கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீயே நினைவாய் - 9

Poornima Karthic

Moderator
Staff member
நீயே நினைவாய் - 9

பெங்களூர் செல்ல ஏற்பாடுகள் எல்லாம், துரித வகையில் நடைபெற்றது. மித்ரன் மட்டும் தனியாக வர, மற்ற மூவரும் ஒன்றாக விமான நிலையம் வந்தடைந்தனர். நாயகர்கள், நாயகிகள் நான்கு பேருக்கும் ஃப்ளைட்டில் இடம் ஒதுக்கப்பட்டது.

மாளவிகா, "மித்ரன் மூணு பேர் ஒண்ணா உக்காரலாம், இன்னொருத்தர் அந்த பக்கம் வேற யார் கூடவாது தான் உட்காரணும். நானும், காருண்யாவும் ஒண்ணா உட்கார்ந்துக்குறோம். நீயோ இல்ல சித்துவோ அந்த பக்கத்தில் உள்ள இடத்துல உட்காருங்க" என்று கூறிவிட்டு ஓடோடி சென்று, ஜன்னலோர இருக்கையை கைப்பற்றினாள் மாளவிகா.

"ஏய் மாளு! இங்க வந்தும் உன் பக்கிதனத்த காட்டுறியே? பஸ் ட்ரெயின்ல தான் ஜன்னலோர சீட்டிற்கு அடம்பிடிப்ப, ஃப்ளைட்டிலும் அதையே தான் பண்ணனுமா? தலை எழுத்து" என்று கூறி கொண்டே அவள் அருகில் அமர வந்தான் சித்தார்த்.

"டேய்! நான் கடுப்பாகறதுக்கு முன்னாடி இங்கேர்ந்து ஓடிடு, நானும், காருண்யாவும் தான் ஒண்ணா உக்காரப்போகிறோம். உனக்கு வேணும்னா, அந்த பக்கம் உள்ள தனி சீட்டில் போய் உட்காரு. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. ஜன்னலோர சீட்டின் மகிமை உன்ன மாதிரி மங்குனிக்கெல்லாம் புரியாது. நீ வா காரு! என் பக்கத்துல உட்காரு" என காருண்யாவை இழுத்து தன்னருகில் அமர்த்தி கொண்டாள்.

"பெரிய க்ளியோபாட்ரா, உன் பக்கத்துல எவன் உக்காருவான். நான் தனி சீட்டுக்கே போறேன், அங்க எனக்கு பக்கத்து சீட்டுக்கு 'காத்ரின்'னு பேரு வெச்ச ப்யூட்டி வரப்போகுது. பாய்!" என மாளவிகாவை பதிலுக்கு வெறுப்பேற்றிவிட்டு, அந்த பக்கத்தில் உள்ள இருக்கையில் சென்று அமர்ந்தான்.

மித்ரனுக்கு இருக்கையில் சாய்ஸ் எதுவும் இல்லாததால், அவன் காருண்யாவின் பக்கத்தில் உள்ள சீட்டிலேயே அமர்ந்துகொண்டான்.

அடுத்த சில நொடிகளில், ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க ஜீன்ஸ் மற்றும் டாப் அணிந்த பெண்மணி, சித்தார்த்திடம் "எக்ஸ்க்யூஸ் மீ, மூவ் ப்ளீஸ், தட்ஸ் மை சீட்" என்றாள்.

"அது காத்ரினோட சீட் பாட்டிம்மா, உங்களோடது இல்ல!" என்றான் சித்தார்த் அவசரமாக, "நான் தான் மிஸ்டர் அந்த காத்ரின், உன்கிட்ட என்னோட ஆதார் கார்ட் காட்டினா தான் நம்புவியா? நீ வேற எந்த காத்ரின்னை எதிர்பார்த்த?" என்று கூறி சிரித்து கொண்டே, அவனை நகர்த்திவிட்டு தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தாள் அந்த நவநாகரீக பாட்டி.

