கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பிக் பாஸ் சீசன் 5 - நாள் 2 - 05.10.21

siteadmin

Administrator
Staff member
பிக்பாஸ் – 5

நாள் – 2 (05.10.21)

இவனுங்க தூங்குறானுங்களா இல்ல தூங்குற மாதிரி நடிக்கிறானுங்களான்னு தெரியல. எப்பப் பாத்தாலும் கிச்சன்ல 5 பேரு நின்னு எதையோ உருட்டிட்டு இருக்கானுங்க. இன்னைக்கும் காலை அலாரம் அலறுனப்ப ஒரு அஞ்சாறு பேரு கிச்சன்லதான் கெடந்தானுங்க.

“வேற மாரி” பாட்டு அலாரம். “ஓடியா ஓடியா எங்கூட வந்து ஆடுயா”ன்னு நாடியா நடனமாட ஆரம்பிச்சாங்க. அம்மணி இப்பதான் டிக்டாக் மூடுக்கு வருது போல. நல்லது.

ஈயம் பூசுன மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும்ன்ற கணக்கா ஆடுன மாதிரியும் இருக்கனும் ஆனா ஆடாமயும் இருக்கனும்னு ஆளாளுக்கு அவனுங்க இஷ்டத்துக்கு அசஞ்சுகிட்டு இருந்தானுங்க. நிரூப் ஆடல. சிபிகிட்ட “ஏன் ஆடலதிணா?”ன்னு மதுரக்குரல் மது நேத்து கேட்டதுக்கு
“மொத நாளு அதுவுமில்லாம வலிக்குது காலு. நாளையில இருந்து பரம சுந்தரி பாட்டுக்கே பாலே டான்ஸ் ஆடலாம்”னு அளந்தான். சரி...இன்னைக்கு சலங்கையக் கட்டிக்கிட்டு சல்சா ஆடுவான்னு பாத்தா கைல டீக்கப்போட டிப்ரெஷன் டூட் மாதிரி உக்காந்திருக்கான். இவனுங்களதான் நம்பி உள்ள அனுப்பியிருக்கானுங்க. கெரகம்டா டேய்.

சிபி, வருண், அபிஷேக் ,ராஜு, பாவனி எல்லாரும் ஹால்ல உக்காந்திருக்க “நீ பேசுறது ரஜினி சார் ஸ்டைல்ல இருக்கு. அவரு ட்யலாக்க சொல்லித்தறோம் நீ சொல்லு”ன்னு சொன்னாய்ங்க. எந்த ஆங்கில்லயும் அது பேசுனது அப்பிடி இல்ல. இவனுங்க இதையெல்லாம் தெரிஞ்சுதான் செய்யுறானுங்களா? இந்தப்பக்கம் பாத்தா மூடு வந்த முனிவர் மாதிரி முடிய விரிச்சுப் போட்டுக்கிட்டு திரிஞ்சான் நிரூப்.

