கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீயே நினைவாய் - 3

Poornima Karthic

Moderator
Staff member
நீயே நினைவாய் - 3

அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அழகாக விடிந்தது. விடிந்த சற்று நேரத்திற்கெல்லாம் மித்ரன் எழுந்து குளித்து, தயாராகி, தன் தந்தையை தேடி சென்றான்.

அவர் வழக்கம் போல், பூஜையறையில் ஸ்லோகம் சொல்லி கொண்டு அமர்ந்திருந்தார். பூஜையறையில் எத்தனை தெய்வங்கள் இருந்தாலும், அவர் பயபக்தியாய் வழிபடுவது தன் 'மனைவி ருக்மணியை'த் தான்.

எந்த ஒரு முக்கியமான முடிவுமே கண்களை மூடி, ருக்மணியை நினைத்து கொண்டு தான் எடுப்பார். ருக்மணியின் ஆன்மா அவரையும், மித்ரனையும் எப்போதும் வழி நடத்துவதாகவே அவர் நம்பினார்.

அன்றும் கண்களை மூடி மித்ரனுக்காக பிரார்த்தித்து கொண்டிருந்தார். "இந்த பையனுக்கு எப்படியாவது ஒரு நல்ல வழி காட்டம்மா ருக்மணி!" என்று வேண்டிக்கொண்டிருந்த வேளையில், அவர் பூஜையை கலைப்பது போல் அங்கே வந்தான் மித்ரன்.

"அப்பா என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க! இன்னிக்கு நான் புது முயற்சியை ஆரம்பிக்க போறேன். அது சிறப்பான முறையில் ஆரம்பித்து, விருட்சமாய் வளரணும்னு வாழ்த்துங்க" என அவர் கால்களில் விழுந்தான் மித்ரன்.

"நல்லா இருப்பா, அப்படியே அம்மாகிட்டயும் ஆசிர்வாதம் வாங்கிக்கோ பா!" என ருக்மணியின் புகைப்படத்தை காட்டினார்.

"நீங்க மட்டும் ஆசிர்வாதம் பண்ணா போதும். வேற யாரோட ஆசிர்வாதமும் எனக்கு தேவையில்லை" என சொல்லிவிட்டு விடுவிடுவென்று அவ்விடத்தை விட்டு கோபத்துடன் சென்றான் மித்ரன்.

அவன் போவதையே பெருமூச்சோடு பார்த்து கொண்டிருந்த சுந்தரம், "ருக்மணி தயவு செய்து உன் புள்ளையை மன்னிச்சுடும்மா" என மனதுருகி கூறினார்

வீட்டிலிருந்து கிளம்பியவன், நேராக தன் தந்தையின் அலுவலகத்திற்கு சென்று மாளவிகா மற்றும் சித்தார்த்திற்காக காத்திருந்தான்.

அவர்களும் குறித்த நேரத்திற்கு வரவே, தன் புதிய திட்டத்தை பற்றி பேசத் தொடங்கினான்.

" மாளவிகா அண்ட் சித்தார்த் நான் சொல்லப்போறத நல்லா கேட்டுக்கோங்க! நம்ம புதிய திட்டமான 'தனியார் விலங்குகள் காப்பகம்' ஆரம்பிப்பது அவ்வளவு ஈசி இல்ல. எல்லா விலங்குகளையும் அவ்வளவு எளிதா கூண்டில் அடைச்சு, பார்வை பொருளாக வைக்க முடியாது. எனக்கு அதில் ஈடுபாடும் இல்லை. நாம் இதை செயல்படுத்தும் நோக்கம் ஒண்ணே ஒண்ணு தான், இயற்கையாய் பல காலங்களாய் இருக்கும் விலங்குகளின் இனம் ஒரேயடியாக அழிந்து விடாமல் பாதுகாப்பதே ஆகும். அது மட்டுமல்லாமல் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இயற்கையையும், விலங்குகளையும் பாதுகாப்பது குறித்து கருத்தரங்குகளும் அடிக்கடி நடத்த வேண்டும். நம்ம வாழற இடத்துல அடுத்த உயிரினங்களையும் எப்படி அனுசரிச்சு வாழணும்னும் எல்லாருக்கும் சொல்லி குடுக்கணும்".

