கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நின்றன் காதலை எண்ணி 21

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 21


பார்கவி வெளியே வருவதற்காக முதலில் திறந்துவிடப்பட்ட அதே கம்பிக் கதவை திறந்து ஆட்டோவின் பின்னிருக்கையில் ஏறினான் தமிழ்ச்செல்வன். உட்புறமாகத் தள்ளி பார்கவி அமர்ந்திருக்க, அவள் அருகே சென்று அமர்ந்தான்.

"பார்கவி…" என்று அவன் மெல்லிய குரலில் அழைக்க,

"போகலாம்" என்றாள் அவள்.

"இல்லை பார்கவி.." என்று தன் கையை அவள் புறமாகக் கொண்டு செல்ல,

"போலாமே ப்ளீஸ்…" என்றாள் பார்கவி.

அவளது குரல் உடைந்திருந்தது. அழுகிறாளா? கூர்ந்து அவள் முகத்தைப் பார்க்க தமிழ் முயல, ஈரம் படர்ந்த தன் கண்களைத் துடைத்தவாறு முகத்தை மறுபுறம் திருப்பினாள். அவள் இன்று காலை முதல் காட்டி வரும் உணர்ச்சிகளின் வர்ணஜாலங்கள் தமிழ்ச்செல்வனுக்குள் படமாக ஓடியது. காலையில் தன்னை ஆவலாகப் பார்த்தது, கிண்டலாக வாய்பொத்தி சிரித்தது, புகைப்படத்துக்கு நிற்கும்போது நெளிந்தது, ஆட்டோவில் என்னுடன் வரப்போகிறாள் என்றவுடன் வந்த பரபரப்பு, பின் வம்புச்சண்டை இழுத்தது, பாதை மாறிப் போன போது மிரண்டது, இப்போது அழுவது என்று பல்வேறு உணர்ச்சிகளும் அவளை ஒரு சுழலுக்குள் மூழ்கடித்து விட்டதை உணர்ந்தான்.

"சரி! போலாம்" என்றவாறு ஒரு பெருமூச்சுடன் எழுந்து முன்னால் சென்று ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தவன் சற்று நேரம் ஸ்டியரிங்கின் மேல் கைமுட்டியை ஊன்றி நெற்றியில் கைவைத்து யோசித்தான்.. பின் ஆட்டோவைக் கிளப்பினான்.. 'பாவம் ஒரே நாள்ல எவ்வளவு தான் தாங்குவா? ரொம்ப எமோஷனலா இருக்கா' என்று தனக்குள் சொல்லியவாறு.
அவனது செய்கைகளை பார்கவியும் கண்ணீர் நிறைந்த கண்களினால் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள்.

'போடா டேய்! எமோஷன் கூட சேர்த்து இன்னொரு எமோஷனை மிக்ஸ் பண்ணி லவ்வை ஓகே பண்றது விட்டுப் போட்டு வண்டி ஓட்டிக்கிட்டு இருக்க? இப்பக் கூட டைம் இருக்கு டா! மூணாவதா ஏதும் கோயிலைப் பார்த்து நிப்பாட்டு டா. தமிழ்ப் பட ஹீரோக்களுக்கு மூணாவது தடவை தான் ஒர்க் அவுட் ஆகும். தெரியும்ல?' என்றது மனசாட்சி.

'ஹே மனசாட்சி! முன்னாடி எல்லாம் காதலுக்கு எதிராப் பேசுவ? இப்ப நீயே என்னைப் பிடிச்சு அவ கிட்ட தள்றியே?' என்று தமிழ் அதனிடம் கேட்க,

'டேய் தமிழ்.. உனக்கு எது நல்லதோ அதைத்தான் நான் உனக்குச் செய்வேன்' என்றது மனசாட்சி. 'பார்கவிக்கு எது நல்லதோ அதைத்தான் நான் செய்வேன். எனிவே தேங்க்ஸ்!' என்று கூறி அதை அனுப்பிவைத்தான். பின் தெளிந்த மனநிலையுடன் ஆட்டோவை மலையடிப்பட்டியை நோக்கிச் செலுத்தினான்.

ஊர் நெருங்குகையில், "பெஸ்ட் ஃப்ரண்டுக்கு நிச்சயதார்த்தம்.. கொஞ்சூண்டு சிரிச்சுக்கிட்டே போறது.." என்றான் தமிழ், ரியர் வியு மிரரில் தெரிந்த பார்கவியின் முகத்தைப் பார்த்து.

