கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீயே நினைவாய் - 17

Poornima Karthic

Moderator
Staff member
நீயே நினைவாய் - 17

காருண்யா சென்ற பிறகு, நெடு நேரம் அந்த பார்க்கிலேயே அமர்ந்திருந்தான் மித்ரன்.

"இத்தனை நாள் நம்ம அம்மாவை, இப்படி தப்பா நினைச்சிட்டேனே!" என்று நினைத்து மிகவும் மனம் வருந்தினான். உடனே வீட்டிற்கு சென்று, தன் அம்மாவை பார்க்க வேண்டும் என்று தோன்றியதால் வீட்டிற்கு கிளம்பினான்.

வீட்டில் அவனுடைய அப்பா சுந்தரம், ஏதோ தொழில் விஷயமாக, தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்க, நேராக பூஜை அறைக்கு சென்று, தன் அன்னையின் புகைப்படத்தை தேடினான் மித்ரன். அதைக் கையில் எடுத்துக்கொண்டு தன் கண்ணீரால் புகைப்படத்தை நனைக்க ஆரம்பித்தான்.

"அம்மா என்ன மன்னிச்சிடுங்க! உங்களுக்கு எங்க மேல அக்கறை இல்லைன்னு, இவ்வளவு நாளா உங்க மேல கோவமா இருந்தேன். ஆனால் இப்பதான் புரியுது, உங்களோட அன்பையும், மனசையும் பத்தி, ஆனா நீங்க அந்த ஒரு சின்ன விஷயத்துக்காக எங்களை விட்டு போகணுமா? நாட்டில் எத்தனையோ பேருக்கு, எவ்வளவோ வியாதிகள் இருக்கு, அதெல்லாம் ஒரு பிரச்சனையா தெரியாத போது, எய்ட்ஸை மட்டும் ஏன் எல்லாரும் தப்பாவே பாக்கறாங்கன்னு புரியல.உங்க மேல எந்த தப்பும் இல்லை, உண்மையில் நீங்கள் வாழ்ந்து காட்டியிருக்கணும் அம்மா. நீங்கள் தற்கொலை பண்ணிக்கிட்டா, பின்னால பேசுறவங்க இன்னும் தானே தப்பா பேசுவாங்க, நீங்க எங்க கூட இருந்திருந்தா நிச்சயம், எங்களுக்கு நீங்க நல்லதுதான் செஞ்சு இருப்பீங்க. உங்கள மட்டும் அன்னைக்கு, எல்லாரும் சரியா புரிஞ்சுகிட்டு இருந்திருந்தா, நீங்க எங்க கூட சந்தோஷமா இருந்திருப்பீங்க‌. உங்க காலத்துல போதிய விழிப்புணர்வு இல்லைன்னு நினைக்கிறேன். அதனாலதான் உங்களுக்கு இப்படி ஒரு முடிவு அமைஞ்சுடுச்சு, ரொம்ப சாரிம்மா. எனக்கு இப்ப உங்க விரலை பிடிச்சுக்கிட்டு தூங்கணும் போல இருக்கு, சாரி மா!" என்று புலம்பி கொண்டே பூஜையறையிலேயே படுத்து கொண்டான்.

தன் நண்பர்களுடன் பேசி விட்டு, மித்ரன் பூஜையறையில் படுத்திருப்பதை பார்த்து ஒரு கணம் திகைத்து விட்டார் சுந்தரம்.
"என்னப்பா மித்ரன், என்ன ஆச்சு? உடம்புக்கு ஏதும் முடியலை" என்று அவனைத் தொட்டு எழுப்ப, அவன் தன் மனைவியின் புகைப்படத்தை நெஞ்சோடு அணைத்து கொண்டிருப்பதை பார்த்தார்.

அவனும் உறக்கம் கலைந்து, மலங்க மலங்க விழிக்க, "என்னாச்சுப்பா மித்ரன் ஏன் இங்க வந்து படுத்துகிட்ட? அதுவும் என்னிக்கும் இல்லாத அதிசயமா, இன்னிக்கு உங்க அம்மாவோட போட்டோ வேற கையில் எடுத்து வச்சிருக்க?"

"இல்லப்பா, எனக்கு இன்னிக்கு தான் அம்மாவை பத்தின விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சுது. ஏம்பா இத என்கிட்ட முன்னாடியே சொல்லலை, முன்னாடியே சொல்லியிருந்தா நான் அம்மா மேல கோவப்படாம இருந்து இருப்பேன் இல்ல!".

