கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

தொடரும் பந்தங்கள் அத்தியாயம் 14

அத்தியாயம் 14

போர் உடையில் கம்பீரமான உடலமைப்போடு குதிரையின் மீது அமர்ந்து கொண்டிருந்தவர், “ஆதித்யா கொடூரமான மரணத்தை தேடி வந்திருக்கிறாய்!” என்றது.


“ஆமா. இந்த விடாரபுரத்தின் கதைய அறிந்து கொள்ளாமல் சாகமாட்டேன்.” உள்ளுக்குள் பயம் இருந்தாலும் உரக்க கூறினான்.

“அரசரை போலவே துணிச்சலான பேச்சு ஆதித்யா.” குதிரையில் இருந்து இறங்கியவர் மண்டியிட்டார். மூவரும் வித்தியாசமாக பார்த்தார்கள்.

“என்ன ஆதித்யா பார்க்கிறாய். என் பெயர் தர்மசீலன். அரசர் குலசேகரனின் சேனாதிபதி. சாபத்தை முறிக்க இன்னொரு சபதத்தால் முடியும் என்பதே அறிந்தவன் நான். உனக்கு வழிகாட்ட நான் இருக்கேன். வா போலாம்.” என்று அழைத்து சென்றார்.

அவர் முன்னே நடக்க அங்கிருந்த விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என அனைத்தும் சப்தத்துடன் வழிவிட்டது. அவர்கள் நின்றது மரகதமலையின் பாதியில்.

“ஆதித்யா நன்றாக பாருங்கள். இந்த பரந்த சமவெளி பகுதி தான் விடாரபுரத்தின் ஆட்சி பகுதிகள். மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்த காலம் அது.”


“அரசியார் பூங்குழலி தலைபிரசவம். அரசரோ அறைக்கு வெளியே அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்தார்‌. நானும் அமைச்சரும் அரசருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தோம்”

அரசியார் பூங்குழலி சத்தம் குறைந்து குழந்தையின் அழுகுரல் கேட்டதும் மகிழ்ச்சி அடைந்தார்கள். மருத்துவச்சி வேகமாக வந்து, “அரசே இளவரசர் பிறந்திருக்கிறார்.” என்றாள்.

அனைவரின் முகத்திலும் பெரும் மகிழ்ச்சி. செய்தி நாடெங்கும் பரவியது. சிறிது நேரத்திற்கு பிறகு குழந்தையை அரசரிடம் கொடுக்க வாங்கி கொஞ்சி ரசித்தவர், “தர்மசீலா! நீ ஆசைப்பட்டது போல இளவரசர் தான். இவனை பிடி. இவனுக்கு நீயே குருவாக இருந்து வழி நடத்து.” என்று தர்மசீலன் கையில் கொடுத்துவிட்டு அரசியாரை காண சென்றார்.

ஊரெங்கும் பரிசுகளும் விருந்துகளும் கொடுக்கப்பட்டது. நாட்கள் நகர்ந்தன.

“தர்மசீலா விடாரபுரத்தை வென்று அதற்கு அரசனாக என் மகனை அமர வைக்க வேண்டும். அது உனது பொறுப்பு. அவனையே அனைத்திற்கும் தயார் செய்ய வேண்டியது அவசியம்.”


“அரசே நான்கு காவல்தெய்வங்கள் சுற்றியுள்ள அந்த தேசத்தை கட்டாயம் வெல்ல வேண்டுமா?”

“தர்மசீலா ஏன் இப்ப கேட்கிறாய். எனது சிறுவயது முதலே அந்த ஆசை உண்டு. அந்த மண்ணை கைப்பற்றாமல் என்னுயிர் நீங்காது. காலம் வெகு தொலைவில் இல்லை. நமது படையினை தயார் செய்.”

தர்மசீலனும் மன்னர் உத்தரவுபடியே நடக்க ஆரம்பித்தான். வருடங்கள் ஓட பூங்குழலி அடுத்தடுத்து கருவுற்றாள். மூன்று ஆண் குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பெற்றெடுத்தாள்.


அதே நேரத்தில் விடாரபுரத்தில் பெண்களுக்கான போர் பயிற்சி முழுவீச்சாக நடந்தது. நரேந்திரனுக்கும் போர்ப்பயிற்சிகள் மேலும் கடுமையாக இருந்தது. ருத்ரன் நிதானமாக தனது போர் யுத்திகளை கையாண்டு படைபலத்தை அதிகரிக்க முயற்சி செய்தார்.

