கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

துளி எண்ணெய் 9

Akhilanda bharati

Moderator
Staff member
9. ஆட்டோகிராஃப்



"ஏம்மா உன் தம்பி எப்படி இருக்கான்? இது உன் பொண்ணா? சின்ன வயசுல நீயும் இவளை மாதிரி தான் இருந்தே.. உங்க அப்பா நடுவுல கொஞ்ச நாள் சாமி நம்பிக்கை இல்லாம இருந்தாலும் கடைசி காலத்துல நம்ம சாமி மேல நம்பிக்கை வச்சு வந்தார்.. போதாத காலம்.. நல்ல மனுஷன்.. இவ்வளவு சீக்கிரம் போயிருக்க வேண்டாம்.. இப்ப நம்ம சாமி மேல நம்பிக்கை வச்சு வந்துட்ட இல்ல.. இனி எல்லாம் நல்லபடியா நடக்கும்" என்று கூறியபடி மாலையையும் பிரசாதத்தையும் ப்ரீத்தியின் கைகளில் தந்த பூசாரி அத்துடன் நிறுத்தியிருந்தால் பரவாயில்லை.

"அப்புறம் திரும்ப கல்யாணம் பண்ணிக்கப் போறதா சொன்னாங்களே? ஏதோ ஃபோன்ல எல்லாம் செய்தி வந்துச்சாம்.. சட்டுபுட்டுன்னு நம்ம ஊரு பையனே யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிட்டு இங்கேயே செட்டில் ஆயிடு.. இப்ப பார்த்திருக்கிறது கூட இந்தியாகார பையன் தானாமே" என்றும் சேர்த்து கேட்டு வைத்தார். கடுப்பாக இருந்தது ப்ரீத்திக்கு. முதலில் அவர் என்ன சொல்கிறார் என்றே புரியவில்லை பின்பு தான் அந்த வீடியோவைப் பற்றி சொல்கிறார் என்று புரிந்தது. ஜெயந்தி அளவுக்கோ அஸ்வின் அளவுக்கோ அவள் அந்த குசும்பு பிடித்த இணையதள செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. 'அது பாட்டுக்கு அது.. நம்மை என்ன செய்யப் போகுது அடுத்த வாரம் பிளைட் ஏறிட்டா இங்கே சோசியல் மீடியால என்ன பேசினா என்ன' என்ற எண்ணம் தான் அவளுக்கு. அது இப்படி குக்கிராமம் வரைக்கும் பரவி, வெளி உலகமே தெரியாமல், தான் உண்டு கோவில் உண்டு என்று இருக்கும் இந்தக் குலதெய்வ கோயில் பூசாரி வரை பரவி இருக்கிறது என்றால்? பெரிதாக ஒரு பெருமூச்சு விட்டுக் கொண்டாள்.

"என்னம்மா இந்தியாக்காரப் பையன் தானே?" என்று பூசாரி மறுபடியும் கேட்கவும், "இல்ல.. பாகிஸ்தான் காரன்" என்று கூறிவிட்டு அவரது பதிலுக்குக் காத்திருக்காமல் டாக்ஸியை நோக்கி நடந்தாள். அவளுடன் பொங்கல் வைக்க உதவியாக நின்றிருந்த பெண்மணி சிறிய பாத்திரத்தில் கொஞ்சம் பிரசாதத்தை வைத்து அவளிடம் நீட்டி "சக்கரை பொங்கல் எல்லாத்துக்கும் செலவழிச்சாச்சும்மா.. கொஞ்சம் போல பானையில் மிச்சமிருக்கு.. அதை இலையில் கட்டி எடுத்துக்குறேன்.. பானையை நீங்க கொண்டு போங்க" என்று கூற, "இல்லம்மா பானையை நான் வச்சு என்ன செய்யப் போறேன்..நீங்களே வச்சுக்கோங்க" என்று கூறியபடி அவளுக்கு செலவுக்கு கொஞ்சம் பணம் கொடுத்தாள்.

