அத்தியாயம் 9
வித்யாவின் தலையில் ஒரு சிகப்பு துண்டு வைத்து அதன் மீது ஒரு மண் பொம்மை வைத்துவிட்டு முந்தானையில் எலுமிச்சை பழம், தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை வைத்தவர் “இந்த கோவில மூனு முறை சுத்தி வா!” என உத்தரவிட சுத்தி வந்து நின்றார்.
மண் பொம்மையை முனியப்பன் கால் அருகில் வைத்துவிட்டு தேங்காய் பழம் வைத்து கருப்பணுக்கும் முனியப்பனுக்கும் பூஜைகள் செய்தார் பூசாரி.
கோவிலினுள் அழைத்து சென்று வீரமாத்தியின் முன்பு நிறுத்தி “ஆத்தா உன்னோட வாரிசு பெத்தவளோட வந்து நிக்குது. இத காப்பாத்தி கரை சேர்த்து பக்க துணையிருந்து தழைக்க வைக்கனும்.” என்று கூறி திருநீறு அள்ளி நெற்றியில் பூசிவிட்டார். அப்போது சாமியின் தலையில் இருந்த பூ வலப்புறம் நோக்கி கீழே விழுந்தது.
“வள்ளியம்மா சூரியன் மறைஞ்ச அப்புறம் என் வீட்டுக்கு எல்லாரையும் கூட்டிட்டு வா.” என அனுப்பி வைத்தார்.
“பாட்டி பெரியாத்தா பத்தி கொஞ்சம் சொல்லுங்க.” என்று கேட்க,
“பெரியாத்தா என் வீட்டுக்காரரோட அப்பத்தா. என் பேரன் அவங்களுக்கு பேரனோட பேரன். அவங்க வாழ்ந்த வாழ்க்கை வேற. சுத்தி இருக்கிற இருபது ஊரும் அவங்க சொன்னா மறுவார்த்தை பேச மாட்டாங்க.”
“ஏன் பாட்டி?”
“அவங்க ஒரு வார்த்தை சொன்னா அப்படியே பலிக்கும். இப்ப கூட பாத்திருப்பீங்க.”
“கோவில் குடிபாடு ஏன் மாறுச்சு? எல்லோருக்கும் என்ன ஆச்சுங்க அத்தை” என்ற வித்யாவின் கேள்வியால் அமைதியாகிப் போனார்.
“எல்லோரும் இறந்துட்டாங்க வித்யா” என்ற பதில் வித்யாவிற்கு ஆச்சரியமாக இருந்தது.
“என்னாச்சுங்க அத்தை சின்ன மாமா எல்லாருமா?”
“ஆமா வித்யா. இன்னைக்கு நம்ம குலத்தில இருக்கிற கடைசி வாரிசு உன் மகன் மட்டும் தான்.”
“பாட்டி உங்களுக்கு மொத்தம் எத்தனை குழந்தை?”
“பதினொன்னு பெத்தேன் ராசா. பதினொன்னுமே பசங்க”
“அப்போ பெரியாத்தாவுக்கு?”
“இருபது”
செல்வா, “மச்சி அந்த காலத்தில இதே வேலையா தான் இருந்திருப்பானுக போல.” என கிசுகிசுத்தான்.
“கொஞ்சம் சும்மா இரு மச்சி. கேட்டுற போகுது. அந்த காலத்தில பத்து பண்ணெண்டு வயசுல கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க.” ராகேஷ் கூற
“நம்ம 90ஸ் கிட்ஸ் என்னடா பாவம் பண்ணோம். இருபத்தேழு ஆகியும் வீட்டுல பேச்சே எடுக்காம இருக்காங்க.”
“அது உங்க தலையெழுத்துடா!” யாசிகா கூற,
“ஆமா நீ மட்டும் அப்படியே கல்யாணம் பண்ணிட்டியாக்கும். நீயும் எங்க லிஸ்ட் தான். போ. போ.” பின்புறம் பேசியபடியே வந்தார்கள்.
