கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நின்றன் காதலை எண்ணி 9

Akhilanda bharati

Moderator
Staff member
அத்தியாயம் 9


கொஞ்சம் ஓய்வெடுக்கலாம் என்று நினைத்துப் படுத்தான் தமிழ்ச்செல்வன். ஆனால் தூக்கம்தான் வருவதாக இல்லை. நொடிக்கு ஒரு முறை முகநூலையும் உள்பெட்டியையும் திறந்து தன் கேள்விக்கு ஏதாவது பதில் வந்திருக்கிறதா என்று பார்த்தபடியே இருந்தான்.

"ஃபோன் தேயப் போகுதா, விரலு தேயப் போகுதான்னு தெரியலை" அஷோக்கும் அவ்வபோது அருகில் படுத்து கலாய்த்துக் கொண்டுதான் இருந்தான்.

வாட்ஸ் அப்பிலும் சில குழுக்களில் இதே கேள்வியை அனுப்பிக் காத்திருந்தான். எறிகிற கல்லை எறிந்து வைப்போம், மாங்காய் விழுந்தால் லாபம், விழாவிட்டால் நஷ்டமில்லை என்ற எண்ணம்தான். முன்பெல்லாம் முகநூல் அல்லது வாட்ஸ் அப்பில் யாருக்காவது இந்த குரூப் ரத்தம் தேவை என்று செய்தி போட்டால் பத்துக்கு ஒரு செய்திக்குத் தான் நல்லவிதமாகப் பதில் வரும். பல செய்திகள் மாதங்கள் கழித்தும், அங்கு சுற்றி இங்கு சுற்றி அவனுக்கே திரும்பி வந்து சேரும். இருந்தாலும் முயலலாம் என்று தான் கேட்டு வைத்தான். அதிலும் இந்த லாக்டவுன் காலத்தில் கிட்டத்தட்ட இணையத்தை பயன்படுத்தும் அனைவரும் முக்கால் வாசி நேரம் இணையத்தில் தான் இருக்கிறார்கள். அதனால் பதில் வரும் என்று நம்பிக்கை.

தமிழ்ச்செல்வனின் எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் ஒரு நபர் கொஞ்ச நேரத்தில் பதிலளித்திருந்தார். 'நான் மில் தொடர்பான பணியில் தான் இருக்கிறேன்' என்று.


தொடர்ந்த உரையாடல்களில், ஒரு ஆளைப் பற்றி விசாரிக்கிறேன், திருமணத்துக்காக என்று தமிழ்ச்செல்வன் கூறி, விஸ்வநாதன் ஆர்எம் ஃபேப்ரிக்ஸ் என்று பெயரைப் போடவும் ஒரு நிமிடம் அந்த முனையிலிருந்து எந்தப் பதிலும் இல்லை. இன்னும் கொஞ்சம் விளக்கமாகக் கேட்கலாமா என்று தமிழ்ச்செல்வன் நினைக்கும்போதே, கொஞ்ச நேரத்தில்,

"சாரி சார், லேட் நைட் ஆயிடுச்சு. இருந்தாலும் அவசரம். இதுதான் என் நம்பர். கூப்பிட முடியுமா? இல்ல, உங்க நம்பர் அனுப்புங்க, நான் கால் பண்றேன்" என்று பதில் வந்தது. கூடவே ஒரு தொலைபேசி எண்ணும்.


'என்னவாயிருக்கும்? அப்படி என்ன அவசரம்?' என்று எண்ணியவாறே அருகில் படுத்திருந்த அஷோக்கைப் பார்த்தான் தமிழ்ச்செல்வன். ஏற்கனவே 'செல்லை ஆஃப் பண்ணுடா, பளிச் பளிச்சுன்னு லைட் எரிஞ்சுக்கிட்டே இருக்கு' என்று முணுமுணுத்தபடியே அப்போதுதான் கண்ணயர்ந்திருந்தான் அஷோக். 'நாம பால்கனிலேயே அடைக்கலம் ஆயிடுவோம், அதுதான் சரி' என்று நினைத்தவன் பால்கனிக்குச் சென்று அந்த எண்ணுக்கு அழைத்தான். அழைப்பு ஏற்பட்டவுடனேயே மறுமுனை, "நீங்கதானே அந்த மில் ஒர்க்கர் பத்திக் கேட்டீங்க சார்?" என்றது.

