மாளவிகாவின் நம்பர் கிடைத்த அடுத்த நொடியே அந்த நம்பருக்கு அழைத்தான் மித்ரன். அது அடித்து கொண்டே இருந்தது, ஆனால் அழைப்பு ஏற்கபடவில்லை. சரி வேறு வேலையை பார்ப்போம் என, அவன் புதிதாக ஆரம்பிக்க போகும் கம்பெனிக்கு இரண்டு உதவியாளர்கள் வேண்டும் என விளம்பரம் கொடுக்க ஏற்பாடு செய்தான்.
உதவியாளர்களின் தகுதிகளாக அவன் குறிப்பிட்டிருந்த விஷயம் ஒன்றே ஒன்று தான். 'விலங்குகளின் மேல் தனி பிரியமுள்ளவர்களாக இருக்க வேண்டும். சக மனிதனுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை விலங்குகளுக்கும் கொடுக்க வேண்டும்' என்பதே அதுவாகும்.
இவன் வேலைகளை முடித்ததும், மாளவிகாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
" ஹலோ! மே ஐ நோ ஹூ இஸ் திஸ். இந்த நம்பர்ல இருந்து கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கால் வந்தது" என்கிற தேன் குரல் ஒலித்தது.
"ஹாய் டாக்டர். மாளவிகா, நான் மித்ரன், உங்க அப்பாவோட ஃப்ரெண்ட் சுந்தரத்தோட பையன்" என அறிமுகப்படுத்தி கொண்டு தன்னுடைய திட்டத்தை கூறினான்.
"வெல்டன் மிஸ்டர். மித்ரன்! நிச்சயம் நான் உங்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்யறேன்".
"அப்பாடா! எங்க நீங்க ஒத்துக்கமாட்டீங்களோனு நினைச்சேன். சரி மாளவிகா, வரும் வெள்ளிக்கிழமை என்னுடைய அசிஸ்டென்ட்ஸ் கான நேர்காணல் இருக்கிறது. நீங்க தான் அவங்களை செலக்ட் செய்து தரணும். நீங்க செலக்ட் பண்ணா சரியா இருக்கும்னு தோணுது".
"ஓ ஷ்யூர்! நிச்சயம். ஆல் தி பெஸ்ட் சார்" என்று கூறி இணைப்பினை துண்டித்தாள் மாளவிகா.
தன் வாழ்க்கையில், இப்போது தான் மிக சிறந்த முடிவு எடுத்திருக்கிறோம் என முதல்முறையாக திருப்தி அடைந்தான் மித்ரன். மகிழ்ச்சியில் விழி மூடி நின்றவனின், மனக்கண்ணில் அதே பூனை நிற கண்கள் தோன்றியது. ஆனால் இப்போது அக்கண்ணில் மகிழ்ச்சியின் மின்னல் கீற்று தெரிந்தது. உடனே தலையை சிலுப்பிக் கொண்டு, மனதில் இருந்த அந்த கண்ணை கலைத்து உறங்க சென்றான் மித்ரன்.
நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு, கனவுகளின் தொல்லை இன்றி ஆழ்ந்துறங்கினான் மித்ரன்.
அடுத்த நாள் காலையில்...
"தம்பி மித்ரா, உன்ன பார்க்க மாளவிகா வந்திருக்கா, எழுந்திருப்பா?" என அவனை உசுப்பி எழுப்பினார் அப்பா சுந்தரம்.
"அப்பா! மணி இன்னும் ஆறே ஆகலை.நீங்க போங்க. நான் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு எழுந்து வரேன்!" என சிறு குழந்தையாய் அடம் பிடிக்கும் தன் மகனை நினைத்து சிரித்தார் சுந்தரம்
"ஹா ஹா மித்ரா மணி காலை ஒன்பது"
"ஐயோ! மணி ஒன்பதா?" என வாரி சுருட்டி எழுந்து கொண்டான் மித்ரன்.
"ஆமாம் பா! உனக்காக மாளவிகா ஹால்ல காத்திருக்காங்க"
"ஐயோ மாளவிகாவா! என பரபரவென்று எழுந்து துரிதமாக கிளம்பி, "சே இப்படி தூங்கி சொதப்பிட்டியே மித்ரா! ஆமாம் இந்த பொண்ணு ஏன் இப்ப வீட்டுக்கு வந்திருக்கு?" என யோசித்து கொண்டே வரவேற்பறைக்கு கிளம்பினான் மித்ரன்.
