கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீயே நினைவாய் - 5

Poornima Karthic

Moderator
Staff member

நீயே நினைவாய் - 5

காருண்யாவை பார்த்து, மின்சாரம் தாக்கியது போல் நின்று கொண்டிருந்தாள் மாளவிகா.

சில வினாடிகளுக்கு பிறகு, சித்தார்த் கையில் இளஞ்சிவப்பு நிற ரோஜா பூங்கொத்தோடு வந்தான்.

"ஹாய் காருண்யா! வெல்கம் டூ இந்தியா" என்று கூறி காருண்யாவிடம் அந்த பூங்கொத்தை கொடுக்கப் போனான். உடனே சட்டென்று சுதாரித்த மாளவிகா, அவன் கையிலிருந்து பூங்கொத்தை பிடுங்கி, "வெல்கம் டூ இந்தியா காருண்யா! நீங்க வந்த வேலை சக்சஸ்ஃபுல்லா முடிய என்னோட வாழ்த்துக்கள்!" என்று கூறி பூங்கொத்தை கொடுத்து சிரித்தாள்.

"டேய் சித்து! மங்குனி நான் தானே உன்ன பூங்கொத்து வாங்கிட்டு வரச் சொன்னேன், அப்ப நான் தானே கொடுக்கணும் நீ எதுக்கு முந்திரிக் கொட்டை மாதிரி அவசரப்பட்டு கொடுக்க நினைச்ச?" என்று அவனிடம் சிறு சிரித்தாள்.

"நீங்க சொன்னா, நான் செஞ்சுடணுமா? அவ என் தங்கச்சி, நான் தான் கொடுப்பேன்" என்று மறுபடியும் காருண்யாவிடம் இருந்த பூங்கொத்தை பிடிங்கி, அவளுக்கே திருப்பிக் கொடுத்தான் சித்தார்த்.

தன் பெற்றோர்களை பிரிந்த மன அழுத்தத்திலும், காதலைத் தொலைத்த துக்கத்திலும் இருந்த காருண்யாவிற்கு இவர்களின் விளையாட்டு மெல்லிய சிரிப்பு ஒன்றை வரவழைத்தது. வலியை மட்டுமே சுமந்து வந்தவளுக்கு இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் பிடித்து போனது.

"பங்குனின்னா ஒரு தமிழ் மந்த் அப்படின்னு நான் படிச்சிருக்கேன். மங்குனினா என்ன? அப்புறம் உங்க பேர் என்ன?" என்று வரிசையாகக் கேள்விகளை மாளவிகாவை நோக்கி அடுக்கினாள் காருண்யா.

"வாவ்! தமிழ் மாசமெல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க! அதுவுமில்லாம டமில் அப்படின்னு சொல்லாம, அழகா தமிழ்னு சொல்றீங்க! முதல்ல என் பேர சொல்லுறேன், என் பேரு மாளவிகா. நானும் இந்த தண்டத்தை போல, ஒரு கால்நடை மருத்துவர். அப்புறம் மங்குனி அப்படிங்கறதுக்கு அர்த்தம் கேட்டீங்கல்ல, மங்குனின்னா மக்கு, மட சாம்பிராணின்னு அர்த்தம். சிம்பிளா சொல்லனும்னா மங்குனினா சித்தார்த்னு அர்த்தம்" என்றாள் மாளவிகா.

வந்ததும், வராததுமாக தன் தங்கையிடம் தன் இமேஜை டேமேஜ் செய்கிறாளே என்று கடும்கோபம் கொண்டான் சித்தார்த். "சரி மாளவிகா, காருண்யாவை பார்த்தாச்சுல்ல, நீ கிளம்பு நான் அவளை என் வீட்டுக்கு கூட்டிட்டு போகிறேன்" என்று பட்டென்று அவர்கள் பேச்சை வெட்டிவிட்டான் சித்தார்த்.