தன் மகளின் திறமையை பார்த்து பலநேரங்களில் பிரமித்தும் போனார். அவள் கருவில் இருக்கும் போது ஆண் மகன் பிறப்பான். மிகப்பெரிய வீரனாக இருப்பான் என்று எண்ணிய போது பெண் குழந்தை பிறந்தது என்று வருத்தம் கொண்டதை நினைத்து சிரித்துக்கொண்டார் ருத்ரன்.

பயிற்சியை காண வருவதை நரேந்திரன் அடிக்கடி தெய்வானையை பார்க்க வந்தார். தெய்வானையை சிறுவயதில் இருந்தே பார்த்தாலும் அவ்வப்போது அவளை பார்த்து ரசித்தார். அவள் வாள் வீசும் அழகை ரசிக்க ஆரம்பித்தார். சில காலங்களுக்கு பிறகு காதல் மலர ஆரம்பித்தது. இருவரின் பார்வையிலும் உள்ள காதலை ருத்ரன் அறிந்துகொண்டவர் ஒருநாள் அதனை பற்றி நரேந்திரனிடம் பேச ஆரம்பித்தார்.


“அரசே நீங்கள் ராஜ வம்சத்தைச் சேர்ந்தவர். நீங்கள் பெண் எடுக்கும் அளவிற்கு எங்களுக்கு தகுதி இல்லை அரசே.”

“தளபதியாரே நானே இது பற்றி தங்களிடம் பேச வேண்டும் என்றிருந்தேன். தெய்வானை அத்தனை வீரம் கொண்டவள். யாரோ ஒருவனுக்கு நீங்கள் அவளை திருமணம் செய்து கொடுக்க தானே போகிறீர்கள்? எனக்கு திருமணம் செய்து கொடுங்கள். அவளை நாட்டின் ராணியாக்கி நாங்கள் வாழ்கிறோம்.”


“மன்னித்துவிடுங்கள் அரசே. இது சரியான வாதம் அல்ல. தங்களுக்கு பெண் கொடுக்க எத்தனையோ அரசர்கள் காத்திருக்கிறார்கள். மேலும் இது நம் நாட்டில் சர்ச்சைக்குரிய பேச்சாக மாறும்.”

“தளபதியாரே வரும் நல்ல நாளில் உங்கள் வீட்டிற்கு தாயுடன் இந்நாட்டின் அரசர் பெண் கேட்டு வருவார். இருவரும் மனதார காதலித்த பின்னர் திருமணம் செய்து வைப்பதே அறமாகும் தளபதியாரே.” என்றான் நரேந்திரன்.

“தளபதியாரே நாட்டின் நலனும் இதில் உள்ளது. ஒருவேளை போரில் நான் இறந்தாலும் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவும் பாதுகாக்கவும் கயவர்கள் கையில் நாடு செல்லாமல் இருக்கவும் வீரமும் தைரியமும் உள்ள பெண் தேவை. அதற்கு தெய்வானை மட்டுமே சரியாக இருப்பாள். நேரடியாக பெண்ணைப் பெற்ற தந்தையிடம் ஒரு ஆண்மகன் பேசுவது முறையாகாது. ஆனால் அரசன் எனும் இடத்தில் இருக்கும் நான் பேசுவதும் சரியாகும் தளபதியாரே.”


“அரசே மகாகாளியின் உத்தரவு அதுவென்றால் யாராலும் மாற்ற முடியாது. இதைப் பற்றி அன்னையிடமும் ஒருமுறை ஆலோசித்துவிடுவது நல்லது அரசே.”

“ஏற்கனவே பேசிவிட்டேன் தளபதியாரே. நமது அவை ஜோதிடரிடம் நல்ல நாள் குறிக்க சொல்லுங்கள். மகாகாளியின் உத்தரவுப்படி அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.” என்றான் நரேந்திரன்.


நாடெங்கும் செய்தி பரவியது. மன்னரின் இந்த செயல் சரியான ஒன்றே என்று மக்கள் பேசத் தொடங்கினார்கள். அவளின் வீரமும் அறிவும் சமயோசித புத்தியும் மக்களிடம் அவளை அழைத்து சென்றது. போர் பயிற்சியில் அவளது செயல்பாடும் மக்களுக்கு திருப்தி அளித்திருந்தது


மகாகாளியின் கோவிலில் நரேந்திரனுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடந்தது. போர் உடையில் சுற்றி திரிந்த தெய்வானை அன்று மணப்பெண் கோலத்தில் நாட்டை வலம் வந்தாள். அதுவரையில் அவள் வேகத்தையும் துடிப்பையும் கண்டவர்கள் முதல்முறை அவள் கொண்ட நாணத்தையும் கண்டார்கள்.