நவநாகரீக தோற்றத்தில் வீற்றிருந்த மாளவிகாவை பார்த்ததும், மித்ரனின் உற்சாக பலூன் புஸ் என்று காற்று போனது. இந்த பொண்ணு நம்ம புதிய திட்டத்துக்கு சரிபட்டு வருவாளா என யோசித்து கொண்டே இருக்கும் போது, டிப் டாப் ஆசாமி ஒருவன் வீட்டின் உள்ளே நுழைந்து,
"ஹலோ மிஸ்டர். மித்ரன் ஐ ஆம் சித்தார்த்" என கூறிக்கொண்டே, மித்ரனின் கையை பிடுங்காத குறையாக அவனே எடுத்து கைகுலுக்கினான்.
"முந்திரி கொட்டை, கொஞ்சம் அமைதியா இரேன் டா. நான் இன்ட்ரோ கொடுக்க மாட்டேனா? சரியான மங்குனி!" என அவன் மண்டையில் குட்டினாள் மாளவிகா.
சித்தார்த், "ஆமாம் அப்படியே இன்ட்ரோ கொடுத்துட்டாலும்"
அருகில் இருந்த சோஃபாவில் அமர கூட மறந்து, இவர்கள் இருவரையும் மாறி மாறி பார்த்து கொண்டு நின்றிருந்தான் மித்ரன்.
"சாரி மித்ரன் சார், நம்ம அப்பாங்க ஃப்ரெண்ட்ஸ்ங்கற உரிமையில் உங்ககிட்ட கூட சொல்லாம, உங்களை சந்திக்க வந்துட்டேன்".
"தட்ஸ் ஓகே, அப்புறம் இந்த சார்லாம் வேண்டாமே, நம்ம அப்பாங்க ஃப்ரெண்ட்ஸ்னா நம்மளும் ஃப்ரெண்ட்ஸ் தான். ஆனா எதுக்கு இந்த திடீர் சந்திப்புன்னு நான் தெரிஞ்சுக்கலாமா? என சிறிது குழப்பத்துடன் வினவினான் மித்ரன்.
"ஒண்ணுமில்ல மித்ரன். நாளைக்கு வெள்ளிக்கிழமை அதான் இன்னிக்கே உங்களை பார்த்துடலாம்னு வந்தோம்" என்று வழக்கம் போல் முந்தி கொண்டு சொன்னான் சித்தார்த்.
அதுக்கும், இப்ப இந்த சந்திப்பிற்கும் என்ன சம்பந்தம் என மாளவிகாவை நோக்கி பார்வையாலே கேட்டான் மித்ரன்.
மாளவிகா, "சே சித்து கொஞ்ச நேரம் சும்மா இரு! நான் தெளிவா சொல்லிக்கிறேன். உங்களுக்கு இரண்டு அசிஸ்டென்ஸ் வேணும்னு நீங்க தானே சொன்னீங்க, அதனால் நாங்கள் இருவருமே அதற்கு தயாராக வந்துள்ளோம் மித்ரன்".
"நீங்களா? மாளவிகா நீங்க வெர்டினரி டாக்டர் தானே?"
சித்தார்த், "ஆமாம் மித்ரன் சார், நானும் அவங்க க்ளாஸ் மெட் தான். ரெண்டு பேருமே கால்நடை மருத்துவர்கள் தான். அந்த வேலையில் முழு திருப்தி கிடைக்காததாலேயே நாங்க இங்க வந்திருக்கோம்".
மித்ரன், "புரியல மிஸ்டர் சித்தார்த்?"
"அத நான் சொல்றேன் மித்ரன், நாங்க ரெண்டு பேரும் ஒரு ப்ரைவேட் கால்நடை மருத்துவமனையில் வேலை பார்த்து கொண்டிருந்தோம். அங்க நடக்குற பல அநியாயங்களை பார்த்துக்கிட்டு, எங்களால சும்மா இருக்க முடியவில்லை. நம் நாட்டு நாய்களை கருத்தரிக்க விடாமலும், அந்நிய நாட்டு நாய்களை கருத்தரிக்க வைத்தும் வியாபாரம் செய்வதையும், ஒரு பெரிய தொழிலாவே செஞ்சுகிட்டு இருக்காங்க. இதே முறையை தான் நாட்டு பசுவுக்கும் கையாளுகிறார்கள்".
