஒரு முறை ஷாப்பிங் போக வேண்டும், கடன் வாங்கியாவது வெளிநாட்டு டூர் செல்வது என்று வளர்ந்த அஸ்வினிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. மகளுக்குத் திருமணம் செய்து வைத்த நிறைவில் அவளது அப்பா கண்ணை மூடிவிட்டார். அஸ்வினிக்கு ஒரே ஒரு அக்கா. வளைகுடா நாடொன்றில் அவள் குடியமர்ந்து விட, அஸ்வினியின் அம்மா இளைய மகளுடனேயே இருந்து விட்டார்.

திருமணமான பிள்ளைகளுடன் தங்கியிருக்கும் பல பெற்றோர்கள் செய்யும் தவறை அவரும் செய்து விட்டார். மருமகனின் குறைகளாக அவர் நினைப்பதை அவ்வப்போது அஸ்வினிக்கு சொல்லி வர, அவளும் அதை வைத்து அஸ்வினிடம் வார்த்தைகளை விட்டாள். தன்னுடைய சுயமரியாதை சீண்டப் பட்ட போது அஸ்வின் தேர்ந்தெடுத்தது கல்வியை. உன்னிடம் அது இல்லை இது இல்லை என்று அம்மாவும் மகளும் பேசப் பேச, எனக்குத் தெரிந்தது படிப்பு ஒன்று தான். அதை நான் செய்கிறேன் என்று தன் நிலையை மேம்படுத்திக் கொள்ள ஆரம்பித்தான். அவனது படிப்பு மற்றும் உழைப்பால் அஸ்வினியின் அப்பா ஆரம்பித்த நிறுவனம் சற்று நிமிர்ந்து நின்றது. அதை நம்பிக்கையான பணியாளர்களின் மேற்பார்வையில் கொடுத்துவிட்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருக்கிறான் அஸ்வின். இடையில் இரண்டு பிள்ளைகள். எப்போது சமாதானமாகி சேர்ந்தார்கள், எப்போது பிள்ளை பெற்றார்கள் என்று காலண்டரை வைத்துக் கொண்டு தேடி, யோசித்துப் பார்த்தால் தான் சொல்ல முடியும். இப்படியே கழிந்து விட்டது இவர்களின் இதுவரையிலான வாழ்க்கை.

இருவருக்கும் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் ரொம்பவே அலுத்து விட்டது. யாரும் என்னவும் சொல்லட்டும், பிள்ளைகளுக்காக வீட்டிலேயே இருப்போம் என்று அவன் நினைத்திருக்க, ஆனந்தியின் ஆலோசனையும், பிள்ளைகளின் நிலையும் அஸ்வினியையும் கொஞ்சம் மலை இறங்க வைத்தது. இதோ இப்போது எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்திருக்க, ப்ரீத்தியால் இப்படி ஒரு சின்ன உரசல் வந்துவிட்டது.

இப்படிப்பட்ட உரசல்கள் அவர்களுக்குப் புதிதல்ல. அஸ்வின் தான் இறங்கி வந்து எப்போதும் சமாதானம் செய்வான். அதனாலேயே அவன் தான் தவறு செய்கிறவன், அதனால்தானே மன்னிப்பு கேட்கிறான் தான் செய்வது தவறில்லை என்ற எண்ணம் அஸ்வினிக்குள் ஆழமாக விழுந்து விட்டது.

Behind doorsல் செய்தியைப் பார்த்துவிட்டு அவள் வெடித்து அழவும், ஈஸ்வரியையும் பிள்ளைகளையும் வம்படியாக அவர்களது அப்பார்ட்மெண்டில் இருக்கும் பார்க்குக்கு அனுப்பி வைத்தான் அஸ்வின். அதன் பின் அழுது கொண்டிருந்த அஸ்வினியின் அருகில் அமர்ந்து அவளைத் தன் மேல் சாய்த்துக் கொண்டு, "கொஞ்சமாவது மண்டையில மூளை இருந்தா இப்படி எல்லாம் நீ பேசுவியா? இங்க பாரு.. என்னைப் பாரேன்" என்றான்.

அவள் நிமிர்ந்து பார்க்க மறுக்கவும் அவளைக் அப்படியே அணைத்து நெற்றியில் முத்தம் கொடுத்தான். கண்களைத் துடைத்து விட்டு, "உன்னை விட்டு வேற யாரையாவது நான் இதுவரை பார்த்திருக்கேனா.. அப்படியே பாக்குறதுன்னா எப்பவோ போயிருக்க மாட்டேனா? நம்ம ரெண்டு பேர் மேலயும் உனக்கு நம்பிக்கை இருக்கா இல்லையா?" என்றான்.

