கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பூங்கதவே தாழ்திறவாயோ பகுதி 1❤

"பிறைசூடி நிலைக்கொள்ளாமல் தகிக்கும் இரவு உன்னை,

நட்சத்திரத்தின் துணைக்கொண்டு என்னிருப்பில் இருத்தி,

தன்னகத்தே அணைத்து காதோரம் கவி பாடுகிறேன்...நீ கேளாயோ...

விழி மூடி, மெய் கூசிட, ஒரு கணம் என் காதல் மாட்டாயோ,

கேள்விகளின் நாயகனாய் நானிருக்க,

விடையாய் ஒற்றை கண்ணசைவை என்னை நோக்கி இட்டு செல்...

ஆயுசுக்கும் தாங்கும் அந்த காந்தப்பார்வை போதுமடி கண்ணம்மா..."




பெருநகர் சிக்கலுக்குள் சிக்கி தவித்து மூச்சு விட திணரும் வழக்கமான காலைப்பொழுது...அன்றலர்ந்த தாமரையாய் இருப்பது போன்ற உணர்வை வலு கட்டாயமாய் தனக்குள் திணித்து, வராத புன்னகையை தேடி வரவழைத்துக்கொண்டே,தினமும் பிரயாணிக்கும் மயிலாப்பூர் ரயில்வே நிலையத்தின் ஒலிப்பெருக்கி சத்தத்தோடு நாளை துவக்கினாள் மித்ரா...



"என்னடா இன்னைக்கு சீக்கிரமே வந்துட்ட போல...என்ன அதிசயம்" சந்தோஷியின் கேள்விகள் காதில் விழுந்ததும் சடாரென திரும்பியவள்,



"அது ஒண்ணுமில்ல மகிழ்...இன்னைக்கு வெள்ளிக்கிழமைல அதான் சீக்கிரமே எந்திச்சி கபாலீஸ்வரரை பாத்துட்டு போயிரலாம்னு வந்தேன்...அதான் சாப்பிடக்கூட நேரமில்ல...ஆபிஸ் போய் தான் பாக்கணும்..."



"ஏண்டி சாமி முக்கியந்தான் அதுக்காக ஏன் சாப்பிடாம போன...எந்த சாமி சாப்பிடாம வந்து என்னைய பாருனு சொன்னுச்சு..."



"அடியேய் காலையிலயே உன் புராணத்தை ஆரம்பிக்காத...ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை உன்னோடத நான் மதிக்கிறேன்...நீயும் இத கண்டுக்காத...பிட்வீன் நான் வேணும்னேலாம் சாப்பிடாம போல டைம் ஆகிட்டு அதான் வேற ஒண்ணுமில்ல சாமி போதுமா..."



"ஏம்மா இங்கிட்டே குந்திட்டு இருக்கீயே அங்கன ஏதும் சோலினா பாக்கக்கூடாது...இதுல உனக்கு எம்மாம்பெரிய துட்டு கிடைச்சிறபோவுது சொல்லு..."



"இன்னயா காலையிலேயே லந்து கொடுக்கீற...ஒண்ணு வுட்டேனு வை சைட் வாங்கிக்கும்..."



"உன் நல்லதுக்குனு சொல்லவந்தேன் பாரு என்னைய ஜோட்டாலே அடிச்சிக்கிடணும்..."



ரயில் நிலையத்தின் பலதரப்பட்ட உரையாடல்களை கவனித்தவாறே ரயில்பெட்டியைப் பார்த்து கவனமுடன் ஏறினாள்...அவள் இருக்கைக்கு எதிரே அமர்ந்த மகிழும் , சந்தோஷியும்...தினமும் ஒன்றாக மித்தியுடன் பயணிப்பவர்கள் தான் என்றாலும் அவள் அதிகம் பேசி பார்த்ததேயில்லை இருவரும்...எப்போதாவது இவர்கள் பேசுகையில் தெறிக்கும் குறுநகையை கண்டுக்கொள்வார்கள்...



அந்த பரஸ்பர புன்னகை தாண்டி அவளுக்கு அந்த ரயில் பயணம் ஏகமாய் அனுபவங்களை அள்ளித்தெளித்தப்படியே இருந்தது...



ஜன்னலோர இருக்கையை தேடி பிடித்து அமர்வாள், இல்லையென்றால் கம்பியை பிடித்து வாசலை நோக்கி நின்று எங்கோ வெறித்தப்படியே நகர்வாள்...