"ஆமா சார்! ஒரு அலயன்ஸ்காக.. உங்களுக்கு அவரைப் பத்தி ஏதாவது தெரியுமா?" என்று தமிழ்ச்செல்வன் கேட்க,

"நான் தான் சார் விஸ்வநாதன்... ஆர்.எம். ஃபேப்ரிக்ஸ்ல இருக்கிற ஒரே விஸ்வநாதன் நான்தான். எனக்கு யாரு சார் அலையன்ஸ் பாக்குறது? உங்ககிட்ட கேட்டது யார்?" என்றான் பதட்டமாக.

இலேசான அதிர்ச்சிக்கு உட்பட்ட தமிழ்ச்செல்வன் அழைத்தவரின் பெயரை முகநூலில் மீண்டும் பார்த்தான். 'விஷ்மித்ரா' என்று இருந்தது. 'அந்த லவ்வர் கேர்ள் பேரு சுமித்ரான்னு தானே ஏதோ சொன்னாங்க பார்கவி? அந்த லவ்வர் பாய் பேரு விஸ்வநாதன்.. அப்ப இவர் தான் போல' என்ற முடிவுக்கு வந்தான்.

"பாஸ்! சுமித்ராங்கிற பொண்ண லவ் பண்றது நீங்க தானே?" நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

"ஆமாங்க! சின்சியர் லவ்வுங்க.. வேற யாரையும் கல்யாணம் பண்ற ஐடியா இல்ல.. யாரு சார் அலையன்ஸ் பாக்குறது?" படபடப்பானான் விஸ்வநாதன். அந்த இரவின் அமைதிக்கு அவனது பதற்றம் சற்றும் பொருந்தவில்லை.

"கூல் கூல்! சுமித்ராவுக்காகத்தான் விசாரிக்கிறேன். அவங்க கூட இப்ப இருக்காங்களே பார்கவி, அவங்கதான் கேட்டாங்க. நல்ல பையனா? சப்போர்ட் பண்ணலாமான்னு தெரிஞ்சுக்கத் தான்.. ஆனா.. ஆனா.." என்று தமிழ்ச்செல்வன் இழுக்க,

"திருடன் கையில சாவியைக் குடுத்த மாதிரி என்கிட்டயே விசாரிக்க வேண்டியதா ஆயிடுச்சேன்னு யோசிக்கிறீங்களா? நான் நிஜமாவே நல்லவன் தான் சார்" நம்ப வைக்கப் பாடுபடுவது அவன் குரலிலேயே தெரிந்தது. "நீங்க வேணா உங்க ஃப்ரெண்ட்ஸ் யார்கிட்ட வேணாலும் கேட்டுப் பாருங்க, எங்க கம்பெனி முதலாளி கிட்ட கூட வந்து கேட்கலாம்"

"அத விடுங்க சார்... நீங்க எப்படி இந்த பேஜ்ல மெம்பர்? நீங்களும் ப்ளட் டோனரா?"

"ஆமா சார், ரெகுலர் டோனர் தான்... ஏ பாசிட்டிவ்"

"சூப்பர் சூப்பர்! நெருங்கிட்டோமே!" என்றவன் நடக்கும் விஷயங்களைப் பற்றி சுருக்கமாகப் பேசிவிட்டு, "ஏன் சார் அந்தப் பொண்ணை அவ்வளவு தூரம் அனுப்புனீங்க? சீக்கிரமே கல்யாணம் பண்ணி அங்கேயே செட்டில் ஆயிருக்கலாமே?"

