கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

நீரோட்டாம்

sankariappan

Moderator
Staff member
நீரோட்டம்

அத்தியாயம்-6

சந்தானமும் விமலாவும் கோவிலுக்கு சென்றிருந்த போது அங்கு சொக்கலிங்கத்தை சந்தித்தனர். முகத்தை திருப்பிக் கொன்டனர். “அங்கிள்...உங்க கிட்ட பேசணும்.” என்று வந்து சொன்ன அவனை அலட்சியப்படுத்தி பிரகாரம் சுற்றத் தொடங்கினர். அப்படி லேசில் விடுகிற ஜாதி இல்லை அவன் என்று அவருக்குத் தெரியாது. “நீங்க என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டேங்க அங்கிள்...ப்ளீஸ் நில்லுங்க...உங்க கூட பேசணும்.” விமலா சொன்னாள் “ஏங்க...கோவில்ல வச்சு என்ன விவகாரம்? என்னன்னு கேட்டு அனுப்புங்க.” வேண்டா வெறுப்பாக சொன்னார். “சீக்கிரம் சொல்லிட்டுப் போ. எங்களுக்கு நேரமாகிறது.”

“ஒ.கே அங்கிள். தேங்க்ஸ். உங்களுக்கெல்லாம் என் மேல் கோபம் இருக்கும்....சாந்தாம்மாவிற்கு அந்த மரகதம் கொள்ளி வைக்க நான் ஏன் அனுமதித்தேன் என்று. நான் அனுமதிக்கவில்லை சாந்தாம்மா இறக்கும் முன் ஒரு கடிதம் எழுதிருந்தார்கள். மரகதம் என்னை நன்கு பார்த்துக் கொண்டதால் எனக்கு கொள்ளி போடுகிற உரிமையை அவளுக்கும் கொடுக்க வேண்டும் என்று...கடிதத்தில் வக்கீல் ஒருவரின் கையொப்பம்...டாக்டர் ஒருவரின் கையொப்பம்...மற்றும் சாந்தாம்மாவின் கையொப்பம் ஸ்டாம்ப் பேப்பரோடு இருந்தது. சரி அவங்க கடைசி ஆசையை நிறைவேற்றத்தான் இதை அனுமதிச்சேன்.”

“ரொம்ப சரி....உங்களை யார் விடுதியில் சேர்க்கச் சொன்னது? வைதீஸ்வரன் சித்தப்பா மட்டும் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? புருஷனை இழந்தவர் என்பது உங்களுக்கு இளக்காரமா போச்சு இல்லை? இப்ப வந்து சப்பக் கட்டு கட்றீங்க.” நறுக்கென்று கேட்டார் சந்தானம். சொக்கலிங்கம் ஒரு பெருமூச்சு விட்டான். “சாவு உனக்கும் வரும்....நீ ஒன்றும் சாகா வரம் வாங்கி வரலை. உன் கடமையை செய்ய துப்பில்லை உனக்கு பேச வாய் வேறா? நடந்ததை மாற்ற முடியுமா? வழியை விடு.”

“இதோ பாருங்க...யார் மேலையோ காட்ட வேண்டிய கோபத்தை என் மேல் காட்றீங்க. சரி இருக்கட்டும். அந்த மரகதம் தான் இதற்கெல்லாம் காரணம்....வலுக்கட்டாயமா சாந்தாம்மாவை தன் விடுதிக்கு அழச்சிட்டுப் போனா...அவங்களும் அதற்கு சம்மதித்து போய்ட்டாங்க...நான் என்ன பண்ணுவது.? என் கூட வந்து இருக்கத்தான் சொன்னேன். அவங்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. இப்ப பாருங்க எங்க அம்மா நகைகளை சாந்தாம்மவிடம் நைசா பேசி வாங்கி இருக்கா அந்த மரகதம். நம்மை எல்லாம் முட்டாள் ஆக்கிவிட்டாள். அவ கிட்ட போய் பேசுங்க...உண்மை புரியும்...யார் நகைகளை யார் எடுத்திட்டுப் போறது? நான் சொல்வதை சொல்லிட்டேன்...பிறகு உங்க இஷ்டம். நான் வரேன்...வீட்டுக்கு வாங்க...விமலா சித்தி நீங்களும் வாங்க...விஷாலை கேட்டதா சொல்லுங்க...” புன்சிரிப்புடன் அகன்றான் சொக்கலிங்கம்.

