படிக்கட்டில் அமர்ந்திருக்கிறேன்...
படிக்கட்டில் அமர்ந்திருக்கிறேன்... ஆம் அதே படிக்கட்டில் அமர்ந்திருக்கிறேன். ஒன்பது இன்ச் அளவுள்ள சிவப்பு நிற தளச்செங்கலை அழகாய் அந்த காலத்தில் அடுக்கி வைக்கப்பட்டு ஒரு விரல் இடைவெளியில் சாந்து ஊற்றப்பட்டு இறுக்கிப்போயிருந்தது. அந்த சிவப்பில் தான் எத்தனை வண்ணங்களும் எண்ணங்களும்... இதமான மனநிலையை தந்தது.
மணிக்கணக்காய் பேருந்து சீட்டில் அமர்ந்து வந்த போது உடலில் ஏறிய சூடு இங்கே அமர்ந்ததும் தலையில் தொடங்கி கால் வழியே இறங்கியது போன்ற உணர்வு. குளிர்ச்சியாய் உள்ளது உடல் மட்டுமல்ல மனதும் கூட. படிக்கட்டானது தெருவில் போடப்பட்ட சிமெண்ட் சாலையை சில சென்டிமீட்டர்களுக்கு ஆக்கிரமித்திருந்தது.
இதே படிக்கட்டில் தான் எத்தனை நினைவுகள். தத்தி தவழ்ந்து விளையாடும் பருவ ஓட்டத்தின் போது கீழே விழுந்து முட்டியில் சிராய்த்துக்கொண்டது இந்த படிக்கட்டில் தான். சரியாய் நடக்கப்பயின்ற காலத்தில் சிரட்டை வைத்து, அதில் மணல் நிரப்பி, சமையல் சாதனங்கள் வைத்து சிறுவர்களாய் சமைத்து பல பேருக்கு உணவு பரிமாறப்பட்ட பெருமை இப்படிக்கட்டுக்கும் உண்டு.
வயது வந்த பின் அம்மாவிடம் வம்பளந்து விட்டு வீம்பாய் வந்து அமர்ந்ததும் இப்படிக்கட்டில் தான். இதே இடத்தில் அமர்ந்து ஒரு நாள் முழுவதும் சாலையையே வேடிக்கை பார்ப்பதெல்லாம் பரமசுகம். ஆனால் அந்த வரமானது வாய்த்ததில்லை என்று வருத்தப்பட்டு வருடங்கள் செல்ல, அவ்வரமானது இன்று கிடைத்துள்ளது.
அதற்கு காரணம் பட்டம்மா தான். பட்டம்மா மற்றும் மூக்கன் தம்பதிகளுக்கு சொந்தமான படிக்கட்டுகள் தான் இவை. சிறு வயதில் நான் கண்ட செல்வம் வாய்ந்தவர்கள் இவர்கள் தான். இவர்களுக்கு இரண்டு புதல்வன்களும் ஒரு புதல்வியும். இந்த ஊரில் மிக அதிக சத்தங்கள் கேட்பது இவ்வீட்டில் தான். சந்தோஷமானாலும் சச்சரவானாலும் சத்தமாகவே நடக்கும்.
சுற்றத்தாரை அதிகம் பொறாமைப்பட வைத்தவர்களும் இவர்களே. ஏனெனில் குடும்பத்தை ஒற்றுமையாக கொண்டு சென்றது பட்டம்மாவின் சாமர்த்தியம். மூக்கன் முற்றிலும் முரடன். அவன் கொண்டிருக்கும் முறுக்கு மீசைக்கும், முறைத்த முகத்திற்கும் நேற்று பிறந்த மலரம்புகள் கூட மிரண்டு விடும். எனவே மூக்கன் இருக்கும் போது எங்களது மூச்சு காற்றுக்கூட அப்பக்கம் வீசாது.