மாளவிகா, "வெல்டன் மித்ரன்! உங்களுக்கு என்னுடைய, சாரி சாரி எங்களுடைய முழு ஒத்துழைப்பு தருகிறோம். என்ன சொல்ற சித்தார்த் ஓகே வா?"

"ஓகே ஓகே" என சத்தமாக சொல்லிவிட்டு, "நீ எனக்கு ஓகே சொல்லத்தானே பல வருஷமாய் காத்துகிட்டு இருக்கேன். நீ போற இடத்துக்கெல்லாம் வரேன் இன்னுமா என்ன புரிஞ்சுக்கல!" என மனதிற்குள் நினைத்து கொண்டு ஏக்க பெருமூச்சு விட்டான். அவனின் பெருமூச்சு மித்ரனின் காதில் நன்றாக எட்டியது.

"டாக்டர். சித்தார்த்! நிச்சயமா உங்க ரெண்டு பேருக்கும் நல்ல சம்பளம் தருவேன். அதனால எதுக்கும் கவலைபடாதீங்க" என்று சிரித்து கொண்டே கூறினான் மித்ரன்.

"ஐயோ சார்! நீங்க நினைக்கிற மாதிரி நான் சம்பளத்துக்காகல்லாம் உங்க கூட வேலை பார்க்க வரல. எல்லாம் மாளவிகாவுக்காக தான்" என்று பதட்டத்தில் சிறிது உளறினான் சித்தார்த்.

இவன் மனதை மாளவிகா சிறிதும் புரிந்து கொள்ளாமல், ஈ என்று இளித்து கொண்டு அமர்ந்திருக்க, மித்ரன் மட்டும் சித்தார்த்தின் மனதை புரிந்து கொண்டு அவனை பார்த்து கண்ணடித்தான்.

"சே! காதலை வெளியே சொல்ல முடியாமல், காதலியை பார்த்து ஏங்குவது, மிகப் பெரிய வேதனை தான் என மித்ரனின் மனசாட்சி நினைக்க, முன்ன பின்ன காதலை பத்தி தெரியாத உனக்கு எப்படி அந்த ஃபீலிங் புரியுது, பேசாம வாய மூடு" என தன் மனசாட்சியை அடக்கினான் மித்ரன்.

"யாருக்கு? எனக்கு காதலை பத்தி தெரியாதா? சரி இருக்கட்டும் விடு, காதலில் ஊறித் திளைத்தவனை பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டாய்‌. போக போக புரியும்" என உளறிவிட்டு ஜகா வாங்கி கொண்டது மனசாட்சி.

மாளவிகா, "மித்ரன், முதல்ல நம்ம இந்திய அரசாங்கத்திடம் இருந்து அனுமதி வாங்கணும். பிறகு சில செர்டிபிகேட் செய்யப்பட்ட விலங்குகளை தான், நாம் ஃபிரைவேட் பார்க் அல்லது ஜூ வில் வைக்க முடியும். இதுக்கு மூணு, நாலு மாசங்களுக்கு மேல் ஆகலாம். இதைவிட முக்கியம், நாம் வளர்க்க போகும் விலங்குகள் சுதந்திரமாக சுற்றி திரிய ஏதுவாக பெரிய இடம் வேண்டும். அதில் தான் நாம் பார்க்கை ஆரம்பிக்க முடியும்".

"இதையெல்லாம் என் வக்கீல் ஃப்ரெண்ட்கிட்ட ஏற்கனவே டிஸ்கஸ் செய்துட்டேன் மாளவிகா. எனக்கு உங்ககிட்ட இருந்து மேலும் ஒரு உதவி தேவை!"

"என்னன்னு சொல்லுங்க மித்ரன்?"

"இந்த பார்க் அல்லது ஜூ வில் உள்ள விலங்குகளை பேணி பாதுகாக்க ஒரு ஜூ கீப்பர் தேவை‌. உங்களுக்கு யாரேனும் தெரிந்தவர் இருந்தால் கூறுங்கள்".