விடாரபுரமே மகிழ்ச்சியாக இருந்தது. அறிவும் திறமையும் உள்ள அரசன் தற்போது போர்‌கலையிலும் சிறந்தவனாக இருக்க, அவரே போலவே உள்ள பெண்ணும் அவருக்கு அமைந்துவிட்டது என்று மகிழ்ச்சி கொண்டார்கள்.

இருவரும் ஒவ்வொரு நாளும் தங்கள் காதலை எண்ணி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இறைவன் அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக குழந்தையை வைத்திருந்தான்.

இருவருக்கும் திருமணம் ஆகி ஆறு வருடங்கள் கடந்தது. ஆனால் தெய்வானை கர்ப்பம் தரிக்காமல் இருந்தாள். அது மக்களிடத்திலும் பெரிய கவலையாக இருந்தது. ஆனால் நரேந்திரனோ “இது கடவுளின் வரம். எங்களுக்கு இன்னும் கொஞ்சநாள் கழித்து தர காத்திருக்கிறாள் அந்த மகாகாளி.” என்று சொல்லி வந்தான்.


வீரமங்கை, சிறப்பான ஆட்சி செய்கிறாள், நாட்டின் படைபலத்தை உறுதி செய்கிறாள் என்று பெருமை கொண்டாலும் தாய்மை என்ற ஒற்றை வலைக்குள் அவள் சிக்குண்டு போனாள்‌.

மகாகாளியை நோக்கி விரதம் இருந்தாள். தொடர்ந்து வணங்கி வந்தாள். அந்த தேவி அவளுக்கு வரமும் கொடுத்தாள். தெய்வானையும் கருவுற்றாள்.


“தெய்வானை எனக்கு உன்னை போல பெண் குழந்தை வேண்டும். வீரத்திலும் அறிவிலும் சிறந்த அழகான பெண்குழந்தையை பெற்றுக்கொடு. தளபதியாரே அவளுக்கும் போர் பயிற்சி அளிக்கட்டும்.” என்றான் நரேந்திரன்.

“அரசே தங்களின் வித்துக்கு கருவிலேயே அனைத்து திறமைகளும் உண்டு. யாரும் கற்றுத்தர வேண்டிய அவசியமில்லை. மேலும் அவர் அன்னையை விடவா நான் கற்று தந்துவிட போகிறேன். எனக்கு வயசாகிவிட்டதே” ருத்ரன் சொல்ல,

“தளபதியாகிய என் தந்தையாரே! உங்கள் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தைகள் உங்களை வைத்தே பயிற்சி எடுப்பார்கள். உங்கள் மார்பிலும் முகத்திலும் அடித்து விளையாடி அனைத்தையும் கற்பார்கள். உங்கள் மகளுக்கு சிறுவயதில் கலைகளை சொல்லிக்கொடுக்காமல் ஏமாற்றியதை போல தப்பிக்க விடமாட்டார்கள். இது அரசியின் உத்தரவு.” என்றதும் அந்த அறையே சிரிப்பினில் ஆழ்ந்தது.


அந்த நேரத்தில் குலசேகரனும் தர்மசீலனும் இரத்தினபுரிக்கு கிழக்கு மேற்கு தெற்கு பகுதிகளில் உள்ள சிற்றரசுகளை தங்கள் நாட்டுடன் இணைத்து தங்கள் படை பலத்தையும் ஆட்சி பகுதியையும் விரிவுபடுத்தினர்.

“தர்மசீலா விடாரபுரத்தை நோக்கி நமது படை செல்லும் நேரம் வரப்போகிறது. விரைவில் நாம் தயாராக வேண்டும்.” என்றான் குலசேகரன்.


“அரசே காவல் தெய்வங்கள் அனைத்தும் உக்கிர தெய்வங்கள். எப்படி நாம் அந்த நாட்டை வெல்வது. மேலும் தற்போது மலைப்பகுதியில் இருந்து போர் செய்வதும் கடினம்!”


“இத்தனை வருடங்கள் காத்திருந்தது அந்த தெய்வங்களை கட்டிவிட்டு போர் புரிய தான்.” என்றதும் தர்மசீலன் பதறிபோனான்.


