கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீயே நினைவாய் - 12

Poornima Karthic

Moderator
Staff member
காருண்யா விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாள். "மாளு! பொதுவா எங்க ஜூவிற்கு வரும் வாடிக்கையாளர்களின் விவரங்கள் அனைத்தும், ஒரு புத்தகத்தில எழுதி வாங்குவோம். அந்த புத்தகத்தில் உள்ள பெயர்களை தேடி, அதில் யுவமித்ரனின் ஆஸ்திரேலியா அட்ரெஸ்ஸூம் போன் நம்பரும் அப்பவே எடுத்துட்டேன்".

"அடிப்பாவி பயங்கர கேடி நீ? அப்ப உடனே மித்ரனுக்கு போன் பண்ணி பேசிட்டியா?"

"என்ன மாளு யாராவது உடனே போன் பண்ணி பேசுவாங்களா? எனக்கு எப்போதுமே, எல்லாம் வல்ல சக்தியின் மேல நம்பிக்கை உண்டு. நாங்க மறுபடியும் மீட் பண்ற சந்தர்ப்பம் கிடைச்சா, மித்ரன் எனக்கு தான்னு முடிவு பண்ணிட்டேன்"

"ம்ம் அப்புறம்?"

"அப்புறம் என்ன? வா என்னோடு நியூ வேர்ல்டு பில்லபாங் ஜூ'விற்கு" என்று மாளவிகாவையும் மனதால் அங்கே அழைத்து சென்றாள்.

"மித்ரனை ரெண்டாவது முறையா சந்திச்ச அப்புறம், ரெண்டு மாசம் கழிச்சே அவனை மறுபடியும் சந்திக்க முடிந்தது. நான் எப்போதும் கவனித்துக்கொள்ளும், குட்டி சிவப்புநிற பாண்டா, இறந்து கிடந்ததை பார்த்த நான், கதறி கதறி அழத் தொடங்கிவிட்டேன். என்னதான் அங்க இருந்தவங்க எல்லாரும், அதை புரிஞ்சுகிட்டு என்னை சமாதானப்படுத்தினாலும் என் மனம் மட்டும் சமாதானம் ஆகவில்லை. அதனால் நான் தனியா கேஃபிட்டேரியா போம் அழ ஆரம்பித்தேன்.அப்ப ஒரு இதமான கை வந்து, என் தோளை தொட்டது, திரும்பிப் பார்த்தால் அங்க யுவமித்ரன் நின்னுகிட்டு இருந்தான்".

"காருண்யா உங்க மனநிலை எனக்கு நல்லாவே புரியுது. நீங்க கொஞ்ச நேரம் அமைதியா கண்ண மூடி உட்கார்ந்து இருங்க, இப்ப நான் வந்துடறேன்" என்று சொல்லி விட்டு, சிறிது நேரத்தில் இதமான சூட்டில் பால் எடுத்து வந்து கொடுத்தான்".

"காலையிலிருந்து ஒண்ணும் சாப்பிடாமல் இருக்கவே அதை டக்குனு எடுத்து குடிச்சுட்டேன்".

"நீங்க எப்படி யுவன் இன்னிக்கு இங்கே வந்து இருக்கீங்க?"

"நான் எல்லா வார இறுதியிலும் இங்கே வரேன். எனக்கு உங்களோட பேச்சைக் கேட்டப்புறம், விலங்குகள் மேல தனி இன்ட்ரஸ்ட் வந்துருச்சு. அதனால ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நாங்க வந்து, என்னால முடிஞ்ச அளவு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். இப்ப என்னோட எம்பிஏ படிப்புக்கும், இந்த ஆராய்ச்சி எந்த விதத்திலாவது பயன்படுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்".

