கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

புயலில் ஒரு பட்டாம்பூச்சி 5

Appusiva

Moderator
Staff member
EN-16
புயலில் ஒரு பட்டாம்பூச்சி
அத்தியாயம் 5
இருவரும் கனவிடையே தேம்ப... அவர்களை தடவிகொடுத்தபடியே, கண்ணீரை துடைத்தபடி உட்கார்ந்திருந்தாள் வித்யா.
பகுதி நான்கு
மறுநாள், அதிகாலை எழுந்துவிட்டான் செல்வா. தலைக்கு கொடுத்திருந்த தலையணையை எடுத்து பெட்டில் போட்டுவிட்டு, தூங்கிக்கொண்டிருந்த ராஜியை தூக்கி படுக்க வைத்துவிட்டு வித்யாவை தேடினான். வீடு முழுதும் சாம்பிராணி புகையாய் இருந்தது. வித்யா பூஜையறையில் இருந்தாள். இவன் போக, வாயில் விரல் வைத்து பேசாதே... தலைகுளித்து வா என சைகை காட்டினாள். அவள் வாய் ஏதோ சாமி பாடலை முணுமுணுத்தபடி இருந்தது. செல்வா குளித்து வர, ராஜி கண்ணை கசக்கி எழ, இருவரையும் கிழக்கு பார்த்து உட்காரச்சொன்னாள். ஒரு தட்டில் ஆலம் கரைத்து, சூடம் ஏற்றி, அவர்களுக்கு திருஷ்டி சுற்றினாள்.
“ செல்வா..... “
“ ம் .. “
“ ஏதோ கெட்ட நேரம்... நேத்து நைட்டோட போச்சு... நிம்மதியா போ... என்ன பண்ணலாம்னு யோசி... எனக்கு இந்த பூஜைதான் தெரியும்... சாமிகிட்ட ஒப்படைச்சுட்டேன். இனி அது பாத்துக்கும். மனசு மட்டும் தளர விடாத... நம்மளை யாரும் பாவம் பாக்க மாட்டாங்க... எப்ப கீழ விழுவோம்னு பாக்கறவங்கதான் அதிகம். தைரியமா போ... “
“ சரிடா... சாரிப்பா.... உன்னை ஏமாத்திட்டேன்... “
“ விடு... நகை ஏதும் மிச்சமிருக்கா.... “
“ வந்து.... “
“ சரி விடு... நாமதானே சம்பாதிச்சோம்...சம்பாதிச்சுக்கலாம் .. வந்திடும்.. போ... வேலையை பாரு... “
ராஜிக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு... வண்டியை எடுத்தான் செல்வா. மனம் சற்று லேசானதுபோல் இருந்தது. வட்டத்துக்குள் இருந்து பார்க்க குழப்பமாக இருந்த உருவம், அதைவிட்டு விலகி பார்க்க... முழுவட்டமும் தெளிவாக தெரிந்தது. பெரிய வசூல்களை நெருக்க வேண்டும். வட்டி கடனை அடைக்க வேண்டும். பின் சிறிதுசிறிதாக முன்னேறிக்கொள்ளலாம்.
அலுவலகத்தில் சற்று உற்சாகமாய் அவன் நுழைவதை பார்த்து ரகுவும், ப்ரியாவும் ஆச்சரியமாக பார்க்க, வேன் டிரைவர் கந்தசாமியும், டெலிவரி பையன் வெற்றியும் எழுந்து நின்றனர். அனைவரையும் ரூமுக்குள் அழைத்தான்.
******************
“என்ன பார்த்தி சார்... கதையில் மூழ்கிட்டிங்க போல இருக்கு.... அப்படியே சோஃபாலயே தூங்கியிருக்கீங்க...?” என்றபடி அவனை எழுப்பினாள் ராஜேஸ்வரி.
சோர்ந்தார்போல் இருந்த பார்த்திபன் அவள் முகத்தை கண்டதும் ஒரு மெல்லிய புன்னகை முகத்தில் அரும்ப எழுந்து உட்கார்ந்தான்.