"இப்பதான் சார் மேரேஜ் ப்ளான் பண்ணி வச்சிருந்தோம். ஆனால் லாக் டவுன் டைம், அவங்க வீட்ல வேற கெடுபிடி. இப்ப தம்பிக்கு காதுகுத்துன்னு சொல்லி ஊரைக் கூட்டி அதுல வச்சு சுமித்ராவுக்கு கட்டாயக் கல்யாணம் பண்றதுக்கு பிளான் இருக்கு சார். அதைக் கேள்விப்பட்ட உடனே தான் அவளை அங்கே பாக் பண்ணிட்டேன். இந்த திடீர் கல்யாண மேட்டர் அவளுக்கு தெரியாது சார். தெரிஞ்சா டென்ஷன் ஆயிடுவா. நீங்களும் சொல்லிடாதீங்க. அவளாவது ஜாலியா சிரிச்சுக்கிட்டே இருக்கட்டும்" அவன் உருகி உருகிப் பேசியதிலேயே தெரிந்து விட்டது தமிழ்ச்செல்வனுக்கு, இவன் சுமித்ராவை நன்றாகப் பார்த்துக் கொள்வான் என்று.

"உங்க வீட்டுல மேரேஜ்க்கு ஓகேன்னா அங்க கூட்டிட்டுப் போயிருக்கலாம்ல?"

"எங்க வீட்டில நான் தான் சார் படிச்ச ஒரே ஆளு. அவங்க ரொம்ப எளிமையானவங்க. பிரச்சனை எதுவும் வந்தாத் தாங்க மாட்டாங்க"

"அதுக்காக ஓடிக்கிட்டே இருக்கப் போறீங்களா?"

"தெரியல சார்! இப்ப வேலையும் இல்ல.. கையில சேவிங்ஸும் குறைவா இருக்கு. அதான் முழிக்கிறேன். லைஃப்ல கரெக்டா ப்ளான் பண்ணி ரிஸ்க் இல்லாமல் வாழணும்னு நினைக்கிற ஆளு நான். ஆனா ப்ளான் பண்ணாம லவ் பண்ணது தப்பு தான் சார். ஏழைகளுக்கு எல்லாம் காதல் வரலாமா சார்? அதுவும் நம்ம நாட்டுல?" என்று உணர்ச்சிப் பூர்வமாகக் கேட்டான் விஸ்வநாதன்.

ஏழை, நம்ம நாடு இரண்டு வார்த்தைகளும் தமிழ்ச்செல்வனின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த சோஷியலிசம் என்ற சிங்கத்தை உசுப்பி விட்டு விட்டன.

"அதென்ன சார் அப்படிச் சொல்லிட்டீங்க? நம்ம நாட்டுல தானே ஏழைகளுக்கு மத்த ஏழைகள் கை குடுக்கிறாங்க? காதலுக்காக உதவி செய்யறதுக்கு நம்ம நாட்டுல தான் அமைப்புகள் இருக்கு. இந்த நாடோடிகள் படம், ஷாஜகான் படம் இதெல்லாம் பாக்கலையா நீங்க? முதல்ல நாம சின்ன வயசா இருக்கும்போது வந்த படங்களை எல்லாம் நினைச்சுப் பாருங்க. ஹீரோ கூட நாலு பேரு எப்பவுமே லவ்வுக்கு ஹெல்ப் பண்றதுக்காகவே இருப்பாங்களே? இவ்வளவு ஏன், எங்க ஊரே காதலர்களுக்கு அடைக்கலம் குடுக்கிற ஒரு ஊர் தான் தெரியுமா? நாலு தென்மாவட்டங்கள்ள எதுல பொண்ணு, பையனைக் காணும்னாலும் மகாதேவபுரத்துல வந்துதான் தேடுவாங்க. எந்த ஜாதிக்காரங்க வந்தாலும் அடைக்கலம் குடுத்துக் கூடவே வச்சுக்கிட்டு வேலை வாங்கிக் குடுத்து நல்லபடியா வாழ வைப்பாங்க தெரியுமா? நான்தான் அந்த மாதிரி உதவிகள் பண்ணினது இல்ல" அவனது மூளையின் அனுமதி இல்லாமலே வாய் இந்த வார்த்தைகளைக் கொட்டிக் கொண்டிருந்தது.