“அரசே இது தர்மம் அல்ல. தாங்கள் இதன் விளைவு தெரிந்தும் இப்படி செய்ய நினைப்பது பெரிய ஆபத்தை தரும். தெய்வங்களோடு நாம் விளையாடுவது சரியல்ல.” என்றான்.


“தர்மசீலா இதில் தவறோ பாவமோ இல்லை. துஷ்ட சக்தி பிரயோகம் செய்பவர்கள் இதுபோன்று தற்காலிகமாக கட்டிப் போடுவது என்பது சகஜம்தான். மேலும் நாம் அந்த நாட்டைப் பிடித்த உடன் கட்டு நீக்கி பூஜைகளை செய்து விடுவோம்.”


“இல்லை அரசே! இது சரியான முடிவாக இருக்காது. என் மனதால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.” தர்மசீலன் பதட்டத்தோடு கூற


“தர்மசீலா போர் முறைப்படி பலி கொடுத்துவிட்டு செல்வதும் அதேபோல எதிரி மன்னனை கொல்வதும் அந்நாட்டை நமக்கு அடிமைபடுத்துவது போல தான் இதுவும். மந்திர சக்திகளை வைத்து பாதுகாப்பை உருவாக்கி வைத்திருக்கும் நாட்டை கைப்பற்ற அவர்கள் பாணியிலேயே தான் செல்ல வேண்டும்.”

அமைச்சர் குறுக்கிட்டு, “அரசே காவல் தெய்வங்களை கட்டுவது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல அரசே. நமக்கு காவலுக்கு தெய்வத்தை அழைத்துச் செல்ல வேண்டும். தெய்வங்களின் எல்லையில் தடுக்க வேண்டும். அதற்கான நேரம் காலங்களை பார்க்க வேண்டும். இன்னும் எவ்வளவு உள்ளது!”

“அமைச்சரே அனைத்தையும் நான் அறிவேன். இன்னும் ஆறு மாதத்தில் நிகழ இருக்கும் சூரிய கிரகணத்தின் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்த்தீர்களா?”

“அரசே எட்டு கிரகங்களும் ஒரே ராசிகட்டத்தில் அமரும்.”


“அதுமட்டுமல்ல அமைச்சரே. எட்டு கிரகங்களோடு மாந்தியும் அதே ராசி கட்டத்தில் அமரும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அனைத்து கிரகங்களும் ராகுவை நோக்கி செல்லும். அந்த நேரத்தில் நாம் செய்யும் பூஜையால் தெய்வங்களை கட்டலாம்.”


“இல்லை அரசே! சேனாதிபதியாக மட்டுமல்ல. உங்களின் நண்பன் என்ற முறையில் இதை தடுப்பது எனது கடமையாகும். அந்நாட்டை விட்டுவிட்டு வடக்கே இருக்கும் மற்ற நாடுகளின் மீது போர் தொடுக்கலாம். இதுவே சிறந்தது.” தர்மசீலன் மீண்டும் மீண்டும் கூறினான்.


“தர்மசீலா இது அரசர் உத்தரவு. விடாரபுரத்தை அடைந்தே தீருவேன். அதன் பின்னே என்னுயிர் பிரியும். மாந்திரீகத்தில் உள்ள நன்மையையும் நானறிவேன். தீமையையும் நானறிவேன். இந்த நாளுக்காக 12 வருடங்கள் எத்தனையோ மந்திர உச்சாடனங்கள் செய்து, யாரும் அறியாதவாறு பூஜைகள் செய்து நான் பட்ட கஷ்டங்களுக்கு பலனில்லாமல் விடச் சொல்கிறாயா?”


“அரசே தங்களை எதிர்த்து பேசுவதாக எண்ணாதீர்கள். தர்மநெறி தவறி நடந்தால் யாராக இருந்தாலும் எதிர்த்து நில் என்று சொல்லித்தந்தவர் நீங்கள். தெய்வசக்தியோடு விளையாடுவது நாகத்தின் விஷத்தை உண்பதற்கு சமம் அரசே!” தர்மசீலன் மண்டியிட்டு கூறினான்.


“நான் ஒன்றும் வரலாற்றை படித்துப் பார்க்காமல் பேசவில்லை. நன்கு ஆழ்ந்து சிந்தித்த பிறகே இந்த முடிவை எடுத்தேன். தர்மசீலா போருக்குச் செல்லும்போது சேனாதிபதியாக தலைமை தாங்கி வந்து நில். அதுவே உனது தர்மம். போருக்கான வியூகங்களை நான் அமைத்துக் கொள்கிறேன்.” என்று தனது அதிகாரத்தால் உத்தரவிட்டான்.