அவர்கள் விருந்திற்காய் வெளியூர் செல்வதாய் இருந்தால் எங்களுக்கு விழா தான். உடனே படிக்கட்டில் ஆளுக்கு சிறிது இடம் பிடித்து கிச்சடி கிண்டத் தொடங்கி விடுவோம். தெருவின் முனையில் வாடகை கார் சத்தம் கேட்டதும் தலைதெறிக்க ஓடுவிடுவோம்.
தெருவின் முனையிலேயே படிக்கட்டின் தோற்றம் தெரிந்து விடும். வந்த பின் வாசலில் நாங்கள் செய்து வைத்த அலங்கோலத்தை பார்த்து திட்டிக்கொண்டே சுத்தம் செய்வாள் பட்டம்மா.
அடுத்த நிமிடமே எங்களது வீட்டிற்கும் புகார் சென்று விடும். அந்த புகாருக்கு பயந்தே பகல் முழுவதும் பதுங்கியே திரிவோம்.. பார்க்கும் நேரம் பதமாய் தடங்கள் விழ அடிகள் கிடைக்கும்.
பட்டம்மாவினை எதில் பகைத்துக்கொண்டாலும் பண்டிகை காலங்களில் பாசமாய் மாறிவிடுவோம். காரணம் விழாக்காலங்களில் வீதிகளில் விளையாடும் வாலுகளை அழைத்து இனிப்புகளையும் தின்பண்டங்களையும் தருவாள்.
சில நேரங்களில் விருந்து உபசாரமும் செய்வாள். பட்டம்மா இடிக்கும் அந்த எள்ளு புண்ணாக்கிற்கு நான் அடிமை. எள்ளினை பதமாய் கல்லின்றி புடைத்து, நாட்டுச்சர்க்கரை இட்டு உரலில் ஆட்டித்தருவாள். கைகளில் ஒட்டாத பண்டம் தொண்டையில் சுவை நரம்புகள் மரத்து போகும் அளவில் அதில் சுவை ஊறியிருக்கும்.
மிதிவண்டி ஓட்டிப் பழகும் காலத்தில் அப்படிக்கட்டில் மோதியதும் உண்டு. பட்டம்மா மீது மோதி, வீட்டில் மிதி வாங்கியதும் உண்டு. பட்டம்மாவோடு பழகிய எங்களுக்கு ஏனோ வீட்டில் இருந்த அந்த நால்வரோடு பழக்கமில்லை.
பத்து வருடங்களுக்கு முன் முதலில் பெற்ற அரும்பெரும் புதல்வன் ஒரு பெங்காலி பெண்ணை காதலிப்பதாய் வந்து நின்றான். மூக்கன் நடுரோட்டில் நிற்க வைத்து பெல்ட்டினால் விளாசி விட்டார். அன்று சென்றவன் தான் வீட்டில் சேர்த்து வைத்த பணத்தோடு. பின் திரும்பவில்லை. பெரிய நகரம் ஒன்றில் ஒண்டிக்குடித்தனம் நடத்துவதாய் இரண்டு மாதங்கள் கழித்து தகவல் வந்தது.
சேமிப்பு பணம் சென்ற பின்னும் சோர்ந்து போய்விடவில்லை பட்டம்மா. அவளின் முகத்தில் என்றும் சந்தோஷமும் வற்றிப்போய்விடவில்லை. என்றும் போல பருவமெய்திய பக்கத்து வீட்டுக்காரி எனக்கும் பட்டாடை வாங்கி தருவதில் பஞ்சம் வைக்கவில்லை.
குடும்பம் பழைய நிலையை அடைந்த பின் இளையவனுக்கு தடபுடலாக திருமணம் நடந்தேறியது. பெரிய பணக்கார வீட்டுப்பெண் தான் மணமகள். எட்டு மாதங்களுக்கு மட்டுமே நாடகமாய் நடித்து வாழ்ந்தனர். கர்ப்பிணி என்ற ஒற்றைக் காரணம் காட்டித் தனிக்குடித்தனம் சென்றுவிட்டனர்.
அதன் பின்னும் விழாக்கள் என்றால் விருந்திற்கு வரும் வழக்கம் உண்டு. மெல்ல நாட்கள் செல்ல தங்கைக்கான திருமணத்தில் தன்னை திணறடித்து விடுவனரோ என்ற பயத்தில் தேய்பிறை போல போக்குவரத்து குறைந்தது.
