கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தொடரும் பந்தங்கள் அத்தியாயம் 12

அத்தியாயம் 12.

நரேந்திரன் ஆணைப்படி ஊரெங்கும் பெண்களுக்கு போர் பயிற்சி வழங்கப்படும் என்ற செய்தி பரவியது.

“நம்ம அரசருக்கு புத்தி பேதலித்து போய்விட்டது என்று நினைக்கிறேன். பெண்களுக்கு போர் பயிற்சியா?” என்று மக்கள் பேச ஆரம்பித்தார்கள்.

பெண்களுக்கு போர் பயிற்சி அளிக்க போர் வீரர்கள் தயங்கினார்கள். தங்கள் வீட்டில் உள்ள பெண்களை பயிற்சி கூடம் அனுப்பவும் தயக்கம் கொண்டார்கள்.

போர் பயிற்சி குறித்த நாளில் அங்கு நின்ற ஒரே பெண் தெய்வானை மட்டும் தான். இதை ருத்ரன் எதிர்பார்த்தார். ஆனால் தெய்வானைக்கு இது அதிர்ச்சி கொடுத்தது.


“ஏன் தந்தையே எந்த பெண்ணும் வரவில்லை?”

“பெண்களுக்கும் சண்டையிடும் எண்ணமும் தைரியமும் மனதில் வரவில்லை தெய்வானை. ஆண்களும் அதை ஏற்கவில்லை. இதை எதிர்பார்த்தேன்!” ருத்ரன் நிதானமாக கூறினார்.

“அரசே இந்த திட்டம் வெற்றி பெறவில்லை. இனி என்ன செய்வது?” நரேந்திரனிடம் கேட்க, மொத்த மக்களையும் கூட சொல்லி உத்தரவு பிறப்பித்தான்.

மறுநாள் மக்கள் அனைவரும் கூடி நின்ற வேளையில், ருத்ரன் “நம் நாடு பெரும் போரை சந்திக்க காத்திருக்கிறது. அதில் நாம் வெற்றி பெற வேண்டுமானால் அதிக படைபலம் வேண்டும். அதற்க்காக பெண்களுக்கு போர் பயிற்சி வழங்கி படையில் சேர்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்றார்.


“தளபதியாரே இது சரியான யோசனை தானா? பெண்களுக்கு உடலில் ஏது அவ்வளவு பலம். ஆணுக்கு இணையாக பெண்ணால் எப்படி போர்க்களம் புகுந்து சண்டையிட முடியும். மேலும் போர்ப்படையில் உள்ள பெண்ணை யார் திருமணம் செய்து கொள்வார்கள்?” மக்கள் மாறி மாறி கேள்விகள் கேட்க தொடங்க கூச்சல் அதிகமாகியது.


கேலிகளும் வசைகளும் கூட தொடர்ந்து வந்தது. என்ன சொல்வது என்று தெரியாமல் ருத்ரன் அமைதியாக இருந்தார். கூட்டத்தில் ஒற்றர்கள் இருக்க கூடும் என்பதை அறிந்து சிலவற்றை சொல்லவும் முடியாமல் தவித்தார்.

தெய்வானை, கூட்டத்தில் இருந்து விலகி மையத்தில் வந்து நின்றாள். “ஏன் பெண்கள் சண்டையிட கூடாதா? எங்களுக்கு எங்கள் நாட்டின் மீது பற்று இல்லையா?” என அனைவரையும் பார்த்து கேட்டாள்.


தன் மகளின் செய்கை சரியென நினைத்து ருத்ரன் அமைதியாக இருந்தார். நரேந்திரனும் அவரின் முகத்தை பார்த்து சுதாரித்து கொண்டார். “தெய்வானை வீர வசனங்கள் பேசலாம். ஆனால் அது அடுப்பாங்கறை அல்ல. அது போர்க்களம். ரத்த வாடையும் ஓலங்களும் நிறைந்த இடம். தேக பலமும் தைரியமும் குடிகொண்ட எங்களால் மட்டுமே முடியும். தளபதியின் பெண் என்பதால் துள்ளி குதிக்காதே!” என்றார் ஒரு படைவீரர்.


“தளபதியின் பெண் என்பதால் தான் பேசுகிறேன். வீரமும் தைரியமும் என் ரத்தத்தில் பிறந்தது. கத்தியின் இருபுறமும் கூர்மை உண்டு. அதற்கு ஆண் பெண் பேதம் பிடிப்பிலும் தெரியாது. உடலில் இறங்கும் போதும் தெரியாது” என்றதும் ருத்ரன் நெஞ்சை நிமிர்த்தி அமர்ந்தார்.