ப்ரீத்திக்கு அன்றைய அனுபவம் இனிமையானதாக இருந்தது. வைதேகிக்கு குலதெய்வம் கோயில் என்றால் என்ன, அங்கு என்ன எல்லாம் செய்வார்கள், அதன் முக்கியத்துவம், பொங்கல் வைப்பது எப்படி என்று தனக்குத் தெரிந்தவற்றை மகளுக்குக் கூறிக் கொண்டே இருந்தாள். யூ ட்யூபில் பொங்கல் வைப்பது எப்படி என்பதையும் வரும் வழியில் வைதேகி பார்த்து வைத்திருந்தாள். "இன்ட்ரஸ்டிங் மா! கல்லு வச்சு அங்கேயே கிடைக்கிற ஸ்டிக்ஸ் எல்லாம் போட்டு தீ வச்சு பண்ணுவீங்களா? எவ்வளவு நேரம் ஆகும்? தண்ணி கொண்டு போக வேண்டாமா?" என்று ஆர்வமாகக் கேட்டாள். ஏற்கனவே சொல்லி வைத்திருந்ததால் உதவிக்கு வந்த பெண் அரிசி வெள்ளம் நெய் என்ன பிற பொருட்களைக் கொண்டு வந்துவிட, முடிந்த அளவு வேலைகளை தாங்களாகவே செய்தார்கள். பொங்கல் பொங்கி வருவதை பார்த்தவுடன் அவ்வளவு மகிழ்ச்சி வைதேகிக்கு.

பொங்கல் வைக்கத் துவங்கிய உடனே ஒரு சிலர் வந்து நலம் விசாரித்தார்கள். உங்க அப்பா இன்னும் கொஞ்சம் விசாரித்து முதல் கல்யாணம் பண்ணி வைத்திருக்கலாம், இப்போது மறு திருமணம் செய்து கொள் என்பது போல் பேசினார்கள். அக்கறையுடன் தானே சொல்கிறார்கள் என்று நினைத்தால், இப்போது பூசாரி சொன்ன பிறகு தான் தெரிகிறது இவர்களும் அந்த வீடியோவைப் பார்த்து விட்டார்கள் என்று. ஒரு சேனல்காரன் அரைகுறையாக செய்தியை ஒளிபரப்ப, பழைய வழக்கைத் தோண்டி எடுத்து அதன் விபரங்கள் உட்பட விலாவாரியாக இன்னும் இரண்டு மூன்று சேனல்கள் அலசிக்கொண்டிருந்ததை அவள் அறியவில்லை.

கோவிலில் இருந்து கார் கிளம்பி கொஞ்ச நேரம் கழித்து தான் ப்ரீத்தி அந்த கேள்வியை கேட்டாள். "அம்மா ஹூசைன் அங்கிள் பாகிஸ்தானா?" என்று. 'ஞே' என்று விழித்தாள் ப்ரீத்தி. ஹுசைனை அவள் முதலில் சந்தித்தது ஒரு மனித மேம்பாட்டுப் பயிற்சி வகுப்பில். வெளிநாட்டினருக்கு வேலை வாய்ப்பு தரும் முன்பாக லண்டனில் சில பயிற்சி வகுப்புகளுக்கு அவள் செல்ல வேண்டியிருந்தது. அதில் ஒன்றில் ப்ரீத்தி இணைந்திருந்த போது, தன் நிறுவனத்தில் இருந்து இன்னொரு நிறுவனத்திற்கு ஹூசைன் மாறுவதாக இருந்தது. அந்த இடைவெளியில் அந்தப் பயிற்சிக்கு அவனும் வந்திருந்தான். பல நாட்டினர் கலந்து கொண்டிருந்தார்கள். ஆரம்ப அறிமுக வகுப்புகளில் ஒன்றில், நாளைக்கு அனைவரும் அவரவர் தாய்நாட்டைப் பற்றிய சிறிய பவர் பாயிண்ட் பிரசன்டேஷனுடன் வந்து அறிமுகம் செய்து கொள்ளுங்கள் என்று இன்ஸ்டிட்யூட் தரப்பில் சொல்லியிருக்க, ப்ரீத்தி இந்தியாவைப் பற்றி ஆர்வமாக நிறைய விஷயங்கள் சேகரித்துப் போயிருந்தாள். எதைச் சொல்ல, எதை விட என்று அவளுக்குத் தெரியவில்லை. இந்தியாவின் கோகினூர் வைரம், மயில் சிம்மாசனம் இவை எல்லாம் இங்கிலாந்து அரண்மனையில் இருப்பதை சுட்டிக்காட்டி இவை எல்லாம் எங்களுடையதாக்கும் என்று தன் தேச பக்தியை வெளிக்காட்டினாள்.