“என்னங்க இது கதை இப்படி போகுது. நாம அந்த மரகதத்திடம் பேசுவோம்ங்க. அந்தப் பொம்பள யார் நம்ம குடும்ப விஷயத்திலே தலையிட?....’

மறுநாளே சந்தானமும் விமலாவும் போய் கேள்வி மேல் கேள்வி கேட்க மரகதம் பதில் சொல்ல முடியாமல் திணறினாள். அவளுக்கும் சாந்தாம்மவிற்கும் உள்ள உறவை எப்படி சொல்லமுடியும்? ஜான் பற்றி சொல்ல முடியுமா? “நீங்க தயவு செய்து போய்டுங்க. சாகப் போகிறவங்க விருப்பப்படி அவங்களை இங்கு அழைத்து வந்து பார்த்துக் கொண்டேன் அவ்வளவுதான். சொக்கலிங்கத்திடம் சொல்லுங்க அவங்க குடும்ப நகைகளை திருடி சமூகசேவை செய்ய எனக்கு எந்த அவசியமும் இல்லை. போலிசுக்கு போவதானால் போகட்டும். மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம்...தப்பு தப்பா புரிந்து கொண்டு வந்து ....”

அவள் முடிக்கும் முன் அவர்கள் எழுந்து கொண்டார்கள். “இவ பயங்கரமான ஆள் தான். பாவம் சொக்கலிங்கம் இவளிடம் மாட்டிக் கொண்டு அவஸ்தைப் படுகிறான்.” வீட்டிற்குப் போய் போன் போட்டார்கள்

“அந்த மரகதம் நீ சொன்னபடி பயங்கர கில்லாடி. நகைகள் என்னிடம் இல்லை போலிசுக்குப் போகணும்னா போங்க. ஐ டோன்ட் கேர் அப்படினுட்டா.” என்று தகவல் சொன்னார்கள். “நினைச்சேன்...” என்று போனை வைத்து விட்டான் சொக்கலிங்கம்.

மரகதம் வேலைக்கு கிளம்பும் நேரம் ஈஸ்வரி ஓடி வந்தாள். “அம்மா...கமலாப் பாட்டிக்கு ரொம்ப முடியலை. உங்களை பார்கணும்கறாங்க. மரகதம் விரைந்து சென்றாள். “பாட்டிம்மா...என்னாச்சு..” பரிவுடன் கேட்டாள். அருகில் முத்துவும் நின்றிருந்தாள். அவள் கண்ணில் நீர். “குடிக்க கஞ்சி கொடுத்தேன்மா...துப்பிட்டாங்க. நான் சாவணும்...சாவணும்னு புலம்பறாங்க...பாவமா இருக்கு...”