“தெய்வானை இந்தா வாள். முதலில் இதை தூக்கும் சக்தி உன் உடலில் உள்ளதா?” என்று வாளை தூக்கி அவள் முன் வீசினான் ஒருவன். மொத்த கூட்டமும் ஸ்தம்பித்து நின்றது. மன்னன் முன்பு ஒரு வீரன் இப்படி செய்வதும் ஒரு பெண் பேசுவதும் என்று அனைவரும் உறைந்து போனார்கள்.


குனிந்து வாளை எடுத்தவள் உறையில் இருந்து எடுத்த தோரணையும், அவளின் பிடியுமே பலருக்கு உணர்த்தியது. “வாள் எடுக்க மட்டுமல்ல. அதை வீசவும் செய்வேன். அடுப்படியிலும் நாங்கள் தான். போர்க்களத்திலும் நாங்கள் தான். தைரியமிருந்தால் என்னோடு வாள் வீசி பார்.” என்று கர்ஜித்தாள்.

நரேந்திரனும் அதற்கு உத்தரவு தர ருத்ரன் அவளின் பேச்சில் ஆடிப்போனார்‌. தெய்வானை போர் பயிற்சி எடுத்ததே இல்லை. ஆனால் அவன் சிறந்த வீரன். அவளின் அவசரநிலை கண்டு வருந்தினார்.

வாளை உயர்த்திய அவள் சுற்றிய வேகமும் பிடியும் அவனை அழைத்த தோரணையும் அனைவரையும் வாயடைத்து நிற்க செய்தது. வாள் எடுத்த வீரனும் ஒரு நொடி யோசித்தே அவளை தாக்க வந்தான்.

அவன் தாக்குதலை தடுத்து அவள் மீண்டும் வாள் சுழற்ற அவன் திக்குமுக்காடினான்‌. பதினாறு வயது இளம்பெண் பத்து வருடம் படையில் இந்த ஒரு வீரனை நிலைகுலைய செய்தாள்.

கழுத்திற்கு நேராக வந்த வாளை நேர்த்தியாக தடுத்தவள் எதிர் தாக்குதலை நடத்தினாள். மொத்த கூட்டமும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்தது‌.

“போதும் நிறுத்துங்கள்!” நரேந்திரன் குறுக்கிட்டு சண்டையை நிறுத்தினான். “பெண்ணின் வீரத்தை இந்த ராஜ்ஜியமே பார்த்தது. தெய்வானை நீ எங்கு இந்த பயிற்சியை கற்றாய். நம் நாட்டில் பெண்களுக்கு பயிற்சி கொடுப்பதில்லையே.” என கேட்க, வாளை ஊன்றி மண்டியிட்டாள்.


“அரசே என் தந்தை மாபெரும் வீரர். அவர் ரத்தம் நான். அவர் பயிற்சி எடுத்த போதும், பயிற்சி கூடத்தில் அவ்வப்போது பார்த்ததையும் தனியாக முயற்சி செய்து பார்ப்பேன். அனுமதியின்றி வாள் வீசியதற்கு மன்னிக்கவும் அரசே!” என்றாள்.


“நீ பெண் ஏகலைவன் தான் தெய்வானை. இந்த பெண் படைக்கு நீ தலைமை தாங்கி வழிநடத்தி செல். நாளை முதல் பெண்களுக்கும் பயிற்சி உண்டு.” அறிவித்து விட்டு கூட்டத்தை கலைத்தார்.



மறுநாள் நரேந்திரனுக்கும் போர் பயிற்சி ஆரம்பித்தது. பெண்கள் சிலரே இருந்தாலும் அவர்களுக்கும் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. அது ருத்ரனின் நேரடி பார்வையில் இருந்தது.

நாளுக்கு நாள் பெண்களின் வருகை அதிகரிக்க நரேந்திரனுக்கும் ருத்ரனுக்கும் சந்தோஷமாக இருந்தது.


இத்தனைக்கும் காரணம் தன் மகள் தெய்வானை என்று கர்வம் ருத்ரனின் மனதில் மரத்தில் ஆணி போல் பதிந்தது.


அந்த நாடே தெய்வானையை சில நாட்களுக்கு பிறகு தலையில் வைத்து கொண்டாடியது.


ரத்தினபுரியே அன்று மகிழ்ச்சியில் துள்ளியது. அரசி பூங்குழலி கருவுற்றாள் என்ற செய்தியில் அனைவரும் திளைத்து போயிருந்தனர். ஊரெங்கும் பரிசுகளும் கொண்டாட்டமும் அரங்கேறியது.