“படிச்சு அழுதியா... என்னபா” என்ற ராஜேஸ்வரியை உற்று கவனித்தான். தலை குளித்திருந்தாள். வீடு முழுதும் சாம்பிராணி வாசம் அடித்தது. பெட்டில் உதய் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். ராஜேஸ்வரியின் குரல் கேட்டு கொஞ்சம் திரும்பி கண்ணை கசக்கிக்கொண்டு விழித்து பார்த்து பின் அப்படியே தூக்கத்தை தொடர ஆரம்பித்தான். பார்த்திபனுக்கு நேற்று படித்தவை காட்சிகளாக உருமாறியது போல் இருந்தது. ‘பெரிசா ஆகி டாக்டர் வேலைக்கு போயிட்டு அப்புறம் செத்து போலாம்பா’ என்று உதய் சொல்வது போல் தோன்ற, அதன் கனம் பார்த்திபன் மனதில் திகீரென்று அடைத்தார்போல் இருந்தது.
“அட இதென்ன பெரிய சோகமா... சும்மா ஏதோ நடந்திருக்கு. எல்லார் வாழ்க்கையிலும் நடக்கறதுதானே. நீ ஆனா நல்ல கதை சொல்லிபா... அதை அழகா கதை போல எழுதிருக்க பாரேன்” என்றான் பார்த்திபன்.
“லூஸ்... நடந்தது நடந்தபடியே எழுதிருக்கேன். இன்னும் சொல்லப்போனா சில நிகழ்வுகளை அதோட வேகத்தை குறைச்சு கொஞ்சம் எளிமையாதான் பண்ணிருக்கேன். முழுசா எழுத நினைச்சா என்னாலயே தாங்க முடியாது. ஆனா படிக்கறவங்களுக்கு அதோட உணர்வு தெரிஞ்சாபோதும். அவ்ளோதான். முடிச்சுட்டியா...?” என்ற ராஜேஸ்வரி அங்கே வந்த பத்மினியம்மாவிடம் காஃபியை வாங்கி அவனுக்கு கொடுத்தாள்.
“நிஜமாவே நீ பயந்தியா...? சாக வச்சிருவாங்கன்னு.... அதுவரை படிச்சேன். அதுக்கப்புறம் போகலை...”
“ஓ... சரிசரி... அது வந்து எப்படி சொல்றதுன்னு தெரியலை. ஆனா அந்த பயம் இன்னும் என் மனசில இருக்கு. சின்ன வயசுன்னாலும், அது அப்படியே மனசில தங்கிப்போச்சு. அதுக்கப்புறம் எந்த விஷயத்துக்கும் பயப்படறதில்ல. எந்த விஷயத்துக்கும்......” என்று அழுத்தமாக சொன்னாள் ராஜேஸ்வரி.
“இப்ப உனக்கு பயம் போயாச்சா......?”
“அதெப்படி போகும். அந்த நினைவு என்னிக்கும் மாறாது. ஆனா சாவு... மரணம் எல்லாம் ஒண்ணுமில்ல... ஒருத்தரோட வாழ்க்கை டைம் எவ்வளவோ அதுவரை நல்லபடியா இருந்திட்டு போயிடணும்... எதையும் மனசில போட்டு குழப்பிக்கக்கூடாதுன்னு தெளிவு இருக்கு.... அவ்ளோதான். ஆமா? கேட்க நினைச்சேன். நீ எவ்வளவு ஃபாஸ்ட்டா படிக்கற ஆளாச்சே... ஜெனி கூட சொல்வா... நீ ஹாஸ்பிடல் வந்தா வெயிட் பண்ற நேரத்தில அவ வச்சிருக்கிற மாத நாவலை முடிச்சிடுவியாம். இப்ப என்ன இவ்ளோ ஸ்லோ?... ” என்றவள் செல்ஃபோன் அடிக்க எழுந்து எடுத்தாள்.
“அலோ ... ம்... வெரிகுட்மார்னிங்... சொல்லுங்க ஸ்ரீதர்... நலம்... ஓ... சரி சரி... நான் கிளம்பிட்டு இருக்கேன். ஹாஸ்பிடல் வந்திட்டு உங்களுக்கு கால் பண்றேன். ஆமா ... இன்னிக்கு அம்மா காலை ஃபிளைட்ல போறாங்க.... ஈவினிங்தான் ஃபங்ஷன்... இல்லபா ... நான் போகலை... இங்க முக்கியமான கேஸ் இருக்கு... அதில்ல... அம்மா அதுக்கெல்லாம் கஷ்டப்பட மாட்டாங்க... நான் என்ன நினைக்கிறேனோ அது அவங்க மனசுக்கு தெரிஞ்சுடும். ஓகே... பைபா.... வந்து கால் பண்றேன்....” என்றபடி ஃபோனை வைத்தாள்.