அதைப் போலவே வேறு நாட்டுக்காரர்களும் தங்கள் நாடுகளைப் பற்றிச் சொல்ல, ஹூசைனின் முறை வந்த போது, அவன் இது எங்கள் நாடு என்று காட்டிய மேப்பில் காஷ்மீரின் சில பகுதிகளும் இருந்தன. நாம் படிக்கும் போது Pak Occupied Kashmir என்று படிப்போமே, அதை அவர்கள் தங்கள் நாட்டுப் பகுதியாகவே படிப்பார்கள் போலும். பிரீத்தியின் அருகில் அமர்ந்திருந்த ஒரு நைஜீரியாக்காரி இரண்டு வரைபடங்களையும் மனதளவில் ஒப்பிட்டு, 'இது என்ன? நீங்களும் ஒரு இடத்தை உங்களோடதுன்னு சொன்னீங்க.. அவர் அவங்களோடதுன்னு சொல்றாரு.. ரெண்டு மேப்புக்கும் வித்தியாசம் இருக்கே" என்று கேட்டாள்.

கோபம் கோபமாக வந்தது ப்ரீத்திக்கு. அதன் பின் ஹூசைனின் அறிமுகத்தைக் கூர்ந்து கவனித்தாள். அவர்களுடைய வரலாறு எல்லாம் சுதந்திரத்திற்குப் பிந்தையதாக இருந்தது. இந்தியா அளவிற்கு பாரம்பரியமானது எதுவும் இல்லை. இதையெல்லாம் சுட்டிக்காட்டி உணவு வேளையில் ஹுசைனை ஒரு பிடி பிடித்தாள் ப்ரீத்தி. "அது எப்படிங்க நீங்களே உங்களுக்கு ஒரு மேப் வரைஞ்சுக்குவீங்களா? எல்லா அட்லஸ்லயும் வேர்ல்ட் மேப்பை எடுத்துப் பாருங்க.. நீங்க வரைஞ்சிருக்கிற படத்துல இந்தியாவோட அழகான பாரதமாதா மாதிரியான ஷேப்பே போயிடுச்சு" என்று கொந்தளித்தாள்.

அதே நைஜீரியாக்காரி இவர்கள் அருகில் வந்து, "ஏன் சின்ன விஷயத்துக்கு சண்டை போடுறீங்க.. அவ்வளவு பாசம் இருந்தால் இரண்டு பேரும் அவங்கவங்க நாட்டிலேயே இருந்திருக்கணும்" என்றாள். "ஆமாமா இந்த ஃபாரினர்ஸே இப்படித்தான்.. அவங்க ஊர்ல பிழைக்க வழி இல்லன்னு இங்க வர்றது.. அதுக்கு அப்புறம் என் நாடு தான் பெருசுன்னு சொல்றது" என்று இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவனும் சொல்ல பிரீத்திக்கு கடுப்புக்கு மேல் கடுப்பாகிவிட்டது.

ஹுசைன் எல்லாவற்றையும் ஒரு புன்னகையுடனே பார்த்திருந்தான். "யாரோடதா இருந்தா என்ன? நாம முன்னாடி ஒண்ணா இருந்தவங்க தானே.. பழைய பெருமைகளை ரெண்டு நாட்டுக்கும் பொதுவா ஷேர் பண்ணிக்குவோம்.. ரொம்ப இன்சிஸ்ட் பண்ணீங்கன்னா என்னோட ப்ரென்டேஷன்ல சேஞ்சஸ் பண்ணிடறேன். ஓகேவா?" என்று புன்னகையுடன் கூறினான்.