தவப்புதல்வன்கள் தனியே விட்டு சென்ற தவிப்பில் தண்ணீருக்கு அடிமையாகி போனார் குடும்பத்தலைவர். ஒரு பெண்ணை வைத்துக்கொண்டு பட்டம்மா தான் தவித்து போனாள்.
பெண்ணை பாதுகாப்பாய் காப்பாற்றுவதே அவளுக்கு தினம் பாடாகி போனது. முன்பெல்லாம் அந்த படிக்கட்டு அந்த பெண்ணிற்கு பேன் பார்ப்பதற்காய் பயன்பட்டது. அதன் பின் அவளின் பாதம் கூட படவில்லை. வெறிச்சோடியது வீடு.
தனது நகைகளை வைத்து ஓரளவிற்கு சமாளித்து மகளின் திருமணத்தை முடித்தாள் பட்டம்மா. அதன் பின்னே அவளது கஷ்ட காலங்கள் தொடங்கியது.
குடித்து விட்டு வரும் கணவன் கண்மூடித்தனமாய் நடந்து கொள்ள தெடங்கினான். அவளுக்கு இருந்த ஒரே நிறைவு பெண்ணை கரைசேர்த்து விட்டோம் என்று.
ஆனாலும் சந்தோஷங்கள் நிலைக்கவில்லை. பெண் வீட்டில் இருந்து வரதட்சணை கேட்கத் துவங்க வறுமையில் வாடியவள் உடலும் இத்து போன நிலையில் செய்வதறியாது விழிக்கவில்லை. மனதில் இருந்த தைரியத்தால் ஆடுகளை வாங்கி வளர்க்க துவங்கி அதில் வந்த சிறு வருமானத்தை கொண்டு மகளுக்கான வட்டியை கட்டினார்.
பள்ளிப்படிப்பின் போது எனது அம்மா அவளுக்கு உதவி செய்ய கூறி வற்புறுத்துவார். காரணம் கேட்டால் கிடைக்காது, அதட்டல் மட்டுமே கிடைக்கும். தண்ணீர் குழாயில் இருந்து மூன்று வீடுகள் தாண்டியே பட்டம்மா வீடு.
அன்று எதேச்சையாக தண்ணீரின் குடத்தினை கொண்டு உள்ளே சென்ற போது பட்டம்மா அலங்கோலமான நிலையில் இரத்தத்துடன் கிடந்தாள். என்னால் முடிந்தவரை ஆடையை சரிசெய்து உதவி செய்தேன்.
அன்று இரவு எனது பெற்றோர்கள் ரகசியம் பேசுகையில் எட்டிநின்று ஒட்டுக்கேட்க, குடிபோதையில் மூக்கன் முறைதவறி நடந்ததால் இரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்டுள்ளாள் என்றறிந்தேன். எனது செயலை நினைத்து எனக்கே கோபம் ஏற்பட்டது. அதன் பிறகு நானே வலிய சென்று உதவிகளை செய்வேன்.
அன்று இரவு பட்டம்மா அலறும் சத்தம். எவரும் எழுந்து உதவிக்கு செல்லவே இல்லை. மறுநாள் பட்டம்மா வாசலில் கால்களை நீட்டி கைகால்களில் காயத்துடன் சோர்வாய் அமர்ந்திருந்தாள். நான் சென்றதும். "வா... மினுக்கி.. என்ன இந்த பக்கம் வந்த இவளே.." என கேட்டாள்.
அவளது குரலும் தன்னம்பிக்கையும் மட்டுமே அவளது பலம். பின் நான் விடுதிக்கு சென்ற பின் ஒருநாள் பேச்சு வழக்கில் எனது அம்மா மூக்கன் இறந்து விட்டதாக கூறினாள். எனக்கு பெருத்த நிம்மதி. பட்டம்மா பட்ட பாட்டிற்கு விடிவு காலம் வந்து விட்டது என்று நினைத்துக்கொண்டேன்.
