கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீரோட்டம்: அத்தியாயம்--9

sankariappan

Moderator
Staff member
அத்தியாயம்--9

மரகதத்தின் வாழ்வில் அவள் இதுவரை அறிந்திராத வானவில் பக்கங்கள் தோன்றின. பிரபுவின் வருகை புதிய தென்றலைப் போல் சுகமாக வந்து வீசிற்று. போன் கண்டுபிடித்த கிரகாம் பெல்லை பாராட்டினாள். மன்மதனிடம் நன்றி சொன்னாள். காதல் கவிதைகளை படித்து அந்தக் கவிஞர்களின் கவிதை வரிகளை வியந்தாள். என்ன ஒரு மாற்றம்! அவளுக்கே அவளுக்கென்று ஏற்பட்ட சந்தோஷம். இதுவரை அடுத்தவரை சந்தோஷப் படுத்துவதே வாழ்க்கை என்று நினைத்திருந்தாள். இன்று தான் தனக்கு என்று சந்தோஷங்கள் இருப்பதையே உணர்ந்தாள். உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது. மனித குலம் எவ்வளவு சிறப்பு வாய்ந்தது. அவளையே அவள் காதலிக்க கற்றுக் கொன்ட பின் தான் வாழ்கை அவள் வசப் பட்டது .

“நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு...உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு...” என்று பிரபுவிடம் செல்லில் பாடினாள். அவன் உல்லாசமாக சிரித்தான்.

“நான் பாடினா கழுதை கூட கேட்காது. ஒரு கவிதை சொல்றேன்....மு. மேத்தாவின் கவிதை.

“ஒரே ஒரு முறை உன் பார்வையால் என்னை கௌரவிக்க மாட்டாயா?” எப்படி? “

“இன்னொரு கவிதை சொல்லுங்கள் பார்ப்போம்.”

“ம்ம்..சொல்றேன் கேள். “மழைக்கு அழுவத் தெரியும், ஆனால் சிரிக்கத் தெரியாது.

சூரியனுக்கு எரிக்கத் தெரியும் ஆனால் அணைக்கத் தெரியாது.

எனக்கு உன்னை நினைக்க தெரியும் , ஆனால்.....’ மீதி என்னவாக இருக்கும் சொல்லு.”

“சொல்லட்டுமா சொல்லட்டுமா...ரகசியத்தை சொல்லட்டுமா...ஆனால் மறக்கத் தெரியாது... கரெக்டா?”

“எங்கிருந்து சுட்ட...”

“சுட்ட கவிதைனாலும் பட்டுக் கவிதை தானே...” இருவரும் சிரித்தார்கள். சிரித்து சிரித்து அவர்கள் ஒரு புதிய சொர்கத்துள் நுழைந்தார்கள். மரகதம் முகம் என்றுமில்லாத பூரிப்புடன் திகழ்ந்தது. ஜான் போன் செய்தார் .எப்படி போகிறது பிரபுவுடன் உன் பழக்கம்? பிடிச்சிருக்கா? மரகதம் நெகிழ்ந்த குரலில் சொன்னாள் “தேங்க்ஸ் அப்பா..” ஜான் மனம் மகிழ்ந்து போனது .”என்ன சொன்னே என்ன சொன்னே...திருப்பிச் சொல்லு.”

“தேங்க்ஸ் அப்பா...”

“அப்பாடி... அப்பான்னு சொல்லிட்டியே அது போதும் டா.”

“நான் சாரி கூட சொல்லணும். உங்களை கஷ்டப்படுத்திட்டேன். நான் ரொம்ப கெட்டவ. என் சோகத்திலேயே மூழ்கிவிட்டேன். உங்க வலி தெரியலை.”

“உன் கோபம் சோகம் நியாயமானது தானே. என்னால்..என் கோழைத்தனத்தால்...”

“இரவு முடிந்து விட்டதப்பா இனி எல்லாம் ஒளியே.”