அவன் விவாதம் செய்வான், இறங்கி வர மாட்டான் என்று நினைத்த ப்ரீத்திக்கு மெல்லிய அதிர்ச்சி. கூடவே அவனது சிரிப்பும் பேச்சும் ஏதோ ஒரு வகையில் அவளை வசீகரித்தது. சுதாரித்துக் கொண்டு, "இட்ஸ் ஓகே" என்று கூறிவிட்டுச் சென்று விட்டாள். அதுவரை அவள் பார்த்த ஆண்கள் எல்லோரும் தாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என்று இருப்பவர்கள். இப்படித் தன்மையாகப் பேசும் ஆண்கள் யாரையும் அவள் பார்த்ததில்லை. அதிலேயே ஹுசைன் மீது அவளுக்கு நல்ல அபிப்பிராயம். ஒரு பொது நிகழ்ச்சியில் வைதேகியையும் அவன் சந்திக்க, அதன்பின் குடும்ப நண்பர்களாகி விட்டனர். ஒரு இனிய நாளில், நானும் உன் சிறிய குடும்பத்தில் இணைந்து கொள்ள வரலாமா என்று அவன் கேட்டதற்கு ப்ரீத்தி இன்னும் பதில் சொல்லாமல் தள்ளிப் போட்டு வருகிறாள்.

இந்த விஷயம் எல்லாம் மகளுக்குத் தெரியாது என்று நினைத்திருக்க, அவள் மறுமணம் என்றதும் ஹுசைனை மனதில் வைத்து இப்படிக் கேட்டதே அதிர்ச்சியாகிவிட்டது. "சும்மா அம்மா வாய்க்கு வந்ததை சொன்னேன்டா.. அதெல்லாம் ஒன்னும் இல்ல.. நீ தூங்கு. காலையில சீக்கிரமே எழுந்துட்டியே" என்றபடி வைதேகியைத் தட்டிக் கொடுத்து தூங்கச் செய்தாள். கொஞ்ச நேரத்தில் பிரீத்தி உறங்கிவிட, காரின் வேகத்திற்கு இணையாக ப்ரீத்தியின் மனமும் பயணித்தது. கடந்த ஒரு வருடமாகத் தான் அவள் இயல்பாக இருக்கிறாள். பழைய காயங்கள், வலி அனைத்தையும் மறந்து என்பதை விட, மனதின் பின்புறத்திற்குத் தள்ளிவிட்டு வாழ்கிறாள் என்று சொல்லலாம்.

கல்லூரிக் காலத்திலேயே நிறைவேறாத ஒரு காதல், கல்லூரி முடித்தவுடன் திருமணம், குழப்பத்தில் முடிந்த அந்தத் திருமணம், தாய் தந்தையரின் பிரிவு எல்லாமாகச் சேர்ந்து வாழ்வு ரசனைக்குரியது என்பதே அவளுக்குத் தெரியாமல் இருந்தது. பெரும்பாலான இந்தியப் பெண்களைப் போல, பிறப்பெடுத்து விட்டாயா,வளரு, பள்ளிக்குப் போக, பெற்றோர் கூறும் கல்லூரியில் படி, அப்படியே முதலில் கிடைத்த வேலைக்குப் போ, பெற்றோர் கைகாட்டும் யாராவது ஒருவனை கைப் பிடி, அவன் வேலைக்கு போகச் சொல்கிறானா, போ. இல்லையா வீட்டோடு கிட. அவன் உன் பணத்தை உன்னையே செலவழிக்க விட்டால் மகிழ்ச்சியாக வாங்கிக் கொள், இல்லையா உன் மொத்தத்தையும் அவன் காலடியில் அடகு வைத்துவிட்டு அவனுக்காகவே வாழு என்று தான் அவளின் மூளையும் ப்ரோக்ராம் செய்யப்பட்டிருந்தது.

மேலைநாட்டு வாழ்வு தான் உனக்கென்று ஒரு தனி வாழ்வு இருக்கிறது என்று காட்டித் தந்தது. தனிப்பட்ட வாழ்வென்று ஒன்ஞ பெண்களுக்கு உண்டு என்பதை அவள் இங்கிலாந்தில் இருந்ததால் தான் உணர்ந்து கொண்டாள் எனலாம். இந்தியாவில் இருந்திருந்தால், ஒன்று அவனை சகித்துக் கொண்டு போயிருப்பாள். இல்லை, பிரிந்ததற்காக வருந்திக்கொண்டு ஆயுள் முழுமையையும் பதற்றத்துடன் கழித்திருப்பாள்.