அன்று மகிழுக்கு பசி தாங்காமல் ரயிலில் டிபன்பாக்ஸை திறந்ததும் சந்தோசியின் நாசிகள் அத்துனை வாசத்தையும் தன்னகத்தே சுவீகரித்துக்கொள்ள...ஆங்கில டிரெயயினிங் கம்பெனியில் உயர் பதவியில் இருப்பவர்கள் என்ற கூச்சமெல்லாம் உணவு முன் வருவதேயில்லை என்பதை உணர்ந்துக்கொண்டே சூடான வட இந்திய சப்பாத்தியும் சன்னா குருமாவும் அதிலிருக்க...சந்தோசியும் அவள் பாக்ஸை திறக்க புஸ் புஸ்வென இட்லியும் சாம்பாரும் பெட்டி முழுவதும் வாசனையை பரப்பி நின்றது...



வழக்கமாய் விடும் மெல்லிய புன்னகையை அவர்களின் மேல் இட்டுவிட்டு, கண்களை வெளியில் விட்டப்படியே இயற்கையை அழித்து ஏரியின் மேல் வளர்ந்து நிற்கும் வீடுகளும் , கட்டிடங்களும் கண்ணை நிரப்ப எப்போதாவது எத்துப்படும் சில இயற்கை காட்சியும் விரைவில் போய்விடுமென இயற்கையே அறியும்...ஒரு அடை மழைக்கே தாங்காத சென்னை தான் அவளின் வாசமாக அப்போது இருந்தது... காரணங்கள் பல அதை இட்டு நிரப்பியது...



மித்ரா...பன்னாட்டு ஐடி கம்பெனியின் பிராஜெக்ட் ஹெட்டாக இருப்பவள்...ஆங்கில புலமையும் கணினி திறமையும் இருந்தாலும் கைகளில் லட்சத்தில் பாதியில் சம்பளம் புரண்டாலும் சிறிதும் பகட்டு காட்டாதவள்...எப்போதும் புன்னகை தேங்கி நின்றாலும் அவ்வபோது மோனம் குடிக்கொண்டு நிற்பாள்...



இயந்திரத்தனமான வாழ்க்கையில் விடுபட நினைக்கும் மனதிற்கு ஏதோ ஒரு பிடிப்பை தர நினைத்து போராடும் பலரில் அவளும் ஒருத்தி...



ரயில் நிறுத்தம் வந்ததும், அவளுக்கும் அப்பயணிகளுக்குமான தற்காலிக உறவை முறித்தப்படியே விறுவிறுவென்று விடைப்பெற்று வழக்கமாய் செல்லும் கேபிற்க்குள் நுழைந்த அவளுடன் நிதமும் பயணிக்கும் மதுவும் அங்கு இருக்க...



" ஹேய் மது...சாப்பிட்டியாடா"



"சாப்பிட்டேன் மா...நீ..." எனக்கேட்டுக்கொண்டே கதவை அடைத்தப்படி தகிப்பு காட்டும் காலை வெயிலுக்கு ஏற்றவாறு ஏசியை ஆன் செய்யப்போக "அண்ணா அதெல்லாம் வேணா...பாத்துக்கலாம் விடுங்க என்ற மித்துவின் குரல் கேட்டு அமைதியானார் டிரைவர்...



" அப்புறம் மித்து எனக்கு ரொம்ப நாளா ஒரு கேள்வி நீங்க இருக்க இடத்தில இருந்தே கேப்ல வரலாம்ல ஏன் கொஞ்ச தூரத்துக்கு மட்டும் டிரெயின்..."



"என்ன இதுக்கும் சிரிப்பா .எல்லாம் சிரிச்சே மழுப்பிடுறீங்களே...ஆனா அந்த சிரிப்பு தான் உங்களுக்கு அழகே"



"வாழா என் வாழ்வை வாழவே, தாழாமல் மேலே போகிறேன்...தீரா உள்ளூற்றை தீண்டவே இங்கே இங்கே ஆழ்கிறேன்"



கேப்பில் ஓடிய பாடல் வரிகள் அவளுக்கென்றே போட்டதுபோல இருக்கவே தாளமிட்டுக்கொண்டே பயணம் செய்தாள் மித்து...



அனைவருக்கும் வணக்கம் சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் தன்னிருக்கைக்கு சென்றாள்...மிடுக்கும், பெண்மையும் கலந்தே தெறிக்கும் அவளின் அழகில் மயங்காதோர் அலுவலத்தில் யாருமில்லை...கேள்விகளும் விடைகளும் அறியா மனம் அவளது...உடன் பயணிக்கும் மதுவிற்க்குமே அவளை முழுமையாய் அறியமுடிவில்லை...