அஸ்வினி பதில் பேசாமல் இருக்கவும், "ஏண்டி.. டெல்லியில் அழகழகா பால்கோவா மாதிரி இருக்குது ஹிந்திக்காரப் பிள்ளைங்க.. அதுவும் கல்யாணம் ஆகாத பிள்ளைங்களே ஆயிரம் இருக்கு.. அதை விட்டுட்டு இந்த அரைக் கிழவியைப் போய் கல்யாணம் பண்ணிக்கனும்னு எனக்கு தலையெழுத்தா?' என்று அவன் கேட்க, இப்போது புதுவிதமான கோபத்துடன் முறைத்துப் பார்த்தாள் அஸ்வினி.

"இந்த அரைக்கிழவனுக்கு சின்னப் பொண்ணு கேக்குதா?" என்று அவள் கேட்கவும், "சேச்சே! எனக்கு இந்தக் கிழவி தான் வேணும்" என்றான் அவனும்.

"போங்க நீங்களும் உங்க சமாதானமும்" என்று வெட்கத்துடன் அஸ்வினி அந்தப் பக்கம் திரும்பிக் கொள்ள, அஸ்வினுக்கு ஜெயந்தி எப்போதும் கூறுவது நினைவுக்கு வந்தது. 'அப்பப்ப குழந்தைக்கு மிட்டாய் கொடுத்து ஏமாத்துற மாதிரி எதையாவது சொல்லி டைவர்ட் பண்றதை நிறுத்திட்டு பேஸிக்கலா பிரச்சனையோட காரணம் என்னன்னு பார்த்து சால்வ் பண்ணுடா' என்று கூறுவாள் அடிக்கடி.

அதனால், தான் இதுவரை தங்கள் பிரச்சனைக்கான காரணங்கள் என்று யோசித்து வைத்திருந்ததையெல்லாம் அஸ்வினியிடம் கூறினான். இங்க பாரு நம்ம ரெண்டு பேரும் வளர்ந்த விதத்தில இருந்தே ஏகப்பட்ட வித்தியாசங்கள். அதையும் மீறி நமக்குள்ள ஏதோ ஒரு அட்ராக்ஷன் இருக்கு. அதை இல்லேன்னு சொல்லுவியா நீ? இனிமே இப்படி சண்டை போட்டுக்க வேண்டாம். உங்க அம்மா சொல்றதெல்லாம் இந்தக் காதுல வாங்கி அந்தக் காதுல விடு.. இனிமே சேர்ந்தே இருப்போம்.. நீ மட்டும் சட்டு சட்டுன்னு எமோஷனலா ஆகுறதை விட்டுடு. அது குழந்தைகளுக்கு மெண்டல் ஹெல்த்தை ரொம்ப பாதிக்கும்" என்றான்.

வழக்கமாக சண்டையிட்டு கொள்ளும்போது கூறும் உனக்கு அன்பில்லை அக்கறை இல்லை பொறுப்பு இல்லை எல்லாம் மீண்டும் கூறி அவனை கால் மணி நேரத்திற்கும் மேலாகத் திட்டினாள் அஸ்வினி.

அனைத்தையும் கேட்டுக் கொண்டு, "புரியுது.. என் மேல தப்பு இருக்குன்னா உன் மேலேயும் சமமா தப்பு இருக்கு.. ஆனா அதை எல்லாம் மீறி வண்டியை ரெண்டு பேரும் சேர்ந்து இழுத்துட்டுப் போய் தான் ஆகணும்" என்று கூறுகையில் அஸ்வினியின் அம்மா ஈஸ்வரி ஃபோன் அடித்தார். "பிள்ளைங்களுக்கு டயர்ட் ஆயிடுச்சு.. சாப்பிட ஏதாவது கொடுக்கணும். வரலாமா?" என்றார்.

"அப்பாடி! இப்பவாவது உங்க அம்மாவுக்கு கேட்டுட்டு வரணும்னு தோணி இருக்கே" என்றான் அஸ்வின்.

"பின்ன? நீங்க என்ன சொல்லி அனுப்பி வைச்சீங்க அவங்களை..? அதான் பர்மிஷன் கேட்கிறாங்க" என்றாள் அஸ்வினி. கோபத்தில் வெட்கத்தைக் கலக்க முடியும் என்று அஸ்வினுக்கு அப்போது தான் தெரிந்தது. என்ன சொல்லி அனுப்பி வைத்தேன் என்று அவன் யோசிக்க அவனுக்கும் அது உரைத்தது.