வித்யாவும் வள்ளியம்மாவும் கடந்து போன வாழ்க்கை பற்றி பேச சிறியவர்கள் காலையில் நடந்த சம்பவம் பற்றி பேசிக்கொண்டு வந்தார்கள்.
“மச்சி நீ பிஸ்டல் கொண்டு வருவன்னு எதிர்பார்க்கல. எனக்கு நெஞ்சே அடைச்சிடுச்சு ஒரு நிமிசம்!”
“அது என்னோட அப்பா பிஸ்டல் தான். லைசன்ஸ் இருக்கு. போலீஸ் ஆகனும்னு சொன்னவன புடிச்சு தான் டாக்டர் ஆக்கி வச்சிருக்காங்க என் பேமிலி”
“சரி சரி. உன் ஜோக கதைய இங்க திறக்காத. வா புளியங்காய் அடிச்சு சாப்டலாம்.” என இழுத்து சென்றான்.
நேரம் கடந்து சூரியனும் தன் வெளிச்சக் கதிர்களை வேறுபக்கம் திருப்பி செல்ல இருள் சூழ்ந்தது.
வள்ளியம்மா அனைவரையும் அழைத்துக்கொண்டு பொன்னாத்தா வீட்டுக்கு போனார். வீட்டுக்குள்ளே சென்றவர்களுக்கு விபூதி கொடுத்துவிட்டு, ஆதியின் கழுத்தில் ஒரு செயினை மாட்டினார். அதில் ஒரு தாயத்தும் இணைந்திருந்தது.
“ஆதித்யா நீ தெரிந்துகொள்ள வேண்டிய விசயம் நிறைய உள்ளது. உன் உயிருக்கு ஆபத்து இருக்குது. நீ யாரு? எதுக்கு அந்த குரல் உனக்கு கேக்குது? ஏன் உன் கனவுல வீரமாத்தி வந்து கூப்பிடுறா? உன் அம்மா கனவுல உங்க அப்பா வந்து இங்க கூட்டிட்டு வரச் சொன்னாருன்னு எல்லா கேள்விகளுக்கும் பதில் தெரிஞ்சுக்கனும்.”
பொன்னாத்தா சொல்ல சொல்ல அனைவரின் இருதய ஓட்டம் எகிறி கொண்டே சென்றது.
“பெரியாத்தா இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?” வித்யா கேட்க, ஒரு சிரிப்போடு பதிலை புரிய வைத்தார்.
“ஆதித்யா நம்ம வம்சம் ஏன் அழிஞ்சுதுன்னு தெரிஞ்சுக்கோ?”
“நம்ம வம்சத்தில மிகப்பெரிய குறை ஒன்று இருக்கு. நம்ம வம்சத்துல பெண் குழந்தையே பிறந்தது இல்லை. எல்லாம் ஆம்பள பிள்ளைங்க தான். அதே மாதிரி எல்லா ஆம்பளையும் நாற்பது வயதுக்கு மேல உயிர் வாழல.” என்றார்.
இது அனைவருக்குமே அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆதியின் அப்பா இறக்கும் போது அவர் வயது நாற்பது தான்.
“இதைவிட ஒரு பெரிய விஷயம் சொல்கிறேன் கேள். நமது வம்சத்தில் பிறக்கும் முதல் ஆண் குழந்தை பிறந்த அன்றே இறக்கும். உன் தாய்க்கும் இது நடந்தது. உன் பாட்டிக்கும் இது நடந்தது. எனக்கும் இது நடந்தது”
“ஏன் பாட்டி உங்க வம்சத்துல இப்படி நடந்தது?”
“வர்க்க சாபம் தான்!”
“புரியல பாட்டி!”
“ஆதித்யா உனக்கு ஒரு பெண் குரல் கேட்குமே? அந்த பெண்ணின் அழுகுரலும் பகை உணர்ச்சிமே நமது இந்த நிலைக்கு காரணம்.”