ஆனால் பருவத்தேர்வு விடுமுறைக்கு சென்ற போது அதே வாசலில் அருகே கைத்தடியை வைத்துக்கொண்டு தலைமுழுவதும் நரைத்த முடியுடன் தோல் சுருங்கிய நிலையில் காதில் தடயம் போட்டு அமர்ந்திருந்தாள்.
இதை கண்டதும் எனக்குள் தோன்றிய குற்ற உணர்வு மூக்கன் முக்தி அடைந்ததற்காய் பெருமூச்சிட்டுக்கொண்டது. மூக்கன் என்னதான் முரடனாய் இருந்தாலும் இவ்வாறு முற்றுமிழந்து இருக்க பட்டம்மாவினை அனுமதிக்க மாட்டான்.
நான் சென்றதும் "வா... ராசம்ம மொவளா??" என கேட்டாள். "ஆமா பட்டம்மா..." என்றதும். "நல்லவளா??(நடுமகள்)" என கேட்டார். எனது பதில் வரும் முன்னே, "ஏ... தாயீ... வா... வந்து உக்காரு... நேத்தைக்கு தான் உன் அம்மைட்ட உன்ன கேட்டேன்.. இன்னைக்கு வந்துட்டியா?? நல்லா இருக்கீயா தாயீ..." என்றாள். இது தான் பட்டம்மா. அவள் வாயில் எப்படி இருக்கிறாய் என்று வராது. நல்லா இருக்கிறாயா?? என்றே வரும். பின் பேசிவிட்டு சென்றேன்.
ஆறுமாதங்கள் கழித்து இன்று வந்துள்ளேன். இந்த ஆறு மாதத்தில் ஊரில் எது மாற்றம் கண்டிருந்தாலும் இந்த படிக்கட்டும் பட்டம்மாவும் மாறவே இல்லை. படிக்கட்டில் எனது கன்னம் வைத்து தலை சாய்த்தேன்.
எத்தனை கஷ்டம், நஷ்டம், இன்பம், துன்பம், வெயில், பனி என எது வந்தாலும் இந்த படிக்கட்டு மட்டும் என்றுமே மாறப்போவதில்லை தான்... என்றும் ஆளடைந்து கிடப்பது இன்று வெறிச்சோடியிருந்தது...
அப்போது "ஏ... புள்ள... நல்ல வேலை பாக்குற... வந்ததும் வராததுமா வீட்டுக்கு வராம இங்க நடுரோட்ல வந்து கிடக்குற??" என கேட்டாள் எனையீன்றவள்.
"படிக்கட்டுல உக்காந்து ரொம்ப நாள் ஆச்சுல்ல.. அதான்.." என்றேன்.
"நல்லா வெவரம் கெட்டத்தனமா பேசுறீயே... வா.. எந்திரிச்சு.." என கையை கொடுத்தாள்.
"யம்மோவ்.. பட்டம்மா எங்க??" என கேட்டேன். "அவுக சின்ன மொவன் வந்து முதியோர் இல்லத்துல சேத்துப்புட்டான்.. உனக்கு தெரியாதாக்கும்... இந்த படிக்கட்டுல உக்கார்ந்துக்கிட்டு போமாட்டேன்னு ஒரே அழுகை... கட்டாயப்படுத்தி கொண்டு போய் சேத்தான்..." எனக் கூறிவிட்டு சென்றாள்.
அவளோடு நடந்த நான், "நேற்றுவரை பட்டம்மா இருந்தாள். இன்று நான்.. இப்போதும் இனியும் இந்த படிக்கட்டு தனிமையில் தவிக்கப் போகிறது. இல்லத்தில் பட்டம்மாவும் தவிக்கத் தான் செய்வாள். செயற்கையான வாழ்க்கையை வாழ்ந்து தனிமையையும் இயற்கையாகவே என் பாசமான படிக்கட்டுக்கு வழங்கி விட்டனர் இப்படுபாதகர்கள்..." என்றேன்.
- மின்மினி