கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நிலைமாறும் தனிமைகள்....ஷர்மி மோகன்ராஜ்

Latha S

Administrator
Staff member
நிலைமாறும் தனிமைகள்



அது ஒரு 90 களின் தொடக்கத்தில் உள்ள காலகட்டம்..ஜீவா தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞன் சாயங்காலம் ஐந்து மணிக்கு பரபரப்பாக பெர்மிசன் கேட்டு மேலதிகாரியிடம் திட்டுவாங்கி அரக்க பறக்க மெரினா பீச் வந்து கொண்டிருந்தான் தன் காதலியை பார்க்க..



சென்னையின் நெரிசலில் வேர்த்து விறுவிறுத்து கசங்கிய காகிதமாய் அவன் வந்து சேர., தன் ஜோடி புறாவுக்கு அழைக்க அப்போது தான் தெரிந்தது அம்மினி லேட் என்று..



இவர்கள் அடிக்கடி சந்திக்கும் வழமையான காதலர்கள் கிடையாது.., கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கும் காருண்யாவிற்கு ஜீவா சீனியர்.. கல்லூரியில் ஏற்பட்ட பழக்கம் நட்பு ரீதியாக தொடர்ந்து பின்பு காதலில் விழுந்தது தான் மாயம்..



வீடு, காலேஜ் என்று இருப்பவளுக்கு எப்போதாவது கிடைக்கும் அரிதான சமயத்தில் தான் அவனை பார்க்க வெளியில் வருவது வீட்டில் அவ்வளவு ஸ்ட்ரிக்ட் ஆபீசர்கள் அன்பினால் அடிக்கும் அளவிற்கு ஸ்ட்ரிக்ட்..,இப்போது கூட ப்ராஜெக்ட் விஷயமாக வெளியே வந்தவள் அவனை பார்க்க கிடைத்த அரை மணி நேரத்தில் ஓடி வந்திருந்தாள்.. அவனுக்கும் திடீரென டெலிபோன் பூத்திலிருந்து அழைத்து அவனை வர சொல்ல,அவளை பார்க்கவென்றே கிடைக்கும் ஒரு நாளில் அவளை தவற விடாது மேலதிகாரியிடம் திட்டு வாங்கினாலும் பரவாயில்லை என்று கிளம்பி வந்திருந்தான் ஜீவா...



பின்னே எத்தனை கஷ்டப்பட்டு காதல் வளர்த்தவன் அவன்.. தனக்காக கிடைக்கும் சந்துகளிலெல்லாம் கஷ்டப்பட்டு ஓடிவரும் அவளை காணும் போது அவனுக்கு காத்திருத்தலின் தனிமை கூட சுகம் தான்..





காதலில் காத்திருப்பது கூட சுகம் தான்

அவளுடனான நினைவுகளில் அசைபோடுவதால்..





சூரியன் தன் கதிர்களை தன்னுடனே மறைக்க.., கடலலை காலை நனைக்க தனிமையில் மணலில் கால் புதைய நடந்து கொண்டே இருக்கும் ஒருவனுக்கு தான் காதலியினுடைய நினைவுகள் எத்தனை சுகம்..



அவனது நினைவுகள் பின்னோக்கி அவர்களுடைய கல்லூரி காலத்தை நோக்கி பயணித்தது..



அவள் கல்லூரிக்கு வந்து சேர்ந்த நாள் முதலே சைட் அடிக்க ஆரம்பித்து காதலை உணரவே ஒரு வருடம் ஆகிவிட்டது..



அந்த ஒரு தலை காதலுடன்.., சொல்லாத காதலின் தனிமையான கொடுமையான நிமிடங்கள் அவனை ஆட்டுவிக்க இப்போது அவளிடம் காதலை சொல்ல தயாராகிவிட்டான் ஜீவா..



அது அவளுக்கு இரண்டாம் வருடம் அவனுக்கு கடைசி வருடம் ஒற்றை ரோஜாவை தலையில் ஏந்தியவாறே கையில் நோட்டுடன் தாவணியில் அமைதியாக அவள் நடந்து வர.. அவளுக்கு குறுக்காக சென்று அவளை நிறுத்தினான் அவன்..



அவனை கண்ட அவளுக்கு நாக்கு தந்தியடிக்க ஆரம்பித்தது..இன்று போல் அன்றெல்லாம் ஆண் பிள்ளையிடம் அத்தனை எளிமையாக பேசிவிட முடியாது...



"காருண்யானு பேரு வச்சுகிட்டு நான் கேட்டதை மறுக்கமாட்டனு நினைக்கிறேன்"





"என்...ன வேணும் உங்களுக்கு" என திக்கி திக்கி அவள் கேட்க...





"காருண்யாவை இந்த ஜீவா கூட சேர்த்து ஜீவகாருண்யாவா மாத்தலாம்னு நினைக்கிறேன் அதுக்கு உன் சம்மதம் வேணும்"





முதலில் புரியாமல் விழித்தவளுக்கு அவனுடைய முகபாவனையும் இதழ்கடையோர சிரிப்பும் அவன் எண்ணத்தை புரிவைக்க இப்போது அவள் கண்கள் முட்டையை விழுங்கியது போலானது..



