கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீயே நினைவாய் - 1

Poornima Karthic

Moderator
Staff member
நீயே நினைவாய் - 1

பேரிறைச்சலாய் இருக்கும் சென்னை மாநகர், பேரமைதி கொண்டிருக்கும் அதிகாலை வேளையில், மீண்டும் அதே கனவு வந்து ஆழ்ந்துறங்கும் மித்ரனை, ஆட்கொண்டது.

படுவேகமாய் இரண்டு கார்கள் மோதி கொள்வது போலவும், சுக்கு நூறாய் உடைந்த கார் கண்ணாடியில், இரண்டு பூனை நிற கண்கள், தன்னை குத்தீட்டியாய் பார்ப்பது போலவும் கனவு கண்டான். அடுத்த நொடியே அவன் உறக்கம் நீங்கி, வேர்க்க விறுவிறுக்க எழுந்து அமர்ந்தான்.

மித்ரன் நம் கதையின் நாயகன், இருபத்தியாறு வயது பூர்த்தியான இள ரத்தம் . புற தோற்றத்தில் மட்டுமல்லாமல் அகத்திலும் பல மடங்கு அதிகமான அழகானவன். செல்வந்தர் வீட்டு ஒரே வாரிசு, தாய் இல்லா பிள்ளை‌. தாய்க்கும் சேர்த்து தந்தையே தாயுமானவராய் அவனை வளர்த்திருந்தார். பணத்தின் பகட்டோ, பணக்காரனின் திமிரோ சிறிதும் இல்லாத விசித்திர பிறவி இவன்.

தூக்கம் தொலைந்ததால், எழுந்து அமர்ந்தவன், தன் அறையின் பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே நின்றான். அந்த அதிகாலை குளுமை அவன் உடலை குளிர்வித்தாலும், அந்த பூனை நிற மனித கண்கள் மனதில் இருந்து நீங்காமல் சுட்டெரித்தது‌.

" சே! இதே கனவு இந்த இரண்டு வருஷமாய் மறுபடி மறுபடி வந்து தொல்லை செய்யுதே! இதற்கான அர்த்தமும் புரியவில்லை, ஏன் இப்படி வந்து பயமுடுத்துதுன்னும் தெரியலையே!" என நினைத்து கொண்டே வானத்தில் உதித்திருந்த முழுமதியை பார்த்தான்.

அந்த நிலவிலும், அதே பூனை கண்கள் இரண்டு, கண்ணீர் நிரம்பி இருப்பதை போன்ற பிம்பத்தை கண்டான். உடனே சடாரென்று, பால்கனி கதவை அடைத்து மறுபடியும் தன் படுக்கையில் போய் விழுந்தான். மித்ரனின் மிருதுவான உள்ளம் மிகவும் தொய்ந்து போனது. இது வெறும் கனவு தான் என விட்டுவிட முடியவில்லை.

அடிக்கடி வந்து பயமுறுத்தும் கனவை, தந்தையிடம் சொல்லி அவரையும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்து அவரிடம் சொல்லவில்லை. "இந்த கவின் பாழாப் போனவன், எங்க போனான்னே தெரியலையே!" என தொலைந்து போன நண்பனிடமும் கூறமுடியாமல் ,தனக்குள்ளே பூட்டி வைத்து மருகினான்.

கவின் அவனின் உயிர் நண்பன், ஒட்டி பிறந்த இரட்டையர் கூட அந்தளவிற்கு ஒற்றுமையாய் இருக்கமாட்டார்கள். ஈருடல் ஓருயிராய் இருந்தவன் இப்போது எங்கே சொல்லாமல் கொள்ளாமல் போனான் என நினைக்கையில் மித்ரனுக்கு மேலும் மனஅழுத்தம் உண்டானது. அவன் அறையின் மேஜையின் மேலிருந்த புகைப்படத்தை பார்க்கையில் அவன் கண்கள் கண்ணீரில் நிறைந்தது.