இங்குட்டு அண்ணாச்சி கூட உக்காந்து பிரியங்கா வெங்காயம் உரிச்சுட்டு இருந்தப்ப

அந்தப்பக்கமா அகஸ்மாத்தா வந்த அபிஷேக்கு
அபிஷேக்கு : என்ன பிரியங்கா வெங்காயமா ?
பிரியங்கா : ஆமா நீ வெங்காயந்தான்....
அபிஷேக்கு : அட உரிக்கிறது வெங்காயமான்னு கேட்டேன்
பிரியங்கா : உரிக்கிறது அண்ணாச்சி....அவர வெங்காயம்ன்றியா?
அபிஷேக்கு : இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்பிடி எடுத்துப்போட்டு பேசுற ? நான் என்ன உன் எதிரியா?
பிரியங்கா : உனக்கு இப்ப என்னதாண்டா வேணும். கிச்சன் டீம்ல இருக்குறவ வெங்காயம் உரிக்கிறதுல உனக்கு என்னடா பிரச்சனை?
அபிஷேக்கு : அதுக்கில்ல நாளைக்கே நாம Austerity ஆ மோத வேண்டி இருக்கும். அப்ப மோதிக்கலாம். அதுக்காக நான் உன் Adversary இல்ல.
அண்ணாச்சி : என்ன தம்பி அசிடிட்டி, அட்ராசிட்டின்னு சொல்றான். வயிறு வலிக்குதாமா?
பிரியங்கா : அந்த ரெண்டு வார்த்தையும் உங்களுக்கு தெரியுமா? தெரியாதுல்ல! ஆனா அவனுக்கு தெரியும் அதனால கேக்குறவங்களப் பத்தி கவலப்படாம அவன் அப்டித்தான் பேசுவான்...
அபிஷேக் : (மை.வா) இன்னைக்காவது நான் பேசுனத கேட்டானுங்களே...!) சொல்ல முடியாது பிரியங்கா நாளைக்கே நான் உன் டீமுக்குக் கூட வரலாம்.
பிரியங்கா : ம்ம்கும் அப்டி நடந்தா இம்சைய தூக்கி இடுப்புல வச்சுக்கிட்ட கதைதாண்டா அது. அப்டி மட்டும் ஒண்ணு நடக்கவே கூடாது.
அபிஷேக் : அங்க ஏதோ ஒரு Raff இருக்கு நான் அங்க போறேன்
அண்ணாச்சி : இப்ப என்ன சொல்லுதாம்?
பிரியங்கா : அங்க ஒரு கும்பல் இருக்காம் அங்க போறானாம்....! இவன் இம்சை தாங்கல. //

ஐக்கி வந்து அண்ணாச்சி கிட்ட கட்டிங் அளவு கைய வச்சுக்கிட்டு ஒரு கண்ண மூடிக்கிட்டு “யோ! வாஸப் மியான்” அப்டின்னு சொல்ல சொல்ல. “யோவ் வாட் சாப்ல இருக்கியா”ன்னு அண்ணாச்சி காமெடி பண்ணார். என்ன சொன்னாலும் சொல்லி முடிச்சதும் செனத்தவளை சிரிக்கிற மாதிரி டுர்ர்ர்ர்ர்ர்ர்ருன்னு சவுண்டு குடுக்குறது ஐக்கியோட ஸ்டைல் போல. அங்குட்டு அனகோண்டா பாம்பு சைஸுக்கு ஒருத்தன் நிரூப்னு சுத்திட்டு இருக்கான். பாப்போம் என்னாகுதுன்னு.

ஒய்யாரமா ஓடிப்பிடிச்சு விளையாண்டுகிட்டு இருந்த கும்பல்ல இருந்து சிபிய கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்ட்டார் பிக்கி. இன்பெக்ஷன் வந்தவன் குவாரண்டைன் ரூமுக்கு போறாப்டி கன்பெஷன் ரூமுக்கு தனியா போனான் சிபி. உள்ள போன சிபிகிட்ட லெட்டர எடுத்துட்டு வெளிய போயி டிவிக்கு முன்னாடி நின்னு நிதானமா படின்னு பத்தி விட்டார்.

வெளிய வந்தவன் வேகமா டீவி முன்னாடி போயி நின்னு வாசிக்க ஆரம்பிச்சான். ஒரு முழத்துக்கு முக்கி முக்கி வாசிச்சான். ஆனா விஷயம் அழுகை கதை சொல்லி அட்ராசிட்டி பண்ணுங்கன்றதுதான். இதுல மனச கவர்ந்த கதைக்கு லைக்கு, கவராத கதைக்கு டிஸ்லைக்கு, குலுங்கி குலுங்கி அழுகுற கதைக்கு ஆர்டின்னுன்னு ஆளுக்கு ஒரு டப்பா குடுத்தானுங்க. அத ஒவ்வொருத்தரா சொல்லி முடிக்க அவங்க போட்டாவுக்கு நேரா ஒட்டனுமாம். வேற ஒண்ணுமில்ல இவனுங்களுக்கு நேரத்த ஓட்டனுமாம்.