“பாட்டி இதை சரிசெய்ய முடியாதா?” யாசிகா கேட்க, அவளின் உள்ளத்தில் இருக்கும் காதலை எண்ணி சிரித்தார்.
“ரகசியம் அனைத்தையும் நான் அறிவேன். ஏன் நடந்தது? எப்போது நடந்தது? அதன் ஆணிவேர் என்ன? கொடுக்கப்பட்ட சாபம் என்ன? அதை சரி செய்யும் வழி என்ன? அடுத்து நடக்க இருப்பது என்ன? என எல்லாம் நான் அறிவேன். ஆனால் அதை என்னால் வெளியே சொல்ல முடியாது!” பொன்னாத்தா கூறினார்.
“ஏன் பெரியாத்தா? நீங்கதான் சொன்னீங்க இவன்தான் கடைசி உசுருன்னு. அடுத்து நம்ப வம்சம் தழைக்க வேண்டாமா? சொல்லுங்க பெரியாத்தா! எனக்கு என் புள்ள வேணும்.” என்று வித்யா அழ ஆரம்பித்தார்.
“வித்யா. அதைச் சொல்வதற்கான கட்டளை எனக்கு இல்லை. அதைச் சொல்லி அதற்கான பாவத்தையும் சேர்த்து உன் மகன் சுமக்க வேண்டாம். மேலும் அதை ஒரு பெண் சொல்லக்கூடாது. அதை தெரிந்துகொண்டால் பல கஷ்டங்களை அனுபவிக்க நேரிடும்.”
“பெரியாத்தா. அது அவனுக்கு தெரியாம போச்சுன்னா அவனே இருக்க மாட்டானே. இதுக்காகவா கஷ்டப்பட்டு என் மகனை வளர்த்தேன்.” வித்யாவின் ஆதங்கம் பேச்சில் பொறிந்தது.
“உன்னோட மகனை இந்த வருஷம் சித்திரை மாசம் நம்ம உக்கிரவீரமாத்தி கும்பத்தையும் வாளையும் எடுக்க சொல்லு. பூஜைய பண்ண சொல்லு. வீரமாத்தி துணையிருப்பா. இப்ப நீங்க ஊருக்கு கிளம்புங்க.” என்று கூறிவிட்டு வள்ளியம்மாவை பார்த்தார்.
“இத்தனை வருஷமா இந்த உசுரு இந்த ஊர்ல தான் ஆத்தா இருந்துச்சு. இன்னைக்கு மருமக பேரன் கூட போக முடியலன்னு மனசு கிடந்து தவிக்குது தான். நான் என்ன பண்றதுன்னு தெரியல ஆத்தா. நீங்களே பதில் சொல்லுங்க?” கண்களில் ஆயிரம் வலிகளுடன் கேட்க,
“சில காலம் உன் குடும்பத்தோடு இரு. ஈம கடமையை செய்து முடிப்பான் உன் பேரன்.” என்று சொல்லவும் அவர்களோடு சென்னை புறப்பட்டாள் வள்ளியம்மா. ஒரு மாதம் எப்பவும் போல நாட்கள் கழிந்தது மகிழ்ச்சியாக.
இந்த நேரத்தில் செல்வா சாரா திருமணமும் நிச்சயமாகி இருந்தது. அந்த நேரத்தில் தான் பேரிடியாய் அமைந்தது அந்த கனவு.
“ஆதித்யா வரும் செவ்வாய் கிழமை காலை என் எல்லைக்குள் வந்து சேர். உனது பயணம் தொடங்க வேண்டும்.” என்று உக்கிரவீரமாத்தி அவன் கனவில் கூறியது.
திடுக்கிட்டு எழுந்தவன் பெருமூச்சு வாங்க,
“ஆதித்யா உன் மரணம் நிகழ்ந்தே தீரும்! உன்னால எதையும் மாத்த முடியாது. உன்னால எதுவும் செய்ய முடியாது குலசேகரா?” என்ற பெண் குரலில் நடுக்கம் கொண்டான்.