”அரசே ரத்தினபுரி இளவரசரை காண ஆவலாக வந்துள்ளேன். அவரை தூக்கி கொண்டாட ஆவல் கொண்டுள்ளேன்.” என்றான் தர்மசீலன்.


“ஏன் சேனாதிபதியாரே உங்களுக்கு இளவரசி வேண்டாமா? எனக்கு பெண் குழந்தை தான் வேண்டும்.” என பூங்குழலி கூற,


“அதெல்லாம் முடியாது அரசியாரே. எங்களுக்கு இளவரசர் தான் முதலில் வேண்டும். பிறகு வேண்டுமானால் இளவரசி கிடைக்கட்டும்.” என்றான்.

“இருவரும் சண்டை போடாதீர்கள். இரட்டை குழந்தையாக கூட இருக்கலாம் அல்லவா?” குலசேகரன் கூறினான்.கலகலப்பும் சிரிப்பும் அந்த இடத்தை ஆக்ரமித்தது.




“அரசே முக்கியமான விசயம் பேச தான் வந்தேன். விடாரபுரத்தில் பெண்களுக்கு போர் பயிற்சி அளிக்கப்படுகிறதாம்.”


“கேள்விப்பட்டேன் தர்மசீலா!”


“அவர்கள் யூகித்திருக்ககூடும் அரசே. மூன்று திசையும் தன் வீரத்தை நிலைநாட்டிய தாங்கள் வடக்கே வர அதிக நாட்கள் எடுக்காது என்று. அதனால் தங்கள் படைகளுக்கு பலம் சேர்க்க இவ்வாறு செய்துள்ளார்கள்.”


“நம் படை பலத்தில் பத்தில் ஒரு பங்கு போதும் அவர்களை வீழ்த்த. ஏனெனில் அந்நாட்டு அரசன் நரேந்திரனுக்கு வீரம் இல்லை. படைத்தளபதி ருத்ரனே அவர்களின் பலம். இருந்தும் இத்தனை ஆண்டுகள் ஏன் அந்நாட்டின் மீது போர் தொடுக்கவில்லை என்று உனக்கு குழப்பமாக இருக்கும்.”


“ஆம் அரசே. நம் ராஜ்ஜியம் விரிவடைய தடையாக இருப்பது அவர்கள் மட்டுமே. அவர்களையும் நமக்குக் கீழ் கொண்டு வந்து விட்டால் மிகப்பெரிய பலம் நமக்கு சேரும். நம் ராஜ்ஜியமும் விரிவடையும்.”


“தர்மசீலா அது அவ்வளவு எளிதான காரியம் என்று நினைத்தாயா?”


“ஏன் அரசே அவ்வாறு கூறுகிறீர்கள்?”


“தர்மசீலா விடாரபுரத்தின் பலம் அங்கிருக்கும் வீரர்கள் இல்லை. நான்கு புறமும் சுற்றி இருக்கும் இந்த மலைகள் தான்.” கைநீட்டி காட்டினான்.


“போர்புரிய அழைக்கலாமே? இல்லையெனில் நேரடியாக அவர்களின் ராஜ்ஜியத்திற்குள் புகுந்து பார்க்கலாமே. இந்த மலைகளால் என்ன பலம் அரசே”


“அவர்கள் போருக்கு வருவதில்லை. அவர்களின் எல்லைக்குள் யாராவது வந்தால் மட்டுமே எதிர்தாக்குதல் நடத்துவார்கள். மேலும் அந்த நான்கு மலைகளிலும் உள்ள காவல் தெய்வங்களே அவர்களுக்கு பலம்.” என்றான்


“அரசே என்ன சொல்கிறீர்கள்?” அமைச்சர் கேட்க,


“ஆம் அமைச்சரே. இத்தனை தலைமுறைகளாக நமது முன்னோர்கள் அவர்களை நெருங்காமல் இருக்க காரணம் இதுவே. மற்றபடி அவர்களின் வீரம், மற்றவர் மீது போர்தொடுக்க தருணம் போன்ற எந்தக் காரணமும் கிடையாது.” என்றான் குலசேகரன்.


“அங்கே காவலுக்கு இருப்பது யார் அரசே?”


“கிழக்கில் வீரகருப்பண்ணன், மேற்கில் வன்னியம்மன், வடக்கில்‌ துர்க்கை, தெற்கில் காலமுனி என்று நான்கு தெய்வங்கள் உள்ளன. அதைவிட முக்கியம் அவர்களின் போர் எல்லையில் மகாகாளியம்மன் இருக்கிறார். இது தான் அவர்களின் வெற்றி ரகசியம்.” என கூறினான்.