கவின் மித்ரனை கட்டியணைத்து கொண்டிருக்கும் புகைப்படமே அது. கண்ணில் மின்னல் தெறிக்கும் மகிழ்ச்சியோடு நின்று கொண்டிருந்தனர் இருவரும். கவினை நினைத்து வந்த ஆற்றாமையை பெருமூச்சாய் வெளியே விட்டான் மித்ரன்‌.

டேய் கவின் நீ திரும்பி வாடா அப்ப இருக்கு உனக்கு மண்டகப் பொடி என மனதிற்குள் சூளுரைத்து கொண்டான்

நடுவில் தொலைத்த உறக்கத்தை மறுபடியும் தேடாமல், எழுந்து தயாராகி ஜாகிங் சென்றான் மித்ரன். இரண்டு மணிநேரம் கழித்து வந்தவனை, வீட்டினின் முன்னாலிருந்த சிறிய பூங்காவில் அமர்ந்திருந்த சுந்தரம் வரவேற்றார்.

" என்ன மித்ரா? அதிசயமால்ல இருக்கு, எப்போதும் ஆறு மணிக்கு தானே எந்திருப்ப? இன்னிக்கு ஜாகிங்லாம் போய்ட்டு வந்திருக்க?"

"சும்மா தான்ப்பா தூக்கம் வரலை! ஆமாம் என் ப்ரெண்ட் கவின் எங்கன்னு கண்டுபிடிச்சீங்களா?"

"இல்லப்பா, நானும் என்னால் ஆன முயற்சியை பண்ணிக்கிட்டிருக்கேன் பா. போலீஸிலும் சொல்லி வச்சாச்சு. காத்திருப்போம்".

"ஆமாம் போங்க! நல்லா இரண்டு வருஷமா காத்துகிட்டிருக்கோம். உங்க பணபலம் ஆள் பலம் எல்லாத்தையும் யூஸ் பண்ணுங்க, எனக்கு கவின் வந்தே தீரணும்".

"சரி அத விடு தம்பி, இன்னிக்கு நம்ம டெக்ஸ்டைல்ஸ் கம்பெனில என்ன ஸ்பெஷல்?"

"டெக்ஸ்டைல் கம்பெனி இருந்தா தானேப்பா ஸ்பெஷல் இருக்கும்"

"என்ன மித்ரா சொல்ற?" என பதட்டத்தில், சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்து விட்டார் சுந்தரம்.

"அத நேத்தே வேறொருத்தருக்கு வித்துட்டேன் பா!" என்று அமைதியாக கூறினான் மித்ரன்

"என்ன மித்ரா? மூணு மாசம் முன்னாடி தானே அந்த டெக்ஸ்டைல்ஸ் கம்பெனிய வாங்கின? அதுக்குள்ள என்னாச்சு?".

"இல்லப்பா எனக்கு அது செட்டாகும் தோணல. செய்யற வேலைல மனசு லயிக்கணும்ல பா, அதான் ரொம்ப நஷ்டம் வரதுக்குள்ள வித்துட்டேன்"

"என்ன தம்பி நீ‌, இதையே சொல்லி தான் ஆறு மாசம் முன்னாடி மசாலா தயாரிக்கும் கம்பெனிய வித்த, அதுக்கும் முன்னாடி கோச்சிங் சென்டர். இப்படியே போனா நாளைக்கு என்ன செய்ய போற? எந்த பிஸினஸுமே சூடு பிடிக்க கொஞ்ச நாள் ஆகும் பா. அதுவரை பொருத்திருந்தால் போதும் பா".

"இல்லை பா! இனிமே அப்படி நடக்காது. எனக்கு ஒரு மாதம் டைம் கொடுங்க, அடுத்தாக நான் பண்ண போகும் பிஸினஸில் தோற்கமாட்டேன்! எனக்கான வேலை என்னன்னு நான் முடிவு பண்ணிட்டேன். இனிமே என்னால உங்களுக்கு எந்த கவலையும் வந்து சேராது" என சொல்லிவிட்டு அவனின் அக்மார்க் அமைதியோடும், பவ்யத்தோடும் அங்கிருந்து சென்றான்.