“பாட்டிம்மா...நீங்க அப்படியெல்லாம் சொல்லக் கூடாது...இந்தாங்க கஞ்சி குடிங்க..” சிறுது சிறிதாக புகட்டினாள். பாட்டிக்கு எழுபத்தைந்து வயது. பத்து வருடமாக இங்கு தான் இருக்கிறார்கள். “மரகதம்...நீ என் தாய் மாதிரிம்மா...போன் வந்தது...என் பேத்திக்கு மகன் பிறந்திருக்காம். நான் பூட்டிப் பாட்டி ஆகிட்டேன்னு சந்தோஷப்பட்டேன் இல்லம்மா...ஆனா என் பேத்தி இறந்துட்டாம்மா பச்சக் குழந்தையை விட்டிட்டு..கடவுள் என்னை அழைச்சிட்டுப் போகக் கூடாதா?...வாழ வேண்டிய வயசிலே போயிட்டாளே...என் மகளுக்கு அம்பது மூன்று வயசு...அவளாலே பச்சைக் குழந்தையை எப்படி பார்த்துக்க முடியும்? பேத்தியோட புருஷன் இவளை வேண்டாம்னுட்டு இன்னொருத்தியை கட்டிக்கிட்டான்...குழந்தை பராமரிப்பு இல்லாமே...அவஸ்தைப் படுத்து.” திக்கித் திணறி சொல்லிமுடித்தாள் கமலாப் பாட்டி. சுற்றி அனைவரும் துக்கம் தாங்காமல் அழுதனர் .இறைவனின் திருவிளையாடலை என்னென்பது? பாட்டிம்மாவிற்கு என்ன ஆறுதல் சொல்ல முடியும்? “மரகதம்...உன்னை தாயா நினச்சு கேக்றேன்...அந்த பிஞ்சுக் குழந்தைக்கு ஒரு தாயையும் தந்தையும் தேடிக் கொடுப்பியா?...” பாட்டி இறைஞ்சிக் கேட்டு மரகதத்தின் கையை பிடித்துக் கொண்டாள். “கண்டிப்பா செய்றேன் பாட்டி...நீங்க நிம்மதியா ரெஸ்ட் எடுங்க...”

“நீ சொன்னா செய்வே...நன்றிம்மா...” கைகூப்பியபடியே அவள் ஆவி மரகதம் மடியில் போயிற்று. அன்று வங்கிக்கு லீவு போட்டுவிட்டு எல்லா காரியத்தையும் கவனித்துக் கொண்டாள் மரகதம். ஆனால் கொள்ளி எல்லாம் வைக்கவில்லை.

அன்றிரவு மரகதம் தூங்காமல் படுத்துக் கிடந்தாள். இழப்பு எப்படியெல்லாம் வருகிறது! எந்த நிமிஷம் என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்? வாழ்க்கையின் சோகமும் அதுதான், வாழ்கையின் சுவாரஸ்யமும் அதுதான். இன்னொரு குழந்தை அவளைப் போல் அநாதை ஆகிவிட்டது. பதினாறு வயதுவரை ரோசியம்மாவுடன் வாழ்ந்த போது அவள் பாதுகாப்பாக உணர்ந்தாள். கவலை இன்றி இருந்தாள். பிஞ்சு மனதின் இன்னொசென்ஸ் வழிய ஒரு முள் தைக்காமல் மனம் கனிய வாழ்ந்தாள். ரோஸி இறந்தபோது அவள் கதிகலங்கிப் போனாள். ரோஸி இறக்கும் முன் அவள் சொல்லியது கேட்ட போது, முதல் முள் அவள் நெஞ்சில் பாய்ந்தது. “மேரி...” அப்பொழுது அது தான் அவள் பெயர்.

“சொல்லுங்கம்மா...” அழுதபடி இருந்தாள். ஆஸ்பத்திரி கட்டிலில் மெல்லிய தேகம் நடுங்க ரோசி படுத்தபடி பேசியது அவளுக்கு இன்னமும் நியாபகம் இருக்கிறது. “மேரி...நான் உன் அம்மா இல்லை. இதோ இது தான் உன் அம்மா அப்பா..” தலையணைக் அடியில் இருந்து ஒரு புகைப்படத்தைக் காட்டினாள். முதல் முதாலாக அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும் “இவங்க யாரோ...அம்மா எனக்கு நீங்க தான் அம்மா...” என்று கதறினாள்.

