கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நின்றன் காதலை எண்ணி 2

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 2

பச்சை சுடிதார் அணிந்த பெண்ணைத் தமிழ்ச்செல்வன் நெருங்குகையில் அவள் கோபமாக ஃபோனில் பேசிக் கொண்டிருந்தது தெரிந்தது. அழுகையை அடக்க முயன்றது போலவும் தோன்றியது. இப்போது அருகில் போவது நன்றாக இருக்குமா என்று யோசித்தபடியே நடையின் வேகத்தை சற்றே மட்டுப்படுத்தினான்.

"இப்ப என்ன செய்யச் சொல்றீங்க? அவளைக் கிணத்துலயா தள்ளிவிட முடியும்?"

"பிரச்சனைல மாட்டிக்கக் கூடாதுன்னு தானேம்மா சொல்றோம்?" என்று மறுமுனையில் அவள் அம்மா கூறினாள். தமிழ்ச்செல்வன் நெருங்குவதை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு சற்றுத் திரும்பிப் பேசுவதைத் தொடர்ந்தாள்.

"என்னம்மா நீங்க? நான் தனியா வரேன்னு சொன்னேன். நீங்க தான் துணைக்கு யாரையாவது சேர்த்துக்கிட்டு வான்னு சொன்னீங்க"

"சொன்னேன் தான். அதுக்காக திருப்பூர் போய்க் கூட்டிட்டு வரணுமா? திருப்பூர்ல வேலை பார்க்கிறவங்க பல பேர் இப்படித்தான்"


"அப்படின்னு பொதுவா சொல்லாதீங்கம்மா. நான் நம்ம ரேணுகாவைத் தானே கூப்பிட்டேன். அவ தான், சுமித்ரா அவ ஃப்ரண்டு, ஊர்க்கார பொண்ணுன்னு சொன்னா. எனக்கு என்னமா தெரியும்?"


"இப்ப நம்ம வீட்ல வந்து அழாத குறையா ரேணுகாவோட அம்மாப்பா புலம்பிட்டுப் போறாங்க. நமக்கு இதெல்லாம் தேவையா? எப்படியாவது அந்தப் பொண்ண அனுப்பிவிட்டுரு பார்கவி"

"அப்பாட்ட ஃபோனக் குடும்மா" என்று பார்கவி கூறியதும் அப்பா லைனில் வந்தார்.

"பார்கவி!"

"அப்பா! என்னப்பா இப்படிக் குழப்புறீங்க?"

"என்னடா பண்றது.. எப்படியாவது அந்தப் பொண்ணை ஏதாவது பேசி அனுப்பி விட்ருடா.. ரேணுகா வீட்லயும் 'அவ கல்யாணம் ஆக வேண்டிய பொண்ணுல்ல.. ஒரு பேச்சுக்கு இடம் குடுக்கலாமா?' அப்படின்னு சொல்றாங்க. நாங்களும் உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிருக்கோம். நமக்கும் ரிஸ்க் தானேடா?"


"இன்னும் ரெண்டு நாள்ல லாக்டௌன் வருதுன்னு அனவுன்ஸ் பண்ண அன்னிக்கே நான் பஸ்ல வரேன்னு சொன்னேன். நீங்க பதினஞ்சு நாள் தானே, அங்கேயே இரு, பஸ்ல வந்தா இன்ஃபெக்ஷன் ஆயிடும்னு சொன்னீங்க. இப்போ லாக் டவுன் எக்ஸ்டெண்ட் ஆயிடுச்சு. அப்பவே வந்திருந்தா இந்தப் பிரச்சனை எல்லாம் வருமா?"


"இப்படி நடக்கும்னு எதிர்பார்த்தோமாடா? என்ன பண்றதுன்னாலும் யோசிச்சுப் பண்ணு. நான் வேணா காலையில அங்க வரவா? அந்த பொண்ணுக் கிட்ட பேசிப் பார்க்கிறேன்" என்றார் அப்பா.


"அதெல்லாம் வேண்டாம்பா.. ரிஸ்க் அதிகம். உங்களுக்கு சுகர் வேற இருக்கு" சற்று யோசித்தவள், "இன்னும் ரெண்டு நாள் ஆகுமாம் ரிசல்ட் வர்றதுக்கு... அது வரைக்கும் இங்க தான் இருக்கணும். அதுக்குள்ளே ஏதாவது பிளான் பண்ணலாம். டென்ஷன் ஆகாம இருங்க. இதுல நமக்கு ஒரு பிரச்சினையும் வராது. ரேணுகா வீட்லயும் ஃபோன் பண்ணிப் பேசி அமைதியா இருக்கச் சொல்லுங்க" என்றபடி அலைபேசியை அணைத்தாள் பார்கவி.


