கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பாலைவெளி - அப்புசிவா

பாலைவெளி

எழுதியவர் : அப்புசிவா



காமாட்சி அருகில் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பாள் என தோன்றியது கந்தசாமிக்கு.

அவள் மரணமடையும் முன் முழுமையாக அவளது துன்பங்களை தான் புரிந்துகொள்ளவில்லையோவென ஆதங்கமாய் தோன்றியது அவருக்கு. இரு ஆண்டுகள்தான். இயல்பான கிராமத்து உழைப்பாளி அவள். எந்த காய்ச்சல், உடல் உபாதைகள் என எதுவும் அவளை அண்டியதில்லை. ஒரு சிறுபிள்ளை போல, ஒரு பட்டாம்பூச்சி போல அவளது வேகம், சுறுசுறுப்பு ஆச்சரியமானது. சட்டென்று தாக்கிய அந்த வாதத்தால் தான் முடக்கப்பட்டதை அவளால் சிறிதும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. கந்தசாமிக்கு தேங்காய் மொத்த வியாபாரம். வாரத்தில் பாதியாவது வெளியூர். அகன்ற வீடு. கல்யாணம் ஆன கையோடு, முறைத்துக்கொண்டு தனிகுடித்தனம் போன மருமகள். திரண்ட சொத்து அவனுக்குதான் என்றாலும், மனைவி வீட்டு சொல் மாறாத, வராமலேயே இருக்கும் மகன். எதற்கும் கலங்காத அவள், அந்த தனிமையில் தவித்துப்போயிருப்பாள்.

ஒரு வயதான பாட்டி மட்டும் துணைக்கு வைத்துவிட்டு, கந்தசாமி வியாபாரம் பார்க்க போய்விடுவார். எழமுடியாது. இருந்த இடத்தில் இருந்தே இயற்கை உபாதைகளை போக்க வேண்டும். அந்த பாட்டி ஊட்டிவிட, கொஞ்சம் சாப்பிடுவாள். அவள் கத்திய அந்த நாளில்கூட அவள் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் போனதை எண்ணி, கண்ணீர் வழிந்தது கந்தசாமிக்கு. வழியும் கண்ணீர் கன்னத்தில் வடிவதை உணர முடிந்தது. அது அப்படியே காய்ந்துவிடும். யாரும் துடைக்க இல்லை.

“ஒரு ரெண்டுநாளாவது இருக்கலாமில்ல...“

“நான் இருந்து என்னடி பண்ணப்போறேன்..?”

“என்ன இப்படி பேசறீங்க... யாருக்கு இன்னும் சம்பாதிச்சு கொட்டணும்?”

“பணத்துக்காடீ ஓடறேன். நம்பி இருக்காங்க... நாம இல்லன்னா என்ன பண்ணுவாங்க”

“ஆள் போடறது....ஊருக்கெல்லாம் கவலைபடறீங்க... நான் முக்கியமில்லையா?”

“உனக்கென்னடீ... எல்லாத்துக்கும் வேலைக்கு ஆள். ஓடி ஆடியாச்சு. படுத்தே ஓய்வா டிவி பாரு. ஃபோன் பேசு..”

என்றபடி அந்த டிவி ரிமோட்டை எடுக்கபோனவருக்கு திகீரென்றது, அது சில நாட்களாக எடுக்காமல் சிலந்தி வலை கட்டியிருந்தது கண்ணில் பட்டது. அவளை திரும்பிப்பார்க்க... கோபமாய் அவள் கத்தினாள்.

