கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

புயலில் ஒரு பட்டாம்பூச்சி 2

Appusiva

Moderator
Staff member
அத்தியாயம் 2
அணைத்து வைத்திருந்த செல்லுலார் ஃபோனையே பயமாய் பார்த்துக் கொண்டிருந்தான் செல்வகுமார். ஒரு சிறிய செவ்வக வடிவ கரும்பிசாசாய் அது அவனைப்பார்த்து முறைப்பதாய் தோன்றியது. வித்யா புதிதாக அதை பரிசளித்தபோது எவ்வளவு மகிழ்வாய் இருந்தது என்பதெல்லாம் ஞாபகம் வந்துபோனது.
அணைத்து வைத்தது முழுபாதுகாப்பில்லைதான். பூனை கண்ணை மூடிகொண்டதுபோல. நேரம் நெருங்க ஃபோன் வரும். ஸ்விட்ச் ஆஃப் என்றவுடன் லேண்ட்லைன் ஆபத்து. அதை ஒன்றும் செய்யமுடியாது. இன்னும் அரைமணி நேரம் இருக்கிறது. கம்யூட்டரை ஆன் செய்தான். எக்ஸல் ஃபைலாய் சேமித்து வைத்திருந்த கணக்குகளை ஆராய்ந்தான். எவ்வளவு பெரிய தவறு. ஏன் அதுபோல நடந்தது. ஆரம்பத்தில் சிறியதாக, வெறும் இரண்டு லட்ச ரூபாய்தான். கரையான் அரிப்பது போல் என்ற சொற்றொடரின் அர்த்தம் அவனுக்கு முழுமையாக விளங்கியது.
ஏஜென்ஸி ஆரம்பித்தபோது வித்யாவின் இரண்டு வளையல்களும், ஏழுபவுன் ஆரமும் அடகுக்கு போக, வேண்டாம் என்று இவன் மறுத்தும் வித்யா சொன்னது ஞாபகம் வந்தது.
“ கடன் வாங்காதடா... இது போதும்.. வேணும்னா.. இன்னும் இருபது பவுன் இருக்கு. வச்சுக்கோ. சிறுக லாபம் வரட்டும். மெதுவா மீட்டுக்கொடு.... “
“ கடன் வாங்காதடா... ”
“ கடன் வாங்காதடா.. .”
அடிமுட்டாள் என்ற குரல் செல்வகுமாரின் மனதில் மீண்டும், மீண்டும் எதிரொலித்தது.
எல்லாம் நல்லவிதமாகவே ஆரம்பித்தது. வீட்டை பகைத்து, வித்யாவை கரம்பிடித்து சென்னை வந்தபோது கொஞ்சம் தடுமாற்றம். ஆரம்பகால இனிமையான் சுற்றல்கள் சிலமாதங்களில் முடிவுவர, அவள் வயிற்றில் ராஜி கருவாக... எதிர்கால பயம் சூழ ஆரம்பித்தது. செல்வா டிகிரி சர்டிபிகேட்களை பீரோவில் போட்டு மூடிவிட்டு, அவசரத்துக்கு அந்த மார்க்கெட்டிங் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தான். விற்பனை என்பதின் அரிச்சுவடிகூட தெரியாமல் இருந்தது மற்றவர்க்கு குறைபாடாக தெரிய, அது இவனுக்கு மிகப்பெரிய வரபிரசாதமாகவே ஆனது. வெற்றுத்தாளில் எழுதிச்சென்ற எழுத்துக்கள் மிக அழகாகவே பதிவானது. செல்வாவின் இனிய சுபாவம், உண்மையான தேவைகள் அறிந்த பேச்சு, அவனது வளர்ச்சியை வெகு எளிதாக முன்னெடுத்துச்சென்றது. ஏழாயிரம் ரூபாயில் இணைந்த அவன், ராஜி பிறக்கும்போது இருபதாயிரத்தை தொட்டு, மார்க்கெட்டிங் மேனேஜர் ஆக பதவியையும் பெற்றான்.
அரைபவுன் தோடுடன் இருந்த வித்யா... அடுத்த இரண்டாண்டுகளில் இருபது பவுன் சேர்க்கும் அளவுக்கு சூழல் மாறியது. ராஜேஸ்வரி பிறந்த அதிர்ஷ்டம் என வித்யா சொல்ல இவனும் சிரித்தவாறு தலையாட்டிக்கொண்டான். அவர்கள் வீட்டில் இருந்து சமாதானம் ஆகி வந்தும் சென்றார்கள்.