ஃபோனில் பேசிக் கொண்டிருக்கையில் அருகில் போக வேண்டாம் என்று நாகரீகம் கருதி ஒதுங்கி நின்றிருந்தாலும் ஒரு சில வார்த்தைகள் தமிழ்ச்செல்வனின் காதில் விழுந்தன. முதலில் சிணுங்கலோடு அவள் தாயிடம் சண்டை போடுவதைக் கேட்டவன், இந்த நிலையில் உதவி கேட்கலாமா வேண்டாமா என்று யோசித்தது உண்மை. பின் இறுதியில் அவள் தெளிவான குரலில் உறுதிபடப் பேசியது போலத் தோன்றியது. வேறு வழியில்லை கேட்டுவிட வேண்டியதுதான் என்று முடிவெடுத்த நிலையில்,


"எஸ்! சொல்லுங்க!" என்றாள் பார்கவி தமிழ்ச்செல்வனைப் பார்த்து.

போலீஸ்காரர்களிடமும் ஆர்.ஐ.யிடமும் பேசிவிட்டு ஒருவன் தன்னை நோக்கி வருவதை கவனித்துக் கொண்டுதானிருந்தாள். அதனால் வில்லங்கமாக எதுவும் இருக்காது என்று ஒரு எண்ணம்.

தமிழ்ச்செல்வனும், "எஸ்.ஐ. சார் உங்க கிட்ட பேசச் சொன்னாங்க மேடம்" என்று தான் ஆரம்பித்தான்.

"என்ன விசயம் சார்?"

"நீங்க கோவையில் இருந்து வந்ததா சொன்னாங்க. எனக்கு ஒரு அவசர விஷயமா அங்க போகணும். நீங்க வந்த டாக்ஸி வெயிட் பண்ணுது, அதுல போகலாம்னு சஜஸ்ட் பண்ணாங்க. அதான் உங்கக் கிட்ட கேட்கலாம்னு…"

"டிரைவர் கிட்டயே கேட்டுருக்கலாமே சார் நீங்க? நல்ல டைப் தான் அவரு. ஆனா நீங்களும் சேர்ந்து போறதுல எதுவும் இஷ்யூ வருமான்னு தெரியலையே? திரும்பி இ- பாஸ் போட வேண்டியதிருக்குமோ? அவர் மட்டும் ரிட்டர்ன் ஆகத்தான் எங்க இ- பாஸ் செல்லுபடியாகும்னு நினைக்கிறேன்"

"மறுபடியும் அப்ளை பண்றதுக்கு டைம் இல்ல மேடம். அர்ஜெண்டா போகணும். செக் போஸ்ட்ல கேட்டாங்கன்னா கால் பண்ணச் சொல்லி எஸ்ஐ அவரோட நம்பர் கொடுத்துருக்காரு. டிரைவருக்கு உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க.. அதான் அவர்கிட்ட கேக்குறத விட உங்கக்கிட்ட கேட்டா பெட்டர்னு தோணுச்சு. சாரி மேடம்! டிஸ்டர்ப் பண்ணிட்டேன்"


"பரவாயில்லைங்க. இதுல என்ன இருக்கு? அவர் கூட, வைஃப்புக்கு டெலிவரி டைம். சீக்கிரம் கிளம்பணும்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தார். இப்படி உடம்புக்கு முடியாமப் போச்சு. இந்த நேரத்துல கூட்டிட்டு வந்துட்டோமேன்னு நானே ஃபீல் பண்ணிட்டு இருந்தேன். வாங்க சார், அவர் கிட்ட சொல்றேன்" என்றவள் நிறுத்தப் பட்டிருந்த கார்களின் மத்தியில் இருந்த ஒரு காரின் அருகே தமிழ்ச்செல்வனை அழைத்துச் சென்றாள். அங்கு டிரைவர் நாகராஜ் அயர்வாக பின் சீட்டில் சாய்ந்து படுத்திருந்தார்.

"அண்ணே! இப்ப எப்படி இருக்கு?" என்று கேட்க,

"பரவால்லைம்மா. வயிறு வலி கொஞ்சம் கொறைஞ்சிருக்கு. ஆனா அசதி அதிகமா இருக்கு. நாளைக்கு மதியத்துக்குள்ள அங்க இருக்கணும். எப்படி வண்டி ஓட்டுறதுன்னு தெரியல" என்றார் டிரைவர்.