“நீங்க இல்லைனா ... இங்க ஒண்ணுமில்லை... வாசலையே பார்த்துபார்த்து கண் சிவந்ததுதான் மிச்சம்... என்னை நீங்களே புரிஞ்சுக்கலை... வேற எவன் புரிஞ்சுக்குவான்... “

என்ற அவளின் முதல் கத்தலுக்கு சற்று அதிர்ந்துதான் போனார். அதன்பின், வியாபாரத்தை கவனிக்க ஆள் போட்டுவிட்டு அவளுடன் ஒருவாரம் இருந்திருப்பார். தனிமையின் கொடூரத்தால் அவளின் நெஞ்சில் படர்ந்திருந்த நெருப்பு ஆறியதோ என்னவோ, ஓரிரவு தூங்கியவள் மறுநாள் எழவேயில்லை. அவள் போனதும்தான் முழுஇழப்பும் தெரிந்தது கந்தசாமிக்கு. பிரமை பிடித்தார்போல் இருந்தார். மகன் உட்பட அனைவரும் ஒரு வாரத்தில் இருந்து சென்றுவிட, அந்த அகன்ற வீட்டில், எதுவும் இல்லாத பாலைவெளியில் இருப்பதுபோல் தனித்து இருந்தார் கந்தசாமி.=

ஏதோ சத்தம் கேட்டது.

“என்னதாம்பா ஆச்சு...?”

இது பால்ய நண்பன் சந்திரமோகனின் குரல். ஆம் அவன்தான்.

“ரெண்டுநாள் முன்னால பைக்ல போயிருக்கார் மாமா... ஏதோ யோசனையிலயே போயிருக்கார். பின்னாடி பஸ் வந்தது தெரியாம வளைச்சிருக்கார். மோதி... விழுந்து... “

இந்த குரல், மகன் உதயகுமார். வந்திருக்கான் போல.

“என்ன சொல்றாங்க டாக்டர்..?” சந்திரமோகன் கேட்கிறான். அவன் குரலில் மெல்லிய நடுக்கம் இருப்பதை கந்தசாமிக்கு உணரமுடிந்தது.

“முதுகுதண்டில் கட்டாகியிருக்காமாம். மூளைக்கு போற ஏதோ சொன்னாங்க. கோமாவாம்.. நம்ம கையில் ஏதுமில்லை.முழிச்சாதான் தெரியும்ன்றாங்க.”

“செலவு நெறயா ஆகுமேப்பா...?”

“எல்லாம் அவர் சம்பாதிச்சதுதானே மாமா... வீட்டை வித்துகூட செய்திடுவேன் மாமா... “

“அதாம்பா... அவன் யானை மாதிரி. எழுந்துடுவான். நல்லபடியா செய்பா... திரும்ப வந்திட்டான்னா... செலவானதைகூட டபுளா சம்பாதிச்சிடுவான்..”

“அவர் வந்தா போதும் மாமா.”

கொஞ்சம் அமைதியாக இருந்தது. எழுந்து சந்திரமோகனை கட்டிக்கொண்டு அழவேண்டும் போல் இருந்தது. அவன் நடந்து செல்லும் சத்தம் கேட்டது.

“என்னங்க... வீட்டை வித்துகூட... என்ன திமிரா..” மருமகள் அமுதாவின் குரல். நீயும் வந்திருக்கிறாயாவென நினைத்துக்கொண்டார் கந்தசாமி.

“ஏண்டி, அவர் சின்னவயசில இருந்து அப்பாவுக்கு பழக்கம். அவர்கிட்ட இப்படிதான் பேசணும்...”

“அதுசரி, உங்க அம்மா படுத்து கிடந்தப்பவே சொத்து எல்லாம் எழுதி வாங்குன்னேன். பொறுமையா இரு..இரு..ன்னீங்க. அந்த கெழத்துக்கு பாதி பணம் போச்சு. இப்ப இது கெடக்கு...”

“அதுக்குன்னு பாக்காம இருக்கமுடியுமா...?”

“ரெண்டு நாள் பாருங்க... எங்க வீட்ல வச்சி பாத்துக்கறோம்னு தூக்கிபோயிடலாம்....”

“யார் பாத்துக்கறது...?”

“தப்பா நெனக்காதீங்க... இப்பவே முடிஞ்சிருச்சின்னு நினைக்கிறேன். ரெண்டுநாள் உள்ளபோற தண்ணிய நிறுத்திட்டா போதும்.”