மாளு, "எப்படி சித்து, உன் வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியும். உங்க அம்மா அப்பா தான் இன்னும், அவளோட அம்மா அப்பாவையே ஏத்துக்கல. அப்ப அவள மட்டும் ஏத்துப்பாங்க? நான் வேணா என் வீட்டுக்கு கூட்டிட்டு போகட்டுமா?"

"வேண்டவே வேண்டாம்! ரெண்டு நிமிஷத்திலே என்னோட இமேஜ டோட்டல் டேமேஜ் பண்ற, உன்ன நம்பி எல்லாம் அவளை விட முடியாது. அவ பார்க்கறதுக்கு ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா, அதனால நானே எப்படியாவது எதையாவது சொல்லி சமாளிச்சுக்கறேன்" என்று கூறி காருண்யாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான் சித்தார்த்.

"போய்ட்டு வரேன்", என்று கூட சொல்லாமல் சித்தார்த் வேகமாக முன்னேறினான். காருண்யா மட்டும் மாளவிகாவிடம் விடைபெற்றுக் கொண்டு, மறக்காமல் அவளின் அலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டாள். இப்படி பாராமுகமாய் சித்தார்த் செல்வது இதுவே முதல் முறை. தான் என்ன தவறு செய்தோம் என்று, ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள் மாளவிகா.

எதோ ஒரு வேகத்தில் சித்தார்த், காருண்யாவை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டான். தன் பெற்றோர்களிடம் அவள் தன் தோழி அல்லது நண்பனின் தங்கை என்றெல்லாம் பொய் கூறுவதை விட, உண்மையை கூறுவது மிகச் சிறந்தது என்று நினைத்தான்.

அதனால் வீட்டை அடைந்தவுடன், "காருண்யா! நீ மாடில போய், என் ரூம்ல பிரஷ் ஆயிட்டுவா! நாங்க இங்க காத்துகிட்டு இருக்கோம்" என்று கூறி அவளை மாடிக்கு அனுப்பி வைத்தான்.

இதை கவனித்த சித்தார்த்தின் அம்மா, "டேய்! யாருடா அந்த பொண்ணு சூப்பரா இருக்கா! ஃபாரின் இந்தியா ரெண்டுத்தையும் சேர்த்து மிக்ஸ் பண்ண மாதிரி இருக்கா. எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு, அவளை நீ லவ் பண்றியா?" என்று கடகடவென காதை கடித்தாள்.

"சீ! வாயைக் கழுவு. ஏம்மா, ஒரு பொண்ண வீட்டுக்கு கூட்டிட்டு வந்தா, உடனே அவ என் காதலியாத்தான் இருக்கணுமா? அம்மா ஏம்மா இப்படி எல்லாம் யோசிக்கற, உன் புத்தி ஏன் இப்படி போகுது? ரொம்ப சீரியல் பாத்து கெட்டு போயிருக்க" என்று மாளவிகாவின் மேல் உள்ள கோபத்தை தன் தாயிடம் காட்டினான்.

"என்னடா ரொம்ப ஓவரா பேசுற, யாரோ ஒரு முகம் தெரியாத பொண்ண வீட்டுக்கு அழைச்சிட்டு வந்தா, வேற என்ன நினைக்கிறது? சரி இப்பவாவது அந்த பொண்ணு யாருன்னு சொல்லி தொலை. இல்லைன்னா மாடி ரூம்ல இருக்குற உங்க அப்பாவ கூப்பிடுவேன்" என்று பதிலுக்குக் கத்தினார் அவன் அம்மா தேவயானி.

"உஷ்ஷ்ஷ்! சத்தம் போடாத, நானே எப்படி சொல்றது முழிச்சிட்டு இருக்கேன். இந்த பொண்ணு வேற யாரும் இல்ல, என் தங்கச்சி மா" என அரைகுறையாய் உளறி வைத்தான் சித்தார்த்.