"சார் நீங்க லாங் டிரைவ் பண்ணுவீங்களா?" என்று தமிழ்ச்செல்வனிடம் கேட்டாள் பார்கவி.


"ஆங்.. பண்ணுவேன் மேடம்"

"அப்ப பிரச்சனை தீர்ந்தது. அண்ணே, இவருக்கு அவசரமா கோவை போகணுமாம். இவரைக் கூட்டிகிட்டுப் போயிடுங்க. வழியிலே ப்ராப்ளம்னா போலீசை விட்டுப் பேசச் சொல்றாராம். ரெண்டு பேரும் மாத்தி மாத்தி டிரைவ் பண்ணிட்டுப் போயிடலாம். உங்களுக்கு ஓகேவா சார்?" என்று தமிழ்செல்வனிடம் கேட்டாள்.

"ஓகே தான் மேடம்!" என்றவன், எவ்வளவு வேகமா முடிவெடுக்கிறாள் இந்தப் பெண் என்று நினைத்துக் கொண்டான்.


"டைமிங் எப்பன்னு ரெண்டு பேரும் பேசிக்கோங்க. இப்பவே மணி பதினொண்ணுக்கு மேல ஆச்சு. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்புங்க"

"நான் போய் பாத்துக்குறேன்மா. நீங்க போய்த் தூங்குங்கம்மா" என்றார் டிரைவர்.

"கிளம்பும்போது மெசேஜ் பண்ணுங்கண்ணே. அங்க போய்ட்டும் ஒரு தடவை ஃபோன் பண்ணிடுங்க. அண்ணிக்கு நல்லபடியா டெலிவரி ஆகும் கவலைப்படாதீங்க. சார், பார்த்துக்கோங்க" என்றபடி வேகமாக நடந்து கல்லூரியில் அவளுக்கு என ஒதுக்கப்பட்டிருந்த அறையை அடைந்தாள்.


கல்லூரியில் வகுப்பறைகள், விடுதி அறைகளைத் தனிமைப்படுத்தல் மையத்திற்காகத் (Quarantine centre) தயார் செய்திருந்தனர். ஒரு வகுப்பறையில் மேஜை, நாற்காலிகளை ஒதுக்கிவிட்டு சில கட்டில்கள் போட்டிருந்தார்கள். தனியாக வந்த பெண்கள் மிகக் குறைந்த அளவே இருந்ததால் அங்கு அவ்வளவாகக் கூட்டம் இல்லை. பார்கவியுடன் சேர்ந்து வந்த இரண்டு பெண்கள், அத்துடன் இன்னும் ஒன்றிரண்டு பேர்தான் இருந்தனர். அவர்களும் வெகு நேரமாகி விட்டிருந்ததால் உறங்கியிருந்தனர். அந்த இரவு விளக்கின் ஒளியில் பார்வதியின் தோழி ரேணுகாவும் அவளது தோழி சுமித்ராவும் மட்டும் பார்கவியை எதிர்பார்த்து விழித்துக் கொண்டிருந்தது தெரிந்தது. பார்கவியின் வீட்டிலிருந்து அலைபேசி அழைப்பு, அதுவும் இந்த நேரத்தில் என்றவுடன் இருவரும் கலக்கத்துடன் அமர்ந்திருந்தனர். இயல்பாக ஃபோன் பேச ஆரம்பித்த சற்று நேரத்தில் பார்கவியின் முகம் மாறியதும், அவள் அலைபேசியுடன் எழுந்து வெளியே போனதும் இருவருக்கும் திக் என்று தான் இருந்தது. இப்போதும் பார்கவி என்ன சொல்லப் போகிறாள் என்ற பதட்டத்துடன் தான் இரண்டு பேரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.


வந்தவுடன் பார்கவி ரேணுகாவைத்தான் கேள்வி கேட்டாள். "ஏன் ரேணு? இந்தப் பொண்ணு உங்க ஊர்னு சொன்ன?"

"அது வந்து…"

"இவ வீட்டுலேருந்து உங்க வீட்டுக்கு ஆள் விட்டு மிரட்டிருக்காங்க. உங்க அம்மாவும் அப்பாவும் எங்க வீட்ல வந்து அழுது, ஒரே டென்ஷன் எல்லாருக்கும்"

"சாரி பாரு!" ரேணுகா சொல்ல, அந்தப் பெண் சுமித்ராவும் "சாரிக்கா" என்றாள்.