"என்னோட ஆராய்ச்சி பத்தி அப்புறம் பேசலாம் முதல்ல நீங்க அழுகையை நிறுத்துங்க! இன்னிக்கு இறந்து போன குட்டி பாண்டா மிகவும் அதிர்ஷ்டக்கார பாண்டா! என்ன அப்படிப் பாக்குறீங்க? நான் உண்மையத்தான் சொல்றேன். அந்த பாண்டா பிறக்கும் போதே இதயம் பலவீனமா தான் பிறந்தது. இதோ இப்ப வரைக்கும், உங்களோட அன்பான கவனிப்புல ரொம்ப அழகா வாழ்ந்துட்டு போய் இருக்கு. அத நெனச்சு பாருங்க, பிறந்த ஒரு வாரத்தில், இறந்து போயிடும்னு சொன்ன பாண்டா, கிட்டத்தட்ட இரண்டு வருஷம் உயிரோட இருந்திருக்கு. உயிரோடு இருந்தது மட்டுமில்லாமல், அது தன்னால முடிஞ்ச அளவு இங்கே வர பார்வையாளர்களையும் மகிழ்ச்சிப்படுத்தியிருக்கு. அதை பார்த்த பிறகுதான், அதோட கியூட்னஸ் பிடிச்சு போய் தான், நானும் அடிக்கடி இங்கு வர ஆரம்பிச்சேன். ஒரு உயிர் பூமிக்கு வந்த கடமையை, கரெக்டா செஞ்சுட்டு போயிருக்கு காருண்யா, அதுக்கு தேவையான அனைத்தையும் நீங்க செஞ்சிருக்கீங்க! அதனால நீங்க கவலைப்படாதீங்க, அந்த உயிர் நிம்மதியாய் சாந்தியடைய வாழ்த்தலாம்".

"இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?"

"எனக்கு எல்லாமே தெரியும் காருண்யா, இந்த நேரத்துல சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க, எனக்கு என்னமோ இந்த நேரத்துல சொன்னால்தான் அது சரியா இருக்கும்னு தோணுது. குட்டி பாண்டாவின் மேல், அதோட அம்மாவை காட்டிலும் நீங்க அதிகமா பாசம் வெச்சிருக்கீங்க. இதையெல்லாம் பார்க்கும்போது, எனக்கு நீங்களே வாழ்க்கை துணையாக வந்தா நல்லா இருக்கும்னு தோணுது. என்னையும் என் குடும்பத்தையும், நல்ல பாசமா பாத்துப்பீங்கன்னு தோணுது. அதுக்காக அவசரப்பட்டு நீங்க இப்பவே பதில் சொல்ல வேண்டாம். உங்களுக்கு எப்ப தோணுதோ, அப்ப என்னை நேர்ல பாத்து பதில் சொன்னா போதும். நான் வாராவாரம், நிச்சயமாக ஞாயிற்றுக்கிழமை இங்கே வருவேன். உங்களுக்கு புடிச்சு இருந்தா நாம் கல்யாணம் பண்ணிக்கலாம் இல்லன்னா ஒன்னும் பிரச்சனை இல்ல".

"என்ன மித்ரன் டக்குனு இப்படி சொல்லிட்டீங்க?"

"நோ வொரிஸ், நோ கம்ப்ல்ஷன். எல்லாருக்கும் அவங்க லைஃப் பார்ட்னர் தேர்ந்தெடுக்கிற உரிமை இருக்கு. அதனால நீங்களும் பொறுமையாக யோசிச்சு, உங்க முடிவை சொல்லுங்க!" என்று கூறி கிளம்ப தயாரானான் மித்ரன்.

"சரி! அதெல்லாம் இருக்கட்டும், எங்க உங்களுடைய ஃப்ரெண்ட் கவின்?"

"அவனா? அதோ அங்க பாருங்க, அந்த தூணுக்குப் பின்னால மறைஞ்சுகிட்டு இருக்கான். நான் உங்ககிட்ட காதலை சொல்லும் போது, கோவத்துல நீங்க என்ன அடிச்சு, அவனுக்கும் அதனால அவமானம் வந்துடும்னு, பயத்துல ஒளிஞ்சுகிட்டு நிக்கிறான் பாருங்க" என்று கூறி சிரித்தான் மித்ரன்.

அவனது சிரிப்பில் அவன் கள்ளம் கபடமற்ற உள்ளம் தெரிந்தது. முதல் முறையாக, அவன் கன்னக்குழியின் பள்ளத்தில் காதலில் விழுந்தாள் காருண்யா
.
"டேய் கவின்! ஒளிஞ்சிருந்தது போதும் வா, காருண்யா அடிக்கமாட்டாங்க!" என்று கூறி கவினை அவர்கள் அமர்ந்திருந்த டேபிளுக்கு அழைத்தான்.