“தெய்வானை உனது குருதி தாகம் எப்போது தீரும். இத்தனை உயிர்களின் ரத்தம் குடித்தும் உனக்கு பழி உணர்வு தீரவில்லையா?” ஆணின் குரல் கேட்க எதுவும் புரியாமல் திருதிருவென விழித்தான் அந்த இருட்டில்.
“எப்படித் தீரும் குலசேகரா? நீ செய்த செயல் அப்படி? என் சபதம் நடத்தி முடிக்கும் வரை ஓயாது என் குருதி தாகம்!”
“போதும் தெய்வானை. எத்தனை முறை மன்னிப்பு கேட்டு இருப்போம். இத்தனை உயிர்களை காவு கொடுத்து இருக்கிறோம். இனிமேலாவது எல்லாம் மாறட்டுமே.”
“முடியாது குலசேகரா! உன் தெய்வம் உக்கிரவீரமாத்தியால் எதுவும் செய்ய முடியாது. இத்தனை ஆண்டுகளாய் வேடிக்கை மட்டும் தானே பார்க்க முடிந்தது. இனியும் அப்படித்தான் குலசேகரா.” என்றது அந்த பெண் குரல்.
“கருப்பா ஓடி வந்து என்னை காக்க வேணும். வா கருப்பா.” என்று ஆதி சொன்ன மறுகணமே இருவரின் குரலும் கேட்பது நின்றது.
“பாட்டி சொன்னமாதிரி அந்த பொண்ணோட சாபம்தான் எல்லாத்துக்கும் காரணம்னு புரியுது. ஆனா ஏன் சாபம் கொடுத்தாங்க. யார் இந்த குலசேகரன்? இந்த தெய்வானைக்கும் குலசேகரனுக்கும் என்ன சம்பந்தம்?’’ என்ற யோசனையில் அவன் அதிகாலை 5 மணி வரை உறங்காமல் விழித்திருந்தான்
அன்றிலிருந்து ஊருக்குச் செல்லும் அந்த நாள் வரை அவனுக்கு மாறி மாறி சந்தேகம் ஊறிக்கொண்டே இருந்தன.
“தெய்வானை சபதம் என்ன? அவள் ஏன் உயிர்பலி வாங்கணும்? என்னையையும் ஏன் கொல்ல துடிக்கிறா? அதைவிட முக்கியமா இத்தனை நாட்கள் இவங்க ரெண்டு பேரோட பேரும் ஏன் எனக்கு தெரியாம போச்சு?” என்ற கேள்விகளும் அவனை பைத்தியம் ஆக்கின.
“ஆதித்யா உன் எல்லை நோக்கி செல்லாதே. உன் மரணம் கொடூரமாய் இருக்கும். இங்கே இருந்தாலாவது உனக்கு வலி இல்லாமல் மரணம் கிடைக்கும்.” என்றாள் தெய்வானை.
“ஆதித்யா அவள் உன்னை திசை திருப்ப பார்க்கிறாள். நமது குலதெய்வம் உக்கிர வீரமாத்தியை மனதில் நிறுத்தி கருப்பன் துணையோடு கிளம்பு.” என்று வந்த குலசேகரனின் குரலில் குழப்பம் கொண்டான்.
“அம்மா ரெண்டு நாள் லீவு சொல்லிட்டேன். நாளைக்கு ஊருக்கு போய்ட்டு வரேன்.” ஆதி சொல்ல,
“நானும் பாத்துக்கிட்டு தான் இருக்கேன் ஆதி. உன் நடவடிக்கையில மாற்றம் தெரிந்தது. நீ ஊருக்கு போயிட்டு வரது தான் சரினு எனக்கும் தோணுது. எதுக்கும் கவலைபடாமல் தைரியமா போயிட்டு வா!”
“சரிம்மா!”
“ஆமா கூட யார் வரா?”