"அப்ப நானும் சுமியும் உங்க ஊருக்கே வந்துடவா? எங்க போனாலும் உழைக்கப் போறோம்.. உழைச்சதுக்குக் காசு கிடைக்காமலா சார் இருக்கும்?" என்று விஸ்வநாதன் கேட்க,

"ஆஹான்!" என்று வாய் பிளந்தான்
தமிழ்ச்செல்வன்.


பார்கவியையும் அவளது தோழிகளையும் அன்றிரவு சிந்தனைகள் அதிகம் ஆக்கிரமித்தன. கடந்த இரண்டு நாட்களாக இருந்த ஜாலி, கேலிகள், பாட்டு எதுவுமே இல்லை. 'சிட்டுவேஷன் சாங் பாடாம ஒரு மணி நேரத்துக்கு மேல உக்காந்துருக்காளே சுமி!' என்று ரேணுகா மனதிற்குள் ஆச்சரியப்பட்டாள்‌. மையத்தில் இவர்களுடன் வந்திருந்த அனைவருக்குமே ஒருவிதப் பதட்டம் தான். மறுநாள் பாசிட்டிவ் என்று வந்துவிட்டால் மருத்துவமனை வாசம். மீண்டும் தனிமை. நெகட்டிவ் என்று வந்து விட வேண்டுமே என்று வேண்டாத ஆள் இல்லை அங்கே. உண்மையில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர் கூட இந்நேரம் கடவுளை வேண்டுவார்கள் என்று தோன்றியது பார்கவிக்கு.

படுத்தவுடன் தூங்கிவிடும் சுமியும் அன்று புரண்டு புரண்டு படுத்த வண்ணம் இருந்தாள். மறுநாள் காலை தூக்கத்திலேயே "ஆத்தா நான் பாஸாயிட்டேன்!" என்று உரக்கக் கூறியபடியே எழுந்து அமர்ந்தாள்.

"என்ன பாப்பா பாஸாயிட்டியா? என்ன கனவா?" என்று பாட்டி கேட்க,

ரேணு, "நாங்கல்லாம் மத்தவங்கள மாதிரி பத்தாப்பு, பன்னெண்டாப்பு பரீட்சை ரிசல்ட்டுக்கு காத்திருக்கலேல்ல? அதான் கொரோனா டெஸ்ட் ரிசல்ட்டுக்காகக் காக்க வச்சுட்டாங்க" என்றவள், "ஏன் பாட்டி! நீங்க எத்தனாவது வரை படிச்சீங்க?" என்று கேட்க, "அந்தக் காலத்துல அஞ்சாப்பு தாயி!" என்றார் பாட்டி பெருமையாக.

"ஆமா சுமி, இந்த டெஸ்ட்டைப் பொறுத்த வரைக்கும் எது பாஸ், எது ஃபெயில்? பாசிட்டிவ்னா பாஸா? நெகடிவ்னா பாஸா? கனவுல என்ன வந்துச்சு உனக்கு?" பார்கவி கேட்டாள். எப்போதுமே முடிவெடுக்க வேண்டிய நேரம் நெருங்குகையில் பார்கவிக்குத் தெளிவு வந்துவிடும். அது அவளது இயல்பு. முந்தைய நாள்வரை குழம்புபவள் அந்த நாள் வந்தால் எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று துணிந்து விடுவாள்.


"கலகலவெனப் பொழியும் பொழியும் மேகம் எங்கே செல்லுதோ" என்று பாடல் பாடியது பார்கவியின் அலைபேசி.

"ரிங்டோன் புதுசா இருக்கே?" என்று ரேணுகா கேட்க வர,

"இப்ப அக்கா ஃபோனத் தூக்கிக்கிட்டு வெளியே போவாங்க பாரு" என்றாள் சுமித்ரா இழுவையாக.

"நான் எங்கேயும் போகல.. இங்கேயே லவுட் ஸ்பீக்கர் போடுறேன். நீங்களும் கேளுங்க" என்ற பார்கவி லவுட் ஸ்பீக்கரைத் தட்டிவிட்டாள்.

அவள் சொன்னதிலேயே அனைவருக்கும் தெரிந்து போய்விட்டது, பேசுவது யார் என்று. தமிழ்ச்செல்வன் தான் பேசினான். பாட்டி கூட, "யாரு பேசுறது தமிழ் வாத்தியாரா?" என்றார்.