"ஏம்மா? நீ விஷயத்தை என்கிட்ட சொல்லிட்டே வந்துருக்கலாம்ல? ஏன் பொய் சொல்லணும்?"

"வேற வழி இல்லாம தான்க்கா…" அந்தப் பெண்ணுக்குக் கண்களில் நீர் கோர்த்தது.

"இவளுக்காகத் தான் பாரு, நான் மில் அடைச்சும் இவ்வளவு நாளாக் கிளம்பாம இருந்தேன். எங்க ஹாஸ்டல்லயும் கிளம்பச் சொல்லிட்டே இருந்தாங்க. நீ கூப்பிட்ட உடனே தான், சரி.. ஊருக்குக் கிளம்பிடலாம்னு தோணுச்சு"

"நீயும் இவள மாதிரி ஏதாவது சேட்டை பண்ணி வச்சிருக்கியா?"

"அப்படி எல்லாம் இல்ல பாரு!"

"பாத்துக்கோ! கல்யாணம்ங்கிற ஒரு இம்சைக்காகத்தான் காலேஜ் கூட படிக்காம வேலை பார்த்துட்டு இருக்க.. அது கனவாவே போயிடப் போகுது. உங்க வீட்டு நிலைமையும் நெனச்சுப் பாரு"

"அக்கா, எங்களால எதுவும் உங்க வீட்லயும் பிரச்சனையா?" சுமித்ரா சற்று பதட்டத்துடன் கேட்க,

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. கொஞ்சம் பயந்துட்டாங்க. அவ்வளவுதான்" அதற்குள் இவர்கள் பேசும் சத்தத்தில் வேறு ஒரு பெண் சற்று எரிச்சலுடன் புரண்டு படுக்க,

"சரி! எதுனாலும் பார்த்துக்கலாம். படுங்க" என்றாள் பார்கவி. மூவரும் படுத்துக்கொண்டனர்.


பார்கவி தன் அம்மா, அப்பா கூறியதையே அசை போட்டுக் கொண்டிருந்தாள். ரேணுகா பார்கவியுடன் பள்ளி வரை படித்தவள். ஏழ்மையான குடும்பம். அவர்களது சமூகத்தில் திருமணத்திற்கு நிறைய வரதட்சணை கேட்பார்கள். அதனால் பெரும்பாலான பெண்களை பதினேழு அல்லது பதினெட்டு வயதில் மில்லுக்கு அனுப்பி விடுவார்கள். ஒரு வருட வேலை; ஒரு லட்சம் ஊதியத்தை வருட முடிவில் கொடுப்பார்கள். சுமாரான உணவு, மிகச் சுமாரான தங்குமிடமும் மில்லிலேயே கொடுப்பதால் அதற்குத் தனியாகச் செலவழிக்கத் தேவையில்லை. இப்படி 'சுமங்கலித் திட்டம்' என்ற பெயரில் செயல்படுத்தும் பெரும்பாலான மில்கள் திருப்பூர் வட்டாரத்தில் தான் இருந்தன. அப்படி ஒன்றில்தான் ரேணுகாவை சேர்த்து விட்டிருந்தார்கள். ரேணுகாவும் அங்கு போய் வேலைக்குச் சேர்ந்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டன, இன்னும் திருமணம் முடிந்த பாடில்லை. ஒவ்வொரு வருடமும் அவளது ஊதியத்துக்கு வீட்டில் ஏதாவது செலவு வந்துவிடுகிறது. ரேணுகாவுக்கு அல்சர் பிரச்சனையும் இரத்த சோகையும் வந்தது தான் மிச்சம். பார்கவி ரேணுகாவைப் படிக்கச் சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியிருந்தாள். "அப்படி என்னடி மண்ணாங்கட்டி கல்யாணம் வேண்டியிருக்கு? உடம்பை உருக்கி சம்பாதிச்சு அதை செலவழிச்சு கல்யாணம் பண்ணி என்ன பண்ணப் போற? திரும்பியும் குடும்பத்தைத் தூக்கி நிறுத்த போராடணும். நீ படி, படிக்காமப் போ. ஆனா பாக்குற வேலையை உள்ளூர்லயே பார்த்துக்கிட்டு நிம்மதியா சாப்பிட்டுகிட்டு இருக்கலாம்ல? மில்கள்ல நடக்குற கொடுமைகள்லாம் எத்தனை கேள்விப்படுறோம்? உன் சொந்தத்திலேயே ஒரு பிள்ளை பைத்தியமாகி திரும்பி வந்துச்சுன்னு நீதான சொன்ன?" என்று பலவாறாகப் பேசிப் பார்த்திருக்கிறாள் பார்கவி. பாவம் ரேணுகா, விரும்பியதைச் செய்ய முடியாத சூழல் அவளுக்கு.