இப்போது அவள் கண்களில் முணுக்கென கண்ணீர்.. அவளது கண்ணீரை கண்டதும் பொறுக்காமல்.."இங்க பாரு காரு இது என்னோட விருப்பம்.. உனக்கு இதுல சம்மதமான்னு சொல்லு அதை விட்டுட்டு ஏன் அழற"





இன்னும் தேம்பிக்கொண்டே,"எனக்கு பயமாருக்கு எங்க வீட்டுல இதெல்லாம் ஒத்துக்க மாட்டாங்க" என்றாள்..



அவள் வாயிலிருந்து பிடிக்கவில்லை என்ற வார்த்தை வராமலிருக்க அவனுக்கு அதுவே அப்போது போதுமானதாய் இருந்தது..







அம்மா காரு

உன் க்ளாசுல வந்துருவாங்க சாரு

இப்படியே நீ அசைஞ்சு போனா நீதான் அடுத்த திருவாரூர் தேரு..



என டி.ஆர் ஸ்டைலில் அவன் சொல்ல அதில் அழுகையை மறந்து சிரித்துவிட்டாள் அவள்..



அதன் பின்னான நாட்களில் அவனும் காதலை ஏதாவது ஒரு இடத்தில் சொல்லிக்கொண்ட இருக்க அவளுக்கு அவன் மீதான நம்பிக்கை மெல்ல காதலாக பூக்க துவங்கிய தருணம்..





அவனுக்கு படிப்பெல்லாம் முடிந்து இறுதி தேர்வு அவன் அதை எழுதிவிட்டு வெளியே வர அப்போது ஓட்டமாக ஓடி போய் அவனுக்கு குறுக்கில் நின்றாள் இவள்..





அவளை பார்த்தவன்,"என்னவாம்??" என்றான்..





ஜீவகாருண்யாவுக்கு சம்மதம் என எழுதி இருந்த அந்த பேப்பரை அவன் கையில் திணித்துவிட்டு அவன் படிப்பதற்குள் ஓடிவிட்டாள்..அதை பார்த்தவனுக்கு அதிர்ச்சி காதலை உரைத்த அன்று கூட தனிமையையே பரிசாக தந்திருந்தாள்..





அதன் பின் மார்க்ஷீட், டிசி வாங்க என எப்போதெல்லாம் அவன் கல்லூரி சென்றானோ அப்போதெல்லாம் அவளை பார்ப்பான்.. அப்போதும் கடித போக்குவரத்தே அவர்களுக்குள்..இதையெல்லாம் அசைபோட்டவனுக்கு அந்த தனிமையில் அவர்களது காதலின் நினைவுகள் தென்றல் போல் மனதை வருடி சென்றது..



தென்றலை சூறாவளியாக மாற்றவே அவள் அவனை நோக்கி விறுவிறுவென்று வந்து கொண்டிருந்தாள்..



அவளது வருகையின் வேகத்தை உணர்ந்தவன் வேகமாக அவளருகில் வர,"என்ன காரு என்ன ஆச்சு"





"வீட்டுல என்னை பொண்ணு பார்க்க வராங்க நீங்க ஏதாச்சும் பண்ணுங்க" என அழுது கொண்டே உரைத்தவள் முதன் முறை அவனின் கரம் பற்றி "என்னை விட்டுவிடாதே" என யாசித்து சென்றாள்..



அவனுக்கு என்ன சொல்வதென்றே புரியாத நிலை அவன் கரத்தின் மீது உள்ள அவளின் கரத்தை பற்றி," நான் இருக்கிறேன்" உனக்கு என்று அவளை தைரியபடுத்தி வழியனுப்பி வைத்தான்.



பின்னொரு நாளில் அவளின் வீட்டிற்கு பெண் கேட்டு செல்ல.. அவர்கள் முடியாது என்று சொல்லி அவனை விரட்டியடித்தனர்..



அதன் பின்னான அவனின் காலங்கள் எல்லாம் கடுமையானது தான்.. அவனின் பயணமும் தனிமையின் கொடுமையினூடே..



அவளை பார்க்க முடிவதில்லை, எப்போதும் கிடைக்கும் கடித போக்குவரத்தும் இல்லை... அவள் நிலை தெரியாத பித்து பிடித்த நிலையில் அவன்..



ஆசைப்பட்ட ஒரு பொருள் கைநழுவி செல்லும் நிலை இப்போது அவனுக்கு, அதே காதலின் நினைவுகள் தனிமையின் வலியாய் அவனுள்..



சாதி அந்தஸ்து என அவர்களின் காதலுக்கு எத்தனை தடங்கல்கள் அதை தாண்டி பெண்ணவளுக்கு நம்பிக்கை.., அவன் சொன்ன 'நான் இருக்கிறேன்' என்ற வரிகள் தான் அவள் தனிமையின் துயர் துடைத்து உத்வேகம் அளிக்க அதனுடனே போராடி போராடி அவள் காதலை கரை சேர்த்து இருந்தாள்..,இங்கு தனிமை நம்பிக்கையாய்..