“ நாங்க பாத்திருந்தாகூட இவ்ளோ நல்ல மாப்பிள்ள கிடைச்சிருக்காதுடீ... உங்க அப்பனை கண்டுக்காம நீ எடுத்தது நல்லமுடிவு ... ” என்று அவள் அம்மா ரகசியமாக சொன்னதாக வித்யா முகம் நிறைந்த புன்னகையுடன் சொன்னது ஒரு கனவைப்போல தோன்றி, கலங்கலாய் மறைந்தது. திரும்ப அந்த காலம் கிடைக்குமாவென செல்வா ஏங்க ஆரம்பித்தான். அவனை மீறி கண்கள் கலங்க ஆரம்பித்ததை உணரமுடிந்தது.
“ ட்ரிங்க்....ட்ரிங்க்.... ”
என்ற சத்தம் அவனை உலுக்கியது. அந்த டெலிஃபோனையே உற்றுப்பார்த்தான். அவன் எடுக்காமல் அதையே நிலைகொண்ட பார்வை பார்த்ததை கண்ணாடி அறையின் வெளியில் இருந்த பணியாளர்கள் பாவமாய் பார்ப்பதை உணர்ந்து அதை மெதுவாக எடுத்தான்.
“ ஏங்க ... செல்லுலார் ஆஃப்... என்னதான் பண்ற...? ” என்றாள் வித்யா.
“ ஓ .... நீயா... சரிசரி... அது வந்து... சார்ஜ் இல்லடீ... ”
“ வேற எவ உன்னை தேடபோறா.... சார்ஜ் போடவேண்டியதுதானே... அவசரத்துக்கு நீ ஆகமாட்டேங்கறபா... ”
“ வேலைபா... சொல்லு... ”
“ எப்ப வருவ... ”
“ ஏண்டா.... ஏதும் விஷேசமா.... ”
“ லூசுப்பயலே.... காலைலதானே சொன்னேன். ராஜி பர்த்டே வருது... ஒருபவுன்ல செயின் வாங்கணும்னு... சாயந்திரம் போலாம்னே....? “
“ அது..... ஞாபகம் இருக்குபா... கொஞ்சம் வேலை... முடிச்சு வந்திடறேன்.. ”
“ சரி.... சாப்டியா... மதியம் சாதம் நல்லாருந்ததா... தேங்காய் போட்ட குழம்பு, சீக்கிரம் சாப்பிடலன்னா வாடை வரும். அதான் சொன்னேன். ”
“ ஆச்சு.... வச்சிடவா... ”
“ குரலே சரியில்லையே... பணம் இருக்கா... என் பணம்டா... வசூல் ஆயிடுச்சா... ”
“ ஆச்சு... இன்னும் கொஞ்சம்தான்... வந்திடறேன்... வச்சுடவா... ”
“ வை வை.... இப்பலாம் உங்கிட்ட பேசகூட அப்பாயிண்மெண்ட் வாங்கணும் போலயே... ”
ஃபோனை வைத்துவிட்டு.. பக்கத்தில் இருந்த டிஃபன் பாக்ஸை திறந்தான். கிளறி வைத்த சாதம் தண்ணீர்விட்டதுபோல் சற்று வாடை வீசியது. மதியம் நன்றாக இருந்திருக்கும். இப்போது ஐந்தாகப்போகிறது. டேபிளில் இருந்த மணியை அடிக்க, ப்ரியா உள்ளே வந்தாள்.
“ இதை கொட்டிட்டு... க்ளீன் பண்ணி தாப்பா... ”
“ சார்... சாப்டலையா... ”
“ மறந்துட்டேன்மா... கொஞ்சம் வாடை வந்திருச்சு. ”
“ சார்... சரியா போயிடும் சார். இதை நினைச்சு உடம்பை கெடுத்துக்கறீங்க... ”
“ அதெல்லாம் இல்லம்மா... பாத்துக்கலாம்... ரகு வந்திட்டானா... ”
“ ம்... பக்கத்து ரூம்ல பணம் எண்ணிட்டு இருக்கான்... ”
“ கூப்டு அவனை... ”
ரகு வந்தான். அவன் கையில் வசூல் பை. செல்வகுமாரையே பார்த்துக்கொண்டிருந்தான். நேற்று அவனை கண்டபடி திட்டியது மனதில் இருக்கும்போல. ஆனால் திட்டக்கூடிய சூழலை விட்டு செல்வா வெளியேற வேண்டும் என்ற ஆதங்கமே அவன் முகத்தில் இருந்தது.