"உனக்கு யார் பா எல்லாத்தையும் சொன்னது? நான் அந்த உண்மை எல்லாம் சொன்னா, நீ எப்படி எடுத்துப்பனு எனக்கு தெரியல, நீயும் மத்தவங்கள மாதிரி, உங்க அம்மாவ தப்பா நினைச்சுப்பியோன்னு பயந்துக்கிட்டு தான் நான் எதுவும் சொல்லல. அதுவும் இல்லாம, உங்கம்மா இறக்கும்போது நீ ரொம்ப சின்ன பையன் உனக்கு சொன்னாலும் புரியாது. சரி நீ சொல்லு, உனக்கு யாரு இந்த விஷயத்தை சொன்னது?"

"அது வந்து பா, அந்த சித்தார்த் ஓட தங்கச்சி, காருண்யா தான் சொன்னாங்க. ஆனா அவங்களுக்கு எப்படி தெரியும் எனக்கு தெரியல"

"ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கிற பெண்ணா?"

"ஆமாம்பா அவளேதான்!" என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான் மித்திரன்.

காருண்யா என்ற பெயரை சொன்னவுடன், மித்ரனின் கண்களில் மின்னல் தெரிப்பதை சுந்தரம் நன்றாகவே உணர்ந்தார். "ஒருவேளை அவன் லவ் பண்றேன்னு சொன்ன பொண்ணு, இந்த காருண்யாவா இருக்குமோ? மறுபடியும் அவன் வாழ்க்கையில ஆஸ்திரேலியா வந்துருமா, வந்தால் இவன் தாங்குவானா?" என்றெல்லாம் யோசித்து குழம்பினார் சுந்தரம்.

இப்போதைக்கு இந்த சிந்தனையை விடுவோம், என அதை தவிர்த்து விட்டார் சுந்தரம்.

நாட்கள் ஆமை வேகத்தில் நகர்ந்தன, விலங்கு காட்சி சாலை தயாராகி, விலங்குகள் ஒவ்வொன்றாய் வர ஆரம்பித்தன. முதலில் எளிதில் அங்கீகாரம் பெறக்கூடிய விலங்குகளான நாய் வகைகள், பூனைகள், பக்ஷி வகைகள், பட்டாம்பூச்சி வகைகள் என அனைத்தும் வந்திறங்கின. அவற்றை எல்லாம் பராமரிக்க, மேலும் சில வேலைகளை செய்ய சில ஆட்களை நியமித்து விட்டனர். நாட்டு மாடுகளும், ஆடுகளும் கூட வந்தாயிற்று‌. இன்னும் சில வகை அறிய உயிரினங்களுக்காக, ஜூ திறப்பு விழாவை ஒத்தி வைத்திருந்தனர்.

ஒரு நாள் மாலை மித்ரன், அனைவரையும் அழைத்து அந்த மாதத்திற்கான சம்பளத்தை கொடுத்தான், கூடவே காருண்யா, மாளவிகா மற்றும் சித்தார்த்திற்கு இதுவரை மூன்று மாதமாக கொடுக்கப்படாத சம்பளத்தொகை மொத்தத்தையும் சேர்த்துக் கொடுத்தான்.

"இல்ல மித்ரன்! நான் இங்க சம்பள தொகைக்காக வேலை செய்யல, என்னோட ஆத்ம திருப்திக்காக தான் வேலை செய்யறேன். அதனால இந்த சம்பளத்தையும் சேர்த்து, நீங்க இந்த ஜூவோட பண்டுல சேர்த்திடுங்க, எப்படி இருந்தாலும் நான் இன்னும் ரெண்டு மாசத்துக்கு தான் இருப்பேன். அதனால் அதுவரைக்கும் நான் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்கிறேன்" என்றாள் காருண்யா.

மித்ரன் பதில் ஏதும் பேசாமல் வாங்கிக் கொண்டான். அவள் சம்பளத்தை திருப்பித் தந்ததை விட, அவள் விரைவிலேயே ஆஸ்திரேலியா திரும்புகிறாள் என்பதை நினைத்து மிகவும் வருந்தினான்.

"ஏன் காருண்யா, நீ உண்மையிலேயே ஆஸ்திரேலியா போறியா? உனக்கு மித்ரனும், மித்ரனோட காதலும் வேண்டாமா?" என்று மாளவிகா வீடு திரும்புகையில் தனியாக காருண்யாவிடம் கேட்டாள்.

"அதான் அவர்தான், வேறு ஏதோ ஒரு துணையைத் தேடிக்கிட்டார்னு, சித்து அண்ணா சொன்னாரே, அப்புறம் நான் எதுக்கு இங்கே இருக்கணும். ஏதோ அவங்க அப்பாகிட்ட ஜூ ஆரம்பிக்கிறதுக்கு நல்ல முறையில் உதவி செய்வேன்னு வாக்கு கொடுத்ததுனால தான் நான் இருக்கேன். என்னை மித்ரனுக்கு அடையாளம் தெரியலைன்னு சொன்னபோதே எனக்கு டவுட்".