நாட்கள் நகர நகர அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தான். பல ஊர்களில் இருந்து கொண்டுவரப்பட்ட சில மூலிகைப் பொருட்களையும் வேர்களையும் பத்திரப்படுத்தினான்.


தன் மாந்திரீக அறிவை கொண்டு செப்பு தகடுகளில் மந்திரங்களை எழுத ஆரம்பித்தான். அங் சங் வங் யங் எங் இங் என்று பல மந்திரங்களை எழுத ஆரம்பித்தான்.

யந்திரங்கள் எழுதும் போது ஏற்படும் சாபத்தை நீக்க சாபவிமோசனம் மந்திரங்களை பிரயோகித்தான். ஒவ்வொரு சாபத்தின் பெயரையும் சொல்லி “நசி நசி” என்று சுத்தி செய்தான்.


நான்கு மலைகளில் உள்ள தெய்வங்களின் பெயர்களையும் கூறி அவர்களை கட்டி வசியம் செய்யும் ஏற்பாடுகளோடு மாந்திரீகர்களையும் ஏற்பாடுகள் செய்தான். அதற்கு துர்தேவதைகளையும் துஷ்ட சக்திகளையும் அழைத்தான் குலசேகரன்.

கிரகணத்தின் போது ஏற்படும் கெட்ட அதிர்வுகளைத் தாங்கவும், துஷ்ட சக்திகளை பிரயோகப்படுத்தும் போது ஏற்படும் விளைவுகளை சமாளிக்கவும் விரதத்தை மேற்கொண்டான். தேகபலமும் வசிய பலமும் கூட மூலிகைகளும் மைகளும் அவனுக்கு உதவின.


வலிமையான சூரிய கிரகணத்திற்கு முந்தைய 48 நாட்களும் கடுமையான விரதத்திற்கு தயாரானான். வெறும் ஒற்றை துணியைக் கட்டிக்கொண்டு பரதேசி போல உணவை மறுத்து மூலிகை இலைகளை மட்டும் உண்டு மந்திர உச்சாடனம் செய்தான்.

கிரகணத்தன்று அனைவரும் வெளியில் வராமல் உள்ளேயே பதுங்கி இருப்பார்கள். அந்த நேரத்தில் நான்கு மலைகளிலும் தனது ஆட்களை அனுப்பி அந்த யந்திரங்களையும் மூலிகைகளையும் மஞ்சள் குங்குமத்தையும் வைத்தான். மண்பானைக்குள் செய்து வைத்திருந்த காவல் தெய்வ பொம்மைகளில் தெய்வ சக்தியை கட்டினான் குலசேகரன்.

மலைகளில் உள்ள விலங்குகளை கட்டிப்போட மிருக வசிய மந்திரங்களையும் மூலிகைகளையும் பயன்படுத்தினான்.

அதே நேரத்தில் தர்மசீலன் கோரக்கரை நினைத்து மந்திரங்களை ஓத ஆரம்பித்தான். அவனுக்கு மனதின் வலியினை போக்க சித்தர்களை நோக்கியே தியானம் செய்வான். கோரக்கரை மானசீக குருவாக ஏற்றுக் கொண்டு மனதினை செலுத்தினான்.


கிரகணத்தின் போது தனது திட்டத்தை சரியாக செயல்படுத்தி காவல் தெய்வங்கள் மக்களுக்கு உதவாத வகையில் கட்டியவன், கட்டவீழ்த்த பின்னரே சக்தி பெற வேண்டுமென்ற யுத்தியையும் செய்து வைத்தான்.

அதுமட்டுமல்லாமல் தனது ஒற்றர்களை வைத்து விடாரபுரத்தில் உள்ள மகாகாளியின் கோவிலுக்குள்ளும் யந்திரங்களை வைத்து கட்டினான்.

கிரகணம் முடிந்த மறுநாள்


“தர்மசீலா விடாரபுரத்தை நோக்கி நாம் போர் புரிய போகிறோம். படைகளை தயார் செய். இன்றிலிருந்து மூன்றாம் நாள் நமது படை அங்கே இருக்கும்.” என்றான் குலசேகரன்.