“டாக்டர் ஸ்ரீதர் பா... ஒரு கேஸ்ல கொஞ்சம் டவுட் கேட்டிருந்தார். சரி நீ சொல்லு... என்ன பிளான் இன்னிக்கு...?”
“ஒரு ப்ரொஜக்ட் கொஞ்சம் பெண்டிங்பா... அது போய் முடிக்கறேன். அப்புறம் சாயந்திரம் வந்து உன்னை கூட்டிட்டு வரதுதான். நோ ஸ்பெஷல் டுடே...”
“ அம்மாட்ட பேசறியா.....”
“போப்பா... என்னால முடியாது... நீ வந்தபின்னால பேசிட்டு குடு... அப்புறம் பேசறேன்”
“அய்ய... இன்னும் குழந்தையா நீ... ஏண்டா... அவங்கவொண்ணும் அவ்வளவு பெரிய வில்லியெல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப்போனா, அப்ப எப்படி இருந்தோமோ அதே எளிமைலதான் இருக்காங்க. உங்க அம்மாட்ட பேசறமாதிரி பேசேன்” என்றவள் சட்டென்று நாக்கை கடித்துக்கொண்டு “சாரிப்பா “ என்றாள்.
“என்னத்துக்கு சாரி... நான் பிறந்ததில் இருந்தே அம்மான்னா என்னான்னு தெரியாது... அதனால இழப்பு எதுவும் ஃபீல் பண்ணலை. நீ ரொம்ப ஃபீலாகாதே... எனக்கு பயமெல்லாம் இல்லை. ஆனா ஏதோ ஒரு தயக்கம் இருந்திட்டே இருக்கு. முதலில் அவங்களை பார்த்தபோதில் இருந்து அது வந்து ஒட்டிக்கிச்சு. போக நாளாகும்... சரி நீ கிளம்பு...” என்று சொல்லிவிட்டு குளிக்கச்சென்றான் பார்த்திபன்.
குளித்து வந்து நிதானமாக சாப்பிட்டு, உதயை கொஞ்சி... பத்மினியம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பினான். அவன் மனம் முழுதும் ஏதோ கணக்குகளை போட்டபடி இருந்தது.
அவனின் அலுவலகம் நகரின் மைய இடத்தில் இருந்த ஒரு காம்ப்ளக்ஸில் இருந்தது. வெளிநாட்டு கம்பெனியின் வேலையை உதறியபின் இந்த இடத்தில் வாடகைக்கு அலுவலகம் அமைத்து அவனாக சில ப்ரொஜக்ட்களை செய்ய ஆரம்பித்தான். ஏற்கனவே இருந்த தொடர்புகள், அவனின் திறமைகள் மூலம் ஓரளவு நல்ல விதமான முன்னேற்றம் இருந்தது. அவன் எவ்வளவு சம்பாதிக்கிறான், என்ன செய்கிறான் என்று ராஜேஸ்வரி கேட்டதில்லை. தேவைக்கு எல்லாமும் இருக்க பணம் ஒரு பொருட்டாகவே அவர்களுக்கு இருந்ததில்லை. அதில்லாமல் பார்த்திபன் இதுநாள்வரை அவளிடம் ஏதுவும் தேவைக்கு கேட்டதோ, வாங்கியதோ இல்லை.
உள்ளே நுழைந்தான் பார்த்திபன்.
அவனின் அலுவலகத்தில் இரண்டு பெண்கள் உட்பட எட்டுபேர் வேலைக்கு இருந்தார்கள். இன்னமும் கல்யாணம் ஆகாத, படிப்பை முடித்து வந்து சேர்ந்தவர்கள். மிக திறமைசாலிகள். ஏற்கனவே வேலை செய்த ட்ரெய்னிங் சென்டரில் சொல்லிவைத்து, திறமை உள்ளவர்களாக அதேசமயம் ஃபீஸ் கொடுக்க சிரமப்பட்டவர்களாக பார்த்து தேர்ந்தெடுத்திருந்தான். உள்ளே நுழையும் சமயம் முதலில் வணக்கம் சொன்ன புவனாவை உள் அறைக்கு வரும்படி சைகை காட்டினான். புவனா ரிஷப்சனிஸ்ட்டாகவும் கூடுதல் வேலை செய்பவள்.
“சொல்லுங்க சார்..” என்றாள் புவனா.
“உட்கார் முதலில்...”