கந்தசாமிக்கு தாகம் வரட்டுவதை போலிருந்தது. அவள் பேசியது இயல்புதான். ஆனால் அதற்கு உதயகுமார் ஏதும்சொல்லாமல் இருந்தது சொல்லொணா துயரத்தை அவருள் ஏற்படுத்தியது. காமாட்சி அருகில் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பாள் என தோன்றியது கந்தசாமிக்கு.

‘கடவுளே... கொஞ்சம் அதிகமாக மோதி அப்போதே என்னை கூப்பிட்டிருக்கலாமே. இந்த துன்பம் எத்தனை நாளைக்கு என்று மனதில் புலம்ப ஆரம்பித்தார். ஏதும் வேண்டாம். சற்று ஆறுதலாக அருகில் அமர்ந்து லேசாக தலை கோதிவிட்டால் போதுமே’ என்று நினைத்தவருக்கு டாக்டர் வரும் சத்தம் கேட்டது. வந்தவர் ஸ்டெதாஸ்கோப் வைக்கிறார். நார்மல். கைபிடித்து பார்க்கிறார். சரிதான். கண்களை திறந்து பார்க்கிறார். ‘டாக்டர் அப்படியே வைங்க...உலகம் தெரிகிறது’ என்று சத்தமிட முனைகிறார் அவர். ஓடும் ஃபேன் தெரிகிறது. ஆனால், மறுபடி இருள். டாக்டர் ஒரு ஊசியை ஏற்றிவிட்டு சென்றுவிட்டார்.

“அதெல்லாம் அப்பா சொல்லலை...” என்ற உதயகுமாரின் சத்தம் கேட்டது.

“நிஜம்தான்பா... அப்பா கடைசியா எடுத்த லோடுக்கு மட்டும் தரணும்... பாத்து செய்பா...அவர் நியாயஸ்தன்” என்ற கிருஷ்ணனின் குரல் கேட்டது. ‘ஆமாம் அவனுக்கு கடைசி லோடுக்கு ஐம்பதாயிரத்து சொச்சம் தரவேண்டும். டைரியில் எழுதிகூட வைத்திருக்கிறேன். பணமும் இருக்கிறது’ என்று நினைத்துக்கொண்டார் கந்தசாமி.

“எவ்ளோ தரணும்ங்க...” என்று உதயகுமார் கேட்கிறான்.

“ஒரு.. வந்து... ஒருலட்சத்து பத்தாயிரம்...”

‘அடப்பாவி...கிருஷ்ணா... நீயுமா இப்படி... எழுந்து வந்தா தெரியும்டா....’

“அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம்.. கெளம்புங்க...”

“அப்பா..நியாயஸ்தன்பா...”

‘போய்விட்டான் போல.. சில ஆசைகள், மனிதனை எவ்வாறெல்லாம் மாற்றிவிடுகிறது’

இப்படிதான் உலகமே இயங்குகிறது போல. இதில் பலனை எதிர்பாராத காமாட்சியின் அன்பை, பக்கத்தில் இருந்தே உணராத தன்னை நொந்துகொண்டார் கந்தசாமி. கிருஷ்ணனுக்கும் தனக்கும் வித்தியாசமில்லை என்பது அவர் மனதில் சுரீரென்று உரைத்தது. அவளின் துணையாக இருப்பதைவிட, சேரும் பணத்தின்மீதுதானே தனக்கும் ஆர்வமிருந்தது என்பதாய் பரிதவித்தார்.

நேற்று வந்த அனைத்து சொந்தங்களும், தான் விட்டுபோகும் சொத்து பற்றிய விவாதங்களிலும், அதன் மீது ஏதேனும் உரிமை கொண்டாட முடியுமாவென்ற வெறித்தனமான பேச்சுக்களினாலும் இந்த அறையை நிறைத்துவிட்டுப்போனதை நினைத்துக்கொண்டார். அதன் சூழலின் விஷம் அவருள் புகுந்து நேற்று முழுதும் மூச்சுத்திணறாலாய் இருந்தது. அப்படியே போய்விடலாமாவென மூச்சடைக்க நினைக்க, யாரோ வந்து ஆக்ஸிஜன் லெவலை சரி செய்து போனார்கள்.