"என்னடா சொல்ற! எனக்கு மயக்கமே வரும் போல இருக்கே, எனக்கு தெரியாமல் எப்படிடா உனக்கு தங்கச்சி வரும்? ஒரு வேளை உங்க அப்பா ஏதாவது தப்பு கிப்பு பண்ணிட்டாரா?"

"ஐயோ கடவுளே! கொடுமையே எல்லாத்தையும் இந்த அம்மா தப்பு தப்பா புரிஞ்சுகிறாங்களே! அம்மா அந்த பொண்ணு, அப்பாவோட தம்பி பொண்ணும்மா. அதான் வெளிநாட்டு பொண்ண, காதல் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஆஸ்திரேலியாவில் இருக்காரே அவரோட பொண்ணு".

மாடியில் இரண்டு, மூன்று அறைகள் இருந்ததால், எந்த அறைக்கு சென்று புத்துணர்ச்சி செய்து கொள்வது என்று புரியாமல் குழம்பிக் கொண்டிருந்த காருண்யா, சரியாக இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அங்கே வந்து விட்டாள். இவர்கள் இருவரும் பேசுவது, அவளுக்கு மேலும் சிரிப்பை வரவழைத்தது.

சித்தார்த் இவளை, தன்னுடைய தங்கை மற்றும் சித்தப்பாவின் மகள் என்று சொன்னதும், இவள் ஓடிச்சென்று தேவயானியின் காலில் விழுந்து, "ப்ளஸ் மீ பெரியம்மா!" என்றாள்.

"என்ன அழகா பொண்ண வளர்த்திருக்காங்க! நல்ல இருடா தங்கம், எழுந்திருமா, உன் பேர் என்ன?"

"காருண்யா, பெரிம்மா"

"நல்ல அழகான, அர்த்தமுள்ள பெயர். டேய் தடிமாடு பாத்துக்கிட்டியா? இப்படி தான் பெரியவங்க காலில் விழுந்து, ஆசீர்வாதம் வாங்கணும், நீயும் இருக்கியே! எனக்கு பார்த்த உடனே, காருண்யவ ரொம்ப பிடிச்சு போச்சு. எனக்கு பொண்ணு இல்லாத குறைய, அவதான் தீர்க்கப் போறா" என்று கூறி காருண்யமே உச்சி முகர்ந்தாள் தேவயானி.

சித்தார்த், "அதெல்லாம் இருக்கட்டும் இப்ப அப்பா வந்தா என்ன சொல்றது? அப்பா கிட்டேயும் உண்மையை சொல்லிடலாமா?"

"ஐயையோ வேண்டாண்டா! அவருக்கு உண்மை தெரிஞ்சா, வானத்துக்கும் பூமிக்குமா குதிப்பாரு, இப்போதைக்கு இவள உன் பிரண்டோட தங்கச்சின்னு சொல்லிடு. மத்ததெல்லாம் நான் பாத்துக்குறேன், எப்போ உண்மையை சொல்லுணுமோ அப்ப சொல்லிக்கலாம்" என்று கூறி காருண்யாவை உள்ளே அழைத்துச் சென்றார்.

தேசம் விட்டு தேசம் வந்தாலும், தனக்கு இங்கே ஒரு சொந்தம் கிடைத்ததை நினைத்து மிகவும் மகிழ்ந்தாள் காருண்யா.

"ஆமாம் எதுக்காக இந்தியா வந்திருக்க?" என தேவயானி, காருண்யாவிடம் கேட்கவும், " யாருடா அந்த பொண்ணு?" என சித்தார்த்தின் தந்தை குமரன் அவனிடம் கேட்கவும் சரியாக இருந்தது.

ஒரே நேரத்தில் இரண்டு பொய்கள் கூற இருவரும் தயாரானார்கள்.
 

Kothaisuresh

Well-known member
இரண்டு பேரும் வேற வேற சொல்லி மாட்டிக்கப் போறாங்க
 

Latha S

Administrator
Staff member
இரண்டு பேரும் உளராமல் இருந்தால் சரி தான்.
 
Top