சித்தார்த் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, "அப்ப்பாடா! நல்ல வேளை அந்த ராட்சசி நான் பல்பு வாங்கினத பாக்கல" என நினைத்து கொண்டிருக்கும் போதே, மாளவிகாவிடம் இருந்து கொல்லென்ற சிரிப்பொலி கேட்டது.

"சாரி சித்து! நான் உன் தங்கச்சி அளவுக்கு டேலண்ட் இல்லை‌. நீ பல்பு வாங்கினத பாத்து, என்னால அவள மாதிரி சிரிப்ப அடக்கிட்டு இருக்க முடியல" என்று கூறி மறுபடியும் விழுந்து விழுந்து சிரித்தாள்.
இப்போது அவளுடன் சேர்ந்து, மித்ரனும் சிரிக்க ஆரம்பித்தான். உடனே சித்தார்த் எதிர்ப்புறம் மூஞ்சியை திருப்பி வைத்து கொண்டான்.

அங்கு எதுவுமே நடக்காதது போல் காருண்யா அமர்ந்திருந்தாள். அவள் அப்போது அந்த உலகத்திலேயே இல்லை எனும் போது, எப்படி தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்வாள். தன்னவனின் அருகாமை வெகு நாட்களுக்கு பிறகு கிடைத்த ஆனந்தத்தில், கனவுலகில் மிதந்து கொண்டிருந்தாள். அவன் மேல் எப்போதும் வீசும், அதே சுகந்த நறுமணம் அவன் தான் உபயோகிக்கும் வாசனை திரவியத்தை மாற்றவில்லை என அவளுக்கு உணர்த்தியது.

"என்ன காரு? ஏன் நீங்க எங்க கூட சிரிப்புல கலந்துக்கல, அவ்ளோ பாசமா உங்க அண்ணன் மேல?" என அவளை சிட்டிகையிட்டு அழைத்து கேட்டான் மித்ரன்.

"ம்ம், என்ன பெயர் சொல்லி கூப்பிட்டீங்க?"

"ஏன்! காருன்னு சொல்லி கூப்பிட்டேன்.மாளவிகா உங்கள அப்படித்தானே கூப்பிட்டாங்க, காருண்யா ரொம்ப நீளமா இருக்கு, அதோட சுருக்கம் காரு. குட்டியா க்யூட்டா இருக்கு" என்று கூறி சிரித்தான் மித்ரன்.

"பல தடவை காதலில் விழுவது கூட அற்புதம் தான், மறுபடி மறுபடி அதே மனிதரிடம் என்றால்" என்ற வாக்கியம் காருண்யாவிற்கு அப்போது ஞாபகம் வந்தது. மித்ரன் சிரிக்கும், ஒவ்வொரு சிரிப்பிலும் விழுந்து தொலைக்கிறாளே என அவள் மனசாட்சி புலம்பி தள்ளியதை அவள் இதயம் கேட்டபாடில்லை‌. அது பாட்டிற்கு 'லப் டப்' என்று துடிப்பதற்கு பதில், 'யுவன் யுவன்' என்று எகிறித்துடித்தது.

"எக்ஸ்க்யூஸ் மீ காரு, எனக்கு பயங்கர ஜலதோஷம், அதனால் நான் டாப்லட் போட்டிருக்கேன் சோ தூங்கப்போறேன். நீங்களும், மாளவிகாவும் பேசிக்கிட்டு இருங்க" என்று கூறிவிட்டு கண்மூடி சீட்டில் சாய்ந்து கொண்டு உறங்க ஆரம்பித்தான் மித்ரன்.

மாளவிகா ஜன்னலோர காட்சிகளிலேயே லயித்திருக்க, காருண்யா யுவனுடனான இறந்த காலத்திற்கு சென்று கொண்டிருந்தாள்.