"நம்ம ஊர்ல பெரிய அளவில் ஜூவோ அல்லது பார்க்கோ இல்லை‌. அதனால் அந்த வேலைக்கு கவர்மென்ட்ல வேலை செஞ்சு ரிடயர்ட் ஆன ஆளுங்களை தான் தேடணும்".

"வயசானவங்க நாம் செய்யப்போகிற வேலைக்கு பொருந்துவாங்களா?"

"மித்ரன் நீங்க தப்பா நினைக்கலைன்னா நான் ஒண்ணு சொல்றேன். ஊர்ல என்னோட சித்தப்பா பொண்ணு இருக்காங்க, அவங்க இத்தனை நாள் ஜூ கீப்பரா தான் வேலை பாத்தாங்க. இப்போ ஏதோ ஒரு விஷயமாக இந்தியா வராங்க, அவங்க இருக்கற வரைக்கும் அவங்களையே இந்த போஸ்ட்க்கு போட்டுடலாமா?"

மாளவிகா, "டேய் சித்து, சைட் கேப்ல சிந்து பாடி, உன் தங்கச்சிக்கு வேலை வாங்கி கொடுக்குறியா? உனக்கு ஒரு தங்கச்சி இருக்காங்கன்னு எங்கிட்ட ஏன் இத்தன நாள் சொல்லல?"

"அட நீ வேற மாளு! எனக்கே ரெண்டு மாசம் முன்னாடி தான் தெரியும். என் சித்தப்பா லவ் மேரேஜ். அதனால அவர வீட்டுல சேத்துக்கல. திடீர்னு ஒரு நாள் அந்த பொண்ணு தான் ஃபேஸ்புக் ல என்ன புடிச்சா. அது பெரும் கதை அப்புறமா சொல்றேன்" என்றான் சித்தார்த்.

"ஆமாம் அந்த பொண்ணு அந்த பொண்ணுன்னு சொல்றியே அவங்களுக்கு பெயர் இல்லையா?"

"ம்ம்ம் அவ பேரு ஏதோ சொன்னாளே ஆங் அவ பெயர் 'காருண்யா'.

"வாவ்! அவங்க பாக்கற வேலைக்கும் பெயருக்கும் தான் எத்தனை பொருத்தம்! கருணை உள்ளம் கொண்டவங்க தான் காருண்யா" என்றாள் ரசித்து கூறினாள் மாளவிகா.

மித்ரன், "சித்தார்த் அவங்க எங்கேர்ந்து ஐ மீன் எந்த நாட்டுலேர்ந்து வராங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?"

"ஆஸ்திரேலியா சார். அங்க இருக்கிற 'நியூ வேர்ல்ட் பில்லபாங் ஜூவில் தான் அவங்க வேலை பார்க்கிறாங்க!" என்றான் சித்தார்த்.

இதையெல்லாம் கேட்ட பிறகு, மித்ரனின் மூளைக்குள் கசக்கி பிழிவது போல் ஒரு வலி வந்தமர்ந்தது. என்னவென்று சொல்லாத ஒரு அழுத்தம் இதயத்தை கசக்கியது. அந்த இடத்தை விட்டு சட்டென்று நகரச் சொல்லி அவன் மூளை கட்டளையிட்டது.

" சரி மற்ற விஷயங்களை அப்புறம் பேசிக் கொள்ளலாம்! இன்னொரு நாள் சந்திக்கலாம்" என சொல்லிவிட்டு வந்தவர்கள் கிளம்பும் முன், மித்ரன் கிளம்பி தன் வாகனத்தை கடற்கரை நோக்கி செலுத்தினான்.

அவன் இதயத்தில் 'காருண்யா' என்ற பெயர் மறுபடி மறுபடி எதிரொலித்து கொண்டிருந்தது. ஆனால் அவன் மூளையோ, யார் அவள், எதற்காக இவன் இவ்வளவு அலைபாய்கிறான் என புரியாமல் குழம்பித் தவித்தது.
 

Latha S

Administrator
Staff member
காருண்யா வா அவள்? மாளவிகா வுக்கும் மித்ரனை பிடிக்குதா? சித்தார்த் வேறு இப்போ நடுவில். Interesting மா. விலங்குகள் பற்றி எதுவோ புதுசா சொல்ல போறீங்க. Waiting to read
 
Top