மரகதம் சுறுசுறுப்பாக புதிய தெம்புடன் வேலைகளைப் பார்த்தாள். கோர்டில் வாதாடி கோபாலுவிடமிருந்து முத்துவிற்கு விடுதலை வாங்கித் தரும் எண்ணத்தில் ஒரு வக்கிலை கூப்பிட்டிருந்தாள். அவர் வருவதாக சொன்னார். ”முத்து...கவலைப் படாதே...நான் வக்கீலுக்கு ஏற்பாடு பண்ணி இருக்கேன். குடிகார கோபலுவிடமிருந்து உனக்கு நிரந்தரமா விடுதலை கிடைச்சிடும். நிற்க கூட முடியாத அவன் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள போகிறானாமா? வேடிக்கை தான். நிச்சயம் பிள்ளைகள் கஸ்டடி உனக்குதான்னு கோர்ட் சொல்லிடும்னு வக்கீல் சொல்லிட்டார். நீ பயப்படாமே இரு.” முத்து சந்தோஷமாகப் போனாள்.

இரண்டு நாள் கழித்து கோர்டுக்கு போகப் போகிற சமயத்தில் அந்த செய்தி வந்தது, குடித்துக் குடித்து கோபாலு குடல் வெந்து இறந்து விட்டான்...முத்து லேசான கண்ணிருடன் அவள் முன் வந்து நின்றாள்.

“போயிட்டு வரேன்மா...”

“எதுக்கு போணும் முத்து? நீ பேசாம இரு. அவன் செத்து ஒழிந்தது நல்லது தான்.”

“அப்படி இல்லைமா...புள்ளைங்கள் கடைசியா அவன் முகத்தைப் பார்க்கட்டும். என்ன இருந்தாலும் பெத்தவன் இல்லையா?” முத்து புறப்பட்டுப் போன பிறகும் மரகதம் வெகு நேரம் வியந்தபடி உட்கார்த்திருந்தாள். என்ன பெண் இவள்...எப்படிப்பட்ட மனசு! இவ்வளவு தாராள மனசுடன் ஜானின் பெற்றோரோ அல்லது சாந்தாம்மாவின் பெற்றோரோ இருந்திருந்தால் அவள் இத்தனை வருடங்கள் அனாதையாக அவஸ்தைப் பட்டிருக்க மாட்டாள். படிக்காதவர்கள் வியக்க வைக்கிறார்கள். நாகரிகம் வளர்ந்த குடும்பங்கள் அந்தஸ்து ஜாதி மதம் என்று குறுகி கொண்டிருக்கும் போது...முத்து போன்ற படிக்காதவார்கள் மனிதாபிமான எண்ணங்களுடன் சமுகத்தை பரந்த பார்வை பார்க்கச் சொல்கிறார்கள்.

அருந்ததி தினமும் மாதுளை பழம் சாப்பிட்டாள். புளிப்பு மாங்காய் வாங்கி வாங்கியே நான் போண்டி ஆகிவிடுவேன் போலிருக்கு என்று அஸ்வின் விளையாட்டாக அவளை கேலி செய்து வந்தார். டாக்டரிடம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை போய் செக் அப் பண்ணிக் கொண்டு வந்தாள். அன்று தலைக் குளித்து விட்டு, அம்மா படத்திற்கு பூஜை பண்ணி வேண்டிக் கொண்டாள். “அம்மா...நீ இந்த முறை எனக்கு நல்லபடியாக குழந்தை பிறந்து தங்கணும் என்று ஆசீர்வாதம் பண்ணு. நீயே எனக்கு குழந்தையாக பிறக்கணும். நீ என்னை தூக்கி எறிந்தாலும் நான் உன்னை என் மகளாக பெற்று அம்மாவின் அன்பு எப்படி இருக்கணும்னு காட்டப் போகிறேன் .அம்மா உன் தவறு உனக்கு புரியுமா? பெற்று போட்டுவிட்டு துரத்திவிட்டாயே. எனக்கு உன் மேல் கோபம் தான்...” இப்படி ஏதேதோ வேண்டியபடி அருந்ததி நிற்க..வாசலில் ஒரு கார் வந்து நின்றது. அதிலிருந்து சொக்கலிங்கம் இறங்கி வந்தான். ஆச்சர்யத்தில் வாய் பிளந்து திகைத்து நின்றாள். “ என்ன...அரு...வாங்கன்னு கூட சொல்லமாட்டியா?” சுதாரித்து “வாங்கண்ணா...வாங்க வாங்க..” என்று வரவேற்றாள். “காப்பி கொண்டு வரேன்...” அவளுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. என்ன அதிசயம்... இத்தனை வருடங்கள் எட்டிக் கூட பார்க்காத உறவு இத்தனை சௌஜன்யமாக பேசி வருவதென்றால் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று அன்று உணர்ந்தாள் அருந்ததி. காபி சூடாக கொண்டு வந்தாள். மிக்ஸ்சர் லட்டு என்று வைத்தாள்.