சரியாக நான்கு வருடங்கள் முன்பு

அதிகாலையிலே 'நியூ வேர்ல்டு பில்லபாங் ஜூ' மிகுந்த பரப்பரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அறிய வகை உயிரினங்களை பாதுகாப்பதை பற்றியும், பராமரிப்பதை பற்றியும் காருண்யா பேசும் பேச்சு அங்கே மிகப் பிரபலம்.அதற்கெனவே தனியே கூட்டம் கூடும்.

அன்றும் அது போல், காருண்யா சிவப்பு நிற பாண்டாவை பற்றி பேசிக் கொண்டிருந்தாள். அவளும் அந்த பாண்டாவிற்கு ஏற்றார் போல், சிவப்பு நிற உடை அணிந்திருந்தாள்‌. அவள் பேசிக் கொண்டிருக்கையிலேயே, ஒரு அம்மா பாண்டாவும், அதன் குட்டி பாண்டாவும் அவளை சுற்றி ஆட்டம் போட்டது. அவள் மடி மீது ஏறி, விழுந்து புரண்டு கொஞ்சி கொண்டிருந்தன. அவளும் அவைகளை சிரிப்புடனும், சிலிர்ப்புடனும் ஏற்று கொண்டு பேசிக் கொண்டிருந்தாள்.

"டேய் மச்சி! அங்க பாரேன் மூணு பாண்டா" என்ற ஒரு குரல் காருண்யாவின் காதுகளில் எட்டியது.

"அம்மாவும், குட்டியும் சேர்த்து மொத்தம் இரண்டு தானே டா இருக்கு, இன்னொன்னு எங்கடா கவின்?" என கேள்வியோடு மற்றொரு குரல் கேட்டது.

"டேய் யுவன், நான் அந்த பொண்ணையும் சேர்த்து தான் டா சொன்னேன். இது கூட புரியாம, இப்படி மக்கா இருக்கியே!" என தலையில் அடித்து கொண்டான் கவின்.

"கவின் கொஞ்ச நேரம் சும்மா இருக்கியா? அந்த பொண்ணு காதுல விழுந்தா எவ்வளவு ஃபீல் பண்ணும். அடுத்தவங்களை கிண்டல் பண்ணி உருவாகும் சந்தோஷம் நமக்கு தேவையா? அந்த பொண்ணு பார்க்க வேற இந்திய சாயலில் இருக்கா, அவளோட அம்மாவோ, இல்லை அப்பாவோ இந்தியனா இருக்க கூடும். அதனால நீ கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு சும்மா இரு டா!" என்று அதட்டினான் யுவன்.

"ச்சூ! அந்த பொண்ணுக்கு நிச்சயம் தமிழ்லாம் தெரிஞ்சிருக்காது‌. அவ இந்திக்காரியாத்தான் இருப்பா, நீ உன் சாமியார் தனத்தை எல்லாம் மூட்டை கட்டிட்டு கொஞ்சம் என்ஜாய் பண்ணுடா!"

"அடுத்தவங்களை நோகடித்து வரும் என்ஜாய்மெண்ட் எனக்கு தேவையில்லை!" என பட்டென்று முகத்தில் அறைந்தார் போல் சொல்லிவிட்டு, அமைதியாக நின்று கொண்டான் யுவன்.

இவர்கள் பேசியது அனைத்தும் தெள்ள தெளிவாக காருண்யாவின் காதிலே விழுந்தது. கவினின் செய்கையை நினைத்து மனம் வருந்தினாலும், யுவனின் கூற்று அவளுக்கு பெரிதும் ஆறுதலாகவும், இனிமையாகவும் இருந்தது. அவளும் அவள் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்தில், அந்த ஜூவில் யாரோ ஒருவருக்கு மருத்துவ உதவி தேவை என்ற சைரன் ஒலி கேட்டது. சீஃப் ஜூ கீப்பர் ஆகிய காருண்யா, உடனே அங்கே இருக்கும் அவசர சிகிச்சை கூடத்திற்கு விரைந்தாள். அங்கே சென்று பார்த்தால், வலது கை விரல்களில் ரத்தம் சொட்ட சொட்ட கவின் அரை மயக்கத்துடன் அமர்ந்திருந்தான்.