குனிந்திருந்த பார்கவியும் லேசாகத் தமிழை நிமிர்ந்து பார்த்து சிரிக்க, "அப்படியே கொஞ்சம் வழியும் சொல்றது?" என்றான்.

"நேராப் போங்க.. லெஃப்ட், ரைட்.." என்று சொல்லியவள் ரேணுகா வீட்டருகே சென்றதும் நிறுத்தச் செய்து, "பாப்போம்!" என்று சொல்லி இறங்கிச் சென்றாள். அங்கே வீட்டின் வாசலில் சிலர் அமர்ந்திருப்பதைப் பார்த்தால் நிகழ்ச்சி நல்லபடியாக முடிந்திருந்தது தெரிந்தது.

"ஆட்டோவுக்குக் காசு கொடுக்கணுமாம்மா?" என்றவாறு இளைஞர் ஒருவர் எழுந்து வந்து பார்கவியை வரவேற்றார்.

"வேண்டாம்! சொந்த ஆட்டோ தான்.." என்றவள் உடனேயே சற்று மாற்றி, "தெரிஞ்சவங்க ஆட்டோ தான்" என்றவாறு உள்ளே தோழியைக் காண விரைந்தாள்.

"சாப்பிட்டுப் போகலாமே!" என்று அவர் தமிழ்ச்செல்வனை அழைக்க, அவன்,

"இல்ல பாஸ்! எங்க வீட்டிலேயும் கல்யாணம் தான். அங்க போய் சாப்ட்டுக்கிறேன்.. நீங்கதான் மாப்பிள்ளையா?" என்றான். அவரின் தோரணை, நிறைய சந்தனம், குங்குமம் அப்பியிருந்த நெற்றி, முகப்பொலிவு எல்லாம் அவர் தான் மாப்பிள்ளை என்று கூறியது. "ஆமா! வாங்களேன்.. கொஞ்சம் சாப்பிடலாம்" என்று அவர் அழைக்க, "கல்யாணத்துக்கு வர்றப்ப கண்டிப்பா சாப்பிடுறேன்" என்று கூறி தமிழ்ச்செல்வன் கிளம்பினான்.

உணர்ச்சிகளின் மழையில் அன்று குளித்திருந்தாலும் ரேணுகாவைப் பார்த்தவுடன் ஆறுதலாக இருந்தது பார்கவிக்கு. ரேணுகாவின் மகிழ்ச்சி இவளையும் தொற்றிக்கொள்ள சென்று அவள் அருகே அமர்ந்துகொண்டாள். "வாம்மா! உன்னைத்தான் இன்னும் காணோமேன்னு ரேணுட்ட கேட்டேன்" என்று வரவேற்றார் மாப்பிள்ளையின் அக்கா. அன்று தோட்டத்தில் பார்த்த அதே பெண் தான். இப்படி உள்ளூரில் தெரிந்த மனிதர்கள் மத்தியில் வாழ்க்கைப் படுவதும் ஒருவிதத்தில் நன்றாக இருக்கும் போல என்று நினைத்துக் கொண்டாள் பார்கவி.

அன்றைய தினம் வீட்டுக்கு வந்த பார்கவி எதையும் யோசிக்கக் கூட முடியாமல் படுத்து விட்டாள். தன்னுடைய செயல்களை எந்த விதத்திலும் நியாயப் படுத்திக் கொள்ளவே முடியவில்லை அவளால். தான் அதிகப்படியாகப் பேசியதற்கு அவன் எதுவுமே பேசாமல் போய் விடுவானோ என்ற தவிப்பு தான் காரணம் என்றும் சொல்லிக் கொண்டாள். 'அவனா எதுவுமே பேச மாட்டேங்கிறான்.. அதனாலதான் அவனைச் சீண்டி விட்டேன்' என்று சமாதானப்படுத்திக் கொண்டாள். 'அப்போ கடைசியா ஏன் சொதப்பின?' என்று மனசு கேட்க, தன் அலைபேசியை எடுத்துப் பார்த்தாள். சொதப்பியதற்கான காரணத்தை அது கண் முன்னே காட்டியது. பார்த்து சிரித்துக் கொண்டாள். அலைபேசியின் திரையில் தெரிந்ததைப் பார்த்தவள் கண்களில் நிச்சயம் காதல் இருந்தது. ஏனோ அத்தோடு கண்ணீரும் பெருகியது. கண்ணீருடன் சேர்ந்து வந்த சிரிப்பும் ஒரு இனிய உணர்வையே கொடுக்க, அப்படியே உறங்கிப் போனாள்.

