கதை சங்கமம் 2021

புது எழுத்தாளர்களை வரவேற்கிறோம்! New Talented Writers Welcome!!!

பூஞ்சிட்டின் புதுமலர்.... சஹா

Gayathrirajkumar

Moderator
Staff member
பூஞ்சிட்டின் புது மலர்- சஹா



வெள்ளை நிறத்தில் சீட்டு கட்டுகளை அடுக்கி வைத்தது போல இருந்தது அந்த நகரின் முக்கிய குடியிருப்பு பகுதி.

நடுத்தளத்தில் இருக்கும் அந்த 2BHK வசதி கொண்ட 8ம் நம்பர் வீட்டில் தொலைக்காட்சி ஒரு புறம் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்களை பாடி கொண்டிருக்க வேணி ஹாலை ஒட்டிய சமையல் அறையில் அடுப்பில் வாணலியை கிளறி கொண்டிருந்தாள்.

“ என்ன பண்ணிட்டு இருக்க? இன்னிக்கும் அதே பருப்பு சாதமா? ஏதாவது சிக்கன் பிரியாணி செய்ய கூடாதா? நாக்கு வறண்டு போய் கிடக்குது..” என்ற குரல்.

“ அதெல்லாம் நீ கனவுல கூட நினைச்சு பாக்க கூடாது. ஒழுங்கா செய்ற சாப்பாட்டை சாப்டு..” என்றாள் வேணி.

“ ரொம்ப அநியாயம் பண்ற நீ… எனக்கு ஒரு காலம் வரும் அப்போ உன்னை எப்டி மிதிக்கிறேன் பாரு…” என்று பழிப்பு காட்ட திரும்பி நின்று முறைத்தாள்.

அருவமாய் நின்று கொண்டிருந்த அந்த உருவம் அவளை கேலி செய்து சிரித்தது.

வாசலில் காய்கறிகள் கொண்டு வரும் வண்டியின் ஒலி கேட்க கூடையை தூக்கி கொண்டு வாசலுக்கு வந்தவள் லேசாக தலையை மட்டும் வெளியே விட்டு எட்டி பார்த்து பின் ஒரு பெருமூச்சுடன் வெளியே வந்து காய்களை அள்ளி கூடையில் போட்டு திரும்பினாள்.

விட்ட பெருமூச்சு வெட்டியாக போனது போல யாரிடம் இருந்து தப்ப வேண்டும் என எண்ணி இருந்தாளோ அந்த எதிர் வீட்டு மாமியிடம் வசமாக சிக்கி கொண்டாள்.

“ என்ன வேணி இப்போலாம் பாக்கவே முடியறது இல்ல.. நான் கூட ஏதும் விசேஷம் போல நினைச்சேன்… அப்படியா?” என்று வார்த்தையில் விளங்காவிட்டாலும் விழியில் விஷத்தை தேய்த்தபடி கேட்டார்.

“கொஞ்சம்.வீட்டை ஒழுங்கு பண்ற வேலை மாமி அதான்.” என்று மழுப்பினாலும் அவர் விட்டபாடில்லை.

“ அதிருக்கட்டும்… இன்னுமா தலைக்கு ஊத்துற? நான் சொன்ன மருந்தை எடுத்துகிட்டியா இல்லையா?”

தலையில் துண்டை கட்டி கொண்டு வந்து நின்றவளை கண்டு கேட்க இவளுக்குள் கூசி போனது.

‘என்ன பெண் இவர்? அடுத்தவர் வீட்டை எட்டி பார்ப்பதே அசிங்கம்.. இதில் இவர் என் படுக்கையை எட்டி பார்க்கும் தோரணையில் பேசும் பேச்சு.. நாலு கேள்வி கேட்டால் மட்டுமே மனம் ஆறிடும் ஏன்ற கோபம்..