"காருண்யா நீ மித்ரன் மேல் கொண்ட காதல் இவ்வளவுதானா? அந்த ஓட்டை வாய் சித்தார்த் எதை சொன்னாலும் நம்பிடுவியா? உனக்கு பிடிச்ச விஷயங்கள் எல்லாம் ஞாபகம் வைத்திருக்கிறார். உன்னோட பெயரை இந்த ஜூவிற்கு வைக்கணும்னு நினைச்சு இருக்கார், அப்ப உன்னை மறக்கலன்னு தானே அர்த்தம். அவருக்கு ஏதோ பிரச்சனை இருக்கு, அதை நான் நாளைக்கே கண்டுபிடித்து சொல்றேன். அதுவரைக்கும் நீ பொறுமையா இரு" என்று கூறி காருண்யாவை அமைதியாக்கினாள் மாளவிகா.

மித்ரன் தான் எப்பொழுதும், முதலில் அலுவலகத்திற்கு வருவான். அதனால்அடுத்த நாள் அலுவலகத்திற்கு முன்னதாகவே சென்று மித்ரனை சந்தித்தாள் மாளவிகா.

"என்ன மாளவிகா நீங்க மட்டும் தனியா வந்திருக்கீங்க? சித்தார்த்தும் காருண்யாவும் வரலையா?"

"இல்ல மித்ரன், எனக்கு உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும். அதனால நான் மட்டும் முன்னாடியே கிளம்பி வந்துட்டேன்".

"சொல்லுங்க மாளவிகா என்ன விஷயம்?"

"நான் சுத்தி வளைச்சு கேக்க விரும்பல மித்ரன் நேரடியாக கேட்கிறேன், நீங்க காருண்யா வை லவ் பண்றீங்களா?"

"இந்த கேள்விய ஏன் திடீர்னு கேட்கறீங்க மாளவிகா?"

"நீங்க சொல்லுங்க லவ் பண்றீங்களா இல்லையா மத்ததெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்"

"ஆமாம் மாளவிகா நான் லவ் பண்றேன்"

"சூப்பர் மித்ரன் எப்போலேர்ந்து லவ் பண்றீங்க?"

"அவங்க கூட பழகி கொஞ்ச நாளில் இருந்து லவ் பண்றேன்"

"எவ்வளவு வருஷமான்னு சொல்ல முடியுமா?"

"என்ன மாளு! வருஷமெல்லாம் கேட்கிற, அவங்கள இப்பதான் மூணு மாசம் முன்னாடி பார்த்தேன். இதில் எங்கிருந்து வருஷம் வந்தது. அவங்கள பார்த்து ஒரு பத்து நாளில் இருந்து, லவ் பண்ணுறேன் அதாவது சுமார் ரெண்டு மாசமா காதலிக்கிறேன்" என்று தெளிவு படுத்தினான் மித்ரன்.

மாளவிகாவிற்கு எல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது. மித்ரன் மறுபடியும் இரண்டாம் முறையாக, அதே காருண்யாவிடம், அதே காரணத்திற்காக காதலில் விழுந்திருக்கிறார். ஆனால் ஏன் பழைய விஷயங்கள் அனைத்தும் மறந்து போனது? அவனுக்கு தலையில் ஏதேனும் அடிபட்டு விட்டதா!" என்று புரியாமல் குழம்பினாள். இதற்கெல்லாம் ஒரே தீர்வு சுந்தரத்திடம் இருப்பதாகத்தான் நினைத்தாள்.

"மித்ரன்! அப்ப ஏன் நீங்க உங்களோட காதல காருண்யா கிட்ட சொல்லல?"

"என்ன மாளவிகா பேசுறீங்க? அவங்களுக்கு தான், ஏற்கனவே ஒரு காதலன் இருப்பதாகவும் அவனை தேடித்தான் காருண்யா வந்திருப்பதாகவும் சித்தார்த் சொன்னானே?"

"ஐயோ! இந்த மங்குனி குழப்பி வைத்திருக்கிறானே" என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு வெளியே அமைதி காத்தாள் மாளவிகா.

"சரி மித்ரன் உங்க காதல் உண்மையானதா இருந்தால், நிச்சயம் உங்கள் காதல் கைகூடும். என்னால உங்க கண்ணை பார்த்தே காருண்யா மேலுள்ள, உங்கள் ஆழ்ந்த காதலை புரிந்து கொள்ள முடிகிறது. சரி நான் போய், என் வேலையை பாக்குறேன். என் பிரெண்ட்ஸ் எல்லாம் ஒழுங்கா தூங்குனாங்களா, ஒழுங்கா சாப்பிட்டாங்களா? இப்ப எப்படி இருக்காங்கன்னு, செக் பண்ண வேண்டி இருக்கு!" என்று ஜூவில் உள்ள விலங்குகளை பார்க்கப் போவதாய் கூறினாள்.