எதையும் கண்டுக்கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று நகர்ந்து செல்லும் குணமுடையவள் மித்து...



அன்புச்செழியன்...மித்துவின் உயர் அதிகாரி...கிராமத்தில் பிறந்து வளர்ந்து மிகச்சிரமப்பட்டு உயர் நிலைக்கு வந்திருப்பவன்...அதனாலோ என்னவோ கோவத்திற்க்கும் குறைவேயிருக்காது...எல்லா விதத்திலும் பர்பெக்டாக இருக்கவேண்டுமென்ற எண்ணமுள்ளவன்...ஆனாலும் இவளிடம் அதிகம் கடிந்ததில்லை...காரணம் அவனைப்போலவே அவளும் எண்ண ஓட்டம் கொண்டவள் என்பதால்...அலுவலகம் தாண்டி தனிப்பட்ட முறையில் யாரிடமும் நெருங்கிப் பழகாத அவளின் குணத்தை வெகுவாய் மதித்தான்...



"செழியா இந்த வாரத்துக்குள்ள இந்த பிராஜெக்டை ஹேண்ட் ஓவர் பண்ணனும் புரியுதா..."



எம்.டி சதாசிவத்திற்கு இவனது வேலையும்., நேர்மையான குணமும் மனதை கவர அதிகாரி என்பதை தாண்டி தன் சொந்த மகனாகவே சமயங்களில் நடத்த ஆரம்பித்தார் அதனாலயே உரிமையும் சற்று தூக்கலாகவே இருந்தது...



ராஜேஷ், பிரபா, நித்திலா ஒரு டீமாக இணைந்து வேலை செய்து வர அன்று நித்திக்கு உடல் நிலை சரிவராமல் போக அவள் விடுமுறை எடுக்க நேர்ந்ததால் அதனையும் சேர்த்து ராஜேஷ் பார்க்க முற்ப்பட்டான்...



"இருக்கிற வேலை பத்தாதுனு இந்தப்பொண்ணு வேற லீவ் போட்டு எல்லா வேலையும் என் தலையில விழுந்துட்டு...எத்தன வேலை தான் நான் பாக்க சொல்லு... முடியல சாமி...காசு கொடுக்கிறாங்கனு அநியாயத்துக்கு

உறிஞ்சுறாங்க..."



"டேய் உன் புலம்பல விடவே மாட்டியாடா...அவன் அவன் வேலை கிடைக்கலனு அலைஞ்சிட்டு இருக்கான் எல்லாம் கிடைச்சும் வேலை பார்க்கணும்னா உனக்கு கசக்குதா...அவ முடியாம தானே லீவ்ல போயிருக்கா...என்னைக்காச்சும் லீவ் போட்டுருக்காளா சொல்லு பாவம்டா விடு..."



"அது சரிப்பா நீ பாத்தா உனக்குத்தெரியும்...நான் தானே பாக்கிறேன் அதான் எல்லாம் பேசுவ..."



"யப்பா சாமி உன்னால முடியலாட்டி எண்ட்ட கொடு நானே பாக்கிறேன்..."



"ஏன் பிரபா இந்த வேலையும் சேர்த்துப்பாத்தேனு சொல்லி கிரெடிட் வாங்கிட்டுப்போலாம்னு பாக்கிறியா...விடமாட்டேண்டி..."



"அடேய்...உன்னலாம் டீம்ல வச்சுட்டு என்னத்தா தான் செய்யவோ...டீம் லீட்டா இருந்துட்டு நான் படுற அவஸ்தை இருக்கே ...எல்லாம் காலக்கொடுமைடா சரவணா..."



"அண்ணா கூப்பிட்டீங்களா ணா..."



"அடேய் உன்னய கூப்பிடலடா...நீ வேற யேன்...ஒரு பெர்பாமன்ஸ் பண்ண விடுறாங்களா பாரு..."



"என்னடா லுக்கு...வேலையை பாரு இல்ல உன் டீம் லீடர் கீர்த்திட்ட போட்டு கொடுத்துருவேன்..." புதிதாய் வேலைக்கு சேர்ந்த சரவணாவை இவன் மிரட்டுவதை கண்டதும்,



"ஆமா போட்டுக்கொடுக்கிறது தவிர அவனுக்கு என்னத்தெரியும் சொல்லு..."



"டேய் ராஜேஷே நீ என்க்கிட்ட அறை தான் வாங்கப்போற..."