சீட்டின் நுனியில் அமர்ந்தாள். சகஜமாக பழகினாலும், முதலாளி என்ற கூச்சம் இவர்களிடம் இருந்து போகாதது அவனுக்கு அவ்வப்போது வருத்தமாக இருக்கும்.
“புவனா... ஒண்ணு கேட்பேன்... உண்மையைச் சொல்லணும். சரியா...?”
“சரிங்க சார்... சொல்லுங்க சார்”
“உனக்கு உங்க வீட்ல கடன் ஏதாவது இருக்கா...? உங்க அப்பா வழியில... இல்லன்னா வீட்டுக்கடன் ... ஏதாவது...”
“வந்து... கொஞ்சம் இருக்கு சார்.... அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியாது. அதுக்கு அப்பா கடன் வாங்கியிருக்கார். ஆனா நான் அதை கூடிய சீக்கிரம் அடைச்சுடுவேன் சார்”
“சரிம்மா... அது எவ்வளவுன்னு சொல்லு... நான் தரேன். முதலில் கடனை அடைச்சுடு”
“சார்... அதெல்லாம் வேண்டாம் சார்... நானே அடைச்சுக்கறேன். வந்து எனக்கு கல்யாணம் வேற... மாப்பிள்ளை பாத்துட்டிருக்காங்க...”
அவளை உறுத்துப்பார்த்தான் பார்த்திபன்.
“அம்மா புவனா... தங்கையே... நான் உனக்கு சும்மா தரலை. அதில்லாம உனக்கு மட்டும் தரலை. என் ஸ்டாஃப் கடனோட இருந்தா வேலையில கவனம் வராது. இப்ப உங்கிட்ட கேட்கிறேன். எல்லாரையும் கேட்பேன். அதில்லாம நீ எங்கிட்ட வாங்கறது வெளிய சொல்லக்கூட வேணாம். மாதாமாதம் சம்பளம் வாங்கும்போது உன்னால எவ்வளவு முடியுமோ அதை குடு. வட்டி இல்லாத கடன் ... அவ்வளவுதான். என் சம்சாரம்... அவங்க உனக்கு அண்ணின்னு வச்சுக்கோயேன். அவங்க கொஞ்சம் பணம் குடுத்து இது போல குடுக்க சொல்லிருக்காங்க... அதனால கூச்சப்படாம வாங்கி கடனை கட்டிட்டு... சுதந்திரமா இரு....”
புவனாவின் முகத்தில் ஒரு மலர்ச்சி உருவாவதை மனதார கண்டு ரசித்தான் பார்த்திபன்.
“சரி நீ எவ்வளவுன்னு கணக்கு போட்டு சாயந்திரம் சொல்லு. நாளைக்கு உனக்கு பணம் கிடைக்கும். வெளிய யாராவது கேட்டா... ஏதாவது ஒரு ப்ரொஜக்ட் விஷயமா பேசினேன்னு சொல்லு. அப்புறம் வெளிய நம்ம பசங்களை ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு ஒருத்தன், அப்புறம் ஒரு அரைமணி நேரம் கழிச்சு ஒருத்தன் இப்படி நான் இயல்பா கூப்பிடற மாதிரி உள்ள அனுப்பு. உங்கிட்ட மட்டும்தான் இதெல்லாம் சொல்றேன். மத்தவங்ககிட்ட சாதாரணமா பேசி விபரம் தெரிஞ்சுக்கறேன். யார் கடன் எவ்வளவு என்னன்னு மத்தவங்களுக்கு தெரிய வேணாம். சரியா.... ? சரி நீ கிளம்பு” என்றான் பார்த்திபன். வெளியே செல்லும்போது புவனாவின் நடையில் ஒரு துள்ளல் இருந்ததை கவனித்தான். சிறுவயதில் இந்த குழந்தைகள் எவ்வளவு பாரம் சுமக்கிறார்கள் என்பதை யோசிக்க கொஞ்சம் அயர்ச்சியாக இருந்தது. இதெல்லாம் தெரியாத ஒரு மேட்டுக்குடி குரூப்பாக தானோ, ராஜேஸ்வரியோ இல்லாதது அவனுக்கு நிம்மதியாக இருந்தது.
செல்ஃபோனை எடுத்தான். ஆடிட்டருக்கு கால் செய்தான்.
“சொல்லுங்க பார்த்தி... என்ன காலைலயே...” என்றார் ஆடிட்டர் சந்திரசேகரன்.