“அரு...நீ ஃபாமிலி வேயில் இருக்க போலிருக்கு. மரகதம் மேடம் சொன்னாங்க. அதான் பார்க்க வந்தேன். இந்தா ஸ்வீட்ஸ்...பலகாரம். முறுக்கு...தட்டை...” பாக்கெட்டுகளை வைத்தான். “கரெக்டா செக் அப்பிற்கு போ. டாக்டர் சொன்னபடி கேட்டு நடந்துக்கோ. உடம்பை பார்த்துக்கோ. மாப்பிள்ளையை கேட்டேன்னு சொல்லு. இன்னொரு நாள் அண்ணி, பசங்களோடு வரேன். கவலைப் படாதே இந்த முறை உனக்கு நல்லபடியாக குழந்தை பிறக்கும். வரட்டுமா...” அருந்ததி கண்களில் கண்ணீர் பளபளக்க தலை ஆட்டினாள். மனம் அப்படியே பறப்பது போல் இருந்தது. ஆயிரம் தான் கணவன் அன்பைக் கொட்டினாலும் பிறந்த வீட்டு பாசம் என்பது எவ்வளவு மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஸ்வீட் பாக்ஸ்யை திறந்தாள். பாதுஷாக்கள் சுமார் பன்னிரண்டு குங்குமப் பூ தூவலுடன் சாப்பிட வேண்டும் போல் நாக்கை ஊற வைத்தது. முறுக்கு தட்டை எல்லாம் கடையில் வாங்காமல் யாரிடமோ செய்து வாங்கியது போல் மணமாக இருந்தது. மற்றொரு பெட்டி இருந்தது. அதில் ஒரு தங்க சங்கிலியும், இரண்டு வளையல்களும் இருந்தது. ‘இது உன் அம்மாவின் நகைகள். உனக்கு சொந்தமானவை. பத்து பவுன் இருக்கும்னு நினைக்கிறேன்.’ என்ற குறிப்பும் இருந்தது. அம்மாவின் சங்கிலியை மார்போடு அணைத்துக் கொண்டாள். அம்மா..முதல் குழந்தையை உண்டான போது நீங்க யாரும் என்னை திரும்பிக் கூட பார்க்கவில்லை. பிறந்த வீட்டு அன்பு இல்லாமல் ஏங்கிப் போனேன்...பரவாயில்லை இந்தக் குழந்தை அதிர்ஷ்டம் செய்திருக்கிறது. தாய்மாமன் கடைக் கண் பார்வை கிட்டிவிட்டது. நீயும் மேலிருந்து ஆசிர்வாதம் பண்ணுவேன்னு நினைக்கிறேன். கணவன் வந்ததும் சொக்கலிங்கம் வந்து போனதை சொல்லி அவன் கொடுத்தப் பொருள்களையும் காட்டினாள்.

“என்ன பெருந்தன்மை பாருங்க..எங்க அம்மா நகைகளை கூட கொண்டு வந்து கொடுத்திட்டார். பலகாரம் ஸ்வீட்ஸ் எல்லாம் அவ்வளவு டேஸ்ட்டு...’

“ஏய்...உனக்கு இப்ப முப்பது வயதா? ஐந்தா? ரொம்பத்தான் பிறந்த வீட்டு பெருமை பொங்குது. என்னை இனிமே கண்டுக்க மாட்டே போலிருக்கே..” என்று கேலி செய்தான். மரகதம் போன் செய்தாள்...”என்ன அந்த விஸ்வாமித்திரர் வந்தாரா?” என்று கேட்டதும் அதிர்ந்து போனாள் அருந்ததி. மேடம் என்ன இப்படி பேசறாங்க! “யாரைச் சொல்றீங்க?” என்று தெரியாத மாதிரி கேட்டாள். “ உன் அருமை அண்ணணைத் தான் சொல்றேன்.” என்று மரகதம் சொன்னதும். “அப்படி பேசாதீங்க மேடம்...” என்று கோபப்பட்டாள் அருந்ததி.


நதி ஓடும்...
 
Top