முதல் திருமணம் தோல்வியில் முடிந்த எல்லாரையும் போல பிரீத்திக்கும் இன்னொரு வாழ்க்கையில் அடி எடுத்து வைப்பதற்குத் தயக்கமாகத்தான் இருந்தது. கல்லூரிக் காலத்தில் அவளையும் ஒருவன் சுற்றி வந்தான். ப்ரீத்தி அவனுக்கு ஓகே சொன்ன சமயம் அவள் வீட்டில் திருமணத்தை நிச்சயித்து விட்டார்கள். இன்றும் கூட, நாம லவ் பண்ண ஆரம்பிச்சது வீட்டுக்குத் தெரிஞ்சிருக்குமோ.. அதனால உடனே கல்யாணம் வச்சுட்டாங்களோ என்று லேசான சந்தேகம் அவளுக்கு வரும். அவளுக்கு மறுக்க வாய்ப்பே இல்லாமல் தான் அந்தத் திருமணம் நடந்தது. காதலைச் சொன்ன கல்லூரித் தோழனை நினைக்கையில் ஒரு குற்ற உணர்வும் வரும். அவனுக்கு ஓகே சொன்ன கையோட வேற கல்யாணம் செஞ்சதால தான் நமக்கு லைஃப் இப்படி ஆயிடுச்சோ என்று தனக்குத்தானே கேட்டுக் கொள்வாள். எதையும் நெருங்கிய தோழிகளிடம் பகிர்ந்து அவளுக்குப் பழக்கம் இல்லை. அம்மாவிடமும் இந்த விஷயங்களைப் பேச முடியவில்லை.

ஹுசைனின் பால் அவள் மனம் சாய்ந்தாலும், நானும் வெஸ்ட்டர்ன கல்ச்சர் மாதிரி மூணாவது நாலாவதுன்னு போறேனே என்றும் தனக்குள் கூறிக் கொள்வாள். ஹுசைனைப் பற்றிய நினைவு வந்தவுடன் அவனுடனான வாட்சப் உரையாடல்களுக்கு ப்ரீத்தியின் கை தன்னை போல சென்றது.

எந்த விதத்திலும் அவன் ப்ரீத்தியைக் கட்டாயப்படுத்தவில்லை. உன்னுடன் என் வாழ்வு அமைந்தால் நன்றாக இருக்கும் என்பதை அவ்வப்போது செய்கையில் உணர்த்திக் கொண்டே இருந்தான். தேவை இல்லாமல் அவளை சந்திக்க முயல்வதில்லை. மறுமணம் செய்யும் எண்ணம் இருந்தால் உன் முதல் தேர்வு நானாகத் தான் இருக்கும் என்பதை வெளிப்படையாகவே சொல்லி இருந்தான். அவனின் அந்த வெளிப்படைத் தன்மை தான் அவன் வெற்றிக்கும் காரணம். புகழ்பெற்ற ஒரு ஆங்கில பத்திரிக்கையில் புகைப்படக் கலைஞராகவும் செய்தியாளராகவும் இருக்கிறான் ஹுசைன். அவனுடைய செய்திகள் பல உலக அளவில் பேசப்பட்டு இருக்கின்றன. சில செய்திகளுக்காக விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறான். ஹுசைனும் தன் முதல் திருமணம் ஒத்து வராமல் மணவிலக்குப் பெற்றவன் தான். அவனுடைய குழந்தை தற்சமயம் அவன் முதல் மனைவியிடம் இருந்து வருகிறது. ஒருவேளை என்னோட பொறுப்புக்கு வந்தாலும் வரலாம் என்று கூறியிருந்தான். ஒருமுறை பேச்சு வாக்கில், "என் பையன் இருந்தா கஷ்டமாக இருக்கும்னு ஃபீல் பண்றியா?" என்று கேட்டபோது, "சேச்சே! எனக்கு குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும்.. அவனையும் நல்லா பாத்துக்குவேன்" என்று வாய்தவறி சொல்லிவிட்டு பின் நாக்கைக் கடித்தாள் ப்ரீத்தி. பைத்தியம் இது ஒன்றே போதும் உனக்கு சம்மதம் தான் என்று நான் புரிந்து கொண்டேன், நீயாக தலையாட்டும் தினத்துக்காகக் காத்திருக்கிறேன் என்பதைப் போல ஒரு சிரிப்பு சிரித்தான் ஹுசைன். அதன்பின் அதைப்பற்றி அவன் வேறு எதுவும் பேசவில்லை.