"அங்க என்ன சத்தம்..."மதுவின் குரல் கேட்டதும்,



"பேசிட்டு இருக்கேங்க..." சிரித்துவிட்டு அனைவரும் வேலையில் கவனம் செலுத்த திரும்பினர்...



"அடியேய் பிராஜெக்ட் பண்ணாம என்னடி பேஸ்புக்ல சுத்திட்டு இருக்க..."



"சுபா...இங்க பாரு என் போர்ஷன் கம்பிளீட் பண்ணுற ஸ்டேஜ்ல இருக்கு அதான் சுத்துறேன்..."



"ப்ப்பா பார்ரா பயங்கர பாஸ்ட் டா..."



" தேங்க்ஸ் கீர்த்திமா..."



கடுப்பிலயே வேலை செய்துக்கொண்டிருந்த பலரின் முகத்தையும் உரையாடலையும் கவனித்துக்கொண்டே நகர்ந்தன அங்கிருந்த கேமரா கண்கள்...



11.30 மணிக்கே கேண்டீனில் குவிந்த அத்துனை கூட்டமும் அங்கிருக்கும் சில குறிப்பிட்ட ஐட்டங்கள் நிமிடத்தில் காலியாகும் என அறிந்தே அங்கு விரைந்தனர்...ஹாஸ்டல் சாப்பாடு வெறுத்துப்போய் கேண்டீனில் குவிக்கொள்ளும் கூட்டமும் , சாப்பாட்டின் அருமை அறிந்த கூட்டமுமே அங்கு அதிகமாய் தென்பட்டது...



"அண்ணா ஒரு காட்டன் கேண்டி ஐஸ்கீரிம் "



"மேடம் நீங்க சொல்லிருந்தா ரூமுக்கே கொடுத்துவிட்டுருப்பேனே ஏன்..."



"ஏன் நான் வரக்கூடாதா...எனக்கு வரதுக்கு உரிமை இல்லன்றீங்களா..."



"இல்ல மேம்..."



"அட கொடுங்கணா..."



"மது மா என்ன செய்ற..."



" சாப்பிடுறீங்களா மித்தி..."



" இதோ வாங்கிட்டு வந்தேன் இப்போதான்..."



சிறு பிள்ளையாய் அவளின் குறும்புத்தனமும் புன்னகையையும் லயித்து பார்த்துக்கொண்டே இருந்த மதுவிற்கு டக்கென அன்புவின் குரல் கேட்டதும் நிமிர்ந்தாள்...



" கேன் ஐ சிட் ஹீயர் மித்ரா"



"யா ஷீயர் சார்..."



'வந்துட்டான் யா இவனுக்கு வேற வேலையே இல்ல இந்தப்பிள்ள எங்க சுத்தினாலும் வந்துடுறது...ஒரு பொண்ணு அழகா இருந்திடக்கூடாதே உடனே வந்திடுவாங்க...' மதுவின் மனதின் வெதும்பல்களை விழி காட்டிக்கொடுக்க "மிஸ் மது நான் கொஞ்சம் இவங்களோட பேசணும் நீங்க கொஞ்சம் பிளீஸ்..."



" ஓகே சார்...புரிஞ்சது..."



"ஹேய் எங்க போற இரு..." அவள் கையை பிடித்து மித்து நிறுத்தவும்..."இல்ல விடுங்க மித்ரா நீங்க பேசுங்க...பிரெண்ட்ஸ் அங்க கூப்பிறாங்க நான் அவங்களோட ஜாயிண்ட் பண்ணிக்கிறேன் நீங்க பேசிட்டு இருங்க..."



"நான் இருனு சொன்னேன் புரியுதா..." அவளின் ஒற்றை முறைப்பிற்கு பயந்து செய்வதறியாது அமைதியாகி அங்கே நின்றாள்...



" ஹேய் அவங்க போட்டுமே இப்போ என்ன..."



" சார் நீங்க என்க்கிட்ட தனியா பேசுறதுக்கு எதுவுமே இல்ல சார்...அவ முன்னாடி பேசுறதுல என்ன இருக்கு சொல்லுங்க..."



"ம்ம்ம் சரி யூ பிபிள் கேரி ஆன்...ஐம் கேட்ச் யூ லேட்டர் கைஸ்..."



இருவரையும் முறைத்தப்படியே நகர்ந்த அவனின் விழிகளை நோக்கி பயந்து தெறித்த மதுவிற்க்கு தான் வாங்கிவைத்த டீயை கூட தொண்டைக்குழியை வாங்க மறுத்து கேள்விகளை இறக்கியது தன்னுள்...