அடுத்தடுத்த நாட்களில் நடந்த சில விஷயங்கள் அவள் விரைந்து செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தின. ஒரு நாள் அலுவலகத்தினருடன் நடைபெற்ற ஆன்லைன் மீட்டிங்கில் கலந்து கொண்டு வெளியே வந்தவளைப் புதிய குரல்கள் வரவேற்றன. அவளது ஒன்றுவிட்ட அத்தை ஒருவரும், பாட்டியும் பார்கவியின் வீட்டுக்கு வந்திருந்தனர். வீட்டு முன்புறம் இருந்த பகுதியில் அமர்ந்து இருவரும் வடகத்துக்கு வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தனர். அம்மாவும் ஒரு பிளவுஸ்க்கு பட்டன் வைத்துத் தைத்துக் கொண்டிருந்தாள். இப்போது கல்யாணங்களும் பிற விசேஷங்களும் நிறைய ஏற்பாடாகியிருக்க, தைப்பதற்கு நிறைய துணிகள் வந்திருந்தன.

வந்தவர்களை வரவேற்றுவிட்டுத் தட்டில் உணவைப் போட்டுக்கொண்டு உட்புறமாக அமர்ந்தாள் பார்கவி. கனகா அத்தை தான் ஆரம்பித்தாள். "என்ன மயினி? பார்கவிக்கு எதுவும் மாப்பிள்ளை வந்துச்சா?" என்று. சொந்த அத்தையுடன் தான் அம்மாவுக்குப் பிணக்கு. அப்பாவின் சித்தப்பா மகளான இந்த ஒன்றுவிட்ட சகோதரியுடன் நன்றாகப் பேசிக்கொள்வாள்.

"மூணு முறைமாப்பிள்ளை இருக்கும்போது வெளியில இருந்து பொண்ணு கேக்க யோசிப்பாங்கல்லா?" என்றாள் பாட்டி..

'நீ வேற பாட்டி..' என்று பார்கவி நினைத்தாலும், 'சரி சரி இப்படிப் பேசியே கொஞ்சம் காலத்தை ஓட்டுங்க.. எப்படியும் மாமா வீட்டுலயும் சரி.. அத்தை வீட்டுலயும் சரி.. நிறைய வசதி எதிர்பாக்குறவங்க.. அவங்க பசங்களுக்குக் கல்யாணம் பேசி முடிக்கிற வரை எனக்குப் பிரச்சனை இல்லை' என்றும் தோன்றியது.

அடுத்து நடந்த பேச்சுக்கள் தான் பீதியை அதிகம் கிளப்பின. "ஏன் மயினி! சொந்தத்துலயா குடுக்கப் போறீங்க?" என்றாள் அத்தை.

"உங்க அக்கா இருக்காளே.. என் ஒத்தை நாத்தனாரு.. நான் செத்தாலும் அவ மகனுக்கு மட்டும் குடுக்க மாட்டேன்" என்றபடி தன் மாமியாரை ஓரக் கண்ணால் பார்த்தாள். தன் மகளின் குற்றம் குறைகள் பாட்டிக்கும் தெரியும் போல.. அம்மா சொன்னதற்கு எதுவும் பதில் பேசவில்லை. அதற்காக சும்மாவும் இருக்கவில்லை.

"உங்க அண்ணன்மாரு கிட்ட ஒரு வார்த்தை கேளு.. இல்லன்னா வெளியே பாக்க ஆரம்பிப்போம்.. அவ கூடச் சேந்த பிள்ளைகளுக்குக் கல்யாணம்னு ரெண்டு நாள் முன்னாடி பேத்தி போய்ட்டு வந்தாளே.. அப்ப அவளுக்கும் கல்யாண வயசு வந்துருச்சுன்னு உனக்குத் தோணலையா.. நாலு பேர்கிட்ட சொல்லி வச்சாத் தான் நல்ல சம்பந்தமா வரும்" என்றாள் பாட்டி.

"ஓ பாட்டி! நீங்க தான் அடுத்த வில்லியா?" என்று நினைத்த பார்கவிக்கு சோறு உள்ளே இறங்கவில்லை.