ஆனால் கேட்க வேண்டும் என்றால் இவரை மட்டும் அல்ல…இவரை போன்ற எத்தனையோ பேரை கேட்க வேண்டும்.

அதற்கு எனக்கு தைரியம் மட்டும் அல்ல தெம்பும் இல்லை..’ வேணி பதில் கூறாமல் வெறும் சிரிப்பை மட்டுமே சிந்தினாள்.

“ அந்த மாமாக்கு தெரிஞ்ச டாக்டர் நம்பரை வாங்கி தரேன்… ஒரு வாட்டி போய் என்ன ஏதுன்னு கேட்டு வா சரியா?” என்று மாமி வழக்கம் போல அறிவுரை கூறிட இவளும் தலையை ஆட்டி கொண்டு நகர்ந்தாள்.

அருவமாய் நின்று கொண்டிருந்த மாயை நடக்கும் இந்த உரையாடல் கேட்டு அங்கேயே தேங்கிட வேணி மட்டும் வீட்டிற்கு திரும்பினாள்.

“இவளுக்கு தான் ஏதோ குறை போல… என்ன சொன்னாலும் எரும மாட்டு மேல மழை பேஞ்ச மாதிரி நிக்குறா பாரு…” என்று மாமி அருகில் நிற்பவரிடம் கூறினாள்.

அவரும் ‘அப்படியா?’ என்று நாடியில் கை வைக்க அந்த மாயைக்கு அங்கு நிற்கவே பிடித்தமில்லை.

வேகமாய் வேணியின் பின்னால் ஓடியது.

“ அவங்க அங்க என்ன பேசிக்கிட்டாங்க தெரியுமா?” என்று வேணியின் முன் வந்து நிற்க “ தெரியும்..” என்றவள் அவர் கூறிய வார்த்தைகளை அட்சு பிசகாமல் கூறிட

“ உனக்கு எப்டி தெரியும்?” என்றது.

“ இவங்களை மாதிரி நிறையவே பார்த்துட்டேன்… ஆரம்பத்துல இது எல்லாம் அழ வச்சது.. அப்புறம் கோவம் வந்துச்சு.. அதுக்கு அப்புறம் அதுவே பழகிருச்சு… இவங்க இப்படி தான்ன்னு என்னை நானே தேத்திக்கிட்டேன்…” என்றாள் வேணி.

இருந்தும் அவள் விழி சிந்திய நீரை துடைக்க முடியவில்லை.

‘குழந்தை இல்லை’ என்ற கவலை கணவன் மனைவியை காட்டிலும் வேறு எவருக்கும் பெரிய கவலையாய் ஆகிவிட போவதில்லை.

“இன்னுமா இல்லை” என்ற வருத்தம் குரலில் இருந்தாலும் கேலி என்ற விஷம் மனதில் வைத்து கேட்க அதுவும் காயம் பட்ட மனதை கத்தியை கொண்டு கிழிப்பதாய் தான் இருக்கும்.

பிரசவ வலி ஒரு நாள்..

ஆனால் இந்த வலி…

செல்லாத இடம் இல்லை.. சேர்க்காத உணவில்லை

எதை தின்றால் பித்தம் தெளியும்? என்ற நிலை தான் அவளுக்கு.

“என்னங்க?” வேலைக்கு தயாராகி கொண்டிருந்த கணவனை மெல்ல அழைத்தாள்.

“என்னமா?” என்று அவன் கேட்க தயங்கிய குரலில்,

“வரும் போது அது ஒன்னு வாங்கி வாங்களேன்?” என்றாள்.

அவன் அவளை மெலிதாய் அணைத்து கொண்டு,

“இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமே?” என்றான்.

ஒவ்வொரு முறையும் ஒரு நாள் தள்ளி போய் விட்டாலும் ஓடி போய் பார்த்து இல்லை என்று தெரியும் போது மனம் வெறுத்து போய் கட்டிலில் சாய்வாள்.