இருங்க நிறைய தண்ணி குடிச்சிட்டு வரோம். அப்பத்தான் நெறையா கண்ணீர் வரும்னு ஆளாளுக்கு அண்டா தண்ணிய குடிச்சிட்டு ஆலாப்பறந்து ரூமுக்குள்ள போனானுங்க.
மொத கால் இசை வாணிக்கு.

ஆரம்பிச்சது என்னமோ அப்பாவுக்கு வேலை இல்ல. அண்ணன் படிக்கப் போகலன்னு ஒரு மாதிரி ராவா போனாலும். ஒரு சொந்த வீடு கூட இல்ல....வாடகை வீட்லதான் இருக்கோம்னு சொன்னப்பதான் தூக்கி வாரி போட்டுருச்சு. என்ன ஒரு கஷ்டம்ல? மைய அரசுதான் இதுக்கு ஒரு மாற்று திட்டத்த கண்டுபிடிக்கனும். ஒரு வழியா அவங்க பாட்டு கிளாஸ் போனதுல எடுத்து.... பாட்டுப்பாடி பெரியாளானதுல வந்து முடிச்சு இடையில இடையில கண்ணீர் குடத்த போட்டு உடச்சு, கட்டக்கடைசியில ஏறி வருவன் மேல நானும்னு கானா பாடி முடிச்சிட்டாங்க. ஆத்தாடி முடிஞ்சதுன்னு நெனச்சுட்டு இருந்தப்ப அய்யயோ இத மறந்துட்டேனன்னு சொல்லி மறுபடியும் முன்னாடி வந்து ஒர்ஸ்ட் பொண்ணுன்னு சொன்ன எனக்கு பிபிசி பெஸ்ட் பொண்ணு அவார்டு குடுத்தாங்கன்னு சொல்லிட்டு போனாங்க. கட்டிப்பிடிக்க வந்த எல்லாரும் திரும்ப இது எதையாச்சும் மறந்துட்டு ஓடும்னு ஒரு கேப் குடுத்தானுங்க. அது உக்காந்து செட்டில் ஆனதும்தான் கட்டிப்பிடிச்சானுங்க.

முடிஞ்சதும் ராஜு வந்து இசைகிட்ட ஞாயித்துக்கிழமை கோட்டுப்போட்டவரு டாப் டென் விமர்சனம் சொல்ற மாதிரி

கதாநாயகி குடும்பம் கஷ்டப்பட்ட சம்பவங்கள ஆழமா சொன்னாலும் அத அழாம சொல்லியிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கலாம். பாட்டுப்பாட கத்துக்க பாட்டுகிளாஸ் போனதுக்காக அவங்கள பல பேருக்கு பிடிக்காதுன்னு சொன்னது லாஜிக் இல்லேன்னாலும் அவங்க பாட்ட கேக்க எல்லாருக்கும் பிடிக்கும்னு சொன்னது மேஜிக்கா இருந்தது. படிக்கப் போகாத அண்ணன் வேலைக்குப் போனதும், வேலைக்கு போகாத அப்பா பாட்டுப்பாட போனதும் கதையில பெரிய ட்விஸ்ட். ஒரே ஒரு சொந்த வீடு கூட இல்லாம இப்ப வரை வாடகை வீட்ல இருக்குறதா சொல்லி கலங்குனது காமெடி குறைய தீர்த்து வச்சது. க்ளைமாக்ஸ்ல வந்த “ஏறி வருவன் மேல நானும்” பாட்டு படத்தின் பலம். கதை, பாடல்கள் சிறப்பா இருந்தாலும் திரைக்கதையில தொய்வு –
மொத்தத்தில் இசை வாணி – ஒட்டாத ஸ்ருதி.

அழுகாம கதை சொல்லியிருக்கனும்ன்றதத்தான் இப்பிடி சொன்னான்.

லான்ல சிபி, அபினய், வருண் கூட ஒரு திட்டத்தோட வட்டம்போட்டு உக்காந்திருந்த அபிஷேக்கு

“நீங்கள்லாம் ஃப்ரீயா இருந்தா புக்கு படிப்பீங்க...ஆனா நான் மனுஷங்கள படிப்பேன். உங்கள பத்தி கூட படிச்சிருக்கேன். வரிசையில வந்தா வள வளன்னு சொல்லுவேன்”னு சொல்லி மரத்தடி ஜோஸியர் மாதிரி சொல்ல ஆரம்பிச்சான்.