"மலையில் உள்ள விலங்குகளும், பறவைகளும் கூட அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. நாம் மலையின் மீது ஏறி தாக்குதல் நடத்த முயன்றாலும், அங்கு அவர்கள் வைத்திருக்கும் அபாயங்களை தாங்குவதும் கண்டுபிடிப்பதும் கூட சிரமமான விஷயம் தான்."


“இதெல்லாம் தங்களுக்கு எப்படி தெரிந்தது அரசே ?”

“எனது மாந்திரீக ஞானத்தில் உணர்ந்து கொண்டேன். தந்திர அறிவால் உறுதிபடுத்தி கொண்டேன் தர்மசீலா”

“பிறகு அவர்களை எவ்வாறு தான் வீழ்த்துவது?”

“அதற்கான காலம் வரும் தர்மசீலா. விடாரபுரத்தை கைப்பற்றிய முதல் அரசன் என்று செப்பேடுகள் சொல்லட்டும். அதற்குள் மற்ற மூன்று திசைகளில் எல்லைகளை விரிவடையச் செய்யுங்கள்.”


“உத்தரவு அரசே. “ தர்மசீலன் கூறிவிட்டு அங்கிருந்து நகர, அந்த மலைகள் சூழ்ந்த பகுதியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் குலசேகரன்.

அதேபோல் விடாரபுரத்தின் பகுதிகளை வைத்த கண் வாங்காமல் அந்த இருள் சூழ்ந்த நேரத்தில் பார்த்து கொண்டிருந்தான் ஆதி.


மேககூட்டங்கள் சக்தியின்றி தன் கண்ணீரை நிறுத்திவிட அந்த இடமே மயான அமைதி பூண்டிருந்தது.

மலையின் உச்சியில் சுற்றியும் அடர்ந்த இருள் இருக்க தீடீரென அங்கே சில மைல் தூரத்தில் தெரிந்த நெருப்பு ஆதிக்கும் ராகேஷூக்கும் பயத்தை உண்டு பண்ணியது.


“சாமி அங்க நெருப்பு! நெருப்பு!”


“அந்த நெருப்பு தான் உனக்கு அடையாளம். நீ அறிய வேண்டியது அங்கு தான் உள்ளது. இப்போது இங்கிருந்து கிளம்புவோம் வா.” என்று சதாசிவர் சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

ஆனால் ஆதியின் கால்கள் நடுங்கியது. அங்கிருந்து நடக்க தயக்கம் காட்டினான். வேறு வழியின்றி ராகேஷால் இழுத்துச் செல்லப்பட்டான்.

“சாமி அடுத்து என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க.”


“ஆதித்யா அன்று இங்கு உன் நண்பர்களோடு வந்தாய். அவர்களோடு மீண்டும் வரும் அமாவாசை அன்று வா. நீ அறிந்து கொள்ள முடியும்.” என்றார்.


“சாமி பசிக்குது. இந்த இருட்டுல கீழ போகவும் முடியாது. ஏதாவது பண்ணுங்க சாமி.” ராகேஷ் சொன்னதும் வெடி சிரிப்பு சிரித்தவர், “நானே இந்த மலையில் உணவு உண்ணாமல் தான் சுற்றி வருகிறேன். உங்களுக்கு எப்படி என்னால் தர இயலும்!” என்று கேட்டார்.


இருவரும் திருதிருவென விழிக்க ஏற்கனவே அவர்களுக்காக அபிமன்யு சேகரித்த சில பழங்களை கொடுத்தான்.

“ஆதித்யா நீ செல்லும் எல்லா இடத்திலும் எல்லாம் கிடைக்காது. சில தியாகங்கள் செய்ய வேண்டும். சில வலிகளை ஏற்க வேண்டும். சிந்தித்து செயல்படு. இறைவனின் ஆட்டத்தை மீண்டும் அனைவரும் பார்ப்பார்கள்” என்று ஆசிர்வதித்துவிட்டு தியானத்தில் மூழ்க மூவரும் உறங்க ஆரம்பித்தார்கள்.

உறக்கம் கலைந்து மூவரும் எழுந்து வெளியே வந்து பார்த்த போது தான் தெரிந்தது அவர்கள் மறுநாள் மதியத்தை சூரியன் தாண்டியுள்ளார் என்று.

“ஆதி குலசேகரன் என்ன செய்திருப்பாரு அந்த நாட்டை பிடிக்க?” ராகேஷ் கேட்க,


“என்ன பண்ணிருந்தாலும் எனக்கென்ன? இப்போ அனுபவிக்கறது நான் தானே. கட்டாயம் தெய்வானைய கொலைசெய்திருக்கனும்!”