“ சாரி ரகு.... ”
“ பரவல்ல சார்... ”
“ ஏதும் ஆச்சா....? ”
“ இருபத்தைந்து இருக்கும் சார். அந்த ரகோத்தமன்தான் மூணு லட்சம் தரணும் சார்... நீங்க சத்தம் போட்டா வரும்... நான் மூஞ்ச காட்னா... போடா...உங்க மொதலாளிட்ட பேசிக்கறேன்றான்.. ”
“ ம்..ம்... அவன் பொண்ணு ஆபரேஷன்றான்பா... என்ன பண்ண சொல்ற.. ”
“ உங்களை யாரும் பாவம் பாக்கலயே சார்... ”
“ சரியாகும்டா.... ரெண்டு பிரச்னைதான் தலைபோவுது ”
“ சுந்தரம் மோசம்... வேணான்னேன்... நீங்கதான் கேக்கலை. அவனை சரி பண்ணபோய்... ராஜாகிட்டயும் மாட்டிக்கிட்டீங்க.... எவ்ளோ சார் மொத்தம்? “
“ சமாளிக்கறதுதான்... வரது வந்தா சரிபண்ணிடலாம்... சரி ..பணத்தை கொடுத்துட்டு போ... நான் பாத்துக்கறேன்.. ”
அவன் தந்த பணத்தை வாங்கி பேக்கில் போட்டான். கண்டிப்பாக வருவது வந்தாலும் சமளிக்க முடியாது. சொன்னால் ரகு பயந்துவிடுவான். வித்யாவிடம் இரண்டுநாளில் தருவதாக சொல்லி வாங்கிய நாற்பதாயிரம்... ஒரு இருபத்தைந்து...கையில் பத்து முப்பத்தைந்து இருக்கிறது. அழகி அவள். மாதம் கொடுக்கும் பணத்தில் எதில் மிச்சம் பிடிக்கிறாள், என்ன செய்கிறாளோ... உம்மென்று இருப்பதைப்பார்த்து.... முகம் படித்து... உள்ளிருந்து எடுத்து வந்து...” எவ்ளோ தேவைபா.. பாப்பாவுக்கு சேர்த்தேன்பா... பத்திரம் ..” என்று தர ... சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது. என் மனைவி என்ற கர்வம் மிகுந்தது செல்வாவுக்கு.
செல்லுலார் ஆன் செய்ய... அதில் மிஸ்டுகாலில் சுந்தரம் அழைத்திருந்தான். திகீரென்று மனதில் பரவிய உணர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. மெதுவாக தயங்கியபடி கால் செய்தான். ரிங்... நாராசமாய் ஒலிப்பதாய் கேட்டது.
அடிவயிற்றில் இருந்து எழும் குரல்.
“ அலோவ்... செல்வா சாரா.... “

“ ஆமாண்ணா... கொஞ்சம் ஃபோன் ப்ராப்ளம்... அதான் ஆஃப்... ”
“ நம்பிட்டேன்... அது எனக்குத்தேவையில்ல... பணம் ஆச்சா.... ”
“ அது... ஒரு முப்பத்தஞ்சு இருக்கு... மீதி நாளை பாக்கட்டுமா... ”
“ இது சரியில்ல செல்வா சார்.... வாங்கினது ஆறுலட்சம். மாத வட்டி.. ஒரு லட்சத்து எண்பதாயிரம்... நேத்துவரை ஒண்ணுமுப்பது வந்திருக்கு..... தெரிஞ்சுதானே வாங்கினீங்க... இது வாரத்துக்கு .. அவசரத்துக்கு கொடுக்கிறது. ஆறுமாசமா வட்டி...வட்டினு உங்க பின்னாடி அலைய வேண்டியிருக்கு. நானே உங்களுக்குன்னு ஒரு இடத்தில் சொல்லி வாங்கி தந்திருக்கேன்... புரியமாட்டேங்குது உங்களுக்கு... அசலை முடிச்சு என்னை நிம்மதியா இருக்கவிடுங்க....”.
“ வரமாசம் முடிக்க ஐடியா பண்றேன்ணா... கொஞ்சம் தயவு பண்ணுங்க...”