“அதாகப்பட்டது நம்ம சிபி அய்யா வாழ்க்கைய பாத்தீங்கன்னா ஒரு விஷயம் நடக்கும், நடக்காது ஆனா நடந்த விஷயத்துக்கு சந்தோஷமும், நடக்காத விஷயத்துக்கு வருத்தமும் படனுமான்னு பட்டும் படாம வாழுற வாழ்க்கை அவருது. வாய்ப்பு கிடைக்காம அவரு டவுசர் அவுருது. ஆனாலும் நல்ல வாழ்க்கை மலருது. புதுசா வந்த இடத்துல அபிஷேக்குன்னு ஒரு அறிவாளி கூட சினேகம் வளருது”

“நம்ம வருண் இருக்காரே வருண் வந்தா மல வரலேன்னா தொலன்னு இருக்குற ஒரு மனிதர். ஊர் படத்த எல்லாம் ரிலீஸ் பன்ற வேல்ஸ் குடும்பத்துல பொறந்தாலும்...டைரக்ஷனுக்கு சூஸ் பண்ணது கவுதம் மேனன்றப்பயே அவரு குணம் உங்களுக்கு புரிஞ்சிருக்கும். ஆனாலும் இந்த இடத்துல விஞ்ஞானி அபிஷேக்கு நட்பு சிறப்புன்னு தெரிஞ்சிருக்கும்”

“ராஜ்யமா இல்ல இமையமான்னு கேட்டா அதெல்லாம் அமையுமான்னு அசால்ட்டா சுத்துற ஆளு அபினய். சொந்த நிலத்த ஓனர் கிட்ட வாங்கி அவனையே அங்க லேபரா மாத்துற பரந்த மனசுக்கு சொந்தக்காரர். ஜெமினி-சாவித்திரி பேரனா இருந்தாலும் சென்டிமென்டுன்னு வந்தா சேரனா மாறிப்போவாரு. அபிஷேக்க நட்புல வச்சுக்கிட்டா வாழ்க்கையில ஏறிப்போவாரு”

அப்பத்தான் அங்க நிரூப் வந்தான். “ஜோசியரே அப்பிடியே இவனுக்கும் ஏதாச்சும் சொல்லி விடுங்க”ன்னு சிபி சொன்னதும்

“தம்பி நிரூப் ஒரு சிங்கம். வேட்டைன்னு வந்துட்டா வங்கக்கடலே பொங்கும். ஊரே ஒரு பக்கம் போனாலும்...வீம்புக்கு வேற பக்கம் போற வித்யாசமான ஆளு. எதுக்கும் காலையில ஒரு கண்ணு வைங்க இவன் காலைக் கடனுக்கு எங்குட்டு போறான்னு. ஆனாலும் இவன் அபிஷேக்கு கூட சேர்ந்தா லைஃப் போகும் நேரான்னு”

மூச்சு விடாம இத சொல்லிட்டு அவன் அங்குட்டு நகர....கூட இருந்தவனுங்க எல்லாம் “ஆமா இவன் சொல்றதெல்லாம் உண்மையான்னு ஒவ்வொருத்தனையும் பாத்து கேட்டுக்க. “அடுத்த செஷன் ஆரம்பிக்குற வரை என்டெர்டெயின்மென்ட் வேணாமா? அதுக்குதான் அவன ஆன் பண்ணி விட்டோம்”னு விவரமா பேசிக்கிட்டானுங்க.

சரி எப்பிடியும் உள்ள நாம என்ன பேசி உருகுனாலும் கடைசி வரை கேக்க மாட்டானுங்க. ஆனது ஆச்சு இங்கயே ஆரம்பிச்சிருவோம்னு பொண்ணுங்க கூட்டத்துக்கு நடுவுல சம்மணக்காலப் போட்டு சகஜமா ஆரம்பிச்சான் அபிஷேக்கு.