"இந்த பையன் எப்ப பொறுப்பா ஒரு பிஸினஸில் உட்காருவானோ, ருக்மணி நீதான்மா அவனை கூட இருந்து வழி நடத்தணும்" என தெய்வமாய் விளங்கும் அவர் மனைவியிடம் மானசீகமாக வேண்டினார் சுந்தரம்.

"மனம் லயிக்காமல் ஒரு தொழிலில், எப்படி ஈடுபடுவது!" என யோசித்து குழம்பி கொண்டிருந்தான் மித்ரன்.

"சே! இந்த கவின் மட்டும் இப்ப எங்கூட இருந்திருந்தா இந்நேரம் என் மனசுக்கு பிடிச்ச விஷயத்த சொல்லிருப்பான். நானும் நல்ல முறையில் பிஸினஸ் நடத்தியிருப்பேன். சிறு வயதிலிருந்தே அப்படித்தானே" என்று மனம் வருந்தினான் மித்ரன்.

"போனவன பத்தி இப்ப என்ன யோசனை, என்னிக்கு அவனுக்கா வரணும்னு தோணுதோ, அப்ப அவன் வருவான். அதுவரைக்கும் நீ உன் பொழப்ப பாரு!" என அவன் மனசாட்சி அவனுக்கு அறிவுறுத்தியது.

"டேய் நீ சும்மா இரு, கவினுக்கு எல்லாமே நான்‌ தான் தெரியும்ல. சின்ன வயசுல அவங்க அப்பா, அம்மா ஆக்ஸிடென்ட்ல இறந்தப்பவே, நான் அவனை என் வீட்டுக்கு கூட்டீட்டு வந்து வச்சுக்கிட்டேன். ஆனா எங்கிட்ட கூட சொல்லாம, அவன் எங்க போனானோ தெரியலையே" என மித்ரனின் நட்பு கொண்ட உள்ளம் அவன் பெயருக்கேற்றவாரு புலம்பியது.

அன்றைய பொழுது அந்த கனவின் தாக்கத்திலும், அவன் நண்பனின் நினைப்பிலுமே கழிந்தது. இதற்கு நடுவில் அவன்‌ டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியும் கைமாறிப் போன வருத்தம் வேறு.

அன்றைய தினம் மாலை, சோர்வாக அமர்ந்திருந்தவனின் உள்ளத்தில் பளிச் சென்று ஒரு மின்னல் தோன்றியது. உடனே தன் தந்தையின் அலைபேசிக்கு அழைத்து, "அப்பா உங்க ஃப்ரெண்ட் டோட பொண்ணு, கால்நடை மருத்துவராக இருக்காங்கள்ள அவங்க போன் நம்பர் வாங்கி தர முடியுமா!" என்றான்

"எதுக்கு பா கேக்கற? "

"எல்லாம் ஒரு புதிய திட்டத்திற்கு தான் பா. கொஞ்சம் சீக்கிரம் அனுப்புங்களேன்".

அடுத்த ஐந்து நிமிடங்களில் அவன் அலைபேசிக்கு 'மாளவிகா' என்ற பெயரோடு ஒரு அலைபேசி எண்ணும் வந்தது.

மாளவிகா வந்தால் அவன் வாழ்வில் மாற்றம் வருமா?
 

Latha S

Administrator
Staff member
அந்த கனவில் வரும் கண்கள் யாருது? ஒருவேளை கவிவா? மித்ரனுக்கு அடையாளம் தெரியலையா? என்னாச்சு. மாளவிகா வந்தா இவன் ஒரே தொழிலில் நிலைச்சு நிப்பானா? Waiting to read next epi
 
Top