"மேடம்! விஸ்வநாதன் பத்தி விசாரிக்கச் சொன்னிங்களே... அவரே கிடைச்சுட்டார் மேடம். ரொம்ப நல்ல டைப். அவரும் ரெகுலர் ப்ளட் டோனர் தான். அனேகமா அவரைக் கூட்டிட்டு நானே அங்க வந்துருவேன் மேடம். நீங்க எப்ப அங்க வெகேட் பண்ணனும்?" குரலில் அயர்ச்சியையும் மீறி உற்சாகம் கொப்பளித்தது.

"பதினோரு மணிக் கிட்ட ரிசல்ட் வரும் சார்.. ரெண்டு மணி வரை இங்கேயே சமாளிக்கலாம்னு நினைக்கிறேன்" என்று பார்கவி பதில் கூற,

"என் தம்பி ஒருத்தன், அஜய்னு பேரு.. அவன் ஆட்டோல வருவான்‌ அவன் கூட சுமித்ராவை அனுப்பி வைங்க. நாங்க மேக்சிமம் நாளைக்கு, இல்ல நாளைக்கு மறுநாள் வந்திடுவோம்"

பார்கவி சத்தியமாக இப்படி ஒரு உதவியை எதிர்பார்க்கவில்லை. ஏதாவது ஒரு இடம் சொல்வான், அங்கு சுமித்ராவை விடலாம் என்று எண்ணி இருந்தாள்.

"நீங்கள் செய்றது பெரிய உதவி. சிரமம் எதுவும் இல்லையே? உங்க வீட்ல இருக்கிறவங்களுக்கு ஓகேவா தமிழ் சார்?"


"வீட்ல அம்மா, அண்ணன் மட்டும்தான். ஹோட்டல் வேலைகள்ல அவங்க பிசியா இருப்பாங்க. விஸ்வநாதனுமே, உங்க ஹோட்டல்லயே ஏதாவது வேலை போட்டுக் குடுங்க சார் அப்படிங்கறார். பாத்துக்கலாம், முதல்ல வாங்கன்னு சொல்லிருக்கேன். முதல் நாள் பேசிய சாந்தமான மனநிலையும் குரலும் இப்போது அவனிடம் இல்லாதது போலத் தோன்றியது பார்கவிக்கு. அவன் சற்று பரபரப்பாக செயல்படுவது போலவும் தோன்றியது. 'ஏன் படபடப்பாப் பேசுறார்? தேவை இல்லாம அவருக்கும் பிரச்சனை குடுக்குறேனோ?' என்று யோசித்துக் குழம்பிப் போனாள் பார்கவி.

சுமித்ரா இந்த விஷயத்தில் கருத்து எதுவும் சொல்லாமல் இருக்க, ரேணுகா ரொம்பவே வருத்தப்பட்டாள். "நிறைய பேரைக் கஷ்டப்படுத்துறமோடி? தேவையில்லாம இவளைக் கூட்டிட்டு வர ஒத்துக்கிட்டேன். எங்க அப்பாட்ட நான் ஒரு தடவை பேசிப் பாக்கவா? அவர் ஒத்துக்கிட்டா எங்க வீட்டுலேயே கொண்டு போய் வச்சுக்கிறேனே?" என்று பார்கவியிடம் கேட்டாள்.

"குழப்பாதடி! ஏதோ சில விஷயங்கள் அதுவா நடந்துகிட்டு இருக்கு. அதனால டிஸ்டர்ப் பண்ண வேண்டாம். சுமித்ரா வீட்டு நடவடிக்கைகள் அப்பப்ப கலெக்ட் பண்ற மாதிரிப் பாக்கணும்" என்று ரேணுகாவிடம் கூறியவள், "உன் ஸ்லீப்பர் செல்கள் என்னம்மா பண்ணுது? சமீபத்திய தகவல்கள் எதுவும் உண்டா?" என்று சுமித்ராவிடம் கேட்டாள்.