"நீங்க பணம் இருக்கும் மனிதனிடம் காசு பிடிங்குவதை தான் கேள்விபட்டிருப்பீங்க, ஆனால் இங்க விலங்குகளை வேண்டுமென்றே அட்மிட் செய்து காசை வெகுவாக கறந்து விடுவார்கள். அந்த விலங்கு இறந்திருந்தா கூட, அதை உயிர் இருப்பதை போல் காட்டி பில் அமௌண்டை ஏகத்துக்கும் ஏத்திடுவாங்க. வீட்டு பிராணிகளை குடும்ப உறுப்பினராக நினைப்பவர்கள், காசை பற்றி கவலைப்படாமல், அந்தப் பிராணி உயிர் பிழைத்தால் போதும் என காசை தண்ணீராக செலவழிப்பர். இதையெல்லாம் பார்த்து பொறுக்கமுடியாம தான் நாங்கள் அங்கிருந்து வந்து விட்டோம்".
மாளவிகா பேசுவதை கேட்க கேட்க மித்ரனின் மனது ஆனந்தக் கூத்தாடியது. "சூப்பர்ங்க, இந்த மாதிரி ஒருத்தர தான் என்னுடைய புதிய திட்டத்திற்காக தேடிக்கிட்டிருந்தேன். ஆமாம் சித்தார்த்துக்கும் என்னுடன் வேலை பார்க்க இஷ்டமா?"
"ஆமாம் மித்ரன்! அந்த மங்குனி என்னை விட்டு எங்கும் போக மாட்டான். அந்தளவு சின்ன வயசுல இருந்தே நாங்க க்ளோஸ்"
"சித்தார்த்னு புத்தரின் பெயரை அழகா வெச்சிருக்காங்க, அப்புறம் நீங்க ஏன் மங்குனினு கூப்பிடறீங்க?"
இதற்கு பதிலளிக்க சித்தார்த் வாயை துறக்கும் முன்னே, அவனை அடக்கி "மங்குனியை மங்குனின்னு தானே கூப்பிடுவாங்க" என்று சிரித்து கொண்டே கூறினாள் மாளவிகா.
இதற்கு மித்ரனும் சிரிக்க, சித்தார்த்தின் மனது அடிப்பட்டது, அவன் கண்ணில் அப்பட்டமாக தெரிந்தது. இதை கவனித்த மித்ரன் சிரிப்பதை நிறுத்தி கொண்டான்.
"சரி மித்ரன், அப்ப வெள்ளி கிழமை நடக்க போற இன்ட்டெர்வூயுவை கேன்சல் செஞ்சுடுங்க".
"ஓகே தென், நாளைக்கு காலையில எங்க அப்பாவோட ஆபிஸ்க்கு இரண்டு பேரும் வந்துடுங்க, நம்ம சீக்கிரமாவே ப்ராஜெக்ட் ஸ்டார்ட் பண்றோம்".
சித்தார்த், "சரிங்க மித்ரன், ப்ராஜெக்ட்டின் பேர் என்ன?"
"ரெண்டு பெயர் மனசுல இருக்கு, அத நாளைக்கு பார்த்துக்கலாம் பாய்!" என்று கூறி சிரித்த மித்ரனின் மனக்கண்ணில் சிரிக்கும் பூனை கண்கள் மறுபடி வந்து போனது.
'ஏய் பூனை கண்ணே! எதுக்கு நீ அடிக்கடி வந்து என்னை டிஸ்டர்ப் பண்ற, உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். நீ அழுதா எனக்கு பிடிக்கலை, இதே மாதிரி சிரிச்சுக்கிட்டே வரதுன்னா வா இல்லன்னா வராத!' என மனதில் தோன்றும் கண் எதிரில் நிற்பது போல் நினைத்து கொண்டு பேசினான் மித்ரன்.
மாளவிகாவின் மனதில், மித்ரன் தன் நல்ல எண்ணத்தால் நிறைத்திருந்தான். அது போல், மாளவிகாவும் மித்ரனின் மனதில் நல்லதொரு இடம் பிடித்திருந்தாள். இவர்கள் இடையே சித்தார்த்.
இவர்கள் ஆரம்பிக்க போகும் புதிய திட்டம் இருவரையும் இணைக்குமா?