“ உனக்கு புரியுதா புரியலையா... முடிக்கலன்னா... நேரத்துக்கு வட்டி குடுத்துட்டு... ........ இருக்கணும்.. அதைவிட்டு கதை பேசிட்டு இருக்க.... ”
ஏகவசனத்தில் ஆரம்பிக்க... செல்வாவின் மனம் நிலைகொள்ளாமல் தடுமாற ஆரம்பித்தது.
“ தோ பாரு... ரெண்டுநாள் நான் ஊரில் இல்லை.. அதுக்கப்புறம் வரேன். ஐம்பது முழுசா குடு. அதுக்கப்புறம் இழுத்தா... இதுக்கு தனியா வட்டி ஏறும்... வை ஃபோனை.... ”
வியர்த்து முழுகியது செல்வாவுக்கு. வெளியே ரகுவும், ப்ரியாவும் இவனையே பார்த்துக்கொண்டிருந்தது தெரிந்தது. அரைமணி நேர சித்திரவதை முடிந்த நிம்மதியில் மெதுவாக கண்மூடி இருக்கையில் சாய்ந்தான்.
மளிகை பொருட்களையும், இன்னபிற வீட்டு உபயோக பொருட்களையும் வாங்கி விற்கும் ஏஜென்ஸி ஆரம்பித்தபோது நன்றாகத்தான் இருந்தது. நான்கு ஆண்டுகளாக பார்த்து வந்த வேலையில் கடைசியாக நாற்பத்தைந்தாயிரம் வரை சம்பளம் கிடைத்தது. ஆனால் சீனியர்களின் பொறாமையும், அதன்பால் மேலிடத்தில் அவர்களின் சூழ்ச்சிகளும் தெரியவர... வேலையை துணிந்து தூக்கியெறிந்தான். வித்யாவின் முழு ஆறுதல் ஆற்றுப்படுத்த... அவளின் நகையை, கொஞ்சம் சேமிப்பை முதலீடாக வைத்து ஆரம்பித்தது. சிறிய டெலிவரி வேன், இரண்டு பணியாளர்கள், ஒரு குடோன் கம் ஆஃபிஸ், ஒரு வசூல் க்ளர்க், ஒரு ஆஃபிஸ் ஸ்டாஃப்.
இனிமையான இவன் சுபாவம் காரணமாக நன்றாக வளர ஆரம்பித்தது. அந்த வெளிநாட்டு பிஸ்கட் ஏஜென்ஸி எடுக்கும்வரை. அப்போதே சொன்னார்கள். பெரும் முதலீடு... பணம் கட்டி சரக்கு எடுக்கவேண்டும், அவர்கள் அனுப்பும் சரக்கை கண்டிப்பாக வாங்கியே ஆகவேண்டும், கடன் கொடுக்கவேண்டும்... இன்னபிற.
பழைய நிறுவனத்தின் முதலாளியும் கூப்பிட்டு பேசினார்.
“ உன்னை கடைசிவரை நான் திட்டவோ... சந்தேகப்படவோ இல்லைடா... ஏன் அவசரப்பட்டு போன... உன் மேல் கம்ப்ளெயிண்ட் சொன்ன எவனும் இப்ப இல்ல பாரு... இப்பகூட வா... சீனியர் மேனேஜரா போட்டு... அறுபதாயிரம் கூட தரேன்... ஆனா நீ இப்ப முதலாளி...ம்..ம்... ஆனா அந்த பிஸ்கட் வேணாம். அனுபவஸ்தன் சொல்றேன். அதெல்லாம் பணம் நிறைய வச்சு என்ன பண்றதுன்னு தெரியாதவன் செய்ற வேலை. இப்ப நீ போறதுதான் சரி... மெதுவா முன்னேறலாம்பா... ஆழமா உழணும்... அகலமா இல்ல.... “
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். அதை தட்டியதுதான் வம்பாகிவிட்டது. வித்யாவின் முழு நகைகளையும் வைத்தாகிவிட்டது. சொன்ன டார்கெட் அழகாக முடிக்க, வியாபாரம் அதிகரித்தது. ஆனால் வெளியில் வரவேண்டிய பணம் தாமதமாக, மற்ற முதலீடுகளையும் அது இழுத்துக்கொண்டது. வெளிநாட்டு சுற்றுலா... மீட்டிங்குகள் அனைத்திலும் செல்வகுமார் பெற்ற பாராட்டுகள், கவனத்தை திருப்பிவிட்டது. வியாபார முன்னேற்றத்தை கவனித்த அவன், பண விஷயத்தில் தடுமாறிவிட்டான். வெற்றியின் போதை உள்ளிழுக்க கடன் வாங்க ஆரம்பித்தான். ஒருவாரம் வட்டிக்கு கேட்டவுடன் கிடைக்க... வாங்கி கட்டினான். சரியாக திரும்ப கொடுத்தான். வளர வளர... லாபம் தேவையில்லை... வளர்ச்சி வர...