கந்தசாமியின் மனதில், தான் விட்டுச்செல்லும் வீடு, பணம், நாலு ஏக்கர் பூமி ஏதும் தற்சமயம் மனதில் ஏறவில்லை. காமாட்சி வைத்த அந்த குண்டுமல்லிச்செடிக்கு தினமும் தண்ணீர் ஊற்றுவார். அதை யாரும் கவனிக்கிறார்களோ இல்லையோவென்ற ஒரு விஷயம் மட்டும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. அதை கவனிப்பவர்களுக்கு எல்லாவற்றையும் எழுதிவைத்துவிட அவருக்குள் ஆசை எழுந்தது. ‘எழுந்தவுடன் இதை செய்துவிட வேண்டும். ஆனால் எழுவேனா?’

இது சம்மந்தி போல....சத்தம் அவரின் அதிரடி காலடிதான்.

“என்னம்மா ...உன் புருஷன் காணோம்...” அவரேதான்.

“அவரு பில் கட்ட போயிருக்காருப்பா... “ மருமகள்.

அதான் அறை அனலாக இருக்கிறதா.

“இப்பயேவா...”

“தினமும் ஆகிற செலவு கட்டணும்...இப்ப இருபதாயிரம் தண்டம்...”

“வெட்டி செலவும்மா... இது தேறாது... உன் வூட்டுக்காரனுக்கு அறிவேயில்ல..”

‘அடே கிழவா... நாளைக்கு உனக்கும் இந்த நெலமதாண்டா...’

“வாங்க... அவரை போய் பாத்துட்டு வருவோம்.. கவிதா...பத்திரமா இங்கயே இரு... சரியா..”

‘அட...என் பேத்தி வந்திருக்கிறாளா... நான்கு வயதுதான். குட்டி காமாட்சி..’ என்று நினைத்தார் கந்தசாமி. அறை வெம்மை தணிந்து குளிர்வதாய் தோன்றியது. அவர்கள் போய்விட்டார்கள் போல.

‘இதோ என் பேத்தி... கவிதா.. வா செல்லம்... தாத்தாவை பாரு...ஆமாம்..அவள்தான்... ‘ அவளின் கை தன் கைமீது படர்வதை உணரமுடிந்தது. சின்ன விரல்கள். ஆறுதலாக இருந்தது. அவள் அழுகிறாளா... இருக்காது..குழந்தை....

“தாத்தா...எழுந்திரு...தாத்தா....”

‘செல்லமே’

“என்னை தூக்கு தாத்தா... பேசமாட்டீயா... அம்மா வரதுக்குள்ள... எழுந்திரு”

‘முடியலைடா ...தங்கம்...என்ன பண்ணுவேன்..’

“நீ கேட்ட இல்ல ... இந்தா முத்தம்... எழுந்திரு...”

என்ற குழந்தை அவரின் கையில் ஒரு முத்தமிட்டது. அதன் மின்னலான உணர்வு உடல் முழுதும் பரவ... அவரின் கவலையெல்லாம் பஞ்சாய் பறக்க... அவரும் அந்த சிறையை விட்டு வெளியே வந்தார். அங்கே காமாட்சி அவரை பார்த்து சிரிக்க, அவளுடன் கை கோர்த்து கீழே பார்க்க, படுத்திருந்த கந்தசாமிக்கு கையில் கவிதா முத்தமிடுவது புகைமண்டலமாய் தெரிந்தது.



அருமை
 

Aathisakthi

Well-known member
இன்று நான் ...
நாளை நீ...
இயற்கையின் நீதி...
மண்டையில்...
கொட்டினாலும்...
கோணலான புத்தி ...
குயக்நி கொண்டு அலைகிறது...
கோணலான கோடுகளை நேராக்க நேரம் இருக்கும் பொழுதே விழித்து வை...
இதயத்தின் கதவை விசாலாமாக திறந்து கொள...
 
Last edited:
அருமயான உணர்வுபூர்வமான கதை. கவிதாவின் முத்தம் நிஜம்மாகவே இனிப்பான முத்தம்.
 
Top