“சார்... நாம இப்ப பாத்திருக்கிற இடம் வேணாம். கேன்சல் பண்ணிடலாம். அதான் அவசரமா கூப்பிட்டேன்”
“அய்ய... ஏன்... ஏன் இந்த அவசரமுடிவு... இருபதாயிரம் வாடகை மிச்சம் ஆகுமில்ல. சொந்த இடம்... அழகா ஆஃபிஸ் கட்டணும்னு சொல்லியிருந்தீங்க...”
“அது சரிதான் சார். ஆனா பாருங்க... இடம் வாங்க நாற்பது லட்சம் கையில இருக்கு. ஆனா மீதம் தொகை கடன் வாங்கணும். அதுதவிர கட்டிடம் கட்ட லோன் போடணும். இப்போதைக்கு அதுக்கு வட்டி கட்டறதுக்கு வாடகை பெஸ்ட். ஒண்ணும் அவசரமில்ல. நிதானமா போகலாம். “
“அட... உங்க மனைவிகிட்ட சொன்னா ஒரு நிமிஷத்தில தந்திடுவாங்களே... இல்லினா உங்க அத்தை அவ்வளவு சொத்து வச்சிருக்காங்க... தரமாட்டாங்களா... நீங்க ரெண்டு பேர்தானே வாரிசு...”
“அது வேற கணக்கு சார். நான் என் பணத்தில செய்யணும்னு தான் இருக்கேன். இப்ப வேணாம்.... நான் முடிவு பண்ணியாச்சு...”
“ஓ... சரி சரி... ஆழ உழணும்னு இருக்கீங்க... நல்லதுதான் . நோ பிராப்ளம். நான் பாத்துக்கறேன்” என்று அவர் சொல்ல மனதுக்குள் சிரித்துக்கொண்டான் பார்த்திபன்.
அன்று மாலைக்குள் அனைத்து ஊழியர்களிடம் பேசிவிட்டான். இருவர் தவிர மற்றவர்களுக்கு கடன் இருப்பதாக எழுதி தந்திருந்தார்கள். காலையில் வரும்போது பணத்தை மறக்காமல் எடுத்து வர வேண்டும் என்று குறித்து வைத்துக்கொண்டான். கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. மணியை பார்த்தான். ஆறு ஆகியிருந்தது. ஏழு மணி அளவில் போனால் ராஜேஸ்வரியுடன் ஒன்றாக சென்றுவிடலாம் என்று தோன்றியது. இன்நேரம் அவள் அம்மாவுடன் பேசியிருப்பாள். நல்லபடியாக பங்ஷன் முடிந்திருக்கும் . ஏதோ தெரியவில்லை, அவனால் இயல்பாக அவள் அம்மாவுடன் பேசவே முடிவதில்லை. அதிலும் அவரின் முகத்தில் தெரியும் ஒரு ஞானி போன்ற தேஜஸ் இவனை மிக மரியாதையுடன் அமைதியாக தலையாட்ட மட்டுமே செய்யவைக்கும். ஊழியர்கள் கிளம்பிவிட, கொஞ்சம் ஓய்வாக அந்த புத்தகத்தை பிரித்தான்.
****************
அலுவலகத்தில் சற்று உற்சாகமாய் அவன் நுழைவதை பார்த்து ரகுவும், ப்ரியாவும் ஆச்சரியமாக பார்க்க, வேன் டிரைவர் கந்தசாமியும், டெலிவரி பையன் வெற்றியும் எழுந்து நின்றனர். அனைவரையும் ரூமுக்குள் அழைத்தான்.

“ இன்னில இருந்து ஒரு வாரத்துக்கு நோ ஆர்டரிங்... டெலிவரி பா... வசூல் லிஸ்ட் பிரிங்க... மூணுபேரும் ஆளுக்கொரு பக்கம் போங்க. ஃபில்டர் பன்ணுங்க.. டைம் வேஸ்ட் பண்ணாம முதல்ல பணம் வரதை போய் பாருங்க... ம்மா ப்ரியா... நீ வெளியூர் ஆளுங்களுக்கு ஃபோன் செய்து அக்கவுண்ட்ல போட சொல்லு. பெரிய வசூல் லிஸ்ட் எங்கிட்ட கொடுங்க... “
அவனின் உற்சாகம் அனைவரையும் தொற்றிக்கொள்ள வேகமாக கிளம்ப ஆரம்பித்தனர். சிலமணி நேரங்களிலேயே வரிசையாக அவர்களின் தகவல்கள் வர ஆரம்பித்தன. கிட்டத்தட்ட எழுபதாயிரம் வசூல் ஆகியிருந்தது. அக்கவுண்டிலும் முப்பது சொச்சம் வந்தது. புது உற்சாகத்துடன் வண்டியை கிளப்பினான் செல்வா. முதலில் ராமசாமியின் ஒரு லட்சத்துக்கு நெருக்க, மறுநாள் சிறுதொகையாவது தருவதாக சொன்னார். சரியென்று கிளம்பியவனுக்கு, ‘ நம்மளை யாரும் பாவம் பாக்க மாட்டாங்க ‘ என்ற வித்யாவின் குரல் ஞாபகம் வர, இனி கடுமையை கூட்டவேண்டுமென்று மனதில் நினைத்துக்கொண்டான்.