நம்பிக்கை வர... பின்னர் லாபம் பார்க்கலாமென கடன் முதலீடை அதிகரித்தான். வாங்கிய வேகத்தில் தந்ததுபோய்...வெளியில் கடன் அதிகரிக்க... ஒருகட்டத்தில் கடனுக்கும் முதலீட்டுக்கும் கணக்கு பார்க்க..விபரீதம் புரிய ஆரம்பித்தது. ஆனால் கைமீற... கடனை கட்டுவதே முக்கியமாக பட ஒருவரை விட்டு ஒருவராக கடன் வாங்க ஆரம்பித்தான். தான் வாங்கியது மீட்டர் வட்டி... இன்னபிற பெயர்களெல்லாம் தெரியவர... மனதளவில் இடிந்துபோனான். அதுவும் சுந்தரத்தின் சுயரூபம் ... பிஸ்கட் ஏஜென்ஸி கைவிட்டு போனதன்பின் தான் தெரிந்தது.

“ சூழ்நிலை சரியில்ல போல சார்... ”
“ இல்லண்ணா... ஓவர் டார்கெட்... அதான் விட்டுட்டேன். வேற ட்ரை பன்ணிட்டு இருக்கேன்.. ”
“ என்னவோ செல்வா சார். நம்மகிட்ட வாங்கினது பத்திரம்... சீக்கிரம் முடிக்க பாருங்க... என்னை தெரியுமில்ல... ”

தெரிந்தது மிக தாமதமாக. மரியாதையாய் பேசுவான். எந்த கையெழுத்தும் இல்லாமல் எவ்வளவு வேண்டுமென்றாலும் தருவான். வாரவட்டி. தவறும் பட்சத்தில்... குரல் உயரும். வீடு வருவான். மனைவி எதிரில் தவறாக பேசுவான். பின் மனைவியை குடும்பத்தை அசிங்கமாக பேசுவான். எல்லாம் தாமதமாகவே தெரிந்தது. அவன் வட்டி தவறாமல் கொடுக்க ராஜா வசம் போனது இன்னொரு தவறு. அவர் அவ்வளவு அழிச்சாட்டியக்காரர் இல்லையெனினும், கேட்கும்போது தந்தார். எளிதாக கிடைக்க, வட்டி கட்டினால் போதுமென்று, அதிகமாகவே வாங்கிவிட்டான். தவிர, சம்பாதித்தது, வசூல்... சில்லறை கடன்கள் என கிட்டத்தட்ட நாற்பது லட்சத்தை தொட்டுவிட்டது. கண்டிப்பாக சமாளிக்க முடியாது. கண்ணை கட்டிவிட்டதாய் உணர்ந்தான்.

*****
தாகமாய் இருப்பதாய் தோன்றியது பார்த்திபனுக்கு. ராஜி ஏற்கனவே அவனிடம் சொன்னவைதான் என்றபோதும், எழுத்தாய் படிக்க வேறுமாதிரிதான் இருந்தது. எழுந்து தண்ணீர் குடித்துவிட்டு ராஜேஸ்வரியை தேடினான். உள்ளறையில் உதயும் ராஜேஸ்வரியும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். அவளை முதலில் பார்த்தபோது அவர்கள் பரம்பரை பணக்காரர்களாக இருப்பார்கள் என்று தோன்றியதை நினைத்து சிரித்துக்கொண்டான். அவள் அருகில் அமர்ந்து அவள் தலையை மெதுவாக கோதிவிட்டான். இவளும் ஒரு குழந்தைதானே என்று அவன் மனதில் தோன்றியது.
அவனின் கோதுதலில் லேசாக கண்விழித்த ராஜேஸ்வரி,
“சாரிடா… அசந்துட்டேன்….” என்றாள்.
 
Top