அனாயசமான சிரிப்பை உதிர்த்தப்படியே காட்டன் கேண்டியை ரசித்து சாப்பிட்டவளின் குழந்தைப்போன்ற முகத்தை பார்த்தவளை கவனித்தவளுக்கு "எருமைமாடு இப்போபாத்து வந்து என் ஐஸ்கீரிம் உருகிப்போச்சு...பாரு...ஆசையா வாங்கினேன்...சரி அந்த கடைசி கோன் நல்லா இருக்கும் அதாச்சும்..."



'யாரா இருந்தாலும் ரொம்ப பிடிச்ச சில விசயங்கள் முன்னால குழந்தைபோலதான் மாறிடுறாங்கள் ல...'மதுவின் எண்ணஒட்டத்தை கலைத்தது போலாமா...என்ற மித்துவின் குரல்



"வாங்க மித்து போலாம்..."



அனைவரும் அசெம்பிள் ஆகி மறுபடியும் அந்த கணினி பெட்டிக்குள் தலையை கவிழ்த்து விரல்களும் குறுக்கும் ஒடியும் அளவிற்கு தத்தம் வேலையை தொடர்ந்தனர்...



விடியலுக்குப்பின்னான மெல்லிய கீறல் போல கண்ணாடியைத் தாண்டிய சூரியக்கதிர் மாலை வேளையில் அவள் அறையை ஜன்னல் துவாரத்தின் வழியே சீண்டிப்பார்க்க, இவள் எண்ண ஓட்டங்கள் முழுமையும் கணினியை சார்ந்து நகர்ந்துக்கொண்டிருக்கையில் செழியன் அவள் அறைக்கு விரைந்தான்...



" மித்ரா புரோஜெக்ட் திஸ் வீக் கம்பிளீட் பண்ணனும் தெரியும்ல..."



" யெஸ் சார்...மது ஆர்கனைஸ் பத்தி பாத்துட்டுத்தான் இருக்காங்க...பிரபா டீம் மட்டும் நாளைக்கு கொடுப்பாங்க...கீர்த்தி டீம் இன்னைக்கு ரெடி ஆகிடும் சார்..."



"ஏன் அவங்க டீம் டிலே ஆகுது...யாரும் வொர்க் சரியா பண்றதில்லையா..."



"இல்லங்க சார்...அவங்க டீம்ல நித்திலா இன்னைக்கு லீவ் அவங்களோட போர்சன ராஜேஷ் பார்க்கிறதால லேட் ஆகுது அவ்ளோதான்..."



"இந்த மாதிரி முடிக்கப்போற நேரத்தில உங்கள யாரு அவங்களுக்கு லீவ் அலாட் பண்ண சொன்னது..."



"சார் அவங்களுக்கு ரொம்ப முடியல அதான்...இன்னைக்கு ஒரு நாள் தானே சார்..."



"உங்க இஷ்டத்துக்கு நீங்க முடிவெடுத்துக்கிட்டா அப்புறம் ஃசீப் ஹெட்னு நானெதுக்கு இருக்கேன்..."



"சாரி சார்..."



"நாளனைக்குள்ள பிராஜெக்ட் எனக்கு வந்தாகணும்...நான் ரீசெக் பண்ணிட்டு பிரைடே அனுப்பி விடணும்...இஸ் தட் கிளியர்..."



"ஓகே சார்..." கடிந்து பேசுவதன் அர்த்தம் கேண்டீனில் தனது பேச்சுதான் என்பதை மித்து அறிந்தாலும் ஏதும் பேசுவதற்கில்லை என்பதாக நினைத்து அமைதியானாள்...



இவனின் கட்டளை அழுத்தமாய் அவள் மனதில் தேங்க உடனே மதுவை அழைத்தாள்...



"என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது...எல்லாரையும் சீக்கிரம் முடிக்க சொல்லுங்க கரடி வந்து கத்துது..."



'ரைட்டு...' "சரிங்க மித்ரா நான் சொல்லிடுறேன்..."



"அட்டென்ஸன் கைஸ்...நாளைன்னுக்குள்ள பிராஜெக்ட் மேடம் டேபிளுக்கு வந்தாகணும் சோ சீக்கிரமே முடிங்க...டோண்ட் டாக் அன்னெஸசரி...கான்செண்ட்டிரேட் ஆன் யூர் வொர்க்..."


தொடரும்...
 
Top