"ஃபோன் பண்ணிப் பண்ணிப் பாக்கிறேன்கா. எடுக்க மாட்டேங்குதுங்க. ஒருவேளை மத்தவங்க கூட லிங்க் ஆகி மொத்தத்துல ஸ்லீப்பாகி இருக்குமோ?" எனவும்,

"அப்படிப்பட்ட டவுட் இருந்தா அந்த ஆட்கள் கிட்ட காண்டாக்ட் பண்ணாத. விடு. அவங்களா கூப்பிட்டா அப்ப பாத்துக்கலாம்" என்றாள் பார்கவி.

எதிர்பார்த்த நேரத்தில் பரிசோதனை முடிவுகள் வர, பார்கவி, சுமி, ரேணுகா மூவருக்கும் நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்திருந்தது. பாசிட்டிவ் லிஸ்ட்டோடு வந்த ஒரு ஊழியர், "செல்லம்மாள், 64 வயசு…" என்று அறிவிக்க,

"ஐயோ! அது நான் தான். எனக்குக் கொரோனாவா?" என்று ஓவென்று அழுதார் இவர்களது அறைப் பாட்டி. "அந்த மனுஷன் போனப்பவே நானும் போயிருக்கணும். இப்பப் பாருங்க, இந்த நிலைமை எனக்குத் தேவையா?" என்று அழ ஆரம்பித்தார். சுமித்ராவும் ரேணுகாவும் அவரை சமாதானப்படுத்த முயல,

"இனிமே ரெண்டு மகன் வீட்லயும் என்னை உள்ள விடுவாங்களா? பிள்ளைகளா! என்னையும் உங்க சொந்தமா நெனச்சு எங்கேயாவது முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டுருங்க.. இல்ல ஒரு பாட்டில் பூச்சி மருந்து வாங்கித் தாங்களேன்" என்று ஏதேதோ சொல்லிப் புலம்பினாள் பாட்டி.

"நான் தான் அப்பவே நாம இட்லிக் கடை போடலாம்னு சொன்னேனே பாட்டி? ஹாஸ்பிடலுக்குக் கூட்டிட்டுப் போய் பத்து நாள் வச்சிருப்பாங்க. அப்புறம் வாங்க, நான் உங்களைப் பெரிய தொழிலதிபரா ஆக்கிக் காட்டுறேன். இது சத்தியம்! மிஞ்சிப் போனா ஒரு பாட்டு, இல்ல, ரெண்டு பாட்டு. அதுக்குள்ள செல்லம்மா பவன்- உலகம் பூரா கிளைகள் ஆரம்பிச்சுடலாம். என்ன சொல்றீங்க?" என்று சீரியஸாகக் கேட்டாள் சுமித்ரா.

இதற்கு அழ வேண்டுமா, சிரிக்க வேண்டுமா என்று பாட்டி விழிக்க, வெளியில் சென்று வந்த பார்கவி வேகமாக வந்து, "பாட்டி! அது வேற செல்லம்மா. அட்ரஸ், ஊரு எல்லாம் வேற. உங்களுக்கு நெகட்டிவ் தான். நீங்க வீட்டுக்குப் போகலாமாம்" என்றாள்.

"நல்லா இருக்கணும் தாயி நீ. ஆனா, பாவம் என்னை மாதிரியே இன்னொரு பிறவி கஷ்டப்படுமே.. அதுவும் என் பெயரு, என் வயசு" என்று வருத்தப்பட்டார் பாட்டி. அதற்கும் சேர்த்து அவரைச் சமாதானப்படுத்தி விட்டு, தங்கள் பொருட்களை அடுக்கி, அவரவர்களை அழைத்துச் செல்ல வரும் ஆட்களுக்காகக் காத்திருந்தனர்.