மூன்றாவதாக அவளது அத்தையும் அடுத்த வில்லியாக இருந்தாள். சும்மா இருக்காமல், "உங்க அண்ணன் மகனுக்குக் குடுக்கிறதா இருந்தா எவ்வளவு நகை போடணும்? ரொக்கம் எவ்வளவு எதிர்பார்ப்பாங்க?" என்றாள்.

பார்கவியே, 'ஆமா, அம்மா ஏன் இன்னும் மாமா மகன்களைப் பத்திப் பேச்சு எடுக்கல? அப்பா கூட அன்னிக்கு என்னமா சண்டை போட்டாங்க?' என்று நினைத்தபடி காதைத் தீட்டிக் கொண்டு காத்திருந்தாள் அம்மா கூறப் போவதைக் கேட்பதற்காக.

அம்மாவின் குரலில் சுரத்தே இல்லை. "உங்க அண்ணன், அதான் என் வீட்டுக்காரரு.. அவரு கிட்ட பேசிட்டு எங்க பெரிய அண்ணனுக்கு போனைப் போட்டேன். பாப்பாவுக்கு ஜாதகம் பார்க்கலாம்னு இருக்கேன், உன் மகன் ஜாதகத்தைத் தரியான்னு நேரடியாவே கேட்டேன்.." என்று அம்மா கூற,

'இது எப்ப நடந்துச்சு? நானும் வீட்டுக்குள்ள தானே இருக்கேன்?' திக்கென்று இருந்தது பார்கவிக்கு.

"என்ன சொன்னாரு உங்க அண்ணன்? உங்க குரலே சரி இல்லையே?" என்று கனகா அத்தை எடுத்துக் கொடுக்க,

"கடனை வாங்கி வீடு கட்டிருக்க.. லோன் எல்லாம் அடைச்சிட்டு நகை சேர்த்துட்டுத் தானே கல்யாணம் பத்தி யோசிக்கணும்? இவ்வளவு செலவு செய்து படிக்க வச்சுருக்க.. அவ சம்பாதியத்துல கொஞ்சமாவது வீட்டுக்கு சாமான்க வாங்கிப் போடு.. அப்படிங்கறான் என் பெரிய அண்ணன்.. ஏன் கனகா? என்னைப் பாத்தா புள்ள சம்பாத்தியத்துல சாப்பிடுதவ மாதிரியா தெரியுது? சரி இவன் தான் இப்படிச் சொல்றானேன்னு பாத்தா எங்க அண்ணி போனை வாங்கி, 'என் மகனுக்கு அம்பது பவுனுக்குக் குறைச்சுப் போடுற பொண்ணக் கட்டுறதா இல்ல. அந்தப் பேச்சை எடுக்காதே'ன்னுருச்சு"

"உங்க சின்ன அண்ணன் கிட்ட பேசினீங்களா?" என்று கனகா கேட்க,

"இவனே இப்படி சொல்லிட்டான்.. அவன் அதுக்கு மேலத் தான் சொல்லுவான்.. அதனால வெளியில தான் வரன் பார்க்கணும். இதுங்களுக்கு சப்போர்ட் பண்ணிப் பேசப் போய் எங்க வீட்டுக்காரர் கிட்ட வீணா சண்டையிழுத்தேன்" என்று தன் தவறையும் ஒத்துக்கொண்டாள் அம்மா. பார்கவியின் பாட்டி மிக நல்ல நல்ல பாட்டி போல, இதற்குப் பிறகும் அம்மாவின் பிறந்த வீட்டைப் பற்றி எதுவும் குறை கூறவில்லை.

"எங்க சொந்தத்துல ஒரு பையன் இருக்கான்.. எங்க வீட்டுக்காரரோட அண்ணன் மாமியாருக்குச் சொந்தம். கேப்போமா?" என்று அத்தை கொளுத்திப் போட,

"எவ்வளவு எதிர்பாப்பாங்க?" என்றாள் அம்மா ஆர்வத்துடன்.

"முப்பது பவுனு வேணும்னு சொல்லி பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருக்காங்க.. இருவத்தஞ்சு போடுறோம்.. மாப்பிள்ளைக்கு அஞ்சு பவுன்ல செயின் போடுறோம்னு சொல்லிக் கேட்டுப் பாப்போமா?" என்றாள் கனகா அத்தை.