“நான் பொய் சொல்வேனா? உன் அப்பா வந்திருக்கார் ...ஜான்..” அவள் கூப்பிட கம்பீர தோற்றம் கொன்ட ஒரு மனிதர் உள்ளே நுழைந்தார். அவள் கையைப் பிடித்து அவர் கையில் ஒப்படைத்து விட்டு தன் கடமை முடிந்தது என்பது போல் ரோசி புன்னகைத்தபடி இறந்து போனாள். “மேரி...அழாதேம்மா...” என்றார் புது மனிதர். அவர் கையை தட்டி விட்டாள். அவள் உலகமே தலைகீழாக மாறிப்போனது. அவள் நடந்த பாதை முடிந்து போய் அங்கு ஒரு சுவர் பிரமாண்டமாக எழுந்து வழி மறித்தது. “நான் இருக்கேன் உனக்கு..” என்றார்.

இந்த திடீர் அப்பா மேல் அவளுக்கு வெறுப்பு தான் வந்தது. இவ்வளவு நாள் எங்கு போனார்? இப்போ மட்டும் வந்து என்ன கிழிக்கப் போகிறார்? அம்மா என்று ஒருத்தி இருக்கிறாளா இல்லை கொன்று விட்டாரா?

“நீங்க யாரோ....அப்பான்னா...அம்மா யார்? இவ்வளவு நாள் எங்கே இருந்தேங்க? “

ஜான் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தார். பதினாறு வயதுப் பெண்ணிடம் உன் அம்மாவும் நானும் காதலித்தோம்...திருமணம் பண்ணிக்கொள்வோம் என்ற நம்பிக்கையில் வரம்பு மீறி...நீ பிறந்தாய்..மத வேறுபாடு காரணமாக சிக்கல்...உன் அம்மாவை மதம் மாறினால்தான் ஏற்றுக்கொள்ள முடியும் என்ற கட்டாயம்...மதம் மாற மாட்டாள் என்று அவள் தரப்பிலிருந்து எதிர்ப்பு...பிரிய நேரிட்டது. வலுக்கட்டாயமாக வேறு ஒருவருக்கு மாலையிட்டாள். நான் அமெரிக்கா சென்றுவிட்டேன் உன்னை ரோசியிடம் ஒப்படைத்துவிட்டு...இப்படியெல்லாம் நடந்தது என்று எப்படி சொல்வது?

இதையெல்லாம் ஜீரணிக்கும் வயதா அந்தக் குழந்தைக்கு! “எல்லாம் நிதானமா சொல்றேன்...வா உன்னை ஒரு ஹாஸ்டலில் தங்க வைத்து....நீ எவ்வளவு வேண்டுமானாலும் படி நான் படிக்க வைக்கிறேன்...தைரியமாக இரு...அப்பா நான் இருக்கேன் உனக்கு...” மரகதம் ஒடிந்து போனாள். அவளை ஹாஸ்டலில் சேர்த்தார். கல்லூரியில் சேர்த்தார். மெல்ல மெல்ல தன் கதையை சொன்னார். மலையை தூக்கி அவள் தலயில் வைப்பதை உணர்ந்தார். சிறுமி மனம் நசுங்கி விட்டது அவருக்குப் புரிந்தது. “நான் உங்க கூட அமெரிக்கா வரமுடியாதா? என் அம்மா எங்கே?” நடுங்கிய குரலில் கேட்டாள் குழந்தை. அவள் தலையை அன்புடன் கோதியவர் “ அம்மா உன்னுடன் பேசவோ உன்னைப் பார்க்கவோ முடியாது மேரி...நீ அமெரிக்காவும் வர முடியாது. அம்மாவுக்கு வேறு கல்யாணம் பண்ண வச்சிட்டாங்க. அதுவும் ஒரு ஆறு வயது குழந்தைக்கு தந்தையாக உள்ள ஒருவருக்கு தாரமாக்கிட்டாங்க. அவளை நானே பார்க்க முடியாது. உன்னை பெற்று ரோசியிடம் அவள் கொடுத்துவிட்டுப் போன போது தான் அவளை நான் கடைசியாகப் பார்த்தது. அவளுக்கு அருந்ததின்னு ஒரு மகள் இருக்கா....” மரகதம் முகம் வாடிவிட்டது. “உனக்கு மரகத மேரின்னு ஆசையாக பெயரிட்டாள். இரண்டு மதமும் ஒன்று தான்னு நாங்க நினைத்தோம். ஆனால் பாழும் சமுதாயம் அப்படி நினைக்கலையே...” பலமுட்களை நெஞ்சில் வாங்கி குருதி வழிய நின்றாள் மரகதம். “நீங்க...”