மாளவிகா சித்தார்த் வருவதற்காக ஆர்வமாக காத்திருந்தாள். சித்தார்த்தும் அலுவலகம் வந்தவுடன் அவனை தனியே இழுத்துச் சென்று, "டேய் மங்குனி நம்ம மித்ரன் காருண்யாவை லவ் பண்றாராம்".

"ஓ சூப்பர் சூப்பர் இதை இப்பவே காருண்யாகிட்ட போய் சொல்றேன். தெரிஞ்சா அவ ரொம்ப சந்தோஷப்படுவா"

"ஐயோ ராமா! நீ கொஞ்சம் சும்மா இரு. உன்னோட முந்திரிக்கொட்டை தனத்தை, கொஞ்சநேரம் மூட்டை கட்டி வை. இப்ப காருண்யாவை லவ் பண்ணிட்டு மறுபடியும் மறந்துட்டான்னா என்ன பண்ணுறது, அதனால முதல்ல மித்ரனுக்கு என்ன பிரச்சனைன்னு கண்டுபிடிக்கணும். அவன் ஒரு மனநோயாளியா இல்ல மறதி கேஸானு கன்ஃபார்ம் பண்ணனும்".

"அதை எப்படி கன்ஃபார்ம் பண்ணுவ? அதான் அவங்க அப்பா, வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறாரே. யார் கிட்ட போய் கேட்கிறது?"

"அது எல்லாத்தையும், நான் பாத்துக்கிறேன் சித்து. இன்னிக்கு ஆபிஸ் முடிஞ்ச உடனே, நீ ஏதாவது ஒரு மொக்க ரீசன் சொல்லி, மித்ரனையும், காருண்யாவையும் எங்கேயாவது வெளியே அழைச்சிட்டு போ. அந்த நேரத்துல நான் போய் மித்ரன் அப்பாகிட்ட பேசிடறேன்".

காருண்யா, அன்று புதிதாய் வந்திறங்கிய முயல்குட்டிகளை கொஞ்சி கொண்டிருந்தாள்.
முயல்குட்டிகள் முதலில் பயந்தாலும், பிறகு காருண்யாவின் மடியில் ஏறி, ஓடி ஆடி விளையாடி அமர்க்களம் செய்துகொண்டிருந்தன. இதையெல்லாம் சித்தார்த்தும், மித்ரனும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

"மித்ரன், அப்புறம் இன்னைக்கு நைட்டு, ஒரு மூன் லைட் டின்னர் ஏற்பாடு பண்ணி இருக்கேன். நம்ம எல்லாரும் அங்க போறோம்" என்று சித்தார்த் கூறினான்.

"ஹா ஹா மூன் லைட்னு சொல்லும்போது, எனக்கு அந்த ஓடாத நதிக்கு, மாளவிகா பிறந்தநாளுக்கு போனீங்களே அதான் ஞாபகம் வருது. ஆமாம் நாங்க எல்லாரும் எதுக்கு உங்க கூட டின்னர் வரணும். நீங்க மாளவிகாவை மட்டும் கூட்டிட்டு போக வேண்டி தானே".

"இல்ல மித்ரன், நீங்க நான் காருண்யா மட்டும் தான் போகணும். மாளவிகாவுக்கு ஏதோ வேலை இருக்காம், அவங்க வீட்டுக்கு உறவுக்காரங்க எல்லாம் வராங்களாம் அதனால அவ வரல, ஆனா நம்ம கண்டிப்பா போறோம். அங்க டின்னர் சூப்பரா அரேஞ்ச் பண்ணி வெச்சிருக்கேன்" என்று சித்தார்த் கூறினான்.

"அப்ப சரி இந்த இடத்தை நல்லா செக் பண்ணிட்டு, இன்னொரு தடவை மாளவிகாவை கூட்டிட்டு போ, இல்லன்னா அடி வாங்கிடுவ அவங்ககிட்ட" என்று கூறி சிரித்து விட்டு, மித்ரன் சித்தார்த் காருண்யா மட்டும் நிலா வெளிச்சத்தில் இரவு உணவு சாப்பிட சென்றனர்.

மாளவிகா தனியாக கிளம்பி, என்ன ஆனாலும் சரி மித்ரனின் தந்தையிடம், இன்று உண்மையை கரப்பது தான் வேலை என்ற உறுதியோடு மித்ரனின் வீட்டிற்கு சென்றாள்.
 
Top