பல போராட்டங்களுக்கு பின் ஒருவழியாக திருமண பந்தத்தில் இணைந்து ஜீவகாருண்யாவாக மாறிய இந்த ஜோடிகளுக்கு இப்போது தேனிலவு பயணம் ஊட்டியை நோக்கி...இப்போது இவர்களுக்கு இந்த தனிமை வரமாய்.. இன்பமாய்..





இருவரும் ஒருவருக்குள் ஒருவர் மூழ்கி முத்தெடுத்து இல்லறத்தை நல்லறமாக மாற்றியமைத்திருந்தனர்..



இருமனம் இணைந்து செம்மையாக வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த பயணத்தில் அவர்கள் காதல் வாழ்விற்கு ஒளியாய் மகவு ஒன்று அவள் வயிற்றில் உதித்தது...



அவனின் காதலும் கவனிப்பும் நாளுக்கு நாள் அதிகரிக்க அவள் தாய்மையின் பூரிப்பில் மிதந்தாள்.. இதோ அவளுக்கு வளைகாப்பு முடிந்து அவள் வீட்டிற்கு செல்ல மீண்டும் ஒரு தனிமை இம்முறை எதிர்பார்ப்பை நோக்கி..





அவர்களின் வாழ்விற்கு மகள் ஒன்று பிறந்து அவர்களுக்கான தனிமையை கூட கொலுசொலியில் நிரப்பி இருந்தாள்..



மகளுக்கு அபிராமி என பெயரிட்டு இருந்தனர்.. என்ன சூழலோ ஒரு குழந்தைக்கு மேல் அவர்கள் பெற்றுகொள்ளவில்லை..



இதோ இப்போது அன்னை தந்தையராய் தத்தமது கடமையை ஆற்ற தொடங்கிவிட்டனர்..



பெண் பிள்ளை என்பதால் பள்ளி கல்லூரி என அனைத்து இடங்களிலும் முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு, மகளின் வளமான எதிர்காலம் என ஒவ்வொன்றையும் சிறப்பாக குடுக்க முனைவதில் இவர்களுக்கான ஓட்டம் அதிகமாகி போனது..



பெண் பிள்ளை என்பதால் அவளை தனியே விடாமல் காருண்யா ஒரு அன்னையாக அரணாக நின்றாள் எனில் ஜீவா அந்த சிறிய கூட்டின் வேராகி போனான்...





பிள்ளைக்கு பள்ளி தொடங்கி கல்லூரி அதன் பின் அவளின் திருமணம் என ஒவ்வொன்றையும் சிறப்பாக செய்து முடித்து, இப்போது கிழப்பருவம் எய்தியும் கூட இன்னும் காதல் மங்காமல் தங்களுக்கான காதல் வாழ்வை சிறிது காலம் தான் கழித்துக்கொண்டு இருந்தனர் இந்த ஜீவகாருண்யா தம்பதிகள்..



ஒரு நாள் ஜீவகாருண்யாவாகிய அவர்களிடமிருந்து காருண்யா மட்டும் கருணையே இல்லாமல் பிரிந்து முதுமையின் தனிமை துயரை ஜீவாவுக்கு அளித்துவிட்டு பறந்திருந்தாள் விண்ணுலகை நோக்கி..



அதன் பின் சடங்கு சம்பிரதாயம் என எல்லாம் முடிந்து அபிராமி தந்தையை தன்னுடன் அழைக்க பிடிவாதமாக மறுத்துவிட்டு பழமையான தங்களது காதல் கடிதங்களை படித்த படியே தன்னவளின் வாசம் இருக்கும் இடத்தையே வலம் வந்து கொண்டிருந்தார் தனக்கான இறுதிநாட்களை எண்ணிக்கொண்டே...





இப்போது அவ்வை சொன்ன கொடிது கொடிது முதுமையில் தனிமை என்பதுக்கு பொருந்தி போய் வாழ்க்கையின் வெறுமையை காருண்யாவை எண்ணி கழித்து கொண்டிருந்தார்....



இதோ அனைத்தும் முடிந்து மீண்டும் இந்த ஜீவா என்னும் ஜீவன், காருண்யாவை நோக்கி பயணப்பட்டது..



இப்போது தனிமையின் வெறுமை தீர்ந்தது போனது இவர்களுக்குள்...



தனிமை களிமண் போன்றது ஆளுக்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ப மாறுபடும்.. சில சமயம் வரமாய்.. சில சமயம் சாபமாய்.. சில சமயம் வெறுமையாய்... சில சமயம் வலியாய்.. சில சமயம் இன்பமாய்..



தனிமை உணர்வுகளின் வெளிப்பாடு.... ஒரே மனிதர்களுக்கு கூட சூழலை பொறுத்து தனிமையின் நிலை மாறுபடும்… அதுவே இந்த நிலை மாறும் தனிமைகள்...





தனிமையை சிறப்பாக கையாள உற்ற துணையும் தேவை என்பதற்கு இலக்கணமாய் இந்த ஜீவ காருண்ய தம்பதிகள்..





முற்றும்...
 
Last edited:
Top