“ராக்கி வர்றான். செல்வா கல்யாணம் பக்கத்தில வந்திருச்சுல. அதனால அவ்வளவு தூரம் வேணாம்னு நாங்க மட்டும் கிளம்பறோம்.”
“பாத்து பத்திரமா போய்ட்டு வா.” என்று அனுப்பி வைத்தவளுக்கு தெரியும் தன் மகன் தற்போது உயிரை பணயம் வைத்து தான் செல்கிறான் என்று.
ராகேஷூம் ஆதியும் அந்த இரவு நேரத்தில் புறப்பட்டார்கள். பைபாஸில் கார் வேகமாக பயணித்து கொண்டிருக்கும் வேளையில் சட்டென்று ஒரு பெண்மணி காரின் குறுக்கே வந்து விழுந்தாள். சக்கரங்களின் கருப்பு நிறம் சாலையில் பதிய வண்டியை நிறுத்தினான் ராகேஷ்.
“ராக்கி மிரர் பாக்காத” என்று திருப்பியதோடு, “வண்டிய எடு. இது ஆபத்தான பயணம் தான். உனக்கு எல்லாமே தெரியும். வண்டிய எடு ராக்கி!” என்றதும் மீண்டும் அதே வேகத்தில் கார் பயணித்தது.
ராகேஷ் வண்டி ஓட்ட தீடிரென பெய்த கனமழையும் அங்கங்கே தெரிந்த ரத்த கறைகளும் அவனுக்கு பெரும் பயத்தை உருவாக்கியது.
எங்கும் நிற்காமல் கார் உக்கிரவீரமாத்தியின் எல்லைக்குள் வந்து சேர்ந்தது. அவர்கள் நேராக சென்று நின்ற இடம் பொன்னாத்தா வீடு தான்.
“என்ன ஆதித்யா உயிர் பயத்தை பார்த்துவிட்டாய் போல?”
“பாட்டி. சாமி வரச்சொல்லுச்சு. வந்துட்டேன். இனி நான் என்ன பண்ணனும்?”
“உனக்கு எந்த கேள்வியும் இல்லையா?”
“இருக்கு பாட்டி. அத்தனை கேள்விகளுக்கும் பதில் எங்க கிடைக்கும்னு தான் தெரியல. தெரிஞ்ச நீங்களும் சொல்லல!”
“இப்போ உனக்குள்ளே இருக்கும் மிகப் பெரிய கேள்வி. யார் அந்த தெய்வானை? யார் அந்த குலசேகரன்? இவர்களுக்குள் என்ன தொடர்பு? இவர்கள் உன்னிடம் ஏன் பேச வேண்டும்? இந்தக் கேள்விக்கு தானே உனக்கு முதலில் பதில் தெரியனும்?” என்று பொன்னாத்தா கேட்டதில் ஆதிக்கு ஆச்சர்யம் ஏற்படவில்லை.
“ஆமா பாட்டி. கடவுள் நம்பிக்கை இல்லாத நான் தான் இப்போ கனவுல ஆத்தா சொல்லவும் இங்க வந்து இருக்கேன்.”
”ஹாஹாஹா” சத்தமாக சிரித்த பொன்னாத்தா, “ஆதித்யா உனக்கு உண்மை சொல்கிறேன் கேளு. எவனொருவன் அதீத நாத்திகனாக இருக்கானோ அவனுக்குள் விதைக்கப்படும் சிறு ஆன்மீக நம்பிக்கை கறந்த பாலை போல சுத்தமானது. பொய்யான பக்தி அவனுக்கு இருக்காது. ஆனா எப்பவும் சாமி சாமின்னு சொல்றவன் கடவுள்கிட்ட வேண்டி கிடைக்கலன்னா கல்லுன்னு சொல்வான்.”
அவர் கூறிய வார்த்தைகளின் அர்த்தத்தை அவர்களால் உணர முடிந்தது.