“நானும் ஜெசிந்தா என்ற பெண்ணைக் கல்யாணம் பண்ண நேர்ந்தது. எனக்கும் ஒரு பையன். ஒரு பெண். பாரு உன் உடன் பிறப்புகளை...” ஒரு புகைப் படத்தைக் காட்டினார். ‘அப்ப நான் அம்மாக்கிட்டவும் போக முடியாது...உங்க கிட்டவும் வர முடியாது....அப்படித்தானே...” ஜான் விழித்தார். துக்கித்திருக்கும் அவளிடம் போய் பிள்ளைகளின் புகைப் படத்தைக் காட்டியதற்காக தன்னையே நொந்து கொண்டார்.

“மேரி...” என்றார். மரகதம் சொன்னாள் “என்னை அப்படிக் கூப்பிடாதேங்க. நான் மரகதமாகவே இருந்து விட்டுப் போகிறேன். மதம் என்பது ஒரு அடையாளம். எல்லா மதமும் ஒன்றுதான். அம்மாவை மதம் மாற கட்டாயப்படுத்தி கோழைத்தனமாக ஓடிய உங்களுக்கு நான் கொடுக்கும் தண்டனை என்ன தெரியுமா?”

“வந்து மேரி...சாரி மரகதம்...நான் தண்டனைக்குரியவன் தான்...நீ...”

“ஒரு ஹிந்து மத மனைவியை ஏற்காத நீங்க ஒரு ஹிந்து மத மகளை ஏற்கணும்னா என்னை மரகதம் என்று மட்டுமே கூப்பிடுங்கள்...அது உங்க தவறை சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கும். “

“நான் உனக்கு கொடுத்த தண்டனையை விட இது ஒன்றும் பெரிசில்லை மரகதம். நீ ரகசியமான மகளாக, வெளியில் அங்கீகரிக்க முடியாத உறவாக இருக்கணும்கறது உனக்கு எவ்வளவு பெரிய...” அவர் கண்களை துடைத்துக் கொண்டார். “ஸாரி மிஸ்டர் ஜான்...இந்த உறவை நானே முதலில் அங்கீகரிக்கவில்லை. மறைந்து வாழும் எந்த உறவும் எனக்கு வேண்டாம். ஒரு கார்டியனா இருந்து கவனிக்கறேங்க...அப்படியே இருங்க. உங்களை அப்பான்னு நான் கூப்பிடவும் மாட்டேன்...அங்கீகரிக்கவும் மாட்டேன்...ஒரு குந்தி குழந்தையை பெற்று போட்டது போல் பெற்று போட்டுவிட்டு ஓடின தாயையும் நான் அங்கீகரிக்கப் போவதில்லை.” தெளிவாகப் பேசும் பதினாறு வயது குருத்தை ஆச்சர்யத்துடன் பார்த்தார் ஜான். மரகதம் அந்த நாட்களின் வலியை இன்றும் உணர்ந்தாள். ஜான் அவளுக்கு இப்பவும் ஒரு கார்டியன்தான். ரோசி கொடுத்த புகைப்படத்தை மட்டும் பத்திரப்படுத்திக் கொண்டாள்.

நதி ஓடும்
 
Top