கவினும் தயக்கத்துடன் வந்து மித்ரனிடம் வாழ்த்துக்கள் என்று கூறி கை குலுக்கினான்.

"ஹலோ! ஹலோ! நீங்க நினைக்கிறா மாதிரி ஒண்ணும் இல்ல‌ ப்ரோ. பேசாம உக்காந்து பர்கரும், காபியும் குடிச்சுட்டு போங்க!" என்று பூனைக்கண்ணை உருட்டி மிரட்டினாள் காருண்யா.

"சரி தாங்க்ஸ் ஃபார் யுவர் கன்சர்ன் மித்ரன். நீங்க என்ன சொன்னாலும் என்னால என் செல்லக்குட்டியின் இழப்பை தாங்க முடியல. ப்யூச்சர்ல விதி இருந்தால் பாக்கலாம்" என்று கூறிவிட்டு எதுவும் நடக்காதது போல் போனாள் காருண்யா.

"என்ன யுவன்! சிஸ்டர் என்ன சொல்றாங்கன்னு புரியலையே?"

"அவ சொல்றதும் கரெக்ட் தானே, நாங்க சேரணும்னு விதி இருந்தால் கண்டிப்பா சேருவோம்".

நாட்கள் அதி வேகமாக கடந்து சென்றது, மித்ரன் தன் மனதை தெரியப்படுத்தி, ஆறு மாதங்கள் கடந்துவிட்டது. யுவமித்ரனும், கவினும் வாரா வாரம் ஜூவிற்கு வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் ஒரு தடவை கூட, மித்ரன் காருண்யாவை தேடி வந்து சந்திக்கவில்லை, யதார்த்தமாக சந்தித்தால் ஒரு பூஞ்சிரிப்பை சிந்திவிட்டு நகர்ந்தான். காருண்யாவும் தன் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக காதல் குடியேறியதை உணர்ந்தாள். அதை வெளிப்படுத்த ஒரு நல்ல நாளிற்காக காத்திருந்தாள். அப்போது ஒரு நாள் கவின் அவளை சந்தித்தான்.

"சிஸ்டர் எங்க காலேஜ்ல அடுத்த வாரம் ஒரு பங்ஷன், அதுக்கு நீங்க தான் சீஃப் கெஸ்ட்டா வரணும்!"

"என்ன கவின்? நான் சீஃப் கெஸ்ட் ஆகுற அளவு பெரிய ஆளு கிடையாது. நீங்க வேற யாரையாவது கூப்பிட்டுக்கோங்க"

"அதெல்லாம் எனக்கு தெரியாது, இது எங்க கல்லூரியின் இந்திய மாணவர்களின் ப்ரசிடெண்ட் முடிவு செய்தது".

"சரி யாருன்னு சொல்லுங்க? அவர் போன் நம்பர் சொல்லுங்க, நான் அவர்கிட்டயே வரமுடியாதுன்னு சொல்லிடறேன்".

"ஹா ஹா! அது நம்ம யுவன் தான். நீங்க முதல்ல வந்து தான் பாருங்களேன், அப்புறம் இஷ்டமிருந்தா சீஃப் கெஸ்ட்டா இருங்க இல்லன்னா வேண்டாம்!" என்றான் கவின்.

யுவமித்ரனின் பெயரை கேட்டவுடன் சிறிது நேரம் யோசித்த காருண்யா, கடைசியாக சரி என்று ஒத்து கொண்டாள்.

அடுத்த வார இறுதியில் கவின் குறிப்பிட்டிருந்த நேரத்தில், அவனுடைய கல்லூரிக்கு போனாள். அவள் வந்திறங்கியதும், இந்திய பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. எதற்காக வந்திருக்கோம் என்று, அவள் மூளைக்கு தெரியாமல் இருந்தாலும், ஏன் வந்திருக்கிறோம் என்பதை அவள் இதயம் நன்றாக உணர்ந்திருந்தது.