ரகோத்தமன் வீட்டில் இல்லை. ஃபோன் செய்தான். மறுநாள் காலை வரச்சொன்னார். அவனிடம் பேசவேண்டுமென்றார். ஃபோனில் திட்டுவது சரியாக இருக்காதென்று தோன்ற... சரியென்றான். அன்று மதியத்துக்குள் மொத்தமாக ஒண்ணரை லட்சம் சேர்ந்திருந்தது.
வீட்டுக்கு செல்ல, இனிப்புகளையும், வித்யாவுக்கு புதிதாக அவளுக்கு பிடித்த மாம்பழகலர், பச்சை பார்டர் சேலையையும் வாங்கிச்சென்றான். சிரித்த முகத்துடன் வரவேற்றாலும், அவள் முகத்தில் கவிந்திருந்த மெல்லிய சோகத்தின் நிழலை அவனால் உணரமுடிந்தது.
“ இது எதுக்கு தேவையில்லாத செலவு... “
“ நாங்க நாளை புதுசு போட... நீ மட்டும் பழசு போடுவியா... இருக்கட்டும்... இதான் என் லாஸ்ட் செலவு... இனி எல்லாம் உன் ஐடியாபடிதான்... “
“ ரொம்ப லேட்... பரவால்ல... எவ்வளவு வசூல் ஆச்சு... “
அவளிடம் முழுவதையும் ஒப்படைத்தான். அவள், ஏற்கனவே ஒரு டைரியில், கடன் விபரங்களை, எழுதி, அதில் சிவப்பு நிற பேனாவால் இலக்கமிட்டிருந்தாள்.
“ என்னபா இது.... “
“ ப்ரியாகிட்ட... கேட்டேன்... அவள் விபரம் சொல்லச்சொல்ல... எது தலைவலி... எது முதலில் முடிக்கணும்னு ஒரு ப்ளான். ஆனா மோசக்காரன்டா நீ... யார்கிட்ட எவ்வளவு கடன்னு உங்க ஸ்டாஃப் க்கு கூட தெரில.. இவ்ளோ அழுத்தக்காரனா நீ...? “
“ அது வந்து..... கொஞ்சம் கஷ்டப்படுவாங்கபா... “
“ அதனால உனக்குள்ளேயே வச்சு மருகிட்டிருப்பியா... முடியாது தம்பி... கலந்து பேசினாதான் விடை கிடைக்கும். உனக்கு தெரியாத ஏதாவது ஒரு வழி மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம்... பேசணும்... “
“ சரி... சரி... பேசறேன்.... “
“ ரகோத்தமனை நாளை பாரு... “
“ அட... அதெப்படி உனக்கு தெரியும்...? “
“ நீ போனதும் முதல்ல அவர்கிட்டதான் பேசினேன். கேட்டார் பொறுமையா... நாளை முடிச்சு தருவார்... போய் பாரு... “
“ அட என் தங்கமே.... இத்தனை நாள்... உன்னை புரிஞ்சுக்கலையே... “
“ கொஞ்சாதே... எல்லாம் முடிச்சு... என் நகையை சம்பாதிச்சு கொடுத்துட்டு கொஞ்சு.... “
“ ஒரே ஒரு முத்தம்.... கிஃப்ட்... உனக்கு... “
“ போடா... போய் ஆகற வேலையை பாரு... ராத்திரி நீ பண்ண கூத்து நினைச்சாலே பத்திட்டு வருது... அதெப்படிடா... உனக்கு அழுகையெல்லாம் வந்தது...? “
செல்வாவின் முகம் சின்னதாக மாறியது.

தொடரும்....
Word count: 1547


 
Top