எத்தனை நாட்கள் இப்படித் தனியாக எல்லாவற்றையும் சமாளிப்பது.. இந்த வருடத்திற்குள் ஹுசேனைத் திருமணம் செய்து கொள்ளலாமா என்று ஒரு புறம் எண்ணம் ஓட, இந்த சுதந்திர வாழ்க்கையை இன்னும் கொஞ்ச நேரம் அனுபவியேன் என்று மறுபுறம் தோன்றியது. மீண்டும் குடும்பம், கணவன், அவன் எதிர்பார்ப்புகள் என்று உள்ளே நுழையும் அளவிற்கு மனத் தெளிவு இருக்கிறதா எனக்கு என்றும் யோசித்தாள். நடுவில் அஸ்வினின் வீட்டில் நடந்த களேபரத்தைப் பற்றி ஜெயந்தி அழைத்து கூறியிருக்க, 'நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா அஸ்வின் வீட்டில் பிரச்சனை வராது இல்ல?' என்றும் சிறுபிள்ளைத்தனமாக யோசித்தாள். 'அஸ்வினுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? உனக்கு எது தேவையோ அதை மட்டும் நீ யோசி.. ஹுசைனுக்கு ஓகே சொல்றதுக்கு ஒரு மொக்க காரணம் தேடுறியா நீ?' என்றும் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.

அலுப்பாக இருந்தது. தானே கேள்வி கேட்டு தானே பதில் சொல்லி பட்டிமன்றம் போல் இரண்டு தரப்புக்கும் தானே மாறி மாறி விவாதம் செய்வது சலிப்பாக இருந்தது அவளுக்கு. கண்களை மூடிக்கொண்டாள். இவள் இப்படி குழப்பத்தில் சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்க, சமாதான உடன்படிக்கையை இன்னும் சிறப்பாக செயலாற்றும் விதமாக அஸ்வின் தன் குடும்பத்தை ஒரு திரையரங்குக்கு அழைத்துச் சென்றான்.

"உங்க அம்மா வர்றதா இருந்தா பேசாம வாய மூடிட்டு வரணும்.. நொச்சு நொச்சுன்னு ஏதாவது சொல்லிட்டே வந்தாங்கன்னா வரவே வேண்டாம்னு சொல்லிரு.. அதுக்கு பேசாம உங்க வீட்ல இருக்கட்டும்" என்று அஸ்வின் அஸ்வினியிடம் கூற,

"பாவம்ல அவங்க.. தனியா தானே இருக்கணும்.. அவங்களும் எங்க போறாங்க.. இந்த அபார்ட்மெண்ட் கேட்டைத் தாண்டி வெளியே போறதில்லை" என்று அஸ்வினி பரிந்து கொண்டு வந்தாள். "சரி சைலன்ஸ்! டோர் லாக்! இது ரெண்டும் நினைவு இருக்கட்டும்.. சொல்லிக் கூட்டிட்டு வா" என்றான் அஸ்வின்.

ஈஸ்வரியா சும்மா இருப்பார், காரை கிளப்பி ஸ்டார்ட் செய்யவும் வண்டியை எடுத்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகி இருந்ததால் அது லேசாக மக்கர் செய்தது. "இதெல்லாம் என்ன வண்டின்னு இதைப் போய் வச்சிருக்கீங்க? அந்தக் காலத்திலேயே அம்பாசிடர் வச்சிருந்த குடும்பம் நாங்க.. இப்படி கிளம்புற நேரத்துக்கு எங்க வண்டி எதுவுமே பேஜார் பண்ணதில்லை" என்றார். வண்டியை அணைத்துவிட்டு கோபத்துடன் அஸ்வின் இறங்கப்போக,

அருகில் அமர்ந்திருந்த அஸ்வினி அவன் கையைப் பிடித்து, "விடுங்க.. மறுபடியும் ஸ்டார்ட் பண்ணுங்க" என்றபடி, "அம்மா நீ கொஞ்சம் சும்மா இருக்கியா?" என்றாள். முணுமுணுத்துக் கொண்டே தான் வந்தார் ஈஸ்வரி. தன் வாழ்வில் முக்கிய திருப்புமுனை விரைவில் நிகழப் போவதை அறியாமல் அந்தத் திரையரங்கம் இருந்த மால் நோக்கி வண்டியை செலுத்தினான் அஸ்வின்.



"உனக்கென்ன வேணும் சொல்லு
உலகத்தைக் காட்ட சொல்லு!"
 
Top