“எங்க அம்மான்னா எனக்கு ரொம்ப பிரியம்னு ஒரு ஃப்ளோல ஆரம்பிச்சு பட்டுன்னு ஒரு இடத்துல கண்ணுல தண்ணிய விட்டுட்டான். அந்த அழுகையோடவே பேச ஆரம்பிச்சாலும் ஃப்ளோவுல எந்தக் குறையும் இல்ல. நம்ம மதுரக்குரல் மதுதான் அவன் பக்கத்துல உக்காந்து மருந்து போட்டுச்சு. தொடர்ந்து பேசிட்டுதான் இருந்தான் ஆனாலும் எப்பவும் போல நம்மாளுங்க அவன் பேசுறத டீல்ல விட்டுட்டு இவனுங்களுக்குள்ள பேசிக்க ஆரம்பிச்சிட்டானுங்க.

“அய்யய்ய....இவனுங்க நாம எங்க உக்காந்து ஆரம்பிச்சாலும், எந்த டாபிக்கையும் கடைசி வரை கேக்க மாட்டனுங்க போலயே”ன்னு பொலம்பிட்டே போயிட்டான்.

அடுத்து சின்னப்பொண்ணு.

அதேதான்! சின்ன வயசு, 9வது பிள்ளை, கல்யாணம் , குழந்தை, வறுமை, 25 ரூபா சம்பளம், கஷ்ட ஜீவணம், நாட்டுப்புற பாட்டு, கலஞர்களுக்கு உதவி, அப்பறம் அம்மா பாட்டு
இப்பவும் ராஜு எந்திரிச்சான்.

கதாநாயகி 9வது பிள்ளையா பிறந்தது அவரு தப்பில்லன்னாலும் வளர்ந்து பெரிய பொண்ணாகும்ன்ற தொலைநோக்கு இல்லாம சின்னபொண்ணுன்னு அவங்க வீட்ல பேர் வச்சதுல லாஜிக் மீறல். தவில் எடுத்துட்டுப் போக லக்கேஜ் சார்ஜ் போட்ட கண்டக்டரிடம் மக்களை மகிழ்விக்குற கலைப் பொருட்களுக்கு பஸ்ஸுல காசெதுக்குன்னு பேசுன வசனம் எழுச்சி. பஸ்ஸுல போனப்ப கைக்குழந்தைய கீழ போட்டு உருட்டுனது நெகிழ்ச்சி. க்ளைமாக்ஸ் பாடலோ உணர்ச்சி. ஆனாலும் பாடல்கள் குடுத்த உணர்வை படம் குடுக்கல. மொத்தத்தில் சின்னப்பொண்ணு - பெரிதாக ஓன்றுமில்லை.

அதாவது கலைஞர்கள் கண்கலங்கக் கூடாதுன்னு சொல்லி டிஸ்லைக் குடுத்துட்டான்.
அப்பறம் இதப்பத்தி வெளிய பேசி சிரிச்சுக்கிட்டாங்க. இதுவரை இதுல பெருசா எதும் பிரச்சனையாகல.

பாக்கலாம்.

அப்பறம் பாவனி, இசை & அண்ணாச்சி இருக்கும்போது

அண்ணாச்சி : என் முழுப்பேரு இம்மானுவேல். கிரிஸ்டியன்
பாவனி : இம்மானுவாலா?
அண்ணாச்சி : வால் இல்லம்மா வேல்....முருகன் வச்சிருப்பாப்லல்ல அது
பாவனி : அப்ப முருகன் கிரிஸ்டியனா ?
அண்ணாச்சி : அட அது முருகவேல்....இது இயேசு
பாவனி : அப்ப இயேசு இந்துவா ?
அண்ணாச்சி : (மை.வா : ஆத்தீ இவ மதக்கலவரத்த கூட்டாம விட மாட்டா போலயே....) அம்மா தாயே வாம்மா போகலாம்

வலிக்காத மாதிரியே எழுதிட்டேன். ஆனா டேய் கொஞ்சம் பாத்து பண்ணுங்கடா.
 
Top