“ஆமா பாட்டி. இப்ப நான் என்ன செய்யனும். இதுக்கெல்லாம் நான் எப்படி விடை கண்டுபிடிக்கறது?” என்று கேட்கும் போது “எமன் வந்துட்டான். எமன் வந்துட்டான்!” கத்திக்கொண்டே வந்தான் அந்த பைத்தியக்காரன்.
“அபிமன்யு” அந்த பைத்தியக்காரனை அழைத்தார் பொன்னாத்தா.
“என்ன பெரியாத்தா. எமன் உன்கிட்ட என்ன சொன்னான்?”
“எமன் வந்திட்டானாம். உன்னைய கூட்டிட்டு போக வந்திருக்கான். அதுக்குள்ள இவங்கள மலையில இருக்கற பிரம்மேந்திரர் கிட்ட அழைச்சிட்டு போ!” என்று உத்தரவிட்டார்.
“ஆதித்யா வடக்கு நோக்கி செல். மலையடிவாரத்தில் காலபைரவர் இருக்கிறார். அவரின் முன் தீபத்தை ஏற்றிவிட்டு நான் கூறும் மந்திரத்தை 108 முறை எண்ணி சொல். பிறகு இவன் பின்னால் செல். போகும் வழியில் திரும்பி மட்டும் பார்க்காதே!”
“சரிங்க பாட்டி.“ என்று மந்திரங்களை கேட்டு தெரிந்து கொண்டான். எந்த மந்திரமும் அவனுக்குத் தெரியாத நிலையில், ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாத நிலையில் அவர் சொன்ன மந்திரங்கள் அப்படியே பாறையில் செதுக்கிய சிற்பம் என அவன் மனதில் பதிந்தது.
“பாட்டி ஒரு சந்தேகம்” ராகேஷ் பேச எத்தனிக்கும் வேளையில், “உனக்கான பதில் மலைக்கோவிலில் கிடைக்கும்."
காலை மணி 9.00.
கால பைரவர் முன்பு விளக்கில் எண்ணெய் ஊற்றி திரி வைத்து பற்ற வைத்தான். திரி கருகி தான் போனதே தவிர விளக்கு எரியவில்லை.
தீப்பெட்டியின் கடைசி தீக்குச்சி இறக்கும் வரை நெருப்பு திரியினை தீண்டவே இல்லை.
பைத்தியக்காரன் என்று அனைவராலும் சொல்லப்பட்ட அபிமன்யு ஏதோ ஒரு பச்சை இலையை திரிக்கு பதிலாக வைத்து ஏற்றச்சொல்ல ஆதி கடைசி தீக்குச்சியை உரசினான்.ஒற்றைநொடி கூட தேவைப்படவில்லை விளக்கு எரிய.
“ஆதித்யா உன் ஆச்சரியம் எனக்கு சிரிப்பு தான் வரவைக்குது. நீ சந்திக்கப்போற விசயத்தில் இதெல்லாம் கால் தூசு கூட கிடையாது. வா போலாம்”
“யார்ண்ணா நீங்க. இவ்வளவு தெளிவா பேசறீங்க. அப்புறம் ஏன் இந்த கோலம்.” ராகேஷ் கேட்க,
“இந்த மனித பிறவியே வேசம் தான். உடல் எண்ணும் நாடக மேடையில் சிறிது நேரம் நடித்து செல்ல வந்த ஆன்மாவின் நாடகம் தான் இந்த கோலம்” என்றான்.
“இதுக்கு நான் கேட்கமாயே இருந்திருக்கலாம். வாய கொடுத்து வட்டியோட வாங்கிகிட்டேன். எனக்கு இது தேவை தான்.” முனுமுனுக்க,
“இந்த காட்டுல நீ மூச்சு விடுற சத்தம் கூட சத்தமா கேட்கும். சாமிய நல்லா கும்பிட்டுக்க. தண்ணி வேணும்னா அந்த குட்டைல எடுத்துக்கோ. அடுத்து தண்ணி கிடைக்க மூனு மணி நேரம் ஏறனும்.”