பார்கவி பொறியியல் முடித்துவிட்டு மென்பொறியாளராகக் கோவையில் வேலையில் சேர்ந்திருந்தாள். வேலைக்குச் சேர்ந்து ஆறு மாதங்கள் கடந்திருந்த நிலையில் தற்பொழுது லாக் டவுன் அறிவிக்கப்பட்டு விட்டதால் வீடு திரும்புகிறாள். டாக்சியில் வருகிறேன் என்றவளை 'யாரையாவது துணைக்குக் கூட்டிட்டு வா' என்று வீட்டில் கூறியதன் பேரில் ரேணுகா ஞாபகம் வர, திருப்பூர் சென்று அவளைக் கூட்டி வந்தாள். திருப்பூருக்கு ரேணுகாவை அழைக்கச் சென்ற நேரம் அவளுடன் கூட சுமித்ராவும் தயாராக இருந்தாள். "பார்கவி, இது என் ஃபிரண்டு. எங்க ஊர் தான். இவளையும் கூட்டிட்டுப் போயிடலாமா" என்று ரேணுகா கேட்டவுடன் மகிழ்ச்சியுடன் சம்மதித்திருந்தாள். இப்போது கதையே வேறாக இருக்கிறது. சுமித்ராவுக்கு ரேணுகாவின் ஊர் இல்லை.திருவண்ணாமலைப் பக்கம். திருப்பூரில் உடன் வேலை பார்க்கும் ஒருவனை அவள் காதலிக்க, வீட்டில் தெரிந்து பிரச்சனையாகிவிட்டது. ஆணவக்கொலை செய்யும் அளவு மோசமான கட்டுப்பாடுகளை உடைய ஊர் சுமித்ராவுடையது. கொரோனா கால தடையுத்தரவால் மட்டுமே வெட்டுக்குத்து தள்ளிப் போயிருக்கிறது. தப்பிக்கும் முயற்சியாக ரேணுகாவுடன் இங்கு வந்து விட்டாள்.

'பாரேன். இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துக்கிட்டு என்னென்ன வேலை பார்த்துருக்கு இந்தப் பொண்ணு…' என்று யோசித்தவாறே லேசாகக் கண்ணயர்ந்தாள் பார்கவி. தூக்கம் சொக்கிய நேரம், சுமித்ரா எழுந்து கழிப்பறையை நோக்கிச் செல்வது தெரிந்தது. 'குவாரண்டைன் சென்டரில் இளைஞர் தூக்குப்போட்டுத் தற்கொலை. கொரோனா பயம் காரணமா? சொந்தப் பிரச்சனையா?' என்று சமீபமாகப் பார்த்த செய்தி நினைவுக்கு வர, அடித்துப் பிடித்து எழுந்தாள். சுமித்ராவின் பின்னாலேயே படபடப்புடன் சென்றவளைத் திரும்பிப் பார்த்த சுமித்ரா, "அக்கா…" என்க,

"வருத்தப்படாதே, பார்த்துக்கலாம்.. ஏதாவது தப்பா முடிவு எடுத்துறாத.. போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்து ஏதாவது ஹோம்ல கூட சேர்ந்துக்கலாம். உன் லவ்வர் நல்லவன் தானா? அவங்க வீட்ல ஆதரவு குடுப்பாங்களா? நல்லா விசாரிச்சியா?" என்று கேள்விகளை அடுக்கினாள். பிரயாண அசதியும் தூக்கமும் அவள் குரலில் நன்றாகத் தெரிந்தது.

"அக்கா! நிஜமாவே பாத்ரூம் போகத்தான் வந்தேன். அப்படி எல்லாம் எதுவும் தப்பா பண்ணிக்க மாட்டேன்கா.. தேங்க்ஸ் கா!" என்றவாறு பார்கவியின் கையைப் பிடித்துக் கொண்டாள் சுமித்ரா. 'இந்தப் பெண்ணுக்கு ஏன் நம்மைப்போன்ற குடும்பம் அமையவில்லை? யார் மீது தவறு?' நினைத்தவாறு அவளது கையை அழுத்திப் பிடித்தாள் பார்கவி.

"சீக்கிரம் போயிட்டு வா... தூ
ங்குவோம்" என்று கூறிவிட்டுத் தானும் ஒரு கழிப்பறைக்குள் நுழைந்தாள் பார்கவி.



-தொடரும்


 
Top