அவள் வந்தவுடன், இந்திய மாணவர்கள் சிலர் ஓடி வந்து அவளுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பிறகு அவளை ஒரு அரங்கிற்கு அழைத்து சென்றனர். அந்த அரங்கின் சுவர்களில், ஆங்காங்கே பல வகை விலங்குகளின் படங்கள் வண்ணம் தீட்டப்பட்டிருந்தன. அதை கண்டவுடன் ஏதோ விலங்குகளை பற்றிய மாநாடு என்பது இவளுக்கு ஓரளவு புரிந்தது. அந்த மாணவர்கள், அவளை பவ்யமாக அழைத்து கொண்டு போய், மேடையில் உள்ள சீஃப் கெஸ்ட்டின் நாற்காலியில் அமர வைத்தனர். இவள் எவ்வளவு முறை மறுத்தும், அதை காதில் வாங்காமல், "எங்க ப்ரசிடெண்ட் கோபித்து கொள்வார்" என்று கூறி அவளை அமர வைத்தனர்.

அந்த நாற்காலியில் இருந்து பார்க்க, அந்த அரங்கம் முழுவதும் நன்றாக தெரிந்தது. சுமார் நூறு மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அனைவரும் பார்ப்பதற்கு இந்தியர்கள் போல் இருந்தாலும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாநிலத்தை சேர்ந்தவர்களாய் இருந்தனர்.என்ன தான் ஜூவிற்கு வரும் மக்களுக்கு பாடம் எடுத்து அவர்களிடம் பேசினாலும், கல்லூரிக்கு வந்து பேசுவது இதுவே முதல்முறை, எனவே காருண்யாவின் உள்ளம் பதட்டத்தில் பலமாய் துடித்தது, அதை அந்த குளிரிலும், அவள் முகத்தில் அரும்பி இருக்கும் வியர்வை அழகாய் காட்டியது.

அடுத்த சில நொடிகளில், கவின் அவளுக்கு இதமான சூட்டில் தமிழ்நாட்டின் ஸ்பெஷலான 'ஃபில்டர் காபி'யை எடுத்து வந்து கொடுத்தான்.அதை வாங்கி பருகியவளுக்கு சிறிது ஆசுவாசம் கிடைத்தது.

சில நொடிகளில், அங்கே சலசலப்பு எழுந்தது, இவள் என்னவென்று நிமிர்ந்து பார்க்க, அங்கே தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் வந்து கொண்டிருந்தான் யுவன்.

நேராக அவன் இவளிடம் வந்து, "தேங்க்யூ ஃபார் கம்மிங்! எங்கே வராம போயிடுவீங்களோன்னு பயந்துட்டேன்" என்று கூறிவிட்டு மேடை அருகே சென்றான்.

மைக்கை கையில் எடுத்து சரளமாக பேசத்தொடங்கினான். "ஹலோ ஸ்டூடன்ட்ஸ்! இங்க நாம எல்லாம் ஏன் ஒண்ணு கூடியிருக்கோம்னு உங்களுக்கு தெரிந்திருக்கும். நாம், நம்ம நாட்டின் அரிய வகை விலங்குகளை பாதுகாக்க தவறிக் கொண்டிருக்கிறோம். விலங்குகளோடு அல்லாமல் பல தாவரங்களையும் தொலைச்சுட்டோம். நம்மகிட்ட இருக்கும் போது, அதன் அருமை புரியாது, ஆனால் அதை தொலைத்த பிறகு தேடி என்ன பயன்? நானும் எதை பற்றியும் கவலைப்படாமல் எந்த விலங்கு, எந்த தாவரம் இந்த உலகத்துல இருந்தால் என்ன, நாம் நன்றாக ஒழுங்காக இருந்தால் போதும் என்று நினைத்தேன். ஆனால் ஒரு ஆறு மாசத்திற்கு முன்னாடி, எனக்குள்ளே நிகழ்ந்த மாற்றம் தான் என்னை இந்தளவிற்கு கொண்டு வந்திருக்கு. ஆம் நான் 'நியூ வேர்ல்டு பில்லபாங் ஜூ'விற்கு சென்ற பிறகே, என் தப்பை உணர்ந்தேன். அதுவே இச்சிறு முயற்சிக்கு காரணம். இப்போது இம்முயற்சிக்கு காரணமான காருண்யா அவர்கள் உங்களோடு பேசுவார்" என்று கூறிவிட்டு காருண்யாவின் இருக்கைக்கு அருகே அமர்ந்தான்.

"என்ன யுவன்? என்ன முயற்சி? எதை பத்தி பேசணும்? ஒண்ணும் புரியலையே!" என அவன் காதோரம் கிசுகிசுத்தாள் காருண்யா.