“அதனால தான் பேயா வந்து பழிவாங்குதோ?” என அவன் சொன்னதும் அவனை யாரோ தாக்க வருவது போல இருந்தது. “என்னடா இது? நான் ஒரு சைக்கார்ட்டிஸ்ட் டாக்டர். எனக்கே ஒரு மாதிரி இருக்கே.” என புலம்பினான்.


மலைப்பாதை ஏறிய வழியில் இறங்காமல் மாற்று பாதையில் விரைவாக இறங்கி அடிவாரம் வரும் போது இருள் சூழ்ந்திருந்தது. அவர்களை அழைத்து செல்ல பொன்னாத்தா அங்கு வெளிச்சத்தோடு வந்திருந்தாள்.


“பெரியாத்தா என் கடமை முடிஞ்சது. நான் வர்றேன்.” என்று சொல்லிவிட்டு இவர்களிடம் சொல்லாமல் அந்த இருள் சூழ்ந்த காட்டுக்குள் வேகமாக பயணித்தான். சென்ற அபிமன்யு கிழக்கு நோக்கி கையெடுத்து கும்பிட்டு எமனை அழைத்து அணைத்துக்கொண்டான்.


“பொன்னாத்தா! நீ வெற்றி பெற்றதாக எண்ணிவிடாதே. உன் பேரனின் மரணம் நிகழ்ந்தே தீரும். என் சபதம் வெல்லும். விரைவில் எடுத்து வை தீப்பந்தத்தை.” கர்ஜித்தாள் தெய்வானை பொன்னாத்தாவிற்கு மட்டும் கேட்கும்படி


“எல்லாம் விதிப்படி நடக்கும் தெய்வானை. நிழல் தெரியாமல் எரியும் தீயை போல வழிகள் கொண்ட சாபங்கள் ஏராளம். உன்னுடையதும் அது தான். சூட்சுமத்தை அறிந்து கொண்டுதான் செயல்படுத்துகிறேன்.” என்றார் பொன்னாத்தா.


“ஆதித்யா நீ இப்போது ஊருக்கு கிளம்பு. பிரம்மேந்திரர் சொன்ன அமாவாசை தினத்தில் அன்று அழைத்து வந்த பெண்ணுடன் வா. அவள் உனக்கு அடுத்தமுறை வழிகாட்டுவாள்‌” என அனுப்பி வைத்தார்.


காரில் செல்லும் போது, “ராக்கி ஏதாவது உனக்கு புரிஞ்சுதா இப்ப நடந்தது” என்று கேட்டான் ஆதி

“மொத்தமா வச்சு செஞ்சுட்ட நீ. அவரு உன்ன உச்சிக்கு கூட்டிட்டு போய் ஏதேதோ மண்டைய கழுவி விட்டுருக்காரு. யாசிகா செல்வா வரனும்னு சொல்றாரு. உன் பாட்டி யாசி வரனும்னு சொல்றாங்க.”

“அவ என் லைஃப் முழுசும் வரனும்டா. அதான் என் எண்ணம்.” என்றான் ஆதித்யா.

“இது எனக்கு என்னைக்கோ தெரியுமே!”

“எப்படி?”

“அன்னைக்கு ஹாஸ்பிடல் வந்தப்போ உன் மனசுல யாசிகா இருக்குறத சொன்ன. அவள எந்த அளவுக்கு லவ் பண்றனும் சொன்ன. யாசியும் உன்ன லவ் பண்றா!” என்றதும் அவனை வியந்து பார்த்தான்.

“எப்படி ராக்கி சொல்ற?”

“நான் சைக்கார்ட்டிஸ்ட். ஒவ்வொருவரின் அசைவையும் கவனிப்பேன். ஆழ் மனது பேச துடிக்கும் வார்த்தைகளையும் கண்களையும் கூர்ந்து கவனிப்பேன் ஆதி. நீ ப்ரப்போஸ் பண்ணு. அவ ஏத்துப்பா.”

“அப்போ நாளைக்கு ஆபிஸ் போய் சொல்லிடறேன்.” என்று மகிழ்ச்சி கலந்த வெட்கத்தில் சிரித்தவனை பார்த்து ராகேஷூம் புன்னகைத்தான்.

காரின் வேகம் 140கிமீ தாண்டி பயணித்திட இருவரின் பின்னாலும் சில ஆத்மாக்கள் பின்தொடர்ந்தது வர ஆரம்பித்தது.
 
Top