“அரசே போரில் வெற்றி நமக்குத்தான் என்பதை நான் அறிவேன். ஆனால் நமது அரசும் மனமும் தோல்வி அடையும் என்று எனது உள்ளுணர்வு சொல்கிறது.” தர்மசீலன் வருத்தத்துடன் கூற,


“வெற்றி வந்தால் அனைத்தும் நம் வசமாகும் தர்மசீலா. முறையாக சுத்தி செய்த மந்திர கட்டை தான் போட்டுள்ளேன். அதை உடைக்கும் மந்திரத்தையும் வழிமுறையும் நிர்மாணம் செய்துள்ளேன். கவலையில்லாமல் போருக்குப் புறப்படு!”


“எப்படி அரசே கவலையில்லாமல் செல்வது. ஆபத்தை நோக்கி அடியெடுத்து வைக்கிறோம். அசம்பாவிதம் ஏற்பட்டால் முதலில் பிரிவது என் உயிராக இருக்கட்டும்.” என்று சொல்லிவிட்டு படைகளை தயார் செய்ய ஆயத்தமானான் தர்மசீலன்.


இரத்தினபுரியில் இருந்த விடாரபுரம் ஒற்றர்களால் போர் தொடுக்கும் செய்தி அந்நாட்டிற்கு சென்றது. நரேந்திரனும் ருத்ரனும் தங்கள் படைகளை தயார் செய்தனர். நான்கு மலைகளிலும் தங்கள் படைகளை அனுப்பி மலையின் மீதிருந்து தாக்குதல் நடத்தவும் முடிவு செய்தார்கள்.

போர்க்களத்திற்கு ஆண்களும் கோட்டை வாசலில் பெண்களும் தயார் நிலையில் இருந்தார்கள்.

ஒன்பது மாதமாக இருந்த தெய்வானை போர் உடையை தரித்து வந்து நின்றதும் நாடே அதிர்ந்தது.

“அரசியே! தாங்கள் நிறைமாத கர்ப்பிணி. இந்நேரத்தில் தாங்கள் போருக்கு வருவது சிறப்பு அல்ல. எதிரிகளை வெட்டி வீழ்த்திவிட்டு வருகிறோம்” என்றார் படைத்தளபதி ருத்ரன்.

“தந்தையே பெண்கள் படைக்கு தலைமை தாங்கி வழிநடத்தி செல்லவே பயிற்சி ஆரம்பிக்கும் போது எனக்கு அரசர் கொடுத்த உத்தரவு. நாட்டிற்கு ஆபத்து வரும் போது அரசி ஓடி ஒளிந்துகொண்டு பிள்ளை பெற்றாள் என்ற அவமானம் எனக்கு வரக்கூடாது. அதை நாளை என் பிள்ளையும் சொல்லகூடாது” வாளை உருவி அக்னி பிழம்பாக கூறினாள் தெய்வானை.


“தெய்வானை கோட்டை வாசலில் நின்று எதிரிகளைத் தாக்கு. போர்க்களத்தில் நானும் தளபதியாரும் எதிரிகளை துவம்சம் செய்கிறோம். நீ இங்கே இவர்களுக்கு தலைமை தாங்கு. வயதானவர்கள் குழந்தைகளை பாதுகாப்பான இடத்தில் இருக்க வை.” என்று உத்தரவிட்டான்.


சுரங்கப்பாதையின் வழியாக பல குகையில் அவர்களை பத்திரபடுத்தினார்கள். ரத்தினபுரியில் இருந்து பெரும் படையுடன் விடாரபுரம் நோக்கி புறப்பட்டார்கள்.

நான்கு மலைகளில் உள்ள எதிர்நாட்டு படைகளை சமாளிக்க பத்து மடங்கு அதிகமான வீரர்களை ஒவ்வொரு மலையை நோக்கி அனுப்பி வைத்தான். போர் கவசத்தோடு கருப்பு நிறக் குதிரையில் குலசேகரனும், வெள்ளை நிறக் குதிரையில் தர்மசீலனும் வழிநடத்தி சென்றார்கள்.

நரேந்திரனும் ருத்ரனும் தங்கள் படைகளோடு முப்பது மடங்கு அதிக பலம் கொண்ட ரத்தினபுரி படையை எதிர்கொள்ள தெய்வங்கள் உதவியின்றி இருப்பதும் அவர்கள் கொடுத்த களப்பலியும் வீணாகி போனதையும் தெரியாமல் காத்திருந்தார்கள்.

தொடரும்...
 
Top