"வாட் ஹாப்பண்ட்" என்று ஆங்கிலத்தில் வினவினாள் காருண்யா.

"சும்மா இருந்த ஒட்டகத்துக்கிட்ட வாலாட்டினா, அது இப்படி தான் கடிச்சு வைக்கும். சொல்றத கேட்டு சும்மா இருந்தா தானே!" என பதிலை யுவமித்ரனும் ஆங்கிலத்திலேயே கூறினான்.

"ஓ! லெட் மீ செக்!" என்று சொல்லிவிட்டு, துரிதமாக அந்த காயத்தை துடைத்து, சீழ் பிடிக்காமல் இருக்க மருந்து போட்டு, ஒரு டி.டி இன்ச்ஜெக்ஷனையும் போட்டு விட்டாள் காருண்யா.

"நத்திங் டு வொரி! டேக் ரெஸ்ட் ஃபார் ஒன் டே" என்று கூறி விடையளித்தாள் காருண்யா.

கவின் வலி மிகுதியால் கண்களை மூடிக்கொண்டிருக்க, யுவன் காருண்யாவிற்கு நன்றிகள் கூறி விடை பெற்றான்.

"எக்ஸ்க்யூஸ் மீ!" என திரும்பி செல்லும் கவினின் தோள் தொட, அவன் கண் திறந்தான். "இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல். உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன். இனிமேலாவது, உங்க ஃப்ரெண்ட் சொல்றத கேளுங்க!" என சுத்த தமிழில் சொல்லிவிட்டு, யுவனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள் காருண்யா.

"டேய் அறிவு கெட்டவனே! அந்த பொண்ணு பேசினது உனக்கு கேட்டுச்சா. இனிமேலாவது ஒழுங்கா இருந்து தொல. இப்ப வா போகலாம்!" என கவினை தரதரவென்று இழுத்து சென்றான் யுவமித்ரன்.

இந்த முதல் சந்திப்பு, காருண்யா மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருந்தது‌. தன் அப்பாவை போல் இனிமையாய், மென்மையாய் உள்ள தமிழ்நாட்டு சிங்கத்தை தான் மணம் முடிக்க வேண்டும், என்ற குறிக்கோள் கொண்ட காருண்யாவின் கண்களில், யுவனை காண்பித்தது எல்லாம் வல்ல சக்தியின் செயலே என்று காருண்யா நம்பினாள்.

பழசை எல்லாம் நினைக்க நினைக்க, விமானத்தில் அமர்ந்து பெங்களூர் சென்று கொண்டிருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது‌. அப்போது அவள் சற்றும் எதிர்பாராத தருணத்தில், மித்ரனின் கைகள் அவள் கைகளை இறுக பிடித்தது.

இவள் சடாரென்று திரும்பி பார்க்க, அங்கே அவன் ஜுர வேகத்தில், தன்னை மறந்து ஏதோ உளறி கொண்டும் அனத்தி கொண்டும் இருந்தான்.

பாவம் காய்ச்சலின் தாக்கத்தால் இப்படி இருக்கிறான், என புரிந்து கொண்டவள் மெதுவாக அவன் கைகளை நீவி விட, சிறிது நேரத்திற்கெல்லாம் உளறல் நின்று, சிறு குழந்தையாய் உறங்கிப்போனான். தூக்கத்தில், "தாங்க்யூ மா!" என்று கூறிவிட்டு மறுபடி உறங்கினான்.

இதையெல்லாம், கண்டும் காணாதது போல் அமர்ந்திருந்தாள் மாளவிகா.
மித்ரன் உறங்கி நெடுநேரம் ஆகியும், காருண்யா அவன் கைகளில் இருந்து தன் கைகளை விடுவித்து கொள்ளாமல், சிலையென அமர்ந்திருந்தாள்.
 
Top