யாருடைய எதிர்பார்ப்பையும் அதிக நேரம் நீட்டிக்க விரும்பாமல் பார்கவி மற்றும் ரேணுகாவின் அப்பாக்கள் கிடைத்த வாகனங்களில் வந்திருந்தனர். ரேணுகாவின் தந்தை "சுமித்ராவை என்ன செய்யப்போகிறாய்?" என்பது போல ரேணுவை விசாரிக்க,

"அதெல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு. அதைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை? உங்களால தான் பெத்த பொண்ணுக்குக் கூட சோறு போட முடியாதே. இன்னொருத்திக்கும் சோறு போடுற கஷ்டத்தைக் குடுக்க மாட்டேன் பயப்படாதீங்க" பல வருடங்களாக அடக்கி வைத்திருந்த கோபம் ரேணுகாவிடம் இருந்து வெளிப்பட்டது. இதே குற்றவுணர்ச்சியால் தான் அவரும் நேரடியாக ரேணுவிடம் பேசாமல் பார்கவியின் பெற்றோரைத் தூண்டிவிட்டு இருந்தார். சம்பாதிக்கும் பெண்ணின் முடிவுக்கு எப்படி ஏதிர்ப்புத் தெரிவிப்பது என்ற தயக்கம் இருக்கும் போலும்.

"சரிம்மா போகலாம்!" என்று அவர் கூற, "இருங்க... அவளை அனுப்பிட்டுப் போகலாம்" என்று ரேணுகா கூறினாள். அதற்கும் அவர் மறுத்துப் பேசவில்லை. காத்திருந்தார். சற்று நேரத்திலேயே அஜய் ஆட்டோவில் வந்து பார்கவியின் அலைபேசிக்கு அழைக்க, சுமித்ராவை அவனுடன் அனுப்பத் தயாராகினர்.

"ஹாய்! என் பேரு அஜய். தமிழ் அண்ணன் தம்பி" என்று கையை ஆட்டிக்கொண்டே இறங்கினான் அஜய்.

"தமிழ் வாத்தியார் தம்பியா? இங்கிலீஷ் பேரா இருக்கு?" என்று சுமித்ரா கூற,

"என் உண்மையான பேரு முருகன். எங்க ஊர்ல வீட்டுக்கு ஒரு முருகன் உண்டு. அதான் நான் அஜய்ன்னு வச்சுக்கிட்டேன். அஜித், விஜய் ரெண்டு பேத்துக்கும் நான் ரசிகராக்கும். அப்புறம் அஜய்ங்கிறது ஹிந்தி பேரு" என்றான் அவன் விளக்கமாக‌

"அப்படியா?" மூக்கின் மேல் விரலை வைத்துக்கொண்டு சுமித்ரா கேட்க,

"ஏ ஆத்தா! சீக்கிரமா ஆட்டோல ஏறும்மா.. அப்புறம் பேசிக்கலாம். அப்புறம் அந்தத் தம்பியும் உனக்கு சரிசமமா பேசுவான் போல. ரெண்டு பேரும் போற வரைக்கும் கொஞ்சம் அமைதியாப் போங்க. ஆட்டோ ஓட்ற அண்ணனுக்கு ரெண்டு காதுலயும் ரத்தம் வந்திடப் போகுது" என்றாள் ரேணுகா.

செல்லம்மா பாட்டியும் அவளை வழியனுப்பி விட வந்திருந்தார். "பாட்டி! நான் இப்போ ஹோட்டலுக்குத் தான் வேலைக்குப் போறேன். அங்க போய் பிசினஸ் டெக்னிக் எல்லாம் கத்துக்கிட்டு வர்றேன். நாம கடை போடுறோம். சக்சஸ் காட்றோம். சமூக இடைவெளி காரணமா வணக்கம் மட்டும் வைக்கிறேன்" என்று கூறி பாட்டிக்கு விடை கொடுத்துவிட்டு பார்கவிக்கும் ரேணுவுக்கும் பறக்கும் முத்தங்களைப் பரிசளித்து ஆட்டோவில் ஏறினாள் சுமித்ரா.

பல நினைவுகளையும் அனுபவங்களையும் கொடுத்த இந்தத் தனிமைப்படுத்தல் நாட்களுக்குப் பின் தன் வாழ்க்கை எப்போதும் பழையது போல இருக்கப் போ
வதில்லை என்று தெரிந்து விட்டதோ என்னவோ அந்தக் கல்லூரியை திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே அப்பாவுடன் கிளம்பினாள் பார்கவி.
 
Top