"என்னையும் குழந்தைகளையும் ஏன் வெளியே அனுப்புறீங்க? என்னை வெளியே அனுப்பிட்டு என் பொண்ணை என்ன பண்ணப் போறீங்க?" என்று ஈஸ்வரி சண்டையிடுவது போல் அஸ்வினிடம் கேட்டிருக்க,

"இருக்கணும்னா இருங்க.. கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கப் போறேன்.. அதுக்கப்புறம் உங்க பொண்ணு ஒத்துழைச்சா தூக்கிக்கிட்டு பெட் ரூமுக்குள்ள போகப் போறேன்.. நீங்க இருக்கிறதுல எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. உங்க மகள் கிட்ட ஓகேவா கேட்டுக்கோங்க" என்றிருந்தான் அஸ்வின்.

ஆவென்று வாய் பிளந்தவர்தான்; அதற்கு மேல் எந்த வார்த்தையும் பேசாமல் பேரனையும் பேத்தியையும் கூட்டிக்கொண்டு வெளியில் போயிருந்தார். "பாவம்.. போன அவசரத்தில் தண்ணீர் பாட்டில் கூட எடுத்திருக்க மாட்டாங்க உன் அம்மா. இதை மாதிரி முன்னாடியே பேசி இருக்கணும்.. உங்க அம்மா இதுக்கு தான் அசருவாங்கன்னு இவ்வளவு நாள் எனக்குத் தெரியாம போச்சு பாரேன்" என்றான்.

"குசும்பு தான் உங்களுக்கு" என்று எழுந்த அஸ்வினி குழந்தைகளுக்காக ஏதாவது செய்யலாம் என்று சமையலறைக்குள் புகுந்தாள். இப்படியாக சமாதானம் செய்த அஸ்வின் தானும் கொஞ்சம் உதவி செய்துவிட்டு வீட்டிற்கு வேண்டிய சாமான்கள் என்னென்ன என்று கேட்டு வாங்கி கொடுத்துவிட்டு ஜெயந்தியைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லாமல் 'வெளியே போயிட்டு வரேன்' என்று போனான்.

அப்போதுதான் ஜெயந்தியின் வீட்டில் வைத்து அந்த பார்ட்டியைப் பார்த்ததும் அவர்களை ஜெயந்தி பேசி அனுப்பியதும். ஜெயந்தி தியாகராஜன் இருவருடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்த நேரத்தில் அஸ்வினி போன் அடித்தாள். "வந்துடறேன் மா" என்று அஸ்வின் கூறுகையில் பின்னணியில் ஜெயந்தியும் தியாகராஜனும் ஏதோ கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தது அஸ்வினிக்குக் கேட்டது.

அஸ்வினிக்கு கணவன் தன்னைவிட நண்பர்களிடம் நெருக்கமாக இருப்பதைப் பார்த்தால் எப்பொழுதும் பொறாமை பற்றிக் கொண்டு வரும். கோபமாக இருக்கும் பொழுது நண்பர்கள் பேச்சோ அவர்களது ஃபோன் அழைப்போ எதிர்ப்பட்டால் கோபத்தின் உச்சிக்கே போய்விடுவாள். மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் யார் போன் செய்தாலும் அப்போது மகிழ்ச்சியான மனநிலையை அப்படியே மாற்றி விடுவாள். இதற்கு அஸ்வினும் ஒரு காரணம். பேசினால் ஹாய் ஹலோவுடன் நிறுத்துவதில்லை. கல்லூரி நண்பர்கள், அலுவலக நண்பர்கள், பள்ளி நண்பர்கள் என்று யார் போன் செய்தாலும் மணிக்கணக்காக உட்கார்ந்து பேசுவான். இப்போது நல்ல மனநிலையில் அஸ்வினி அழைத்திருக்க, அவன் இருப்பது ஜெயந்தியின் வீட்டில் என்று தெரிந்தவுடன் கோபம் பொத்துக் கொண்டு வந்தது. தன் வழக்கத்தை மாற்றாமல் ஸ்டேட்டஸில் 'வாழ்வே மாயம்' பாடலை வைத்தாள். அதைப் பார்த்துவிட்டு தான் ஆனந்தி காய்ச்சு காய்ச்ச என்று காய்ச்சுகிறாள்.


ஓட ஓட ஓட தூரம் குறையலை
பாட பாட பாட பாட்டும் முடியலை
போகப் போகப் போக ஒண்ணும் புரியலை
ஆக மொத்தம் ஒண்ணும் விளங்கலை
 
Top