“என்னது மூணு மணி நேரமா?”
“வாங்க போலாம்”
மூவரும் நடக்க ஆரம்பித்தார்கள். கொஞ்சி விளையாடும் அணில்களும், அங்கங்கே தெரிந்திடும் பட்டாம்பூச்சி கூட்டமும் பறவைகளின் சப்தமும் ஆதிக்கும் ராகேஷூக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. இருவரும் பேசிக்கொண்டே நடந்து வந்தார்கள்.
இரண்டு பக்கமும் பெரிய பெரிய மரங்களும் சுற்றி வளைந்த கொடிகளும் இதமான அனுபவத்தை கொடுத்தது.
“நீங்க பேசுனது போதும். இனி நான் சொல்ற வரைக்கும் ரெண்டு பேரும் பேசக்கூடாது. திரும்பிப் பார்க்காமல் என் பின்னாடி வந்துகிட்டே இருங்க.”
“நாம பேசுனா இவருக்கு என்னவாம் ஆதி?”
“இப்ப நாம போக போறது நஞ்சப்பன் காடு. இங்க மாயவித்தை ஏராளம். திரும்பி பாக்க கூடாது. பேசக்கூடாது. அமைதியா கடக்கனும்.”
“அது ஏன்?”
“மதிமயக்கி வனம், மதிகெட்டான் சோலை பத்தி கேள்விப்பட்டு இருக்கியா?”
“படிச்சிருக்கேன். கொடைக்கானல், சதுரகிரி மலையில அப்படி ஒரு இருக்கிறதா படிச்சிருக்கேன்”
“அது மாதிரி தான் இந்த காடும். ஆனா இங்க இருந்து நீ சுலபமா வெளியே வந்திடலாம். ஆனா உன் மனசு கிட்டத்தட்ட பைத்தியக்காரன் மாதிரி நடந்துக்க வைக்கும். இந்த பகுதி உண்மையிலேயே சபிக்கப்பட்ட பகுதி.”
“என்ன அண்ணா சொல்றீங்க?”
“நான் பைத்தியம் ஆனதும் இந்த காட்டில் தங்கியது தான் காரணம். ஆனால் பிரம்மேந்திரர் என்னை காப்பாற்றினார். ஆனால் காலத்தின் கட்டாயத்தால் இந்த ஊருக்கு நான் பைத்தியக்காரனாகவே தெரிந்தேன்.”
“என்ன நடந்தாலும் திரும்பி பார்க்க கூடாது.வாங்க போலாம்.” அழைத்து செல்ல ஒவ்வொருவருக்கும் மற்றவர்கள் அவனை ஆபத்தில் இருப்பது போலவே சத்தங்கள் கேட்க தொடங்கின.
அபிமன்யு பேரறிவு கொண்டவன். எல்லாம் தெரிந்த காரணத்தால் அவன் முதலிலும் பிறகு ஆதியும் அவன் பின்னால் ராகேஷூம் வருமாறு செய்திருந்தான்.
ராகேஷ் அலறுவதை போல ஆதியின் காதுகளில் தொடர்ந்து ஒலிக்க அவன் திரும்பி பார்க்க எத்தனிக்கும் வேளையில் சட்டென்று ஒரு நாய் குறுக்கே வந்து அவன் சிந்தனையை சிதறடித்தது.
40 நிமிட பயணத்திற்கு பிறகு அந்த காட்டை தாண்டி அடுத்த மொட்டை பாறை மலைக்குள்ளே பயணிக்க ஆரம்பித்தார்கள்.
அங்கு இரண்டு பெரிய பாறைக்கு நடுவில் சிறு இடைவெளிக்குள் நாய் உள்ளே செல்ல அபிமன்யு பின்னால் சென்றான். மற்றவர்களும் பின்னே தொடர அங்கு காத்திருந்தது ஒரு ஆச்சரியம்.
தொடரும்...