அவளை அப்படி காண சகிக்காமல் அவன் மனம் துவண்டு போகும்.

“இல்ல வேணாம்… ப்ளீஸ் எனக்காக ஒன்னே ஒன்னு வாங்கிட்டு வாங்க..” என்று அவள் கூற அவனால் தான் மறுக்க முடியவில்லை.

“சரி வாங்கிட்டு வரேன்… ஆனா எப்பவும் போல ஏதாவது ஒன்னுனா உக்காந்து கண்ணை கசக்க கூடாது சொல்லிட்டேன்..” என்று அவளின் முன் நெற்றியில் முத்தம் வைத்து கூறிவிட்டு சென்றான்.

சொன்னது போலவே மாலை வேலையில் அவள் கைகளில் கொடுத்தவன் ஹாலில் போய் அமர்ந்தான்.

அவனுக்குமே கொஞ்சம் பயம் தான்.

இங்கு கையில் அந்த சிறு கருவியை கையில் வைத்து கொண்டிருந்தவள் மனம் படபடத்து கொண்டது.

ஆறுதலுக்காக அருவத்தின் குரலை தேடினாள்.

அழைத்து பார்த்தாள்.

பதில் தான் இல்லை.

“இன்னிக்கும் காணாம போயிட்டியா? ஒவ்வொரு முறையும் இது நடக்கும் போது காணாம போயிடுற… அப்படினா இப்பவும்?” என்று கேட்டாள்.

வேகமாய் துடித்த கைகளை அழுத்தி பிடித்து கொண்டு சிறு கருவியில் நான்கு சொட்டுகளை விட விபரம் காட்டிடும் அந்த குறுகிய இடைவெளியே யுகமாய் கழிந்தது.

ஒன்று… இரண்டு… மூன்று…

நொடிகள் நகர்ந்து வேண்டிய தகவலை காட்டிட

மெல்ல மெல்ல என சிந்திய கண்ணீர் ஓவென்று வெடிக்க

சத்தமிட்டு அழுதாள்.

அவளின் குரல் கேட்டு பதறியடித்து ஓடி வந்தவன்,

“ என்ன வேணி? என்னமா ஆச்சு?” என்றான்.

கண்ணீரில் கரைந்து கொண்டு இருந்தவள் கணவனை பாய்ந்து கட்டிக்கொண்டு அழுதாள்.

கைகளில் அவர்களின் வாரிசுக்கான குறிப்பை எடுத்து காட்டியபடி.

அவனுக்கும் சந்தோஷத்தில் கண்ணீரை தவிர வேறு மொழி தெரியவில்லை.

எத்தனை வருட காத்திருப்பின் கனி இது…

வார்த்தையால் வர்ணிக்க இயலா அழகிய தருணம் அது.

“என்ன பயந்துடியா? சும்மா உன் கிட்ட விளையாடி பார்த்தேன்… இன்னும் பத்து மாசம் போகட்டும் உன் கூட நிஜமாகவே விளையாட வந்துடுவேன்…” அருவம் அவளின் காதினுள் ஒலித்தது.

நம்மை சுற்றி யாரும் இல்லாமல் இருப்பது தனிமை இல்லை.

நமக்கென யாரும் இல்லாமல் இருப்பதே தனிமை.

அந்த தனிமையை அவளுக்கு தராமல் அத்தனை நாட்களும் அருகில் இருந்த அவள் குழந்தை இனி பத்து மாதத்தில் அவளின் கைகளில்,

பூஞ்சிட்டின் புது மலராக தவழும்.
தாய்மைக்கு ஏங்கும் பெண்ணின் தவிப்பை அவர்களை சாடும் சிலரையும் அழகாய் சொல்லிட்ட டியர்😍😍😍
 
செம்ம சஹா படித்து முடிக்கும் போது ஒரு துளி கண்ணீர் வந்து விட்டது பல பெண்களோட வலி இது அருமை 👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍💐
 
Top