"இருவது போடுறோம்னு ஆரம்பிங்க.. அப்பத்தான் இருவத்தஞ்சுக்கு ஒத்துக்குவாங்க.." என்றாள் பாட்டி.

ஒரு நல்ல கம்பை எடுத்து மூன்று பேரையும் அடிக்கலாம் போலத் தோன்றியது பார்கவிக்கு. 'பேரம் பேசிட்டு இருக்குதுக மூணும் சேர்ந்து.. இவங்களை மாப்பிள்ளை பாக்க விட்டா இப்படி சாக்கடையில் தான் தள்ளுவாங்க போல.. யாராவது ஒருத்தராவது மாப்பிள்ளை எப்படி, குணம் எப்படி, வேலை என்னன்னு கேக்காங்களா..' என்று நொந்து கொண்டாள். அதற்கு மேல் சாப்பிடப் பிடிக்கவில்லை.

உள்ளே ஏதோ எடுக்க வந்த அம்மாவிடம் பார்கவி, "அம்மா, கல்யாணம் பத்திப் பேசக்கூடாதுன்னு சொன்னேன்ல? எங்க ஆஃபீஸ்ல வேற பிரச்சனையா இருக்கு.." என்றாள்.

"ஐயோ! என்ன பிரச்சனை?" என்று அம்மா கேட்க, வேலை போனாலும் போய்விடும் என்று அம்மாவிடம் கூறி அவளுக்கும் பயத்தைக் கொடுக்க பார்கவி விரும்பவில்லை.

"சம்பளம் லேட்டாத் தான் போடுவாங்க.. அரைச் சம்பளம் போட்டாலும் போடுவாங்க போல.. எங்கேயும் நிதி நிலைமை சரியில்லைல்ல?" என்று சமாளித்தாள்.

"சரி சரி! இதப் போய் கனகாத்த முன்னாடியோ பாட்டி முன்னாடியோ சொல்லாத.. வெளியே போய்க் கேவலமாப் பேசுவாங்க" என்றாள் அம்மா ரகசியமாக.

'அடப்பாவி அம்மா! அப்படி நம்பிக்கை இல்லாதவங்க கூடச் சேர்ந்து தான் என் வாழ்க்கையை ஏலம் விட்டுட்டு இருக்கீங்களா?' என்று வாயடைத்துப் போனாள் பார்கவி. இவ்வளவு நாள் பெருமையாக நினைத்த தன் குடும்பம், தன் ஊர், தன் மக்கள் என்ற உணர்வு இப்போது கசந்து போனது போன்ற எண்ணம் வந்தது. 'என்ன மாதிரி சூழ்நிலையில வாழுறோம் நாம?' என்று மனம் நினைத்தது.

அலுவலகத்தின் நெருக்கடி அன்றைய கூட்டத்திலும் சற்று அதிகமாகவே வெளிப்படத்தான் செய்திருந்தது. தமிழ்ச்செல்வன் அன்றே வேறு வேலைகள் தொடர்பான விளம்பரங்களை அனுப்பச் சொன்னானே, வந்துவிட்டதா என்று பார்த்து விண்ணப்பித்து வைப்போம் என்று நினைத்து மெயிலைத் திறந்தாள். சனி, ஞாயிறு இடையில் வந்து விட்டதாலும், வீட்டில் சில வேலைகள் இருந்ததாலும் லேப்டாப்பையே எடுக்கவில்லை. மெயிலில் முப்பது வாசிக்கப்படாத கடிதங்கள் தமிழ்ச்செல்வனின் ஐடியில் இருந்து மட்டும் வந்திருந்தன. முப்பதா? என்று நினைத்து ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தாள். அதன்பின் அவ்வளவையும் படித்து முடிக்க ஒன்றரை மணி நேரம் ஆகியது. அம்மா, அத்தை, பாட்டி மூன்று பேரும் அப்போதும் பேசிக் கொண்டுதான் இருந்தனர். ஆனால் எதுவுமே அவளது காதில் விழவில்லை.

தமிழ்ச்செல்வன் பார்கவிக்கு உருகி உருகித் தேதி வாரியாக எழுதி
வைத்த காதல் கடிதங்கள் அனைத்தையும் சிந்தாமல் சிதறாமல் அஜய் பார்கவிக்கு அனுப்பியிருந்தான்.


 
Top