"ஏன் காரு உங்கிட்ட கவின் எதுவும் சொல்லலையா?" என அருகில் நின்று கொண்டிருந்த கவினை முறைத்தான் யுவன்.

"இல்ல மச்சி! சிஸ்டருக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கும்னு சொல்லலை, அத உன் வாயால கேட்டா அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்கன்னு, நீயே சொல்லட்டும்னு விட்டுட்டேன்" என்று கூறி கோபம் கொண்டிருக்கும் யுவனை குளிர்ச்சி படுத்தினான் கவின்.

"சரி சீக்கிரம் சொல்லுங்க, நான் போய் ஏதாவது பேசணும்ல!" என்று கடுகடுத்தாள் காருண்யா.

"ஒண்ணுமில்ல காரு! ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய மாணவர்களின் சார்பில், விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாக்க ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்க போறோம். அதுக்கு முதல் முயற்சியா, இன்னிக்கு இதுல சுமார் நூத்தி இருபது மாணவர்கள் இணையப் போறாங்க. வேற யுனிவர்சிட்டில இருக்கும் மேலும் பல பேர் சீக்கிரமே இதுல ஜாயின் பண்றேன்னு சொல்லியிருக்காங்க‌. அதுக்கு தான் இந்த மீட்டிங்" என்று கூறினான் யுவமித்ரன்.

"ஓ சூப்பர் யுவன், உங்க ஐடியா பிரமாதம்!" என்று கூறி தன் பேச்சை தொடங்கினாள் காருண்யா. "ஹாய் ஃப்ரெண்ட்ஸ்! என்னோட நீண்ட நாள் ஆசை இந்த மாதிரி ஒரு ட்ரஸ்ட் ஆரம்பிக்கணும்னு, ஆனால் அதுக்கான நேரமும் காலமும் எனக்கு அமையவில்லை. இப்ப உங்க அமைப்புல, நான் சீஃப் கெஸ்ட்டா இல்லாம ஒரு மெம்பரா சேரவே ஆசைப்படறேன். ஏன்னா என்னோட அப்பாவும் ஒரு இந்தியர் தான், சின்ன வயசுலேர்ந்தே இந்தியா மீது எனக்கு ஒரு பிரமிப்பு உண்டு. ஆனால் ஒரு முறை கூட இந்தியா வந்ததில்லை. இந்தியா இயற்கை அன்னையோட பொக்கிஷம். அங்க இருக்கற அனிமெல்ஸ், ப்லாண்ட்ஸ் எல்லாத்துக்குமே தனிச்சிறப்பு இருக்கு. பட் யுவன் சொன்னா மாதிரி, அதோட அருமை தெரியாம நம்மளோட சுயநலத்திற்காக எல்லாத்தையும் அழிச்சிட்டிருக்கோம். சரி நான் ரொம்ப பேசி உங்கள போரடிக்க விரும்பல, நம்ம ஆசையையெல்லாம் வெறும் பேச்சா பேசாமல் செயல்ல காமிப்போம். தாங்க்யூ!" என்று கூறி தன் பேச்சை முடித்து கொண்டாள்.

"தாங்க்யூ காருண்யா! இப்போது காருண்யா நம்ம ட்ரஸ்ட்டை ஓபன் பண்ணி வைப்பார்" என்று அதன் செயலாளர் ஆன கவின் தெரிவித்து, அவள் கையில் ஒரு ரிமோட்டை கொடுத்துவிட்டு சென்றான்.

அந்த ரிமோட்டை அழுத்தி, அதை திறந்தவள் ஒரு நிமிடம் என்ன சொல்வதென்று புரியாமல் திகைத்து நின்றாள். அந்த ட்ரஸ்ட்டின் பெயரான, 'காருண்யா ட்ரஸ்ட் ஃபார் அனிமல்ஸ் அண்ட் ப்லாண்ட்ஸ்' என்ற பெயரே அந்த திகைப்புக்கு காரணம்.
ஏற்கனவே யுவமித்ரனின் ட்ரஸ்ட் ஐடியாவால் நெகிழ்ந்து போயிருந்தவளுக்கு, அதன் பெயரை பார்த்தவுடன், இத்தனை நாள் அவன் மேல் அடக்கி வைத்திருந்த காதல் கண்ணின் வழி கண்ணீராய் சுரந்தது.
 
Top